மின் நூல்

Saturday, February 7, 2009

ஆத்மாவைத் தேடி...34

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி---


34. நான் அம்மாவாகப் போறேன், அம்மா!


சிவராமன் குளித்து விட்டு வருவதற்கும் தொலைபேசி மணி கிணுகிணுக்கவும் சரியாக இருந்தது.

மாலினி சமையலுக்கு முருங்கைக்கீரை ஆய்ந்து கொண்டிருந்தாள். சமையலறையிலிருந்து வேகமாக ஹாலுக்கு வந்து ராதைதான் தொலைபேசியை எடுத்தாள்.

"ஹலோ--"

"சம்பந்தி மாமியா?.. நமஸ்காரம் மாமி. லால்குடியிலேந்து சுலோச்சனா பேசறேன். ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாமி--"

ராதை ஒரு நிமிடம் திகைத்து மீள்வதற்குள் சுலோச்சனாவே தொடர்ந்தாள்.

"டெல்லிலேந்து இப்போத்தான் மாமா போன் பண்ணிச் சொன்னார். சந்தோஷ சமாச்சாரம் கேள்விப்பட்டு எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம், மாமி."

"ரொம்ப சந்தோஷம், சுலோச்சனா! இங்கே மாலு அக்கா--அத்திம்பேர் எல்லாரும் வந்திருக்கா! இப்பத்தான் அத்திம்பேரை விட்டுச் சொல்லச் சொல்லணுன்னு நெனைச்சிண்டே இருந்தேன். நீயே பேசிட்டே." புருஷன் எங்கே போனாலும் வீட்டு நினைவை மறக்காமல் தெரியப்படுத்த வேண்டியவர்களுக்கு செய்தியை தெரியப்படுத்திய பெருமையில்
இருந்தாள் ராதை.

"அப்படியா?.. மாலு அக்கா வந்திருக்காங்களா?"

"ஆமாம்.. அக்காவும் நானும் தான் சுபாவை அழைச்சிண்டு ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தோம். லேடி டாக்டர் சக்கரை கொடுத்து நல்ல சேதி சொன்னா. ரெண்டு மாசம் ரெண்டு வாரமாம்."

"அப்படியா, மாமி.."

"டாக்டர் யாருங்கறே?.. நம்ப கோடியாத்து சுப்புடு பொண்தான். இங்கே கொடிகட்டிப் பறக்கறா.. நல்ல கூட்டம்.. எங்களைப் பாத்ததும் உடனே வரச்சொல்லி டெஸ்ட் பண்ணி சொல்லிட்டா.. என்ன பதவிசு, பெரியவா கிட்டே என்ன மரியாதைங்கறே?.. நவராத்ரி கொலுன்னா, நம்மாத்துக்கு வந்து நின்னு நிதானிச்சு ரெண்டு கீர்த்தனை பாடி வெத்தலை பாக்கு வாங்கிண்டு போவாளே?.. பழசை எதையும் அவ மறக்கலே, சுலோ!.. இப்போ கூட அதைச் சொல்லிச் சிரிச்சா."

"ஓ, சுப்புடு பொண்ணா?.. அவ பேர்கூட.. ரேணுகா இல்லே?"

"கரெக்ட்.. அந்தப் பொண்ணு தான்.. எதுக்காக இவ்வளவும் சொல்றேன்னா.. என் மனசுலே ஒண்ணு இருக்கு.. நேர்லே சொல்றேன். நம்ம கிட்டே என்ன இருக்கு? எல்லாம் பகவான் செயல்."

"சரி, மாமி.."

"இதோ மாலு அக்கா பேசணுங்கறா."

"அப்படியா.. குடுங்கோ."

"சுலோச்சனா! நான் மாலு பேசறேன்"

"அக்கா.. நமஸ்காரம்.. அக்கா, எல்லாரும் செளக்கியம் தானே?.. டெல்லிலேந்து சம்பந்தி மாமா கூப்பிட்டு சந்தோஷ சமாச்சாரத்தைச் சொன்னார்."

