ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....
12. குருகுல உபதேசம்
புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுதின் நிர்மலமான நிசப்தத்தில் 'டணார், டணார்' என்று கோயில் மணி ஒலிப்பதைப் போல, அரங்கம் நிறைந்த அந்த அமைதியில் யோகி குமாரஸ்வாமியின் குரல் ஏற்ற இறக்க தாள கதியுடன் ஸ்பஷ்டமாக ஒலித்தது.
"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே"
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"
பிரபஞ்சம் குறித்த பேச்சு ஆதலால், ' உலகு' எனத்தொடங்கும் இந்த இரண்டு செய்யுள்களும், அவற்றின் ஒப்பற்றக் கருத்தும் ஒப்புமை நோக்கி மகிழத்தக்கது. முதலில் பாடிய பாடல், கம்பனின் இராமாயண, கடவுள் வாழ்த்துப் பாடல். அடுத்தது தெய்வப்புலவர் சேக்கிழாரின் பெரிய புராண இறை வாழ்த்துப் பாடல். இந்த இரண்டும் இந்த இரண்டு காவியத்தின் முதல் பாடலாக அமைந்து 'உலகு' என்றேத் தொடங்குகிறது.
எந்தச் செயலையும் செய்யத் தொடங்கும் பொழுது இறைவனை வணங்கி, தொடங்கும் செயலை நல்லபடி முடித்துத் தர அவனை வேண்டி, செயலைத் தொடருவது இந்த தேசத்தின் வழக்கம். செயலும் அவனே, செயலூக்கியும் அவனே, செய்பவனும் அவனே.
பிரபஞ்சத்தின் தோற்றுவாய் குறித்து எக்காலத்தும் பல்வேறு பட்ட சிந்தனைகள் கிளர்ந்திருக்கின்றன எல்லாம் அவன் திருவிளையாடல்களே.
படைப்பையும் படைத்து விட்டு, அந்தப் படைப்புகளின் மூலாதாரமாக அவனே இருந்து கொண்டு, படைக்கப்பட்டவை என்னன்ன. எப்படி என்று அந்த படைப்பையே சிந்திக்கத் தூண்டும் அவன் செயல், திருவிளையாடல் அல்லாமல் வேறு என்ன?..
அவனே இந்த பிரபஞ்சத்தைப் படைத்தான். ஆகவே இந்த பிரபஞ்சம் பூராவிலும் அவனே நிறைந்து இருக்கிறான்.
நிலம், நீர், வாயு, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களும் அவனிலிருந்துத் தோன்றியவை. அவனின்று தோன்றியதால், இவற்றின் மூலம் அவன் என்பதால், பஞ்சபூத மூலக்கூறுகளிலும் அவனே உள்ளான். அவனே அவை;
அவையே அவன்.
ஒன்றை இரண்டாக்கினாலும் சரி, ஐந்தாக்கினாலும் சரி, அதையே ஐய்யாயிரம் ஐம்பதாயிரம் ஆக்கினாலும் சரி, ஆக்கிய அந்த அனைத்தும் ஒன்றின் கூறுகளே என்கிற தத்துவப்படி, அத்தனை அணுக்கூறுகளும் அவனின் கூறுகளே. அணுவின் துகளுக்கு துகள் அவனே. ஒவ்வொரு துகளுள்ளும் எதிர் எதிர் சக்திகளாக உருவாகி, அவற்றை அசையவைத்து ஆட்டுவிக்கும் அலகிலா விளையாடுடைய தலைவன் அவனே.
மானிடத்தின் அக அனுபவ மேன்மைக்கான தேடலின் வெளிபாடு தான் யோகம். சிந்தையில் ஆழ்ந்த வித்தென ஒன்றை ஊன்றி உள்நோக்கிப் பார்த்தல்; உள்ளார்ந்த அக மற்றும் வெளியார்ந்த பிரபஞ்ச இரகசியங்களை, இது ஏன், எதனால், எப்படி என்று கிளர்த்தும் சிந்தனைகளைக் கிளறி விட்டு தன்னை மறந்து தியானித்தல்; தியானித்தல் என்றால் சாதாரண தியானித்தல் இல்லை.. யோகநிஷ்டையில் அமர்ந்து, அகழ்வாராய்ச்சியாய் தன்னையே குடைந்துப் பார்க்கையில், தன்னைச் சுற்றியும், தன்னையே மறைத்தும் மாய்த்தும் கரையான் புற்று எழும்பி நிற்பினும் நிலைகுலையாது தன்னைத் தோண்டி ஞானம் காணல்.
