மின் நூல்

Monday, October 17, 2011

பார்வை (பகுதி-2)

                      அத்தியாயம்--2       

'கா, கா'ன்னு அடித்தொண்டை விரியக் கத்திண்டு போறதே, இந்தக் காக்கையை எந்த ஊரிலே கொண்டு போய் விட்டாலும், அது தான் வாழ்ந்த பிரதேசத்திற்கே வந்திடுமாம்; அதே போலத் தான் இந்த மனசும். எப்படில்லாமோ வளைய வளைய எங்கே செலுத்தினாலும், அந்த சபா நிகழ்ச்சிக்குத் தானே வந்து சேர்றது? சே! அதை நெஞ்சுக்குள்ளேயே போட்டுப் புதைச்சிக்கணும்னா அது நடக்கற காரியமாத் தெரியலையே?... 'ங்கொய்..'ன்னு வண்டு சுத்துமே, அது போலத் திருப்பித் திருப்பி.........

சும்மா சொல்லக்கூடாது. அத்தனையும் உண்மை. நேத்திக்கு சபாலே நல்லக் கூட்டம்னு தான் அந்த கசகசலேந்து தெரிஞ்சிக்க முடிஞ்சது... சுசீலா பாட்டு, அதோடு விவேகானந்தன் பிடில்ன்னு வேறு தெரிஞ்சதோ, இல்லையோ, அதான் அப்படி ஒரு கூட்டத்துக்குக் காரணம்.

அந்த விவேகானந்தனோட பிடில் தான் அவ பாட்டோட எவ்வளவு அழகா இழைஞ்சு போறது? சுசீலா சாரீரம் கூட அவன் பிடிலுக்கு ஏத்தாப்பலே குழைஞ்சு-- வாழ்க்கைலே சுசீலாக்கும் எனக்கும் ஏற்பட்ட பந்தம் மாதிரி, சங்கீதத்திலே அவா ரெண்டு பேருக்கும் ஏற்பட்ட ஒரு பாந்தமாய் இது தெரியறது..

முன் வரிசை சோபாலே தான் உக்கார்ந்திருந்தேன். அந்த விவேகானந்தனோட தம்பி தான் கையைப் பிடிச்சிண்டு வந்து என்னை உக்காத்தி வைச்சான். எப்பவுமே நா இப்படித்தான். அவள் கச்சேரிக்கு அவளோடையே வந்துடுவேன். சங்கீதத்லே எனக்கிருக்கிற மோகம் என்னைப் பிடிச்சு இந்த நிலைலேயும் ஆட்டிண்டு தான் இருக்கு.

"தாயே யசோதா.." கீர்த்தனையில்,

"காலினில் சிலம்பு கொஞ்ச
கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு
வாசலில் வந்தான்.."

----ங்கற இடத்திலே சுசீலா அற்புதமா நிரவல் செஞ்சு அமுத கானத்தைப் பொழிஞ்சா. 'தாயே யசோதா' கீர்த்தனமும், 'ஒருமையுடன்'ங்கற இராகமாலிகை பாடலும், 'பாருக்குள்ளே நல்ல நாடு', 'ஆசைமுகம்'ன்னு பாரதியார் பாடல்களும் நேத்திக்கு காலைலே பூஜை அறைலே உக்கார்ந்து சுசீலா மெய்மறந்து பாடிண்டு இருக்கறச்சையே சாயந்திர கச்சேரிலே இதெல்லாம் வரும்னு தெரியும்.

விவேகானந்தனோட பிடில் அன்னிக்கு ஏ ஒன்! அதுவும் பின்னாடி ராகம்-தானம்-பல்லவியில் சங்கராபரணம் இழைஞ்சப்போ இந்த வயசிலே இவ்வளவு ஞானமான்னு பிரமிப்பு தான் ஏற்பட்டது.. நாத சுகத்திலே மெய்மறந்து, லயிச்சு, கட்டுண்டு அந்த இசைக்கே தன்னைத் தத்தம் கொடுத்த மாதிரி அவன் வாசிச்சப்போ மனசெல்லாம் எங்கையோ இழுத்திண்டு போனது.

