மின் நூல்

Thursday, May 22, 2008

சந்திப்போம்; பிரிவோம்; மீண்டும் சந்திப்போம்!---பகுதி 3

(ச.பி.மீ.ச.--2ம் பகுதியின் தொடர்ச்சி)

கோயில் உண்டியலில் போடுவதற்காக சட்டைப்பையில் தனியே எடுத்து வைத்திருந்த பணம் நூறு ரூபாயைக் காணோம்.

என் திகைப்பைப் பார்த்து, "என்னப்பா?" என்றார் பெரியவர்.

"ஐயா, கோயில் உண்டியலில் போடுவதற்காக சட்டைப்பையில் பணம் வைத்திருந்தேன். அதைக் காணோம்" என்று பரிதாபமாகச் சொன்னேன்.

"எவ்வளவு?"

"நூறு ரூபா."

` "இந்த நோட்டா பாரு__" பெரியவர் ஒரு நூறு ரூபாய்த் தாளை என்னிடம் நீட்டினார்.

"ஐயா, இது நூறு ரூபா நோட்டுதான். ஆனால் தொலைந்த என் ரூபாய்தான் என்று எப்படியய்யா, சொல்வது?"

"இந்தா. உன் பணம்" என்று பெரியவர் என்னிடம் ரூபாய் நோட்டை நீட்டினார்.

நான் தயங்கினேன்.

"உன்னது தான். அந்தத் தூணுக்கருகில் நாம் உட்கார்ந்து அங்கு பேசிக்கொண்டிருந்தோம், இல்லையா? அப்பொழுது சட்டைப் பையிலிருந்து வீபூதிப்பொட்டலத்தை எடுத்தாய், அல்லவா?...அப்போ நோட்டும் உன் கையோடு வந்துத் தவறித் தரையில் விழுந்தது. நான் தான் எடுத்து வைத்திருந்தேன். இந்தா__"

என்னால் நம்ப முடியவில்லை. 'அங்குத் தவறித் தரையில் விழுந்திருந்தால், அங்கேயே எடுத்துக் கொடுத்திருப்பாரே?.. உண்டியலில் போட எடுத்து வந்தக்காசைத் தொலைத்து விட்டுத் தவிக்கும் என் தவிப்பைக் காண சகியாமல், பெரியவர் தனது பணத்தைத் தருகிறாரா?' .

"ஐயா, இது உங்களது இல்லை தானே?...என்னது தானே?"

பெரியவர் கடகடவென்று கோயில் அதிரச் சிரித்தார். அவரின் அந்தச் சிரிப்பு, அந்த இடத்திற்குச் சம்பந்தமில்லாது போலிருந்தது.

"என்னது--உன்னது என்று ஏன் பிரித்துப் பேசுகிறாய்?..நீயும் நானும் வேறா?.."

"ஐயா---"

"உன்னை நீ என்று அழைத்துப் பேசுகிறேனே?..அந்த அளவுக்கு உன்னை எனக்கு மிகவும்
பிடித்துப் போய் விட்டது. உனது வெகுளியான மனசு நோகக்கூடாது. இந்தாப் பிடி.."

"--------------"
"பூசலாருக்குச் சொன்னது தான். கொஞ்சநேரம் நாம் பேசிக்கொண்டிருந்தாலும், பூசலாரும் நீயும் எனக்கு ஒன்றுதான். திருநின்றவூர்க்காரன் என்று வேறு சொல்றே..இந்தாப் பிடி."

எனக்கு பதில் பேச நாவெழவில்லை. விழி முனையில் நீர் தளும்ப, பார்வை கலங்கிற்று.

"என்ன யோசனை?..வாங்கிக்கோ..வாங்கி உன் கையாலே உண்டியலில் போடு..யாருக்குப் போகணுமோ, அவங்களுக்குப் போய்ச் சேரட்டும்" என்றார்.

நான் திகைத்தேன்..'யாருக்குப் போகணுமோவா?...நியாயப்படி அந்த அதிகாலைப் போதில் எங்கள் மனத்தில் சந்தோஷ அலைகளை விதைத்த அந்த ஏழை குடுகுடுப்பைக்காரனுக்கு அல்லவா இந்தப் பணம் போய்ச்சேரவேண்டும்?..'நீ போடு; அவனுக்கேப் போய்ச் சேரும்' என்று குறிப்பால் உணர்த்துகிறாரா, இந்தப் பெரியவர்?..

'அவர் சொல்வதைச் செய்' என்று ஆழ்மனம் ஓங்காரமிட்டது.

