மின் நூல்

Friday, September 14, 2012

பார்வை (பகுதி-58)


ன்றைக்கு என்னவோ ரிஷி சீக்கரமே அலுவலகத்திலிருந்து வந்து விட்டான்.

"என்னங்க?.. மழை வரப்போகுதா?" என்று வித்யா கேட்டதற்கு, "ஒரு மாறுதலுக்காகத் தான்.." என்று புன்முறுவலுடன் பதிலளித்தான்.

"என்னவோ போங்க, காலைலேந்து இந்த மாறுதல் பைத்தியம் உங்களுக்குப் பிடிச்சிருக்கு.  என்ன விஷயம்?." என்று கொஞ்சம் கவலையைக் குரலில் குழைத்துக் கேட்டாள் வித்யா.

"பயந்திடாதே.  யோசனைலே என்னை ஆட்டிப் படைச்சிண்டு இருக்கறது தான் தறிகெட்டு அப்பப்போ வார்த்தைலே வந்திடுது.. ஆட்சுவ்லி என்னன்னா,  'காதல் தேசம்' நாலாவது அத்தியாயத்திலே ஒரு பெரிய மாறுதல் செய்ய யோசிச்சு வைச்சிருக்கேன்.  அதை எழுதறதுக்குள்ளே இப்ப யோசிச்சு வைச்சிக்கறதை விட சிறப்பா வேறே ஏதானும் கிடைக்கலேனா, இப்ப யோசிச்சு வைச்சிருக்கறதையே நாலாவது அத்தியாயமா இன்னிக்கு உக்காந்து எழுதிடலாம்ன்னு இருக்கேன்.    சீக்கிரம் வீட்டுக்கு வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்.." என்று ரிஷி சொல்லிக் கொண்டு இருக்கையில் கெளதம் தன் பிரோகரஸ் ரிப்போர்ட்டை கொண்டு வந்து அப்பா கையில் தந்தான்.

ரிப்போர்ட்டைப் பிரித்துப் பார்த்த ரிஷிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பையனை அணைத்துக் கொண்டு தலையைக் கோதிவிட்டான். "ஃபைன்டா கண்ணு.. கீப் இட் அப்."

"வெறும் 'கீப் இட் அப்'ன்னா எப்படி?.. இன்னிக்கு வெளிலே போய் செலிபரேட் பண்ணப்போறதா கெளதம் கிட்டே சொல்லியிருக்கேன்.  டின்னர் கூட வெளிலே தான்.  சரியா?.."

"ஓ.." என்று உதடு குவித்தான் ரிஷி. "அப்ப ஒண்ணு செய்யலாமா?.. அந்த நாலாவது அத்தியாயம் இந்த நிமிடத்லேந்து தான் ஆரம்பமாகப் போகுது.  இன்னிக்கு ராத்திரி வீட்டுக்கு வந்து சேர்ற வரைக்கும் என்னலாம் நடக்கறதோ அதிலேந்து தேர்ந்தெடுத்தெல்லாம் அந்த நாலாவது அத்தியாயத்திலே வந்துடும்.  ஓக்கே வா?"

"பக்கா சுயநலம். என்ன பேசினாலும், செஞ்சாலும் உங்க வேலைலே தான் குறி. இல்லையா?" என்று நொடித்தாள் வித்யா.

"அதுக்காக இப்படி மூஞ்சியைத் தூக்கி வைச்சிண்டா எப்படி?.. நீ என்ன சொல்றையோ அதையும் கேட்டிண்டு, அதுக்கேத்த மாதிரி என் வேலையையும் மாத்திக்கிறேன். இது கூட சுயநலமா?"