வாசஸ்பதி ராகத்தை சுசீலா அற்புதமா தன் குரல்லே இழையவிட்டு, கம்பீரமா 'பராத்பரா' கீர்த்தனம் பாடி, நிரவலை 'அரி அயனும் காணா அரிய ஜோதி'யில் செஞ்சு, 'தத்தா', 'தத்தா' என்ற தைவதத்தில் அடிக்கடி வந்து நின்னு பாடினப்போ எனக்கு 'அம்மாடி'ன்னு இருந்தது. ஆபோஹி ராகம் ஆலாபனம் செஞ்சு 'கிருபாநிதி'ன்னு ஸ்வரப் பிரஸ்தாரம் செஞ்சப்போ, சபாவே கட்டுண்ட மாதிரி அப்படி ஒரு அமைதி.

பின்னாடி அற்புதமான சங்கராபரண ராகத்தை விஸ்தாரமா, கம்பீரமா ஆலாபனம் செஞ்சு, 'தூக்கிய திருவடி' கிர்த்தனையில் 'எத்தனையோ பிறவி'யில் நின்று நிரவல் செஞ்சப்போ கச்சேரி களை கட்டிடுத்து. அந்த நிரவலோட அழகும், பின்னாடி வந்த ஸ்வர பிரஸ்தாரத்தையும் நெக்குருக நெஞ்சாரப் பருகிக் கொண்டிருக்கச்சே தான் ஒரு குடம் பால்லே ஒரு துளி விஷம் கலந்திட்ட திடுக்கிடல் என்னைச் சாச்சுப் போட்டது.

பின்னாடி முணுமுணுத்த குரல்கள் நாராசமாய் என் செவிப்பறைய கிழிச்சு, கீழே கால் ஊனிண்டிருந்த பூமி பிளந்து அதல பாதாளத்தில் என்னை அமிழ்த்திய மாதிரி இருந்தது.

"கட்டின புருஷன் கெட்டான் போ! பாடறச்சேயே அந்த விவேகானந்தனைப் பாக்கறச்சேலாம் புன்முறுவலோட அவ பாடறதைப் பாத்தையாடீ?"

"பாத்து முறைக்கறத்துக்கு புருஷனுக்கு சக்தி இருந்தாத்தானேடீ? அவன் தான் கபோதி ஆச்சேங்கற தைரியம் அவளுக்கு."

"கச்சேரிலேல்லாம் பக்க வாத்தியக்காராளைப் பாத்து அப்படிச் சிரிச்சிண்டே பாடறது வழக்கம் தான்.. எல்லாம் டீம் ஸ்பிரிட்.. உற்சாகம் கொடுக்க வேண்டி.."

"நல்ல உற்சாகம் கொடுத்தாங்க போ!.. எனக்கு ஏதாவது வாயிலே வந்திடப் போறது.."

"என்னதான் ஆயிரம் இருந்தாலும் பொம்பளைன்னா கொஞ்சம் கட்டுப்பாடு வேணும்டி. திரைக்கு பின்னாடி இதெல்லாம் வைச்சிக்கட்டுமே?.. யார் வேணாங்கறது?.. இப்படியா பொது மேடைலே காட்டிப்பா.."

"அவளை விட்டுடுடி! அவனுக்கானும் கொஞ்சம் தெரிய வேண்டாமோ?.. ஏதுடா, கல்லாட்டமா புருஷன் தன் எதிரிலேயே உக்காந்திருக்கானேன்ட்டு?.. எல்லாம் காலம் செய்யற கோலம்."

"சேச்சே! அவ வயசு என்ன? அவன் வயசு என்ன?.. பாக்கறத்துக்கு அவ தம்பி மாதிரி இருக்கான்! மிஞ்சி மிஞ்சிப் போனா, இருபது--இருபத்திரண்டு இருக்குமா?..அந்தப் பையனைப் போய்..."

"இவளுக்குக் கூட, என்ன முப்பதைத் தாண்டியிருக்கும்ங்கறே?.. இல்லை, மேக்-அப் மறைச்சுக் காட்டறதா?"

"முப்பத்தைஞ்சுக்கு மேலே தான்! புருஷனைப் பாத்தா நாப்பதைத் தாண்டியிருப் பான்னு நன்னா தெரியறது.."

