மின் நூல்

Thursday, November 19, 2009

ஆத்மாவைத்தேடி....16 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

16. அலைகள் நான்கு

முந்தைய அமர்வின் தொடர்ச்சி உணவு இடைவெளிக்குப் பிறகு உற்சாகத்துடன்தொடர்ந்தது. பேராசிரியர் மேகநாதனின் உரையைத் தொடர்ந்து கேட்கும் ஆவலில், உணவு நேரம் முடிந்த் உடனேயே அவை நிரம்பிவிட்டது.

மேடையில் மேகநாதனும் ஆஜர். கிருஷ்ணமூர்த்தி மேடைக்கு வந்து தொடர்ச்சியை நினைவுறுகிற மாதிரி ஒரு சிற்றுரை ஆற்றினார்.

அவர் முடித்ததும் மேகநாதன் மைக்கைப் பற்றினார்: "மனிதனின் சுவாசத்திற்கும் அவனது எண்ண வேகத்திற்கும் சம்பந்தமிருக்கிறது என்று பார்த்தோம், அல்லவா?.. இப்பொழுது சுவாசத்தை சீராக்கி மனதை எப்படி அமைதிபடுத்தலாம் என்று பார்ப்போம்" என்று அவர் ஆரம்பிக்கும் பொழுதே சபையின் சுவாரஸ்யத்தைக் கவர்ந்து விட்டார்.

"மனித மூளையை ஆராய்ந்த உடற்கூறு இயல் அறிஞர்கள், உயிர்ப்புடன் இருக்கும் மனித மூளை வெளிப்படுத்தும் வீச்சைப் போன்ற அலைகளை (waves) கண்டு திகைத்துப் போனார்கள். அது பற்றி மேலும் ஆராய்ந்த பொழுது, மனித மனம் அந்தந்த நேரங்களில் இருக்கும் உணர்வு நிலைகளுக்கு ஏற்ப இந்த் அலைகளின் வீச்சுத் தன்மையும் இருப்பது தெரிய வ்ந்ததும், அதுவே மூளை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது,. மனவியல் துறையையும் பல மேம்பட்ட நிலைகளுக்கு எடுத்துச் செல்ல இந்தக் கண்டுபிடிப்பு பெரும் பங்காற்றியது. ரொம்பவுமே தான் யோசித்து அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த அலைகளுக்கு பெயரிட்டார்கள். அவர்களின் பெயர்த்தேர்வு, அவர்களின் கண்டுபிடிப்பைப் போலவே அருமையாக அமைந்து விட்டது.

"கோபத்திலும், பரபரப்பு டென்ஷனிலும் மனிதன் இருக்கும் பொழுது மூளைக்கு அதிகப் படியான ரத்தசப்ளை தேவைப்படும். இந்த நேரத்தில் மூளை வெளிப்படுத்தும் அலைவீச்சுக்கு பீட்டா (BETA) என்று பெயரிட்டனர். சிறிய சுற்றுகளாக அதே நேரத்தில் வேகத்துடன் வெளிப்பட்ட இந்த அலைவரிசை நிமிடத்திற்கு பன்னிரண்டு சுற்றுகளுக்கு மேலிருப்பது தெரியவந்தது.

"அடுத்து இதற்கு நேர்மாறான ஒரு நிலை. விழிப்பிலிருக்கும் மனிதன் அமைதியாக நிச்சலனமற்று இருக்கையில் எட்டிலிருந்து பதிமூன்று சைக்கிள் வேகத்தில் பெரியதாகவும், மெதுவாகவும் வெளிப்பட்ட அலைவரிசைக்கு ஆல்ஃபா (ALPHA) என்று பெயரிட்டனர்.

"அதற்கடுத்து வெளியுலகத் தொடர்புகள் அற்ற தூக்கநிலை. இந்த நேரத்தில் குறைந்த வேகத்தில் நான்கு முதல் ஏழு வரையிலான சைக்கிள் வேகத்தில் வெளிப்படுத்திய அலைகளுக்கு தீட்டா (THETA) என்று பெயரிட்டனர்.

"அதற்கும் அடுத்து மிகமிக அமைதியான மோனநிலையில்,வெளியுலக நினைவுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு அடி ஆழ தியானத்தில் இருப்பது போன்ற ஒரு நிலையில் வினாடிக்கு நான்கு சைக்கிளுக்கும் குறைவாக வெளிப்பட்ட அலைவரிசைக்கு டெல்டா (DELTA) என்று பெயரிட்டனர்.

"பீட்டா, ஆல்ஃபா, தீட்டா, டெல்டா.. எப்படிப் பெயர்த் தேர்வு?.. வெறும் பெயர் வைத்ததோடு வேலை முடியவில்லை. அதற்கு அடுத்த நிலையான கண்டுபிடிப்பு தான் முக்கியமானது" என்று சொல்லிவிட்டு, கர்ச்சீப்பால் முகம் துடைத்தபடி, அவையை சுற்றிப் பார்த்தார்.

"பீட்டா நிலையில் எதையும் சரியாகச் செய்வதற்கோ, யோசிக்கவோ தகுதியற்று மனிதன் தத்தளிக்கிறான். உடல் ஆரோக்கியத்திற்கு இந்த நிலை ஏற்றதல்ல. இயல்பான நிலையில் ஒரு நிமிடத்திற்கு பதினாறிலிருந்து --பதினெட்டு முறை சுவாசிப்பதாகக் கொண்டால், ஒரு முறை சுவாசிப்பதற்கு நம் இதயம் நான்கு முறை துடிக்கிறது என்கிற கணக்கில் இயல்பான நிலையில் அப்பொழுது ஒரு நிமிடத்திற்கு அறுபத்து நான்கு முறை துடிப்பதாகக் கொள்ளலாம். இதுவே, மனம் படபடப்பான நிலையில் அவசர கதியிலான சுவாசம் அதிகரித்து அதே விகிதத்தில் இதயத் துடிப்பும் அதிகரிக்கும். ஆக, எல்லாவிதத்திலும் பீட்டா நிலை ஏற்புடையது அல்ல.

