மின் நூல்

Wednesday, September 19, 2012

பார்வை (பகுதி-59)

மைலாப்பூர் தேர்நிலை தாண்டி ஒரு குறுக்குச் சந்தில் இருந்தது, வராஹமிஹிரரின் வீடு.  வீட்டு இலக்கங்களை சரிபார்த்துக் கொண்டே வீட்டை நெருங்குகையிலேயே, வாசல் பக்கம் வாலைத் தூக்கிக் கொண்டு ரெடியான மாடு போட்டு முடிக்கட்டும் என்று காத்திருந்து, முடித்ததும்
அதற்கு இடைஞ்சல் இல்லாமல் சுற்றிக்கொண்டு படியேறினார்கள் ரிஷியும், வித்யாவும்.

கடப்பைக் கல் பாவிய திண்ணையும் ஓட்டுவில்லைக் கூரைகளுமாய் வால் மாதிரி நீண்ட ஒற்றைச் சார்பு குடித்தனங்கள்.  வாசல் பக்கம் 'ஹோ'வென்றிருந்தது. இந்த ஏகப்பட்ட பொந்துகளில் எந்தப் பொந்திலோ வராஹமிஹிரர் வசிக்கிறார் என்று நினைத்துப் பார்ப்பதற்கே கழிவிரக்கமாய் இருந்தது.  'எதற்காகவோ தான் இதெல்லாம்; இதற்கப்புறம் பொன் மாளிகையாகக் கூட இருக்கலாம்; யார் கண்டார்கள்?' என்கிற நினைப்பு வந்ததும் வித்யாவிற்கு மனசு தெளிவடைந்தது.   'மண் குடிசை வாசலென்றால், தென்றல் வர வெறுத்திடுமா?' என்று இராகத்துடன் முணுமுணுத்தப்படி உள்பக்கம் முன்னேறிய ரிஷியைத் தொடர்ந்தாள் வித்யா.

வருவதற்கு முன்பே தொலைபேசியில் கேட்டு,"பேஷாய், வாருங்கள். வீட்டில் தான் இருப்பேன்" என்று அவர் சொன்னவுடன் தான் வந்திருந்தார்கள்.  மொபைல் மவுசில் இந்த மாதிரி சின்னஞ்சிறு குடித்தனங்களில் கூட தொலைபேசி இருக்கிறதே என்று வித்யா நினைத்துக் கொண்டாள்.

வெளிப்பக்கம் துள்ளிக் குதித்து வந்த ஒரு தாவணி சிறுசை வழிமறித்து ரிஷி கேட்டதும், அவள் பயந்தே போய்விட்டாள் போலத் தெரிந்தது.  பின்னாடி வித்யாவும் நிற்பதைப் பார்த்துத் தான், தெளிவடைந்து, "யாரைப் பாக்கணும்?.." என்று ஈனஸ்வரத்தில் குரல் வந்தது.

"மிஸ்டர் வராஹமிஹிரரை.. இங்கே தானே?.."

"தாத்தாவையா?.. வாங்கோ.." என்று திரும்பி முன்னேறியவளை புன்னகையு டன் தொடர்ந்தார்கள்.

நாலு குடித்தனங்கள் தாண்டி அடுத்ததில் நுழைந்தாள்.  குட்டி வாசல் பக்கம் போட்டிருந்த கோலத்தை மிதித்து விடாமல் ஒதுங்கி நின்றாள் வித்யா.

"உள்ளே வாங்கோ..." என்று அவர்களை உள்ளே அழைத்து விட்டு, "தாத்தா.. உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்கா.." என்று அறிவித்து விட்டு, இவர்கள் பக்கம் திரும்பி மீண்டும் ஒரு 'வாங்கோ'.

"யாரு.." என்று கேட்டபடியே யக்ஞோபவீதம் தரித்த மார்புக் கூட்டில் ஒரு காசித்துண்டு தொங்க வெளிப்பக்கம் வந்தவர், "யாரு.. தெரிலேயே!.." என்று திகைத்து, ஒரு நிமிடத்தில் புரண்ட ஞாபகச் சிதறலில் நினைவு வந்து, "ஓ.. நீங்க தானே போன்லே பேசினது? வாங்கோ.. வாங்கோ.." என்று தட்டி மறைப்பைத் தாண்டி உள்ளே கூட்டிக்கொண்டு போனார்.