ஈரத்துணியை முறுக்கின மாதிரி இதயம் முறுங்கினதும், இரத்தம் தான் வடிஞ்சிருக்கணும். இல்லேனா, நெஞ்சிலெ ஏன் இப்படி ஒரு வலி?.. 'பெண்களே! ஒரு பெண்ணைப் பற்றி இப்படியெல்லாம் பேச எப்படி முடிகிறது உங்களால்?..' என்று பேச்சு வந்த பக்கம் திரும்பிக் கத்த உதடுகள் படபடத்தன.. கைகள் பரபரத்தன.. இமைகள் தான் படபடத்ததே ஒழிய, பார்வை பதிக்க முடியாத இயலாமை மனசை வாட்டி எடுத்தது...

சாதாரணமா இன்னொருத்தரைப் பத்தி ஒரு வம்பு மாதிரி பேசறது, எவ்வளவு மட்டமா அந்த இன்னொருத்தரைப் பாதிக்கறதுன்னு இவங்களுக்கு ஏன் தெரியமாட்டேங்கறதுன்னு குமைஞ்சு போயிட்டேன். அதுவும் இந்தக் கச்சேரியின் நாயகியான ஒரு பெண்ணைப் பத்தி இப்படி அபாண்டமா பேசிச் சிரிக்கணும்னா அவங்க எவ்வளவு நாகரிகமில்லாதவங்களா இருப்பாங்கன்னு நினைச்சுப் பாக்க நினைச்சுப் பாக்க ஆத்திரமா வந்தது.. இதைப் பொருட்படுத்தக் கூடாதுன்னு அலட்சியமா நினைக்கணும்னாலும், என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் இதைக் கேட்டு, கேட்டதும் இல்லாம அப்படியும் இருக்குமோன்னு இளக்காரமாய் எடை போட்டு... ஈஸ்வரீ! என்னம்மா இதெல்லாம்..'ன்னு மனசு கலங்கிப் போச்சு.

அத்தனை கலக்கத்திலும் உள்ளறிவு விழிச்சிண்டுதான் இருந்தது. இப்படி இவங்க நாலு பேருக்குக் கேக்கற மாதிரி பேசணும்னா அதுக்கும் ஏதோ காரணம் இருந்தே ஆகணும்னு புத்தி சலனப்படாம யோசிச்சது. சுசீலாவோட ஈடு இணையற்ற சங்கீத ஞான்ம் இவங்களைப் பொறாமைப் பட வைச்சிருக்குமா?.. அதனால் தான் இப்படிப் புழுதி வாரித் தூத்தறாங்களா?.. இல்லே, இப்படி இவங்களைப் பேச வைச்சதே வேறே யாரோவானுமா இருக்குமா?.. சுசிலா பாட்டு- விவேகானந்தன் பிடில்னா, சபை நிறைஞ்சு வழியறதைப் பாக்கப் பொறுக்காத யாரேனும்...

எனக்குக் கண்ணு தான் போச்சே தவிர, காதெல்லாம் கேட்டுண்டு தானே இருக்கு?.. கண்ணு போனது தான், அவங்களுக்கு அந்தத் துணிச்சலைக் கொடுத்திருக்கு. காது போகாதது தான் அவங்களுக்கு சாதகமா போயிடுத்து.. இவ்வளவு பக்கத்திலே உக்காந்திண்டு இவ்வளவு கேவலமா என்னோட பெண்டாட்டியைப் பத்திப் பேசணும்னா, அது எனக்குக் கேக்கணும்னு தான் வேணும்னே செஞ்சிருக்கறதா உள்மனசு ஓங்காரமிட்டது... கண்ணு போனதுமில்லாம, தாலி கட்டின புருஷன் பைத்தியம் பிடிச்சு அலையட்டுமேங்கற எண்ணமா?..

