மின் நூல்

Sunday, October 20, 2019

மனம் உயிர் உடல்

15.   தியானத்தின் ஆரம்ப நிலை

டலின் புறத்தூய்மை நீரால் அமைவது போல மனிதனின் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் என்பது வள்ளுவனாரின் வாய்மொழி.   அவர் இங்கே அகம் என்று குறிப்பிடுவது நமது மனத்தைத் தான்.  வாய்மை தெய்வத்தின் பண்புக் குறியீடு  ஆதலால் அகத்தூய்மைக்கான அவசியத்தை வாய்மையில் பொதித்துத் தந்திருக்கிறார்.

மனம் இறைவன் கோயில் கொள்ளும் இடம் என்று மனசார  நாம் நினைக்கும்   தகுதியை நமக்காக்கிக் கொண்டதும்   கோயிலை அசுத்தமாக குப்பை கூளமாக வைத்துக் கொள்ளலாமா?..  கூடாதாகையில் கூளங்களை நீக்கி சுத்தம் செய்வோம்.

என்னன்ன  குப்பைகள் இருக்கிறதோ அவற்றை ஒரு பட்டியலாய் போட்டுக் கொள்ளுங்கள்.  உங்கள் உள்ளத்தை மாசு படுத்திக் கொண்டிருக்கும் எதையெல்லாம் குப்பைகள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ  அவை தான் அந்தப் பட்டியலில் இருக்க வேண்டும்.  எல்லாவற்றிலும் உங்கள் சாய்ஸ் தான் பிரதானம்.   இன்னொருத்தருக்காக இல்லை,  உங்கள் நலனுக்காகத் தான்  இத்தனையும் என்பதினால்  எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் உங்கள் மனக் குப்பைகளை ஸின்ஸியராக பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்று பேராசான் வள்ளுவப் பெருந்தகை சில வேண்டாமைகளைப் பரிந்துரைக்கிறார். அவற்றையும் நல்ல ஆலோசனைகளாக எடுத்துக்  கொள்ளுங்கள்.    வெகுளின்னா கோபம்.   ஒன்றுக்கும் உதவாதற்கெல்லாம்   கோபம்  சிலருக்கு வரும்.  அவர்கள் தங்கள் பட்டியலில் கோபம் என்பதனைக் குறித்துக் கொள்ளலாம்.  இந்தக் கோபம் வேறு அறச்சீற்றம் வேறு.  இரண்டுக்கும் வித்தியாசம்  தெரிந்திருக்க வேண்டும்.  பாரதியாரின் 'தனி ஒரு மனிதனுக்கு  உணவில்லை எனில்' -- அறச்சீற்ற ரகம்.  அறச்சீற்றம் நம்மில் அழிந்து விடக்கூடாது.  அறச்சீற்றம் இருந்தால் தான் சமூகம் ஆரோக்கியமாக இருக்கும்.  சமூகம் ஆரோக்கியமாக இருப்பது நம் மன ஆரோக்கியத்தை நிச்சயப்படுத்தும். ஒன்றைத் தொட்டு   ஒன்றான சங்கிலிப் பிணைப்பு இது.  அதனால்  வெகுளி என்பதனை இனம் பிரிப்பதில் கவனமாய் இருங்கள்.   அதே மாதிரி அளவான காமம் உடலுக்கு ஆரோக்கியமானது.  குடும்ப மகிழ்ச்சிக்கு குத்து விளக்கு அது.   குறை வைக்க வேண்டாத ஒன்று.   அதனால் அதிலும் கவனம் கொள்ளுங்கள். 

ஆக ஒரு வழியாக நம்மிடம் அழுக்காய் படிந்திருக்கும் பல  தீய குணங்களை பட்டியலிட்டுக் கொண்டாலும் ஒன்றில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும்.  ஒன்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம் என்ற நிம்மதியான உணர்வு நமக்குள் நிச்சயமானதும் அடுத்ததைக் கையில் எடுத்துக் கொண்டால் போதும்.  தொடர்ந்து இந்த மனப்பயிற்சியில் ஈடுபடும் பொழுது நாளாவட்டத்தில்  கொஞ்சம்  கொஞ்சமாக விலகல் தொடர்ந்து முழு மன  சம்மதத்தோடு நாம் விலக்க நினைத்த  அந்த வேண்டாத குணங்கள்  நம்மிடமிருந்து   விடைபெறுவதை அனுபவ ரீதியாக உணரலாம்.