இதற்கு மேல் என்னால் அவர் பேச்சைத் தட்டமுடியவில்லை. அவர் கொடுத்த அந்த நூறு ரூபாய்த் தாளை நடுங்கும் கரங்களால் வாங்கி,"ஈஸ்வரா---" என்று நெஞ்சடைக்க உச்சரித்து உண்டியலில் போட்டேன். பளீரென்று வெளுத்த வானம் போல, நெஞ்சமெல்லாம் நிர்மலமாயிற்று.

பெரியவர் என் தோள் பிடித்து அணைத்துக் கொண்டார். என் உடலில் மின்சாரம் மீட்டி விட்டுப் போனது. "இப்போ திருப்தி..யாருக்குன்னு கேக்காதே..ஊர் போய்ச் சேர்.." என்று அடிக்குரலில் சொன்னவர், சந்நிதி காட்டி, "இந்தக் கச்சிமூதூர் கைலாசநாதன், இச்சகத்து நாயகன், உன் இடும்பை தீர்ப்பான். பத்திரமாகப் போய்வா.." என்று அவர் சொல்கையிலேயே எனக்குப் பொறி தட்டியமாதிரி இருந்தது. 'அன்று, அந்த் விடியலில் அந்தக் குடுகுடுப்பைக்காரன் 'இடும்பை தீரும்' என்று குறி சொல்வது போல் சொன்ன அந்த அசலான வார்த்தைகளல்லவா, இவை?...

அந்தப் பெரியவரை மலங்கப் பார்த்தபடி நான் நிற்கையிலேயே, "அதோ--இன்னொருத்தர் எனனைத் தேடி வந்துவிட்டார். என்னைப் பார்த்தால் தான் அவருக்குத் திருப்தி.." என்று கும்பலாகக் கோயிலுள் நுழைந்த கூட்டத்துள் கலந்தார்.

'இப்பொழுது தானே சந்நிதி சென்று வந்தோம்?..இந்தப் பெரியவர் சந்நிதி நோக்கி ஏன் அவசரமாக விரைகிறார்?'..என்று திகைத்து கொஞ்ச நேரம் நின்றேன். பிறகு ஊருக்குச் செல்ல வேண்டுமே என்கிற எண்ணத்தில் கோயிலின் வெளிப்புறம் வரத் திரும்பினேன்.

கிட்டத்தட்ட கைலாசநாதர் கோயிலின் வெளிப்புல்வெளி தாண்டி ரோடு பக்கம் வந்து விட்டேன்.

"ஐயா!.." என்று கெஞ்சுகிற மாதிரி அழைத்த குரல் வேகமாக நடைபோட்ட என் கால்களைப் பின்னுக்கு இழுத்தது. திரும்பிப் பார்த்தேன். முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண், மிக ஏழ்மைக் கோலத்துடன். கையில் கைக்குழந்தை....

"ஐயா..குழந்தை பாலுக்குத் தவிக்குதய்யா.. கையில் காசு இல்லை..தருமம் ஐயா!.." என்று திக்கித் திணறி அந்தப் பெண் யாசிக்கையிலேயே, இப்படி யாரிடமும் கேட்டு அந்தப் பெண்ணுக்குப் பழக்கமில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

'ஏதாவது கொடு...தாமதிக்காதே...கொடு...' என்று உள்ளமனம் அவசரமாக ஆணையிட பை துழாவினேன்...சட்டைப்பையில் சில்லரைக்காசு இல்லை... வலதுபக்க பேண்ட் பாக்கெட்டில் கைவிட, நான் வெளியூருக்கு எங்கு சென்றாலும் என்னோடு எடுத்து வரும் என் அலுவலக அடையாள அட்டை கையோடு வந்தது.

ஏதோ அவசர அவசரமாக நினைவில் பொறிதட்டிய வேகத்தில் பிளாஸ்டிக் உறையில் இருந்த அந்த அட்டையைப் பிரித்துப் பார்க்கையில் துணுக்குற்றேன்.
வழிச்செலவுக்குப் போக, கோயில் உண்டியலில் போடத் தனியாக பத்திரப்படுத்தி எடுத்து வைத்திருந்த நூறு ரூபாய் நோட்டு, அப்படியே பத்திரமாக இருந்தது. 'அப்போ, என் சட்டை
பையிலிருந்து வீபூதிப் பொட்டலம் எடுக்கையில, விழுந்ததாகக் கூறி பெரியவர் கொடுத்த அந்த நூறு ரூபாய்?...அந்தப் பெரியவரின் காசா?.. வேண்டிக்கொண்டு உண்டியலில் போட வந்தக் காசை நான் தவற விட்டுவிட்டதைக் காணப் பொறுக்காமல், 'எவ்வளவு?' என்றுக் கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தப் பெரியவர் கொடுத்த காசா அது?.. அடப்பாவமே!.. எவ்வளவு வயசுப் பெரியவர்?...எதற்கு வைத்திருந்தாரோ?...அவரிடம் வாங்கி--'

"ஐயா..." என்று இறைஞ்சி அந்தப் பெண் பரிதாபமாக என்னைப்பார்த்து மீண்டும் அழைக்கையில், 'உண்டியலில் போடத்தவறிய எனது இந்தப் பணத்தை
இந்தப் பெண்ணுக்குக் கொடுத்துவிட வேண்டும்' என்று நினைப்பு முன்னின்று மனசில் துளிர்க்கையில், அந்தப் பெரியவரின் குரல் நினைவில் ஏதோ அசரீரி மாதிரி ஒலித்தது.

