மின் நூல்

Saturday, October 24, 2009

ஆத்மாவைத் தேடி....11 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

11. காந்த வெளி

வழக்கத்திற்கு மாறாக இந்தத் தடவை அவைக்கூட்டம் மஹாதேவ் நிவாஸின் மேல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இடம் மேல்கூரை இல்லாமலேயே இருந்ததினால், அவையில் அமர்ந்திருந்தோர் தலைக்கு மேலே வெளிர் நீலநிற ஆகாயம் நிர்மலமாகத் தோற்றமளித்தது.

எப்படித்தான் அப்படிப்பட்ட ஒருமுக எண்ணம் அத்தனை பேரிடமும் குவிந்தது என்றுத் தெரியவில்லை. இது, மனம் பற்றி மிக மெலிதாக பிரயோகிக்கப்பட்ட ஒரு சிந்தனைத்துளி தான்; அது பரவலாகப் பெரிதாகி அத்தனை பேரையும் பற்றிக் கொண்டது தான் ஆச்சரியம். அதன் விஸ்வரூபம் எல்லோரிடம் பூரித்துக் கிளம்பிய ஆனந்தத்திலிருந்து வெளிப்படையாகத் தெரிந்தது.

நிவேதிதா கையில் ஒரு கற்றைக் காகிதத்துடன் இங்கேயும் அங்கேயும் அலைந்து கொண்டிருந்தார். கிருஷ்ணமூர்த்தியைக் கண்டவுடன்,தன் கையிலிருந்த காகிதக்கற்றைகளைப் புரட்டி அவரிடம் காட்டி ஏதோ சொல்ல, கிருஷ்ணமூர்த்தியின் முகம் பிரகாசமடைந்தது. நிவேதிதா கொடுத்த பேப்பரை வாங்கி தனது ஃபைலில் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

இந்த சமயத்தில் தான் மனவியல் அறிஞர் மேகநாதன் அவைக்குள் அவசர அவசரமாகப் பிரவேசித்தார். அவரைக் கண்டதும் ஒரு யுகபுருஷனைப் பார்த்து பரவசப்பட்ட சந்தோஷத்துடன் அவை குதூகலித்து அடுத்த நிமிஷமே மெளனமாயிற்று. கிருஷ்ணமூர்த்தி மேடைகருகில் மேகநாதனை சந்தித்து தன்னிடமிருந்த கோப்பை அவரிடம் கொடுத்தார். புன்முறுவலுடன் மேகநாதன் அதைப் பெற்றுக்கொண்டார்.

சரியாக ஒன்பது மணி. சிவன் கோயில் காலை வழிப்பாட்டை முடித்துக்கொண்டு மாலு கிழக்குப்பகுதி வழியாக அவையுள் நுழைந்தாள். அவள் நடந்து வந்ததில் ஒரு அசாத்திய அமைதியும் முகத்தில் திருப்தியும் தெரிந்தது. அவளுக்கு முன்னாலேயே வந்து சிவராமன் வேறொரு இடத்தில் அமர்ந்திருந்தார்.

"நேற்று விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கலாமா?" என்று புன்முறுவலுடன் அவையைப் பார்த்தார் மேகநாதன்.

அவையின் உற்சாகம் அவர்களின் ஆமோதிப்பில் கலகலத்தது.