பார்க்கப் போனால் எல்லாமே நமக்காகத் தான்.  நம் ஆரோக்கியத்திற்காகத் தான்.  நம் வளர்ச்சிக்காகத் தான்.  நம் சந்தோஷத்தை நிச்சயப்படுத்துவதற்காகத் தான்.  சொல்லப் போனால் கடவுள் வழிபாடு கூட அதற்காகத் தான்.  எதற்காக அப்படிச் சொல்கிறேன் என்பதை பின்னால் சொல்கிறேன்.

அடுத்த  வேலை தியானத்திற்கான ஆயத்தங்கள்.  என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் .

முதலில் முதுகு  வளையாமல் நேராக  ஒரு  தடுக்கில் உட்கார்ந்து  கொள்ளுங்கள்.

நாலு நாளைக்கு முன்னாடி அல்லது சமீபத்தில் நடந்த உங்களைப் பாதித்து மன உளைச்சலைக் கொடுத்த எதையாவது   நினைத்துக் கொள்ளுங்கள்..  நினைத்துக் கொள்வது எதுவாக இருந்தாலும் அது ஆழ்ந்து உங்கள் மனசில் தொடர்ச்சியாக நடந்த நினைவுகளை மீட்டுவதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.  கற்பனையில் வலை பின்னுகிற மாதிரி நடந்தவைகளை மனசில் ஓட்டிப் பார்க்கத் தெரியாதவர்கள் இந்த வழி தியானங்களை புறக்கணித்து விடலாம் என்பது ஆரம்ப யோசனை.

மூச்சு சம்பந்தப்பட்ட எந்த சேஷ்டைகளும் வேண்டவே வேண்டாம். சொல்லப் போனால் சுவாசத்தையே நாம் கவனத்தில்  கொள்ளாதவாறு வழக்கமாக அது எப்படி இயல்பாக இருக்குமோ அப்படியே இருப்பது ரொம்பவும் நல்லது.  வெளி சக்தி அதன் இயல்புப்படி உள்ளே--வெளியே போய் வருவது ஆரோக்கிய  வாழ்வுக்கு இறை சக்தி அளித்த கொடை. அதற்கு  ஒரு லயம்  உண்டு. அந்த  லயத்தை அதுவே பார்த்துக் கொள்ளும்.  அதை நம் இஷ்டப்படி அடக்குவது-- வெளிவிடுவது  என்று குறுக்கே குறுக்கே போய் குறுக்கிட வேண்டாம்.   அப்படிச் செய்வது  நாம் எதை நினைத்து வலை பின்னுகிறோமோ அந்த முயற்சியைக் குலைக்கும்.  அதனால் மூச்சு விஷயத்தில் நம் தலையீடே வேண்டாம்.   அது இயல்பாக எப்படி இருக்கிறதோ அப்படியே இருக்கட்டும்.  நாம் செய்யப்  போவது நம்மை பாதித்த ஏதாவது ஒரு பழைய நினைவை நினைத்துக் கொள்கிற ரொம்பவும் சுலபமான காரியம் மட்டுமே.

பலருக்கு தன்  நினைவுகளைக் கோர்வையாகத்   திரட்டுவது இயலாத காரியம்.   அப்படியானவர்களுக்கு இந்த பயிற்சி சோகையான பலனைத் தான் தரும்.   தந்த வரைக்கும் சரி என்று மேலும் மேலும் நினைவுகளைக் கோர்வையாகத்  திரட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளியுலகில் நடப்பதை மறந்து அதாவது வெளியுலகத் தொடர்பை முற்றாகத்  துண்டித்துக் கொண்டு  வீட்டுக்குள் என்றால் ஜன்னல் கதவுகளை விரியத் திறந்து மின் விசிறியை   இயக்க வைத்து காற்றோட்டமாக உட்கார்ந்து  முதலில் தந்தையின் முகம், பின் தாயின்  முகம் என்று ஆழ்ந்து அவர்களை நினைத்துக் கொண்டு நீங்கள்-- அவர்கள் சம்பந்தப்பட்ட கடந்த  கால நினைவுச் சுழலில் ஆழ்ந்து போங்கள்..

கற்பனைக்கென்ன,  கடற்கரையில் உட்கார்ந்திருக்கிற மாதிரி கூட கற்பித்துக் கொள்ளலாம்.  இந்த திறமையெல்லாம் கைக்கொள்ள திறம் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

உடலையும் மனசையும் தளர்த்திக் கொள்ளுங்கள்.   மூச்சின் லயம் அதுபாட்டுக்க இருக்கிறபடி  இருக்கட்டும்.

