மின் நூல்

Tuesday, January 3, 2012

பார்வை (பகுதி-20)

                அத்தியாயம்--20

புரொபசர் இன்னும் வரலே.  கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சுவர் பெண்டுல கடியாரத்தில் அடிச்ச மணியை எண்ணினதிலே ஒன்பதுன்னு தெரிஞ்சது.  அதற்கப்புறம் கால்மணி நேரம் ஆகியிருக்கலாம்.

எல்லாரும் டிபன் சாப்பிட்டாச்சு.  டாக்டரும் இங்கேயே தான் சாப்பிட்டாங்க..
தம்பி மாடிப்பக்கம் தன்னோட வயலினை எடுத்து வைச்சிண்டு சுருதி கூட்டிண்டிருக்கான் போலிருக்கு.  .அவன் சின்ன வயசிலிருந்தே இப்படித்தான். ஒவ்வொண்ணுலேயும் முழுமை வேணும் அவனுக்கு.  அடுத்தாப்லே செய்ய வேண்டிய காரியத்திற்கு அரைமணி முன்னாடியே அதுக்காகத் தயாராயிடு வான்.  சங்கரியும், சுசீலாவும் இந்த செஷனில் என்ன என்ன பாட்டு பாடலாம்னு லிஸ்ட் தயாரிச்சிண்டிருகாங்கன்னு அப்பப்ப கேக்கற அவங்க குரல்லேந்து தெரியறது.

"வர்றீங்களா, அந்த ரூம்லே உக்காந்திண்டு டிரீட்மெண்ட் பத்தி முன்னோட்டமா கொஞ்சம் பேசிண்டிருக்கலாம்.."என்று டாக்டர் சொன்னதுமே புரிகிறது.  அவர் என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று நினைக்கிறார்ன்னு..

என் ரூமிற்கு வந்ததும், "நேத்து விவேகானந்தன் வீட்டிற்குப் போயிருந்தேன்" என்கிறார் டாக்டர்.

"எப்படா நீங்கள் அதைப்பத்திச் சொல்லுவீங்கன்னு அதுக்குத் தான் காத்திருக்கேன்.  சுசீலா அரையும் குறையுமா சொன்னா. அதிலே புரிஞ்சது கொஞ்சம் தான்.  நீங்க தான் விவரமா சொல்லணும்"ங்கறேன்.

"எதிலேந்து சொல்லணும்?.." என்று ஏதோ விட்ட கதையைத் தொடருகிற மாதிரி கேக்கறாங்க.

"ம்.. அவ எங்கே சரியாச் சொன்னா.. இங்கே ஒண்ணும், அங்கே ஒண்ணுமா..  இந்த விஷயத்தில் முதல்லே விவேகானந்தனின் பெற்றோர்கள் சம்மதம் தெரிஞ்சிண்டு, மேற்கொண்டு என் தம்பிகிட்டே இதைக் கொண்டு போகலாம்ங்கற மாதிரி சொன்னா.  நீங்க அங்கே போயிருந்தப்போ, அவங்ககிட்டே இதுபத்திச் சொல்லிட்டீங்களா?" -- என் குரலில் பூசியிருந்த ஆவலும் அக்கறையும் வெளிப்படையாக எனக்கேத் தெரியறது.

"பின்னே?" என்று டாக்டர் அந்த 'ன்'னில் ஒரு அழுத்தம் கொடுத்து, 'னே'யை நீட்டினார்கள். "நா அவங்க வீட்டுக்குப் போனதே அதுக்காகத் தான்.  விவேகானந்தன் அங்கே இருந்ததும் நல்லதாச்சு.  இவன் வேறே அப்பாகிட்டே இந்த விஷயத்தைச் சொல்ல தயங்கித் தயங்கி பின்னாடி தடுமாற வேண்டாம் பாருங்க.." என்று அவர் சொன்ன பொழுது சிரித்தே விடுகிறேன்.

"பரவாயில்லை.. விவேகானந்தன் உங்களை மனசுக்குள் வாழ்த்தியிருப்பான்.
அவனுக்கும் ஒரு பளு குறைஞ்சது பாருங்கள்!  அவங்க அப்பா, அவர் பேர் என்ன, ஹ.. ன்னு ஆரம்பிக்குமே, ஆங்..  ஹரிஹரன்,  இதைக் கேட்டதும் அவர் ரியாக்ஷன் எப்படி இருந்தது?"

