38
அடுத்த நாள் மாலை எங்கள் தொழிற்சங்க கிளைக்கூட்டம் இருப்பதாகவும் மாநிலச் செயலர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றப் போவதாகவும் தோழர் சிரில் என்னிடம் சொல்லியிருந்ததால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வாகாக எனது அலுவலகப் பணி நேரத்தை காலை 0610-1330 என்று மாற்றிக் கொண்டிருந்தேன்.
மதியம் பணி நேரம் முடிந்ததும் நேரே ஆர்யபவன் ஓட்டலுக்குப் போய் மதிய சாப்பாடு ஆயிற்று. அப்படியே நேரே பாரதி தெரு வீட்டிற்குச் சென்றேன். கை கால் கழுவிக் கொண்டு ஃபேனை சுழல விட்டு படுத்தது தான் தெரியும். நல்ல தூக்கம். மாலை 4 மணி சுமாருக்கு ஏதோ சப்தம் கேட்டு விழித்துக் கொண்டு விட்டேன். பாலகிருஷ்ணன் என்ற அறைத் தோழர் அவரது 0800-1530 பணி முடிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார். (இடமிருந்து: முதலாவது பாலகிருஷ்ணன், நாலாவது நான்)
நான் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், "மணி நாலாச்சு, ஜீவி.. ஆறு மணிக்கெல்லாம் கூட்டம் ஆரம்பமாயிடும்.. கடலூர் கூட்டத்தை முடிச்சிண்டு ஜெகன் ஐந்தரைக்கெல்லாம் வந்துடுவார்ன்னு சொன்னாங்க.. கிளம்பு.. கிளம்பு.." என்று என்னிடம் சொல்லிக் கொண்டே பாத் ரூம் பக்கம் போனார்.
தோழர் ஜெகன் எங்கள் அகில இந்திய தொழிற்சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலர். இதுவரை அவரை நேரில் பார்த்ததில்லை. எங்கள் தொழிற்சங்க பத்திரிகை ஒலிக்கதிரில் அவர் கட்டுரைகளை வாசித்ததோடு சரி. ஒரு உத்வேகத்தோடு எழுந்திருந்தேன்.
நானும் பாலகிருஷ்ணனும் தொலைபேசி நிலையம் போய்ச் சேர்ந்தோம். ஓய்வறையில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் போய்ச் சேர்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஜெகன் வந்து சேர்ந்து விட்டார். பைஜாமா, ஜிப்பா, கேரள தடிமன் மீசை என்று உற்சாகமான இளைஞராக இருந்தார். லைன்மேன் தோழர்கள் அவரைச் சுற்றிக் கொண்டனர், பெரும்பாலாரோடு அவருக்கு நல்ல அறிமுகமும் தோழமையும் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தனிப்பட்ட அவர்களுக்கான இலாகா குறைகளைச் சொன்னார்கள். இந்த கூட்டத்தை முடித்ததும் அதற்காக அரைமணி நேரம் தனியாக ஒதுக்கிப் பேசலாம் என்று அவர் சொல்ல சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டனர். நான் உன்னிப்பாக ஒவ்வொரு விஷயத்தையும் அவர் டீல் பண்ணும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக கூட்டம் ஆரம்பித்த ஐந்தே நிமிடங்களில் ஜெகன் மைக்கைப் பிடித்து விட்டார். ஒரு மணி நேரத்திற்கு சுற்றுச் சூழலை மறந்து மெஸ்மரிசத்திற்கு ஆட்பட்டதே போல மெய்மறந்து போனேன். என்ன பேச்சு!.. அவர் பேசுகையில் விவேகானந்தர் வந்தார், ஐன்ஸ்டீன் வந்தார், ஜான் கீட்ஸ், மு.வ., பாரதி, லிங்கன் என்று ஒரு தொழிற்சங்க கூட்டத்தில் இவர்களை எல்லாம் இணைத்து ஒருவரால் பேச முடியும் என்று நினைத்துக் கூட நான் பார்த்திராத அருமையான சொற்பொழிவாக அது இருந்தது. கூட்டம் முடிந்ததும் கேள்வி--பதிலுக்காக கால் மணி நேரம், லைன்மேன் தோழர்களோடு ஒப்புக்கொண்ட அரை மணி நேர தனிப்பட்ட உரையாடல் எல்லாம் முடிய 8.30 ஆகி விட்டது. ஒன்பது மணிக்கு சென்னைக்கு கடைசி பஸ். தோழர் ஒருவர் தன் பைக்கை எடுத்து வர எங்களிடம் விடைபெற்று பின் சீட்டில் உட்கார்ந்து எங்களைப் பார்த்து கை அசைத்து.... ஓ! என்ன மனிதர் இவர் என்று வியப்பில் திகைத்தேன். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வீடு போய்ச் சேர்ந்து.. குடும்பம், குழந்தை குட்டிகள் என்று எல்லாமும் இவருக்கும் உண்டு தானே என்று மனம் வலை பின்னியது.
