Friday, May 21, 2010

இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண....?

வாசலில் கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. வெளிக்கதவுகளை மூடி, கண்ணாடி ஜன்னல்களையும் கொக்கி போட்டு அடைத்து விட்டதனால், ராஜிக்குக் குளிரே தெரியவில்லை. பெட்டி போன்ற வீடு. அருமையாகத்தான் தேர்ந்தெடுத் திருக்கிறார். இதையெல்லாம் எப்படித்தான் 'அவர்' கற்றுக் கொண்டாரோ?...

புடவையை இழுத்துச் செருகிக் கொண்டு, நடுஹாலில் போட்டது போட்டபடிக் கிடந்த அட்டைப் பெட்டிகளைப் பிரிக்கும் வேலையில் ஈடுபட்டாள் ராஜி.

மணி இரண்டு ஆகிறது. நேற்று இரவும், இன்று காலையும் ஹோட்டலிலிருந்து எடுத்து வந்த 'கேரியர்' சாப்பாட்டைச் சாப்பிட்டாகிவிட்டது. அந்தச் சாப்பாட்டை நினைத்தாலே ராஜிக்குக் குமட்டியது. அவளுக்கு இப்படியெல்லாம் சாப்பிட்டுப் பழக்கமில்லை. சொன்னால் தெரிந்தால் தானே? 'பாத்திரங்களையெல்லாம் வெளியே எடுத்து சமைத்துப் போட்டு ஆபிஸூக்குக் கிளப்பிவிடுகிறேன்' என்று சொன்னால் கேட்டால் தானே?..

ராஜி தனக்குள்ளேயே ரகசியமாய் சிரித்துக் கொண்டாள்.

"இதோ பாரு, முழுசா ஒருநாள் ரயில் பிரயாணம். ரொம்ப களைச்சுப் போயிருக்கே. வீட்டுக்குள்ளே நுழைஞ்சவுடனேயே உன்னை வேலை வாங்க என் மனசு கேட்கலே. பால்தானே காய்ச்சிக் குடித்தோம்?.. அதுக்குள்ளாற உனக்கு எப்படி வேர்த்துப் போய்விட்டது, பார்த்தாயா?.." என்று மேல்துண்டால், அவள் நெற்றியில் பனிமுத்துக்களாய் துளிர்த்திருந்த வேர்வைத் துளிகளை அவன் துடைத்து விட்டதை நினைத்துப் பார்க்க ராஜிக்குப் பெருமிதமாகத்தான் இருந்தது.

ஆச்சு; மணி இரண்டரை. இப்பொழுதிலிருந்து ஒவ்வொரு பாத்திரமாக எடுத்துத் துடைத்து வைக்க ஆரம்பித்தால் தான் ஒரு வழியாக சாயந்திரத்திற்குள் காரியம் முடியும்.

ராஜிக்கு எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க இனிப்பாக இருந்தது.

கல்யாண கோலத்தில் தான் எத்தனை ரகசியக் கிள்ளல்கள், பொருள் பொதிந்த புதிர்ப் பார்வைகள்,கிசுகிசுப்புகள்; 'அவர்' ரொம்ப பொல்லாதவர்தான். ராஜிக்கு அதை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

யாரோ ஒரு வாண்டுப்பயல் இவளது புடவையின் தலைப்பையும், ராஜ்மோகனின் அங்கவஸ்திரத்தையும் சேர்த்துப் பின்னால் கட்டிவிட்டிருக்கிறான். அம்மி மிதித்து, அருந்ததி காட்ட எழுந்திருக்கும் பொழுது கொஞ்சம் முன்னால் சடாரென்று ராஜ்மோகன் எழுந்திருக்க நழுவிவிட்ட மேல்துண்டு இவள் மடியிலேயே விழுந்து விட்டது. ஆஹா! அப்பொழுது எழுந்த சிரிப்பு இருக்கிறதே! ராஜிக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. உடனே அவள் தோழி வனிதா சும்மாவா இருந்தாள்?.. குனிந்து கொண்ட அவள் தலைநிமிர்த்தி வேடிக்கை செய்யவில்லை?..

இந்த நிகழ்ச்சிகளெல்லாம் அப்பொழுது அவளுக்கு வேதனையாகவும் வெட்கமாகவும் இருந்தன. இப்பொழுது நினைத்துப் பார்ப்பதற்கு இன்பமாகவும் இன்னும் சொல்லப்போனால் இன்னொரு முறை அப்படி நடக்காதா என்று
ஏங்கக் கூடத் தோன்றுகிறதே!..

தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு உதட்டைக் கடித்துக் கொண்டாள் ராஜி. புதுக்குடித்தனம் ஆரம்பித்து இன்னொரு ஊரில் குடும்பத்தை 'செட்அப்' செய்ய வேண்டுமென்றால் அது ஒரு லேசான காரியமாகவா இருக்கிறது?..

அட்டைப் பெட்டியிலிருந்து இட்லி அடுக்குகள் வெளிவந்த பொழுது நாளை சாயந்திர டிபனுக்கு இட்லி பண்ணலாம் என்று ராஜிக்குத் தோன்றியது.

சின்ன வயதிலிருந்தே ராஜிக்கு இட்லி என்றால் உயிர். அதுவும் எண்ணைய் ஊற்றிய மிளகாய்ப்பொடியில் இட்லியைத் தோய்த்துத் துண்டு துண்டாக விண்டு வாயில் போட்டுக் கொள்வதென்றால், ராஜிக்கு வெல்லக்கட்டி. "ஏண்டி, இப்படி ரெண்டு கண்ணிலேயும் ஜலம் கொட்டறதேடீ? அப்படியா ஒரு நாக்கு? அந்த உறைப்பில் உனக்கு என்ன சுகம் தெரியறதுடீ?"ன்னு அவள் அம்மா கிடந்து அடியோ அடியென்று அடித்துக் கொள்வாள்.

ஊஹூம். ஒன்றுக்காவது அசைந்து கொடுக்க மாட்டாளே, இந்த ராஜி!.."ம்.. ஒண்ணும் பேசப்படாது; அடுத்த ஈடு இட்லி எடுத்தாச்சா?.. பேசாமல் போடு.. ஐய்யய்யோ! அம்மா,அம்மா, மிளகாய்ப்பொடி இன்னும் கொஞ்சம்மா" என்று கெஞ்சித் தொலைப்பாளே?

அம்மாவை நினைக்கும் பொழுதே ராஜிக்கு நெஞ்சை அடைத்தது. புக்ககத்தில் தனிக்குடித்தனம் பண்ண ராஜியை அனுப்பும் பொழுது அவளுக்குப் பெருமையாக இருந்தாலும் தடுமாறிப் போய்விட்டாள். சமையலறைக்குள் யாருக்கும் தெரியாமல் 'கோ'வென்று அவளுக்குள்ளேயே அழுதபடி புடவைத்தலைப்பு முனையால் யாரும் பார்த்து விடாதபடி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"அக்கா... அக்காவ்.." தடதடவென்று வாசல்கதவு இடிக்கப்படும் சப்தம்.

யாராக இருக்குமென்று ஒரு நிமிடம் தன் புருவங்களை வில்லாக வளைத்துக் கொண்டு யோசித்தாள் ராஜி. அடுத்த நிமிடம் சடாரென்று 'வந்திருப்பது யார்' என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் வாசல்பக்கம் நகர்ந்தாள்.

கதவைத் திறந்த ராஜிக்குத் திகைப்பாகத்தான் இருந்தது. வாளிப்பான உடலுடன் சுடிதார் அணிந்த ஓர் அழகுக்குவியல் வெளியே நின்று கொண்டிருந்தது. வயசு பதினாறு இருக்கும்.

"நான் தான் அக்கா, சித்ரா.. பக்கத்து வீட்டு சித்ரா" என்று ராஜியைத் தள்ளிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் சித்ரா.

"பக்கத்து வீடா?.. வாம்மா" என்று புன்முறுவலுடன் அவளை உள்ளே கூட்டிக் கொண்டு போகும் வரை காத்திருக்கவில்லை அந்தப் பெண். அவள் பாட்டுக்க சர்வ சுதந்திரத்துடன் ராஜிக்கு முன்னால் கூடத்தை நோக்கி நடந்தவள், லேசாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலின் பக்கம் வந்து திரும்பினாள். "ஏங்க்கா.. 'அவர்' இல்லே?"

"எவர் இல்லே?.."

"அதாங்க்கா.. மோகன். ராஜ்மோகன்"

தன் கணவனுடைய பெயரை இன்னொரு பெண் உரிமையோடு சொல்லும் பொழுது ராஜிக்குக் கொஞ்சம் அருவருப்பாகவும், ஆத்திரமாகவும் தான் இருந்தது. இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு, "இல்லை, ஆபிசுக்குப் போயிருக்கார்" என்றாள்.