'என்னது--உன்னது' என்று ஏன் பிரித்துப் பேசுகிறாய்?...நீயும் நானும் வேறா?..'

ஏதோ குருடனுக்கு பார்வை கிடைத்த மாதிரி மனசில் ஒரு புதுவெளிச்சம் பளீரிட்டது. 'ஆமாம், வேறில்லை தான்...அந்தப் பெரியவர், நான், அந்த ஏழை குடுகுடுப்பைக்காரன், இந்தப் பெண், இந்தப் பெண்ணின் கையிலிருக்கும் அந்த சிறுஜீவன், என் அம்மா, உஷா, உஷாவின் கருவில் உருவாகியிருக்கும் குழந்தை...

ஓ, யாருமே, வேறில்லைதான்!...ஒவ்வொரு கூறும் ஒவ்வொரு விதமாய்ப் பதிந்து,சேர்ந்து பிரிந்து, மாயையாய் வெவ்வேறு வடிவெடுத்தமாதிரி ரூபம் கொண்டு_____'

இத்தனை சிந்தனைக்கும் நடுவே, க்ஷணநேரத்தில், அனிச்சையாய் அந்தப் பெண்ணிடம் அந்த நூறு ரூபாயைக் கொடுத்திருக்கிறேன்....

"ஐயா..இவ்வளவு காசு வேண்டாம்..பாலுக்கு அஞ்சு ரூபா போதும்..."

"இல்ல...வைச்சிக்க..இன்னிக்கு..நாளைக்கு,அதுக்கு மறுநாளைக்கு...குழந்தைக்குப் பால் வாங்கித்தா...வைச்சிக்க..."

"வேண்டாம், ஐயா!..இவ்வளவு காசு வேணாம்..எங்கிட்டே இருந்தா, யாருகிட்டேயிருந்தாவது திருடிட்டதா நெனைப்பாங்க..எனக்கு அஞ்சு....."

வேறு யாரோ என்னுள் நுழைந்து கொண்டு என் குரலில் பேசுவது போன்ற உணர்வில் என் குரல் எனக்கே குழறிற்று.."இல்ல..வாங்கிக்க...இது உன் காசு தான்.....என் மனசு சொல்றது..இது உனக்குச் சேர வேண்டியது தான்....மறுக்காம வாங்கிக்க..." என்று ஏதோ ஒரு சக்தி என்னை ஆட்டுவிக்கிற மாதிரி அவசர அவசரமாகக் கூறியவன், அந்தப் பெண் திருப்பித்தர முயன்ற பணத்தை திரும்பி வாங்கிக்கொள்ள நேரிட்டுவிடுமோ என்கிற பயத்தில் வேகவேகமாய், பஸ் நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

வானம், கருமேகம் சூழ்ந்து எப்பொழுது பொத்துக் கொள்ளுமோ என்று மிரட்டியது.

கச்சாபரேஸ்வரர் கோயில் அருகில், ஒரு சைக்கிள் ரிக்க்ஷாகாரர் வற்புறுத்தி தன் வண்டியில் என்னை ஏற்றிக்கொண்டார். பஸ்நிலையம் வந்ததும் என்னை இறக்கி விட்டு, காசு கொடுக்க முற்பட்ட என்னிடம் இருந்து வாங்கிக் கொள்ள மறுத்தார்.

'இந்த வழியாத்தான் எனக்குப் போகணும்...ஏதோ தோணித்து...உங்களை ஏத்திண்டேன்..அதுக்குப் போய் காசா?" என்று மறுத்தவரைப் பார்க்க எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவிலலை... அந்த ரிக்க்ஷாகாரரின் நெற்றியில் பட்டை பட்டையாக திருநீறு கீற்று....குழந்தைச் சிரிப்புடன், சின்ன வயசுப் பையன் ஒருவன் ஞானவான் மாதிரி ரிக்க்ஷாவுடன் பிணைத்திருந்த சைக்கிள் சீட்டில் உட்கார்ந்திருக்கிற மாதிரி உணர்வு எனக்கு...என் வசமில்லாமல், மாற்றி மாற்றி நடக்கும் நாடகக் காட்சியில் பங்கேற்கிற உணர்வில், அடுத்த காட்சி என்ன என்று தெரியாத மயக்கத்தில் பக்கத்தில் வந்து நின்ற பஸ்ஸில் 'வாங்க, சார்.." என்று கண்டக்டர் அழைக்க ஏறிக் கொண்டேன்.



