மின் நூல்

Tuesday, April 20, 2021

மொழி

                                                                    11

ன்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கருதலாம்.    எக்காலத்தும் மனிதன் தனித் தீவல்ல.  அந்தத் தொன்மை  காலத்தும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதே நியதி.  உலகின் மற்ற நிலப்பகுதி வாழ் மக்களிடமிருந்து  தமிழன் மட்டும் வேறுபட்டுத் தனித்திருந்தான் என்று கொள்வது  வரலாற்று ரீதியான பிழை என்று கொண்டால் கி.மு. எட்டாம்  நூற்றாண்டிற்கான உலக அளவிலான தொன்மை நாகரிகச் சிறப்புகளை அலச வேண்டியது கட்டாயமாகிறது.


இப்போதைக்கு நாம் ஆய்வில் எடுத்துக் கொள்ள வேண்டிய கால கட்டம்  தலைச்சங்க, இடைச்சங்க காலம்  மட்டுமே.  தொன்மையான இந்த காலத்துக்கான வரலாற்று சான்றுகளில் தான் பல்வேறுவிதமான மாறுபட்ட கருத்துக்களை வரலாற்று ஆய்வாளர்கள் கொண்டுள்ளார்கள்.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவில் பார்த்தாலே ஹரியங்கா வம்சத்தைச் சேர்ந்த அஜாதசத்ரு கங்கைக் கரையில் பாடலிபுத்திரம் என்ற பெருநகரை நிர்மாணிக்கிறான். நந்த வம்சத்தின் கடைசி மன்னனான தன நந்தனுக்கும் அர்த்த சாஸ்திர புகழ் கெளடில்யர் என்னும் அந்தணருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக கெளடில்யர் சந்திரகுப்தன் துணையுடன் நடத்திய புரட்சியின் விளைவு மெளரிய பேரரசுக்கு வித்திடுகிறது.  பாடலிபுத்திரம் மெளரிய ஆட்சியின் தலைநகராகிறது.  இது நடந்தது கி.மு. 322 ஆண்டில்.

கிரேக்க மாமன்னன் அலெக்ஸாந்தரின் படைத்தளபதி செலுக்கஸ் நிகோடர் சிந்து ஆற்று சமவெளி வரை படையெடுத்து வந்த பொழுது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள்  சந்திரகுப்தனுடன் நடந்த போரின் விளைவாக இரு பகுதியினருக்கும் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.  இந்த உடன்படிக்கையின்படி ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாபின் சில பகுதிகள் மெளரிய பேரரசுடன் இணைக்கப்பட்டன.  ஒரு நல்லிணக்க நட்பின் அடையாளமாக செ.நிகோடரின் மகள் ஹெலனாவை சந்திர குப்தர் மணம் முடித்தார்.  செலுக்கஸ் நிகோடரின் தூதுவராக மெகஸ்தனிஸ் மெளரிய பேரரசின் அரசவையை அலங்கரித்தார்.  மெகஸ்தனிஸின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலான  இண்டிகாவும்,  கெளடில்யரின் அர்த்தசாத்திரமும் சந்திரகுப்தரின் ஆட்சி சிறப்பை நமக்கு தெரியப்படுத்தும் வரலாற்று ஆவணங்களாயின.  அலெக்ஸாந்தரின் படையெடுப்பின்  மிகச் சிறந்த விளவுகளில் ஒன்று கிரேக்க செலுக்கசிய மரபினர் வழிவந்த கலப்புத் திருமணங்களாகும்.

சந்திரகுப்த மெளரியரின் திருமகனார் பிந்துசாரர் சந்திர குப்தருக்கும், ஹெலனாவிற்கும் பிறந்தவராவார்.  சந்திர குப்தனின் பேரன் அசோகன் கி.மு. 273-ல் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.  இவர் பிந்துசாரருக்கும் அவர் மனைவி சுமத்திராங்கிக்கும் பிறந்தவர்.  இந்திய துணைக்கண்டத்தின் தமிழக, கேரளப் பகுதியைத் தவிர்த்து கிட்டதட்ட மொத்த இந்திய நிலப்பரப்பும் மெளரிய பேரரசின் ஆட்சிக் குடைக்கீழ் வந்த காலம் இது.

