ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....
39. நினைக்க நினைக்க ஆச்சரியம்.
மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு வெகு சீக்கிரத்தில் அரங்கம் நிறைந்து விட்டது. சிறு சிணுங்கல் கூட பெரிய ஓசையாகக் கேட்கும் அளவில் அரங்கே நிசப்பதமாக இருந்தது.
அந்த அமைதியில் உடற்கூறு இயல் அறிஞர் உலகநாதனின் குரல் மிகத் தெளிவாக ஒருவகையான இலயத்துடன் வெளிப்பட்டது.
"நரம்பு மண்டலத்தின் முக்கியமான பகுதி தண்டுவடம். தென்னை மட்டை ஒன்றை குப்புறப் போட்டால் இருக்கும் தோற்றத்தில் தண்டுவடம் முதுகின் பின்பக்கம் அமைந்துள்ளது. உங்கள் சுண்டுவிரலை நிமிர்த்திப் பாருங்கள்; அந்த அளவே உங்கள் தண்டுவடத்தின் கனம் இருக்கும்.
"தலைப்பகுதி முகுளத்துடன் தொடர்பு கொண்டதாய், வால்பகுதி இரண்டாவது கீழ் முதுகு முள்ளெலும்பின் மேற்பரப்பில் முடிகிறது. தண்டுவடத்தின் முன்புறமும் சரி, பின்புறமும் சரி மேலிருந்து கீழ்வரை இருக்கும் பிளவு அதை இரண்டு பிரிவுகளாய்ப் பிரிக்கிறது. மத்தியில் கால்வாய் போன்ற அமைப்பு. காலவாயைச் சுற்றி சாம்பல் நிறத்திலும், வெளிப்புறம் வெண்மை நிறத்திலும் படர்ந்து காணப்படும். சாம்பல் நிறத்திற்குப் பொறுப்பு நியூரோன்கள் என்றால், வெண்மைக்கு அக்ஸன்கள். உணர்ச்சி நரம்புகளின் நியோரோன்கள், தண்டுவடத்தின் வெண்மைப் பகுதியில் இணையும். சாம்பல் நிற நியூரோன்களிலிருந்து செய்கை நரம்புகள் வெளிப்படும்.
"மூளையிலிருந்து தசைகளுக்கு ஆணைகள், உடற்பகுதிகளிலிருந்து மூளைக்கு உணர்ச்சிக் கடத்தல்கள் என்று தண்டுவடம் மூளைக்கும் தசைப்பகுதிகளுக்கும் இணைப்புப் பாலமாக இருந்து செயல்படுகிறது. இன்னொன்று. தண்டுவடத்தில் நரம்பு ஸெல்களின் அமைப்பு உண்டு. நமது யத்தனமில்லாமல் நடக்கும் அனிச்சை செயல்களுக்கு இந்த நரம்பு ஸெல்களே ஆதாரமாக இருக்கிறது.
"தண்டுவடம் மூளைப் பகுதியில் முடியும் இடத்தில் தான் முகுளத்தின் ராஜாங்கம் நடக்கிறது. இதயம், நுரையீரல், இரைப்பை, குடல்கள்--இவற்றின் இயக்கம், அந்த இயக்கங்களுக்கான உத்திரவுகள் என்று சகலமும் முகுளப் பகுதியைச் சார்ந்துள்ளன. ஆக முகுளம் சேதம் அடைந்தாலும் கேம் ஓவர்.
