மின் நூல்

Thursday, August 20, 2009

கவிதை எழுதப் பழகலாம், வாருங்கள்!


கவிதை என்பது உள்ளத்தில் வெட்டிவிட்டுப் போகும் ஒரு மின்னல். உணர்வுகளை சுருக்கமாக சிறப்பாகக் கொட்டுவதற்கு அது ஒரு வடிவம் எனலாம். அந்த வடிவத்தை இலக்கண வரம்புகள் என்னும் சிறைக்குள் யோசித்து யோசித்து அடைத்தால் உணர்வுகள் சிதைந்து சிறப்பான வடிகால் கிடைக்காதென்பது உண்மை!

இலக்கண வரம்புகளைத் தேடிக்கொண்டிருந்தால், உருப்படியாக ஒரு கவிதை எழுதுவதற்குள் தாவு தீர்ந்துவிடும். இன்னொன்று. கவிதை என்பது மற்ற இலக்கிய வடிவங்களைப் போலல்லாமல் வரிக்கு வரி யோசித்து எழுதக்கூடியதில்லை. அதாவது, 'தமிழா..' என்று முதல் வரி ஆரம்பித்தால், அடுத்தவரி தொடக்கமாக, 'அமிழ்தா' என்று போடலாமா, இல்லை 'சிமிழா' என்று போடலாமா என்று யோசித்து யோசித்து வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிற விஷயமில்லை. 'தமிழா' என்று முதல் வரியை எண்ணியவுடனேயே, அதே மாத்திரை அளவு உச்சரிப்பு தொனி உள்ள, மோனையும் எதுகையும் கட்டிப்புரண்ட கலவையாய், குறைந்தபட்சம் ஐந்தாறு வார்த்தைகள் நினைவில் பளீரிட்டு, அதைத் தொடர்ந்து அடுத்த வரி, அடுத்த வரி என்று புதுப்புனல் புறப்பட்டாற்போல நொப்பும் நுரையுமாக நினைவில் பொங்கிக் கொப்பளித்து ஓடி வரவேண்டும்.

ஒன்று தெளிவாகிறது. கவிதை எழுத மொழிப்புலமை அவசியம். ஒரு மொழியில் புலமை பெறுவது என்பது அந்த மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களையும், காவியங்களையும் அவற்றில் ஆழ்ந்து தோய்ந்து திரும்பத்திரும்பப் படிப்பதினால், அவற்றின் வாக்கிய அமைப்புகளை, வரிஅமைப்புகளைப் புரிந்து கொண்டு 'அடடா! எவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறார்கள்' என்று சிலாகிப்பதினால், அந்த இலக்கிய கர்தாக்களின் புலமை நமக்கும் கைவரப் பெற்று ஒரு சரிசமமான தளத்திற்கு வருவதை உணரலாம். ஒன்றைப் படிக்கும் போதே, 'இதை இப்படி எழுதியிருந்தால் நன்றாயிருக்குமே' என்ற உணர்வு ஏற்படுவது அடுத்த நிலை. அதுதான் படிப்பவர் எழுத ஆரம்பிக்கும் முதல் நிலை!

எல்லோரும் எழுதலாம். ஆனால் அந்த மொழியைக் கையாளுவதில் கைவரப் பெற்றவர்களின் எழுத்து அழகாக இருக்கும். அதற்கேற்ற கட்டுக்கோப்பு பெற்று இருக்கும். இது இலக்கியம் படைப்பதற்கு மட்டுமல்ல, கவிதைகள் யாப்பதற்கும் பொருந்தும். ஏனெனில் பேசும் மொழியே, எழுதும் மொழியே எதுகை மோனையுடன் அமையக்கூடிய சாத்தியம் ஏற்படின், தன்னாலே 'இலக்கணம்' கட்டுக்குள் அடங்கும்!