சின்ன ஹால், பூஜை மாடத்தோடு இருந்தது.  மாடத்திற்கு கீழே கோலம் போட்டு கேரள குத்து விளக்கு.  தேய்த்த மினுமினுப்பில் தீப ஒளிக்குப் போட்டி போட்டுக் கொண்டு ஜ்வலித்தது.

அதற்குள் வலது பக்க மூலை ரூமிலிருந்து மடிசார் கட்டுடன் வந்த பெண், அவர்களைப் பார்த்து, "வாங்கோ.." என்று முகமலர்ந்தாள்.  மடித்து வைத்திருந்த இரண்டு ஸ்டீல் சேர்களைப் பிரிக்கப் போனாள்.  அதற்குள் "இப்படி வர்றேளா?" என்று பக்கத்து ரூம் பக்கமிருந்து குரல் வந்தது.  வராஹ மிஹிரரின் ஆஸ்தான அறை அதுவென்று தெரிந்து, மடிசார் பெண் பக்கம் பார்த்து முறுவலித்து விட்டு ரிஷியைத் தொடர்ந்து உள்ளே போனாள் வித்யா.

ரூமுக்குள் போனதும் பெரிய ஜன்னல் பக்கம் பின்பக்கத் தெரு தெரிந்தது.  அங்கேயும் ஒரு மாடு....

"உட்காருங்கோ.." என்று வராஹமிஹிரர் தயாராக இருந்த நாற்காலிகளைக் காட்டினார். "என்ன, சாப்பிடறேள்?"

"இப்போத் தான் சாப்பிட்டுட்டு வந்தோம்.. நீங்க போஜனம், ஆயாச்சா?"

"ஓ.. ஒம்பதுக்கெல்லாம் முடிச்சிடுவேன்.. சொல்லுங்கோ.."

"உங்களைப் பாத்து பேசணும்ன்னு ரொம்ப நாள் ஆசை.. ஊர்மிளா தான் உங்க நம்பர் கொடுத்தா.." என்று ஆரம்பித்தாள் வித்யா.

"ஊர்மிளாவா?.. லஷ்மணன் சம்சாரம் இல்லையா?" என்று சொல்லி, அவரே தொடர்ந்தார். "இராமயண லஷ்மணன் இல்லை, எழுத்தாளர் லஷ்மணன்.  நல்ல ஆத்மா.." என்று கைதூக்கி, எதிரில் லஷ்மணன் இருப்பது போலவே நினைவில் கொண்ட மாதிரி, "நன்னா இருக்கட்டும்.." என்று ஆசிர்வாதம் பண்ணினார்.  "செந்தாமரைன்னு ஒரு பத்திரிகை இருக்கில்லியோ.. அதிலே வாராவாரம் ராசிபலன் எழுத லஷ்மணன் தான் ரெகமண்ட் பண்ணினான். அப்புறம் தான் நான் எழுதறதே சூடு பிடிச்சது.. நன்னா இருக்கட்டும்.." என்று மறுபடியும் கைதூக்கி காற்றில் ஆசிர்வாதம் பண்ணினார்.

ரிஷியின் உடல் சிலிர்த்தது. "அவர் சொல்லித் தான் எனக்குக் கூட நிறைய எழுத வாய்ப்பு கிடைச்சது.." என்றான்.

"ஓ.. நீங்க கூட எழுத்தாளரா?"

"லஷ்மணன் சார் மாதிரி முழுநேர எழுத்தாளர் இல்லே.  எல்.ஐ.சி.லே வேலை செய்யறேன். ஒழிஞ்ச போது எழுதறது.."

"அப்படியா?" என்று யோசனையுடன் இழுத்தவர், "நீங்க தான் எனக்குப் போன் பண்ணினது.  இல்லையா?" என்று சட்டென்று திரும்பி வித்யாவைப் பார்த்துக் கேட்டார்.