இந்த அளவுக்கு  ஆரம்ப தயாரிப்பு நிலை  இருந்தால் போதும்.  அதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்பொழுது தான் 'உங்கள் சாய்ஸ்'க்கான நேரம்.  நம்மிடமிருந்து கழட்டி விட வேண்டிய எந்த தீய குணத்திற்கு பட்டியலில் முன்னுரிமை கொடுத்திருக்கிறீர்களோ  அது  நடந்து நம்மை பாதித்த சமீபத்திய நிகழ்வு ஒன்றை மனசில் நினைத்துக் கொள்ளுங்கள். 

(வளரும்)

18 comments:

நெல்லைத்தமிழன் said...

புது வகையான தியான முறை சொல்றீங்க.... தொடர்கிறேன். ஆனால் இது என் யோகா மாஸ்டர் சொல்லித்தந்ததற்கு நேர்மாறாக இருக்கிறது என்பதையும் சொல்லிடறேன்.

G.M Balasubramaniam said...

மனவளர் பயிற்சி பெற வேண்டியவருக்கு நீங்கள் தீட்சை கொடுக்கலாம்

ஸ்ரீராம். said...

பயிற்சி எளிதாக இருப்பது போலவும் இருக்கிறது.  கடினமாக இருப்பது போலவும் இருக்கிறது.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

நேர்மாறாக என்று தெரியும் பொழுதே நிறைய மாறுபாடுகள் தெரிந்திருக்குமே? அந்த மாறுபாடுகளில் இருக்கும் defect points வாசிக்கும் பொழுதே தெரியுமே! அவற்றை வரிசை படுத்தக்கூடாதா, நெல்லை?.. (அலசுவதற்கு செய்திகள் கிடைக்குமே என்கிற ஆசையால் தான்) :))

ஜீவி said...

@ GMB

ஜிஎம்பீ சாருக்கு பிடித்த சப்ஜெக்ட். அவர் மகிழ்ச்சியில் பூரித்தால் இப்படித் தான்.:))

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//பயிற்சி எளிதாக இருப்பது போலவும் இருக்கிறது. கடினமாக இருப்பது போலவும் இருக்கிறது.//

ஆரம்ப நிலையிலேயே அப்படி கண்ணைக் கட்டுகிறதா, ஸ்ரீராம்?..

கோமதி அரசு said...

//உங்கள் உள்ளத்தை மாசு படுத்திக் கொண்டிருக்கும் எதையெல்லாம் குப்பைகள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவை தான் அந்தப் பட்டியலில் இருக்க வேண்டும்.//

வேண்டாத குப்பைகளை கழித்து விட்டால் வீடு சுத்தமாக இருப்பது போல்
வேண்டாத உள்ளத்தை மாசு படுத்தும் குப்பைகளை கழித்து விட்டால் மனம் சுத்தமாகும்.

நம்மை தொந்திரவு செய்து கொண்டு இருக்கும் எண்ணங்களை களைந்து விட்டால் துன்பம் இல்லை.
அழகாய் சொல்லி வருகிறீர்கள்.

நெல்லைத்தமிழன் said...

தியானம் என்று ஒருவர் உட்காருவது கடினம். உட்கார்ந்த உடனேயே, சமையலறையில் செய்யும் பொருட்களின் வாசனை, குழந்தை ஏதோ அம்மாவிடம் சண்டை போடுவது, பாத்திரங்கள் கீழே விழும் சப்தம்... இது மாதிரி ஏகப்பட்டது நடக்கும். அப்போ, இன்னைக்கு என்ன பண்ணிக்கிட்டிருப்பா, பருப்புசிலிக்கு இந்த வாசனை வராதே.. நேற்று மோர்க்குழம்புன்னுனா சொன்னா..இன்னைக்கு வெந்தயக் குழம்பு வாசனை வருதே... குளித்துவிட்டு ஹீட்டரை ஆஃப் பண்ணினாளா... என்றெல்லாம் எண்ணங்கள் அலைபாயும்.