அந்த 'இலக்கணம்' இல்லையென்றாலும், உணர்வுடன் ஓசை நயத்துடன் வெளிப்படும் எதுவுமே கவிதை தான். இதில் மரபென்றும் புதுசென்றும் எதுவொன்றும் இல்லை. நாட்டுப்புறப் பாடல்களிலும்,'ஏலேலோ..' பாடல்களிலும் எந்த இலக்கணத்தைத் தேடிப்போவது?... அப்படி தோண்டித் துருவித் தேடினும், அவற்றிலும் ஒரு இலக்கணம் கிடைப்பது தான் அவற்றின் சிறப்பு.

அட, அப்படிக் கிடைக்காவிட்டாலும், இலக்கணத்தில் 'வழுஅமைதி' என்ற ஒன்று இருப்பது போல்,அந்த நாட்டுப்புறப் பாடல்களுக்கு இலக்கணத்தில் இடமில்லையெனில், அவற்றிற்காக ஒரு புது இலக்கண வகையை புதிதாகச் சமைத்துக் கொள்ள வேண்டியது தான். இது தான் ஒரு மொழியில் ஏற்படக்கூடிய மாறுதல்.

விஞ்ஞானக் கூற்றுப்படி, காலத்திற்கேற்ற மாறுதல்களைக் கைக்கொள்ளவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை எனில் அவை அழிந்துபடும் என்பது ஒரு மொழிக்கும் பொருந்தும்... காலத்தின் மாறுதலுக்கேற்ப புதுக்கவிதைகளை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை?. பாரதி ஆரம்பித்து வைத்தது, இன்றும் பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இந்த புதுக்கவிதை தோன்றுவதற்கு முன், கவிதை என்பது கவிதையாகத்தான் இருந்தது. இந்தப் புதுக்கவிதையின் தோற்றத்திற்குப்பின், முன்பிருந்த 'இலக்கண வரம்புகளுக்கு' உட்பட்ட கவிதைகளுக்குப்பெயர் மரபுக் கவிதையாம்!

எப்படி புதுக்கவிதைகளுக்கு 'ஆசனம்' கொடுத்து, முந்தைய கவிதைகள் தனக்கு 'மரபுக் கவிதைகள்' என்று பெயர் சூட்டிக்கொண்டு, தள்ளி உட்கார்ந்து கொள்கிறது, பாருங்கள்! இதில் வேடிக்கை என்னவெனில், இப்படி மரபுக்கவிதை தள்ளி உட்காரவில்லை எனில், இந்த புதுக்கவிதை, மரபுக்கவிதையைப் பிடித்துத் தள்ளிவிட்டு உட்கார்ந்து கொள்ளூம்.

இதைத்தான், "பழையன கழிந்து புதியன புகுதல் காலவரையினாலே" என்று எந்தக் காலத்திலோ, தொல்காப்பியரே சொல்லிவிட்டார். அதாவது, தமிழுக்கு இலக்கணம் அமைத்துக் கொடுத்த தொல்காப்பியரே, இந்தப் புதியன புகுதலை புரிந்து கொண்டு அந்தப் பழங்காலத்திலேயே அதற்கும் ஒரு இலக்கண வரைவைக் கொடுத்து விட்டார்!

ஆனால் என்னதான் 'லைசன்ஸ்' கிடைத்தாலும், கவிதை எனில், ஓசை நயத்துடன் பண்டைய மரபின் செம்மாந்த போக்கு குலையாமல் இருந்தால் தான் அழகாக இருக்கும்.

அதனால்,'மரபு'என்கிற ஒரு ஆடையைப் போர்த்தி மறைத்து ஒதுக்கி வைக்காமல் நாம் பழந்தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து அவற்றின் சுவை அறிந்து படித்தோமானால், சுலபமாகக் கவிதை எழுதலாம். ஆசிரியப்பா, ஆரம்பப் பயிற்சிக்கு எளிது.