"ஆமாம். நான் தான். என் ப்ரண்ட் ஊர்மிளாகிட்டே கொஞ்ச நாளைக்கு மின்னாடி பேசிண்டிருக்கறச்சே, நம்மைச் சுத்தி நடக்கற நிகழ்ச்சிகளைப் பத்தி பேச்சு வந்தது.  பேசறத்தையே எனக்கு நிறைய சந்தேகங்கள்.  அவங்க தான் சொன்னாங்க. உங்கள் டெலிபோன் நம்பரைக் குடுத்து, 'இதெல்லாம் பத்தி அவருக்குத் தான் தெரியும்.  போன் பண்ணிட்டு, அவருக்கு செளகரியம்ன்னா போய்ப் பாருங்கோ'ன்னா. இப்போ ரெண்டு நாளா இவருக்கும் இதிலே ஈடுபாடு வந்திருக்கு.  நடக்கற நிகழ்வுப் போக்குகளை மெயினா வெச்சு ஒரு நாவல் எழுதணும்ன்னு ஆசையா இருக்குன்னார்.  சரின்னு வந்திட்டோம்.  எங்க சந்தேகங்கள் குழந்தைத்தனமானவை. நீங்கப் பெரியவா, அதையெல்லாம் சகிச்சிண்டு எங்களுக்கு நிறைவேற்படுத்தினா ரொம்ப சந்தோஷப்படுவோம்" என்று சொல்லி முடித்தும்,  தான் நினைக்கறதைச் சரியாச் சொன்னோமா என்று வித்யாவிற்கு சந்தேகமாக இருந்தது.  இருந்தாலும் அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு தலையை லேசாக அசைத்த வராஹமிஹிரரைப் பார்த்து ஓரளவு அவருக்குப் புரிகிற மாதிரி தான் தெரியப்படுத்தி விட்டோம் என்று வித்யா நினைத்தாள்.

"நான் இதுக்கெல்லாம் அத்தாரிட்டி இல்லே.  இருந்தாலும் எனக்குத் தெரிஞ்ச்சதைச் சொல்றேன். என்ன சந்தேகம் உங்களுக்கு?" என்று லேசாகக் கையுயர்த்தி தலையைத் தடவி விட்டுக் கொண்டார் வராஹமிஹிரர்.

"ஒரு நிகழ்ச்சி நடக்கறதுக்கும், மனுஷங்களோட பங்களிப்பு நடக்கற அந்த நிகழ்ச்சிலே இருக்கறதுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?" என்று வித்யா தலை நிமிர்ந்து அவரைப் பார்த்துக் கேட்ட போது, என்ன கேட்கணும்ங்கறதை முதலிலேயே தீர்மானிச்சு கேக்க வேண்டியதைக் கேள்விகள் ரூபத்திலே உருவாக்கி பலதடவை அவற்றை நினைச்சு நினைச்சு மனசில் உருவேற்றிக் கொண்ட மாதிரி இருந்தது..

