மின் நூல்

Tuesday, February 14, 2012

பார்வை (பகுதி-27)

                      அத்தியாயம்--27

மிழ் எழுத்தாளர்களில் அகிலனை பெரியவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.  தமது வாலிப வயதில் அகிலன் நாவல்களைத் தேடித் தேடிப் படித்திருக்கிறார்.  அகிலன் தொடர்கதைகளைப் படிப்பதற்காகத் தான் வீட்டில் 'கலைமகளு'ம், 'கல்கி'யும் வாங்கும் பழக்கம் ஏற்பட்டு நாளாவட்டத்தில் அவரே கதைகள் எழுதி அந்தப் பத்திரிகைகளுக்கு அனுப்ப பல திரும்பி வந்திருக்கின்றன..

இதையெல்லாம் பற்றி ஊர்மிளாவிடம் நிறையச் சொல்லியிருக்கிறார் அவர்.  பெரியவர் எதைப் பற்றிப் பேசினாலும் அந்த உரையாடல் போக்கே கதை சொல்கிற மாதிரி தான் இருக்கும்.  பேச்சின் நடுநடுவே இளம் வயதில் அவர் கொண்டிருந்த விருப்பங்கள், சாதாரண விருப்பங்களைத் தாண்டிய தாபங்கள் எல்லாம் வெளிப்படும்.

சின்ன வயசில் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளைப் படித்து படித்து தானும் அந்த மாதிரி எழுத வேண்டும் என்கிற ஆசை அவரைப் பிடித்து ஆட்டியிருக்கிறது. அப்படியான ஆசை நெஞ்சில் கிளர்ந்தெழுந்த பொழுது பார்க்கும் விஷயத்தை எல்லாம் கதைகளாக்கக் கைகள் பரபரத்திருக்கின்றன.  அப்படியாகத் தான் அவரது ஆரம்ப கால கதைகள் உருவாகியிருக்கின்றன.  அப்படி உருவான கதைகளில் ஒன்றாவது அச்சு வாகனமேறி ஏதாவது ஒரு பத்திரிகையில் பிரசுரமாகிவிட வேண்டும் என்று படாத பாடு பட்டிருக்கிறார்.

இப்பொழுது பெரியவர் அவளிடம் கேட்ட கேள்வி நெஞ்சில் கிளர்த்திய நினைவுகள் இப்படியான நினைப்புகளாய் ஊர்வலம் வந்தன.

"என்ன யோசனை, ஊர்மிளா?.. நான் எதிர்ப்பார்ப்பதற்கேற்ப எந்த நாவலும் கைவசம் இப்பொழுது இல்லையா?.." என்று அவர் திருப்பிக் கேட்ட பொழுது தான், அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மெளனமாக இருந்து விட்டோம் என்கிற உணர்வு மேலிட "சாரி.. நீங்கள் கேட்டதற்கு உடனே பதில் சொல்கிற மாதிரி தயார் நிலையில் நான் இல்லை.  இரண்டே நாட்களில் கையெழுத்துப் பிரதிகளாய் நம்மிடம் இருப்பனவற்றில் தேர்ந்தெடுத்து உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்" என்றாள்.

"அப்படித் தேர்ந்தெடுக்கும் பொழுது ஒன்றைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  வெகுஜன பத்திரிகைகள் மூலம் வாசகர்களுக்கு இதுவரை தெரிந்திராத எழுத்தாளர் எழுதிய நாவலாய் அது இருக்க வேண்டும். அதான் முக்கியம்" என்றார்.

இப்படி அடிக்கடி அவர் சொல்லியிருக்கிறார்.  'தமிழ்ப் பத்திரிகைகளின் மூலம் வாசகர் உலகிற்கு அறிமுகம் ஆகாத எழுத்தாளர்' என்கிற வார்த்தைத் தொடர் மீது அவருக்கு உள்ள பிடித்தத்தை அவள் அறிவாள்.  ஆரம்ப காலங்களில் பத்திரிகைகள் மூலம் அல்லாது இவர் மூலம் புதுப்புது எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார் என்று எண்ணிக் கொண்டாள்.  பிற்காலத்தில் இந்த மாதிரியான எழுத்தாளர் வரிசைக்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பது விநோதமாக இருந்தது.

