ஆன்மிகத்தின் அடுத்த கட்டம் நோக்கி ....
8. ஊகங்களும் உண்மைகளும்
"கிருஷ்ணமூர்த்தி சார், அவரது கனவு அனுபவங்களை விவரித்த விதம் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டது.." என்று சொல்ல ஆரம்பித்தார் பூங்குழலி. "அவர் ஆரம்பித்து வைத்ததைத் தொடர்கிறேன்.. முண்டக உபநிஷதம் படம் பிடித்துக் காட்டும் அந்தப் பறவைகள், என் மனத்திலும் அழியாச் சித்திரமாய் படிந்த ஒன்று. உபநிஷத்துக்களைப் பற்றி எங்கே உரையாற்றினாலும், அந்தப் பறவைகளைப் பற்றிச் சொல்லாமல் இருக்க மாட்டேன். அந்த அளவிற்கு அந்தப் பறவைகள் என் உள்ளத்தைக் கவர்ந்தவை. கவர்ந்தவை என்பதைத் தாண்டி அந்தப் பறவைகளுக்கு ஆன்மிகக் கல்வியில் ஒரு நிரந்தர இடம் உண்டு" என்று பூங்குழலி சொல்லிக் கொண்டு வருகையிலேயே கேட்பவர்களுக்கு அவரது பேச்சில் ஒரு சுவாரஸ்யம் ஏற்பட்டு விட்டது.
"எதனால் அப்படி அவை பெருமை பெற்றன என்று நீங்கள் கேட்கலாம். அந்த இரண்டு பறவைகளும் உண்மையையும், உண்மையற்ற ஒன்றையும் பிரித்துக் காட்டுவதற்காக எடுத்தாளப்பட்டவை. உண்மையான ஆன்மா நம்மில் கொலுவீற்றிருக்கையில், உண்மையல்லாத இந்த 'நானை' நானாக நாம் நினைத்துக் கொண்டிருப்பதைச் சொல்ல வந்த ஜோடிப் பறவைகள் அவை. மரத்துப் பழத்தைத் தின்னாத ஒரு பறவையையும், பழத்தை ருசித்துத் தின்னும் ஒரு பறவையையும் நமக்குக் காட்டி, வெகு அழகாக நம்முள் உறைந்திருக்கும் ஆன்மாவையும், இன்ப துன்பங்களை அனுபவிக்கிற 'நானை' யும், வேறுபடுத்திக் காட்டுகிறார் முனிவர்.
"மரம், அதன் மேல்-கீழ்க் கிளைகளில் உட்கார்ந்திருக்கிற இரு பறவைகள், அதில் ஒன்று பழத்தை கொத்தி உண்பதாகவும், இன்னொன்று அப்படிச் செய்யாமல் 'தேமே'னென்று இருக்கிற மாதிரியும் ஒரு சித்திரத்தை வரைந்து காட்டும் பொழுது அந்தச் சித்திரத்தில் மயங்கி நம் கவனம் முழுதும் அதில் தோய்ந்து போய்விடுகிறது.. உண்மைதான். அதைத் தாண்டி, அந்த சித்திரம் சொல்லும் சேதி ஒன்று இருக்கிறதல்லவா, அந்தச் சேதிக்குப் போகவேண்டும். சித்திரத்திலேயே தேங்கிவிட்டோமென்றால், இரண்டு அழகுப் பறவைகள் தாம் கண்களுக்குத் தெரியுமே தவிர, அந்தப் பறவைகளைக் காட்டி சொன்ன சேதியை உணரமாட்டோம்.
"அந்தப் பறவைகள் சொல்ல வந்த செய்தி நினைவில் படிந்து விட்டால், பறவைகள் கண்களுக்குத் தெரியாது.. பறவைகள் நினைவிலிருந்து மறைந்து சொன்ன செய்தி முக்கியமாகிப் போகும். பறவைகள் சிந்தையில் மறைந்து விட்டதென்றால், அவற்றிற்கு பதில் ஒன்று ஆத்மா, இன்னொன்று ஜீவன் என்று நினைவில் படிந்து விடும். அப்படி நினைவில் படிந்து போனதால் தான், கிருஷ்ணமூர்த்தி சாருக்குக் கூட, தனக்கு ஏற்பட்ட அந்தக் கனவிலும் கூட, 'ஒரு புறாதான் ஆத்மா, இன்னொண்ணு ஜீவனோ' என்கிற நினைப்பு அவர் மனசிலே ஓடறது. அவர் நினைவிலே பதிஞ்ச இந்த ஆத்மா, ஜீவன் நினைவு கனவிலேயும் பளிச்சிடறது...
