மின் நூல்

Sunday, October 13, 2024

இது ஒரு தொடர்கதை -- 23

லேசான புன்னகையுடன்,  மோகன் வெளியே நின்று கொண்டிருப்பான் என்ற எதிர்பார்ப்பில் வித்யா கதவைத் திறந்தாள்.

வெளியே சிலிண்டருடன் Gகேஸ் கம்பெனி  ஆளைப் பார்த்து ஏமாற்றத்தில் அவள் முகம் கவிந்தது.  சமாளித்தபடி கதவை அகலத் திறந்து, "வாப்பா.." என்றபடி உள்பக்கம் போனாள். 

சிலிண்டர் டெலிவரி ஆள் உள்ளே வருவதைப் பார்த்து அவசர அவசரமாக ஜலஜா அவனுக்கு வழி காட்டியபடி சமையலறை உள்பக்கம் போனாள்.  அம்மாவுக்கு உதவுவதற்காக வித்யாவும் சமையலறை கதவின் உள்பக்கம் நின்று கொண்டாள்.

சிலிண்டர் காஸை செக் பண்ணி, அவன் காலி சிலிண்டரை எடுத்துக் கொண்டு வெளியே வந்ததும் பில் பார்த்து கையெழுத்திட்டு காசு கொடுத்து அனுப்பினார் புரந்தரதாசர்.   அந்த வீட்டில் இன்னாருக்கு இன்ன வேலை என்று அட்டவணையிட்டு குறித்த மாதிரி எல்லாம் நடந்தது.  இதை வெளி மனுஷர் ஒருத்தர் பார்த்தால் கூட ஆச்சரியப்படக்கூடியதாக இருக்கும் தான்.

"காலிங் பெல் அடிச்சதும் மோகன் தான் வந்து விட்டானோ என்று நினைத்தேன்" என்றார் புரந்தரதாசர்.

"ஆமாம்.. ஏன் அந்தப் பையனைக்  காணோம்?" என்றாள் ஜலஜா.

"என்னைக் கேட்டேனா?" என்று வித்யாவைப் பார்த்தவாறே சொன்னார் பு. தாசர். "சித்தே தலைசாய்க்கிறேன்... அந்தப் பையன் வந்தா சொல்லு.." என்று வீட்டின் உள்பக்கம் போனார்.

கால் மணி நேரம் ஆகியிருக்கும்.  மறுபடியும் காலிங் பெல் அழைத்தது. சட்டென்று வாசல் பக்கம் வித்யா போனாள்.  

கதவைத் திறந்ததும் பேப்பர்காரப் பையன் கத்தை வார இதழ்களைக் கொடுத்து விட்டுப் போனான்..  

அன்று வெள்ளிக்கிழமை அல்லவா?..  'மனவாசம்' அந்தக் கத்தையில் இருந்தது.

அதை மட்டும் எடுத்துக் கொண்டு ஜன்னல் பக்கம் நாற்காலியை இழுத்துப் போட்டபடி வித்யா அமர்ந்தாள்.  வேகவேகமாக 'இது ஒரு தொடர்கதை'ப் பகுதியைத் தேடி அவள் விரல்கள் புரட்டின.  

அந்த வார தொடர்கதைப் பகுதியும் கிடைத்தது.  தொடருக்கு ஓவியர்  போட்டிருந்த படமும் அவள் பார்வைக்கு அசப்பில் தன்னைப் போலவே இருந்ததில் அவளுக்கு லேசான சந்தோஷம். அவளுக்குத் தெரிந்த வினிதா போல ஏதாவது படம் இருக்கிறதா பக்கங்களைப் புரட்டிப் பார்த்தாள்.  நல்ல வேளை இல்லை. அதில் அவளுக்கு அடக்க முடியாத சந்தோஷம்.  தற்செயலாகத் தான் என்றாலும் இதெல்லாம் எப்படி அமைகிறது என்று வித்யாவிற்கு ஆச்சரியம். 

அந்த சமயத்தில் தான் "வரலாமா?.." என்று வாசல் பக்கமிருந்து ஒரு குரல். பழக்கப்பட்ட குரலாக இருக்கவே அனிச்சையாக வித்யா திரும்பிப் பார்த்தாள். ஓ... மோகன்!.. 

அவள் சுதாரித்துக் கொள்வதற்குள் அவள் அம்மா,"வாங்க.. வாங்க.." என்று அழைத்தபடியே கதவுப் பக்கம் போனாள்.  நல்லவேளை, பேப்பர் பையன் வந்து வார இதழ்களைக் கொடுத்த பொழுது வாசல்கதவை சாத்தாமல் வந்திருக்கிறோம் என்று வித்யா நினைத்துக் கொண்டாள்.