"அதுக்குச் சொல்லலீங்க..  எதையும் உங்களைச் சுத்தியே யோசிக்கறீங்க, பாருங்க, அதுக்குச் சொன்னேன்.  அதுலே எதுக்காக எதுங்கறதெல்லாம் மறைஞ்சு போய் உங்களைப் பத்தினதே முக்கியமா போய்ட்றது இல்லையா, அதுக்காகச் சொன்னேன்.  இப்போ அந்தக் கதையை எப்படிக் கொண்டு போர்றதுங்கறதே உங்களுக்கு ஞாபகமா இருக்கறச்சே, செலிபரேஷன், குழந்தையோட சந்தோஷம் இதெல்லாம் அதிலே அமுங்கிப் போய்டும். அதான்."

"சீச்சீ.. இப்படிச் சொன்னா எப்படி?.. ரெண்டும் தான்.முக்கியம்.  ஏன்,  ரெண்டும் ஒரே நேரத்லே நடக்கக் கூடாதா, என்ன?" என்று அந்த நான்காம் அத்தியாய போக்கிலே இந்த கான்வர்சேஷனை எப்படி நுழைக்கலாம் என்கிற கவனத்திலேயே கேட்டான் ரிஷி.

"ஒண்ணுக்கு ஒண்ணு இடைஞ்சல் இல்லாமல் இருந்தால், சரி தான்." என்று சட்டென்று வித்யா இறங்கி வந்தாள்.

"நாட் அட் ஆல் இடைஞ்சல்.  பாக்கறையா, ஒண்ணுக்கு ஒண்ணு ஒத்துழைக்கப் போறது. இது தான் அதுவாகப் போறது.  அதான் சொல்லிட்டேனே?.. இப்போ நாம பேசிண்டிருக்கறது, இனிமே நடக்கப் போறது இதெல்லாம் தான் அந்த நாலாவது அத்தியாயமாகி கதையாகப் போறது.."

"அதாங்க வேணும்.." என்று சோபாவில் ரிஷிக்கு எதிரா உட்கார்ந்திருந்த வித்யா எழுந்திருந்து அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். "உங்க கற்பனையெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு மறந்து இருங்க.. நடக்கற விஷயங்களை உன்னிப்பா கவனிச்சாலே ஒரு ஆச்சரியம் தன்னாலே வரும்.  விஷயம் என்னன்னா, ஏதோ நடக்கறதுன்னு பலதை இயல்பா எடுத்திக்கறதாலே, அதிலே நம்ம முழுக்கவனம் செல்லலேங்கறது தான்.   கண்ணுக்கு முன்னாடி நடக்கற காரியங்கள்லே இருக்கற நறுவிசும், அழகும், அப்பாடி அந்தக் கோர்வையும் இருக்கே.. அப்பப்பா.  அதோட மகாத்மியத்தைச் சொல்லிண்டே இருக்கலாம் போலிருக்கு."

"ஒண்ணு ரெண்டு சொல்லேன்.  நானும் கேட்டுக்கறேன்.." என்று ரிஷியின் உதடுகள் ஜபிக்க, அவன் உள் மனசோ 'அவள் சொல்றதையெல்லாம் தீர்க்கமா கேட்டுக்கோ..  கேட்டுண்டு அந்த நாலாவது அத்தியாயத்லே அதையெல்லாம் உபயோகப்படுத்திக் கொள்றது உன் சாமர்த்தியம்' என்றது.