கவிதை எழுதுவதற்கு ஆரம்ப பாலபாடம், என்னைப் பொறுத்த வரை "சிலப்பதிகாரம்". எதுகை, மோனை சிறப்பாக ஓடிவந்து உட்கார்ந்து கொள்ள "சிலப்பதிகாரம்" படிப்பு, மிகவும் உதவி செய்யும். கூடவே, கம்பனின் "இராமாயணம்", வில்லிப்புத்தூராரின், "வில்லிபாரதம்." அடுத்து, திரிகூடராசப்பகவிராயரின் "குற்றாலக்குறவஞ்சி", பாரதியார் மற்றும் பாரதிதாசனாரின் கவிதைகள். இந்த ஆறு நூல்களை அவற்றின் அருஞ்சொற்பதவுரையோடு தேர்ந்து கற்கில் ஆறே மாதங்களில் அருமையாகக் கவிதை எழுதலாம்!

கவிதை எழுதப் பழகலாம், வாருங்கள்!

14 comments:

Jerry Eshananda said...

பூவனத்தில் இலக்கிய இன்பம் ஜீவிக்கிறது.

ஜீவி said...

jerry eshananda. said...

//பூவனத்தில் இலக்கிய இன்பம் ஜீவிக்கிறது.//

நீங்கள் கோர்த்த வார்த்தைச் சரம்
மணக்கிறது.

வருகைக்கு மிக்க நன்றி.

கபீரன்பன் said...

பாடம் படிக்க காத்திருக்கிறேன்.
----------------

//வெளிப்பிராகாரத்தின் நுழைவு வாயில் பக்கம் நுழைவதற்கு முன் தலைநிமிர்ந்து கோபுரம் பார்த்தவர்கள் திகைத்து அப்படியே நின்று விட்டார்கள்//

மாலுவும் சிவராமனும் இன்னும் திகைத்தபடியே நின்றிருக்கிறார்களே ! சஸ்பென்ஸை உடைத்து வி்டலாமே :)

துபாய் ராஜா said...

நல்லதொரு பதிவு.

//கவிதை என்பது உள்ளத்தில் வெட்டிவிட்டுப் போகும் ஒரு மின்னல். உணர்வுகளை சுருக்கமாக சிறப்பாகக் கொட்டுவதற்கு அது ஒரு வடிவம் எனலாம். அந்த வடிவத்தை இலக்கண வரம்புகள் என்னும் சிறைக்குள் யோசித்து யோசித்து அடைத்தால் உணர்வுகள் சிதைந்து சிறப்பான வடிகால் கிடைக்காதென்பது உண்மை//

உண்மையான உண்மை.

நேரம் கிடைக்கும்போது நம்ம சபை பக்கம் வந்து 'கவிதைகள்' படித்து கருத்து சொல்லுங்கள்.

http://rajasabai.blogspot.com/

Kavinaya said...

//எப்படி புதுக்கவிதைகளுக்கு 'ஆசனம்' கொடுத்து, முந்தைய கவிதைகள் தனக்கு 'மரபுக் கவிதைகள்' என்று பெயர் சூட்டிக்கொண்டு, தள்ளி உட்கார்ந்து கொள்கிறது, பாருங்கள்!//

கவிதை பற்றி அழகான (சிறு) காவியம் :) உங்களுக்கே உரிய கவித்துவமான நடையில்...

இலக்கணம் தெரியாமலேதான் கவிதை எழுதிக்கிட்டிருக்கேன் :( நீங்கள் குறிப்பிட்டதில் சிலவற்றை படிச்சிருக்கேன், மற்றதெல்லாம் படிக்க இப்போ ஆவலைத் தந்திருக்கீங்க. பாடத்துக்கு மிக்க நன்றி :)

ஜீவி said...

கபீரன்ப! நன்றி. விரைவில் அந்தப் பக்கம் வந்து விடுகிறேன்.

ஜீவி said...

அன்புள்ள துபாய் ராஜா,
வருகைக்கு நன்றி.
நிச்சயம் வருகிறேன்.

ஜீவி said...

கவிநயா said...

//நீங்கள் குறிப்பிட்டதில் சிலவற்றை படிச்சிருக்கேன், மற்றதெல்லாம் படிக்க இப்போ ஆவலைத் தந்திருக்கீங்க.//

மிக்க நன்றி, கவிநயா!

