மின் நூல்

Saturday, October 5, 2024

இது ஒரு தொடர்கதை -- 22

வித்யா தன் ரூமிற்கு வந்து உடை மாற்றும் பொழுது அறுந்த சிந்தனை மீண்டும் தனக்குத் தானே பின்னிக் கொண்டது.

அவளுக்கு  ஆச்சரியமாக இருந்தது.  கிண்ணத்லிருந்து கொஞ்சம்  நல்லெண்ணையை கைகுவித்து ஊற்றிக்கொண்டு தேகத்தில் தேய்க்க ஆரம்பித்த பொழுது ஆரம்பித்த நினைவுகளின் ஊர்வலம்! எண்ணை தேய்த்து முடித்து ஏற்கனவே சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வைத்திருந்த சீயக்காய் தூளில் நீர் விட்டுக் கரைத்து அதையும் தலை -  உடம்பு என்று சகல 
பகுதிகளிலும் அழுந்தத் தேய்த்த பிறகு வெந்நீர் குளியலையும் முடித்து டர்க்கி டவலால் தேகத்தைத் துடைத்துக் கொள்ளும்  வரை ஒரு பக்கம் சிந்தனையோட்டம் இன்னொரு பக்கம் எண்ணைக் குளியல் செயல்பாடு என்று ஒன்றில் ஒன்று குறுக்கிடாமல் ஒரே  நேரத்தில் எப்படி இப்படி இரட்டை வெவ்வேறு காரியங்களும் நடந்தன என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.  அந்த யோசனையின் ஊர்வலம் கூட வினிதாவின் பெயர் மூளையில் தைத்ததால் தான் அறுந்திருக்கிறது. அது வரை எந்தத் தடையுமில்லாமல் யோசிப்பு டேப் ரிகார்டரில் போட்ட சி.டி. மாதிரி ஓடியிருப்பது அவளுக்கு வியப்பாக இருந்தது.   அல்லது, மூளையும் ஒரு சி.டி. போலத்தானா?....  பழக்கப்பட்ட காரியங்கள் மூளையில் பதிந்திருப்பது அந்தந்த நேரத்தில் வேண்டும் பொழுது அது பாட்டுக்க தன்னிச்சையாக செயல்பாடாக வெளிப்படுமா.. காலேஜ் படியேறியிருக்கிறோம் என்று தான் பெயர். யாருகிட்டேயாவது கேட்டுக்கணும் என்ற நிலையில் இதெல்லாம் பற்றித் தனக்குத் தெரியாதது அவளுக்கு வருத்தமாகத் தான் இருந்தது.

அவள் கீழே இறங்கி வருவதற்கும் ஜலஜா மணியடித்தபடி சுவாமிக்கு கற்பூரம் காட்டுவதற்கும் சரியாக இருந்தது... ஓடி வந்து அப்பா பக்கத்தில் நின்று கொண்டு வித்யா கைகுவித்து இறைவனைத் தொழுதாள்..  கற்பூர ஜ்வாலைக்கு மேல் கை நீட்டி அந்த வெப்ப அருளை கண்களில் ஒற்றிக் கொண்டாள்.  நடக்கறதெல்லாம் நன்மையாகவே அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

மணி காலை 9-15. மோகன் இன்னும் வரவில்லை.  "ஒன்பது மணிக்கே மீட் பண்ணலாம் என்று சொல்லியிருந்தோமில்லையா?" என்று ஏதோ தனக்கிருந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கிற மாதிரி புரந்தரதாசர் வித்யாவைக் கேட்டார்.  வித்யாவோ ஜலஜாவைப் பார்த்து, "அப்படியாம்மா?" என்று கேட்டாள். ஜலஜாவோ அவளை விட கில்லாடி. "என்ன, அப்படியாம்மா?" என்று அவளையே கேட்டாள்.  வித்யாவோ தன் தந்தை பக்கம் திரும்பி, "அப்பா.. அம்மா கேக்கறா பாரு.  நீயே கேட்டுக்கோ.." என்று சொல்லி விட்டு சமையலறைப் பக்கம் போனாள். அங்கிருந்து அப்பாவும் அம்மாவும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.

"இவ ஏன் இப்படி இருக்கா?" என்று புரந்தரதாசர் ஜலஜாவைப் பார்த்துக் கேட்டார்.

"யார் எப்படி இருக்கா? யாரைச் சொல்கிறீர்கள்?"

"வேறே யார் இருக்கா இந்த வீட்லே?  வித்யாவைத் தான்.. அந்தப் பையன் வர்றேன்னு சொன்னான்லே.. ஏன் அவனைக் காணோம்ன்னு நெனைச்சு கூடப் பாக்க மாட்டா போலிருக்கே?"