மோகன் உள்ளே வந்ததும் டக்கென்று நாற்காலியிலிருந்து எழுந்த வித்யா, "வாங்க.." என்றாள்.  அவள் கையிலிருந்த மனவாசம் இதழைப் பார்த்து, "ஓ... படிச்சாச்சா?" என்று புன்னகையுடன் கேட்டான் மோகன்.

"உங்க பகுதி மட்டும்.." என்று வித்யா சொன்னதும் இருவருமே சிரித்தனர். "ஸாரை எங்கே காணோம்?" என்று சுற்றுமுற்றும் பார்த்தான் மோகன்.

"இத்தனை நேரம் இங்கே தான் இருந்தார்,, உள்ளே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப் போயிருப்பார்.." என்று ஜலஜா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே புரந்தரதாசர் வந்து விட்டார்.."என்ன மோகன்! ஒம்போது மணிக்கு வருவேன்னு சொன்னேயே என்று.." என்று சொல்ல வந்ததை முடிக்கக் கூட இல்லை, 'சாரி.. சார்.. இன்னிக்கு ஆபீஸ்லே எதிர்பாராத வேலை ஒண்ணு.. அதான், டிலே ஆயிட்டது.." என்று தழைந்த குரலில் மோகன் சொல்லும் பொழுதே "பரவாயில்லேபா.. ஜஸ்ட் வரேன்யே காணுமேன்னு நெனைச்சிண்டிருந்தேன்.." என்றார் புரந்தரதாசர்.  "உட்காரு, மோகன்.." என்று சோபாவைக் காட்டி தானும் பக்கத்து சோபாவில் அமர்ந்தார்.  மற்றவர்களும் பக்கத்து சோபாக்களில் அமர்ந்தனர். 

"என்ன சாப்பிடுறீங்க மோகன்? காப்பி?"

"சாரி, ஸார்..  இன்னிக்கு ரெண்டு காப்பி ஆச்சு.. வேணாம் சார்,,"

"அப்போ கூல் டிரிங்க்ஸ் ஏதாவது?.."

"இல்லே, ஸார்.. ஏற்கனவே ஓவர் லோட்.." என்று அவன் சொன்னதும் "இன்னிக்கு நம்ம வீட்லேயே சாப்பிட்டுடலாம்.." என்றாள் ஜலஜா.

'அட! வழக்கமா இவ்வளவு நெருங்கிப் பேசாத அம்மா கூடவா' என்று வித்யா நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே  "சரிங்க.." என்று மோகன் சொன்னதில் எல்லோருக்கும் சந்தோஷம்.


"உங்க வீட்டு வெளிப்பக்கம் இருக்கே, ஒரு பெரிய இரும்பு கேட், அதைப் பகல்  நேரங்களில் உள் பக்கமா மூட மாட்டீங்களாக்கும்?" என்று மோகன் திடுதிப்பென்று கேட்ட பொழுது எதற்குக் கேட்கிறான் என்று தெரியாமல் திகைத்தார் புரந்தரதாசர்.

"ஆமாம். பகல் நேரங்களில் மூடுவதில்லை.. ராத்திரி மட்டும் நாதாங்கியை மாட்டி பூட்டு போட்டுடுவோம்"என்று ஜலஜா சொன்ன போது "ஓ.. அப்படியா?.. பகல் நேரங்களிலும் சும்மாவானும் நாதாங்கியை மட்டும் போட்டுட்டீங்கனா  இன்னும் சேஃப்டி தானே? இப்பப் பாருங்க, நான் வரும் பொழுது அந்த வெளி கிரில் கேட், உள் வாசல் மெயின் டோர் ரெண்டும் திறந்திருந்ததில்லையா? அந்த மாதிரி இருக்காம இருந்தா  நல்லது தானே! அதுக்காகத் தான் கேட்டேன்" என்றான்.

"நீங்க சொல்றதும் சரி தான்" என்றாள் ஜலஜா. "வர்றவங்க கை நுழைச்சு நாதாங்கியை திறந்திண்டு வந்தாலும் போறப்போ சாத்திண்டு போறதில்லை.. இங்கிருந்து கொஞ்சம் தூரமா கேட்டு இருக்கில்லியா, அதனாலே எங்களுக்கும் அப்பப்ப போய் சாத்த முடிலே.. அதனாலே இருக்கட்டும் போன்னு அப்படியே விட்டுடறோம்.  ஆனா இந்த வாசக்கதவை  நிச்சயம் சாத்தி தாழ் போட்டு மூடிடுவோம். காலிங் பெல் அடிச்சதுன்னாத்தான் திறக்கறது வழக்கம்."  