இந்தத் தடவையாவது அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலில், "மன்னிக்கணும்.  நீங்கள் தப்பாக நினைக்கக் கூடாது.  இது வரை இதுமாதிரியான எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களாய் கிட்டத்தட்ட இருபதுக்கு மேலே நாம பிரசுரம் பண்ணி விட்டோம்.  பிரசுரித்து விட்டோமே தவிர, அந்த மாதிரியான நாவல்களை சந்தை படுத்துவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன.  நமது அத்தனை கிளை விற்பனை நிலையங்களுக்கும் இப்படியான நாவல்களை அனுப்பி வைத்து, மற்ற நாவல்களுக்குக் கொடுக்காத முக்கியத்துவதைக் கொடுக்கிற மாதிரி பிரதானப்படுத்தி கிளைகளில் பார்வையில் வைத்திருந்தும் விற்பனையைப் பொறுத்த மட்டில் மந்தம் தான்.  ஆனால் நாம் தான் விடாமல் வாசகர்களுக்கு இதுவரை அறவே தெரிந்திராத எழுத்தாளர்களின் எழுத்துக்களைத் தேடித்தேடி பிரசுரித்துக் கொண்டிருக்கிறோம்.  இப்படிச் செய்வது ஏதோ வீம்புத்தனமாக நாம் செய்வது போலிருக்கிறது.  ஆனால் ஏன் இப்படிச் செய்கிறோம் என்று தெரியவில்லை" என்று அவள் சொன்ன பொழுது பதில் பேசாமல் ஆழமாக அவளைப் பார்த்தபடி மெளனமாக இருந்தார் பெரியவர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அங்கு நிலவிய மெளனத்தைக் கலைத்தவராய், "விற்பனையைப் பொறுத்த மட்டில் நீ சொல்வது சரிதான் ஊர்மிளா! ஆனால் தரத்தைப் பொறுத்த மட்டிலும் நமக்குன்னு ஒரு கணிப்பு இருக்கிறதில்லையா? .. இவர்கள் வாசகர்களுக்கு வெகுவாகத் தெரிந்து பிரபலமாகவில்லையே தவிர, பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்கு சவால் விடுகிற மாதிரியல்லவா அவர்கள் எழுத்து இருந்திருக்கிறது?..  நாம் கூட இந்தக் காரியத்தைச் செய்ய வில்லை என்றால், எப்படித் தான் அவர்கள் வாசகர்களுக்கு அறிமுகவாவர்கள்?.. அதனால் தான் அவர்கள் எழுத்தை அறிமுகப்படுத்துவதை ஒரு கடமையாகச் செய்கிறோம்" என்றார்.

"கையைச் சுட்டுக் கொண்டானும் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமா?" என்று ஊர்மிளா கேட்க நினைத்தாள்.  அதிகப் பிரசங்கித்தனமாக இருக்குமோ என்கிற நினைப்பில் அப்படிக் கேட்கவில்லை. ஆனால் அவள் கேட்க நினைப்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்து விட்டது போலும். ஒரு நிமிடம் அவளைப் படிப்பது போல உற்றுப் பார்த்து விட்டு பெரியவரே தொடர்ந்தார். "பத்திரிகைத் துறை தான் என்று இல்லை. எல்லாத் துறைகளிலும் இன்று பிரபலப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை. அவர்களும் ஆரம்ப நிலைகளில் ஜனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்தத் துறைகளில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு பிரபலமானவர்கள் தான்.  அதைச் சொல்ல வரவில்லை. ஆனால் அடுத்தடுத்து புதியவர்கள் வெளிச்சத்திற்கு வரும் ரேஷியோ ரொம்ப குறைச்சலாய் இருக்கிறது.  என்ன காரணத்தினால் இப்படி என்று வீணாக யோசிப்பதை விட்டு, 'இந்தத் துறையில் நாம் இருக்கிறோம்; இதில் நம்மால் முடிந்ததைச் செய்வோம்'  என்கிற அடிப்படையில் இதைச் சொல்கிறேன்" என்று சொல்லி விட்டு திடுதிப்பென்று "ஒரு கதை சொல்றேன், கேட்கறையா?" என்று அவளைப் பார்த்தார்.

பேச்சின் நடுவில் இப்படி நிறைய கதைகள் சொல்வது பெரியவரின் பழக்கம்.  கூந்தலின் நடுவே சூட்டிக் கொண்ட ரோஜா போல, அப்படி அவர் சொல்கிற கதைகள் அவர் சொல்வதற்கு அழகு சேர்ப்பது போல மிக எடுப்பாகத் தோற்றமளிக்கும்.  அவர் கதை சொல்றேன் என்று சொன்னவுடனே அவர் சொல்லப்போவதைக் கேட்கும் ஆவல் பிரகாசமாய் ஊர்மிளாவின் முகத்தில் பளிச்சிட்டது.

பெரியவர் ஏதோ நினைவுகளில் ஆழ்ந்திருப்பது போல சில நிமிடங்கள் இருந்து விட்டு சொல்லத் தொடங்கினார்."அவன் ஒரு இளம் வாசகன்.  அவனுக்குன்னு ஒரு பேர் தேவையில்லே.  பத்திரிகைகள் படிக்கும் எல்லா இளம் வாசகர்களை யும் அவன் பிரநிதித்துவப் படுத்துவதால், அவனுக்குன்னு தனியா ஒரு பேர் தேவையில்லை. இருந்தாலும் கதை சொல்றத்துக்கு வசதியா அவன் பெயரை கேசவன்னு வைச்சிக்கலாம்.  சரியா?"