"எந்தப் பையன்? இப்படி மொட்டைத் தாத்தா குட்டேலே விழுந்தார்ங்கற மாதிரி கேட்டா யாருக்குத் புரியும்?  எனக்கே நீங்க என்ன கேக்கிறீங்கன்னு புரிலே.. பாவம், சின்னஞ்சிறு சிறிசு..  அவளைக் கேட்டா, அவளுக்கு என்ன தெரியும்?" என்று சிரிக்காமல் சொன்னாள் ஜலஜா.

சமையலறையிலிருந்து இவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த வித்யா தனக்குள் 'க்ளுக்'கென்று சிரித்துக் கொண்டாள்.

"சரியாப் போச்சு.. நா ஒருத்தன் தான் கற்பனைக்கோட்டை கட்டிண்டிருக்கேன், போலிருக்கு.." என்று லேசாக சலித்துக் கொண்டார் புரந்தரதாசர்.  "உனக்கே ஞாபகம் இல்லையா?  நேத்திக்கு மோகன்னு ஒரு எழுத்தாள பையன் நம்ம வீட்டுக்கு வந்து போனான் இல்லியா? அவன் கூட தான் எழுதறக் கதையைப் பத்தி விரிவா பேசணும்ன்னு இன்னிக்கு வரேன்ன்னு சொல்லியிருந்தானே! ஒண்ணுமே ஞாபகம் இல்லியா ஒனக்கு?" என்று கொஞ்சம் எரிச்சலோடையே புரந்தரதாசரிடமிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன.
 
"ஓ.. அந்தப் பையனைப் பத்திச் சொல்றீங்களா?.. இதைக் கேக்கறதுக்கா இத்தனை நேரம் இப்படி இழுத்தடிச்சீங்க? அந்த மோகன் வரேன்னானே, வரக்காணுமே?"ன்னு நேரடியா கேட்டிருந்தா புரிஞ்சிருக்குமில்லே?" என்றாள், பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.

"நன்னா பதில் சொல்லிடப்போறையே! அந்த மோகன் வரேன்னானே, காணோமேன்னு நான் கேட்டிருந்தா, எந்த மோகன்னு  கேட்டிருப்பே, உன்னைப் பத்தித் தெரியாதா, எனக்கு?" என்றார் புரந்தரதாசர்.

"ஆமான்னா.. எனக்குக் கூட இப்பத்தான் அந்தப் பையன் சொன்னது ஞாபகத்துக்கு வர்றது.. மணி ஒம்பதரை ஆச்சே.. எங்கே  காணோம்?.. ஏதாவது ஃபோன் பண்ணியிருப்பானா? உங்க நம்பர் தானே அவங்கிட்டே இருக்கு?" என்றாள்.

"அப்படி ஃபோன் பண்ணியிருந்தா உங்கிட்டே ஏன் கேக்கறேன்?. சொல்லு.."

"ஏதாவது கூப்பிட்டிருக்கானான்னு பாருங்களேன்.."

புரந்தரதாசர் மொபைலை எடுத்துப் பார்த்து உதடைப் பிதுக்கினார். "ஒண்ணும் காணோம்.."

அதைக் கேட்க சமையலறையிலிருந்த வித்யாவிற்கும் ஏமாற்றமாக இருந்தது.

"கூப்பிடலேல்லே.. விட்டுத் தள்ளுங்க.. அவனுக்கே அக்கறை இல்லாத போது நாம ஏன் அலட்டிக்கணும்?" என்ற தாயின் குரலைக் கேட்டு 'அம்மா சொல்வதும் நியாயமாகத் தானே இருக்கு?' என்ற எண்ணம் வந்தாலும் 'ஏன் மோகன் வரவில்லை?' என்று யோசிப்பு ஓடியதை வித்யாவால் தவிர்க்க முடியவில்லை.

அதே சமயத்தில் வாசல் காலிங் பெல்லின் கிணுகிணுப்பு ஒலி கேட்டு வித்யாவின் உச்சி குளிர்ந்தது.

"யார் இந்த நேரத்தில் காலிங் பெல்லை இந்த அழுத்து அழுத்தறாங்க?" என்று சமையலறையிலிருந்து வெளி வந்தவள் ஆசையுடன் வாசல் பக்கம் போனாள்.

ஜலஜா, புரந்தரதாசர் இருவர் முகமும் ஒரே சமயத்தில் சொல்லி வைத்தாற் போல மலர்ந்தன.

(தொடரும்)

9 comments:

ஸ்ரீராம். said...

பட்டுக்கொள்ளாமல் பேசினாலும் ஜலஜாவின் முகமும் மலர்கிறது!  ஜலஜாவிற்கு என்ன எதிர்பார்ப்போ...   தம்பியைப் பார்க்கிறாற்போல் இருக்கிறது என்று சொல்வாளோ...!

ஜீவி said...