"மோகன்! இன்னிக்கு இந்தக் கதவு திறந்தபடி இருந்தது நான் பண்ணின தப்பு.." என்றாள் வித்யா. "பேப்பர்காரன் வரும் பொழுது கூட இந்தக் கதவு சாத்தித் தான் இருந்தது. கை நிறைய வார இதழ்களை வாங்கிக் கொண்டு வந்தவள் வெளிக்கதவை சாத்த மறந்திருக்கிறேன். அது என்னோட தப்பு தான்" என்றாள் வித்யா. 

"அப்படியா?  அப்படின்னா சரி.  நேத்து ராத்திரி நான் இங்கே வந்து விட்டுப் போனேன் இல்லியா? அப்போ அந்த வெளி கேட் பக்கம் தான் கொஞ்ச நேரம் நின்றிருந்தேன். அவ்வளவு பெரிய கேட்டுகளை பொதுவா நான் வீடுகளில் பார்த்ததில்லை.  இப்போ வர்றத்தே கூட அது பக்கம் கொஞ்சம் நின்னு அதன் உயரத்தையும் அகலத்தையும் பிரமிப்போடு பாத்துட்டுத்தான் வந்தேன். ஆக்சுவலி அரண்மனைக் கதவு மாதிரி அற்புதமாத் தான் இருக்கு.. ராத்திரி நேரங்களில் லோன்லியா தனிக்காட்டு ராஜா மாதிரி அது தனியா நிக்கறது இன்னும் அழகு.." என்றான் மோகன்.

அவன் அப்படிச் சொன்ன பொழுது நேற்று ராத்திரி 'மோகன், நாளைக்குப் பார்க்கலாமா?' என்று இவள் கேட்டதற்கு, 'பார்க்கலாம், வினிதா' என்று சொல்லி விட்டு 'சாரி, வித்யா' என்று அவன் திருத்திக் கொண்டது இப்பொழுது வித்யா ஞாபகத்திற்கு வந்தது..  இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "மோகன்! உங்க எழுத்து மாதிரியே தான் இருக்கு, நீங்க கேஷூவலாப் பேசறதும்.." என்றாள், புன்னகைத்தபடி.

"பையா.. அந்த கேட் இந்த வீட்டிக்கு வந்ததே பெரிய கதை.." என்றார் புரந்தரதாசர்.

"ஹஹ்ஹா.. மோகன் தான் கதை எழுதறார்ன்னா, நீ வேறே கதை சொல்ல ஆரம்பிசிட்டையா, அப்பா?" என்று அவள் சிரித்த பொழுது மகளுடன் சேர்ந்து ஜலஜாவும் சிரித்தாள்.

"ஸார் சொல்லட்டும், நான் எழுதற கதைலே ஏதாவது இண்டு இடுக்கில் நுழைச்சிக்க உதவுமிலே.." என்றான் மோகன்.

"இண்டு இடுக்கு என்ன, மெயின் கதையாகவே எழுதிடுங்களேன்.." என்றாள் வித்யா.

"இப்போ அந்த கேட் பத்தி வேணாம், மோகன்.  நான் அது பத்திச் சொல்ல ஆரம்பிச்சேன்னு வெச்சுக்கோ, நீ வந்த வேலை கெட்டுடும்.  இன்னொரு சமயத்திலே சொல்றேன்..  ஆனா, நீ இதைப் பத்திக் கேட்டாத்தான் எனக்கு ஞாபகத்துக்கு வரும்.  சரியா?" என்றார் புரந்தரதாசர்.

"நிச்சயமா இன்னொரு சமயம் கேப்பேன்.. ஏன்னா, அந்தக் கேட்டின் வெளித் தோற்றம் அப்படியே என் மனசிலேயே நின்னுண்டிருக்கு.." என்றான் மோகன். அப்படிச் சொல்லும் பொழுது ஏனோ அவன் கண்கள் பளபளத்ததை வித்யா பார்க்கத் தவறவில்லை.

"அப்படியா?.." என்று புரந்தரதாசர் கேட்ட பொழுது அவர் குரலில் ஒரு படபடப்பு இருந்ததை வித்யா கவனிக்கவில்லை என்றாலும் மோகன் கவனத்திலிருந்து அது தப்பவில்லை. "நிச்சயம் அது பற்றி இவரிடம் கேட்டே ஆக வேண்டும் என்று மோகன் மனத்தில் குறித்துக் கொண்டான்.

