மின் நூல்

Wednesday, November 4, 2009

ஆத்மாவைத் தேடி....14 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

14. யோசிப்பதற்கு முன்

மேகநாதனின் தொடர்ந்த உரைகள் எல்லோரிடமும் மிகுந்த ஆவலையும், ஈடுபாட்டினையும் ஏற்படுத்தியிருந்தது. தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்ற சந்தேகங்களை தனித்தனியான வினாக்களாக எழுப்பினால், ஒரு முழுமையானத் தெளிவை அடைய முடியாதென்று அவர்கள் உணர்ந்ததினால், கலந்து பேசி அதற்கான ஒரு வழியைக் கண்டார்கள். முதலில் தனித்தனிக் குழுக்காளாக தங்களுக்குள் பிரித்துக் கொண்டு ஏற்படும் சந்தேகங்களை தங்களுக்குள்ளேயே பேசி, விடைகாண முடியாத வினாக்களை ஒருமுகப்படுத்திக் கொண்டனர்.

தேர்ந்தெடுத்த வினாக்களாக அவற்றை உருவாக்கிக் கொண்டு எல்லாக் குழுக்களும் ஒன்று கூடி தெளிவடைய முடியுமா என்று பார்த்தனர். இப்படிப்பட்ட கலந்துரையாடலில் பல வினாக்கள் அடிபட்டுப் போயின. அதற்குப் பின்னும் விடைதெரியாமல் எஞ்சியவற்றை முறைப்படுத்தி வ்ரிசைப்படுத்திக் கொண்டனர். இந்த வினாக்களை மட்டும் கூடப்போகும் அவையில் வைத்தால், அடுத்த கட்டத்திற்குப் போக எளிமையாக இருக்கும் என்கிற தீர்மானத்துடன் அவைக்கு வந்தனர்.

இவர்கள் அவையில் கூடுமுன்பே மேகநாதன் அவையில் மேடையில் தயாராக இருந்தார். கூட்டம் கூட்டமாக வந்தவர்கள் அமர்ந்ததும் ஒரு அசாத்திய அமைதி நிலவியது.

முதல் கேள்வி சிற்பககலை வல்லுநர் சித்திரசேனனிடமிருந்து வந்தது. அவர் அவைக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு கேட்டார்: "ஐயா, மனம் என்பது ஒரு தொடர்புச் சாதனம் என்று சொன்னீர்கள். வெளிப்பிரபஞ்சத்து சக்தியை உள்வாங்கி, உள்காந்த சக்தியோடு கலக்க, மனம் ஒரு தொடர்புச் சாதனமாக செயலாற்றுவதாகப் புரிந்து கொண்டேன். இந்த உள்வாங்கலில் மனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை மேலும் விளக்க வேண்டும்" என்று கேட்டுவிட்டு அமர்ந்தார்.

"ரொம்ப சரி" என்று மேகநாதன் முறுவலித்தார். "அது பற்றி விவரமாகச் சொல்லவில்லை என்பதை உணர்கிறேன். இனி மேற்கொண்டு தொடரவிருக்கும் செய்திகளை இந்தக் கேள்வி--பதில் முறையிலேயே கொஞ்சமே நீட்டி விவாதித்தாலும் மற்ற செய்திகளையும் திரட்ட அதுவும் துணையாகிப் போகும்" என்று சொல்லி விட்டுத் தொடர்ந்தார். "மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாத சில சமாச்சாரங்கள் இருக்கின்றன. குறிப்பாக இதயமோ, நுரையீரலோ, சுவாசமோ மூளையின் கட்டுப்பாட்டில் இல்லை. ஓ.கே.?.. இந்த விஷயங்களை மட்டும் பிரித்தெடுத்துத் தனியே வைத்துக் கொள்வோம். இவை செயல்படுவதற்கும் எதுவோ காரணமாக இருக்க வேண்டும், அல்லவா?.. அது என்னவென்றும் பார்ப்போம்.