"ஒவ்வொண்ணா நீங்க கேட்டுச் சொல்றதை விட, நெட் ஷெல்லா விஷயத்தைச் சொல்லிடறனே?.. அவருக்கு இதில் ரொம்ப சந்தோஷம் தான்.  ஆனா, ரொம்பத் தயங்கறார்..."

"தயங்கறாரா?"

"எஸ்.  இந்த திருமணத்திற்குப் பின்னாடி இருக்கற ஒரு விஷயத்தை டோட்டலா நாம எல்லாருமே மறந்து போயிட்டோம்.  விவேகானந்தனோட அப்பாவும் ஒரு பிடில் வித்வாங்கறது எனக்குத் தெரியும்.  ஆனா, உங்க தம்பி தான் அவருக்குக் குருநாதர்ங்கறது தெரியாது.  உங்க தம்பி மேலே ரொம்ப ரொம்ப மரியாதை வைச்சிருக்கார் அவர்.    தான் இன்னிக்கு நாலு பேருக்குத் தெரியற மாதிரி மேடைலே உக்காந்து வயலினை மடிலே சாச்சுக்கறத்துக்கு உங்க தம்பி தான் காரணம்ங்கற மரியாதை அது.  சொல்லப் போனா, மரியாதைங்கற ஸ்டேஜைத் தாண்டி அவர் மனசிலே இது ஒரு பக்தியாகவே வளர்ந்திருக்கு."

இப்போ என்ன சிக்கல்ங்கறது தெளிவா எனக்குப் புரியறது.  தன் குருவின் பெண் தன் வீட்டுக்கு மருமகளா வர்றாங்கற மகிழ்ச்சியைப் பூரணமா உணரமுடியாத அளவுக்கு, என் தம்பி மேலே அவருக்கு இருக்கற மரியாதை குறுக்கே நிக்கறது.

"எனக்குப் புரிஞ்சிடுத்து,  டாக்டர்!"ங்கறேன்..  "ஆனா நான் இதை எதிர்பார்க்கலே."

"நானும் தான்.."ங்கறார் டாக்டர்.  "அவங்க அப்பா சொல்றதைக் கேட்டதும், எனக்கு அந்தக் கால சினிமாக் காட்சிகள் மனசிலே ஓடித்து.  எஸ்.வி.சுப்பையா தானே அவர்?.. கிராமத்து பண்ணையாளா இருப்பார்.  அவர் மகள் பண்ணையாரின் மகனைக் காதலிப்பதைக் கேட்டு அதிர்ந்து, என்ன பாதகம் இதுன்னு துடிப்பாரே, அந்த மாதிரி தான்.   அதே ஸீன்!  ஒருவழியா அவரை சரி பண்ணியிருக்கேன்.   உங்க தம்பி என்ன சொல்லப்போறார்ங்கறதைப் பொறுத்து இருக்கு, அவர் எப்படி இதை ஏத்துப்பார்ங்கறது.."

"என் தம்பியா?.."

"ஆமாம்.  அதே மாதிரி உங்க தம்பியும் நெனைக்கலாமில்லையா?  என்ன இருந்தாலும், அவர் இவர் சிஷ்யனா வயலின் கத்திண்டவர் தானே?  அப்படிப்பட்டவர் பையனுக்கு தன் பெண்ணைக் கொடுக்கலாமான்னு.."

"அட ராமா..  இப்படில்லாம் கூட இடைஞ்சல் இருக்கா?.. இப்படில்லாம் இருக்கும்னு நான் அனுமானிக்கவே இல்லையே?"

"இதுக்கு மேலேயும் இருக்கும்.  எனக்கு ஒரு வழி தான் தெரியறது."

"சொல்லுங்க, டாக்டர்.."

"உங்க தம்பி அப்படி இப்படி எப்படி இருந்தாலும் அவரை வழிக்குக் கொண்டு வர்றது உங்க கையிலே தான் இருக்கு.  வீட்டுப் பெரியவர்ங்கற அசைக்க முடியாத ஒரு ஸ்தானம் உங்களுக்கு இருக்கறதை மறந்திடாதீங்க.."

"அதெல்லாம் கவலை வேண்டாம், டாக்டர்..  என் தம்பி நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான்.  நான் என்ன சொன்னாலும் கேப்பான்."