இடைஞ்சலாய் நெற்றிப்பக்கம் வந்து விழுந்து தொந்தரவு செய்த கூந்தல் சுருளை வித்யா ஒதுக்கி விட்டுக் கொண்டாள் "அந்த ஆட்டோக்காரர் பையன் விஷயம் என்னாச்சுன்னு நீங்க கேக்கலையே?.. நாளைக்கு அவங்கள்லாம் அந்தப் பையனுக்கு பொண் பாக்கப் போறாளாம்.  காலம்பற அவரோட சம்சாரத்தோடு லட்சணமா வெத்தலை, பாக்கு, பழத்தோட வந்து எங்கட்டே சொல்லிட்டு, நீங்களும் வரணும்மான்னு கூப்பிட்டுப் போறார்.நல்லவங்களுக் கும், நல்லதுக்கும் இந்தக் காலத்லே மதிப்பில்லேன்னு சொல்றாங்களே, என்ன நடந்திருக்கு பாருங்க!  இப்போ, நேத்திக்கு நடந்த மாதிரி இருக்குங்க.. அந்த எழுத்துப் பட்டறைக்குப் போனோமே, அப்ப ஊர்மிளா 'யாராவது நல்ல பையன் உனக்குத் தெரிஞ்சு கல்யாணத்துக்கு இருந்தா சொல்லு, வித்யா'ன்னு எங்கிட்டே சொன்னது தான் சொன்னாங்க,  அந்த ஆட்டோக்காரர் ஆட்டோலே தான் நான் எழுத்துப்பட்டறைக்குப் போகணும்ன்னு இருந்திருக்கு பாருங்க.  அவரா தன் பையன் கல்யாணத்திற்காக வரன் பாத்திண்டிருக்கறதா எங்கிட்டே சொல்லப் போக, ஊர்மிளா எங்கிட்டே கேட்டது நினைப்புக்கு வந்து, அவர் கிட்டே பையன் ஜாதகத்தை வாங்கி நான் கொடுக்க, எல்லாம் டேலியாகி பொண்ணு பாக்கற வரைக்கும் கூட்டிண்டு வந்தாச்சு..  இதையே, ஒரு கதைன்னா உங்க கற்பனைலே எத்தனை குழறுபடி பண்ணியிருப்பீங்க, நெனைச்சுப் பாருங்க..  என்ன பண்ணியிருப்பீங்கன்னு சொல்லிடுவேன்.  ஆனா, வேணாம்.  உஷா கிட்டே கேட்டா இந்தக் கதைகளைப் பத்தி இன்னும் நிறைய வண்டி வண்டியா சொல்லுவா.  ஒரு கதைலேயானும் பாஸிடிவா படிக்கறவங்களுக்கு ஆறுதலா, நம்பிக்கை அளிக்கற மாதிரி ஏதாவது ஆலோசனை சொல்லுவாங்களாக்கும் ன்னு நானும் பார்த்திட்டேன்.  செய்ய மாட்டீங்களே.."

"வித்யா! நெகட்டிவ் அப்ரோச்லே ஒரு த்ரில் இருக்கும்.  மசமசன்னு கதை போகாது. திருப்பம் வந்து வந்து சுவாரஸ்யம் பத்திக்கும்..  அதானே படிக்கறவங்களுக்கு வேணும்?.. நல்லதைச் சொல்ற மாதிரியே கெட்டதையும் சொல்லணும். சொல்லப்போனா, கெட்டதைக் கொஞ்சம் தூக்கலா சொல்லி படிக்கறவங்களை வசீகரிச்சு, வலைலே போட்டுண்டு கபால்ன்னு நல்லதுக்குத் தாவி கதையை முடிச்சிடணும். இதான் காலதிகாலமா இருக்கற ஃபார்முலா."

"அப்போ நல்லதையே சொன்னா வசீகரிக்க முடியாதுன்னு சொல்றீங்க, அப்படித்தானே?"

"முடியாதுன்னு சொல்லலே.. திகட்டும்ன்னு சொல்றேன்.  ஸ்வீட்டுக்கு நடுவே சுரீர்ன்னு காரம் வேணும்.  அந்தக் காரம் தான், இன்னும் ரெண்டு துண்டு ஸ்வீட்டை எடுத்து வாயிலே போட்டுக்கச் சொல்லும்.  கற்பனைங்கறது என்ன, ஜரிகை அலங்காரம் மாதிரி.  இப்படி நடந்தா எப்படியிருக்கும், அப்படி நடந்தா எப்படியிருக்கும்ன்னு படிக்கறவங்களை எதையெல்லாமோ நெனைக்க வைச்சு மலைக்க வைக்கறது, இல்லையா? "