(தொடரும்)

Saturday, October 5, 2024

இது ஒரு தொடர்கதை -- 22

வித்யா தன் ரூமிற்கு வந்து உடை மாற்றும் பொழுது அறுந்த சிந்தனை மீண்டும் தனக்குத் தானே பின்னிக் கொண்டது.

அவளுக்கு  ஆச்சரியமாக இருந்தது.  கிண்ணத்லிருந்து கொஞ்சம்  நல்லெண்ணையை கைகுவித்து ஊற்றிக்கொண்டு தேகத்தில் தேய்க்க ஆரம்பித்த பொழுது ஆரம்பித்த நினைவுகளின் ஊர்வலம்! எண்ணை தேய்த்து முடித்து ஏற்கனவே சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வைத்திருந்த சீயக்காய் தூளில் நீர் விட்டுக் கரைத்து அதையும் தலை -  உடம்பு என்று சகல 
பகுதிகளிலும் அழுந்தத் தேய்த்த பிறகு வெந்நீர் குளியலையும் முடித்து டர்க்கி டவலால் தேகத்தைத் துடைத்துக் கொள்ளும்  வரை ஒரு பக்கம் சிந்தனையோட்டம் இன்னொரு பக்கம் எண்ணைக் குளியல் செயல்பாடு என்று ஒன்றில் ஒன்று குறுக்கிடாமல் ஒரே  நேரத்தில் எப்படி இப்படி இரட்டை வெவ்வேறு காரியங்களும் நடந்தன என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.  அந்த யோசனையின் ஊர்வலம் கூட வினிதாவின் பெயர் மூளையில் தைத்ததால் தான் அறுந்திருக்கிறது. அது வரை எந்தத் தடையுமில்லாமல் யோசிப்பு டேப் ரிகார்டரில் போட்ட சி.டி. மாதிரி ஓடியிருப்பது அவளுக்கு வியப்பாக இருந்தது.   அல்லது, மூளையும் ஒரு சி.டி. போலத்தானா?....  பழக்கப்பட்ட காரியங்கள் மூளையில் பதிந்திருப்பது அந்தந்த நேரத்தில் வேண்டும் பொழுது அது பாட்டுக்க தன்னிச்சையாக செயல்பாடாக வெளிப்படுமா.. காலேஜ் படியேறியிருக்கிறோம் என்று தான் பெயர். யாருகிட்டேயாவது கேட்டுக்கணும் என்ற நிலையில் இதெல்லாம் பற்றித் தனக்குத் தெரியாதது அவளுக்கு வருத்தமாகத் தான் இருந்தது.

அவள் கீழே இறங்கி வருவதற்கும் ஜலஜா மணியடித்தபடி சுவாமிக்கு கற்பூரம் காட்டுவதற்கும் சரியாக இருந்தது... ஓடி வந்து அப்பா பக்கத்தில் நின்று கொண்டு வித்யா கைகுவித்து இறைவனைத் தொழுதாள்..  கற்பூர ஜ்வாலைக்கு மேல் கை நீட்டி அந்த வெப்ப அருளை கண்களில் ஒற்றிக் கொண்டாள்.  நடக்கறதெல்லாம் நன்மையாகவே அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

மணி காலை 9-15. மோகன் இன்னும் வரவில்லை.  "ஒன்பது மணிக்கே மீட் பண்ணலாம் என்று சொல்லியிருந்தோமில்லையா?" என்று ஏதோ தனக்கிருந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கிற மாதிரி புரந்தரதாசர் வித்யாவைக் கேட்டார்.  வித்யாவோ ஜலஜாவைப் பார்த்து, "அப்படியாம்மா?" என்று கேட்டாள். ஜலஜாவோ அவளை விட கில்லாடி. "என்ன, அப்படியாம்மா?" என்று அவளையே கேட்டாள்.  வித்யாவோ தன் தந்தை பக்கம் திரும்பி, "அப்பா.. அம்மா கேக்கறா பாரு.  நீயே கேட்டுக்கோ.." என்று சொல்லி விட்டு சமையலறைப் பக்கம் போனாள். அங்கிருந்து அப்பாவும் அம்மாவும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.

"இவ ஏன் இப்படி இருக்கா?" என்று புரந்தரதாசர் ஜலஜாவைப் பார்த்துக் கேட்டார்.

"யார் எப்படி இருக்கா? யாரைச் சொல்கிறீர்கள்?"

"வேறே யார் இருக்கா இந்த வீட்லே?  வித்யாவைத் தான்.. அந்தப் பையன் வர்றேன்னு சொன்னான்லே.. ஏன் அவனைக் காணோம்ன்னு நெனைச்சு கூடப் பாக்க மாட்டா போலிருக்கே?"