அதற்காக, தியானம் பழகுவதற்கு முதல் படி, மூச்சை கவனிக்கணும். எப்படி இழுக்கும்போது எந்த சக்கரம் வரை மூச்சு செல்கிறது... எப்படி வெளியேறுகிறது..வெளியேறும்போது எந்த எந்தச் சக்கரத்தைத் தொடுகிறது... அந்த மூச்சு வெளியே செல்லாமல், மேலே அழுத்தி உச்சந்தலைக்கு வெளியே செல்வதாக முயல்..இது மாதிரி நம் கவனம் முழுவதும் மூச்சிலேயே இருக்கணும். இதற்கு வடக்க பார்த்து உட்காரணும். அவ்வப்போது காலை மாற்றிக்கொள்ளலாம் (அசெளகரியமாக இருந்தால்).

இது மாதிரி மூன்று விதங்களில் செய்யணும். (முதல்ல சொல்லித்தந்தபோது ஒரு விதம்தான் சில மாதங்கள் பழகினேன். அப்புறம் அடுத்த ஸ்டேஜ்.... அப்புறம் சில மாதங்கள் கழித்து மூன்றாவது ஸ்டேஜ்). கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்குமேல் அமரணும், முதுகை நேராக வைத்து.

இதனைத் தொடர்ந்துகொண்டே செய்யும்போது எப்போது தியானம் கைவரப்பெறுகிறதோ (அதை விளக்க விரும்பவில்லை) அப்புறம்தான், 4வது ஸ்டேஜ் சொல்லித் தருவாங்க (எனக்கு அந்த ஸ்டேஜ் சொல்லலை). அப்புறம் சிலவருடங்கள் கழித்து 5வது ஸ்டேஜ். அப்புறம் கடைசி ஸ்டேஜான 6 வது ஸ்டேஜ்.

ஜீவி said...

@ கோமதி அரசு

தொடர்ந்து வாசித்து வாருங்கள். வேறு நோக்கங்கள் புலப்படும்.

நீங்கள் 13-வது பகுதி-- வெட்டவெளி என்னும் தெய்வம்-- என்ற தலைப்பிட்ட பகுதி வாசிக்கவில்லையா?




ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (2)

நீங்கள் வழக்கமாக நினைக்கிற மாதிரியான தியானம் இது இல்லை, நெல்லை.

இந்தத் தியானம் மூச்சுப் பயிற்சியல்ல. மூச்சை தம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் தியானமல்ல. முக்கியமாக நீங்கள் நினைக்கிற மூச்சுப் பயிற்சியை தவிர்க்கிற தியானம். மூச்சு அதன் இயல்பில் இருப்பதில் குறுக்கிடாத தியானம். உள்மூச்சு--வெளிமூச்சு அதன் இயல்பில் அதற்கான லயத்தில் இருப்பது சம்பந்தப்பட்டவர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நினைக்கிற தியானம்.

தன்னில் தானே யோசிப்பது ஒன்று தான் இந்த தியானத்தில் இருக்கும் வேலையே. அதனால் எந்த வயசுக்காரர்களும் அப்படியான யோசிப்புக்கு சுலபமாக தங்களுக்கு செளகரியப்பட்ட நேரத்தை ஒதுக்கலாம் என்ற செளகரியம் இதில் இருக்கிறது.

மற்ற தியானங்களைப் போல அல்லாமல் இந்த தியானத்திற்கு நோக்கம் உண்டு. குறிக்கோள் உண்டு. தெய்வ அனுக்கிரகம் உண்டு. தன்னில் தெய்வத்தைக் காணுகின்ற பேறு இந்த தியானத்தில் ஒன்றிப் போனவர்களுக்கு சித்திக்கலாம்.

சொல்லப் போனால் நீங்கள் விவரிக்கிற சூழல் எல்லாம் பயிற்சிக் களமே.
போர் வீரனுக்கு போர்க்களத்தில் தானே பணி இருக்க முடியும்?..

இத்தனை சந்தடிகளுக்கு நடுவில் தனித்திருப்பது நாளாவட்டத்தில் இன்னும் சுகமாகிப் போகும். இந்த சந்தடிகள் குறுக்கீடாக இருப்பவர்கள் தனியிடம் நாடினால் போச்சு. வீட்டில் தான் தியானிக்க வேண்டும் என்றில்லை.

உங்கள் பகிர்தலை வரவேற்கிறேன். உங்கள் மனத்தில் படுகிற சந்தேகங்களை ஒளித்து வைத்திருக்க வேண்டாம். தட்டினால் தான் திறக்கப்படும் என்பது தேவன் வாக்கு. அதற்கான பகிர்ந்தலில் தான் நாம் விஷயத் தெளிவு பெற முடியும்.

