4. அந்த அனுபவமே நான் என்றான்
கோயில் சிற்பக்கலை ஆராய்ச்சியாளர் சித்திரசேனன் எழுந்ததும், இவர் என்ன கேட்கப்போகிறாரோ என்கிற ஆவலில் அம்ர்ந்திருந்த கூட்டமே அவர் பக்கம் திரும்பியது.
"வணக்கம், ஐயா..." என்று ஆரம்பித்தார் சித்திரசேனன். "மனம் மூளையோடு தொடர்பு கொண்டுள்ளதாக, மூளையின் வழியாகத்தான் மனம், உடல் உறுப்புகளோடு தொடர்பு கொள்வதாகச் சொன்னீர்கள்.. விஞ்ஞானம், மூளையில் படிந்துள்ள நியூரோன்களின் செயல்களாக மனம் இருக்கலாம் என்று சொல்கிறது. கிட்டத்தட்ட இந்த இரண்டு செயல்பாட்டு வகைகளும் ஒன்று போலத்தானே தெரிகிறது?.. அதாவது, சுலபமாக்ப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், அரூப மனத்தின் உருவத் தோற்றம்தான் நியூரோன்களோ?..... அப்படிப்பார்த்தால், விஞ்ஞானக்கூற்றுப்படி மனம் என்கிற ஒன்றை நிரூபித்து விட்ட மாதிரித் தெரிகிறதே?" என்று லேசாகப் புன்முறுவலுடன் சித்திரசேனன் சொல்லி முடிக்கையில் அவையே நிசப்தமாயிற்று.
"ஒண்டர்புல்.. அருமையான சந்தேகம். நானும் ஆரம்பத்தில் அப்படிப்பட்ட ஒரு முடிவுக்குத்தான் வந்தேன்" என்று சொல்லி மேலும் தொடர்வதற்குள் மேசையில் வைத்திருந்த நீர்குவளையை எடுத்து கொஞ்சம் தண்ணீர் அருந்தினார் மேகநாதன். "நல்லது. இப்பொழுது உடற்கூறு விஞ்ஞானம் என்ன நினைக்கிறது என்று பார்க்கலாம்---" என்று இருகைகளையும் பரக்க விரித்தார். "இன்று மதியம் உடல்கூறு அறிஞர் உலகநாதன் அவர்களிடம் மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி நிறைய பாடம் கேட்டேன். அதன் அடிப்படையில் நான் சிந்தித்தவற்றைச் சொல்கிறேன்" என்ற பீடிகையுடன் தொடர்ந்தார்.
"மூளை என்பது ரொம்பவும் சிக்கலான சர்க்யூட் அமைப்பு. கோடிக்கணக்கான நரம்பு செல்களால் நேர்த்தியாக பின்னப்பட்டது. கணக்குப்போட்டு கிட்டதட்ட இருபது டிரில்லியன் செல்கள் இருக்கும் என்கிறார்கள்; ஒன்றரை கிலோ வெயிட். இன்ன காரியத்திற்கு இன்ன இடம் என்று ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி டிபார்ட்மெண்டுகளாக பிரிக்கப்பட்ட அதிசய சதைக்கோளம் மூளை. ஒவ்வொரு செயலுக்கு மட்டுமல்ல, வந்து சேர்ந்து வெளிப்பட்ட ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு பகுதி உண்டு. தானியங்கி நரம்பு மண்டலத்தின் துணைகொண்டு மூளை உடல் உறுப்புகளைச் செயலாக்க வைக்கிறது. மூளையை செயல்படுத்த வைப்பது எது என்பது தான் ஆதாரமான கேள்வி" இன்னொரு மடக்கு நீரை குவளையிலிருந்து எடுத்து அருந்தினார் மேகநாதன்.