பேரரசர் அசோகர் எதிர்கொண்ட முதல் போரும் முடிவுப் போரும் கலிங்கப் போரே.  கங்கை ஆற்றிலிருந்து கோதாவரி ஆறு வரை விரிந்து கிடந்த பரந்த  பூமி கலிங்கம்.  இந்தப் பகுதியின் வித்தியாசமான சிறப்பு சுதந்திர வேட்கை  கொண்ட பழங்குடிகளின் வாழும் பூமியாக இருந்தது.  இன்றைய  ஒரிஸாவின் தயா ஆற்றங்கரையில் ஒன்றுபட்ட பழங்குடியினர் மிகத் துணிசலுடன் ஒரு பேரரசின் பிர்மாண்ட படையை எதிர் கொண்டனர். பல்லாயிரக் கணக்கான எளிய மக்களை காவு வாங்கிய ரத்த ஆறு ஓடிய வன்மப் போர் இது.  கி.மு. 261 காலகட்டத்தில் நிகழ்ந்த கலிங்கப் போரின் துயரம் அசோகரின் மனமாற்றத்திற்குக் காரணமாக இருந்து  எல்லா உயிர்களின் மேலுமான அன்பே மனிதகுலத்தின் ஆன்ம ஞானத்திற்கு வழிகாட்டல் என்ற கோட்பாட்டை சொந்த அனுபவத்தில் ஏற்றுஅசோகர் புத்தமதத்தைத் தழுவுகிறார்.  தன் மகன் மகேந்திரனையும்,  மகள் சங்கமித்திரையையும் புத்த மதம் பரப்பும் ஞானத் தூதுவர்களாக  இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

தென் இலங்கையில் ஜம்புகோளப்பட்டினம் என்ற கடல் சார்ந்த இடம்.  இன்றைய சம்புத்துறை இதுவே.  இங்கே தான் சங்கமித்திரை தன் சகோதரன் மகேந்திரனுடன் ஒரு வெள்ளரசு மரக்கிளையுடன் வந்து சேர்கிறார்கள்.  அசோகனே இந்தக் மரக்கிளையுடன் தன் மக்களை இலங்கைக்கு அனுப்பி  வைத்ததாக  பெளத்த வரலாற்று நூலான மகாவம்சத்தில் குறிப்புகள் காணக்  கிடைக்கின்றன.

கர்னாடகம் வரை அசோகரின் சாம்ராஜ்யம் விரிந்து பரந்து கிடந்தது.  இலங்கைக்கு தன் மக்களை புத்த மதத்தைப் பரப்பும் நோக்கோடு  அனுப்பும் அளவுக்கு இலங்கையின் அக்கால சூழல்களோடு அசோகருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது.  இடையில் இருந்த அந்நாளைய தென் தமிழக நிலப்பரப்பில் அசோகரின் செல்வாக்கின் நிலை என்ன என்பது தான் வரலாற்றின் பக்கங்களில் நாம் தேட வேண்டிய சேதி.

கிட்டத்தட்ட இந்தக் காலம் தான் தமிழ் கூறு நல்லுலகில் தலை, இடை சங்கங்கள் இருந்த காலம்.