"அப்படியா?.. நேத்திக்கு டாக்டர்கிட்டே போறச்சே, சுபா நாடி பிடிச்சுப் பாத்தேன்.. எனக்கே லேசாத் தெரிஞ்சிடுத்து.. இருந்தாலும் டாக்டர் சொல்றது தானே நல்லது? என்ன சொல்றே.. அவளும் நாள் கணக்கு போட்டு கரெக்டா சொல்லிட்டா.. டாக்டரும் நமக்கு வேண்டியவாளா இருந்தது, ரொம்ப ஆறுதலா இருந்தது."

""சந்தோஷம் அக்கா.. அத்திம்பேர் இருக்காறா?.. இதோ, இவர் பேசணுங்கறார்."

"சரி.. குடுக்கறேன்.. எல்லாரையும் நான் விசாரிச்சதா சொல்லுடிம்மா.. இதோ, பாருங்கோ.. உங்களைத்தானே?.. சுபா அப்பா போன்லே இருக்கார். உங்ககிட்டே பேசணுமாம்."

"இதோ வரேன்" என்று சிவராமன் போனுக்கு வந்தார்.

"நமஸ்காரம், ஸார்.. ரமணி பேசறேன்."

"ஹலோ.. ரமணி! எப்படியிருக்கே?"

"எல்லாரும் பைன் ஸார்.. சித்தமின்னாடி மாமா டெல்லிலேந்து போன் பண்ணி நல்ல சேதியைச் சொன்னார். வி ஆர் ஆல் வெரி ஹேப்பி... அடுத்த வாரம் அங்கே வர்றதா இருக்கோம்."

"வாங்கோ.. வாங்கோ.. நாங்க இன்னிக்கு ஈவினிங் பெங்களூர் கிளம்பறதா பிளான்."

"ஓ, அப்படியா?"

"பெங்களூருக்குப் போயிட்டு, அடுத்த நாளே மாலுவும், நானும் டெல்லி, காசி போறதா ஏற்பாடு."

"ஓ.. பைன்.. டெல்லி போனா மாமாவைப் பாப்பேளா?"

"பின்னே.. ஆட்சுவலி அவர் தங்கியிருக்கற இடத்துக்குத் தான் போறோம்.. டெல்லிலே ஒரு பெரிய சதஸ் நடத்த ஏற்பாடு பண்ணியிருக்கா.. ஆன் ஆப்பர்சுனிட்டி ஒன் டைம் இன் லைப்பா இருக்குமாம். கிருஷ்ணா சொன்னான். அதையும் பாத்துட்டு வரலாம்னு ஒரு ஆசை."

"பேஷா செய்யுங்கோ.. எனக்குத் தான் ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு ஏதேதோ வேலை.. காலைக் கட்டிப் போட்டிருக்கு.. எங்கேயும் சட்னு கிளம்ப முடியலே."

"அப்படித்தான் இருக்கும். என்ன செய்யறது?.. ஒவ்வொண்ணும் என்ன நம்மைக் கேட்டுண்டா நடக்கறது.. இதோ சுபா வந்திருக்கா.. பேசணும்ங்கறா.. இந்தா, குழந்தை.."

"அப்பா--" என்று பெற்றவரை அழைக்கும் பொழுது மகளின் குரல் தழுதழுத்தது. லேசாக விழிகளின் ஓரம் நீர் தேங்க ஆரம்பித்தது.

"சுபா... எப்படிம்மா இருக்கே? இதுக்கு தாம்மா காத்திருந்தோம்.. ஒடம்பைப் பாத்துக்கோ. அடுத்த வாரம் வரோம்."

"சரி அப்பா.. நீங்களும் ஒடம்பைப் பாத்துங்கோங்கோ.. அம்மா பக்கத்லே இருக்காளா?"