தோழர் ஜெகன் என் மனசில் பதிந்தது இப்படித் தான். இந்த ஆரம்பம் நீண்ட ஒரு சரித்திரத்தை தன்னுள் கொண்டது. எந்த நிலையிலும் நிலை பிறழாது எனக்கு வழிகாட்டிய ஆசான் அவர். எதைப் பேசினாலும் தொழிற்சங்க ஊழியனாகவே தன் குரலைப் பதிவு செய்வதில் இம்மியளவும் அவர் விலகிப் போனதில்லை.
கடலூர் முத்தையா தியேட்டர். சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோகியா கூட்டம் உள்ளே நடக்கிறது. அது கடலூரில் ஜெகன்
தொலைபேசி இலாகாவில் தன் ஆரம்பப் பணியை ஏற்றுக் கொண்ட காலம். எதேச்சையாக அவர் லோகியா அவர்களின் பேச்சைக் கேட்க செல்கிறார். கூட்டத்தின் தலைவர் வழக்கறிஞர் மனோகரன். டாக்டர் லோகியாவின் ஆங்கிலப் பேச்சை தமிழாக்கம் செய்ய வருவதாக இருந்த திருக்கோயிலூர் சுந்தரம் வரவில்லை. எனவே கூட்டத் தலைவர் மனோகரனே லோகியாவின் பேச்சை மொழிபெயர்த்தார். அது சரியாக அமையவில்லை. கூட்டத்தின் முன் வரிசையில் அஞ்சல் தந்தி நிலையத்திற்கு அடிக்கடி வருகிற ஜெகனுக்குப் பழக்கமான நியூஸ் ரிப்போர்ட்டர்கள் மொழிபெயர்ப்புப் பணிக்கு அவரை அனுப்பி விட்டனர்.
ஒரு அனைத்திந்திய தலைவரின் பேச்சை மொழிபெயர்க்கிறோம் என்ற உணர்வோடு தனக்கே உரிய பாணியில் ஜெகன் மொழிபெயர்ப்பு பணியை ஒரு அவசரத் தேவைக்காக செய்கிறார். கூட்டத்தில் கரவொலி. அட்டகாசமான வரவேற்பு. அகமகிழ்ந்த லோகியா தனது நெல்லிக்குப்பம், சிதம்பரம் கூட்டங்களுக்கு மொழிபெயர்க்க ஜெகனை தன்னோடையே அழைத்துச் சென்று விடுகிறார். அரசியல் தலைவரின் பேச்சை மொழி பெயர்த்ததாலேயே ஜெகன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று நிர்வாகம் குற்றம் சாட்டியது. இனி அவரது பணியில் வரப்போகிற ஆண்டுகளுக்காக பெறவிருக்கும் ஆறு இன்கிரிமெண்ட்டை வெட்டி தொடக்க கால சம்பளத்திற்கு குறைத்தது. அரசியல் தலைவர் ஒருவரின் பேச்சை மொழிபெயர்த்தற்கு அந்நாட்களில் அகில இந்திய அளவில் கேள்விப்பட்டே இருக்காத ஆகப்பெரிய தண்டனை... இது தான் ஜெகன் இலாகாவில் நுழைந்த தருணத்தில் பெற்ற முதல் விழுப்புண்!..