"எந்தப் பையன்? இப்படி மொட்டைத் தாத்தா குட்டேலே விழுந்தார்ங்கற மாதிரி கேட்டா யாருக்குத் புரியும்?  எனக்கே நீங்க என்ன கேக்கிறீங்கன்னு புரிலே.. பாவம், சின்னஞ்சிறு சிறிசு..  அவளைக் கேட்டா, அவளுக்கு என்ன தெரியும்?" என்று சிரிக்காமல் சொன்னாள் ஜலஜா.

சமையலறையிலிருந்து இவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த வித்யா தனக்குள் 'க்ளுக்'கென்று சிரித்துக் கொண்டாள்.

"சரியாப் போச்சு.. நா ஒருத்தன் தான் கற்பனைக்கோட்டை கட்டிண்டிருக்கேன், போலிருக்கு.." என்று லேசாக சலித்துக் கொண்டார் புரந்தரதாசர்.  "உனக்கே ஞாபகம் இல்லையா?  நேத்திக்கு மோகன்னு ஒரு எழுத்தாள பையன் நம்ம வீட்டுக்கு வந்து போனான் இல்லியா? அவன் கூட தான் எழுதறக் கதையைப் பத்தி விரிவா பேசணும்ன்னு இன்னிக்கு வரேன்ன்னு சொல்லியிருந்தானே! ஒண்ணுமே ஞாபகம் இல்லியா ஒனக்கு?" என்று கொஞ்சம் எரிச்சலோடையே புரந்தரதாசரிடமிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன.
 
"ஓ.. அந்தப் பையனைப் பத்திச் சொல்றீங்களா?.. இதைக் கேக்கறதுக்கா இத்தனை நேரம் இப்படி இழுத்தடிச்சீங்க? அந்த மோகன் வரேன்னானே, வரக்காணுமே?"ன்னு நேரடியா கேட்டிருந்தா புரிஞ்சிருக்குமில்லே?" என்றாள், பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.

"நன்னா பதில் சொல்லிடப்போறையே! அந்த மோகன் வரேன்னானே, காணோமேன்னு நான் கேட்டிருந்தா, எந்த மோகன்னு  கேட்டிருப்பே, உன்னைப் பத்தித் தெரியாதா, எனக்கு?" என்றார் புரந்தரதாசர்.

"ஆமான்னா.. எனக்குக் கூட இப்பத்தான் அந்தப் பையன் சொன்னது ஞாபகத்துக்கு வர்றது.. மணி ஒம்பதரை ஆச்சே.. எங்கே  காணோம்?.. ஏதாவது ஃபோன் பண்ணியிருப்பானா? உங்க நம்பர் தானே அவங்கிட்டே இருக்கு?" என்றாள்.

"அப்படி ஃபோன் பண்ணியிருந்தா உங்கிட்டே ஏன் கேக்கறேன்?. சொல்லு.."

"ஏதாவது கூப்பிட்டிருக்கானான்னு பாருங்களேன்.."

புரந்தரதாசர் மொபைலை எடுத்துப் பார்த்து உதடைப் பிதுக்கினார். "ஒண்ணும் காணோம்.."

அதைக் கேட்க சமையலறையிலிருந்த வித்யாவிற்கும் ஏமாற்றமாக இருந்தது.

"கூப்பிடலேல்லே.. விட்டுத் தள்ளுங்க.. அவனுக்கே அக்கறை இல்லாத போது நாம ஏன் அலட்டிக்கணும்?" என்ற தாயின் குரலைக் கேட்டு 'அம்மா சொல்வதும் நியாயமாகத் தானே இருக்கு?' என்ற எண்ணம் வந்தாலும் 'ஏன் மோகன் வரவில்லை?' என்று யோசிப்பு ஓடியதை வித்யாவால் தவிர்க்க முடியவில்லை.

அதே சமயத்தில் வாசல் காலிங் பெல்லின் கிணுகிணுப்பு ஒலி கேட்டு வித்யாவின் உச்சி குளிர்ந்தது.

"யார் இந்த நேரத்தில் காலிங் பெல்லை இந்த அழுத்து அழுத்தறாங்க?" என்று சமையலறையிலிருந்து வெளி வந்தவள் ஆசையுடன் வாசல் பக்கம் போனாள்.

ஜலஜா, புரந்தரதாசர் இருவர் முகமும் ஒரே சமயத்தில் சொல்லி வைத்தாற் போல மலர்ந்தன.

(தொடரும்)

Related Posts with Thumbnails