கதை கேட்கும் சுவாரஸ்யத்தில், "சரி.." என்றாள் ஊர்மிளா.

"பத்திரிகைகளில்லே வெளிவர்ற கதைங்களைப் படிக்கறதுன்னா, அவனுக்கு சோறு தண்ணி வேண்டாம்.  கதைகள்ன்னு மட்டுமில்லை, சித்திரக்கதைகள், துணுக்குகள், கேள்வி-பதில், தலையங்கம், தொடர்கதைகள்ன்னு ஒரு இதழை எடுத்து விட்டானானால், முதல் அட்டைலேந்து கடைசி அட்டை வரை எழுத்து விடாமல் படிக்கறது கேசவன் வழக்கம்.  படிக்கறதுன்னா, மேலோட்டமா இல்லே.  உன்னிப்பாப் படிப்பான். ஒரு பக்கத்தைப் படிச்சு முடிச்சு, அடுத்த பக்கத்தைத் திருப்பபறத்தே, அடுத்தப் பக்கத்லே முதல் வார்த்தை கேசவன் நினைக்கிற மாதிரியே இருக்கும். அப்படி ஒரு ஆழ்ந்த படிப்பு.  அவன் படிக்கற பல கதைங்க அவன் நினைக்கிறபடியே முடிவு கொண்டிருக்கும்.

"இப்படிப் படிச்சுப் படிச்சு நாளாவட்டத்திலே அவனுக்கும் கதை எழுதணுன்னு ஆசை. ரொம்ப நாளைக்கு அந்த ஆசையைத் தள்ளிப் போட்டுகிட்டு இருக்க அவனாலே முடியலே..  ஒரு நாளைக்கு என்ன செஞ்சான்னா, ஒரு நீள சைஸ் பேப்பர் ஒண்ணை எடுத்து வைச்சிக்கிட்டு முத்து முத்தா தன்னோட கையெழுத்தில அவனே ஒரு கதையை எழுதிட்டான்.

"அந்தக் கதையைப் பத்திரிகைக்கு கேசவன் அனுப்பறான்.  அப்படித்தானே?" என்றாள் ஊர்மிளா.

"பின்னே?.. எழுதிப் படிச்சுப் பாத்தப்போ வழக்கமா பத்திரிகைகள்லே வர்ற கதைங்க போலவே எந்தக்குறையும் சொல்ல முடியாதபடி அந்தக் கதை நன்றாக வந்திருந்தது.   இருந்தாலும் பலதடவை திருப்பித் திருப்பி அதைப் படிச்சு, தேவையில்லாத சில வார்த்தைகங்களை அடிச்சுத் திருத்தி அச்சு அசலா ஒரு பத்திரிகைக் கதையைத் தயார் படுத்திட்டான் அவன்.  எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம்னு யோசிச்சப்போ, ஒரு பிரபல பத்திரிகையோட ஞாபகம் அவனுக்கு வந்தது.  அந்தப் பத்திரிகையில வெளிவரும் கதைகள் எல்லாம் இதோ இப்போ இவன் எழுதியிருக்கிற கதைகள் போலவே இருக்கும்.  அதனால அந்தப் பத்திரிகைக்கே அனுப்பறதுன்னு தீர்மானிச்சிட்டான்.

"அப்படித் தீர்மானம் பண்ணிட்டானே தவிர எப்படி அனுப்பறதுன்னு தெரிலே. ஒரு பத்திரிகையில கதைப்போட்டி ஒண்ணு வைச்சிருந்தாங்க..  அதைப் படிச்சவுடனே பத்திரிகைகளுக்கு கதை அனுப்பணும்னா இப்படித் தான் அனுப்பணும்னு கேசவனுக்குப் புரிஞ்சது.  ஏ4 சைஸ் பேப்பர் ஒண்ணை எடுத்து அதிலே ஒரு பக்கம் மட்டுமே எழுதி பக்க எண்கள் கொடுத்து, எழுதியது கேசவன்ன்னு போட்டு அவன் முகவரியையும் தெளிவாத் தனித்தாளில்லே எழுதி ஒரு பழுப்பு நிற கவரில் போட்டு ஒரு வழியா எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டான்.  அவன் அனுப்ப நினைச்ச பத்திரிகையோட முகவரி கடைசி பக்கத்தில்லே இருந்திச்சி. அதையும் தவறில்லாம கவரின் மேலே எழுதினான்.  போஸ்ட்டாபீஸ் போய் அந்தக் கவரை எடை போட்டு எவ்வளவு ஸ்டாம்ப் ஒட்டணும்னு என்று தெரிஞ்சிண்டு ஸ்டாம்ப்பையும் ஒட்டி அன்றைய தபாலிலேயே அனுப்பிசிட்டான்.

