மின் நூல்

Thursday, March 26, 2009

ஆத்மாவைத் தேடி....38

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....


38. தேடி வந்த செல்வம்

ந்த அலுமினியப் பறவையின் வயிற்றுப் பாகத்தின் இடது கோடியில் சிவராமனுக்கும், மாலுவுக்கும் ஸீட் குறிக்கப்பட்டிருந்தது.

பெங்களூர் டு டெல்லி. உத்தியோகத்தில் இருந்த பொழுது வேலை நிமித்தமாக அவர் பல தடவை பறந்த ரூட்! அப்பொழுதெல்லாம் இருந்த பரபரப்பு இப்போது இல்லை. சப்தப்படாமல் பொங்கிய பால் பாத்திரத்தின் விளிம்புக்கு வந்ததும், பட்டென்று தீ அணைந்த சடுதியில் பொங்கலை நிறுத்திக் கொண்டு பரந்து அடங்கிய அமைதி.

அந்த வயசில், அந்த பரபரப்பில் ஒரு இன்பம் இருந்தது. சாதிக்க வேண்டு மென்கிற வெறி இருந்தது. சின்ன வயசில் வீடு வீடாக பேப்பர் போடும் பொழுதும் வெளிக்கு தெரியாமல் இந்த வெறி உள்ளுக்குள் கனிந்து கொண்டிருந்தது. உள்ளுக்குள் இருந்ததை ஊதி ஊதிப் பெரிதாக்கியது அவரது சலியாத உழைப்பே. ஒரு பொறியாளர் ஆக வேண்டுமென்கிற இளம் வயது ஆசையை அந்த உழைப்பு தான் சாதித்துக் காட்டியது.

பி.எஸ்ஸிக்குப் பிறகு மேற்படிப்பு போகாமல், கடலலை போல் ஓடி வந்து காலைச் சுற்றிக்கொண்ட வேலையில் சிவராமன் அமர்ந்தான். சேலம் நகரத்து சந்தடிகளிலிருந்து விலகி டவுனிலிருந்து சூரமங்கலம் போகும் வழியில் பிர்மண்டமாக எழும்பியிருந்த ஒரு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பாளர் வேலை. வெறும் படிப்பு என்றில்லாமல் வேலை+படிப்பு என்று மாறிப் போன காலம் அது.

ராமசுப்பு சாஸ்திரிகளுக்கும் முந்தி மாதிரி இப்பொழுது அலைய முடிய வில்லை. கண்பார்வை வேறு சற்று குறைபட்டு குறுக்கே நின்றது. இன்னொரு மாடாய் குடும்பப் பாரத்தை இழுக்க சிவராமனின் சம்பாத்தியமும் தேவையாயிருந்த நேரம் அது.


அந்த நட்சத்திர ஓட்டலில் அடிக்கடி சினிமா சம்பந்தப்பட்டவர்கள் வந்து தங்குவார்கள். மார்டன் தியேட்டர்ஸும், ஏற்காடு மலையின் ஷூட்டிங் ஸ்பாட்டுகளும் தாம் காரணம். அவன் வேலையில் வேண்டிய மட்டும் பொழுது போக்கிற்கும் கனவுத் தொழிற்சாலையின் திடீர் ஆசைகளுக்கும் நிறையவே இடமிருந்தது.

ஆனால் எந்த வலையிலும் சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக சிவராமன் மீண்டு வந்தது தான் பெரிய கதை. பொறியாளர் ஆக வேண்டுமென்ற சிந்தனையே மூளையின் மொத்த செல்களிலும் வியாபித்திருந்ததால், மற்ற இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளாமல், குதிரைக்கு பட்டை போட்ட மாதிரி ஓட்டல் வேலை, மற்ற நேரங்களில் படிப்பு என்பதே சிவராமனின்
வேலையாயிற்று.

ஓட்டலில் தங்கியிருந்த ஒரு இன்ஜினியர் சொல்லித்தான் அவனுக்கு ஏ.எம்.ஐ.இ. படிப்பு பற்றித் தெரியவந்தது. 'நான் இந்த படிப்பு படித்து விட்டு தான் இப்பொழுது டிராம்வேயில் பொறியாளராக இருக்கிறேன்' என்றார் அவர்.
சிவராமன் மனசிலும் தானும் ஏ.எம்.ஐ.இ. படிக்க வேண்டுமென்கிற ஆசை துளிர்விட்டது. வேலைக்கும் சென்று வரலாம்--படிப்பும் படித்துக் கொள்ளலாம் என்கிற வசதி அவனுக்குப் பிடித்திருந்தது. சாட்டர்டு இன்ஜினியர் என்று பட்டம் தருவார்களாம். பி.ஈ.க்கு சமமானதாம்.