"இவ்வளவு சீக்கிரமாகவா?" என்று தனது கரிய பெரிய விழிகளை விரித்த சித்ரா, "பார்த்தீங்களா.. கேட்கவே மறந்து போய்விட்டேனே! உங்க பேர் என்னக்கா?" என்று கேட்டாள்.

"ராஜம். ராஜி."

"ரெண்டு பேரா?"

"இல்லை; வைச்ச பேர் ராஜம். கூப்பிடற பேர் ராஜி. ரெண்டு பேரும் ஒண்ணுதானே?"

"ஆமாம். இதுகூட எனக்குத் தெரியலையே.. மறந்து போயிட்டேனே!" என்று தன் தலையில் இரண்டு தடவை குட்டிக் கொண்டாள்.

"என்ன மறந்து போயிட்டே?"

"மொதல்லேயே தலைலே குட்டிக்க மறந்து போயிட்டேன். அசட்டுத்தனமா ஏதாவது உளறிட்டா தலைலே குட்டிக்கணுமாம். எல்லாம் 'அவர்' கற்றுக் கொடுத்தப் பழக்கம்."

"எவர்?"

"அதாங்க்கா.. மோகன். ராஜ்மோகன்"

ராஜிக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள்.

அட்டைப்பெட்டிகளிலிருந்து அரைகுறையாக எடுத்துப் போட்டிருந்த சாமான்கள் வேறு ஒரேயடியாகக் களேபரமாகக் காட்சியளித்தன. 'சாயந்திரம் அவர் வரும் போது வீடு 'நீட்'டாகக் காட்சியளிக்க வேண்டாமா?.. முதல் வேலையாக சரஸ்வதி படத்தையும், லஷ்மி படத்தையும் எடுத்துத் துடைத்து ஆணிகள் அடித்து மாட்ட வேண்டும். சாயங்காலம் பூக்காரி வந்தால் இரண்டு முழம் கதம்பச்சுருள் வாங்கி சாற்றினால் கூடத் தேவலை'.

சுவாமி படங்களைப் பெட்டியிலிருந்து எடுத்துத் துடைக்கும் போது சித்ரா அவளாகவே ராஜியின் அருகில் வந்து, "நானும் உங்களுக்குக் கூடமாட ஒத்தாசையாக 'ஹெல்ப்' பண்ணட்டுமா?" என்று கேட்டாள்.

ராஜி ஒரு 'உம்' கொட்டியதோடு நிறுத்திக் கொண்டாள்.

சித்ரா மூலையில் கிடந்த ஒரு கிழிசல் துணியை எடுத்து, அங்கு பரப்பப்பட்டிருந்த படக்குவியல்களிலிருந்து சொல்லி வைத்தாற்போல், 'என்லார்ஜ்' செய்யப்பட்ட பெரிய சைஸ் ராஜ்மோகனின் போட்டோவை எடுத்துத் துடைக்க ஆரம்பித்தாள்.

ராஜிக்கு என்னவோ போலிருந்தது. சொல்லப்போனால் அழுகை கூட வரும் போல ஆகிவிட்டது. இருந்தாலும் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக்கொண்டு மெல்ல சித்ராவுக்குத் தெரியாமல் அவளை நோட்டமிட்டாள்.

அழகழகாக நெளியாக வாரிவிடப்பட்டிருந்த கூந்தல்; கூரிய கண்களுக்கு இடையே அழகான நெற்றி; எடுப்பான மூக்கு; முத்துச்சிப்பி ஒன்றை அளவாக உடைத்துத் திறந்து வைத்தாற்போன்ற வாய்; அதனுள்ளே டாலடிக்கும் வெள்ளை வெளேரென்ற பற்கள்--அதுசரி, அதோ அந்தக் கண்களுக்குள்ளே அலாதியாய் ஜொலிப்பது வெகுளித்தனமா, இல்லை, விஷமத்தனமா?..

"சாயங்காலம் பூக்காரி வருவாளா, சித்ரா?"