"அடுத்த வார பத்திரிகை வர்ற வரை கேசவன் துடிச்சுப் போய்ட்டான்னு தான் சொல்லணும்..  அழகா கலர்க்கலரா படம் போட்டு, கொட்டை எழுத்தில் தன் பேரை மேலே எடுப்பா எழுதி தன்னோட கதை அந்தப் பத்திரிகையில வரும்ன்னு ஒவ்வொரு நாளும் கேசவன் கனவில மிதந்தான். அடுத்த வாரப் பத்திரிகை கடையிலே தொங்கினதைப் பாத்ததும் கேசவனுக்கு இருப்பு கொள்ளலே.  பத்திரிகையை வாங்கி பரபரப்போட பக்கங்களைத் திருப்பிப் பார்த்தான்.  ஏனோ அவன் கதையைக் காணோம்.  இருந்தாலும் மனசைச் சரிபடுத்திண்டு அடுத்த வார இதழ் வரும் வரை காத்திருந்தான்.  அந்த இதழிலும் அவன் கதை இல்லை.  அடுத்த வாரம், அடுத்த வாரம்ன்னு நாலைஞ்சு வாரங்கள் கழிச்சு ஒரு நாள் அவன் வீட்டு முகவரிக்கு அந்தப் பத்திரிகை அலுவலகத்தினர் கதையைத் திருப்பி அனுப்பிச்சிருந்தாங்க..  திரும்பி வந்திருந்த கதையைப் பார்த்ததும் கேசவனுக்கு பொசுக்னு போயிட்டது.  இருந்தாலும் மனம் தளரலே..  இன்னொரு கதை, இன்னொரு பத்திரிகைன்னு இப்படி எழுதறது, அனுப்பறது, அது திரும்பி வர்றதுன்னு இதுவே வாடிக்கையா போயிட்டது.

"அப்புறம்?" என்று சுவாரஸ்யத்துடன் கேட்டாள் ஊர்மிளா.

"சொல்றேன்.." என்ற பெரியவர்.   எவர்சில்வர் வெற்றிலைப் பெட்டி திறந்து கொஞ்சம் சீவல் எடுத்து அண்ணாந்து வாயில் போட்டுக் கொண்டு நாலைந்து துளிர் வெற்றிலை எடுத்துத் துடைத்து அவற்றின் முதுகில் மூணாவதைத் தடவினார். "அத்தனை கதைங்க திரும்பி வந்தும் கேசவன் கொஞ்சம் கூட மனம் தளரலே., .  நாளாவட்டத் திலே ஒரு பத்திரிகைக்கு அனுப்பின கதையை இன்னொரு பத்திரிகைக்கு அனுப்ப ஆரம்பிச்சான்.. அனுப்பித் திரும்பின கதைலே முதல் பக்கத்திலே மேலே பத்திரிகைகாரங்க அந்தக் கதை தங்களுக்கு வந்த தேதி தெரியும்படியா ரப்பர் ஸ்டாம்ப் குத்தியிருப்பாங்க..  அதனாலே அந்தப் பக்கத்து மேட்டரை மட்டும் இன்னொரு தனிப்பேப்பரில்லே எழுதி மற்றப் பக்கங்களுடன் அதை இணைச்சு அனுப்புவான்.   தான் அனுப்பற ஒவ்வொரு கதையும் பிரசுரமாகற மத்த கதைகங்களை விட சிறப்பா இருக்கறதா கேசவனுக்கு பட்ட ஒரு விஷயம் தான் அவன் தொடர்ச்சியா இப்படி அனுப்பறதுக்குக் காரணம் ஆயிற்று.  என்னைக்காவது ஒரு நாள் தன் கதை நிச்சயம் ஏதாவது ஒரு பத்திரிகையில் பிரசுரமாகியேத் தீரும்ன்னு உறுதியா அவன் நம்பினான்.  அந்த நம்பிக்கை கொடுத்த சக்திலே இப்படியான தனது அனுபவத்தையே ஆவேசத்துடன் ஒரு கதையாக்கி, அதற்கு 'நெஞ்சு வேகுமா?'ன்னு தலைப்பிட்டு 'கங்கை'ங்கற பத்திரிகைக்கு அனுப்பி வைச்சான்.

' ச்ச்ச்'சென்று உச்சுக்கொட்டினாள் ஊர்மிளா.  'நெஞ்சு வேகுமா?'  என்ன பரிதாபகரமான தலைப்பு, சார்! பாவம், கேசவன்..  கட்டக் கடைசியா இந்தக் கதை பிரசுரமாயிடறது.. இல்லையா? அதானே, கதை?"

