மின் நூல்

Saturday, November 5, 2011

பார்வை (பகுதி-7)

                      அத்தியாயம்--7

டாக்டர் சாந்தியின் குரல் இப்பொழுது எனக்கு அருகில் மிகத் தெளிவாகக் கேட்டது. "அங்கிள்! நீங்க சொன்னது ஒரு வகையான நிம்மதியை எனக்குக் கொடுக்கறது. அது இந்த ட்ரீட்மெண்ட்டுக்கு ரொம்பவும் முக்கியம்.." என்று முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்வது போலச் சொன்னார். 'பார்வை கிடைச்சாலும் சரி, கிடைக்காட்டாலும் சரி; எல்லாத்துக்கும் தயாரா நான் இருக்கேன்'ன்னு மனசார நான் சொன்னது தான் டாக்டர் சாந்திக்கு மன நிம்மதியை கொடுத்திருக்கிற ஒண்ணா இருந்திருக்கும்'ன்னு நினைத்துக் கொண்டேன்.

அதையேத் தான் குறிப்பிட்டுத் தொடர்ந்தார்."இப்படியான ஒண்ணை ஒரு ஸ்டேட்மெண்ட் மாதிரி பேஷண்ட்டே அவர் நினைவோடு இருக்கும் பொழுதே அழுத்தம் திருத்தமாச் சொல்றது ரொம்பவும் விசேஷம். இது, எந்தத் தயக்கமும் இல்லாம டாக்டர் செயல்படறதுக்கு கொடுக்கற சுதந்திரத்தைத் தாண்டி பேஷண்ட் தனக்குத் தானே சொல்லி நிச்சயப்படுத்திக் கொள்கிற மாதிரி பெரிய சக்தியா அவருக்குக்குள்ளே செயல்படறது. அதான் முக்கியமான விஷயம்.."என்றவர் எதையோ யோசிப்பவர் போலக் கொஞ்சம் நிறுத்தி விட்டுத் தொடர்ந்தார்.

"அங்கிள், நீங்க சொன்னீங்க இல்லையா, 'பார்வை கிடைக்காட்டாக் கூடப் பரவாயில்லை, தொடு உணர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சிண்டு சமாளிச்சிப்பேன்'ன்னு-- அப்படி நீங்க சொன்னப்போ நிஜமா எனக்கு சந்தோஷம் தாங்கலே. நடந்த ஒண்ணுக்கு குமைஞ்சு குன்னிப் போகாமா, கடவுள் கொடுத்த இன்னொரு கொடையை வைச்சு சரிக்கட்டிங்கிறேன் என்கிறாரேன்னு மகிழ்ந்து போயிட்டேன். அந்த வில்பவர் தான் வேணும். அது நிறைய உங்ககிட்டே இருக்கு. இதுக்கு மேலே என்னன்னா..

"ஆங்! அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லாமல் எப்படி?.. இறைவனோட படைப்புலே ஒவ்வொண்ணும் அதிசயம். நினைச்சு நினைச்சு பிரமிக்கறதாத்தான் ஒவ்வொண்ணும் இருக்கு. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு டிபார்ட்மெண்டைக் கவனிச்சிக்கற மாதிரி என்ன ஒழுங்கு, என்ன முன்னேற்பாடு என்கிறீங்க?.. ஒண்ணு பழுதடைஞ்சா ஆல்டர்நேடிவ்வா இன்னொண்ணை உபயோகப்படுத்தலாம்ங்கறது ஓரளவுக்குத் தான். அதாவது அந்த இன்னொண்ணு அதுக்கானதைப் போல முழுமையான சப்போர்ட்டா இருக்க முடியாதுங்கறத்துக்குச் சொல்ல வந்தேன்.."என்று டாக்டர் சொன்ன போது இனி என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளத் தயாரானேன்.