"தம்பி மட்டும்னா சரி.  தம்பி சம்சாரமும் இருக்காங்க;  அவங்க அம்மாவும் இருக்காங்க..  எல்லாரும் சேர்ந்து எடுக்கற முடிவு நமக்குப் பாதகமா இருந்திடக் கூடாது.  அதான் விஷயமே.   உங்க தம்பி குடும்பம் இதுக்கு ஓக்கேன்னா, விவேகாந்தன் குடும்பமும் இதுக்கு ஓக்கே.  அதெல்லாம் நான் விவரமா பேசிட்டேன்.  எந்த விதத்திலே, எப்படிப் பார்த்தாலும், நீங்க தான் இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கிறதிலே பிரதான பங்கு வகிக்கிறீங்க.. அதுனாலே நீங்க என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ..."

"நான் என்ன செய்யணும், டாக்டர்?.. அதைச் சொல்லுங்க.  செய்யத் தயரா இருக்கேன்."

"அவசரமில்லே.  உங்க தம்பி அவரோட பேமலி மெம்பர்ஸோட இதுபத்தி டிஸ்கஸ் பண்ணட்டும்.."என்று டாக்டர் சொல்லறச்சேயே எனக்கு 'அவரோட பேமலி மெம்பர்ஸ்'ன்னு அவங்க சொன்னது 'சொரேல்' ன்னு இருக்கு.. தம்பியை இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்தவன்னு தனியாப் பிரிச்சுப் பாக்க முடியலே.  அப்படி நினைக்கறதே மனசுக்கு சங்கடமா இருக்கு. இருந்தாலும் அடுத்த நிமிஷமே,  அது தான் உண்மைங்கற யதார்த்ததின் சூடு சுரீர்ன்னு சுடறது.

இப்படி நான் நெனைச்சிண்டிருக்கறச்சேயே, டாக்டர் சாந்தி சொல்றதும் மனசில் படியறது.  "எனக்குப் பார்வை கிடைக்கறச்சே, அவங்களை மாலையும் கழுத்துமா சேர்ந்து பாக்கறதுதான் என் மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்'ன்னும்-- இதுக்குக் கொடுக்கற சம்மதம் தான், உங்கிட்டே நான் எதிரிபார்க்கிற ஒண்ணுன்னும் உங்க தம்பி கிட்டே அழுத்தம் திருத்தமா அவர் மனசிலே பதியற மாதிரி சொல்லிடுங்க.  மத்ததை அவர் பார்த்துப்பார்."

 "அப்படி கேக்கறது 'ஒரு மாதிரி' இருக்குமே, டாக்டர்?.. பாவம், அவன் வேறே மாதிரி ஏதாவது ஐடியா வைச்சிருந்தான்னா..."

"இதிலே ஒண்ணும் தப்பில்லை;  ஒரு நல்லதுக்காக எடுக்கற நடவடிக்கை; அவ்வளவு தான்.  நீங்க இப்படி சொல்றது, உங்க தம்பி அவங்க சம்பந்தப்பட்ட வங்களோட பேசறதிலே, உறுதி காட்ட உதவும்.  எல்லாம் சங்கரிக்காகத் தான்;  அவ மன சந்தோஷத்திற்காகத் தான்."

டாக்டர் இதைச் சொன்னதும், 'சரி'ன்னு நான் சொன்னது அனிச்சையா சொன்ன மாதிரி இருக்கு. .   எந்த சக்திக்கோ ஆட்பட்டு உதடு பிரியற மாதிரி.

"விவேகானந்தன் அப்பா ஹரிஹரன், உங்க தம்பியோட சம்மதம் ஒண்ணுக்குத் தான் காத்திருக்கார்.  நம்மகிட்டேயிருந்து கிரீன் சிக்னல் கிடைசதும், அவர் சைடு ஓக்கே ஆயிடும்.  உண்மைலே ஹரிஹரன் சாரும் இந்த ம்யூசிக் பார்ட்டிலே கலந்துக்கணும்னு விரும்பறார்.  உங்களுக்கு பார்வை கிடைக்கற வேள்விலே ஒவ்வொருத்தரும் அவங்களாலே முடிஞ்ச ஏதோ ஒண்ணைச் செய்ய விரும்பறாங்க.  இது எல்லாமே பாஸிட்டிவ் சிக்னல்ஸ்.  இறைவன் கருணை இருக்கறச்சே, நமக்குத் தெரிஞ்சு பாதி, தெரியாது பாதின்னு ஒவ்வொண்ணா வரிசையா நடக்க ஆரம்பிக்கும்.  அதெல்லாம் தான் நாம தயங்காம முன்னே செல்ல தூண்டுகோலா இருக்கும்"ன்னு டாக்டர் சொன்னபோது என் உடல் ஒருதடவை சிலிர்த்து அடங்குகிறது.