"அதுக்குள்ளே முடிவுக்குப் போய்ட்டா எப்படி?" என்று குதப்பிய வெற்றிலை சீவலை கன்னக் கதுப்பின் ஒரு பக்கம் ஒதுக்கிக் கொண்டார் பெரியவர். "தமிழ் நாட்டிலே அந்தக் காலத்தில் வெளிவந்த ஒவ்வொரு பத்திரிகையையும் மறைமுகமாகக் குறிப்பிட்ற மாதிரி கேசவன் அதுக்குப் பெயர் வைச்சான்.. 'விகடன்'னா 'ஹாஸ்யன்',  'கல்கி'ன்னா 'எமன்'.  'குமுதம்'னா 'அல்லி.' இப்படி ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு பெயர் கொடுத்து, அதுக்கெல்லாம் ஒரு எழுத்தாளர் வாராவாரம் சிறுகதை அனுப்பி அவை பிரசுரமாகாம திரும்பி வர்றதாக் காட்டி, ஒரு கதையாவது ஏதானும் ஒரு பத்திரிகையில் பிரசுரமானால் தான் தன் நெஞ்சு வேகும்' என்று சொல்லி கதையின் கடைசியில் கேசவன் ஒரு பரிதாபகரமான கிளைமாக்ஸை வைச்சிருந்தான்."

"அடடா..!" என்று ஊர்மிளா நெட்டுயிர்த்த பொழுது அவள் குரல் தடுமாறிக் குழைந்தது.   "அப்புறம்?..."

"கதைப்படி கேசவன் இறந்து விடுகிறார்.  அந்தக்கடைசிக் கதை பிரசுரமானதைப் பாக்கக் கூட அவருக்குக் கொடுத்து வைக்கலே.  அழகழகா படங்கள் போட்டு அந்தக் கதை பிரசுரமாகியிருக்கிறது.  அந்தக் கதை பிரசுரமான இதழையும், ஒரு மணியாடர் பாரத்தையும் கையிலே வைச்சிண்டு தபால்காரர் ஒருத்தர் அவர் வீட்டு வாசல் பக்கம் நிற்கிறார்.   இனி கேசவனின் நெஞ்சு வேகும் என்கிற மாதிரி கதை முடியும்.." என்று சொல்லி முடித்து விட்டு வெற்றிலைப் பெட்டியை மூடினார் பெரியவர்.

கலங்கிய கண்களுடன் ஊர்மிளா, "உண்மையைச் சொல்லுங்கள்.. நீங்கள் தானே கேசவன்?" என்றாள்.

"அதை எப்படிக் கண்டுபிடிச்சே?"

"இன்னொருத்தர் எழுதிய கதையை யாரொருத்தாரேலேயும் இப்படி உணர்வு பூர்வமா நேரேட் பண்ண முடியாது.. அதான் உங்களைக் காட்டிக் கொடுத்திடுச்சி.."

"குட்.." என்றார் பெரியவர்.  "இதாம்மா, ஆரம்ப கால எழுத்தாளர்களோட நிலைமை.. நூறு பேர்னா பிரபல பத்திரிகைகளோட மோதிரக் கையாலே குட்டுப் பட்டு வெளிச்சத்துக்கு வந்தவங்க நாலைஞ்சு பேர் தான்.   ஏதாவது போட்டி, விசேஷ கால மலர்கள்னா புதுசா ஏழெட்டு பேருக்கு சான்ஸ் கிடைக்கும். அவ்வளவு தான்.  இப்போ சொல்லு.  புதுசா எழுத வர்றவங்களை ஆதரிக்கணும்னு நான் நெனைக்கிறதிலே தப்பில்லை தானே?" என்று அவர் சொன்ன பொழுது தனது பதிப்பக முதலாளியை நினைத்து அவளுக்குப் பெருமையாக இருந்தது.

இந்த சமயத்தில் கூட, விஜியைப் பற்றி, அந்த 'பார்வை' கதைபற்றி பெரியவரிடம் சொல்ல வேண்டுமென்று ஊர்மிளா நினைத்தாள். இருந்தாலும் லஷ்மணனிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு பிறகு பெரியவரிடம் அது பற்றி பிரஸ்தாபிக்கலாம் என்கிற எண்ணமே மேலோங்கியது.



(இன்னும் வரும்)













17 comments:

Geetha Sambasivam said...

பெரியவர் தான் விஜியோ? ஆவலைத் தூண்டும் கதைப் போக்கு. தொடருங்கள். காத்திருக்கேன். :)

ஸ்ரீராம். said...