"உங்களுக்கு என்ன, எழுத்திலே எழுதிட்டாலே போதும், அதெல்லாம் நடந்து முடிஞ்சிட்ட மாதிரி..  'அவன் எவெரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறித் திரும்பிப் பார்த்த பொழுது காலை மணி எட்டே கால்'ன்னு எழுதிட்டாலே போதும். அந்த  காரியமே நடந்திட்ட மாதிரி ஆகிடும்! ஆனா, அதை நடைமுறைப்படுத்தணும் னா எவ்வளவு சிரமம்?  இப்படி ஒரு விஷயத்தைப் பத்தி எழுதித் தீர்த்தவுடனேயே அந்த விஷயம் நடந்துட்டதா பொய்யாவானும் நினைக்கறதை விட நிஜத்திலேயே நடக்கற ஒரு நிகழ்விலே நம்ம பங்களிப்பும் இருக்கற மாதிரி செயல்படறது இன்னும் உசத்தி இல்லையா?"

"எது உசத்திங்கறது விஷயமில்லே.  பலன் தான் முக்கியம். நமக்குன்னு இல்லே; யாருக்கு வேணும்னாலும். பல பலன்கள் கண்ணுக்குத் தெரியாது. அதனாலே அதெல்லாம் கணக்கிலேயே வராதாக்கும்."

"கண்ணுக்குத் தெரியறதைத் தான் பாப்போமே! ஷேர் மார்க்கெட்லே நான் ஷேர் வாங்கினதையே எடுத்துக்கங்க.. முதல் நாள் அந்த சிமிண்ட் பங்கை வாங்கணும்ன்னு டெலிபோனைக் கூட எடுத்திட்டேன்.  அந்த சமயம் பாத்து பங்குச் சந்தை பரிவர்த்தனை நேரம் முடிஞ்சி வாங்க முடியாம போச்சு.  அடுத்த நாள் என்ன நடந்தது பாருங்க, பங்கு விலை இன்னும் இறங்கிப் போனப்போ கூட வாங்கலாமா, வேண்டாமான்னு குழப்பத்திலே சட்டுனு என்னாலே முடிவெடுக்க முடியாமப் போச்சு.  ஆனா அன்னிக்கே கொஞ்ச நேரம் கழிச்சு இன்னும் இறங்கிப்போய் என்னை வாங்க வைச்சது.  நான் வாங்கறத்துக்காகத் தான் அப்படி இறங்கித்தோன்னு நான் இப்போ நினைக்கிற மாதிரி, நான் வாங்கின அடுத்த நிமிஷத்லேந்து ஒரே ஏறுமுகம் தான். இன்னிக்கு வரைக்கும் நிக்காம ஏறிண்டு இருக்கு.  இப்போ கரஸ்பாண்டென்ஸ் கோர்ஸ்லே வணிக நிர்வாகப் படிப்பு படிச்சிண்டிருக்கேன் இல்லையோ, இது கூட ஏதோ காரணத்துக்காகத்தான்னு மனசு கிடந்து அடிச்சிக்குது.  பின்னாடி வளரப்போற மரத்துக்காக, முன்னாடி விதை ஊன்ற மாதிரி..  இல்லேனா, முன்னாடி லேசுபாசா நடக்கற அத்தனையும் பின்னாடி அழுத்தமா நடக்கப் போற ஒண்ணுக்கான வழி நடத்தலோ, ஒத்திகையோன்னு அடிக்கடி தோண்றது. எனக்கு இப்போலாம் என்ன ஆச்சரியம்ன்னா, இது இது இப்படித்தான் நடக்கணும்ன்னு ஒவ்வொரு விஷயமும் நடக்கறதுக்கு முன்னாடியே தீர்மானமாயிட்ட மாதிரி தோண்றது.  ஒரு செயல், அதற்கு ஏத்த விளைவுன்னு ஒண்ணுக்கு ஒண்ணு பிணைஞ்சு சங்கிலித் தொடர் மாதிரி ஒரு அர்த்ததோட வாழ்க்கை பூரா போயிட்டிருக்கற மாதிரி தோண்றது. என்ன நடக்கப் போறதுன்னு நமக்கு முன்கூட்டியே தெரிஞ்சா நிம்மதி போய்டும். அதான் எப்பப்போ எது நடக்கணுமோ, அப்பப்போ அதெல்லாம் நடக்கற மாதிரி..."