"இந்த புரொபசர் மித்ரா இருக்காரே.. அசகாய புலி.  அவர் சாகசத்தையெல்லாம் ஜெர்மன் மாகாநாட்டிலே நான் பாத்திட்டேன்.  அங்கே அவருக்கு என்ன மரியாதைங்கறீங்க..  அவர் உங்களுக்கு டாக்டரா அமைஞ்சது நமக்கு பெரிய சாதகமான விஷயம்.  டாக்டர் என்னதான் திறமையானவரா இருந்தாலும், பேஷண்ட்டோட ஒத்துழைப்பு வேணும். அது இல்லேனா எல்லாமே ஜீரோ!"

"............................."

"ஒத்துழைப்புன்னு மொட்டையா சொன்னா உங்களுக்குப் புரியாது.  ஒத்துழைப்புன்னா, நான் குறிப்பிடறது மன ஒத்துழைப்பை.  உங்க முழு மனசையும் குவிச்சு, இன்ஞ்ச் பை இன்ஞ்ச்சா இந்த ட்ரீட்மெண்ட்லே இன்வால்வ் ஆகணும்.  சொல்லப்போனா, உங்களுக்கெல்லாம் இதை வைத்தியம்னே சொல்லப்படாது.  சங்கீதம்ங்கறது உங்க ஏரியா.  நான் சொன்னாலும் சொல்லாட்டாலும் நடக்கற விஷயத்திலே இழைச்சு போயிடுவீங்க.  அதுக்குச் சொல்லலே.."

"நான் என்ன செய்யணும்னுட்டு தெரிலே; எதுனாலும் செய்யத் தயாரா இருக்கேன்.  எல்லாம் சங்கரிக்காக.  அவ கல்யாணம் நல்லபடி அவ விரும்பறவனோட நடக்கறதுக்காக."

"எல்லாருக்கும் அந்த எண்ணம் தான்.  ஆனா, அதைத் தாண்டி உங்களுக்குன்னு வேறோண்ணு இருக்கு."

"எனக்குத் தெரிலியே, டாக்டர்.. என்னன்னு சொல்லக் கூடாதா?"

"சொல்றேன்.  எப்படிச் சொல்றதுன்னு யோசிச்சேன். அவ்வளவு தான்.
இப்படிச் சொல்லலாமா?..  மாலையும் கழுத்துமா சங்கரியும் விவேகானந்தனும் புதுமணத் தம்பதிகளா மேடையில் அமர்ந்திருக்கும் போது, அத்தனை பேரும் அதைக் கண்ணாரக் கண்டு வாழ்த்துவார்கள்.  எல்லாரும் மாதிரியே, நீங்களும் பெரியவரா அவங்களை கண்ணாரக் கண்டு சந்தோஷத்தோட வாழ்த்தப் போறீங்க.. இந்தக் காட்சியை நீங்க காணறத்துக்காகத் தான் இந்த ட்ரீட்மெண்ட்.   இதை மனசிலே உறுதியா அப்பப்ப நெனைச்சிக்கங்க.. அந்தக் காட்சியை கற்பனையில் கண்டு அடிக்கடி சந்தோஷப்படுங்க.. எல்லாம் நல்லபடி நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு."  