பத்திரிகைகளுக்குக் கதை எழுதி அனுப்பும் அறிமுக எழுத்தாளர்களின் அவஸ்தையைச் சொல்லும் அதே நேரம் எப்படி அனுப்ப வேண்டும் என்ற பாடமும் அதில் இருப்பது எல்லாவற்றையும் முழுமையாக எழுத வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தைக் காட்டுவதாகவே தோன்றுகிறது. அதோடு இம்மாதிரிப் பதிப்பகங்கள் இருக்க வேண்டும் என்ற ஆதங்கமும் தெரிகிறது.

Shakthiprabha (Prabha Sridhar) said...

பின்னலிடை ரோஜாப்பூவாக இருந்தது கதை... அவர் தான் கேசவன் என்று யூகிக்கக்கூடிய உணர்வு பூர்வமான விளக்கம். கீதா அவர்கள் கூறியது போல், அவர் தான் விஜியோ?

பாச மலர் / Paasa Malar said...

மாறி வருகின்ற கதையின் திசையில் இன்னுமொரு கோணம்...

சில சுய குறிப்புகள் / autobiographical remarks இருப்பதாக ஏனோ தோன்றியது.

கூந்தலின் நடுவே ரோஜா..உவமை நன்று..

//. 'விகடன்'னா 'ஹாஸ்யன்', 'கல்கி'ன்னா 'எமன்'. 'குமுதம்'னா 'அல்லி.' இப்படி ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு பெயர் கொடுத்து//

ஒவ்வொரு பத்திரிகைக்கும் அந்த நாளில் இருந்த தனி அடையாளம் தனிச்சிறப்புதான்...இன்றைய நிலை அப்படி இல்லை என்ற வருத்தம் மிஞ்சியது இந்த வரிகளை வாசித்தபோது...

ஒவ்வொரு துறையிலும் பிரபலங்கள் எங்ஙனம் உருவகிறார்கள் என்ற அலசலும் நன்று..

கோமதி அரசு said...

//சின்ன வயசில் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளைப் படித்து படித்து தானும் அந்த மாதிரி எழுத வேண்டும் என்கிற ஆசை அவரைப் பிடித்து ஆட்டியிருக்கிறது. அப்படியான ஆசை நெஞ்சில் கிளர்ந்தெழுந்த பொழுது பார்க்கும் விஷயத்தை எல்லாம் கதைகளாக்கக் கைகள் பரபரத்திருக்கின்றன. அப்படியாகத் தான் அவரது ஆரம்ப கால கதைகள் உருவாகியிருக்கின்றன. அப்படி உருவான கதைகளில் ஒன்றாவது அச்சு வாகனமேறி ஏதாவது ஒரு பத்திரிகையில் பிரசுரமாகிவிட வேண்டும் என்று படாத பாடு பட்டிருக்கிறார். //

அந்த காலத்தில் தான் பட்ட சிரமம், தன் கதையை திருப்பி அனுப்பி தனக்கு வருத்தம் ஏற்படுத்திய பத்திரிக்கைகள் மாதிரி தன் பத்திரிக்கை இருக்க கூடாது என்பதால், இப்படி சொல்கிறார். அற்புதம்.


"அப்படித் தேர்ந்தெடுக்கும் பொழுது ஒன்றைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வெகுஜன பத்திரிகைகள் மூலம் வாசகர்களுக்கு இதுவரை தெரிந்திராத எழுத்தாளர் எழுதிய நாவலாய் அது இருக்க வேண்டும். அதான் முக்கியம்" என்றார்.//

புது எழுத்தளர்களை அறிமுகப் படுத்தி, உற்சாகப் படுத்தி எழுத வைக்கும் பத்திரிக்கையாக தன் பத்திரிக்கை இருக்க வேண்டும் என விரும்புகிறார் பெரியவர். அருமை.

பெரியவர் சொல்லும் நெகிழவான கதை, கேசவன் தான் பெரியவர் என்று ஊர்மிளா கண்டு பிடித்த மாதிரி நானும் பெரியவர் தான் என்று கண்டு பிடித்து விட்டேன்.

பார்வைகள் கதை எழுதிய விஜி தான் பெரியவரென்று கீதா மேடம் நினைப்பது போல் நானும் நினைக்கிறேன்.

புதிய எழுத்தாளர் நன்கு எழுதுவதாயும் விஜிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் ஊர்மிளாவும், லக்ஷ்மணும் முன்பே பேசிக் கொண்டார்கள்.
அதனால் பெரியவர் உத்தரவு படி இந்த பத்திரிக்கையில் விஜிஎன்ற புது எழுத்தாளரின் கதை இடம்பெறும்.

பெரியவரின் நீண்ட நாள் கனவு பலிக்கும் என நினைக்கிறேன்.