"மனம் ஒரு அற்புதமான.. அற்புதமான?.. வஸ்துங்கறதா என்ன சொல்றதுன்னு தெரிலே, வித்யா.." என்று ரிஷி உள்பக்கம் திரும்பிப் பார்த்தான்.  உள் ரூமில் உட்கார்ந்து கெளதம் சுடோகு புத்தகத்தில் கட்டங்களை முகத்தில் ஆர்வம் பொங்க நிரப்பிக் கொண்டிருந்தது இங்கிருந்தே தெரிந்தது.


மாலை மங்கிய தருணம் குளுமையான காற்றில் இதமாக இருந்தது.

முதலில் துணிக்கடை.  வெளியில் போனால் போட்டுக் கொள்ள நன்றாக இருக்கிற மாதிரி அவனுக்குப் பிடித்த கலரில் ஒரு ஜோடி பேண்ட் சட்டை கெளதமுக்கு வாங்கித் தர வேண்டும் என்றிருந்தாள் வித்யா.

அந்த பிர்மாண்ட துணிக்கடையில் அவர்கள் நுழைகையிலேயே, ஏக வரவேற்பு.  அங்கு நின்றிருந்த வாலிபன் ரிஷியின் கையைக் குலுக்கி, "தொந்தரவுக்கு மன்னிக்கணும்.  ஒரு நிமிஷம்.  இப்படிக் கொஞ்சம் வர முடியுமா?" என்று முன்பக்கமிருந்த தனி அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றான்.

அந்த அறையில் அவர்கள் நுழைந்ததும், "வாங்க.. வாங்க.." என்று உள்ளே அமர்ந்திருந்தவர் எழுந்து வந்து அவர்களை வரவேற்றார்.  கெளதமிடம் அவர் பார்வை பதிந்தது.  "உங்க பையனா?" என்று கேட்டுக் கொண்டே அவர்கள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அவன் கையைப் பிடித்துக் குலுக்கினார்.

ரிஷி பக்கம் திரும்பி, "ஒரு மகிழ்ச்சியை பகிர்ந்துக்கறதா இருக்கோம். தயவுசெஞ்சு ஏத்துக்கணும்.." என்று அவர்களை வேண்டிக்கொண்டு அவர்களை சோபாவில் அமர்ந்தி தான் நின்று கொண்டார்.

"ஒரு சந்தோஷமான விஷயம்.  அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தெரிஞ்ச சந்தோஷம்.   ஹாஸ்பிடல்லேந்து தம்பி போன் பேசினான்.  தம்பி சம்சாரத்திற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு.  எங்க தலைமுறைக்கு முதல் குழந்தை.  சந்தோஷம் பிடிபடலை.  உடனே அதைக் கொண்டாடத் தீர்மானிச்சோம்.  இந்த நிமிஷத்திலே இந்தக் கடைக்குள்ளாற நுழையற முதல் சிறுவன் அல்லது சிறுமிக்கு---"

மொத்த கடைக்குச் சொந்தக்காரர்களே அவரும் அவர் தம்பியும் தானாம். அண்ணனுக்கு கல்யாணமாகி ஏழு வருஷமாச்சாம்.  குழந்தை இல்லை. தம்பிக்கும் திருமணமாகி நாலு வருஷத்துக்கு அப்புறம் குழந்தை பாக்கியம்.  அதான் சந்தோஷத்துக் காரணம்.