அவையினர் அத்தனை பேரும் வேறு சிந்தனையின்றி அவரைப் பார்த்துக் கொண்டிருக்கத் தொடர்ந்தார் மேகநாதன். "உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம். ஒரு மனிதனை கோபம், வெறுப்பு, விரக்தி என்று பல்வேறு உணர்வுகளுக்கு ஆட்படுத்த விட்டு, பிரத்யேக FMRI ஸ்கேன் மூலம் அந்தந்த உணர்வுகளின் போது அந்த மனிதனின் மூளையின் செரிப்ரல் கார்டெக்ஸ் பிரதேசத்தில் எந்தப்பகுதியில் அதிக ரத்தம் பாய்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள்.
அதாவது ஆத்திரம் என்றால் இந்தப்பகுதி, ஆச்சரியம் என்றால் இந்தப்பகுதி என்று ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிகளுக்கு இரத்தம் அதிவேகத்தில் விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு உணர்வுக்கும் ஒவ்வொரு பகுதி என்று கண்டுபிடித்து விட்டதால், எதுக்கெடுத்தாலும் கோபப்படும் கோப உணர்வே அதிகம் உள்ள ஒருவருக்கு அந்த உணர்வுக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் மட்டும் ரத்த சப்ளை அடிக்கடி நடக்கும். சந்தோஷமே படத்தெரியாத உம்மணாம் மூஞ்சி ஒருவனுக்கு அந்தப்பகுதியில் இரத்த சப்ளை ஸீரோ.
இதுதான் விஷயம்.
"சோகம், விரக்தி, தன்னிரக்கம் என்பதான உணர்வுகளையும் செரிப்ரல் கார்டெக்ஸ் பகுதி இரத்த சப்ளையையும் நினைத்தால் பகீரென்கிறது. சரிவிகித சம உணவில் கவனம் செலுத்துகிற மாதிரி தான் இதுவும். மூளையின் எல்லாப் பகுதிகளுக்கும் சீரான ரத்தசப்ளை இருப்பதே நல்ல ஆரோக்கியத்திற்கு அறிகுறி. ஒன்றில் அதிகம், ஒன்றில் குறைவு, ஒன்றில் இல்லவே இல்லை என்பது உடற்கோளாறுகளை உற்பத்தி செய்யும் என்று தெரிகிறது.
"இன்னொன்றும் தெரிகிறது. எல்லா உணர்வுகளையும் துய்ப்பது மனம் தான். எல்லா உணர்வுகளுக்கும் தாய்வீடு அதுதான். ஆக, மனசை பக்குவமாக, ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மூளையின் கார்டெக்ஸ் பகுதியே நம் கைவசம் இருக்கிறமாதிரி. 'கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது, பார்' என்று நாமக்கல்லார் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. கத்தியின்றி, ரத்த சேதமின்றி, மருத்துவர் இன்றி, மனத்தின் மேன்மையால் மேனி ஆளலாம். நீயோரான்கள் தாம் மனமா என்பதை விட மூளையில் கத்திபடக்கூடாத பகுதிகளையெல்லாம் நாம் வெளியிலிருந்தே இயக்கி ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது ரொம்பவும் ஆறுதலான சமாச்சாரம்.
"கோபம், சோகம் போன்ற உணர்வுகளுக்கெல்லாம் காரணமாய் இருப்பவை வெளியுலக நிகழ்ச்சிகள். அதாவது வெளியுலக நிகழ்ச்சிகளை நாம் உள்வாங்கிக் கொள்ளும் விதத்தின் வெளிப்பாடு. இந்த நிகழ்ச்சிகளை அனுபவிப்பதின் அடிப்படையில் கார்க்டெக்ஸ் பகுதியில் ரத்த சப்ளை தீர்மானிக்கப்படுகிறது. வெளியுலக நிகழ்ச்சிகள் நம்மிடம் ஏற்படுத்தும் தாக்கம், கார்டெக்ஸ் பகுதியில் இரத்தசப்ளை--- இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையிலான 'அனுபவிப்பை' வசதியாக மறந்துவிடுகிறோம். வெளியுலக நிகழ்ச்சிகளின் அனுபவத்தின் அனுபவிப்பை அனுபவிப்பது தான் மனம். அந்த அனுபவிப்பின் வெளிப்பாடு தான் கார்டெக்ஸ் பகுதியில் ரத்தசப்ளையான உடலியக்க செயல்பாடுகள். கோபம் வந்தால் உடல் படபடத்து முகம் சிவக்கக் கத்துவது, சோகம் எனில் தொய்ந்து போய்த் தளர்வது போலான செயல்பாடுகள்.