"இப்போ கண்ணால் பார்த்து நெருப்புன்னு தெரிஞ்சிக்கறதைத் தொட்டுத் தெரிஞ்சிக்க முடியாதில்லையா?.. அதுபோல சிலதுகள்.. ஆனா ஒண்ணுக் கொண்ணு இணைப்புப் பாலமா இருக்கற, இறைவன் ஏற்பாட்டை புரிஞ்சிண்டு எவ்வளவோ தேத்திக்கலாம். கண்ணாலே பாத்துத் தான் தெரிஞ்சிக்கணும்ங்கறத்துக்கு தேவையில்லாததையெல்லாம் காது பாத்துக்கும். உதாரணமா, சங்கீதத்தை அனுபவிக்கறச்சே, பாத்துத் தெரிஞ்சிக்கறத்துக்கு அங்கே எதுவும் இல்லை. அது கேட்டு ரசிக்கிற விஷயம். உண்மைலே சில நேரத்லே பாக்கறது கூட கேக்கறத்துக்கு இடைஞ்சலா அமைஞ்சு கவனத்தை எங்கேயானும் திருப்பிடும். அந்தத் தொந்தரவு வேண்டானுட்டுத்தான் பலபேர் அதை முழுமையா அனுபவிக்கறச்சே கண் இமைகளை மூடிண்டு அனுபவிக்கறாங்க. கடவுள் கிட்டே வேண்டிக்கறச்சே கூட கையைக் குவிச்சிண்டு கண்களை மூடிண்டு தான் தரிசிக்கறோம்.." என்று டாக்டர் சாந்தி மனத்தில் தைக்கிற மாதிரி சொல்லிண்டு வர்றத்தே, குறுக்கிட்டுக் கேட்டேன்.

"ஏன் டாக்டர், கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டார்ங்கற நிச்சயத்திலேயா வேண்டிக்கறச்சே கண்ணை மூடிக்கிறோம்?"

"எஸ்.." என்று டாக்டர் சொன்ன போது அந்த 'எஸ்'ஸை அழுத்திச் சொன்ன மாதிரி எனக்குப் பட்டது. "எஸ். கண்ணுக்குத் தெரியறத்துக்கு அவர் காட்சிப்பொருள் இல்லை தானே?.. புலனுறுப்புகளால் அடையாளப்படுத்தி தெரியப்படுத்த இயலாத அளவுக்கு அவர் ரொம்பவே அகம் சம்பந்தப்பட்டவர். உள்ளுக்கு உள்ளேயே நம் உணர்வில் தங்கி இருப்பவர் அவர். சொல்லப்போனா, அந்த உணர்வுமயமானவரே அவர் தானே!.." என்று டாக்டர் சொன்ன போது ஏதோ வேதாந்த சென்டரில் உட்கார்ந்திருப்பது போலவான உணர்வு எனக்கு ஏற்பட்டது.. அதே நேரத்தில் ஏதோ காரணத்தோடத்தான் இதையெல்லாம் எனக்கு அவர் சொல்லிக் கொண்டிருப்பது போலவும் பட்டது. அவர் குரலின் மென்மை எந்த முரண்டு பிடிக்கும் வன்மையையும் அடக்கிவிடும் தன்மை பெற்றிருப்பதாக எனக்குப் பட்டது. என்னை விட வயதில் சிறியவர் ஆனாலும், மனம் ஒப்பி மரியாதையுடன் அவர் சொல்வதைக் கேட்க மனம் மிகவும் விரும்பியது.

சுசீலா இந்த அறையில் தான் இருக்கிறாளா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. டாக்டரிடம் அவள் பக்கத்தில் தான் இருக்கிறாளா என்று கேட்டுத் தெரிந்து கொள்வதற்கும் ஒருமாதிரி இருந்தது.. இப்படியெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்கையில் டாக்டரின் குரல் எங்கோ வெகு தூரத்தில் கேட்பது போல சன்னமாக ஆனால் தெளிவாக எனக்குக் கேட்டது.

"அங்கிள்! நன்றாக இருந்த பார்வை பறிபோய்விட்டதே என்று ரொம்ப ஃபீல் பண்ணுகிறீர்களா?"

'நோ.." என்று தெளிவாக தலையை மறுப்பது போல அசைத்தேன். "என்னால் ஆகக்கூடியது எதுவுமில்லேன்னு நன்னாத் தெரியறது. இதில் நான் ஃபீல் பண்ணி போனது கிடைச்சிடவாப் போறது?.. இன்னும் மனத்துக்கம் அதிகமாகும். அவ்வளவு தான். 'இதை ஏத்துக்கறதைத் தவிர'ன்னு நீட்டி முழக்கவும் முடியாது. யதார்த்த உண்மையை உணர்ந்து, பார்வை கிடைக்காதுங்கறது நிச்சயமானா அடுத்த காரியத்தைப் பாக்கறதுதான் விவேகம். என்ன சொல்றீங்க.." என்று அதையும் ஒரு கேள்வியாக அவரிடமே நான் கேட்ட பொழுது, எழுந்த கேவல் ஒலி, சுசீலா அங்கே தான் இருக்கிறாள் என்பதை எனக்குத் தெரியப்படுத்தியது.