அன்றைய நாட்களில் வெளியூரிலிருந்து கடிதம் பெறுவது என்பதே தபால் அலுவலகத்தின் மூலம் தான் நடந்து எல்லோர் வாழ்விலும் தபாலாபீஸ் நிலையான இடத்தைப் பெற்றிருந்தது. பலர் வீடுகளில் காலை பதினோரு மணி ஆயிற்று என்றால் போதும், "என்ன தபால்காரன் இன்னும் வரலையா?" என்ற கேள்வி எழும். சொந்த பந்தங்களிலிருந்து, வெளியிடங்களிலிருந்து கடிதங்களைப் பெறுவதில் அவ்வளவு எதிர்பார்ப்பு அந்தக் காலத்தில் இருந்தது. உறவுகள் பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவையாவது தம் உறவினர்களுக்கு ஒரு கார்டாவது போட்டு விடுவார்கள். அந்த தபால் அட்டை வழக்கமாக, 'இங்கு நாங்கள் நலம்; அங்கு நீங்கள் எல்லோரும் நலமா?' என்றே ஆரம்பிக்கும். காதல் கோட்டை, 'நலம். நலமறிய ஆவல்' பாடலின் ஆதர்சம் அந்நாளைய தபால் கார்டு தான் என்று எனக்குத் தோன்றும்.
தபால் கடிதங்களைப் பொறுத்த மட்டில் என் அலுவலக முகவரி தான் என் முகவரியாக அந்நாட்களில் இருந்தது. அதனால் பணி நேரம் இருக்கிறதோ இல்லையோ தினமும் காலை வேளையில் பத்து மணியளவில் தொலைபேசி நிலையம் சென்று விடுவது வழக்கம். அதற்குள் காலைத் தபால்கள் அலுவலக போஸ்ட் பாக்ஸில் காத்திருக்கும். தபாலை எதிர்பார்க்கும் ஆவலே கிளர்ச்சியூட்டக் கூடிய ஒரு அனுபவம். நாம் செயலாற்றியதின் வினையாக பதில் நிகழ்வை எதிர்பார்க்கும் ஆவல் அது. பெரும்பாலும் பத்திரிகைகள் அலுவலகங்களிலிருந்து வரும் தபால்கள் தான் எனக்கென்று இருக்கும்.
அன்றைய தபாலில் 'குறிஞ்சி மலர்' நா. பார்த்தசாரதியிடமிருந்து வந்திருந்த கடிதம் முக்கியமான தகவல் கொண்டதாய் இருந்தது.
(வளரும்)
அடுத்த நாள் மாலை எங்கள் தொழிற்சங்க கிளைக்கூட்டம் இருப்பதாகவும் மாநிலச் செயலர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றப் போவதாகவும் தோழர் சிரில் என்னிடம் சொல்லியிருந்ததால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வாகாக எனது அலுவலகப் பணி நேரத்தை காலை 0610-1330 என்று மாற்றிக் கொண்டிருந்தேன்.
மதியம் பணி நேரம் முடிந்ததும் நேரே ஆர்யபவன் ஓட்டலுக்குப் போய் மதிய சாப்பாடு ஆயிற்று. அப்படியே நேரே பாரதி தெரு வீட்டிற்குச் சென்றேன். கை கால் கழுவிக் கொண்டு ஃபேனை சுழல விட்டு படுத்தது தான் தெரியும். நல்ல தூக்கம். மாலை 4 மணி சுமாருக்கு ஏதோ சப்தம் கேட்டு விழித்துக் கொண்டு விட்டேன். பாலகிருஷ்ணன் என்ற அறைத் தோழர் அவரது 0800-1530 பணி முடிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார். (இடமிருந்து: முதலாவது பாலகிருஷ்ணன், நாலாவது நான்)நான் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், "மணி நாலாச்சு, ஜீவி.. ஆறு மணிக்கெல்லாம் கூட்டம் ஆரம்பமாயிடும்.. கடலூர் கூட்டத்தை முடிச்சிண்டு ஜெகன் ஐந்தரைக்கெல்லாம் வந்துடுவார்ன்னு சொன்னாங்க.. கிளம்பு.. கிளம்பு.." என்று என்னிடம் சொல்லிக் கொண்டே பாத் ரூம் பக்கம் போனார்.
தோழர் ஜெகன் எங்கள் அகில இந்திய தொழிற்சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலர். இதுவரை அவரை நேரில் பார்த்ததில்லை. எங்கள் தொழிற்சங்க பத்திரிகை ஒலிக்கதிரில் அவர் கட்டுரைகளை வாசித்ததோடு சரி. ஒரு உத்வேகத்தோடு எழுந்திருந்தேன்.