"ஆமா. இதோ குடுக்கறேன்."

"அம்மா---" சுபாவுக்கு குரல் தழுதழுத்துத் தொண்டைக் குழியில் ஏதோ அடைத்துக் கொண்ட மாதிரி இருந்தது.

"சுபா--"

"அம்மா! நான் அம்மாவாப் போறேன், அம்மா."

"அடிக்கண்ணு.. எவ்வளவு அழகாச் சொல்றே.. இதை நீ சொல்லிக் கேக்க எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு, தெரியுமா?.. சேதி தெரிஞ்சு இங்கே எங்களுக்கு தரைலே கால் பாவலே. என் குழந்தைக்கு ஒரு குழந்தை! நெனைச்சுப் பாக்கவே சந்தோஷமா இருக்கு, சுபா! மசக்கை ரொம்ப படுத்திடுத்தோ?"

"இல்லேம்மா.. அப்படி ஒண்ணும் அதிகமா தொந்தரவு பண்ணலே."

"ஒடம்பைப் பாத்துக்கோ.. ஜாம் ஜாம்னு மாமி தாங்குவா. எனக்குத் தெரியும். இருந்தாலும் பெத்தவளும் ஒண்ணு ரெண்டு சொல்லணும் இல்லையா? அதுக்காகச் சொல்றேன். இப்படி புக்காம் கிடைச்சதுக்கு உன்னோட தாத்தா பாட்டில்லாம் செஞ்ச புண்ணியம் தான் காரணம். தெய்வம் தான் மனுஷாள் ரூபத்லே வந்திருக்கு."

"கரெக்ட்மா."


"அம்மாங்கறது ஒரு குடும்பத்லே அற்புதமான ஸ்தானம். கடவுளே பாத்துக் கொடுக்கறது; கொடுத்த கொடைக்கு குந்தகம் விளைவிக்காம, பெற்ற ஸ்தானத்திற்கு பங்கம் ஏற்படாம, கட்டிக் காப்பாத்தி எடுத்துக்காட்டா வாழ்ந்து காட்டணும்மா. எல்லாம் நல்லபடி நடக்கும். நம்ம கையிலே ஒண்ணும் இல்லே. பகவான் இருக்கான். பாரத்தை அவங்கிட்டே சேத்துடு. அவன் காப்பாத்துவான்."

"சரி, அம்மா--"

"எதுக்கு இவ்வளவும் சொல்றேன்னா, ஒரு நல்ல அம்மாவாலே தான் இன்னொரு நல்ல அம்மாவை உருவாக்க முடியும். அதுக்குத்தான் இந்த ஜென்மம் கிடைச்சிருக்கங்கற நெனைப்பு எந்நேரமும் உன் மனசிலே இருக்கணும், தெரிஞ்சதா?"

"சரி. அம்மா."

"நானும் அப்பாவும் அடுத்த வாரம் அங்கே வர்றோம்."

சந்தோஷத்துடன், "சரி, அம்மா" என்றாள் சுபா.

"மாமி பக்கத்லே இருக்காங்களா?.. போனைக்கொடு. சொல்லிக்கணும்" என்றாள் சுலோச்சனா.

"அம்மா--" என்று ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த மாமியாரை விளித்தாள் சுபா. "அம்மா உங்ககிட்டே பேசணுமாம்" என்று போனைக் கொடுத்தாள்.

இரண்டு அம்மா அழைப்புகளுக்கும் அவள் குரலில் கொஞ்சம் கூட வித்தியாசமில்லாமல் இயல்பாய் இருந்தது.

(தேடல் தொடரும்)

6 comments:

Kavinaya said...