இந்திய தேசத்து ரிஷிகளும், யோகிகளும் இப்படித் தங்களையே தோண்டித் துருவி தியானித்து வெளிச்சம் கிடைக்கப் பெற்றிருக்கின்றனர்; தாங்களே வெளிச்சமாகவும் ஆகிப் போயினர்.
வேதகாலத்தின் மறுமலர்ச்சி தான் உபநிடதங்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். பிரபஞ்சமே இருட்டில் உறக்கிக் கொண்டிருக்கையில், பாரதத்திலிருந்து வெளிச்சம்புறப்பட்டது நாம் பெருமைப்படத்தக்க ஒன்று. கி.மு. 1000க்கும் கி.மு. 300க்கும் இடைப்பட்ட காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சிந்தனையை நினைத்துப் பார்க்க முடியுமா?..
பிரபஞ்சம், இறைவன், மனிதன் - இவற்றிக்கிடையான உறவை ஆராய்வதே உபநிடதங்கள். எல்லாமே ஆழ்ந்த தவச்சிந்தனையின் வெளிப்பாடுகள்..
குருகுல வாசத்தில் கேட்டல், கற்றல் என்கிற முறையே; குருவிடமிருந்து
அவர் பெற்ற அனுபவங்களை உபதேசங்களாக சீடன் கேட்டு என்கிற முறையில் இந்த கிடைத்தற்கரிய செல்வம் அனைத்தும் ஆதி காலத்தில் வாய்மொழியாகவே பரவியிருக்கிறது.
உபநிடதங்களைப் பற்றி நிறையச் சொல்ல வேண்டும்.." என்று கொஞ்சம்
நிறுத்தித் தொடர்ந்தார் யோகி குமாரஸ்வாமி.
(தேடல் தொடரும்)
10 comments:
அருமை ஜீவி அவர்களே! இதை தான் கண்ணதாசன் ஒரு பாடலில்
"மண்ணை தோண்டி தண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி"
என்று பாடினாரோ?
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செய்யுள்களைப் படிக்கையில், நினைவு வந்ததை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஸ்ரீ காழியூரர் 'நம்பிக்கை' குழுமத்தில் சமீபத்தில் "உ"காரத்தின் சிறப்பைப் பற்றி எழுதி இருந்தார். எதனால் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம், எதனால் இப்படிப்பட்ட காவியங்களிலெல்லாம் முதல் செய்யுள் "உ"காரத்தில் தொடங்குகின்றது, என்பதற்கெல்லாம் அருமையான யோக நெறி விளக்கம் தந்திருந்தார். அதில் சில வரிகள் மட்டும் - அவருடைய வார்த்தைகளிலேயே -
""உ" காரம் என்பது பிங்கல நாடியின் மாத்திரை! பிங்கலன் என்றால் சூரியன்! தங்கம் போல ஜொலிப்பது பிங்கலம்!
பிங்கலன் எனும் சூரிய நாடியில் "உ"காரத்தை உன்னி நிற்கும் வல்லமை பெற்றவருக்கு அனைத்து ஞானமும் சித்தியாகும்; புரிந்துக் கொள்ளும் தன்மை அற்புதமாக இருக்கும்.
இதையேதான் சூரியனோடு காலை முதல் மாலை வரை பயணம் செய்து ஆஞ்சநேயர் அனைத்து ஞானத்தையும் கற்றார் என்று சொல்லப்படுவதாக யோகியர் கூறுகின்றனர்.
"உ"கார சாதனை செய்வோர் அனைத்து ஞானத்தையும் பெறுகிறார் என்று மாண்டூக்ய உபநிஷத்தும் தனது பத்தாவது ஸ்லோகத்தில் சொல்கிறது."