மனந்திறந்த உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து வாசித்து வாருங்கள். இந்த வகை தியானத்தின் வித்தியாசமும் நோக்கமும் புரிபட புரிபட இதுவும் உங்களுக்கு நிச்சயம் பிடித்துப் போகும். நன்றி.

வே.நடனசபாபதி said...

// கற்பனையில் வலை பின்னுகிற மாதிரி நடந்தவைகளை மனசில் ஓட்டிப் பார்க்கத் தெரியாதவர்கள் இந்த வழி தியானங்களை புறக்கணித்து விடலாம் என்பது ஆரம்ப யோசனை.//
மனதை ஒருமுகப்படுத்தி வாழ்வில் நடந்தவைகளை மனசில் நினைத்துப் பார்ப்பது எப்படி என அவர்களுக்கு சொல்லித்தரலாமே.

நீங்கள் விளக்கும் இந்த தியானம் மூச்சுப்பயிற்சி இல்லாத ஒன்றாக இருக்கிறது. தொடர்கிறேன் மேற்கொண்டு அறிய.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

மனதை ஒருமுகப் படுத்துதல் என்ற பெரிய சிரமம் எல்லாம் கூட வேண்டாம் சார். நடந்தவைகளைக் கோர்வையாக நினைத்துப் பார்க்கத் தெரிந்திருந்தால் போதும்.

தாம்பரத்தில் தான் ரயிலில் ஏறினோம். பூங்கா ஸ்டேஷனுக்கு டிக்கெட் எடுத்திருந்தோம். பயணித்த ரயில் பெட்டியில் சிலர் உரத்தக்குரலில் எதையோ விவாதித்துக் கொண்டு வருகிறார்கள். ரயில் கோடம்பாக்கம் ஸ்டேஷனை நெருக்குகிற நேரத்தில் சடாரென்று அவர்களுக்குள் விவாதம் தீவிரமாகிறது. கோடம்பாக்கம் நடைமேடை கூட கண்ணுக்குத் தெரிகிறது.
வண்டியின் வேகம் லேசாக குறைகிற மாதிரி தோன்றுகையிலேயே அவர்களில் ஒருவர் சட்டென்று பிளாட்பாரத்தில் குதித்து ஓட அவரைப் பின்தொடர்ந்து இன்னொரு நீலச்சட்டைக்காரர் குதிக்க எத்தனைக்க அவர் தோள் துண்டு பின்னால் நின்றவர் மணிக்கட்டில் சிக்கியிருக்க---

அதைத் தொடர்ந்து நடந்ததையெல்லாம் தான் மனத்தில் ஓட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்..

'அவங்களும் தாம்பரத்தில் தான்ப்பா ரயில் ஏறினாங்க.. கோடம்பாக்கம் வந்ததும் ஒருத்தன் பிளாட்பாரத்லே குதிச்சிட்டானா? அவனைப் பிடிக்க இன்னொருத்தன்..' (இது சொல்வதே அதிகம் போல ஒருத்தருக்கு)

இன்னொருத்தரோ, 'எவன் என்ன செஞ்சான்ங்கறதை நோட் பண்ணவா நேரம் இருக்கு?.. நானே பூங்காவிலே நின்னதும் எதிர்த்தாப்பலே ரோடை கிராஸ் பண்ணி ரயில் பிடிச்சு பெரம்பூர் போகணும்... அவசர வேலை..
யாராவது வேலையத்தவன் இருப்பான்.. என்ன நடந்ததுன்னு அவன் கிட்டே போயி கேளு...'

வாழ்க்கை இப்படித்தான் சார் பெரும்பாலோருக்கு போய்க்கிட்டிருக்கு.
ஒரு நாள் காலையிலிருந்து மாலை வரை என்ன நடந்தது என்று நாம் சமந்தப்பட்டதைக் கூட ஒண்ணு விடாமல் எதையும் விட்டு விடாமல் நினைத்துப் பார்க்கிற Observation எல்லோருக்கும் சாத்தியமாகாது. சாத்தியமானவர்களுக்கு இந்த வகை தியானம் சுலபமாக இருக்கும் என்பதற்காகச் சொன்னேன்.

38-ம் பக்க ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கிற வித்தை எல்லாருக்குமா கைவந்திருக்கு?.. அஞ்சு வரை கண்டுபிடிக்கிறது ஈஸியா இருக்கும். அந்த ஆறாவது என்னங்கறது உத்து உத்து படங்களைப் பார்த்தால் கவனத்திற்கு வராது..