"என்ன அப்படிக் கேட்டுட்டேள்?..  நிச்சயம் உண்டும்மா" என்றார் வராஹமிஹிரர். "எந்த நிகழ்ச்சியும் தானா நடக்கறதில்லே.  அப்படி நடக்கறதுக்கு சில சேர்க்கைகள் வேண்டும். புரியற மாதிரிச் சொல்லணும்னா, சின்ன சின்ன சில நிகழ்வுகளின் ஒண்ணாச் சேர்ந்த வெளிப்பாடு தான் ஒரு நிகழ்ச்சி.  நிகழ்வு, நிகழ்ச்சி-- இந்த வார்த்தைகள்லே ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லே.  உங்களுக்குப் புரியறதுக்காகச் சொன்னேன். இப்பவும் புரியறத்துக்கு கஷ்டமா இருந்தா, சின்னச் சின்ன கூறுகள்ன்னு வேணா வெச்சிக்கோ.  பல சிறு சிறு கூறுகளான நிகழ்வுகளின் சேர்க்கை தான் ஒரு நிகழ்ச்சி.  பல வித நிகழ்வுகளின் சேர்க்கைலே ஒரு திருமணம் நடக்கறது.  இதிலே ஆணும் பெண்ணும் தம்பதிகளானாங்கங்கற நிகழ்ச்சி தான் மேலோட்டமா பாக்கறச்சே தெரியும்.  அப்படி அவங்க தம்பதிகளான நிகழ்ச்சியின் தொடர்ச்சியா அதுக்குப் பிந்தி ஒரு வரலாறே அவங்களை வைச்சுத் தொடரும். ரெண்டு நிலை.  ஒரு நிகழ்வுக்கு நிகழ்வை நோக்கி நகர்ற ஒரு நிலை, அந்த நிகழ்வுக்கு அப்புறம் அந்த நிகழ்வின் பலனான இன்னொரு நிலை.  ஒரு மாணவன் தேர்வுக்கு படிக்கிறான்னு வைச்சுக்கோங்கோ. இது தேர்வுங்கற மைய நிகழ்வுக்கு முன்னான அதை எதிர்பார்த்து எதிர்கொள்வதான ஒரு நிலை.  தேர்வுங்கற நிகழ்வு நடந்தபிறகு அந்தத் தேர்வில் வெற்றி அல்லது தோல்வி அவன் அடையறதை வைச்சு அந்த நிகழ்வின் பலனாக அடுத்து வரும் நிலை.  இப்படி ரெண்டு நிலை. நிறைய இப்படி இருக்கு.  இந்த நிறையங்கறது நிறைய நிறையத் தொடர்ந்து ஏற்படறதுனாலே, பலது ரொம்ப சாதாரணமா ஆயிடுத்து.   இயற்கையாகவே பலது நம்ம யோசனைக்கு அப்பாற்பட்டு நடக்கறது.  அதெல்லாம் பத்தி யோசிக்காமயே நாம போயிட்டோம்ங்கறது தான் அதிசயம்.  ஒண்ணுமில்லே; புஷ்பங்கள்லே தேனை உறிஞ்சறத்துக்காக உக்கார்ற வண்ணத்துப் பூச்சி, வண்டுகள் மாதிரி சின்னஞ்சிறு பூச்சிகளோட கால்கள்லே அந்தப் பூக்களின் மகரந்தங்கள் ஒட்டிண்டு இன்னொரு பூவுக்கு கடத்தப்பட்டு மகரந்த சேர்க்கை எப்படி நடக்கறது, பாருங்கோ.. இதில் தன் மகரந்த சேர்க்கை, அயல் மகரந்த சேர்க்கைன்னு ரெண்டா வேறே.  எத்தனையோ ஜீவராசிகள்.  கடலோட அடி ஆழத்திலே இருக்கற பாசிலேந்து எத்தனையோ; தெரிஞ்சது கொஞ்சம் தான்;  தெரியாதது தான் அதிகம்.  இயற்கையோட கருணையான ஏற்பாடுகள் நம் எண்ண வேகத்திற்கும் புரிஞ்சிண்டதற்கும் அப்பாற்பட்டவை.  கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவு ரெடி.  இப்படி பல விஷயங்கள் புரியாதவை.   அந்த மாதிரி ஓரளவு தான் நடக்கும் விஷயங்களின் தாத்பரியங்களை, எதுக்காக எதுன்னு உத்தேசமா தெரிஞ்சிக்க முடியறது.  எதையெதையோ கூட்டியும் கழிச்சும் கணக்குப் போட்டு வானிலை அறிக்கை சொல்றதில்லையா, அந்த மாதிரி,"  என்று சொன்னவர் மூச்சு வாங்கி லேசாக ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

"ஜலமானும் சாப்டுங்கோ.."என்று ஒரு செம்பில் ஜலத்தைக் கொண்டு வந்து ரிஷிக்கும் வித்யாவுக்கும் இடையில் ஒரு ஸ்டூல் போட்டு டம்பளருடன் வைத்தார் அந்த மடிசார்ப் பெண்.  அவர் தலை மறைந்ததும், "என் மருமகள்" என்றார் வராஹமிஹிரர்.

"அப்படியா?" என்று கேட்டு விட்டு, பேச்சு வேறு திசையில் போய்விடப் போகிறதே என்கிற கவனத்தில் அவசரமாகக் குறுக்கிட்டாள் வித்யா. "நமம விருப்பத்திற்கு ஏற்ப நடக்கற நிகழ்ச்சிகளை அமைச்சிக்க முடியுமா?"