"அப்போ, ரொம்ப சின்னஞ்சிறு வயசிலே மாலு சொல்லி நான் கேட்ட சிபி சக்ரவர்த்தி கதை புறாகூட என் கனவிலே வந்ததே?.." என்று தயக்கத்துடன் இழுத்தார் கிருஷ்ணமூர்த்தி.
"அதுதான் விசேஷம். முண்டக உபநிஷத்து பறவைகள் கதையை நீங்கள் கேட்டதின் அடிப்படையில் உங்கள் மனத்தில் பதிந்த பறவைகள், கனவில் புறாக்களாகி விட்டன. அதற்குக் காரணம் பால்ய வயதில் நீங்கள் கேட்ட அந்தப் புறாக்கதை. உண்மையில் அந்த வயதில் புறா என்றால் எப்படியிருக்கும் என்று கூட உங்களுக்குத் தெரியாதிருக்கலாம். அந்தப் புறாவிற்காக அந்தச் சிறுவயதில் நீங்கள் பரிதாபப்பட்டதின் வீச்சு, மனத்தில் ஆழமாகப் பதிந்து பறவை என்றாலே புறாவைப் பற்றிய நினைவுகளைக் கோர்க்கும் தன்மயச் செயல்பாடாக மனத்தில் பதிந்து விட்டது.. அதனால் தான் முண்டக உபநிஷத்துக் கதைப் பறவையைப் பற்றிக் கேட்டு அது மனத்தில் பதிந்து அன்றைய இரவே உங்களிடத்து கனவாக மீளும் பொழுது, அதற்கு முன்னால் கேட்டு பரிதாபப்பட்ட சிபி சக்ரவர்த்தி கதையின் புறாவை நினைவுக்கு இழுத்து வந்து இதனுடன் கோர்த்து கதையின் நீட்சியாக இது அமைந்து விட்டது. பறவைகள் என்று நான் அன்று காலை எனது உரையில் குறிப்பிட்டதும் உங்கள் கனவில் புறாக்களாகி விட்டன."
பிரமித்து நின்றிருந்த கிருஷ்ணமூர்த்தி தன்னை அறியாமல் கைதட்டினார். மிக்க ரசனையுடன், மிக மென்மையாகத் தான் அவர் கைதட்டினார் என்றாலும் அமைதியாக இருந்த அந்த அவையில் வெகு தெளிவாக அந்த அவரது கைத்தட்டல் எல்லோருக்கும் கேட்டது.
"பூங்குழலி அம்மா! நீங்கள் சொன்னதை வெகுவாக நான் ரசித்தேன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி. "நான் சொன்ன விஷயங்களை எவ்வளவு தீர்க்கமாக நீங்கள் கவனித்திருந்தால், இந்தளவுக்கு என் வாழ்க்கையில் முன்னால் நடந்தவை, பின்னால் தெரிந்தவை எல்லாவற்றையும் முன்னே பின்னே வைத்துக் கோர்த்து கோர்வையாக இது இதனால் என்று தெள்ளந்தெளிவாகச் சொல்ல முடியும் என்று ஆச்சரியப்பட்டு நான் நிற்கிறேன்.. இத்தனைக்கும் நடுவே பின்னாடி நடந்த சில நிகழ்வுகளுக்கு ஏதாவது குறிப்பிட்டக் காரணம் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை.." என்றார்.
"சொல்லுங்கள், சார்! எந்த நிகழ்வுகள்?.."
"அதான்! அன்றைய இரவு, விழிப்பு வந்ததும் என் அறைக்கு வெளி மரக்கிளைகளில் சிறகடித்துப் பறந்த புறாக்களை நான் பார்த்தது... அப்புறம் அடுத்தாப்பலே அரியலூருக்கு நான் போனில் பேசினபோது, அங்கும் புறாக்கள் வந்து போவதாக மாலு எனக்குச் சொன்னது-- இதெல்லாம் தான்!"