அசோகரைப் பற்றி ஏகப்பட்ட குறிப்புகள் சரித்திர பாடங்களில் நான் வாசித்த 1950 பள்ளிப்பருவ காலகட்டங்களிலேயே உண்டு.  அந்த அளவுக்கு சங்க காலங்களைப் பற்றிய தகவல்கள் இருந்ததா என்றால் வருத்தத்துடன் இல்லை என்றே சொல்ல வேண்டும்.  அன்றில்லை, இன்றாவது இருக்கிறதா என்றால் தெரியவில்லை.  அது போகட்டும். அதை விட மெத்தனப்போக்கு என்னவென்றால் மெத்தப் படித்த தமிழ் அறிஞர்களே  முதல், இடை சங்கங்கள்  இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே  கூறுகின்றனர்.  அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் வேடிக்கையானவை. அல்லது மேலோட்டமானவை.   

அவர்களை போல அல்லாமல்,  தமிழின் முதல், இடைச் சங்க காலத்தைப் பற்றி தீர்க்கமாகவே நாம் பார்ப்போம்.

================================================

"அரசனின் மகிழ்ச்சி அவனது குடிமக்களின் மகிழ்ச்சியில் உள்ளடக்கியுள்ளது..  அவனது நலம் அவர்களின் நலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவன் தனக்குத் திருப்தியளிக்கக் கூடிய ஒன்றை மட்டும் நல்லதென்று கருதக் கூடாது.  குடிமக்களுக்கு எது நலனாகவும் அவர்களின் 
திருப்தியாகவும் இருக்கக்கூடுமோ அதுவே தனக்கான திருப்தியாகவும் நலனாகவும் அவன் கொள்ள வேண்டும்.

---  கெளடில்யர்.
================================================

(வளரும்)
 

16 comments:

ஸ்ரீராம். said...

இன்று பதிவில் கண்டிருக்கும் பல தகவல்கள் சரித்திர ஆதாரங்களுடன் நரசிம்மா அத்திமலைத்தேவனில் முதல் பாகத்தில் எழுதி உள்ளார். 

முன்பு படித்ததற்கும் இப்போது நரசிம்மா ஆராய்ந்து எழுதி இருப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

Thulasidharan V Thillaiakathu said...

நிறைய சரித்திர தகவல்கள் அண்ணா..தொடர் என்று தெரிகிறது. வாசிக்கிறேன்

நீங்கள் நலமா?

நான் நலமே எபியில் உங்கள் கேள்வியைப் பார்த்தேன்..

ஸ்ரீராம் இப்போதுதான் அத்திமலைத்தேவன் வாசிக்கத் தொடங்கியிருந்தேன் இடையில் தொடர இயலவில்லை. மீண்டும் வாசிப்பதைத் தொடர வேண்டும் நீங்கள் சொல்லியிருப்பதையும் பார்க்க வேண்டும்

கீதா

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நான் இந்தப் பகுதியில் எழுதியிருப்பது தென் மதுரையும், கபாடபுரமும் கடலுள் மூழ்குவதற்கு முற்பட்ட கி.மு.காலம்.

அந்திமலைத் தேவன்? பெயரே ஏதோ பிற்காலப் பெயர் போல அல்லவா இருக்கிறது?
எந்த காலகட்டத்து கற்பனை அது என்று மட்டும் சொல்லுங்களேன், ஸ்ரீராம்.




ஜீவி said...

@ ஸ்ரீராம்

'இலங்கைத் தீவோடு தொடர்பு வைத்திருந்த மெளரிய அசோகன், அதனோடு ஒட்டியிருந்த தென் தமிழகப் பிரதேசத்தை ஆண்ட பாண்டிய மன்னர்களோடு தொடர்பில் இல்லையா?' என்ற நியாயமான கேள்வி என் மனத்தில் எழுந்ததை தலை, இடைச் சங்க கால நிகழ்வுகளோடு ஒருங்கிணைத்து இந்த ஆய்வுக்கு ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.

இதே வழியில் தான் திரு. நரசிம்மாவும் யோசித்திருக்கிறார் என்று சொல்கிறீர்களா?
புரியவில்லை. மேலோட்டமாகவேனும் அது பற்றிச் சொல்லுங்களேன். உபயோகமாக இருக்கும்.