"நாம் மட்டுமே சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி நிறைவேற்றிக் கொள்ளலாமேன்னு நாம நினைக்கலாம். ஆனால் அதுக்குக் கூட காலம், சமயம் போன்ற புறக்காரணங்களின் ஒத்துழைப்பு தேவை. ஆடிப் பட்டம் தேடி விதை என்கிறார்களே, அதுமாதிரி.  இதைத் தான் ரொம்ப அழகா, 'ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்'ன்னு வள்ளுவப் பெருமான் சொல்றார். அதுவும் தவிர ஒவ்வொரு நிகழ்வுக்கும் தொடர்ந்த விளைவு உண்டு.  அந்த விளைவுகளையெல்லாம் ஒருங்கிணைத்து நாம் விரும்புற பூர்த்திக்கேற்ப வழி நடத்த வேண்டும்.  கர்ம பலன் இருந்தால் தான் அந்த வழிநடத்தற சக்தி கிடைக்கும்.  நம் செயல்பாடுகள் தான் நமக்கான கர்மபலனைத் தீர்மானிக்கறதாலே, நல்ல விளைவுகளை ஏற்படுத்தற கர்மபலனைச் சேர்த்துக் கொள்ளக் கூடிய செயல்பாடுகள் தேவை."

"கர்ம பலன்னா என்ன,  எதைச் சொல்கிறீர்கள்?"

"'திருப்பியும் திருவள்ளுவர் தான். 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்'ன்னு அவர் சொல்லியிருக்கிறார் இல்லையா, அந்த கருமத்தை.  அநுதினமும் செயல்படுகிற நம் செயல்பாட்டை. செயல்பாடுக ளின் குணாம்சங்களில் ப்ளஸும் உண்டு; மைனஸும் உண்டு.  ப்ளஸ் அதிகமாகற மாதிரி செயல்பாடுகளை அமைச்சிக்கறது, அதற்கான நற்பலன்களை அதிகமாக் கொடுக்கும்"

"ப்ளஸ்ன்னா, நமக்கு நன்மை கொடுக்கறது. மைனஸுன்னா நமக்குத் தீமை கொடுக்கறதா?"

"நமக்கில்லை.  சமூகத்திற்கு.  இந்த நமக்கு என்பதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத் தான்.  அப்புறம் நமக்கு என்பதே நம்முள் அருகிப் போயிடும். நற்காரியங்களில் நாம் ஈடுபட ஈடுபட நாமும் சமூகமும் ஒரே நேர்கோட்டில் ஒண்ணாயிடுவோம்.  ஒரு ஸ்டேஜில் நமக்கு நன்மைங்கறது சமூகத்தின் நன்மையாயிடும். 'பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான் கண் படின்'ங்கற நிலை."

"புரியறது.  மனசிலே பதியற மாதிரி ரொம்ப எளிமையா சொல்றீங்க. அப்படிப் பதியறதெல்லாம் அப்படியே எங்களை நடந்துக்க வைக்கும்" என்று ஏதோ உறுதி தன்னுள் பிறந்த மாதிரி சொன்னாள் வித்யா.  "நடந்துக்கறதுன்னதும் இப்போ மனுஷாளோட பங்களிப்பைப் பத்தி நினைக்க வைக்கிறது..  இந்த மனுஷப் பங்களிப்புங்கறது ஒரு நிகழ்வு நிகழ்வதற்கான நிகழ்வுக்கூறா, இல்லை இப்படி பங்களிப்பு செய்யறதுன்னு ஒருபக்கம் நாம நினைக்கறது தான், இன்னொரு பக்கம் ஒவ்வொரு மனுஷனோட வளர்ச்சிக்கும் பங்காற்றுகிறதா?"