"எஸ்.. உண்மையில் என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. லேசான அரைத்தூக்கக் கலக்கத்தில், விழிப்பும் தூக்கமும் கலந்த ஒரு நிலையில், மஹாதேவ் நிவாஸ் மரக்கிளைகளில் புறாக்களை நீங்கள் பார்த்து விட்டீர்கள். நிஜத்தில் புறாக்களைப் பார்த்த அந்த நொடித்தான், அன்றைய உங்கள் கனவின் ஆரம்ப நொடி.. அதன் தொடர்ச்சிதான் இந்த முழுக்கனவின் வலைப்பின்னல்"
"அப்படியா?" என்று திகைத்து அதிசயத்தார் கிருஷ்ணமுர்த்தி. "எப்படி இவ்வளவு நிச்சயமாக உங்களால் அதைச் சொல்ல் முடிகிறது?"
"நிச்சயமாக என்று சொல்லமுடியாது.. ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான். ஆழ்ந்த தூக்க நிலையே நம் எல்லோருக்கும் ஒன்றிரண்டு மணிகளுக்கொரு முறை மாறிக் கொண்டே இருக்கிறது.. நினைவும் தூக்கமும் கலந்த ஒரு நிலையில், நிஜமாக நீங்கள் புறாக்களைப் பார்த்தது தான், இந்தக் கனவை ஆரம்பித்து வைத்திருக்க வேண்டும் என்று ஒரு உத்தேசத்தில் தான் சொன்னேன்."
"ஓ! நீங்கள் உத்தேசத்தில் சொல்வது கூட அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம்பும் படியாக இருக்கிறதே, அது எப்படி?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார் கிருஷ்ணமூர்த்தி.
அதைக் கேட்டு பூங்குழலியும் சிரித்து விட்டார். "பேச எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் கொள்ளும் ஆழ்ந்த ஈடுபாடு அதற்குக் காரணமாக இருக்கலாம்.. நீங்கள் சொல்வதை எனக்கான பாராட்டாக நீங்கள் சொன்னதாக நான் எடுத்துக் கொள்ளலாமா, சார்?" என்று பவ்யமாகக் கேட்டார் பூங்குழலி.
"நிச்சயமாக.." என்று கிருஷ்ணமூர்த்தி சொன்ன பொழுதே, மாலு எழுந்திருந்து, "பூங்குழலி! நீங்கள் பேசும் பொழுது அடிக்கடி நாங்கள் உணர்வது அது!" என்றார்.
"லேசான விழிப்பு போன்ற நினைவுகளுடனான 'ரெம்' நிலையில் தான் கனவு காணும் சாத்தியப்பாடு இருப்பதால், நீங்கள் யூகமாகச் சொல்வது உண்மையாகக் கூட இருக்கும்.." என்றார் சிவராமன்.
அந்த சமயத்தில் அவையே திரும்பி சிவராமனைப் பார்த்தது.. "சிவராமன் சொல்வது சாத்தியமானதே.." என்றார் உயிரியல் அறிஞர் உலகநாதன்.
"என் யூகமும் அந்த அடிப்படையிலேயே அமைந்தது" என்றார் பூங்குழலி சொன்ன பொழுது சிவராமன் புன்னகைத்தார்.
(தேடல் தொடரும்)
2 comments:
எதனால் அப்படி அவை பெருமை பெற்றன என்று நீங்கள் கேட்கலாம். அந்த இரண்டு பறவைகளும் உண்மையையும், உண்மையற்ற ஒன்றையும் பிரித்துக் காட்டுவதற்காக எடுத்தாளப்பட்டவை. உண்மையான ஆன்மா நம்மில் கொலுவீற்றிருக்கையில், உண்மையல்லாத இந்த 'நானை' நானாக நாம் நினைத்துக் கொண்டிருப்பதைச் சொல்ல வந்த ஜோடிப் பறவைகள் அவை. மரத்துப் பழத்தைத் தின்னாத ஒரு பறவையையும், பழத்தை ருசித்துத் தின்னும் ஒரு பறவையையும் நமக்குக் காட்டி, வெகு அழகாக நம்முள் உறைந்திருக்கும் ஆன்மாவையும், இன்ப துன்பங்களை அனுபவிக்கிற 'நானை' யும், வேறுபடுத்திக் காட்டுகிறார் முனிவர்.//
அருமையான விளக்கம்.
@ கோமதி அரசு
தங்கள் பகிர்தலுக்கு நன்றி. தொடர்ந்து வர வேண்டுகிறேன்.
Post a Comment