ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....
40. இறைவனின் கருணை
சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடில் ஒரு பேராசிரியர் இருந்தார்; தங்கமானவர். அதிரப் பேசத் தெரியாதவர். மாலை 7 மணிக்கு மேல் ஒரு மணிநேரம் அவரிடம் சிவராமன் பாடம் கேட்டான். காலை ஆறிலிருந்து ஏழு வரை தி.நகரில் கிருஷ்ணவேணி தியேட்டர் பின்புறச் சந்தில் இன்னொரு பேராசிரியாரிடம் எலெக்ட்ரானிக்ஸ் வகுப்பு.
மற்றபடி மவுண்ட் ரோடு பிரிட்டிஷ் லெப்ரரியும் தரமணி கல்விச்சாலைகளின் நூலகங்களும் தாம் சிவராமனின் அறிவு தாகத்திற்கு அட்சய பாத்திரங்களா யிருந்தன.
விவேகானந்தரின் உற்சாகமூட்டும் எழுத்துக்கள், Body Power, லீடர்ஷிப் குவாலிட்டிஸ், Mind Power, காம்பெடிட்டிவ் சக்ஸஸ் ரெவ்யூ -- என்று புரட்டிப் போட்டமாதிரி அசுர வேகத்தில் அவனது சிந்தனையோட்டமும், வாழ்க்கை முறையும் நிர்ணயித்த குறிக்கோளை நோக்கிய லட்சியப் பயணமாயிற்று. சாந்தி தியேட்டர் அருகில் மிகக்குறைந்த கட்டணத்தில் ஜெராக்ஸ் எடுத்துத் தருவார்கள். சந்தா கட்டி வாங்கி வரும் லைப்ரரி எலெக்ட்ரானிக்ஸ் புத்தகங்களின் அதிமுக்கிய பகுதிகள் பலவற்றை அங்கு ஜெராக்ஸ் எடுத்துக் கொள்வான். பிறகு பகுதிபகுதியாக பைண்டிங். எல்லாம் முடிகையில் நேர்த்தியான புத்தகக் கருவூலமாகியிருக்கும். நாளாவட்டத்தில் இவனைப் போலவே பலரை அங்கு சந்தித்து நட்பு வட்டம் பெரிதாகியது. எல்லாருக்குமே ஒரே மாதிரியான இலட்சிய வெறி.
நாலே வருடங்கள்; ஓடிப்போனதே தெரியவில்லை. அரியர்ஸ் வைக்காமல் ஒவ்வொரு வருடத்தையும் தாண்டி வந்ததின் அருமை இறுதி ஆண்டில் தெரிந்தது.
முதலில் AMIE; அப்புறம் IETE என்று இரண்டிலும் பறித்த வெற்றிக்கனி சிவராமனின் மடியில் வந்து விழுந்தது. ஒன்றுக்கு இரண்டாக இரண்டு பொறியாளர் பட்டங்கள்!
AMIE தேர்வு முடிவு தெரிந்த அன்று பறந்து வந்து வீடு சேர்ந்த உணர்வு இருந்தது. சுவாமி படத்திற்கு பக்கத்தில் அம்மாவையும் அப்பாவையும் நிறுத்தி வைத்து, விழுந்து நமஸ்கரிக்கையில், அவர்கள் கால்களைக் கட்டிக்கொண்டு கதறத் தோன்றியது; கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டதில் கண்ணீர் பெருகியது. கால் நனைந்த ஜில்லிப்பில் திடுக்குற்று மைந்தனைக் குனிந்து வாரி எடுத்து அணைத்துக் கொண்ட தந்தையின் நெஞ்சில் பெருமிதம் பொங்கியது.
இரண்டு பொறியாளர் தேர்வுகளுக்குமே, எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிக்கேஷன் இன்ஜினியரிங் பாடம் தான் எடுத்திருந்தான். ஒரே பாடத் தேர்வு, இரண்டு பொறியாளர் தேர்வுகளையும் மிகப்பிரமாதமாக சமாளிக்க சக்தி கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். "தனித்தனியே ஒரே பொறியாளர் பட்டத்திற்கு வெவ்வேறான இரண்டு தேர்வுகள் ஏன் எழுதுகிறாய்?" என்று கேட்டவர்களுக்குப் படிக்கிற காலத்தில் சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.
காரண காரியம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை, அல்லவா?... இரண்டு தேர்வுகள் என்று இறைவன் வகுத்த ஏற்பாட்டின் சூட்சுமம் பின்னால் தெரிகையில் சிவராமன் நெகிழ்ந்து போய் விட்டான்.