யோசிக்க யோசிக்க ஒண்ணு தெளிவாத் தெரிஞ்சது... பாக்கற வெளிப்பார்வை வெறும் பாக்கறதின் பிரதிபிம்பமா ஒரு உருவத்தைத்தான் கொடுக்குமே தவிர, அது என்ன ஏதுன்னு தெரியப்படுத்தறத்துக்கு மூளை தான் ஒத்தாசை செய்யணும்னு தோணித்து. சாதாரண பொருளைப் பாக்கறத்துக்கே இப்படின்னா, பாத்ததை ஊடுருவிப் பாத்து உள்ளார்ந்து உள்விஷயத்தை அலசி ஆராயணும்னா, வெறும் இந்தக் கண்பார்வை மட்டும் இருந்தாப் போதானுன்னு புரிஞ்சு போச்சு. 'கண்ணிருந்தும் குருடர்களாய்'ன்னு யாரோ சொல்லியிருக்காளே! அதான்!
பார்வைங்கறது வேறே ஒண்ணு! வெறுமனே பாக்கற விஷயம் மட்டுமே இல்லே! வெறுமனே பாக்கறது போட்டோ பிடிக்கிற மாதிரியான ஒண்ணு.. ஆனா பார்வைங்கறது அது மட்டுமே இல்லே.. அதைத் தாண்டின ஒண்ணு. அது ஞானம் சம்பந்தப் பட்ட ஒண்ணு'ன்னு ஏதேதோ நெனைச்சிண்டிருகறச்சே, கச்சேரி முடிஞ்சதேத் தெரியலே..

"பெரிப்பா.. எப்படி இருக்கேள்?.."ன்னு நெருக்கத்லே குரல் கேட்டதும், நினைவு இழைகள் அறுந்து அத்தனை குரூரங்களையும் மறந்து மனசு மலர்ந்தது.

"யாரு.. சங்கரியா.. எப்போ வந்தேம்மா?"

"நான் அப்பவே வந்திட்டேம்ப்பா.. அந்தப் பக்கம் உக்கார்ந்திருந்தேன்."

"கூட அம்மா வந்திருக்காளா?"

"இல்லேப்பா. நீ போய்ட்டு வான்னு அம்மா சொல்லிட்டா. நான் மட்டும் தான் வந்திருக்கேன். பெரிம்மா தான் கட்டாயம் வந்திடணும்னு சொன்னா.. அவர் பிடில் வேறேயா?.. எப்படி வராம இருக்க முடியும், சொல்லுங்கோ.."

"நீ சொல்றது சரிதான். விவேகானந்தனோட அப்பா, உங்கப்பாவோட சிஷ்யன் தான்.. தெரியுமோல்யோ?"

"அப்பா சொல்லித் தெரிஞ்சது தான். 'அப்பா போலவே பையனும்; அதே அடக்கம்,
அதே பதவிசு; நன்னா வருவான்'ன்னு அப்பா அடிக்கடி சொல்வார்."

"அப்படியா?.. நல்ல குணங்கள்லாம் வளர்றத்தேயும் வளர்ப்புலேயும் கூட வந்து ஒட்டிக்கறதுன்னாலும், அந்த சங்கீத ஞானத்தைச் சொல்லுமா.. சோழநாடு, தஞ்சாவூர்ன்னா அத்தனையும் தன்னாலே வரும் போலிருக்கு.."ன்னு நா சொல்லிண்டிருக்கறச்சேயே, சுசீலா குரல் கேட்டது.

"சங்கரி! நன்னா தாளம் போட்டு ரசிச்சிண்டு உக்கார்ந்திருந்தியே?.. மேடைலேந்து நன்னாத் தெரிஞ்சே.. போதாக்குறைக்கு 'சங்கரி வந்திருக்காங்க. பாத்தீங்களாம்மா' ன்னு விவேகானந்தன் வேறே எங்கிட்டே கேட்டான்.." என்று சுசீலா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, "நமஸ்காரம், ஐயா!"ன்னு விவேகானந்தனின் குரல் பக்கத்தில் கேட்டது. சங்கரிக்கோ, 'வந்திருந்தாங்க'ன்னு விவேகானந்தன் தன்னை மரியாதையோடு பேசினதைக் கேட்டதே கூச்சத்தைக் கொடுத்து நாணத்தில் அவள் தலை கவிழ்ந்தது.