சுசீலாவின் சலனம் எதுவும் டாக்டரைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அவர் என்னிடமே பேசிக் கொண்டிருந்தார். "அங்கிள் எனக்கு வேறே ஒரு பயம்.."

"என்ன?"

"எதுனாலே உங்களுக்கு இந்த விபத்து ஏற்பட்டது.. காணாமல் போன தம்பி வந்திட்டார்ங்கற சந்தோஷத்தில் சூழ்நிலை மறந்து அவசரப்பட்டு..."

"ஆமாமாம். அதுக்கென்ன இப்போ?"

"அதுக்கென்னவா?.. சொல்றேன். தொலைந்த தம்பி வந்துட்டான்னு தெரிஞ்சதும் அவரைப் பார்க்க பட்ட பதட்டத்தில் கண் போயிட்டது. ஒருகால் உங்க தம்பி திரும்ப வந்திட்டார்னா, அவரை கண்ணாறப் பாக்க முடியலையேன்னு ரொம்ப வருந்துவீங்களோன்னு..."

இன்னொரு 'நோ'வை அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன். "எனக்கு இப்போ சுத்தி சுத்தி நீங்க பேசற உண்மை நிலமை தெரிஞ்சிடுத்து. எதையும் எதிர்கொள்ள நான் தயாராத்தான் இருக்கேன். எனக்குப் பார்வை திரும்பச் சான்ஸ் இல்லை. அதானே?"

"அப்படியும் தடாலடியாச் சொல்லிட முடியாது. சான்ஸ் இல்லைங்கற பிரசண்டேஜ் அதிகமா இருக்கு. ஆனா, அதுக்காக ட்ரிட்மெண்டை நிறுத்தறதுக்கும் முடியாது. இடைலே எந்த மிரக்கிளும் நடக்கலாமில்லையா?"

நான் சிரித்தே விட்டேன். "டாக்டர்! என் மேலே இருக்கிற பரிவுனாலே இப்படிச் சொல்றிங்க, போலிருக்கு. நான் உறுதியாத் தான் இருக்கேன். பார்வை கிடைச்சு தம்பி வந்தான்னா, அவனைப் பாத்து சந்தோஷப்பட்டுப் போறேன். பார்வை கிடைக்காது போயிட்டாலும், அவன் வந்திட்டானா, அவன் திரும்பி வந்ததுக்கு சந்தோஷப்பட்டுப் போறேன். அதுனாலே அவன் எப்போ வந்தாலும் எனக்கு சந்தோஷமே. எனக்கு பார்வை கிடைக்கறத்துக்கும், கிடைக்காம போறதுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமில்லை. ஓ.கே?.."

"ஓ... ஃபைன்.." என்ற டாக்டரின் குரலில் மகிழ்ச்சி கலந்திருந்தது வெளிப்படையாக எனக்குத் தெரிந்தது.

(இன்னும் வரும்)







13 comments:

Geetha Sambasivam said...

பல திருப்பங்களையும், பல கோணங்களையும் பார்க்கும் பார்வை

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் தொடர் நகர்ந்து வருகிறது. அடுத்து என்ன ஆகுமோ என்ற ஒரு எதிர்பார்ப்பைக் கொடுக்கிறது.

தொடருங்கள். வாழ்த்துக்கள்.

vgk

ஸ்ரீராம். said...

கடவுளை வெளியே தேடாமல் உள்ளேயே தேட அல்லது அறிய கண்களை மூடி உள்ளே தேடுகிறோம் என்கின்ற வரிகள் அருமை.
கிடைக்காது என்று நிச்சயம் ஆனபின் அதற்காக வருந்தாமல் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் பெரிது.

இராஜராஜேஸ்வரி said...

யதார்த்த உண்மையை உணர்ந்து, பார்வை கிடைக்காதுங்கறது நிச்சயமானா அடுத்த காரியத்தைப் பாக்கறதுதான் விவேகம்..

விவேகப்பார்வை அற்புத வரம்.

G.M Balasubramaniam said...