ஸ்ரீராம். said...

அவர் யோசிக்கவில்லை.  ஆதாரங்களோடு சொல்லி இருக்கிறார்.  எலலாமே தேவ உடும்பர மரத்தோடு பின்னிப்பிணைந்து வருகிறது.  பிந்துசாரர், கௌடில்யர், செலூகஸ் நிகேடார் பற்றி எல்லாம் அந்தப் படைப்பில் அவர் சொல்லி இருக்கிறார்.  நாம் படித்த வரலாற்றிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது அது.  நீங்கள் படித்தால்தான் புரியும் என்று நினைக்கிறேன்.

ஜீவி said...

@ தி. கீதா

அப்படியொன்றும் நிறைய சரித்திரத் தகவல்கள் என்றில்லை. சகோ.

தமிழின் தலை, இடைச்சங்கங்கள் இருந்திருக்கவே இல்லை, அவை வெற்றுக் கற்பனையான ஒன்று என்றளவில் சில தமிழ் அறிஞர்களின் கூற்று உலாவி வந்திருக்கிறது. இப்படியான ஒரு போக்கு, கால்டுவெல் அவர்களின் ஆய்வுகளுக்குப் பிறகு தமிழறிநர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதாக நினைக்கக் காரணங்கள் இருக்கின்றன.

தமிழ் மொழியின் சிறப்புகளைப் பற்றித் தான் எழுத ஆரம்பித்தேன். மேற்கண்ட குறிப்புகள் என்னை திகைக்க வைத்து அது பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவ்வளவு தான்.

முடிந்தால் தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன். நன்றி, சகோ.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//அவர் யோசிக்கவில்லை. ஆதாரங்களோடு சொல்லி இருக்கிறார்.. //

நான் கேட்பதே வேறே ஸ்ரீராம். மெளரிய அசோகருக்கு கபாடபுர சங்க கால பாண்டிய மன்னர்களோடு தொடர்பு இருந்திருக்கிறது என்பது மாதிரி அவர் எழுதியிருக்கிறாரா என்பது மட்டுமே என் ஆர்வம். அதைத் தொட்டு அவர் எழுதவில்லை என்றால் இந்தத் தொடருக்கு சம்பந்தமில்லாது போகும். அதைத் தெரிந்து கொள்ளத் தான் கேட்கிறேன்.

ஜீவி said...

தென்மதுரை, கபாடபுர பாண்டியரைச் சுற்றிய தகவல்களில் மெளரிய பேரரரசின் தொடர்புகள் இருந்திருந்ததா இல்லையா என்பது தான் நமக்கு முக்கியமே தவிர மெளரிய அரசர்களைப் பற்றியவை அல்ல.
இலங்கை வரை வந்த சங்கமித்திரையும் மகேந்திரனும் பாண்டிய நாட்டுக் கடற்கரை மணலில் கால் பதித்தார்களா என்பதே கேள்வி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ந்து வாசித்துவருகிறேன். பல புதிய தகவல்களைத் தெரிந்துகொள்கிறேன். நாம் தெரிந்துகொள்ளவேண்டியதும், தேடப்படவேண்டியதும் அதிகம் இருக்கிறது என்பதை உணரமுடிகிறது.
ஓர் ஐயம். கி.மு./கி.பி. என்பதற்கு அண்மைக்காலமாக பொ.ஆ.மு./பொ.ஆ. அல்லது பொ.யு.மு./பொ.யு. - Before Common Era/Common Era (B.C.E./C.E.) என்று பயன்படுத்தப்பட்டு வருகிறதே? உங்கள் பதிவில் கி.மு. என்ற வகையிலேயே உள்ளதே?

ஜீவி said...

@ De. B. Jambulingamm Asst.Regtr. (Retd.)

வணக்கம் ஐயா.