நானும் பாலகிருஷ்ணனும் தொலைபேசி நிலையம் போய்ச் சேர்ந்தோம். ஓய்வறையில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் போய்ச் சேர்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஜெகன் வந்து சேர்ந்து விட்டார். பைஜாமா, ஜிப்பா, கேரள தடிமன் மீசை என்று உற்சாகமான இளைஞராக இருந்தார். லைன்மேன் தோழர்கள் அவரைச் சுற்றிக் கொண்டனர், பெரும்பாலாரோடு அவருக்கு நல்ல அறிமுகமும் தோழமையும் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தனிப்பட்ட அவர்களுக்கான இலாகா குறைகளைச் சொன்னார்கள். இந்த கூட்டத்தை முடித்ததும் அதற்காக அரைமணி நேரம் தனியாக ஒதுக்கிப் பேசலாம் என்று அவர் சொல்ல சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டனர். நான் உன்னிப்பாக ஒவ்வொரு விஷயத்தையும் அவர் டீல் பண்ணும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக கூட்டம் ஆரம்பித்த ஐந்தே நிமிடங்களில் ஜெகன் மைக்கைப் பிடித்து விட்டார். ஒரு மணி நேரத்திற்கு சுற்றுச் சூழலை மறந்து மெஸ்மரிசத்திற்கு ஆட்பட்டதே போல மெய்மறந்து போனேன். என்ன பேச்சு!.. அவர் பேசுகையில் விவேகானந்தர் வந்தார், ஐன்ஸ்டீன் வந்தார், ஜான் கீட்ஸ், மு.வ., பாரதி, லிங்கன் என்று ஒரு தொழிற்சங்க கூட்டத்தில் இவர்களை எல்லாம் இணைத்து ஒருவரால் பேச முடியும் என்று நினைத்துக் கூட நான் பார்த்திராத அருமையான சொற்பொழிவாக அது இருந்தது. கூட்டம் முடிந்ததும் கேள்வி--பதிலுக்காக கால் மணி நேரம், லைன்மேன் தோழர்களோடு ஒப்புக்கொண்ட அரை மணி நேர தனிப்பட்ட உரையாடல் எல்லாம் முடிய 8.30 ஆகி விட்டது. ஒன்பது மணிக்கு சென்னைக்கு கடைசி பஸ். தோழர் ஒருவர் தன் பைக்கை எடுத்து வர எங்களிடம் விடைபெற்று பின் சீட்டில் உட்கார்ந்து எங்களைப் பார்த்து கை அசைத்து.... ஓ! என்ன மனிதர் இவர் என்று வியப்பில் திகைத்தேன். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வீடு போய்ச் சேர்ந்து.. குடும்பம், குழந்தை குட்டிகள் என்று எல்லாமும் இவருக்கும் உண்டு தானே என்று மனம் வலை பின்னியது.
தோழர் ஜெகன் என் மனசில் பதிந்தது இப்படித் தான். இந்த ஆரம்பம் நீண்ட ஒரு சரித்திரத்தை தன்னுள் கொண்டது. எந்த நிலையிலும் நிலை பிறழாது எனக்கு வழிகாட்டிய ஆசான் அவர். எதைப் பேசினாலும் தொழிற்சங்க ஊழியனாகவே தன் குரலைப் பதிவு செய்வதில் இம்மியளவும் அவர் விலகிப் போனதில்லை.கடலூர் முத்தையா தியேட்டர். சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோகியா கூட்டம் உள்ளே நடக்கிறது. அது கடலூரில் ஜெகன்
தொலைபேசி இலாகாவில் தன் ஆரம்பப் பணியை ஏற்றுக் கொண்ட காலம். எதேச்சையாக அவர் லோகியா அவர்களின் பேச்சைக் கேட்க செல்கிறார். கூட்டத்தின் தலைவர் வழக்கறிஞர் மனோகரன். டாக்டர் லோகியாவின் ஆங்கிலப் பேச்சை தமிழாக்கம் செய்ய வருவதாக இருந்த திருக்கோயிலூர் சுந்தரம் வரவில்லை. எனவே கூட்டத் தலைவர் மனோகரனே லோகியாவின் பேச்சை மொழிபெயர்த்தார். அது சரியாக அமையவில்லை. கூட்டத்தின் முன் வரிசையில் அஞ்சல் தந்தி நிலையத்திற்கு அடிக்கடி வருகிற ஜெகனுக்குப் பழக்கமான நியூஸ் ரிப்போர்ட்டர்கள் மொழிபெயர்ப்புப் பணிக்கு அவரை அனுப்பி விட்டனர்.