அடுத்த வாரமே சென்னை சென்று AMIE படிப்புக்காக விண்ணப்பம் வாங்கி பதிவு செய்து கொண்டான். சென்னை சென்றதில் நிறைய மேலதிக தகவல்கள் கிடைத்தன. நாலு வருட இந்த படிப்புக்கு அரியர்ஸ் வைத்து விட்டால் ஆபத்து; அப்புறம் ஆயுசு பூராவும் படித்துக் கொண்டிருக்க வேண்டியது தான். தனிப்பட்ட விரிவுரையாளர்களிடம் 'கோச்சிங்' கிளாஸ் சென்றால் தட்டுத்
தடுமாறி தேறி விடலாம். கடுமையான பாடதிட்ட சுழலில் மாட்டிக் கொண்டால் கடுமையான உழைப்பு தேவை என்று ஆளாளுக்கு நிறைய
ஆலோசனைகள் சொன்னார்கள்.

சவால்களை புன்முறுவலுடன் ஏற்றுக் கொளவது என்கிற முடிவுக்கு சிவராமன் வந்த பொழுது IETE என்று இதேமாதிரி இன்னொரு
படிப்பும் இருப்பது தெரிய வந்தது. நெருக்கமான இன்னொரு நண்பனுடன் அந்த சென்டருக்கும் சென்று விசாரித்தான். ஏ.எம்.ஐ.இ--க்கு கொல்கத்தா என்றால், இதற்கு தில்லி தலைமையகம். தொலைத்தொடர்பு தொடர்பான பொறியாளர் படிப்பு என்று தெரிந்தது. நண்பனும் இவனும் இந்த படிப்பிற்கும்
பணம் கட்டி பதிவு செய்து கொண்டு விட்டனர்.

அடுத்தது சேலத்தில் இருந்தால் வேலைக்கு ஆகாது, சென்னையில் வேலை தேட வேண்டும் என்கிற நிலை. பெற்றோர் செய்த புண்ணியம் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பும் வீட்டு வாசல் கதவைத் தட்டியது. அதே வேலை; ஆனால் அதிக சம்பளம். சம்பளத்திற்கு ஏற்ற மாதிரி இந்த ஐந்து நட்சத்திர ஓட்டலும் சென்னையின் மத்திய பகுதியில் பிர்மாண்டமாக நிமிர்ந்து நின்றது. நடக்கிற காரியங்களின் வேகத்தைப் பார்த்து அவனுக்கே பிரமிப்பாக இருந்தது. கடைசியில் கால நேரம் வந்தால் தரதரவென்று கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் என்கிற முடிவுக்குத்தான் சிவராமனால் வர முடிந்தது.

மாம்பலத்தில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பக்கத்தில் ஒரு ஒண்டு குடித்தனம். சேலத்தை விட்டு வருவது சங்கடமாக இருந்தாலும், பையனின் எதிர்காலம் தான் முக்கியம் என்று பெற்றோர் மனமுவந்து வந்தனர். வந்த ஓரிரு வாரங்களிலேயே சாஸ்திரிகளுக்கும் மாம்பல சூழ்நிலை மனசுக்கு மிகவும் பிடித்துப் போய் நல்லதொரு இடத்திற்கு கொண்டு வந்து விட்ட
இறைவனுக்கு நன்றி சொன்னார்.

"என்னன்னா.. அப்படி என்ன யோசனை... சீட் பெல்ட் கட்டிக்கச் சொல்லி காஷன் வந்தாச்சு பாருங்கள்.."

"ஓ.. " என்று மாலுவைப் பார்த்து லேசாகச் சிரித்தார் சிவராமன்.

(தேடல் தொடரும்)

11 comments:

Kavinaya said...

//கடைசியில் கால நேரம் வந்தால் தரதரவென்று கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் என்கிற முடிவுக்குத்தான் சிவராமனால் வர முடிந்தது.//

சிவராமன் அவர்களின் நினைவுகளோடு எங்களையும் தரதரவென்று இழுத்துச் சென்று விட்டது உங்கள் நடை. அப்புறம்?

ஜீவி said...