"பையனுக்கு பிடிச்சது பத்தாயிரத்துக்கு எது வேணாலும் இங்கே எடுத்துக்கட்டும்.   அது எங்க பரிசு உங்க பையனுக்கு.  இந்த சிறுவன் சந்தோஷம் எங்கள் சந்தோஷம்" என்றார்கள்.

வித்யாவிற்கு கனவு மாதிரி இருந்தது.  ரிஷிக்கோ நடக்கற நிஜம், தான் எழுதும் கதைகளையே மிஞ்சி விடும் போலிருக்கே என்றிருந்தது.  'அடிசக்கை! நாலாவது அத்தியாயத்திற்கு நீ எதிர்பார்க்காமலேயே நல்ல மேட்டர் தான்' என்றது உள் மனசு.


(இன்னும் வரும்)





























15 comments:

இராஜராஜேஸ்வரி said...

இது இது இப்படித்தான் நடக்கணும்ன்னு ஒவ்வொரு விஷயமும் நடக்கறதுக்கு முன்னாடியே தீர்மானமாய்ட்ட மாதிரி தோண்றது. ஒரு செயல், அதற்கு ஏற்ற விளைவுன்னு ஒண்ணுக்கு ஒண்ணு பிணைஞ்சு சங்கிலித் தொடர் மாதிரி ஒரு அர்த்ததோட வாழ்க்கை பூரா போயிட்டிருக்கற மாதிரி தோண்றது.


ஆச்சரியம் தான் ...

மனம் ஒரு மந்திரச்சாவி !

Geetha Sambasivam said...

நம்பமுடியவில்லை,
முடிய வில்லை,
இல்லை,
ல்லை,
லை,
ஐ,

முதல் வரிக்குக் கீழே உள்ளதெல்லாம் எக்கோ! :))))

கதையின் போக்கே மாறிட்டு இருக்கு. கொஞ்சம் பொறுத்துப்பார்க்கிறேன். :)))))))

ஸ்ரீராம். said...

ஒரு சந்தேகம்... எழுதப் போகும் விஷயத்துக்கு இவர்களுடன் வெளியில் சென்றால் வரும் நிகழ்வுகள் பொருத்தமாக வருமா?
நிஜங்கள் கற்பனையை விட சுவாரஸ்யமாகவும் எதிர்பாராமல் இருப்பதும் எனக்கும் சில அனுபவங்கள் உண்டு.
சம்பவங்களின் கோர்வை, நமக்காகவே வடிவமைக்கப் பட்ட காட்சிகள் போல 'ஒரு தெய்வம் நேரில் வந்தது' என்று சொல்லும் வண்ணம் சில சமயம் சோதனை வந்த கணத்திலேயே அதற்கான தீர்வு கடவுளின் பரிசு போல வரிசையில் வந்தது கண்டு ஆச்சரியமும், தொடர்ந்து இந்த ஆதரவு இருக்க வேண்டுமே என்ற பயமும் வரும்!

சிவகுமாரன் said...

நடப்பதை அப்படியே கதையில் கொண்டு வரும் உத்தி - கற்பனை பிரமாதம்.
மனதிற்குள் ஒரு கதையோ கவிதையின் ஒரு வரியோ ஓடிக் கொண்டிருக்கும் போது, பார்ப்பது கேட்பது எல்லாவற்றையும் அதனோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் மனது. அதை வெளியில் சொன்னால் கேலி செய்வார்கள் முழுதும் அறிந்த மனைவியே ஆனாலும்.
அருமையாக இருக்கிறது கதையின் போக்கு.

அப்பாதுரை said...

தன்மையச் சிந்தனைகளும் செயல்களும் இல்லாதவர் மிகச் சொற்பம். "எனக்கு தலைவலி" என்றால் கூட "எனக்கு அதைவிட மோசமான தலைவலி" என்பாரே அதிகம். சுவாரசியமான கேரக்டர். எப்படிப் போகுதுன்னு பார்ப்போம்.