கை நீட்டி கைபற்றி விவேகானந்தன் தோள் தொட்டு அ வனை ஆசிர்வதித்தேன். "நன்னா இருக்கணும்.. இன்னிக்கு பிரமாதப்படுத்திட்டேப்பா.. என்னிக்கும் அப்படித்தான்னாலும் இன்னிக்கு ஒரு படி மேலேன்னு தோணித்து.. கண் பார்வை வேறே இல்லியா?.. மேடைலே வாசிச்சது 'நீ'ங்கற-- பார்வைலே உருவம் பட்டு நிச்சயப்படுத்தற சமாச்சாரம் கூட இல்லே இல்லையா?-- அதுனாலே நீதான் வாசிக்கறேங்கற நெனைப்பே போயிடுத்து. சங்கதி, சஞ்சாரம் அந்த நெளிவு சுளிவு எல்லாம் அப்படியே டிட்டோவா உங்கப்பா தான்.. ஒண்ணு எனக்குத் தெரிஞ்சாகணும். பிடில்ங்கறது பேசக்கூட செய்யுமாப்பா.. அது எப்படிப்பா பேசறது?.. அதைப் பேச வைக்கறது நீங்கறதாலே கேக்கறேன்.. பரம்பரை பரம்பரையா படிஞ்சு போன இந்த கலை ஞானம்லாம் வாரிசு சொத்து மாதிரி இருக்குப்பா.. அப்பாக்கு பிள்ளை, பிள்ளைக்கு அவன் பிள்ளைன்னு ஸ்தாவர சொத்துக்கள்லாம் டிரான்ஸ்வர் ஆகி வருமே, அது போல கருவிலேயே திரு போல இதெல்லாம் டிரான்ஸ்வர் ஆகிடுமோ?.. நீ என்ன சொல்றே?"ன்னு நான் அவன் கிட்டே கேட்ட போது, "எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்களோட ஆசிர்வாதம்"ன்னு அடக்கமாச் சொன்னான் விவேகானந்தன்.


(இன்னும் வரும்)





26 comments:

இராஜராஜேஸ்வரி said...

பரம்பரை பரம்பரையா படிஞ்சு போன இந்த கலை ஞானம்லாம் வாரிசு சொத்து மாதிரி இருக்குப்பா.. அப்பாக்கு பிள்ளை, பிள்ளைக்கு அவன் பிள்ளைன்னு ஸ்தாவர சொத்துக்கள்லாம் டிரான்ஸ்வர் ஆகி வருமே, அது போல கருவிலேயே திரு போல இதெல்லாம் டிரான்ஸ்வர் ஆகிடுமோ?.. நீ என்ன சொல்றே?"ன்னு நான் அவன் கிட்டே கேட்ட போது, "எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்களோட ஆசிர்வாதம்"ன்னு அடக்கமாச் சொன்னான் விவேகானந்தன்.

அழகான பார்வை. பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

இந்த மாதிரி வம்பு பேசுபவர்களைப் பற்றி நினைக்கையில் அவர்கள் மனதில் இருக்கும் கள்ளங்கள்தான் அடுத்தவரைப் பற்றியும் அதே ஓட்டத்தில் வெளிப்படும் என்று தோன்றும். கச்சேரியை கவனிக்காமல் இந்த மாதிரி வம்புகளும் புடைவை நகைகளைப் பற்றியும் அரட்டைகளை சபா கச்சேரிகளில் நிறையக் காணலாமே.. பார்வை பற்றிய நிரவல் பிரமாதம். .

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு குடம் பால்லே ஒரு துளி விஷம் கலந்திட்ட திடுக்கிடல் என்னைச் சாச்சுப் போட்டது.
பின்னாடி முணுமுணுத்த குரல்கள் நாராசமாய் என் செவிப்பறைய கிழிச்சு, கீழே கால் ஊனிண்டிருந்த பூமி பிளந்து அதல பாதாளத்தில் என்னை அமிழ்த்திய மாதிரி இருந்தது.
"கட்டின புருஷன் கெட்டான் போ! பாடறச்சேயே அந்த விவேகானந்தனைப் பாக்கறச்சேலாம் புன்முறுவலோட அவ பாடறதைப் பாத்தையாடீ?"
"பாத்து முறைக்கறத்துக்கு புருஷனுக்கு சக்தி இருந்தாத்தானேடீ? அவன் தான் கபோதி ஆச்சேங்கற தைரியம் அவளுக்கு."//

எவ்வளவு ஒரு கொடூரமான பேச்சுக்களை அந்த கண்பார்வையில்லாதவர் கேட்க வேண்டிய கஷ்டம். படிக்கும் போதே என் மனம் வருந்தியது, இந்த இடத்தில்.

//நீ என்ன சொல்றே?"ன்னு நான் அவன் கிட்டே கேட்ட போது, "எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்களோட ஆசிர்வாதம்"ன்னு அடக்கமாச் சொன்னான் விவேகானந்தன்.//

பெரியவருக்கு கண் பார்வை இல்லாவிட்டாலும் அழகான ஞான்ப்பார்வை உள்ளது. பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றிகள். தொடருங்கள்.