"முகுளத்திற்கு மேலே பான்ஸ் என்று ஒரு சமாசாரம். முகுளத்திலும், பான்ஸிலும் தண்டுவடத்தைப் போன்றே சாம்பல், வெண்மை பொருட்கள். இவற்றில் நூக்ளியஸ் என்னும் ஸெல்களின் திரட்சி உண்டு. இந்த ஸெல்களின் துணுக்குகள் மூளையிலிருந்து வெளிப்போந்து, கபால நரம்புகளாக மாற்றம் கொள்கின்றன. கபால நரம்புகளின் நூக்ளியஸ்களை, மூளையோடும் தண்டுவடத்தோடும் இணைக்கும் நரம்பு இழைகளை இங்கே பார்க்கலாம். நரம்பு உந்துதலுக்கான கடத்துதலையும் அனிச்சைப் பணிகளையும் கொண்டுள்ள முகுளத்தின் நீட்சியே தண்டுவடம் என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
"இதய நடவடிக்கை, மூச்சுவிடுதல் போன்ற ஜீவாதார முக்கியத்துவம் கொண்ட கேந்திரங்கள் முகுளத்தில் உள்ளன. இதய நடவடிக்கை கேந்திரம், வேகஸ் நரம்பு வழியாக உந்துதல்களை இதயத்துக்கு அனுப்பி, இதயத்தின் மீது மட்டுப்படுத்தும் விளைவை ஏற்படுத்துகிறது. பரிவு நரம்பு வழியாக இதயத்துக்கு கடத்தப்பட்ட உந்துதல்கள் இதயப்பணிகளைத் துரிதப் படுத்துகின்றன. முகுளமும், பான்ஸும் நேரடியாகவும், தண்டுவட கேந்திரங்கள் மூலமும் உயிரினத்தின் பல பணிகளை ஒருங்கிணைந்து கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வாத பொருட்கள் குடலினுள்ளே போய்விட்டால் ஏற்படும் 'உவ்வே' இது மிகச் சரியாக செரிமானப் பாதையில் செயல்படும் வேகத்தினால் தான்.
"இன்பம், துன்பம் எல்லாமே கோடிக்கணக்கான நியூரோன்கள் ஒத்த ஏற்பாட்டுடன் செயல்படுதலின் விளைவு என்று கூட ஒரு சாராரின் அபிப்ராயம. யோக சாஸ்திர செய்திகளைச் சொல்லிப் பின்னர் உரையாற்ற இருக்கின்ற மேகநாதன் அவர்கள், முதுகெலும்பினுள் நடுவில் செல்லும் ஸூஷூம்னா நாடி பற்றியும், ஆக்ஞா சக்கரங்களைப் பற்றியும் சொல்ல இருப்பதாகவும், 'நீங்கள் முகுளம், தண்டுவட உயிரியல் குறிப்புகளை உங்கள் உரையில் கொடுத்தால் நலமாக இருக்கும்' என்று கேட்டுக் கொண்டார். அதன்படி ஓரளவு அவர் சொன்னதைப் பூர்த்தி செய்திருக்கிறேன்.
இறைவன் இருக்கின்றான்
நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
உடலின் ஒவ்வொரு உறுப்பும், சிறு தசைமடிப்பு கூட நமது தேவைக்கு ஈடுகொடுக்கிற மாதிரி அல்லது அதன் உபயோகத்தைக் கருத்தில் கொண்டு பார்த்துப் பார்த்து இறைவன் படைத்த மாதிரி இருக்கிறது. முழுசாக முதல் மனித உருவம் தலையெடுத்து இத்தனை காலம் கழித்து இப்பொழுது வேண்டுமானால் என்னைப் போன்ற உயிரியல் படித்தவர்கள் இதே கருத்தை வேறுமாதிரி சொல்லலாம். அவ்வப்போது ஏற்படும் தேவைகளுக்கு ஏற்ற மாதிரி உடல் உறுப்புகள் உருவாகியிருக்கின்றன என்று.
அதாவது தேவை முதலில்; அதற்கேற்ப உறுப்பு வடிவமெடுத்தது பின்னால் என்று. உழைப்பின் தேவைக்கான பரிணாம வளர்ச்சியே உடல் உறுப்புகள் என்று வரையறுத்த மாதிரி சொல்வார்கள்.
ஆனால் அறிவியலின் இத்தனை ஆண்டுகால வளர்ச்சிக்குப் பிறகு அக்கு வேறு ஆணி வேறாக ஒவ்வொரு உறுப்பின் படைப்பு நேர்த்தியையும், ரகசியத்தையும், அதன் மகத்துவத்தையும் மனிதன் புரிந்து கொண்டு விட்டான். படைத்தவன் படைத்த அறிவின் துணை கொண்டு என்றாலும் சரியே.