இலக்கண முறைகள் தேர்ந்து அந்த வரைமுறைகள் சிதைந்து விடாமல்
கவிதை (எழுதுவது என்பது கூடச் சரியில்லை) தன்னிலிருந்து வெளிப்படுவது ஒரு முறை.

ஓசை சந்த நயத்தொடு ஒப்பில்லா இறவாக் கவிதைப் படைத்தோரின் படைப்புகளைப் படித்து, உள்வாங்கிக் கொண்டு, அந்த ரசனையில் திளைத்து நம்மிடமிருந்தும் கவிதை ஊற்று வெளிப்படுவது ஒரு முறை. இப்படி
கவிதை யாக்கும் சக்தி கைவரப்பெறின்
நம்மையறியாமையிலேயே அந்த இலக்கண அமைதிகள் நமது கவிதை வரிகளில் வந்து விழுந்து விடும்.
இயல்பாக குடும்பப்பாங்காக நற்குணங்கள் நம்மிடம் படிந்து விடுகிறமாதிரி.

அவரவருக்கு உகந்த முறைகளைத் தெரிவு செய்து கொள்ளலாம் என்பது எனது அபிப்ராயம். அபிப்ராயம் மட்டுமே.. வழிகள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி, கவிநயா!

இரா. வசந்த குமார். said...

அன்பு ஜீவி சார்...

/*அந்த வடிவத்தை இலக்கண வரம்புகள் என்னும் சிறைக்குள் யோசித்து யோசித்து அடைத்தால் உணர்வுகள் சிதைந்து சிறப்பான வடிகால் கிடைக்காதென்பது உண்மை!

இலக்கண வரம்புகளைத் தேடிக்கொண்டிருந்தால், உருப்படியாக ஒரு கவிதை எழுதுவதற்குள் தாவு தீர்ந்துவிடும். இன்னொன்று. கவிதை என்பது மற்ற இலக்கிய வடிவங்களைப் போலல்லாமல் வரிக்கு வரி யோசித்து எழுதக்கூடியதில்லை. அதாவது, 'தமிழா..' என்று முதல் வரி ஆரம்பித்தால், அடுத்தவரி தொடக்கமாக, 'அமிழ்தா' என்று போடலாமா, இல்லை 'சிமிழா' என்று போடலாமா என்று யோசித்து யோசித்து வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிற விஷயமில்லை. 'தமிழா' என்று முதல் வரியை எண்ணியவுடனேயே, அதே மாத்திரை அளவு உச்சரிப்பு தொனி உள்ள, மோனையும் எதுகையும் கட்டிப்புரண்ட கலவையாய், குறைந்தபட்சம் ஐந்தாறு வார்த்தைகள் நினைவில் பளீரிட்டு, அதைத் தொடர்ந்து அடுத்த வரி, அடுத்த வரி என்று புதுப்புனல் புறப்பட்டாற்போல நொப்பும் நுரையுமாக நினைவில் பொங்கிக் கொப்பளித்து ஓடி வரவேண்டும்.

*/

ஐயா நீங்கள் இப்படிச் சொல்லலாமா..?

எந்தவொரு தொழில்நுட்பத்தையும் போலே பயிற்சியும் முயற்சியும் ஆர்வமும் கொண்டிருந்தால், நமது திறமைக்கு ஏற்றாற்போல் மரபுக்கவிதைகளிலும் சிறப்பாக எழுத முடியும்.

இந்த கண்ணியில் வெண்பா எழுதக் கற்கலாம் :: வெண்பா எழுதலாம் வாங்க.

இந்த கண்ணியில் அடியேன் எழுதிய சில வெண்பாக்களைப் பார்த்துத் தங்கள் கருத்துக்களைச் சொன்னால் மகிழ்வேன் :: கண்ணன் கனியமுது.

இரா. வசந்த குமார். said...

/*அந்த வடிவத்தை இலக்கண வரம்புகள் என்னும் சிறைக்குள் யோசித்து யோசித்து அடைத்தால் உணர்வுகள் சிதைந்து சிறப்பான வடிகால் கிடைக்காதென்பது உண்மை!
*/

ஐயா...