"நல்லது. இந்த அமர்வின் இறுதியிலும் அதற்காக நேரத்தை ஒதுக்கி நம் ஒருவொருவருக்கொருவர் ஏற்படும் சந்தேகங்களையும் தெளிந்து கொள்ளலாம். உங்களுக்குள் 'ஏன் இப்படி?' என்று கிளர்ந்தெழும் சில வினாக்கள், அதைப் பற்றி யோசிக்கும் எனக்கும் சில உண்மைகளை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்குமாதலால், உங்களுக்கேற்படும் ஐய வினாக்களை எக்காரணங்கொண்டும் கேட்காமல் இருந்து விடாதீர்கள். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், 'ஆத்மா'வைப் பற்றி உலகுக்குப் பிரகடனம் பண்ண மனோகர்ஜி ஏற்பாடு செய்திருக்கும் நிகழவிருக்கும் சதஸிற்கு முன்னாலான இந்த அமர்வின் அர்த்தமும் அதுதான். முழுமையான கருத்துக்களை முன்வைக்கப் போகும் இந்த சதஸுக்கான வரைவுகளுக்கான முனேற்பாடான அமர்வுகள் இவை. இந்த அமர்வுகளில் தாம், துறைதோறும் நாம் சில வரைவுகளை வரைந்து கொண்டு சதஸில் வைக்கப்போகிறோம். ஆகவே இந்த உரைக்கு பின்னாலான நமது வினாக்களும், அவற்றிற்கான விடைகளும் இறுதி வரைவுகளைத் தயாரிக்க மிக மிக முக்கியமானவை" என்று ஒரு முகவுரையாற்றி மேற்கொண்டு பேசத் தொண்டையைச் செருமிக் கொண்டார் மேகநாதன்.

"இந்த மகாதேவ் நிவாஸின் மேல்தளப்பரப்பில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காரணமே இது தான். மேல் பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்தை அண்ணாந்து பாருங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்திருக்கும் சமுத்திரம் போலவேயான பரந்து கிடக்கும் ஆகாயப்பரப்பு. பஞ்சுப்பொதிகளைப் போலத் தோற்றமளிக்கும் மேகக்கூட்டங்கள். அவை ஊர்ந்து மெல்ல நகரும் விநோதம்! அவை ஊர்வதால், ஆகாயத்தின் எல்லையே அதுவல்ல என்றுத் தெரிகிறது. கீழே இந்த மேகக்கூட்டங்கள் என்று இந்த மேகக்கூட்டங்களுக்கு மேலே போய் ஒரு விமானத்தில் பயணிக்கையில் அதற்கும் மேலே காணப்படுகின்ற பரந்த ஆகாயத்தின் பரப்பே ஏகாந்த வெற்றுவெளியாகத் தான் தென்படுகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் கூரையாகத் திகழும் அகண்ட வெளியெங்கணும் காந்த சக்தி நீக்கமற நிறைந்து பரவி விரவிக் கிடப்பதினால் தான் சூரியனும், சந்திரனும் இவை போன்ற இன்னபிற கிரகங்களும் ஒன்றிற்கொன்று முட்டி மோதிக்கொள்ளாமல், ஒரு பிரபஞ்ச விதிப்படி (Universal Law) இயங்கிக் கொண்டிருக்கின்றன.

"பிரபஞ்சக் கோட்பாட்டில் பூமி என்பது மிகச்சிறிய ஒரு துகள். அந்தத் துகளில் துள்ளித் திரியும் மனிதன் என்னும் துணுக்கு போன்றத் துகளிலும் அந்த பிரபஞ்ச காந்த சக்தியின் நீட்சி நிரம்பி, பிரபஞ்சத்தின் ஒரு துணுக்கு போன்ற காந்தத்துகளாக மனிதனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆக, மனிதனும் பிரபஞ்ச காந்த சக்தியின் ஒரு துணுக்கு என்பது உண்மை.