ஒரு அனைத்திந்திய தலைவரின் பேச்சை மொழிபெயர்க்கிறோம் என்ற உணர்வோடு தனக்கே உரிய பாணியில் ஜெகன் மொழிபெயர்ப்பு பணியை ஒரு அவசரத் தேவைக்காக செய்கிறார். கூட்டத்தில் கரவொலி. அட்டகாசமான வரவேற்பு. அகமகிழ்ந்த லோகியா தனது நெல்லிக்குப்பம், சிதம்பரம் கூட்டங்களுக்கு மொழிபெயர்க்க ஜெகனை தன்னோடையே அழைத்துச் சென்று விடுகிறார். அரசியல் தலைவரின் பேச்சை மொழி பெயர்த்ததாலேயே ஜெகன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று நிர்வாகம் குற்றம் சாட்டியது. இனி அவரது பணியில் வரப்போகிற ஆண்டுகளுக்காக பெறவிருக்கும் ஆறு இன்கிரிமெண்ட்டை வெட்டி தொடக்க கால சம்பளத்திற்கு குறைத்தது. அரசியல் தலைவர் ஒருவரின் பேச்சை மொழிபெயர்த்தற்கு அந்நாட்களில் அகில இந்திய அளவில் கேள்விப்பட்டே இருக்காத ஆகப்பெரிய தண்டனை... இது தான் ஜெகன் இலாகாவில் நுழைந்த தருணத்தில் பெற்ற முதல் விழுப்புண்!..
அன்றைய நாட்களில் வெளியூரிலிருந்து கடிதம் பெறுவது என்பதே தபால் அலுவலகத்தின் மூலம் தான் நடந்து எல்லோர் வாழ்விலும் தபாலாபீஸ் நிலையான இடத்தைப் பெற்றிருந்தது. பலர் வீடுகளில் காலை பதினோரு மணி ஆயிற்று என்றால் போதும், "என்ன தபால்காரன் இன்னும் வரலையா?" என்ற கேள்வி எழும். சொந்த பந்தங்களிலிருந்து, வெளியிடங்களிலிருந்து கடிதங்களைப் பெறுவதில் அவ்வளவு எதிர்பார்ப்பு அந்தக் காலத்தில் இருந்தது. உறவுகள் பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவையாவது தம் உறவினர்களுக்கு ஒரு கார்டாவது போட்டு விடுவார்கள். அந்த தபால் அட்டை வழக்கமாக, 'இங்கு நாங்கள் நலம்; அங்கு நீங்கள் எல்லோரும் நலமா?' என்றே ஆரம்பிக்கும். காதல் கோட்டை, 'நலம். நலமறிய ஆவல்' பாடலின் ஆதர்சம் அந்நாளைய தபால் கார்டு தான் என்று எனக்குத் தோன்றும்.
தபால் கடிதங்களைப் பொறுத்த மட்டில் என் அலுவலக முகவரி தான் என் முகவரியாக அந்நாட்களில் இருந்தது. அதனால் பணி நேரம் இருக்கிறதோ இல்லையோ தினமும் காலை வேளையில் பத்து மணியளவில் தொலைபேசி நிலையம் சென்று விடுவது வழக்கம். அதற்குள் காலைத் தபால்கள் அலுவலக போஸ்ட் பாக்ஸில் காத்திருக்கும். தபாலை எதிர்பார்க்கும் ஆவலே கிளர்ச்சியூட்டக் கூடிய ஒரு அனுபவம். நாம் செயலாற்றியதின் வினையாக பதில் நிகழ்வை எதிர்பார்க்கும் ஆவல் அது. பெரும்பாலும் பத்திரிகைகள் அலுவலகங்களிலிருந்து வரும் தபால்கள் தான் எனக்கென்று இருக்கும்.அன்றைய தபாலில் 'குறிஞ்சி மலர்' நா. பார்த்தசாரதியிடமிருந்து வந்திருந்த கடிதம் முக்கியமான தகவல் கொண்டதாய் இருந்தது.
(வளரும்)