சார்வாகன் said...

அருமை,பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

பார்வைங்கறது வேறே ஒண்ணு! வெறுமனே பாக்கற விஷயம் மட்டுமே இல்லே! வெறுமனே பாக்கறது போட்டோ பிடிக்கிற மாதிரியான ஒண்ணு.. ஆனா பார்வைங்கறது அது மட்டுமே இல்லே.. அதைத் தாண்டின ஒண்ணு. அது ஞானம் சம்பந்தப் பட்ட ஒண்ணு'ன்னு //

சாதாரண கண்ணால் பார்க்க முடியாது.
ஞானக் கண் வேண்டும்.

பார்வை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதை தான் பெரியவர்கள் ஊன கண் கொண்டு பார்க்காதே ஞானக் கண் கொண்டு பார் என்று சொல்வார்களோ.

கதை மிக அழகாய் போகிறது.

கே. பி. ஜனா... said...

'கா, கா'ன்னு அடித்தொண்டை விரியக் கத்திண்டு போறதே, இந்தக் காக்கையை எந்த ஊரிலே கொண்டு போய் விட்டாலும், அது தான் வாழ்ந்த பிரதேசத்திற்கே வந்திடுமாம்; அதே போலத் தான் இந்த மனசும்.// நல்ல உவமை!

Geetha Sambasivam said...

தெளிவான பார்வை. கதைப்போக்கும் புரிகிறது.

Geetha Sambasivam said...

எல்லாக் கச்சேரிகளும் இத்தகைய வம்புப் பேச்சுக்களைத் தாங்கித் தான் வருகின்றன.

sury siva said...

ஒரு நல்ல இசை நிகழ்ச்சியிலே நம்முடைய இதயம் லயித்திருக்கும்பொழுது
இந்த மாதிரி வம்பு பேச்சுகள் காதிலேயே படாது.

அப்படியே பட்டுவிட்டாலும், தொடர்ந்து பட்டுக்கொண்டிருந்தாலும், அந்த இடத்தை விட்டு
நகர்ந்து வேறு இடத்துக்குச் சென்று இசையைத் தொடர்ந்து ரசிப்பதுவே சரி எனத் தோன்றுகிறது.

தொடர்ந்து இசையைக்கேட்பவர் இசையை இதயத்தில் அனுபவிக்கிறார்.
தொடர்ந்து வம்புப்பேச்சைக் கேட்பவர் இசைதனை மறந்து வசைச் சொற்களில் தன்னை மறக்கிறார்.


இசை நிகழ்ச்சி முடிந்தபின்னே, முன்னவருக்கு இசை மட்டும் நினைவு இருக்கிறது.
பின்னவருக்கோ வசைவழி வ்ந்த சொற்கள் மட்டுமே நினைவு இருக்கின்றன.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

We see what we want to see.
We hear what we want to hear.

சொல்லணும்னு தோணித்து. சொல்லிப்புட்டேன். அம்புடுதேன்.
போகட்டும். நல்லதொரு ராகம் நீலாம்பரியின் டோடல் டைமன்ஷன்ஸ் தெரிய இங்கே வாருங்கள்.


சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com

G.M Balasubramaniam said...

BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER.இங்கு ப்யூட்டி என்பது புற அழகு. புற அழகைக் காண கண்கள் தேவைப் படும். தமிழில் பார்வைக்குப் பொருள் கொள்ளும் போதுஅறிவும் சிந்தனையும் விட்டு விட முடியாது. இருந்தாலும் பிறர் பேச்சு கண்ணில்லாதவரை சற்றே அலைக்கழிக்க வும் செய்யலாம் என்று புரிகிறது. தொடர்கிறேன். பாராட்டுக்கள்.எனக்கெல்லாம் சங்கீதம் கேட்டு ரசிக்கத் தெரியுமே தவிர அதை பிரித்துப் பங்கு போட்டு அலசும் ஞானம் கிடையாது.

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிங்க.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

தன்னை வைத்து பிறரைப் பார்த்தால் அப்படித்தான். பிறரை வைத்து தன்னை சீர்படுத்திக் கொள்ளல் சிறப்பு சேர்க்கும்.