"பிறந்தநாள்" பரிசு அத்தனை சிறுவர்களின் கனவு.

கோமதி அரசு said...

நல்லதைச் சொல்ற மாதிரியே கெட்டதையும் சொல்லணும். சொல்லப்போனா, கெட்டதைக் கொஞ்சம் தூக்கலா சொல்லி படிக்கறவங்களை வசீகரிச்சு, வலைலே போட்டுண்டு கபால்ன்னு நல்லதுக்குத் தாவி கதையை முடிச்சிடணும். இதான் காலதிகாலமா இருக்கற ஃபார்முலா."//

நல்ல ஃபார்முலா. அந்தக் கால படங்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கும்.

கெளதம் காட்டில் மழை. 10,000 ரூபாய்க்கு பரிசுமழை.
ரிஷியின் நாலாவது அத்தியாத்திற்கு கதைக் கரு கிடைத்து விட்டது.
வித்யா ஷேர் மார்க்ககெட்டில் சிறந்தவர்களாய் ஆகிவிட்டார்கள் போல!

நடப்பது எல்லாம் அவன் செயல்.

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

தொடர் வருகைக்கும் தங்கள் ரசனையைக் கோடிட்டுக் காட்டுவதற்கும் நன்றி, ராஜி மேடம்.





















ஜீவி said...

@ Geetha Sambasivam

ஐ! எக்கோ!...

ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதிய முறையில் திருப்பித் திருப்பி வேறே கேட்கிறது!

நேர்-எதிர் விவாதங்களை நேராகவே எடுத்துக் கொண்டால் மாற்றம் தெரிகிறதா, பாருங்கள்!

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

எழுதறது நாம் தானே?.. எங்கே சென்றால் என்ன?.. வசதியான தலைப்பு: 'காதல் தேசம்'; எதை வேண்டுமானாலும் எழுதலாம். எங்கே போனாலும், எதை எழுதினாலும் தாங்கும்! அந்தத் துணிவு தான் ரிஷிக்கு போலும்!

//நிஜங்கள் கற்பனையை விட சுவாரஸ்யமாகவும் எதிர்பாராமல் இருப்பதும் எனக்கும் சில அனுபவங்கள் உண்டு.//

நிஜத்தின் சுவடு இல்லாத கற்பனை சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால், நீங்கள் உணர்வு பூர்வமாகச் சொன்னதை அதே அலைவரிசையில் புரிந்து கொள்ள முடிந்தது.

சோதனைக்குத் தான் என்றில்லை, எல்லாத்துக்கும் மனம் ஒரு ஆதரவை எதிர்பார்க்கிறது. ஒரு இக்கட்டில் அது கிடைக்கும் பொழுது திகைத்து சிலிர்க்கிறது. எல்லா நேரங்களிலும் கிடைப்பதையும் எப்படியோ உணர்ந்து நன்றியில் கைகள் தொழுகிறது.

பகிர்தலுக்கு நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ சிவகுமாரன்

என்னைக் கேட்டால் பார்த்தது, படித்தது, கேட்டது, நடந்தது இப்படி ஏதோ நிகழ்ந்த ஒன்றின் அடிப்படையில் தான் கற்பனைப் பின்னலின் முதல் முடிச்சு ஆரம்பிக்கும்.

கற்பனையின் ஆழமும், தீர்க்கமும் நீங்கள் சொல்லும் தொடர்பு படுத்திப் பார்த்தலில் சற்றே மாற்றத்துடன் இன்னும் களைகட்டும்.

வெளியில் சொல்லும் பொழுது, கதை என்பதற்குத் தேவையான அந்த சற்றே மாற்றம் தான் கேலி செய்யச் சொல்கிறது போலும்! தெரிந்தவர்கள் என்றால் கேலி; தெரியாதவர்கள் என்றால் பாராட்டு! என்ன வேடிக்கை பார்த்தீர்களா?..