தோ ஊர் வந்து விட்டது. திருநின்றவூர் தான்.

கோயிலைத் தாண்டி தான் வீட்டுக்குப் போகவேண்டும். இருதயாலீசுவரர் கோயிலைத் தாண்டும் பொழுது, இறைவனையும் அன்னை மரகதாம்பாளையும் மனமுருக நெஞ்சில் நிறுத்தி வணங்கிப் பின் வீடிருக்கும் தெருவிற்குள் நுழைந்தேன்.

வீட்டு வாசல் திண்ணையில் அம்மா மூக்குக் கண்ணாடி தரித்து, ஏதோ புத்தகத்தை வழக்கம் போலக் கொஞ்சம் இரைந்த குரலில் படித்துக் கொண்டிருந்தார்கள்:

"இறைவனும் ஆத்மாவும் ஒன்றே. உடலை உயிராய் ஆத்மா நெருங்கிச் சந்திக்கையில் அதில் குடிகொள்ள நேரிடுகிறது. நேரம் வருகையில் பிரிகிறது; பிரிந்தது, மீண்டும் சந்தித்துக் குடிகொள்கிறது...சந்தித்தலும், குடிகொள்ளலும், பிரிதலும், மீண்டும் சந்தித்தலும் வழக்கமாக நடக்கும்----"

நான் படியேறிய ஓசை கேட்டோ என்னவோ தலை நிமிர்ந்த அம்மாவிடம்,"அம்மா! உனக்குப் பூசலாரைத் தெரியுமா?...இந்த ஊர்க்காரராமே?..."என்று கேட்கும் என்னை விநோதமாகப் பார்த்தார் அம்மா. 'பூசலாரைத் தெரிந்து கொள்ளாமலா இந்த ஊரில் இருக்கே?' என்று அவர் ஏளனமாக என்னை நோக்குவது போலிருந்தது அவரது அந்தப் பார்வை.

உங்களுக்காவது பூசலாரைத் தெரியுமா?...

4 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஜீவி எங்கயோ போய்டீங்க.. ஈக்குள்ளும் எறும்புக்குல்ளும், மனிதனுக்க்ய்ல்ளும், மரம், மட்டைகளுக்குள்ளும் நித்யமான ஜீவிதத்தை புரிந்து கொள்வது தானே நாம் கடைத்தேறுவதற்கான வழி, இதை கதையென்றே நினைத்துப்பார்க்க மறுக்கிறது மனம்.. வாழ்த்துக்கள்.

jeevagv said...

ஆகா, நிகழ்வுகள் நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும், அதே சமயத்தில் நடைமுறைப் பாடம் கற்பிப்பதாகவும் அமைந்துள்ளன, அருமை!

இறுதியில் முடிவும், பிரமாதம். பூசலாரை மறந்துவிட்டது. ஆனால் இப்போது தமிழ் விக்கிபீடியாவின் துணையுடன் தெரிந்து கொண்டேன், பிரம்மித்தேன்.

அருமையான கதைக்கு ஆயிரம் நன்றிகள்!

Kavinaya said...

கதை மிகவும் நன்று! முதலில் இறுதிப் பாகத்தைப் படித்து பிறகுதான் இதர பாகங்களைப் படித்தேன். கதை போலவே இல்லை. உண்மை நிகழ்வுகளைச் சொன்னது போல் மிக இயல்பாக மனதைச் சிலிர்க்க வைக்கும் விதமாக இருந்தது!

பூசலார் பற்றிப் படித்திருக்கிறேன்; இறைவன் அரசன் கட்டிய கோவிலுக்குப் போகாமல், பூசலார் கட்டிய மனக் கோவிலுக்கு முதலில் சென்றதாக...

//'என்னது--உன்னது' என்று ஏன் பிரித்துப் பேசுகிறாய்?...நீயும் நானும் வேறா?..'//

அருமை, ஜீவி!

ஜீவி said...

ஒரு நல்ல சிறுகதை தன்னைத் தானே எழுதிக்கொள்ளும் என்பார் ஜெயகாந்தன்.. தோழர் ஜே.கே. சொன்னது தான் நடந்திருக்கிறது..

இக்கதையைப் படித்துப் பின்னூட்டமிட்டும், படித்து ரசித்தும், படிக்காதோர் படிக்கப் பரிந்துரைத்த நூற்றுக்கணக்கான வாசகர்களுக்கும் எனது நெஞ்சங்கனிந்த நன்றி.

Related Posts with Thumbnails