'பார்வை' பற்றி அனுமானித்து முதலிலேயே கண்டுபிடித்து விட்டவர் அல்லவா, நீங்கள்?.. ஈடுப்பாட்டுடன் வாசிப்போருக்கும், வாசிப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொண்டோருக்கும், இன்னும் சொல்லப் போனால் எழுதுதலும் கைவசப்பட்டோருக்கும் இதெல்லாம் ஜூஜூபி தான். நல்ல எழுத்து நடையில் எழுதுவோரின் எழுத்துக்களைப் படித்துப் பிரமித்து,
அவற்றையே பயிற்சி கேந்திரமாகக் கொள்வது என் வழக்கம்.

அடுத்த அத்தியாயத்தில் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு மாற்றம் வைத்திருக்கிறேன் என்கிற தகவல் மட்டும் இப்போதைக்கு..

தங்கள் ரசனைக்கு நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ வை.கோ.

ஒன்றிப் போய் படித்தமைக்கு மிக்க நன்றி, கோபு சார்! தொடரும் கதையைத் தொடர வேண்டுகிறேன்.
தங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி.

ஜீவி said...

@ சார்வாகன்

நன்றி, சார்வாகன். தங்கள் தளமும் அருமை. அங்கு வந்து நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.

ஜீவி said...

@ கோமதி அரசு

'கண்டதே காட்சி; கொண்டதே கோலம்' என்கிற வழக்கு மொழியும் இந்த மேம்போக்குப் பார்வையைச் சாடத்தான் வழக்குக்கு வந்திருக்கும் போலிருக்கு.

இந்த உள்ளார்ந்த பார்வை கொண்டதினால் தான் பாரதிக்குக் கூட,பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலாவின் பச்சை நிறம் தோன்றிற்று போலும்!

கதையின் அழகை ரசித்தமைக்கு நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ கே.பி. ஜனா

உண்மையான்னு தெரியாது. எங்கேயோ படித்த காக்கையின் சரிதம் அது! இறைவனின் படைப்பில் எத்தனையோ ஆச்சரியப்படக்கூடிய தகவல்கள்!

உவமையாகக் கொண்டு அதைச் சுட்டிக் காட்டியாமைக்கு நன்றி, ஜனா!

உங்கள் ஒருபக்கக் கதைகளெலாம் ஒண்டர்புல்! வந்து வாசித்துச் சொல்கிறேன்.

தங்கள் வருகைக்கு நன்றி.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

தெளிவான பார்வை என்று தீர்க்கமாகச் சொன்னமைக்கு நன்றி, கீதாம்மா.

கதைபோக்கு இப்படியாக இருக்கும் என்கிற யூகிப்பில் நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி இருக்காது என்று நினைக்கிறேன்.

இந்தக் கதை எதுமாதிரியும் இல்லாத வேறு மாதிரி!

உங்களுக்குப் பிடிக்கும். தொடர் வருகை தாருங்கள்.

ஜீவி said...

@ Sury

என்ன சூரி சார்.. யூ ட்யூப் பக்கமே இருந்தா எப்படி?.. ஒரு இசைக் கச்சேரியை கற்பனையில் கேட்டு ரசிக்கிற மாதிரி இந்தக் கதையை எழுத வேண்டுமென்று எண்ணி எழுதினேன்.

கச்சேரியோடு சேர்ந்து கதைன்னு ஒரு போர்ஷனும் இருக்கே! அதைப் படிக்கவே இல்லையா? அந்தக் கதையைச் சொல்லத் தான் இந்த கச்சேரியே! நெய்-தொன்னை சமாச்சாரம் மாதிரி, எதற்கு எது ஆதாரம் என்பது அவரவர் பார்வைப் படி.

கதைன்னா அதுக்குன்னு சில கல்யாண குணங்கள் இருக்கே! அதையெல்லாம் கோட்டை விட்டுட முடியுமா?.. கோட்டை விட்டுட்டா, அதுவும் தான் கதையாகுமா?

நீலாம்பரியைக் கேட்கத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி. அங்கு வந்து கேட்டுச் சொல்கிறேன்.

தங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

ஜீவி said...

@ G.M.B.

"Beauty is truth, truth beauty,"--that is all
Ye know on earth, and all ye need to know.."