ஸ்ரீராம், என்ன சொல்றீங்க?.. நெல்லை?.. நீங்க?..



ஸ்ரீராம். said...

//ஸ்ரீராம், என்ன சொல்றீங்க?.. //

நீங்க சொன்னா சரிதான்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

கடைசியில் ததாஸ்து தானா?..

இவங்களை என்ன சொல்றீங்கன்னு கேட்கலாம்னா, தி. கீதா ஆளையேக் காணோம்!..

நெல்லைத்தமிழன் said...

/அந்த ஆறாவது என்னங்கறது உத்து உத்து படங்களைப் பார்த்தால் கவனத்திற்கு வராது..//

ஒரு செயலை முழுமையா முடிக்கிறது எப்போவுமே கஷ்டம்தான்.

3 மைசூர்பாக் சட்னு சாப்பிடமுடியும். 4 வதை எடுக்கும்போதே..போதுமே என்ற எண்ணம் வரும். 8வதுக்கு, அடச்சே.. போதும்..ருசியே இல்லை என்று தோன்றும். இதை எதுக்கு வேணும்னாலும் பொருத்திப் பார்க்கலாம்.

4 அடி வரை கிணறு தோண்டுவது சுலபம். அதுக்கு மேல கஷ்டம். (எங்க அப்பா நான் 6 வது படிக்கும்போது சொல்வார்..கணக்கு சொல்லிக்கொடுக்கும்போது. 12 அடி ஆழ கிணறு தோண்ட 100 ரூபாய்னா, 6 அடி தோண்டினா என்ன கொடுக்கணும்னு கேட்டு, நான் 50 ரூபாய்னு சொன்னா, பதில் சரிதான், ஆனா நடைமுறைல அப்படி கொடுக்கக்கூடாது. முதல்ல தோண்டுவது சுலபம். போகப்போகத்தான் ரொம்ப கஷ்டம் என்று சொன்னார்).

//நினைத்துப் பார்க்கிற Observation எல்லோருக்கும் சாத்தியமாகாது// - நாம பெரும்பாலும் அதை விரும்புவதில்லை. ஒரு நாளில் நிறைய தவறுகள், மனதுக்கு கஷ்டமான விஷயங்கள் நடந்திருக்கலாம். அதையெல்லாம் திருப்பி நினைப்பதன் மூலம் தூக்கம்தான் போகும்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

உங்க அப்பா சொன்னதை கூர்ந்து பார்த்து இப்பொழுது நீங்கள் நினைவு கொள்ளவில்லையா, அது போலத் தான்!

கடந்த கால வாழ்க்கை அனுபவங்கள் பாடங்கள் தானே! அவை எதிர்கால வாழ்க்கைக்கு உரமாக அமைய வேண்டும் அல்லவா?..

நாம் எதைச் செய்தாலும், அதிலிருந்து Realisation (உணர்தல் என்று சொல்லலாமா?) என்ற ஒன்று இருக்கிறது, நெல்லை. அது இல்லை என்றால் செஞ்ச தப்பையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்போம்.

போகட்டும். இந்த க்வாலிபிகேஷன்லாம் இந்தத் தியானத்திற்கு ரொம்ப முக்கியம். அதனால் தான் இதையெல்லாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டியிருக்கு. தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

Bhanumathy Venkateswaran said...

இந்த தொடரின் முந்தைய பகுதிகளை நான் படிக்கவில்லை. அதனாலேயே இதை படிப்பதில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனாலும் படித்தேன். தியானம் செய்ய கற்றுக் கொடுக்கிறீர்கள். எனக்கு இப்போது மிகவும் அவசியமான ஒன்று. நன்றி

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

மனம், உயிர், உடல் - இந்த முப்பெரும் கூட்டுச் சக்திகளைப் பற்றி நாம் அறிந்தவரை சுவாரஸ்யமாக எழுத வேண்டும் என்ற எண்ணத்திலே ஆரம்பமானது இந்தத் தொடர்.

மனம் பற்றிச் சொல்கையில் தியானம் குறுக்கிட்டு விட்டது. தியானம் மட்டுமே முக்கியமென்றால் இந்த அத்தியாயத்திலிருந்தே வாசிக்க ஆரம்பித்தால் போதும். இன்று புழக்கத்தில் இல்லாத வேறு வகையான தியானம் இது என்ற குறிப்பை மட்டும் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துக்களையோ சந்தேகங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி, சகோதரி.




Related Posts with Thumbnails