பொறியாளர் மேற்படிப்புக்கான ME படிப்பிற்காக சிவராமன் விண்ணப்பித்திருந்தான். பல்கலைக் கழக நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியான பொழுது சிவராமன் வானத்தில் மிதந்தான். அவன் விண்ணப்பித்திருந்த ஏரோ நாட்டிகல் இன்ஜினியரிங் படிப்பிற்கே அவனுக்குத் தேர்வாகியிருந்தது. 'உழைப்பின் வாரா உறுதிகள் உண்டோ?' என்று யாரோ வந்து அவன் காதில் கிசுகிசுப்பது போலிருந்தது.
ஒரே மாதத்தில் கவுன்சிலிங்! பட்டப்படிப்பின் தகுதி சான்றிதழ் சமர்ப்பித்து பட்ட மேற்படிப்புக்காக அத்தாட்சிக் கடிதம் பெறவேண்டியது தான்!.. பட்டப்படிப்பின் சான்றிதழ்?..
AMIE தேர்வுகளின் சென்னைப்பிரிவு அலுவலகத்திற்கு சென்று விசாரித்ததில் தற்காலிக சான்றிதழ் வருவதற்கே இன்னும் ஆறு மாதங்களுக்கு மேலாகும் என்கிற சேதி கேட்டு இடிந்து போய்விட்டான் சிவராமன்... நுழைவுத் தேர்வின் வெற்றி வெறும் கானல் நீராகி விடுமோ என்று கண்கள் கலங்கின.
கவுன்சிலிங் நாள் நெருங்க நெருங்க சிவராமன் தளர்ந்து போய்விட்டான். கைத்துப் போன வறட்சியில் எதுவும் பிடிக்கவில்லை. விவேகானந்தரின் சொற்பொழிவுகளை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தானானால், கண்கள் எழுத்துக்களில் படியுமே தவிர நெஞ்சம் தேற்றுவார் அற்று பரிதவிக்கும். "இறைவா, இதுக்கு ஒரு வழி சொல்லு" என்று முறையிடுகையில் மனசு ஒடிந்து போய்விடும்.
கதவு தட்டிய ஒலி அவனுக்குக் கேட்டிருக்க வேண்டும். அதனால் தான் கிழக்கு வானில் கீறித்தெறித்த விண்மீனாய் அந்த அதிசயம் நடந்தது.
அடுத்த நாள் ரிஜிஸ்டர் தபாலில் தில்லியிலிருந்து IETE -யின் Provisional Certificate வந்த உறையை தபால்காரரிடம் பெற்றுக் கொள்கையில் கைகள் நடுங்கின. கையெழுத்திடுகையில் கண்கள் குளமாயின.
வாங்கிய கவரை பூஜை அறைக்கு எடுத்து வந்து கணபதியின் பாதக் கமலங்களில் வைத்து மனசார விழுந்து நமஸ்கரித்தான். புது உற்சாகத்தோடு எழுந்தவனுக்கு வானமே வசப்பட்ட மாதிரி இருந்தது. 'இதுக்குத் தான் இரண்டு பட்ட படிப்புகளுக்குத் தேர்வுகள் எழுதினேனோ? இறைவா, என்னே உன் கருணை?' என்று குழந்தையாய் குழறினான்.
குரோம்பேட்டை M.I.T.--யில் M.E. படிக்க சிவராமன் ராமசுப்புவுக்கு மேற்பட்டப் படிப்பு கவுன்சிலிங் அனுமதிக் கடிதம் வழங்கியது.
(தேடல் தொடரும்)
4 comments:
வாழ்க்கையின் ஆரம்பப்பிடிகளில் தட்டுத் தடுமாறி, பின் மெதுவாய் நம்பிக்கையுடன் எழுந்து நிற்கும் இளைஞர்களின் உணர்ச்சிகளை அழகாக கோர்த்திருக்கிறீர்கள்.
Shakthiprabha said...
//வாழ்க்கையின் ஆரம்பப்பிடிகளில் தட்டுத் தடுமாறி, பின் மெதுவாய் நம்பிக்கையுடன் எழுந்து நிற்கும் இளைஞர்களின் உணர்ச்சிகளை அழகாக கோர்த்திருக்கிறீர்கள்...//
வருகைக்கும் உணர்வுகளுக்கும் மிக்க நன்றி, சக்திபிரபா!
காரணங்களற்ற காரியம் இல்லை..... இந்த சமயத்தில் இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாகத்தெரிகிறது.... மிக்க நன்றி...(தாமதமா படிக்கறதுக்கு கூட ஒரு காரணம் இருக்கு போலருக்கு...) 10 நாள் முன்னாடி படிச்சிருந்தா இந்த நிம்மதி வந்திருக்காது.. எல்லாம் அவன் செயல்...
கிருத்திகா said...
// 10 நாள் முன்னாடி படிச்சிருந்தா இந்த நிம்மதி வந்திருக்காது.. எல்லாம் அவன் செயல்...//
'இப்போ நிம்மதி' என்று அறிந்து
மனம் ஆறுதலடைந்தது. அவன் கூட இருந்து கொடுக்கும் பலம் தான்
எல்லாம்.
Post a Comment