கணவன் -- மனைவி கான்வர்ஷேசன் அழகை ரசித்துப் படிக்கவில்லை போலிருக்கு, நீங்கள்!

ஸ்ரீராம். said...

விளக்கம் சொல்ல வேண்டாம் என்று மனம் நினைத்தாலும்,

எழுத்தாளர்கள் எழுதும் நோக்கிலேயே வாசகர்கள் பயணிக்க முடியாது என்பது நீங்கள் அறியாதது அல்ல.  

மேலும் சில எழுத்தாளர்கள் பின்னர் வரப்போகும் சில விஷயங்களுக்கு மிக மெல்லிதாய் முன்னரே கோடி காட்டிச் செல்வார்கள்.

 மெல்லிய திசை திருப்பல்களில் அதுவா இதுவா என்று வாசகர் எண்ணங்கள் திசைமாற்றி அலைபாயும் நேரம் எழுத்தாளர் எழுத நினைத்ததை கொண்டு வருவார். 
 
எழுத்தாளர் சாமர்த்தியம்.

Anonymous said...

வித்யா, ஜலஜா, புரந்தரதாஸர் மூவருமே மனதுள் ஒரே அலைவரிசையில் நினைத்தாலும் பூடகமாக வெவ்வேறு வகையில் தங்கள் விருப்பத்தை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். வித்யா ஒன்றுமே இல்லாதது போல...புரந்தரதாசருக்கு அமைந்தால் நல்லது என்ற எண்ணம், ஜலஜாவுக்கும் மோகனைப் பிடித்திருக்கிறது என்பதும் அவள் வாசல் காலிங்க் பெல் அடித்ததும் முகம் மலர்ச்சியில் வெளிப்படுகிறது.

அப்படி மூவருமே மோகனின் வருகையை எதிர்பார்த்து இருக்கிறார்கள். மூவருமே பூடகமாகப் பேசிக் கொள்வது யதார்த்தம்,

கீதா

ஜீவி said...

வாசகர்கள் எழுத்தாளர் எழுதும் நோக்கிலேயே பயணிக்க முடியாதில்லையா? -- என்பது சுவாரஸ்யமான கேள்வி. சமயம் கிடைக்கும் ஒரு வியாழக்கிழமையில் இதை சோதித்து பார்த்து விடலாம் என்று தோன்றுகிறது, ஸ்ரீராம்.
அட! புதனுக்குக் கூட இந்தக் கேள்வி பொருந்தி வருகிறதே!

ஜீவி said...

கதாபாத்திரங்களின் மனநிலைகளில் ஒளிந்து கொண்டு எழுதுபவன் பொம்மலாட்டம் போடுவது சென்ற தலைமுறை எழுத்தாளர்களின் சாகசம் என்று தோன்றுகிறது தி. கீதா!
இப்பொழுதெல்லாம் எழுத்தாளன் வாய்மொழியில் கதைகள் சொல்லப்படுவதால் கதாபாத்திரங்களின் உணர்வுகளை எழுத்தில் கொண்டு வர முடியாமல் போவது இந்தக்கால எழுத்துகளின் இழப்புகள் இல்லையா, சகோ?.. வாசகர்களும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மேலோட்டமாக வாசிப்பதற்கு பழக்கப்பட்டுப் போய்விட்டது ஒட்டுமொத்த தமிழ் எழுத்துலகின் சோகம் தான்.

கோமதி அரசு said...

//கூப்பிடலேல்லே.. விட்டுத் தள்ளுங்க.. அவனுக்கே அக்கறை இல்லாத போது நாம ஏன் அலட்டிக்கணும்?" என்ற தாயின் குரலைக் கேட்டு 'அம்மா சொல்வதும் நியாயமாகத் தானே இருக்கு?' என்ற எண்ணம் வந்தாலும் 'ஏன் மோகன் வரவில்லை?' என்று யோசிப்பு ஓடியதை வித்யாவால் தவிர்க்க முடியவில்லை.//

கணவன் , மனைவி உரையாடல் விதயாவின் எதிர்ப்பார்ப்பு எல்லாம் அருமை.
மோகனின் வரவு என்ன திருப்பங்களை கொடுக்கபோகிறது பார்க்கலாம்.

ஜீவி said...

உங்கள் வருகௌ உற்சாகமூட்டுகிறது. தங்களின் அருமைக்கு நன்றி. மோகனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் இது ஒரு வெற்று காதல் கதையாகப் போய் விடுமோ என்ற அச்சமும் இருக்கிறது. அதனால் மோகனை கதையில் பங்கு பெறும் ஒரு பாத்திரம் மட்டுமே ஆக்கி கதையின் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா என்ற யோனையிலும் இருக்கிறேன் சகோ. பார்க்கலாம்.

ஜீவி said...

வருகெள -- வருகை. யோனையிலும் -- யோசனையிலும் -- என்று திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

Related Posts with Thumbnails