"ஓ.." என்று சித்ரா உதட்டைக் குவித்த விதமே அழகாக இருந்தது. "அசட்டு அக்காவா இருக்கீங்களே?.. இந்தத் தெரு பேர் என்ன தெரியுமா? பூக்காரத் தெரு; தஞ்சாவூர் பூக்காரத் தெருன்னா ஊர் உலகமெல்லாம் பிரசித்தம். 'டாண், டாண்'ன்னு கடிகாரத்திலே மணி நாலடிக்க வேண்டியது தான், 'பூ வாங்கலையோ, பூ"ன்னு குரல் கொடுத்திண்டே அவ வந்திடுவா."

"அப்படியா?"

"என்ன அப்படி சுவாரஸ்யம் இல்லாம, கேட்டிட்டீங்க.. நம்ம பொன்னுத்தாயி வரான்னாலே தெருவெல்லாம்.."

"அதுயாரு பொன்னுத்தாயி?.."

"ஐயையே! அவதான் அக்கா, அந்தப் பூக்காரி.. அவ பூதான் ஒசத்தி. தெருக்குள்ளாற நுழைஞ்சா, அடுத்த பத்து நிமிஷத்திலே கூடையெல்லாம் காலியாயிடாதோ?"

ஒருவழியாகப் பாத்திரங்களையெல்லாம் எடுத்து அடுக்கியாகி விட்டது. சித்ரா விளக்குமாற்றை எடுத்து அழகாகப் பெருக்கிக் கொண்டிருந்தாள். ஸ்டவ்வை எடுத்துப் பற்ற வைத்துக் காப்பி போடத் துவங்கினாள் ராஜி.

"பூ வாங்கலையோ, பூ?.."

"அக்கா! பொன்னுத்தாயி வந்திட்டா.. நான் சொல்லலையா? மணியைப் பாருங்க.. என்ன, பார்த்தீங்களா? 'கரெக்டா' நாலு ஆகலை?"

"அது சரி, சித்ரா, பூக்காரியைக் கூப்பிடு. பூ வாங்கலாம்."

"சரிக்கா.." என்று குதித்துக் கொண்டே வாசலுக்கு ஓடினாள் சித்ரா.

ராஜி தன்னையும் அறியாமல் பெருமூச்சு விட்டாள். வந்து ஒருநாள் கூட முழுசாக ஆகவில்லை. அதற்குள் இந்த ஊர் அவளுக்கு வெறுத்து விட்டது. ஜனசந்தடியே இல்லாத ஏதாவது ஒரு வனாந்திரப் பிரதேசத்திற்கு அவளுடைய ராஜ்மோகனோடு ஓடிப்போய் விட்டால் கூடத் தேவலை போலிருந்தது. என்னதான் முன்னாடியே பழக்கமிருந்தாலும் அவளுக்கு மட்டுமே சொந்தமான அவள் கணவனோடு மற்றவர்கள் உரிமை கொண்டாடிப் பழகுவதை அவளால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை.

தான் செய்வது அசட்டுத்தனமாகப் பட்டாலும் வாசல் பக்கம் தான் சித்ரா இருக்கிறாள் என்பதை நிச்சயம் பண்ணிக்கொண்டு, சுவாமி படத்தருகே சென்று, மாங்கல்யச் சரட்டை வெளியே எடுத்து இரு கண்களிலேயும் மாறிமாறி ஒற்றிக் கொண்டாள் ராஜி. 'அம்மா,தாயே, அகிலாண்டேஸ்வரி! என்னோட 'இவரை' எங்கிட்டேயிருந்து மட்டும் பிரிச்சுடாதே! அந்த அதிர்ச்சியை என்னாலே தாங்க முடியாது' என்று தனக்குள்ளேயே சொல்லியும் கொண்டாள்.

வாசல் கதவுப் பக்கம் நிழல் தட்டியது. அவசர அவசரமாகத் தாலிச்சரட்டை ராஜி ரவிக்கைக்குள் திணித்துக் கொள்வதற்கும் சித்ரா குதித்துக் கொண்டே உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

"அக்கா.. அக்கா.. குண்டுமல்லிகையைப் பார்த்தீங்களா.. வாசனை எப்படி ஆளையேத் தூக்கறது.. கொள்ளை மலிவாக்கும்; இத்தனையும் அஞ்சு ரூவா தான்" என்று முகமெல்லாம மலரச் சிரித்தாள் சித்ரா.

"இதோ காசு எடுத்திண்டு வர்றேன்.." என்று காமரா அறைப்பக்கம் திரும்பினாள் ராஜி.