பெரியவர் கேசவன் கதை பத்திரிக்கையில் வந்த போது அவர் இல்லை என்று கதைசொல்லி சோகமான முடிவு கொடுத்த மாதிரி நீங்கள் கொடுக்க வேண்டாம் சார்.

கதை நிறைய எதிர்ப்பார்ப்புகளை கொடுக்கிறது.

G.M Balasubramaniam said...

இருந்தாலும் கதை சொல்றத்துக்கு வசதியா அவன் பெயரை கேசவன்னு வைச்சிக்கலாம். சரியா.//
//கதைப்படி கேசவன் இறந்து விடுகிறார். அந்தக்கடைசிக் கதை பிரசுரமானதைப் பாக்கக் கூட அவருக்குக் கொடுத்து வைக்கலே//
//இனி கேசவனின் நெஞ்சு வேகும் என்கிற மாதிரி கதை முடியும்.." என்று சொல்லி முடித்து விட்டு வெற்றிலைப் பெட்டியை மூடினார் பெரியவர்//.கதை எழுதிய கேசவன் இறந்து விடுகிறான்.பிரசுரமாவது எப்படித் தெரியும்? இனி கேசவனின் நெஞ்சு வேகும் என்று எப்படி முடிக்க முடியும்.? என் புரிதல் எங்கோ தவறோ? நான் எழுதிய கதைகள் எதையும் பத்திரிகைகள் பெற்றதில்லை.பெரிய ஆசையாய் ஒரு நாவல் அனுப்பினேன். தபால் நிலையத்திலேயே அதற்கு மோட்சம் கிடைத்தது. அதனை உயிர்ப் பித்து இப்போது வலையில் “நினைவில் நீ”
.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

இப்போதைக்கு யாரை விஜியாக்குவது என்கிற யோசனைதான் என்னையும் குடைந்து கொண்டிருக்கிறது.:)

இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஸ்ரீராம், உங்களுக்குத் தெரியாததா?

இதுவரை யாரும் தொடாத சப்ஜெக்ட்டைத் தேடிக் கொண்டிருந் தேன். தொட்டுவிட்டேன். அவ்வளவுதான்.

இன்னும் நிறைய ஆதங்கங்கள் இருக்கு. வியாபார உலகத்தில் ஆதங்கங்கள் மட்டுமே படமுடியும் என்றாலும் வளர்ச்சிப்போக்கில் ஒவ்வொன்றாக மலரலாம் என்கிற நம்பிக்கை தான்.

ஜீவி said...

@ Shakthiprabha

என்னுடைய சமீபத்திய குழப்பம் என்னவென்றால் எல்லாருமே விஜியாகத் தெரிவது தான். ஒன்று செய்யலாம்..
பேசாமல் விஜியையே.. (கொஞ்சம் இருங்கள். எதுக்கும் ஸ்ரீராமைக் கேட்டுச் சொல்கிறேன்) :)

ஜீவி said...

@ பாசமலர்

//சில சுய குறிப்புகள் / autobiographical remarks இருப்பதாக ஏனோ தோன்றியது.//

அல்லது தோன்றும்படியாக எழுதப் பட்டிருக்கு என்றும் சொல்லலாம் அல்லவா?..

// கூந்தலின் நடுவே ரோஜா.. உவமை நன்று//

ரோஜா என்றாலே எனக்கு ஜவஹர்லால் நினைவு தான் வரும். இந்தத் தடவை ஏனோ அது வேறு மாதிரி நினைவுக்கு வந்து, அதுவே எல்லோருக்கும் பிடித்துப் போய்விட்டது!

நன்றி, பாசமலர்!

ஜீவி said...

@ கோமதி அரசு

//அந்த காலத்தில் தான் பட்ட சிரமம், தன் கதையை திருப்பி அனுப்பி தனக்கு வருத்தம் ஏற்படுத்திய பத்திரிக்கைகள் மாதிரி தன் பத்திரிக்கை இருக்க கூடாது என்பதால், இப்படி சொல்கிறார். அற்புதம்.//

வெற்றியாளர்களின் ரகசியமே இது தான்; தான் பட்ட துன்பத்தை தன்னிடம் பிறர் படக்கூடாது என்று நினைப்பது!