ஒரு உறுப்பு தவிர. அந்த மகத்தான உடல் உறுப்பின் பெயர் குடல்வால். ( Vermiform Appendix) பெருங்குடல் துவக்கத்தில், சீகத்தின் அடியில் இருக்கும் வால் போன்ற பகுதி. உத்தேசமாக 7 செ.மீ. நீளம் 1 செ.மீ. தடிமன் இருக்கலாம். இந்த உறுப்பு எதற்காக வயிற்றில் இருக்கிறது, இதனால் என்ன உபயோகம் என்று இதுவரை யாருக்கும் கண்டுபிடித்துச் சொல்ல தெரியவில்லை. இந்த வாலினுள் ஏதாவது குடல் பூச்சியோ, கால்சியம் துகளோ தப்பித் தவறி நுழைந்து விடின், வந்தது ஆபத்து!
வலியும் வேதனையும் புரட்டி எடுத்து, குடல்வால் அழற்சி (Appendicitis) ஏற்பட்டு அறுவை சிகித்சை வரை கொண்டு போய் விட்டுவிடலாம்!
மருத்துவ உலகின் இப்போதைய கணிப்பு, இந்த உறுப்பு தேவையே இல்லாத ஒரு சமாசாரம் என்பது தான். அதாவது இதன் தேவை என்னவென்று இதுவரை தெரியவில்லை என்பது தான். இதனால் தேவைக்கேற்பவான உறுப்பு வளர்ச்சி என்கிற வாதம் பொய்த்துப் போகிறது.
ஒன்று மட்டும் நிச்சயம். இந்த வாலின் அவசியத்தை கண்டறிந்து இது படைக்கப்பட்டதின் ரகசியத்தை நிரூபிப்பவர்க்கு உயிரியல் உலகின் மிக உயரிய மரியாதை நிச்சயம் என்பது மட்டும் நிச்சயம்.
(தேடல் தொடரும்)
6 comments:
//ஒரு உறுப்பு தவிர. அந்த மகத்தான உடல் உறுப்பின் பெயர் குடல்வால். ( Vermiform Appendix) பெருங்குடல் துவக்கத்தில், சீகத்தின் அடியில் இருக்கும் வால் போன்ற பகுதி. //
அரிய தகவல்கள். மிக்க நன்றி !!!
Shakthiprabha said...
//ஒரு உறுப்பு தவிர. அந்த மகத்தான உடல் உறுப்பின் பெயர் குடல்வால். ( Vermiform Appendix) பெருங்குடல் துவக்கத்தில், சீகத்தின் அடியில் இருக்கும் வால் போன்ற பகுதி. //
அரிய தகவல்கள். மிக்க நன்றி !!!
தொடர்ந்த வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் மிக்க நன்றி, சக்தி பிரபா!
அப்படியே படம் போல் கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள்... மிக்க நன்றி..
கிருத்திகா said...
//அப்படியே படம் போல் கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள்... மிக்க நன்றி..//
வாருங்கள், கிருத்திகா!
தங்களுக்கும் மிக்க நன்றி.
மனித உடற்கூறு பற்றி தமிழில் அழகான விளக்கம்.
//....படைத்தவன் படைத்த அறிவின் துணை கொண்டு என்றாலும் சரியே //
//..இந்த வாலின் அவசியத்தை கண்டறிந்து இது படைக்கப்பட்டதின் ரகசியத்தை நிரூபிப்பவர்க்கு ....//
அதற்காக யாரை எப்போது அவன் தேர்ந்தெடுத்து அனுப்புவானோ !!:))
கபீரன்பன் said...
மனித உடற்கூறு பற்றி தமிழில் அழகான விளக்கம்.
//....படைத்தவன் படைத்த அறிவின் துணை கொண்டு என்றாலும் சரியே //
//..இந்த வாலின் அவசியத்தை கண்டறிந்து இது படைக்கப்பட்டதின் ரகசியத்தை நிரூபிப்பவர்க்கு ....//
அதற்காக யாரை எப்போது அவன் தேர்ந்தெடுத்து அனுப்புவானோ !!:))//
கபீரன்ப,
எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டீர்கள்!
இறைவனின் திருவிளையாடல்கள் நினைத்து நினைத்து இன்புறதக்கது.
தனது படைப்பின் ரகசியத்தை தான் படைத்தவற்றின் மூலமாகவே வெளிப்படுத்துவது! இந்த பரிசும், பாராட்டும், பட்டயங்களும் கொடுப்பதும் அவனே; கொள்பவனும் அவனே!
மிக்க நன்றி.
Post a Comment