தமிழகத்தில் சமண, பெளத்த மதங்களின் செல்வாக்குகள் குறித்தான ஆய்வுகளில் மனம் ஒன்றி செயல்பட்டவர் நீங்கள். அது பற்றி அறிந்திருந்ததினால் ஸ்ரீராமிற்கு பின்னூட்டம் போடும் போது கூட அது பற்றிய உங்கள் கருத்து என்னவாக இருக்குமோ, வாசித்து இதற்கான உங்கள் அங்கீகாரம் வேண்டுமே என்று உங்களைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் இந்தப் பகுதியை வாசித்து விட்டதில் மிகவும் மகிழ்ச்சி.

அசோகர் காலத்து மெளரியப் பேரரசின் தொடர்பு முற்காலப் பாண்டிய மன்னர் ஆளுகையில் இருந்ததா என்ற வரலாற்றுச் சான்றுகளைத் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.

கி.மு.-- கி.பி. வழக்கமே பழகிப் போனதற்குக் காரணம் சொல்கிறேன்.

vaanampaadi said...

நம் தமிழ் மொழி பற்றிய அருமையான பதிவு. மௌரியர்களின் சரித்திரத்தின் வாயிலாக அசோகருக்கு அன்பின் அவசியம் புரிய இத்தனை பெரிய போரா? என அசோகரின் மேல் கோபமெழுகிறது.

உலகில் உள்ள இலக்கியங்கள் சொல்லிச்செல்வது,
"Everywhere there is connection

Everwhere there is illustration.

No single event, No single literature."

ஒரு இலக்கியத்தின் வாயிலாக அந்நாட்டு மக்களின் வாழ்வு, இயற்கை வளங்கள், இங்கு நிலவிய சீதோஷண நிலை , அரசியல், வர்த்தகம் அனைத்தையும் (சரித்திரத்தை) அறிந்து கொள்கின்றோம். தமிழர்களின் முதல், இடை, கடை சங்கங்கள் பற்றிய புரிந்துணர்விற்கு சான்றாக விளங்கும் இலக்கியங்கள் நம்மிடம் சரிவர இல்லை என்பதே வருத்தம்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam, Asst. Retr. (Retd)

நான் 1959 வருட எஸ்.எஸ்.எல்.ஸி. எந்த அளவுக்கு கி.மு. - கி.பி.களுடன் நெருக்கம் இருந்திருக்கும், பாருங்கள்.

பொ.ஆ.மு. விவகாரங்களைப் பார்த்தாலே ஏதோ கட்சி பெயர் போல இருக்கிறது. இருக்கிற 'முன்னேற்ற'ங்கள் போதாது என்று இது வேறையா>.. :))

இப்பொழுது சென்ற வருடம் தான் இந்த பொ.ஆ.மு. சமாச்சாரமெல்லாம் தமிழகப் பள்ளிப்பாடத்திட்டத்திலேயே அமுலுக்கு வந்த மாதிரி இருக்கிறது.

இடையே தமிழகத்தில் காலண்டர்களில் மட்டுமே இருந்த திருவள்ளுவர் ஆண்டு நிலை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

தொ.மு -- தொ.பி. (தொல்காப்பியருக்கு முன் -- தொல்காப்பியருக்குப் பின்) என்று கூட திருவள்ளுவர் ஆண்டுக்குப் பதில் நாம் வழக்கத்தில் கொண்டு வந்திருந்தால் தொன்மைக்கு பெருமை சேர்க்கிற மாதிரி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆரவாரங்களோடு நடந்து முடிந்த உலகத் தமிழ் மாநாடுகளிலெல்லாம் இதையெல்லாம் யோசிக்கிற அளவுக்கு ஆர்வம் இல்லாது போயிற்று போலும்.