"என்ன சொல்றது டாக்டர்!  என் சோகம் ரொம்ப ஆத்மார்த்தமானது.   சங்கரியை நான் பார்த்ததில்லை; விவேகானந்தனைப் பார்த்ததில்லை;  விவேகானந்தனின் தகப்பனாரை- தாயாரைப் பார்த்ததில்லை.  ஏன், என் தம்பி சம்சாரம், அவங்க அம்மா.. எல்லாருமே இவங்க இவங்கன்னு தான் என் ஞாபகத்துக்கு அறிமுகம் ஆகியிருக்காங்களே தவிர, யாரையும் நான் கண்ணால் பார்த்ததில்லைங்கறது எவ்வளவு ஆழமான சோகம்ங்கறது மனசிலே படிஞ்சு இருக்கு.  இந்த ட்ரீட்மெண்ட் என்னோட எல்லா இழப்புகளுக்கும் பதில் சொல்ற ட்ரீட்மெண்ட்டா அமையும்னா, எனக்கு அது எவ்வளவு சந்தோஷமா  இருக்கும்ங்கறதை வார்த்தைலே வர்ணிக்க முடியலே, டாக்டர்!  நீங்க சொல்றது எல்லாம் புரியறது.  மனசில் ஆழ அது பதிஞ்சு போயிடுத்து.  நல்ல முடிவுக்கு தயாரா காத்திருக்கேன்.." என்று நான் சொன்னதும்,  டாக்ட்ர் சாந்தி, "இதைத் தான் நான் எதிர்ப்பார்க்கிறேன்.. ஆல் தெ பெஸ்ட்.." என்கிறார்.

அவர் சொன்னதை ஆமோதிக்கற மாதிரி பெண்டுலம் கடிகாரம் ஒலிக்கத் தொடங்க, வாசல் காலிங் பெல் அதனிலிருந்து வேறுபட்ட ரீங்காரத்துடன் கணகணக்கிறது. என் காதுகளுக்கு எல்லாமே இன்னிசையாய் மயக்கறது.  அதேசமயம், "புரொபசர் கூட இதோ வந்திட்டாரே" என்கிறார் டாக்டர் சாந்தி.


(இன்னும் வரும்}





14 comments:

G.M Balasubramaniam said...

இதைப் படிக்கும்போதே அடுத்து என்ன என்றே எண்ணத் தோன்றுகிறது. கண்பார்வை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தாலும் கலியாணம் பற்றி அவர்கள் கருத்து , முக்கியமாக தம்பியின் ஃபாமிலியின் கருத்து, ;ட்விஸ்டுகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. எல்லாம் உங்கள் கையில்.

ஸ்ரீராம். said...

//டாக்டர் சொல்லறச்சேயே எனக்கு 'அவரோட பேமலி மெம்பர்ஸ்'ன்னு அவங்க சொன்னது 'சொரேல்' ன்னு இருக்கு//

சிறு வயதில் ஒரு வீட்டில் வளர்ந்து சகோதர சகோதரிகளாய்ப் பழகி, ஒன்றி இருந்தவர்கள் வயது வந்ததும் திருமணம் செய்து கொண்டு தன் குடும்பம் தன் மனைவி, தன் மக்கள் என்று வரும்போது இதே கூடப் பிறந்த சொந்தங்கள் சற்று தள்ளிப் போவது விந்தைதான்! நானும் இதை உணர்ந்ததுண்டு. வேதனையாக இருந்தாலும் நிதர்சனம்! ஏதோ ஒரு படத்தில் விசு மனைவி தன்னை விட்டு மக்களுக்கு பரிந்து பேசும்போது தன் மனைவியிடம் சொல்வார், "உங்களுக்கெல்லாம் தாலிக் கொடி உறவை விட தொப்புள் கொடி உறவு பெரிசாப் போச்சே" என்று! பாலமாக ஒரு அம்மா (மட்டும்தான் என்று நினைக்கிறேன்!) இருக்கும்வரை இருக்கும் கொஞ்ச நஞ்ச பாசமும் சில இடங்களில் அம்மா பாலம் அகன்றபின் காணாமல் போவதையும் பார்த்திருக்கிறேன்.

Geetha Sambasivam said...

டாக்டர் சொல்லறச்சேயே எனக்கு 'அவரோட பேமலி மெம்பர்ஸ்'ன்னு அவங்க சொன்னது 'சொரேல்' ன்னு இருக்கு//

தம்பி என்ன, இந்தக் காலத்தில் சொந்தப் பிள்ளை, பெண்ணுக்குக்கல்யாணம் ஆனதும் அவங்க ஃபாமிலி தனியாத்தான் போகிறது பல இடங்களிலும். :((((( தவிர்க்கமுடியாத ஆனால் சுடும் உண்மை! வேதனை தரக்கூடியதே! :(((((((

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம், தம்பியின் சம்மதம் கிடைச்சுடும்னு தான் தோன்றுகிறது. ஆனால் இதிலே நீங்க என்ன மாற்றம் செய்யப் போறீங்களோனு யோசனையாவும் இருக்கு. பார்க்கலாம்.