//மானிடத்தின் அக அனுபவ மேன்மைக்கான தேடலின் வெளிபாடு தான் யோகம். சிந்தையில் ஆழ்ந்த வித்தென ஒன்றை ஊன்றி உள்நோக்கிப் பார்த்தல்;//
யோகத்தைப் பற்றிய விளக்கம் நன்று.
கவிநயா said...
//"உ"கார சாதனை செய்வோர் அனைத்து ஞானத்தையும் பெறுகிறார் என்று மாண்டூக்ய உபநிஷத்தும் தனது பத்தாவது ஸ்லோகத்தில் சொல்கிறது."//
முதலில் நன்றி சொல்லி விடுகிறேன்.
படித்ததை பிறரும் அறிந்து ரசித்து மகிழ்ந்திடப் பகிர்ந்து கொண்டமைக்கு.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மாண்டூக்ய உபநிஷத்தின் அந்த ஸ்லோகம், ஒங்கார மந்திரத்து 'உ' எழுத்தையும், கனவு நிலையையும் ஒப்புமை படுத்தி இரண்டும் மிகவும் உயர்வானவை என்கிறது.
இது தான் அந்த ஸ்லோகம்:
"ஸ்வப்னஸ்தனஸ்தைஜஸ உகாரோ த்விதீயா மாத்ரா உத்கர்ஷாதுபயத்வாத் வா உத்கர்ஷதி ஹ வை ஜ்ஞானஸ்ந்ததிம் ஸ்மானச்ச பவதி நாஸ்யாப்ரஹ்மவித் குலே பவதி ய ஏவம் வேத"
ஆத்மாவின் பரிமாணமான --தைஜஸன் என்னும் கனவுநிலை பற்றி எழுதும் பொழுது இது பற்றி விவரமான குறிப்புகள் கொடுக்கக் குறித்துக் கொள்கிறேன்.
இந்தப் பதிவு சிறக்க பங்கு பெறும் உங்களுக்கு என் நன்றிகள்.
Expatguru said...
//அருமை ஜீவி அவர்களே! இதை தான் கண்ணதாசன் ஒரு பாடலில்
"மண்ணை தோண்டி தண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி"
என்று பாடினாரோ?//
அந்தப் பகுதியை எழுதும் பொழுது, கவியரசரின் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல் நினைவில் நின்று தான் 'தோண்டி' என்கிற சொல்லைப் பிரயோகித்தேன்.
எது ஒன்றையும் சிறக்க எழுதியவர்களின் சொல்லாட்சி, எந்நேரத்தும் சிந்தையில் நிறைந்திருக்கும்.. சாகாவரம் பெற்று, பயின்றவர்களின் வாக்கிலே, எழுத்திலே சதிராடும்!
உங்களுக்கும் மிகச்சரியாக அந்தப் பாடல் எப்படி நினைவுக்கு வந்தது, பாருங்கள்!
அதுதான் அந்தப் பிறவிக் கவிஞனின் சிறப்பு!
பெருமையெல்லாம் போகட்டும், கண்ணனுக்கு தாசனுக்கே!
தங்கள் ரசனைக்கு என் நன்றிகள்.
"யோகநிஷ்டையில் அமர்ந்து, அகழ்வாராய்ச்சியாய் தன்னையே குடைந்துப் பார்க்கையில், தன்னைச் சுற்றியும், தன்னையே மறைத்தும் மாய்த்தும் கரையான் புற்று எழும்பி நிற்பினும் நிலைகுலையாது தன்னைத் தோண்டி ஞானம் காணல்."-----
என்ன சொல்ல சில சமயம் மனதில் தோன்றுவதை வார்த்தைகளாய் வடிப்பதை விட வெறுமே அந்த அனுபவத்தை வேடிக்கை பார்ப்பது சுகம் அதுபோன்றதொரு சுகம் கிட்டியது இந்த வரிகளை வாசிக்கும் பொழுது.
கிருத்திகா said...