இந்த Common Era -க்கு எந்த ஆதாரப் புள்ளியை வைத்து முன் - பின் வரையறுப்பது என்பதெல்லாம் என்னளவில் சரிவர பழக்கத்தில் கொள்ள முடியாமல் இருக்கிறது. அது தவிர எந்த விவரங்களையாவது தகவல் களஞ்சியங்களில் பொதுவாகத் தேடும் பொழுது அந்தத் தேடலின் விவரங்களும் இந்த Common Era அடிப்படையில் புழக்கத்திற்கு வந்து விட்டதென்றால் ஓரளவு சுலபமாகவும், எல்லோரும் கைக்கொள்கிற மாதிரியும் இருக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக உலக வழக்க நடைமுறைகளோடு சேர்ந்து கொள்ளலாம், ஐயா.

ஜீவி said...

@ Vanampaadi


வாங்க, வானம்பாடி. உங்களை இங்குப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.
தொடர்ந்து கூட வாருங்கள். நம் தமிழின் புகழை நாமே மேலெடுத்துச் செல்வோம்.

"Everywhere there is connection

Everwhere there is illustration.

No single event, No single literature."

-- உங்கள் எடுத்துக்காட்டான மேற்கண்ட வரிகளைப் பார்த்த பொழுது அந்த மூன்று வரிகளும் எவ்வளவு ஆழமான பொருளைச் சுமந்து கொண்டு எழுத்துக் கோர்வையாகத் தெரிகின்றன என்று யோசனை ஓடியது.

தமிழை பெருமை படுத்துகிறேன் பேர்வழி என்று தம் பெருமையில் தமிழைக் கரைத்தவர்கள் தாம் ஏராளம். தன்னை முன்னிலைப் படுத்தாமல் தாய்மொழியை முன்னெடுத்துச் சென்றவர்கள் வெகு சிலரே. இன்று தமிழின் முதல், இடைச் சங்கங்கள்
இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது, கருதப்படுகிறது என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு முன் தோன்றிய மூத்த தமிழ் மொழியின் கி.மு. கால சிறப்புகள் பஃறுளி ஆற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை மீட்டெடுத்து தொல்காப்பிய காலத்து தமிழனின் பெருமையை நிலை நாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

ஒரு மொழிக்கான ஆழ்ந்த இலக்கணப் புலமைக்கும் அதன் கட்டமைப்புக்கும் சான்றான தொல்காப்பியம், தொல்காப்பியத்தை யாத்த நம் வணக்கத்திற்குரிய பெரும் புலவர் தொல்காப்பியர், தொல்காப்பியம் அரங்கேறிய காலத்து பாண்டிய மன்னன் நிலந்தருவிற் பாண்டியன் இவர்கள் வாழ்ந்த காலத்து சுவடுகளை தேடும் முயற்சியில் ஈடுபடுவோம் என்பதே இந்தத் தொடரின் முக்கிய குறிக்கோளாயிற்று.

தொடர்ந்து வாசித்து இந்த தேடலுக்குத் துணையாக உங்களின் ஆற்றல்களும் பயன்பட வேண்டுகிறேன். நன்றி, வானம்பாடி.

சிகரம் பாரதி said...

நல்ல ஆய்வு. தொடர வேண்டும். நிறைய வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். தொடருங்கள்... தொடர்வோம்...

எனது பதிவு

https://newsigaram.blogspot.com/2021/04/vaanavalli-reading-experience-2.html

வ.ந.கிரிதரன் - V.N.Giritharan said...

//தென் இலங்கையில் ஜம்புகோளப்பட்டினம் என்ற கடல் சார்ந்த இடம். இன்றைய சம்புத்துறை இதுவே. // உண்மையில் இப்பட்டினம் வட இலங்கையிலுள்ள திருவடிநிலை என்னும் பகுதி. அப்பகுதியே ஜம்புகோளப்பட்டினம் என்று அழைக்கப்பட்டதாக வரலாற்றறிஞர்கள் கருதுவர்.

ஜீவி said...

ஓ.. அப்படியா, கிரிதரன் ஐயா? தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.

Related Posts with Thumbnails