//பார்வைகள் கதை எழுதிய விஜி தான் பெரியவரென்று கீதா மேடம் நினைப்பது போல் நானும் நினைக்கிறேன்.//

உம்?.. அப்படிச் செய்யலாம் என்று தான் பார்த்தேன். ஆனால், அதுக்கும் வழியில்லையே! 'பார்வை' தான் விஜிக்கு பத்திரிகையில் பிரசுரமான முதல் கதை. ஆனால், பெரியவரோ பத்திரிகைக் களம் பல கண்டவர். அந்த விழுப்புண்களோடு தான் இப்பொழுது பதிப்பகம் ஒன்றை மற்றவர்கள் நெருங்க முடியாத சிறப்புகளுடன் நடத்திக் கொண்டிருக்கிறார்! ஆகையால் பெரியவரே விஜி என்று சொல்வதற்கும் வழியில்லை. இருந்தாலும் பார்க்கலாம், வழி ஒன்று கிடைக்காமலா, போய்விடும்?.. அதுவும் தவிர விஜியும் களத்தில் இறங்கிவிட்டால் கதை இன்னும் சூடு பிடிக்கும் என்று தான் தோன்றுகிறது. அதனால் விரைவில் விஜியின் விஜயம் நடக்கும் படி செய்து விடலாம்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

'நெஞ்சு வேகுமா?' என்கிற அந்த வார்த்தைத் தொடரே, கற்பனை சம்பந்தப் பட்டது. ஒரு உணர்வின் உச்சத்தில் பிறந்தது. அதாவது நிஜ நடப்பிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ஓக்கே?..

அடுத்தது, எழுத்தாளன் என்று தனிப்பிறவி ஏதும் கிடையாது. எழுதுபவன் வேறு வாசகன் வேறு அல்ல. சொல்லப் போனால் ஒரு நல்ல வாசகனே நல்ல எழுத்தாளனாகிறான். அதாவது ஒரு வாசகனாக, வாசக அனுபவத்தோடையே 'இப்படி இருந்தால் நன்றாய் இருக்கும்' என்று கதை சொல்லிக்கொண்டு போகிறான்.

இந்தக் கதையின் போக்கில் வாசகரின் எதிர்ப்பார்ப்பும் அதுவே.புனைவுகளின் அடுக்குகளில் ஆழ்த்திக் கதை சொல்லிக் கொண்டுப் போகையில், நிகழ்வுகளுக்கு மாறான எதிர்மறையாக வேகாது என்று எழுதுவது ஒரு திடுக்கிடுதலை ஏற்படுத்தி படிப்பவர் கொண்டுள்ள கற்பனைச் சூழலைக் குலைக்கும்.
அது புனைவுகளுக்கு ஒத்துக் கொள்ளாத சமாச்சாரம்.

இன்னொன்றையும் இந்த இடத்தில் நீங்கள் கவனிக்க வேண்டும். 'வேகாது' என்று எழுதுவதும் இயற்கை நிகழ்வுக்கு முரணானது.
அப்படியே வேகாது என்று எழுதினாலும் இதனால் வேகாது போய் விடுமோ என்கிற எள்ளலலுக்கு உள்ளாகும். சரியா? 'கதை பிரசுரமாவதைப் பார்த்து விட்டு' என்று வேறு மாதிரி முடிவு கொடுத்து எழுதியிருந்தாலும் சாதாரணமாகப் போய் கதையின் இறுதிப் பகுதிக்குக் கிடைக்கும் அந்த விறுவிறுப்பு கிடைக்காமல் போய்விடும்!

கதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டி விளக்கம் கேட்டமைக்கு நன்றி, ஜிஎம்பி சார்!

rajamelaiyur said...

அருமையான தொடர் .. கலக்குங்கள்

அப்பாதுரை said...

மத்தப் பத்திரிகைகள் செல்லப்பெயர் புரியுது.'கல்கி'ன்னா 'எமன்' - ஏன்? (ஏதாவது சுவாரசியமான பின்புலம் உண்டா?)

ஜீவி said...

@ ரா. ராஜா

நன்றி. தொடர்கிறேன். தாங்களும் தொடருங்கள்.

ஜீவி said...

@ அப்பாத்துரை.

எமனுக்கு அப்படியும் ஒரு பெயர் உண்டோ தெரியவில்லை.

"பரித்ராயண சாதுனாம் வினாசாய துஷ்கிருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே" -

'எப்போதெல்லாம் அதர்மம் அதிகமாகிறதோ, அப்போதெல்லாம்
அதனை அழித்து தர்மத்தையும் அமைதியையும் நிலைநாட்ட விஷ்ணு அவதாரம் எடுப்பார்' என்கிற கூற்றின் அடிப்படையில், கலியுகம் முடிக்கப் பெற்று கல்கி அவதாரம் நிகழும் பொழுது தர்மராஜனான எமனும் நினைவுகொள்ளப்படுவான் என்கிற நினைப்பில் அந்தப் பெரியவர்
கல்கிக்கு எமனைக் கொண்டாரோ தெரியவில்லை.

தங்கள் வாசிப்புக்கு மிக்க நன்றி, அப்பாத்துரை சார்!

அப்பாதுரை said...

கண்ணாடிக்கார சுவதேசி பத்திரிக்கைக்குப் பின்னால இப்படி ஒரு சூட்சுமமா? அசந்தே போனேன்!

Related Posts with Thumbnails