ஆக, கார்டெக்ஸ் பகுதியின் அதிவேக ரத்தப்பாய்ச்சலுக்குக் காரணத்தைச் சொல்லாமல், ரத்த சப்ளை நடக்கிறது என்று மட்டும் சொல்வது பாதி சமாச்சாரம். மனத்தின் அனுபவத்தின் வெளிப்பாடாய் உணர்வுகள் எழுந்து செயல்பாட்டுக்காக ரத்த விநியோகம் நடக்கிறது என்பது முழுமையான தகவல்.
"இங்கு தான் மனவியல் வைத்தியம் வருகிறது. அனுபவிக்கும் உணர்வுகள் தாம் உடலின் ஆரோக்கிய செழுமைக்கும் அல்லது அதன் சீர்கேட்டிற்கும் காரணாமாகிப் போகிறது என்று ஆனபின், 'கண்களை விற்று சித்திரம் கொள்வாரோ, தோழி' என்று கேட்கத்தான் தோன்றுகிறது.
உரையை முடிக்கிற பாவனையில் இருந்த மேகநாதன், அவையை ஒருமுறை சுற்றி நோக்கி விட்டு,"இவ்வளவையும் சொல்லிவிட்டு நியூரோன்களைப் பற்றி சொல்லவில்லை என்றால் பாவம்" என்று சொல்லி லேசாகச் சிரித்தார். "மின் வேதியியல்---Electro Chemical---அடிப்படையில் மூளை இயங்குவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில், மூளையிலுள்ள நியூரோன்களில் ரசாயன மின் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த வேதியியல் மின்மாற்றம் தான் மனமோ என்கிற சந்தேகம் இருக்கிறது. ஆனால் பொதுவாக நான் புரிந்து கொண்ட அளவில், அனுபவத்தைப் பெறுவது மனம் தான் என்பதால், அனுபவம் என்றால் என்னவென்று அறிவியல அறிஞர்கள் சொல்லியிருப்பதைப் பற்றி யோசித்தேன். மூளையின் நியூரோன்கள் இணைப்பில் மாலிக்யுலர் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் அந்த மாற்றங்களே அனுபவம் என்று நாம் உணர்வதாக இருக்கலாம் என்கிறார்கள்.
"கொஞ்சம் என்ன, நிறையவே தலை சுற்றுகிற சமாச்சாரம் தான் இது. இருந்தாலும், கவியரசர் கண்ணதாசன் சொன்னது நன்றாகவே புரிகிற மாதிரி இருக்கிறது: கடவுளை "நீ யார்?.. நீ யார்?.." என்று தொடர்ச்சியாகக் கேட்டுவிட்டு, கடைசியில் "அந்த அனுபவமே நான் தான் என்றான்" என்று கவியரசர் முடிக்கையில்--- இது, புரிவது மட்டுமல்ல நிறைய புரிதலையும் ஏற்படுத்துகிறது.."
கைக்குட்டை எடுத்து நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்ட மனவியல் அறிஞர் மேகநாதன் அடுத்த வினாவை எதிர்நோக்கி மைக்கை சரிசெய்து கொண்டார்.
(தேடல் தொடரும்)
3 comments:
ரத்த சப்ளை ஜீரோவாக எங்குமே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்த பகுதி இறந்துவிடும்.
நீங்கள் குறிப்பிடுகிற ஆராய்ச்சிகளில் தெரிகிற விஷயம் என்ன வென்றால் ரத்த ஓட்டம் ஒரே மாதிரி இருப்பதில்லை. இது சரிதானே? பசித்தால் சாப்பிடுகிறோம். அதிகம் பசித்தால் அதிகம் சாப்பிடுவோம். குறைவாக பசித்தால் குறைவாக சாப்பிடுவோம். என் பிஜி பரிட்சை போது நாளுக்கு 9 மணி நேரம் தூங்கினேன். ஏன்? மீதி நேரத்தில் 13 மணி நேரம் படித்தேன். அதனால்தான்.