கவிநயா said...
//கடைசியில் கால நேரம் வந்தால் தரதரவென்று கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் என்கிற முடிவுக்குத்தான் சிவராமனால் வர முடிந்தது.//

//சிவராமன் அவர்களின் நினைவுகளோடு எங்களையும் தரதரவென்று இழுத்துச் சென்று விட்டது உங்கள் நடை. அப்புறம்?//

அப்புறம் நிறைய சுவாரஸ்யங்கள்.
வாழ்க்கையின் எந்த மாற்றங்களும் நமக்குச் சொல்லி விட்டு வருவதில்லை அல்லவா?.. வாழ்க்கையின் ரசனைக்கே இந்த ஏற்பாடுதான் ஈடுபாட்டையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது என்று நினைக்கிறேன். வருகைக்கும், ரசிப்பிற்கும் நன்றி, கவிநயா!

Shakthiprabha (Prabha Sridhar) said...

ஜீவீ,

பதிவை இட்டு முடித்தவுடன் "அனுப்பு" என்ற button சுட்டுங்கள். தமிழ்மணத்தில் பதிவு சேர்க்கப்பட்டால் மேலும் சிலர் படித்து பயன் பெறலாம். இது போன்ற நல்ல பதிவுகள் அதிகம் பேர் படித்து மகிழவேண்டிய ஒன்று.

//அந்த அலுமினியப் பறவையின் வயிற்றுப் பாகத்தின் இடது கோடியில் சிவராமனுக்கும், மாலுவுக்கும் ஸீட் குறிக்கப்பட்டிருந்தது. //

அழகான உவமை.

//சப்தப்படாமல் பொங்கிய பால் பாத்திரத்தின் விளிம்புக்கு வந்ததும், பட்டென்று தீ அணைந்த சடுதியில் பொங்கலை நிறுத்திக் கொண்டு பரந்து அடங்கிய அமைதி.//

ஜீவராசிகளினுள் ஆசைத்தீ எரியும் வரைதான் அலைக்கழிக்கப்படும் இருப்புநிலை. கொந்தளிக்கும் இயல்பு. ஆசைத் தீ அணைந்த அடுத்த நொடி பேரமைதி. அது தான் இயல்பு நிலையும். பாலை அணைப்பது போல் நம்முள் எரியும் தீயை அணைப்பது சுலபமாக இருப்பதில்லை. மிகவும் பொருத்தமான comparison.


//ஆனால் எந்த வலையிலும் சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக சிவராமன் மீண்டு வந்தது தான் பெரிய கதை. //

:)

ஜீவி said...

Shakthiprabha said...
ஜீவீ,

பதிவை இட்டு முடித்தவுடன் "அனுப்பு" என்ற button சுட்டுங்கள். தமிழ்மணத்தில் பதிவு சேர்க்கப்பட்டால் மேலும் சிலர் படித்து பயன் பெறலாம். இது போன்ற நல்ல பதிவுகள் அதிகம் பேர் படித்து மகிழவேண்டிய ஒன்று.

//அந்த அலுமினியப் பறவையின் வயிற்றுப் பாகத்தின் இடது கோடியில் சிவராமனுக்கும், மாலுவுக்கும் ஸீட் குறிக்கப்பட்டிருந்தது. //

//அழகான உவமை.//

இந்தத் தொடர் தவிர்த்து (அதுவும் நாலைந்து அத்தியாயங்களுக்குப் பிறகு தான்) எனது எல்லா பதிவுகளையும் நீங்கள் குறிப்பிட்டபடிதான் அனுப்புவது வழக்கம்.

தமிழ்மணமும் நாம் அனுப்பா விட்டாலும் தானாகத் திரட்டிக் கொள்கிறது என்று நினைக்கிறேன்.
இது ஒரு சுயதேடல் பகுதி என்பதினால் ஒத்த கருத்துள்ளோரிடம் கலந்து பரிமாறிக் கொண்டு அவர்களின் அபிப்ராயங்களை, அடித்தல் திருத்தல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்பதும் எண்ணம்.

பின்னால் புத்தகமாக வருகையில்
வெகுஜன வெள்ளோட்டம் கிடைக்கும். பதிவு குறித்த தங்கள் பரிந்துரைக்கும் ஆழ்ந்த ரசனைக்கும் மிக்க நன்றி, சக்தி பிரபா!

ஜீவி said...

Shakthiprabha said...