"மூளையை முன்மூளை, சிறுமூளை, முகுளம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்திருப்பது போலவே, மனத்தையும் நினைவு மனம், ஆழ்மனம், அதீத மனம் என்று மூன்று கூறுகளாகப் பிரித்திருக்கிறார்கள். உங்கள் சிந்தனையில் நியாயமான ஒரு சந்தேகம் வரலாம். 'மனது' என்கிற ஒன்றே ஸ்தூலமாக, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கண்ணுக்குத் தெரியாத போது, அதை எப்படி மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று. உங்களது இந்த சிந்தனை நியாயமானதே. எஸ்... இந்தப் பிரிப்பெல்லாம், சில செயல்பாடுகளை யோசித்துப் பார்ப்பதற்கான, நமது வசதிக்காக ஏற்படுத்திக் கொள்ளும் சில ஏற்பாடுகளே. மூள்ளைக்கும், மனத்திற்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த மனம் என்ன, அதன் செய்ல்பாடு என்ன, அது செயல்படுதல் எப்படி என்பதையெல்லாம் அலசிப் பார்ப்பதற்கு, மூளையின் செயல்பாடாகிய யோசித்தல் அவசியம் இல்லையா?.. அதைத்தான் சொல்ல வந்தேன்.

"அடுத்து இந்த யோசித்தலுக்கு இன்னொன்றும் அவசியம். அது நாம் யோசிக்கும் விஷயம் பற்றி நாம் கொண்டிருக்கும் அறிவு; knowledge. நாம் சிந்திக்கும் எந்த விஷயம் பற்றி குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல், நாம் அந்த விஷயம் பற்றி சிந்திக்க முடியாது என்பது ஒரு அடிப்படை உண்மை. இன்னொன்று. ஒரு விஷயம் பற்றி குறைந்தபட்ச அறிவு ஏற்பட்ட பிறகே, அதுபற்றி மேலும் 'டெவலப்' செய்கிற மாதிரி, சிந்திக்க வேண்டும் என்கிற அவாவே நம்மிடம் ஏற்படுகிறது என்பதும் இன்னொரு உண்மை.

மேகநாதனின் பேச்சில் ஒரு தீஸிஸை விளக்குகிற அக்கறையும் ஆர்வமும் இருந்தது."ஆக, எதுபற்றியும் யோசிக்க அதுபற்றி குறைந்தபட்ச அறிவு வேண்டும். இந்த அறிவை புறத்தில் ந்டக்கும் நமது செயல்பாடுகளில் பெற்றுக்கொள்கிறோம். அதாவது படித்தல், கேட்டல், பார்த்தல் என்று நமக்கு ஏற்பட்டிருக்கின்ற வசதிகளினால். அதாவது நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற தகவல்களைக் கொண்டு, அவற்றையே அடிப்படைகளாக வைத்துக் கொண்டு யோசிக்கிறோம்.

மேகநாதன் கைகளைப் பரக்க விரித்தார். "இதில் தான் விஷயம் இருக்கிறது. வழங்கப்பட்டத் தகவல்களின் மேல் நம்பிக்கை கொண்டு அல்லது அவற்றையே அடிப்படையாகக்கொண்டு பேசுவது , கிளிப்பிள்ளை பேசுகிற மாதிரி. பெற்ற தகவல்களின் தொடர்ச்சி; அவ்வளவுதான். இதில் புதுசாக ஒன்றும் இருக்காது. ஏனெனில் இது எங்காவது படித்து, கேட்டு, பார்த்துத் தெரிந்துகொண்டது தான். வேண்டுமானால், இந்தத் தகவலைக் கேட்காமல், படிக்காமல், பார்க்காமல், தெரிந்து கோளாமல் இருப்போருக்கு புதுசாக இருக்கலாம்.

ஆனால் இதுவல்ல நான் சொல்ல வந்தது. இனி சொல்லப்போகிற விஷயங்களுக்கு முன்னோட்டம் தான்.." என்று சுவாரஸ்யத்துடன் தொடர்ந்தார் மேகநாதன்.

(தேடல் தொடரும்)

2 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

புது தகவல்களுக்கு நன்றி.

ஜீவி said...

வருகைக்கு நன்றி, ஷக்தி..

Related Posts with Thumbnails