பாச மலர் / Paasa Malar said...

ஸ்ரீராம் குறிப்பிடும் அந்த இடம் மனதை என்னவோ செய்தது...
தனக்கென்று உறவுகள் புதிதாக வரும்போது ஏற்கனவே இருந்த உறவுகள் சற்றே தள்ளிப்போவது விந்தைதான்...ஆனாலும் உண்மைதான்...


தம்பி என்ன சொல்வாரோ...


//சினிமாக் காட்சிகள் மனசிலே ஓடித்து. எஸ்.வி.சுப்பையா தானே அவர்?.. கிராமத்து பண்ணையாளா இருப்பார். அவர் மகள் பண்ணையாரின் மகனைக் காதலிப்பதைக் கேட்டு அதிர்ந்து, என்ன பாதகம் இதுன்னு துடிப்பாரே, அந்த மாதிரி தான். அதே ஸீன்!//

பொருத்தமான மேற்கோள்..ரசித்தேன்...

கோமதி அரசு said...

அவர் சொன்னதை ஆமோதிக்கற மாதிரி பெண்டுலம் கடிகாரம் ஒலிக்கத் தொடங்க, வாசல் காலிங் பெல் அதனிலிருந்து வேறுபட்ட ரீங்காரத்துடன் கணகணக்கிறது. என் காதுகளுக்கு எல்லாமே இன்னிசையாய் மயக்கறது. அதேசமயம், "புரொபசர் கூட இதோ வந்திட்டாரே" என்கிறார் டாக்டர் சாந்தி.//

காலிங்பெல் ஒலி மங்கள ஒலியாக ஒலிக்கட்டும்.
காதுகளுக்கு எல்லாமே இன்னிசையாய் ஒலிப்பது நல்ல அறிகுறி..
அவருக்கு பார்வை வந்து திருமணமும் நடக்க போவதைப் பார்க்க ஆவலயாய் இருக்கிறோம்.

G.M Balasubramaniam said...

//தொடர்ந்து வந்து தங்கள் கருத்துக்களைச் சொல்வதற்கு மிக்க நன்றி, ஜிஎம்பி சார்!
December 31, 2011 11:45 PM//

நான் படித்துக் கருத்துக்களை சொல்ல மாட்டேன் என்று நினைத்தீர்களா.?

ஜீவி said...

@ G.M. Balasubramanaiam

நீங்கள் சொல்வதும் நியாயம் தான்.

"ஏன்யா! உங்க அண்ணனும், அந்தக் கூட்டமும் உன் பெண்ணுக்கு எவனையோ கட்டி வைக்க முயற்சிக்கறங்காங்கன்னா, உனக்கெங்கையா புத்தி போச்சு?" என்று தம்பி விஸ்வநாதனின் மனைவி தேவி கேட்கலாம்.

-- ஆனால், இப்படியான பாத்திரங்களை உருவாக்கத் தெரியாத ஆசிரியர். அவருக்கு, 'எல்லோரும் நல்லவரே; சூழ்நிலையை சரிப்படுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற நினைப்பு வேறே.

-- இப்படிப்பட்ட நிலையில் ட்விஸ்டுகளுக்கு (நல்ல வார்த்தை கிடைத்தது போங்கள்; அதற்கான உபயமும் அடியேனே என்றும் தெரியும்) வாய்ப்பெங்கே, சார்?..

எல்லாம் என்னவாகிறது என்று பார்க்கலாம்..

ஜீவி said...

@ ஸ்ரீராம்

கரெக்ட் ஸ்ரீராம்! நானும் உணர்ந்த இந்த உணர்வு தான் எங்கோ ஒளிந்திருந்து சமயம் கிடைத்த பொழுது அதுவாக வெளிப்பட்டிருக்கிறது!

ஆணுக்காவது அம்மா-அப்பாவோட தவிர்க்க முடியாமல் தத்தளிக்கும் தொடர்பு. பெண்களுக்கோ அதுவும் இல்லை. கல்யாணத்தின் பொழுதே வலிந்தே கத்தரிக்கப்படுகிறது!

அம்மா பாலம் போலவே தமக்கை பாலமும் கூட. ஆதாரம் கழன்றதும் அத்தனையும் மூலைக்கொன்றாய்ச்
சிதறிப் போகிறது. இருக்கும் வரை இதுதான் ஆதாரம் என்று தெரியாது, இல்லாத போது தெரியும் ஞானோதயம்!