சோதனைகள் எங்கு பிராணவாயு உட்கொள்ளல் அதிகம் இருக்கு, ரத்த ஓட்டம் வழக்கத்தைவிட அதிகமா அந்த சமயத்திலே இருக்குன்னுதான் காட்டும்.
இதை வைத்துதான் கோபம் வரும்போது எங்கே பாதிப்பு அதிகம் இருக்கு என்கிறதுகளை கண்டுபிடிக்கிறார்கள்.
எலும்பு சதை போல ந்யூரான் இல்லை.
ந்யூரான் செத்து போனா போனதுதான். திருப்பி வளர்ந்து ஈடு கட்டுவதில்லை.
இதுவே பதிவு போல நீளமா போயிடும் போல இருக்கு. அதனால நிறுத்திக்கிறேன்.
திவா said...
//நீங்கள் குறிப்பிடுகிற ஆராய்ச்சிகளில் தெரிகிற விஷயம் என்ன வென்றால் ரத்த ஓட்டம் ஒரே மாதிரி இருப்பதில்லை. இது சரிதானே? பசித்தால் சாப்பிடுகிறோம். அதிகம் பசித்தால் அதிகம் சாப்பிடுவோம். குறைவாக பசித்தால் குறைவாக சாப்பிடுவோம். என் பிஜி பரிட்சை போது நாளுக்கு 9 மணி நேரம் தூங்கினேன். ஏன்? மீதி நேரத்தில் 13 மணி நேரம் படித்தேன். அதனால்தான்.
எலும்பு சதை போல ந்யூரான் இல்லை.
ந்யூரான் செத்து போனா போனதுதான். திருப்பி வளர்ந்து ஈடு கட்டுவதில்லை.
இதுவே பதிவு போல நீளமா போயிடும் போல இருக்கு. அதனால நிறுத்திக்கிறேன்.//
அதிகம் சாப்பிட்டால் அதிக இரத்த ஓட்டம், குறைவாகச் சாப்பிட்டால் குறைவான இரத்த ஓட்டம் என்றில்லை. சாப்பிடாவிட்டால் இரத்த ஓட்டமே இல்லை என்றும் அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடாது.
'ஜீரோ' என்று போட்ட அந்த ஆங்கில வார்த்தையால் தான் வந்தது அனர்த்தம். ஒருவித தீவிரத்தைத் தெரியப்படுத்தப் போட்ட வார்த்தையை நேரிடையாக அர்த்தம் கொள்ளலாகாது.
சந்தோஷப்படும் பொழுது, சிரித்துக் களிக்கும் பொழுது எல்லா இடங்களிலும் சீரான இரத்த ஓட்டம்--இதை 'நல்ல' இரத்த ஓட்டம் என்று சொல்லலாமா--(இநத'நல்ல'தை 'ஆரோக்கியமாக' என்று அர்த்தம் கொண்டாலும் சரி).
இருக்கும்.
இன்னொன்று. சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்றின் அடிப்படையில் மூளை செல்கள் செத்துப் போனால் போனது தான், போனால் போனது தான்; இனி வளர்ச்சி இல்லை என்று நினைத்திருந்த கருத்தும் தப்பு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
வருகைக்கு நன்றி.
//"இங்கு தான் மனவியல் வைத்தியம் வருகிறது. அனுபவிக்கும் உணர்வுகள் தாம் உடலின் ஆரோக்கிய செழுமைக்கும் அல்லது அதன் சீர்கேட்டிற்கும் காரணாமாகிப் போகிறது என்று ஆனபின், 'கண்களை விற்று சித்திரம் கொள்வாரோ, தோழி' என்று கேட்கத்தான் தோன்றுகிறது.//
உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டு இன்பத்தை அனுபவிக்கிர்வர்களை கண்டால் இப்படித்தான் நினைக்க தோன்றுகிறது.
Post a Comment