தொடர்ந்து படித்து வருகையில், உணர்வு பூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி, சிவகுமாரன்!

ஜீவி said...

@ அப்பாதுரை

தன்மயச் சிந்தனை! அந்த ஒரு இழை சிக்கிக் கொண்டு விட்டதே!

தன்மயச் சிந்தனை, சில நேரங்களில் 'குறையொன்றுமில்லை' எனலாம்;
தனக்குத் தானே முதுகில் 'ஷொட்டு' கொடுத்துக் கொள்ளலாம்; சில நேரங்களில் தன்னை சரிப்படுத்திக் கொள்வதற்குக் கூட உதவலாம்.

'தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்'
இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் குரல் வேறு சமயம் பார்த்து கம்பீரமாக காதுகளில் ரீங்கரிக்கிறது.

வாசித்து வருவதற்கு நன்றி, அப்பாஜி!

ஜீவி said...

@ கோமதி அரசு

சிறுகதைகளின் ஆகப் பிரபலமான ஃபார்முலா கூட அது தானே!

சந்தேகம் இருந்தால், குமுதத்தில் பிரசுரமான என் கதைகளில் ஒன்று
'இன்று சேலை; நாளை செருப்பு'- இந்த பூவனத்தில் 'சிறுகதைகள்' பகுதியில் இருக்கிறது. அவசரமில்லை. நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள்!

கடைசியில் வித்யாவை உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகப்போகிறது!
'நடப்பதெல்லாம் அவன் செயல்' என்று சொல்லியிருக்கிறீர்கள், பாருங்கள், அதான் அருமை!
வழி காட்டுவோர் இருந்தால், வழி பார்த்து நடந்து வெற்றிகளைக் குவிப்பதற்கு கசக்குமா, என்ன?..

நேரப் பற்றாக்குறைக்கு நடுவே படித்துப் பார்த்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி, கோமதிம்மா.

பாச மலர் / Paasa Malar said...

எதிர்பாராத திருப்பங்கள் வாழ்க்கையில்..எதிர்பாராத பரிசுகள்...சில நேரம் இழப்புகள்...எழுத்தாளரின் சொந்த வாழ்க்கை /கருத்துஎழுத்தில் ஓரளவேனும் பிரதிபலிப்பது....

நிறைய விஷயங்கள் தோன்றியது இந்தப் பகுதியைப் படிக்கையில்...

கோமதி அரசு said...

தங்கப்பன் மனம் திருந்தியது மிகுந்த மகிழ்ச்சி.

வாழ்க்கையில் பொறுப்பில்லா மனிதர்கள் களைப் பார்க்கும் போது எப்போது இவர்கள் திருந்துவார்கள் என நினப்பேன் அவர்களுக்கும்” போதிமரம்” கிடைக்க வேண்டும் வாழ்க்கையில் என தெரிகிறது.

நல்ல கதை.//

முன்பே 'இன்று சேலை; நாளை செருப்பு'- படித்து கருத்தும் சொல்லி இருக்கிறேன் ஜீவி சார்.
வாழ்த்துக்கள் சார்.

கஷ்டங்கள் தொடர்ந்து கொடுத்தால் வாழ்வில் நம்பிக்கை இல்லாமல் போய் விடும்.

கஷ்டம் ஒருநாள் மாறி சந்தோஷ்ம் வரவேண்டும் அதைதான் மனித மனம் விரும்புகிறது.

ஜீவி said...

@ கோமதி அரசு

மீள் வருகைக்கு நன்றிம்மா.

'இன்று செருப்பு; நாளை சேலை' என்கிற கதைத் தலைப்பை நானும் தவறாக மாற்றி எழுதி விட்டேன், பாருங்கள்.

இன்பம்-துன்பம் எல்லாமே சக்கர சுழற்றல் தானே?.. அதிலும் பாருங்கள். துன்பத்திற்குப் பிறகான இன்பத்திற்கு சுவை கூட.

Related Posts with Thumbnails