உங்கள் பின்னூட்டம் படப்பிடிப்பாய் மனசில் பளிச்சிடும் போது, ஏதேதோ நினைவுகள் நினைவுக்கு வந்து நெகிழச் செய்தது. உணர்வுகள் தூங்கும் நிலையில் உள்ளவை; யாரானும் லேசாகச் சிலுப்பினால் போதும், பொலபொலவென்று உதிர்ந்து விடுகின்றன.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம் (1)

வாருங்கள், கீதாம்மா!

சொந்த பிள்ளை, பெண்கள் தங்களை ஆளாக்கி வளர்ப்பது பெற்றவர்களின் கடமை என்று நினைக்கிறார்கள். அதனால், வளர்ப்பதற்கு பட்ட பாடு
சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை!
பாலூட்டி வளர்த்த கிளி பறந்த கதையாகிப் போகிறது!

ஆனால், சகோதர- சகோதரி பந்தம் அப்படி இல்லை, அல்லவா?.. மூத்த சகோதரனாய் இருந்து, அடுத்தது, அடுத்தது என்று தனக்குப் பின்னால் பிறந்தவர்களை கரையேற்றி விட்ட எத்தனை மகாத்மாக்களைப் பார்த்திருப்போம்! சொந்த அம்மாவையே 'மன்னி' என்று விளிக்கப் பழக்கப்பட்டுப் போனவர்களை உங்களுக்கும் தெரியும் தானே?.. அந்த அளவுக்கு சகோதர உறவுகள் பாசமலராய் வாசம் கொண்டவை, இல்லையா?..

'இந்தக் காலத்திலும் அந்தக் காலத்தை கொண்டு வருவதற்காகத்தானே, இத்தனையும்?

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம் (2)

முதலில் அந்தப் பெரியவருக்குப் பார்வை கிடைக்கட்டும்; கிடைக்கிற பார்வையும் அவர் விரும்புவதற்காக இருக்கட்டும் என்றே நினைக்கிறேன்.
ஆனால், இதில் யாரேனும் ஒருத்தர் முரண்டு பிடித்தாலும், கண்ணாடி பாத்திரத்தை நழுவ விட்டதே போல்...

ஜீவி said...

@ பாசமலர்

பெயரே சொல்லுகிறதே, அந்த பாசத்திற்கு கேட்கவா, வேண்டும்?..
ஆமாம், அவை சுடுகின்ற உண்மையாய இருப்பதினால் தான், சுட்டதோடு மட்டுமில்லாமல், அதற்கான வடுவையும் விட்டுப் போகிறது!

சில நடிகர்கள் அப்படி! இப்பவும் நாம் வேறு சந்தர்ப்பங்களில் கூட அவர்களை நினைத்துக் கொள்கிற மாதிரி வாழ்ந்து காட்டி விட்டுத் தான் போயிருக்கிறார்கள்!

தங்கள் ரசனைக்கு நன்றி.

Shakthiprabha (Prabha Sridhar) said...

//என்ன சொல்றது டாக்டர்! என் சோகம் ரொம்ப ஆத்மார்த்தமானது. சங்கரியை நான் பார்த்ததில்லை; விவேகானந்தனைப் பார்த்ததில்லை; விவேகானந்தனின் தகப்பனாரை- தாயாரைப் பார்த்ததில்லை. ஏன், என் தம்பி சம்சாரம், அவங்க அம்மா.. எல்லாருமே இவங்க இவங்கன்னு தான் என் ஞாபகத்துக்கு அறிமுகம் ஆகியிருக்காங்களே தவிர, யாரையும் நான் கண்ணால் பார்த்ததில்லைங்கறது எவ்வளவு ஆழமான சோகம்ங்கறது மனசிலே படிஞ்சு இருக்கு//

உணர முடிகிறது.....தொடர்கிறேன்....

ஜீவி said...

@ Shakthiprabha

எல்லாம் அந்த உணர்தலுக்காகத் தான்.
மிக்க நன்றி, ஷக்தி.

அமெரிக்கா வருவதற்கான ஏற்பாடுகளில் தொடர்ந்து எழுதுவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. இப்பொழுது வந்தாச்சு. தொடர்கிறேன். தொடர்ந்து வருகை தாருங்கள்.

Related Posts with Thumbnails