"மின் வேதியியல் அடிப்படையில் மூளை இயங்குகிறது என்பது இன்றைய விஞ்ஞானத்தின் முடிவென்றால், அந்த அதன் இயக்கத்திற்கு மூலகாரணமாக இருப்பது பிரபஞ்ச காந்தசக்தியின் ஒரு துகளாக நாமும் திகழ்வதே. இதயம் போன்ற முக்கியமான உறுப்புகள் இயங்குவதற்கும் அந்த பிரபஞ்ச சக்தி நம்முள் வியாபித்திருப்பதே காரணம். உடலின் உள்ளார்ந்த உறுப்புகளின் நில்லாத இயக்கத்திற்குக் காரணமாதலால், உயிரின் இயக்கத்திற்கும் காரணம் இதுவே. இதுவே காரணம் என்று சுலபமாக சொல்லிவிடுவதைத் தாண்டி, அந்த பிரபஞ்ச காந்தசக்தியின் தொடர்பு இருக்கிறவரை உயிர் இயக்கம் இருப்பதாகவும், தொடர்பு துண்டிக்கப்படுகையில் அல்லது சக்தியிழந்து தொடர்பிலிருந்து விடுபடுகையில் உடல் இயக்கம் ஒடுங்கி மரணம் சம்பவிப்பதாகவும் கொள்ளலாம்."

அவை முச்சூடும் அமைதி ஆட்கொண்டு அத்தனை பேரும் மேகநாதன் ஆற்றும் உரையை மிக்க கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கையில், நோட்ஸ் எடுப்பவர்களின் வசதிக்காவும் நின்று நிதானித்து அவர் தொடர்ந்தார். "ஆக, பிரபஞ்ச வெளியின் தொடர்ச்சியான ஒரு கூறாகத்தான் மனிதன் ஜீவித்திருக்கிறான். பிரபஞ்ச சக்திக்கும், மனிதனுக்கும் ஒரு தொடர்புச்சாதமாக அவன் மனம் திகழ்கிறது. தனக்குத் தேவையான சக்தியை பிரபஞ்ச சக்தியிடமிருந்து பெறுகின்ற ஆற்றல் மனதுக்கு உண்டு. பிரபஞ்ச பேராற்றலையே இறைவனாக, இறைசக்தியாகக் கொண்டால், அந்த சக்தியை சிந்தாமல் சிதறாமல் நம்முள் உள்வாங்கிக் கொள்வதற்கு மனமே முழுமுதல் சாதனமாகிப் போகிறது. இன்று இதைப்பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

"அதற்கு முன், பிரபஞ்ச சக்தியை இறைவனாக, தலைவனாக வரித்துப் பாடிய தமிழ்க்கவிஞன் ஒருவனின் பாடலைப் பார்ப்போம். அந்தக் கவிஞனின் பெயர் கம்பன்; கவிஞர்களுக்கெல்லாம் சக்ரவர்த்தியாகப் போற்றப்பட்டவன். ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் கதையை தமிழில் இராமகாதையாக வடித்தவன். அந்த இராமகாதையின் இறைவாழ்த்துப் பாடலாக பிரபஞ்ச சக்தியை இறைவனாக, தன் தலைவனாக வாழ்த்தி தனது 'இராமகாதை'யை எப்படித் தொடங்குகிறான், பாருங்கள்!..

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
-- என்று மேகநாதன் கவிச்சக்ரவர்த்தியின் அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, "நான் இராகத்தோடு அந்த அருமையான பாடலை இந்த அவையில் பாடலாமா?" என்று அனுமதி கேட்டு நாட்டை ராகத்தில் இராமகாதையின் அந்தக் கடவுள் வாழ்த்துப் பாடலை மாலு பாடினாள்.

அவையே மெய்மறந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தது.

(தேடல் தொடரும்)

5 comments:

கபீரன்பன் said...

//உலகம் யாவையும் தாமுள வாக்கலும்....//

உயர்நிலைப் பள்ளியில் எங்கள் பள்ளியின் இறைவணக்கம் இதுதான். சில வருடங்களுக்கு பின்பே அது கம்பர் இயற்றியது என்பது தெரிய வந்தது

//இதயம் போன்ற முக்கியமான உறுப்புகள் இயங்குவதற்கும் அந்த பிரபஞ்ச சக்தி நம்முள் வியாபித்திருப்பதே காரணம். உடலின் உள்ளார்ந்த உறுப்புகளின் நில்லாத இயக்கத்திற்குக் காரணமாதலால், உயிரின் இயக்கத்திற்கும் காரணம் இதுவே..//

வெளியெங்கும் வியாபித்து நிற்பவன் உள்ளும் உறைகிறான் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்

ஜீவி said...