//அம்மாங்கறது ஒரு குடும்பத்லே அற்புதமான ஸ்தானம். கடவுளே பாத்துக் கொடுக்கறது; கொடுத்த கொடைக்கு குந்தகம் விளைவிக்காம, பெற்ற ஸ்தானத்திற்கு பங்கம் ஏற்படாம, கட்டிக் காப்பாத்தி எடுத்துக்காட்டா வாழ்ந்து காட்டணும்மா. எல்லாம் நல்லபடி நடக்கும். நம்ம கையிலே ஒண்ணும் இல்லே. பகவான் இருக்கான். பாரத்தை அவங்கிட்டே சேத்துடு. அவன் காப்பாத்துவான்//

கடமையைச் செய்வது என்பதை ரொம்ப அழகா சொன்னீங்க ஐயா.

//இரண்டு அம்மா அழைப்புகளுக்கும் அவள் குரலில் கொஞ்சம் கூட வித்தியாசமில்லாமல் இயல்பாய் இருந்தது.//

இதுவும். ஒரு வரிக்குள் எத்தனை செய்திகளை அடக்கி விட்டீர்கள் :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

குடும்பம் எனும் நந்தவனத்தில் ஒவ்வொரு பூவிற்கும் உண்டான தனித்தனி அக்கறையே அந்த நந்தவனம் பூத்துக்குலங்குவதற்கான பின்ணணி. அதை மிக அழகாகவும் வாத்சல்யோத்தோடும் சொல்லியிருக்கீங்க ஜீவி நன்றி.

ஜீவி said...

கவிநயா said...

//கடமையைச் செய்வது என்பதை ரொம்ப அழகா சொன்னீங்க ஐயா.//

கண்ணன் சொன்னதை வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொண்டால்,
அவன் அருளால் குடும்பத்தில் இன்பம்
பூத்துக் குலுங்கும் என்பது உண்மைதான். பாராட்டுக்களுக்கு
மிக்க நன்றி, கவிநயா!

//இதுவும். ஒரு வரிக்குள் எத்தனை செய்திகளை அடக்கி விட்டீர்கள் :)//

உணர்வு பூர்வமான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி, கவிநயா!

ஜீவி said...

கிருத்திகா said...
//குடும்பம் எனும் நந்தவனத்தில் ஒவ்வொரு பூவிற்கும் உண்டான தனித்தனி அக்கறையே அந்த நந்தவனம் பூத்துக்குலங்குவதற்கான பின்ணணி. அதை மிக அழகாகவும் வாத்சல்யோத்தோடும் சொல்லியிருக்கீங்க ஜீவி நன்றி.//

கவிநயா அவர்களின் பின்னூட்டத்திற்கு
'குடும்பத்தில் இன்பம் பூத்துக் குலுங்கும்' என்று மறுமொழி அளித்து விட்டு வந்தால், என்ன ஆச்சரியம்,
உங்களது பின்னூட்டத்திலும் அதே
மாதிரி சொற்றொடர்கள்! குடும்பத்தை நந்தவனத்திற்கு ஒப்பிட்டு அது பூத்துக் குலுங்க வழி சொல்லியிருக்கிறீர்கள்.

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி, கிருத்திகா!

Shakthiprabha (Prabha Sridhar) said...

ஆத்மார்த்தமான நல்ல சம்பாஷணைகளை படிக்கறதே சந்தோஷம் தான்.

ஜீவி said...

Shakthiprabha said...
//ஆத்மார்த்தமான நல்ல சம்பாஷணைகளை படிக்கறதே சந்தோஷம் தான்.//

'ஆத்மாத்தார்த்தமான'--இந்த தேடலின் இறுதிநிலையே இதுதானே?..
உங்களின் உணர்வின் மூலமாக இன்னொரு தகவலும் கிடைக்கப்
பெற்றேன். 'ஆதமா'வுடன் கலந்ததான அனுபவிக்கும் உணர்வுகளெல்லாம் நிச்சயம் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பது தான் அது.. மேலும் தேடலைத் தொடர்கையில் இந்தத் தகவல் மிகவும் உதவியாக இருக்கும்.

கருத்துக்கு மிக்க நன்றி, சக்திபிரபா!

Related Posts with Thumbnails