"இதுவா, அதுவா என்கிற குழப்பமான சூழ்நிலைகளில், யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானமாகத் தெரிகையில், யோசனைக்குத் தயாராகும் பொழுது ஆல்ஃபா நிலை ஏற்றது. வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு கிட்டத்தட்ட தியான நிலை அடைவதால் ஆழ்மனம் விழிப்புற்று சிந்தனை ஒருமுகப்படுத்தப் பட்ட நல்ல முடிவுகளை எடுக்கலாம். ஆனால் இயல்பான சாதாரண நிலையிலோ, பீட்டாவும் இல்லாமல் ஆல்ஃபாவும் இல்லாமல் இதற்கு இடைப்பட்ட நிலையில் இருக்கும்.

"அடித்துப் போட்டாற் போல் கனவற்ற தூக்க நேரங்களில் தீட்டா நிலை என்றால், யோகங்களால் சாத்தியப்படுகிற ஆழ்நிலை தியான சமயங்களில் டெல்டா நிலையும் இருக்கும்.

"உடற்கூறு சாத்திரம் ஓரளவுடன் நிறுத்திக் கொண்டதை மனவியல் சாத்திரம் நீட்டிக்கிறது. மன உணர்வுகளை வெளிப்படுத்துவதும், வழிநடத்துதலும் நம் கையில் இருப்பதால் வேலை சுலபமாயிற்று. பூட்டிய அறைக் கதவின் சாவி நம் கையில் கிடைத்த மாதிரி. வேண்டிய அலைகளுக்கேற்ப மன உணர்வுகளை வைத்துக் கொள்ளலாம் அல்லவா? இதனால் உடல் சம்பந்தப்பட்ட பல அறுவை சிகித்சைகளையும் தவிர்க்க முடியும் என்கிற ஞானம், மனவியல் கல்வியை மேலும் செழுமை படுத்த வேண்டும் என்கிற வாசல் கதவைத் திறந்து விட்டது.

"இந்த தேசத்து வேதகால ரிஷிகள் காட்டிய வழித்தடங்களை அறிந்து கொள்ள பிரயத்தனப்பட்ட போது, அவர்கள் இதையெல்லாம் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்கிற முன் தகவல்களைத் திரட்டும் ஆர்வம் அதிகரித்தது.

(தேடல் தொடரும்)


7 comments:

தேவன் said...

/// (தேடல் தொடரும்).... ///

எழுதுங்க ....

ஜீவி said...

@ கேசவன்

எழுதுகிறேன். தொடர்ந்து வருவது குறித்து மகிழ்ச்சி.

Kavinaya said...

//இந்த தேசத்து வேதகால ரிஷிகள் காட்டிய வழித்தடங்களை அறிந்து கொள்ள பிரயத்தனப்பட்ட போது, அவர்கள் இதையெல்லாம் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்கிற முன் தகவல்களைத் திரட்டும் ஆர்வம் அதிகரித்தது.//

ஆம், அவர்கள் அறியாததே இருக்கவில்லை. சமயங்களில் we are always reinventing the wheel என்று தோன்றுகிறது :(

உங்கள் ராட் மாதவ் said...

நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி...
மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழுவினரால், தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு முதல் பரிசாக ரூபாய். 2,000/- (இந்திய ரூபாய் இரண்டாயிரம்) வழங்கப்படும்
மேலதிக விபரங்களுக்கு
http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

ஜீவி said...

@ கவிநயா

இந்த தேசம் இது விஷயத்தில் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறது. யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை. உலகின் மற்ற பகுதிகள் இருளில் மூழ்கியிருந்த நேரத்தில், இந்த தேசத்தில் 'ஏன்?' 'எதனால்' என்று எல்லாவற்றையும் யோசித்திருக்கிறார்கள்.
எத்தனையோ கால ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மனிதகுலத்தின் நீண்ட வளர்ச்சிக்குப் பிறகான இன்றைய விடைகளுக்கு அவர்கள் சொல்லிச் சென்றவை பல relevant-ஆக இருப்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பல துறைகளில், இன்றைய வளர்ச்சிக்கான ஆரம்ப இழைகள், இந்த தேசத்திலிருந்து தான் புறப்பட்டிருக்கிறது என்பது நமக்கு பெருமை அளிக்கக்கூடியதே.
பூடகமாக அவர்கள் சொல்லிச் சென்றிருக்கும் பல விஷயங்களில், இன்னும் நாம் அறியாத- அறிய வேண்டிய ரகசியங்கள் புதைந்திருக்கின்றன என்பது இன்னும் கூடுதலான விசேஷம்.

ஆரம்ப அத்தியாயத்திலிருந்து தவறாமல் தொடர்ந்து படித்து கருத்துக்களை பதிவதற்கு மிக்க ந்ன்றி, கவிந்யா!

Shakthiprabha said...

மிக மிக நல்ல விஷயங்களை அழகாக சொல்லியுள்ளீர்கள். நன்றிகள் கொடி.

ஜீவி said...

@ ஷக்தி

தொடர்ந்து கூட வந்து உற்சாகமூட்டுவதற்கு ந்னறி, ஷக்தி.

Related Posts with Thumbnails