--என்பான் கவிஞன் கீட்ஸ். அவனுக்கு உண்மையே அழகாகத் தெரிகிறது!

அழகு எதில் தான் இல்லை?.. 'இது அது தான்' என்று வரையறுத்துச் சொல்ல முடியாதது அது. அவரவருக்கு மனத்திற்கு பிடித்ததெல்லாம் அவரவருக்கு அழகாய்த் தான் தோற்றமளிக்கும்! மனம் அழகாய் இருந்தால், எல்லாமே அழகாயும் தோற்றமளிக்கும்!

'வாசகனை கதையின் களனில் கொண்டு போய் அமர்த்திவிட்டால், மற்றதையெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்'-- என்பது கதைகள் எழுதுவதின் பாலபாடம்.

ஒரு நிலக்கரிச் சுரங்கம் கதைக் களனாய் இருப்பின், நிலக்கரி சுரங்கம்-அதன் சூழ்நிலைகள், பணியாளர், பணியின் அமைப்பு இதெல்லாம் பற்றித் தகவல்களைத் திரட்டிக் கொண்டு பின் அதைக் கதையின் களனாகக் கொண்டால் அந்தக் கதைக் களன் தத்ரூபமாக அமையும். இந்தக் கதையின் களனுக்கு ஏற்ப சில விவரங்கள் கதையுடன் கலந்தன. அவ்வளவு தான்.

பாராட்டிற்கும் தொடர்வதற்கும் நன்றி, ஐயா!

G.M Balasubramaniam said...

பார்வை பகுதி-3 என்று டேஷ் போர்டில் இருக்கிறது. ஆனால் வலையில் வரவில்லை. பிரச்சனை எங்கோ.?

ஜீவி said...

@ G.M.B.

பல வேலைகளுக்கிடையே, கதையை அப்பப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். எண்ணச் செதுக்கல்களிலிருந்து எடுத்து நேரடியாக கணினித் திரையில் பதிந்து கொண்டிருக்கையில், பகுதி-3 நிறைவடையாத பாதி நிலையில்,வேறு ஒரு வேலை வந்து Save செய்கிற நினைப்பில் தவறி Publish பண்ணியதால் வந்த தவறு.
இப்பொழுது டிராப்ட்டாக சேமித்திருக்கிறேன். இரண்டொரு நாட்களில் பார்வைக்குப் பதிந்து விடுகிறேன்.

தங்கள் விசாரிப்புக்கு மிக்க நன்றி.

சிவகுமாரன் said...

பெண்ணுக்கு பெண் தான் எதிரி,
சபாவில் அமர்ந்து சங்கீதத்தையும் , சலசலப்பையும் கேட்ட உணர்வை அப்படியே கொண்டு வந்தது கதையின் நடை.

ஜீவி said...

@ சிவகுமாரன்

கச்சேரி குறித்த தங்கள் ரசனைக்கு நன்றி, சிவகுமாரன். தொடர்ந்து வாருங்கள்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

நானும் தொடர்கிறேன்.

பார்வை குறைந்த, குன்றிய, குரூர குருடர்கள் பலரின் மத்தியில் நம் சுசீலாவின் கணவரைப் போன்ற தீர்க பார்வையுடையவர்களால் தான் உலகில் நல்லது நடந்து வருகிறது.

ஜீவி said...

@ Sakthiprabha

தொடர்வது குறித்து மகிழ்ச்சி. அவரது பார்வையின் தீட்சண்யம் பகுதிக்கு பகுதி
மெருகுறும்.

தொடர்ந்து வாருங்கள்.

dondu(#11168674346665545885) said...

தாயே யசோதா பாட்டில் அந்த காலில் சிலம்பு கொஞ்ச என்னும் நிரவலை அமரர் மதுரை மணி அவர்கள் செய்ய, சமீபத்தில் 1950-களில் எங்கள் திருவல்லிக்கேணி பாண்டுரங்க மடத்தில் ராமநவமி கச்சேரி ஒன்றில் கேட்டு சொக்கிப் போனேன்.

மற்றப்படி கச்சேரி சமய வம்புகளை பாலசந்தர் அவர்கள் சிந்து பைரவி படத்தில் சுகாசினியின் பார்வையில் காட்டியிருப்பதும் நினைவுக்கு வந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Related Posts with Thumbnails