நீங்கள் இப்படி சொல்லலாமா..?

எந்தவொரு தொழில்நுட்பத்தையும் போலே ஆர்வமும் முயற்சியும் பயிற்சியும் கைகொண்டால் எந்தளவில் இருக்கும் திறமைக்கும் நம்மால் சிறப்பாக மரபுக்கவிதைகள் எழுத முடியாதா..?

வெண்பா எழுதக் கற்க :: வெண்பாத் தளம்.

நன்றிகள்.

ஜீவி said...

@ வசந்த் குமார்

வாருங்கள், வசந்த்!

பயிற்சி, முயற்சி, ஆர்வம்-- என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதைத் தானே
நானும் சொல்லியிருக்கிறேன், வசந்த்!

இலக்கண வரம்புகளுக்குள் யோசித்து யோசித்து அடைத்தலாகிய சிறைப்படுத்துதல் தானே வேண்டாம் என்று தானே சொல்லியிருக்கிறேன்.
அதுவும், அந்த யோசிப்பு நெஞ்சத்திலிருந்து அணை உடைந்த வெள்ளம் போல் பெருக்கெடுக்கும் கவிதை வெள்ளத்தின் வேகத்தை தடை செய்து விடும் என்பதால் தான்.
யோசிக்காமலே, அந்த எதுகையும் மோனையும் பெருக்கெடுத்து வருமாயின் ரொம்ப நல்லது.

அடுத்தது, இப்படி யோசிக்காமலேயே அந்த சக்தி கைவரத்தான் பயிற்சி.
அந்த பயிற்சிதான் பழந்தமிழ் பாடல்களில் முக்குளித்துத் திளைத்து
ரசித்து படிப்பது. இந்த ரசிப்பில் தன்னை இழக்கும் பொழுது, தன்னிலிருந்து எந்த யோசிப்பும் இல்லாது எதுகையும் மோனையும்
கலந்து வார்த்தைக் கோர்வைகள் தன்னாலே பிரவாகமாய் பெருக்கெடுத்து வருவதைக் காணலாம். அப்பொழுது சந்த சுத்தமாய் கவிதை எழுதும் கலையைக் கைவரப் பெறலாம் என்பது என் எண்ணம். இங்கு தான் நீங்கள் குறிப்பிடும் ஆர்வமும், முயற்சியும் ஒன்று குவிகிறது.

இது கவிதைகள் சுலபமாய் எழுத எனக்குத் தெரிந்த ஒரு பயிற்சி முறை.

இதைத்தான் கவிநயா அவர்களுக்கான பின்னூட்டத்தில் வகைப்படுத்திச் சொல்லியுள்ளேன்.

எந்த நேரத்தும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்துத் தேறுதலை தவிர்க்க வேண்டாம் என்பதே எனது ஆலோசனை. பதிவின் இறுதிப் பகுதியில் நான் தேர்ந்தெடுத்த நூல்களின் பட்டியல் ஒன்றும் தந்துள்ளேனே..

சந்தம் என்பது கவிதையின் ஜீவன்.
அது அமையப்பெருவதாலேயே அது கவிதை என்னும் பெயரும் பெறுகிறது என்பது என் எண்ணம்.

தாங்கள் குறிப்பிட்டிருக்கும் சுட்டிகளுக்கு நிச்சயம் வந்து பார்க்கிறேன்.

தங்கள் வருகைக்கும், எண்ணத்தை எடுத்துச் சொன்னமைக்கும் மிக்க நன்றி, வசந்த்!

G.M Balasubramaniam said...

படித்து இன்புற்றேன். அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

ஜீவி said...

@ G.M.B.

பாராட்டிற்கு நன்றி ஐயா!

Unknown said...

நந்தவனத்தில் ரோஜாவாக வாழ்வதை விட..
பாலைவனத்தில் கள்ளிச்செடியாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்..
தன்னம்பிக்கை பிறக்கும்.

Related Posts with Thumbnails