"வேண்டாம்க்கா.. நானே பூக்காரிக்குக் கொடுத்திட்டேன்."

"என்ன, நீயே கொடுத்திட்டையா?"

"ஏன், கொடுக்கக்கூடாதா? கல்யாணமாகி புதுசாக் குடித்தனம் வைச்சிருக்கீங்க; இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேறு. நான் தான் பூ வாங்கித்தந்ததா இருக்கட்டுமே."

"சரி..சரி.. பெரிய அத்தைப் பாட்டி மாதிரி பேசாதே; உனக்கேது காசுன்னு சொல்ல வந்தேன்."

"எல்லாம் 'அவர்' தந்தது தான். ஒரு சாக்லேட் டப்பா நெறையா சேர்த்து வைச்சிருக்கேனாக்கும்."

தீயை மிதித்த மாதிரி இருந்தது ராஜிக்கு.

"என்னடி சொல்றே? யாரு தந்தா?"

"எல்லாம் அவர் தான். ராஜ்மோகன் தான்."

"இனிமே எனக்கு நேரே அவர் பெயரைச் சொல்லாதே; அசிங்கமா இருக்கு."

"ஐயையோ, அவர் பேரா அசிங்கமா இருக்கு! என்னக்கா, இது? ராஜ்மோகன்..
'ஜம்'ன்னு பேர் இல்லை?"

"பேர் நன்னாத்தான் இருக்கு. அதை நீ சொல்றது தான் அசிங்கமாயிருக்கு! பெரியவர்களைப் பேர் சொல்லிக் கூப்பிடக்கூடாதுன்னு உனக்குத் தெரியாது?"

"இதென்ன புதுசா இருக்கு? நீங்க இங்கே வர்றதுக்கு முன்னாடியெல்லாம் அவர் மட்டும் தான் இங்கே இருப்பார்; இந்த வீட்லேதான் பழியா நான் கிடப்பேன். அப்பொழுதெல்லாம் 'ராஜ்மோகன், ராஜ்மோகன்'ந்னு தான் அடிக்கடி அவரைக் கூப்பிட்டு..."

"கூப்பிட்டு?.." என்று ஆத்திரத்தோடு ராஜியால் கேட்காமல் இருக்கமுடிய வில்லை. புருஷன் மீதே அவளுக்கு எரிச்சலாக வந்தது.

"கூப்பிட்டுக் கூப்பிட்டு அவரை படாதபாடு படுத்தி விடுவேன். நான் டென்த் படிக்கிறேனா?.. தினம் எனக்கு இவர் தான் பாடம் சொல்லித் தருவார். இவர் எழுதிக் கொடுக்கற 'ஸம்மரி'க்கு எங்க பிரண்ட்ஸ் மத்திலே ரொம்ப மவுஸ்.. அவர் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் பண்ணி, 'கரெக்டா' ஒப்பிச்சா, காசு கூடத் தருவாருக்கும்! அதான் அப்பப்போ காசு வாங்கிச் சேர்த்து வைச்சிருக்கேன்.
அதிலேயிருந்துதான் இன்னைக்குப் பூவுக்கு..."

"அடப்பாவி!.." வெடித்தே விட்டாள் ராஜி.

"என்ன அக்கா என்ன? பழைய சாமான்களெல்லாம் கிடக்கே. தேள்கீள் கொட்டிடுத்தா?"

"பாவி, உன் வாய் தாண்டி கொட்டிடுத்து.." என்று சீறி விழுந்த ராஜி, வேகமாக வந்து, சித்ராவின் உடை பற்றி கையை ஓங்கியே விட்டாள்.

"அ..க்..கா.." என்று தொண்டையடைக்கக் கேவிய சித்ரா அழுதே விட்டாள். "அக்கா.. எங்க அப்பா கூட என்னைக் கையை நீட்டி அடிச்சதில்லே, அக்கா.. அம்மா இல்லாத நான், அப்பாவுக்குச் செல்லக் குழந்தை, அக்கா! ராஜ்மோகன்--தப்பு,தப்பு--- 'அவர்' கூட என்னைக் கை நீட்டி..."

"'அவர்' என்னடி 'அவர்' வேண்டிக் கிடக்கிறது?.. இனிமே 'அவர்' 'அவர்'ன்னு சொல்லாதே! என்னோட 'அவர்' என்ன உனக்குத் தாலி கட்டின கணவரா, அப்படிப் பாத்யதை கொண்டாட?--"

கண்களில் நீர் மல்க, "அக்கா.. நீங்க என்ன சொல்றீங்க?.." என்று தடுமாறினாள் சித்ரா.