"யோகநிஷ்டையில் அமர்ந்து, அகழ்வாராய்ச்சியாய் தன்னையே குடைந்துப் பார்க்கையில், தன்னைச் சுற்றியும், தன்னையே மறைத்தும் மாய்த்தும் கரையான் புற்று எழும்பி நிற்பினும் நிலைகுலையாது தன்னைத் தோண்டி ஞானம் காணல்."-----
//என்ன சொல்ல சில சமயம் மனதில் தோன்றுவதை வார்த்தைகளாய் வடிப்பதை விட வெறுமே அந்த அனுபவத்தை வேடிக்கை பார்ப்பது சுகம் அதுபோன்றதொரு சுகம் கிட்டியது இந்த வரிகளை வாசிக்கும் பொழுது.//
கலைஞன் - ரசிகன் உறவே இதுதான்.
சிறந்த ரசிகன் சிறந்த கலைஞ்னாய்
இருப்பான் என்பது கலையுலக ரகசியம். படைக்கும் கலைஞனின் பார்வையும், அந்தப் படிமமும் படிப்பவனுக்கும் அதே நேர்கோட்டில் பதிந்திருந்தால் தான் எதையும் ரசிக்கமுடியும்; 'அடடாவோ' என்று முதல் வேலையாக பாராட்டவும் தோன்றும். இன்றைய ரசிப்பு நாளைய செயலாக வடிவம் பெறுவதும் அதனால் தான்.
படிப்பவரும் படைப்பவராய் இருந்தால் கேட்கவே வேண்டாம்; மனமுவந்து பாராட்ட கை பரபரக்கும்!
மிக்க நன்றி, கிருத்திகா!
கந்த சஷ்டியில் வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்*குமாரஸ்வாமி*யே வந்து அருள் வாக்கு தந்தது போலிருந்தது!
//அசையவைத்து ஆட்டுவிக்கும் அலகிலா விளையாடுடைய தலைவன் அவனே!//
ஆகா! அலகிலா ஜோதியான், ஆட வல்லான், அவனே ஆட்டுவிப்பான்!
ஜீவா (Jeeva Venkataraman) said...
//கந்த சஷ்டியில் வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்*குமாரஸ்வாமி*யே வந்து அருள் வாக்கு தந்தது போலிருந்தது!
//அசையவைத்து ஆட்டுவிக்கும் அலகிலா விளையாடுடைய தலைவன் அவனே!//
ஆகா! அலகிலா ஜோதியான், ஆட வல்லான், அவனே ஆட்டுவிப்பான்!//
அருள்மிகு வைத்தீஸ்வரன் கோயில் முத்து குமாரஸ்வாமி -- ஆகா, நினைத்தாலே நெஞ்சம் சிலிர்க்கிறது!
ஆம்! அந்த அம்பலத்தாடுவான் மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம். நன்றி காணிக்கையாக நம்மால் செய்ய முடிந்தது அதுதானே..
வருகைக்கு நன்றி, ஜீவா!
////பிரபஞ்சத்தின் தோற்றுவாய் குறித்து எக்காலத்தும் பல்வேறு பட்ட சிந்தனைகள் கிளர்ந்திருக்கின்றன எல்லாம் அவன் திருவிளையாடல்களே.
படைப்பையும் படைத்து விட்டு, அந்தப் படைப்புகளின் மூலாதாரமாக அவனே இருந்து கொண்டு, படைக்கப்பட்டவை என்னன்ன. எப்படி என்று அந்த படைப்பையே சிந்திக்கத் தூண்டும் அவன் செயல், திருவிளையாடல் அல்லாமல் வேறு என்ன?..////
ஏன்? என்ற கேள்விக்குத் தான் இன்னும் விடை புரியவில்லை.
விளையாட்டா?
விஞ்ஞானமா? (அதாவது இயற்கையா?)
எல்லாம் கலந்ததா?!?
பேசிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தால் புரிதல் ஏற்படுவதில்லை. உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிட்டது போல், நம்மில் நாமே உள்ளிறங்கி உணர்ந்தாலேயன்றி, ஏன் என்ற கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது.
Shakthiprabha said...
//பேசிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தால் புரிதல் ஏற்படுவதில்லை.//
இந்தக் கதையின் அடிநாதத்தைத் தொட்டு காட்டியிருக்கிறீர்கள்..
மிக்க நன்றி, சக்தி பிரபா!
தொடர்ந்து வாருங்கள்..
Post a Comment