//சப்தப்படாமல் பொங்கிய பால் பாத்திரத்தின் விளிம்புக்கு வந்ததும், பட்டென்று தீ அணைந்த சடுதியில் பொங்கலை நிறுத்திக் கொண்டு பரந்து அடங்கிய அமைதி.//

ஜீவராசிகளினுள் ஆசைத்தீ எரியும் வரைதான் அலைக்கழிக்கப்படும் இருப்புநிலை. கொந்தளிக்கும் இயல்பு. ஆசைத் தீ அணைந்த அடுத்த நொடி பேரமைதி. அது தான் இயல்பு நிலையும். பாலை அணைப்பது போல் நம்முள் எரியும் தீயை அணைப்பது சுலபமாக இருப்பதில்லை. மிகவும் பொருத்தமான comparison.

ஆசைத்தீ அடுத்தடுத்து ஆசைப்பட்டு பற்றிக் கொள்ளும் இயல்பு படைத்தது. தடுத்தாட்கொள்ளும் இயல்பு இயல்பாக வரும் வரை சிரமப்படுத்துதல் சகஜம் தான்.
பிறர்க்கும் தனக்கும் துன்பம் விளைவிக்காத நியாயமான ஆசைகள்
சுயமுன்னேற்றத்தை வளர்க்கும் என்பதும் அடிப்படையாக இருக்கிறது.
தொடர்புகளை மனசில் பொருத்திப் பார்த்து பாராட்டியமைக்கும் நன்றி, சக்திபிரபா!

ஜீவி said...

//ஆனால் எந்த வலையிலும் சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக சிவராமன் மீண்டு வந்தது தான் பெரிய கதை. //

//:)//


பூர்வஜன்மப் புண்ணியம் என்று சொல்வார்கள். அல்லது அது நம்மை ஈன்றெடுத்த தாய், தந்தையர் செய்த புண்ணியமாகவும் இருக்கலாம்.
எப்பொழுது இன்பம் இருக்கிறதோ அதற்கடுத்த பக்கமாக துன்பமும் இருக்கிறது. அதே போல் துன்பம் இருப்பதால் தான் இன்பத்தின் மேன்மையும் நெஞ்சில் உறைக்கிறது.
துன்பத்தின் நிழல் படுகிற பொழுதே
அது அண்ட தயங்கி நீங்குகிற பாக்கியம் சிலருக்குத் தான் வாய்க்கவும் செய்கிறது. இதெல்லாம் ஏன் எதனால் என்பது யோசனைக்குரிய ஒன்று.
நன்றி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

எனக்கும் ஒரு காலத்தில் ஏ.எம்.ஐ.ஈ மீது பெரும் கனவு இருந்தது.. முதல் 4 பேப்பரோடு போய்விட்டது....அதற்கு மேல் தொடர முடியவில்லை... முதல் குழந்தை.. நெருக்கிப்பிடிக்கும் வேலை..அந்தப்படிப்பிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத துறையில் வேலை.. போன்ற காரணங்களால் படிப்பு நின்றுபோனது...இதையெல்லாம் ஞாபகப்படுத்திவிட்டது தங்கள் பதிவு....

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

கிருத்திகா said...
//எனக்கும் ஒரு காலத்தில் ஏ.எம்.ஐ.ஈ மீது பெரும் கனவு இருந்தது.. முதல் 4 பேப்பரோடு போய்விட்டது....அதற்கு மேல் தொடர முடியவில்லை..//

அப்படியா! நீங்களும் முயற்சி செய்திருக்கிறீர்கள் என்பது குறித்து சந்தோஷம். வருகைக்கு மிக்க நன்றி, கிருத்திகா!

dondu(#11168674346665545885) said...

//கடைசியில் கால நேரம் வந்தால் தரதரவென்று கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் என்கிற முடிவுக்குத்தான் சிவராமனால் வர முடிந்தது.//

நான் தில்லியிலிருந்து சென்னைக்கு நிரந்தரமாக திரும்ப முடிவு எடுத்ததும் எல்லா நிகழ்வுகளும் அதை நோக்கியே நூல்பிடி கணக்காய் நகர்ந்ததுதான் நினைவுக்கு வருகிறது.

பார்க்க http://dondu.blogspot.com/2008/05/blog-post_24.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜீவி said...

dondu(#11168674346665545885) said...
//கடைசியில் கால நேரம் வந்தால் தரதரவென்று கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் என்கிற முடிவுக்குத்தான் சிவராமனால் வர முடிந்தது.//

//நான் தில்லியிலிருந்து சென்னைக்கு நிரந்தரமாக திரும்ப முடிவு எடுத்ததும் எல்லா நிகழ்வுகளும் அதை நோக்கியே நூல்பிடி கணக்காய் நகர்ந்ததுதான் நினைவுக்கு வருகிறது.//

படிக்க வெகு சுவாரஸ்யமாக இருந்தது.

Related Posts with Thumbnails