@ கபீரன்பன்

ஆஹா, பளளிப்பருவ நினைவுகளே அலாதி சுகம் தருபவை தாம். இதில் இன்னொரு வேடிக்கை பார்த்தீர்களா.. நம் பள்ளி அனுபவங்க்களை நம் குழந்தைகளிடம் பொருத்திப் பார்க்க முடிவதில்லை.. கால கட்ட சுழற்சியில், காலத்திற்கேற்ப எல்லாமே மாறிப் போய்விடுகின்றன.

//வெளியெங்கும் வியாபித்து நிற்பவன் உள்ளும் உறைகிறான் என்பதை..//

இந்தத் தேடலின் நீட்சி அங்கு போய் நிலைக்குத்தி நின்று புதுசு புதுசாய் வெவ்வேறான சிந்தனைகளை கிளப்பிய சுகம் அலாதியானது. வார்த்தைகளில் அவற்றை முறைப்படுத்தி அடக்கமுடியுமா என்று தெரியவில்லை. என்னதான் முடிந்தாலும்
அவரவர் சுயதரிசனம் காண்பதன் அலாதித் தன்மை தனித்துவம் பொருந்தியது என்கிற உணர்வே எந்நேரத்தும் மேலோங்கி நிற்கிறது.

வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, கபீரன்ப!

Shakthiprabha (Prabha Sridhar) said...

பிரமிப்பூட்டும், விஷயம் இந்த பிரபஞ்ச ரகசியம். இறைவனை இறை தத்துவத்தை ஆழ்ந்து நோக்க நோக்க, எவ்வளவு விரிவடைந்து நம் பார்வை. எத்தனை ஆனந்தம்!இந்த நினைவே எப்பேர்பட்ட அனுபவம்! அப்படியெனில் இன்னும் ஆழ்ந்து உணரத்துவங்கினால், அதுவே நிஷ்டை! பேரானந்தம்.

என்னுள்ளத்து ஆனந்தத்தைச் சொல்ல வார்த்தை எதுவ்மே வரவில்லை ஜீவி.

ஜீவி said...

@ ஷக்தி பிரபா..

ஆம்! பிரபஞ்சம் மிகவும் ரகசியம் பொதிந்தது தான்! எந்த ரகசியத்தை அறிதலும் இயல்பாகவே மிகவும் சுவாரஸ்யமானது தான். ஆனால் இந்த ரகசியத்தை அறிய வேண்டும் என்கிற ஆவல் மனத்தில் துளிர்க்கையிலேயே, அதன் ஆரம்பப் பாடத்திலேயே, நாம் அனுபவிக்கும் ஆனந்தம் இவ்வளவு சுகம் கொடுக்கிறதென்றால், இதுபற்றி தினையளவு அறிவு அறியக் கூடிய பாக்கியம் ஏற்படுமென்றாலும், பனையளவாய் நமக்குக் கிடைத்த பெரும் பேறாகவே அது அமையும்.

தங்களது பகிர்தல், தேடுதலில் மேலும் மேலும் செல்ல உறசாகத்தைக் கொடுத்தது உண்மை. பகிர்தலின் நிறைவுகள் நம் எல்லோருக்குமே பரமானந்தத்தைக் கொடுக்கும் என்பது திண்ணம். மிக்க நன்றி.

Shakthiprabha (Prabha Sridhar) said...

வணக்கம் ஜீவி. உங்கள் எழுத்துக்கள் அத்தனையும் முத்து,
எனக்கு மிகவும் விருப்பமானவை.
என்னால் மறக்க முடியாத பல பகுதிகள் இருக்க,
"சுய தேடலின்" இந்த ஒரு பகுதியை வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன் நன்றி. :)

கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_25.html

Related Posts with Thumbnails