"என்னோட 'அவர்' எனக்கு மட்டும் தான் 'அவர்'ன்னு சொல்றேன்.." என்று ராஜி சொல்லி முடிக்கக் கூட இல்லை, வாசலில் ஷூ சப்தம் கேட்டது.

சடாரென்று கண்களைத் துடைத்துக் கொண்ட சித்ரா, "இப்போத்தான் எனக்குப் புரிகிறது, அக்கா.. என்னை மன்னிச்சிடுங்க.. உங்களோட அவர் வந்திட்டார், போலிருக்கு. நான் வர்ரேன்," என்று வேகமாக வெளியே ஓடிவிட்டாள்.

உள்ளே நுழைந்த ராஜ்மோகன்,"எங்க ராஜின்னா என்ன கொக்கோன்னான்! அதுக்குள்ளாற சித்ராவை 'பிரண்ட்ஷிப்' பிடிச்சாச்சா.. அது சரி, அவ ஏன் நான் கூப்பிடக் கூப்பிடப் பதில் பேசாமல் ஓடறா?.."என்று திகைத்தான்.

"வெட்கமாக இருக்கும்.." என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ராஜி.

"என் ராஜி கண்ணுக்கும் அதே கதை தான் போலிருக்கிறது" என்று அவள் கன்னத்தைத் திருப்பினான் ராஜ்மோகன்.

"க்குங்.." ராஜிக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

ன்று இரவு.

ராஜ்மோகன் தன் குடும்ப போட்டோ ஆல்பத்தை சித்ராவிடம் காட்டிக் கொண்டிருந்தான். பெரியப்பா, சித்தப்பா, தாடி தாத்தா, கான்வகேஷன் டிரஸ்ஸில் ராஜ்மோகன் என்று ஒவ்வொரு படமாகப் பார்த்து அவள் புரிந்து ரசித்துக் கொண்டிருக்கையில், ஒரு குரூப் போட்டோவில் எடுப்பாக இருந்த தாவணிப் பெண்ணைப் பார்த்துத் திகைத்து, "சித்ரா எப்படிங்க இந்த போட்டோலே?" என்று லேசாக உரத்துக் கூவியே விட்டாள்.

"சித்ரா இல்லை ராஜி அது.."என்று இழுத்த ராஜ்மோகனின் குரல் உடைந்திருந்தது. அது என் ஒரே தங்கை கனகா" என்றவன் கண்களில் முட்டி நின்ற நீரைத் துடைத்துக் கொண்டான்."கனகா எங்களை விட்டுப் பிரிந்து பத்து வருஷத்துக்கு மேலாச்சு.. கண்டுபிடிக்க முடியாத விஷஜூரம். நாங்கள் அப்போது ஊட்டியில் இருந்தோம். ம்ஹூம்" என்று பெருமூச்சு விட்டான்."அப்படியே அச்சு போல சித்ரா மாதிரி இருக்காப் பாரு.. என்ன உருவ ஒற்றுமை பாரு.. இந்த ஊருக்கு வந்த போது இங்கே இந்த சித்ராவைப் பார்த்து திகைத்துப் போய்விட்டேன். இறைவனே இறந்து போன என் தங்கையை எனக்குத் திருப்பிக் கொடுத்த மாதிரி தான் நினைக்கிறேன்" என்றவன் திடீரென்று உணர்ச்சி மேலிட்டு ராஜியின் இரு கரங்களையும் இறுக்கப் பற்றிக் கொண்டான்."ராஜி! நான் உங்கிட்டே ஒண்ணு கேப்பேன். என்னோட கூடப்பிறக்காத தங்கை இவள் ஏதாவது தப்பித் தவறி தவறு செய்து விட்டாலும் முகம் சுளிக்காமல் அவள் மேல் அன்பு செலுத்துவாயா, ராஜி?"

மழை விட்டு வானம் வெளிறியிருந்தது. வெள்ளை மேகக்கூட்டங்களினூடே சந்திரன் 'பகபக'வென்று சிரித்துக் கொண்டிருந்தான்.

தெளிவடைந்த ராஜி, 'ஐயோ' என்று ஊமை அழுகை அழுதது ராஜ்மோகனுக்குத் தெரியாது.
Related Posts with Thumbnails