தங்கள் முயற்சி தோல்வியடைய வாய்ப்புகள் அதிகம் என்று உணரும் மருத்துவரின் மனோநிலையை நன்கு பிரதிபலிக்கிறீர்கள். நிகழ்வுகளை விட கதாமாந்தரின் எண்ணங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதால் கதை தொய்வு ஏற்படுகிறதோ. ? தொடர்ந்து படிக்கிறேன். பதிவுலகில் இருந்து நான்கு நாட்கள் விடுப்பில் இருக்கும்படியான சூழலினால் முன்பே வர முடியவில்லை.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

தொடர் வருகைக்கும், பின்னூட்டமிட்டு அங்கீகரிப்பதற்கும் நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ வை. கோ.

ரசனைக்கு நன்றி, கோபு சார்! 'தமிழ்மண' பிஸியில இருக்கீறீர்கள்..
அந்தப் பணி நிறைவுற்றதும், தொடர்ந்து படித்து விடுங்கள்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

எடுத்துக்காட்டிப் பாராட்டியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

ஆமாம், நீங்கள் சொல்கிற மாதிரி
நமது மன ஒத்துழைப்பு ஒவ்வொன்றும் வரமாகத் தான் படுகிறது.

வருகைக்கும் எண்ணத்தைப் பதிந்தமைக்கும் நன்றிங்க.

ஜீவி said...

@ G.M. Balasubramanian

//தங்கள் முயற்சி தோல்வியடைய வாய்ப்புகள் அதிகம் என்று உணரும் மருத்துவரின் மனோநிலையை நன்கு பிரதிபலிக்கிறீர்கள்.//

என்னுடைய பார்வை வேறு மாதிரி.
நோயாளியின் மன நலனுக்கு எந்தக் கோளாறும் ஏற்பட்டு விடக்கூடாது என்கிற அக்கறையில் மருத்துவர் செயல்படுவதாகவேத் தோன்றுகிறது.
அவர் கண் டாக்டராய் இருப்பினும், மனோதத்துவம் அறிந்தவர் ஆகையால், எதற்குமான ஒரு தயார் நிலைக்கு நோயாளியைத் திடப்படுத்துகிறார் என்றே அவர் செயல்பாடுகளைப் பார்க்கும் பொழுது எண்ணத் தோன்றுகிறது.

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

//நிகழ்வுகளை விட கதாமாந்தரின் எண்ணங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதால் கதை தொய்வு ஏற்படுகிறதோ. ?//

அந்தக் கண்பார்வை இழந்தவரின் வாழ்க்கையின் சில பகுதிகள் தாம் கதையே. ஆரம்பத்திலிருந்து அவர் எண்ண ஓட்டங்களே கதையாக உருக் கொள்கிறது. அதனால் அவர் கொள்ளும் எண்ணங்கள் வேறு கதை வேறல்ல. அவரது எண்ணங்களி னூடே கதையும் நகருகிறது, பாருங்கள்.

அடுத்தடுத்து வெவ்வேறு நிகழ்வுகள் நிகழ்வது போன்ற-- கதை என்று நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் இல்லாததினாலும் இந்த உணர்வு உங்களுக்குத் தோன்றலாம். அப்படிப்பட்ட கதையாயின் முதல் இரு பகுதிகளோடு ஒரு சிறுகதையாக முடித்துக் கொண்டிருக்கலாம். இருப்பினும் இந்தக் கதை அம்சத்தை எடுத்துக் கொண்டு நிறைய விஷயங்களைப் பேசலாம் என்கிற எண்ணத்திலேயே நெடுங்கதையாகக் கொண்டேன். கதை முடிந்த பிறகு
ஒருசேரப் படித்துப்பார்த்தீர்களென்றால்
ஒரு முழுமை உணர்வு கிடைக்கும்.

இருந்தாலும் உங்கள் கருத்தையும் கவனத்தில் கொள்கிறேன்.

தொடர்வருகைக்கு மிக்க நன்றி, ஐயா.

Shakthiprabha (Prabha Sridhar) said...

புலன்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதால் எல்லா புலன்களையும் அடக்கி மூடி கடவுளை தியானிக்கிறோம் என்று சொல்லாமல் சொன்னீர்கள். அருமை.

ஜீவி said...

@ Sakthiprabha

தொடர்ந்து வாருங்கள். இந்தத் தொடருக்குப் பிறகு 'ஆத்மாவைத் தேடி'க்குப் போகலாம்.

Related Posts with Thumbnails