"குட்.." என்று வித்யா கேட்ட கேள்வியை சிலாகித்து நிமிர்ந்து உட்கார்ந்தார் வராஹமிஹிரர்.  "குழந்தை! உன்னோட பேசிண்டிருக்கறதே ஒரு நிறைஞ்ச அனுபவத்தை ஏற்படுத்தும் போலிருக்கு..  ரொம்ப நாளா என் மனசிலே பாசிப்பிடிச்சு படிஞ்சு கிடக்கிற எண்ணங்களை எடுத்துத் துலக்கற மாதிரி இருக்கு.. நீ கேட்ட கேள்விக்கு எனக்குத் தெரிஞ்சதைச் சொல்ல முயற்சிக்கிறேன்.." என்று சொன்னவர் ஒரு நிமிடம் மெளனத்தில் ஆழ்ந்தார்.  அவர் கண்கள் மேல் சுவரின் மூலையில் நிலைக்குத்தியிருக்க சொல்ல ஆரம்பித்தார்.  அவர் சொல்லச் சொல்ல ரிஷியும் வித்யாவும் புறவுலகம் மறந்து அவர் பேசும் கருத்துக்களில் கட்டுண்டு கிடந்தனர்.

நேரம் போனதே தெரியவில்லை.  இன்று பொதுவிடுமுறை நாளாக இருந்தது ரொம்ப செளகரியமாகப் போயிற்று. கெளதம் மொட்டை மாடி குரூப் ஸ்டடிக்குப் போயிருந்தான். மதியம் சாப்பிடுவதற்குள் வந்து விடுவதாக அவனிடம் சொல்லி விட்டுக் கிளம்பி வந்திருந்தார்கள். மாலை பெரியசாமி வேறு வந்து விடுவார். அவர் வீட்டு 'பெண் பார்க்கும் நிகழ்ச்சி'க்குப் போக வேண்டும்.  வராஹமிஹிரரிடம் பேசிய பிறகு நிகழ்ச்சி என்கிற வார்த்தையே ரொம்பவும் அர்த்தம் நிறைந்ததாக அவளுக்குப் பட்டது.

அவர்கள் கிளம்பும் பொழுது, "அடிக்கடி வாருங்கள்.."என்று வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் வராஹமிஹிரர்.  அவர் தந்திருந்த 'நடக்கும் என்பார் நடக்கும்' புத்தகம் சுகச்சுமையாக இருந்தது வித்யாவிற்கு.


 (இன்னும் வரும்)




































13 comments:

ஸ்ரீராம். said...

//வால்தூக்கி....//
ஜன்னல் பக்கம் அடுத்த தெரு, அங்கேயும் ஒரு மாடு//

காட்சிகள் மனக் கண்ணில்!

சொல்லவந்ததைச் சரியாகச் சொன்னோமா என்று மரியாதையுடனும் பணிவுடனும் வித்யா பேசும் பாரா அருமை!

கோமதி அரசு said...

"நமக்கில்லை. சமூகத்திற்கு. இந்த நமக்கு என்பதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத் தான். அப்புறம் நமக்கு என்பதே நம்முள் அருகிப் போயிடும். நற்காரியங்களில் நாம் ஈடுபட ஈடுபட நாமும் சமூகமும் ஒரே நேர்கோட்டில் ஒண்ணாயிடுவோம். ஒரு ஸ்டேஜில் நமக்கு நன்மைங்கறது சமூகத்தின் நன்மையாயிடும். 'பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான் கண் படின்'ங்கற நிலை."//
வாரஹமிகிரர் சொல்வது உண்மை. நாம் செய்யும் நன்மை எல்லாம் சமூகத்திற்கு தான். நாம் செய்யும் தீமையும் சமூகத்திற்கு தான்.

வாழ்க்கையோ, இயற்கை, சமுதாயம், தான் என்ற மூன்றின் இணைப்பில் நடைபெறுகிறது. என்று மகரிஷியும் கூறுகிறார்.
வித்யாவும் வாழ்க்கை தத்துவாஆராய்ச்சியில் இறங்கி விட்டார் என தெரிகிறது.

அவர் சுகமான சுமையாக 'நடக்கும் என்றால் நடக்காது' என்ற புத்தகத்தை எடுத்து செல்வதைப் படிக்கும் போது சில சந்தேகங்கள் தோன்றுகிறது.

அடுத்த பதிவில் பார்க்கிறேன் நான் நினைத்தபடி வருகிறதா என்று.

பாச மலர் / Paasa Malar said...

//சின்ன சின்ன சில நிகழ்வுகளின் ஒண்ணாச் சேர்ந்த வெளிப்பாடு தான் ஒரு நிகழ்ச்சி. நிகழ்வு, நிகழ்ச்சி--//

நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து அடுக்குவது வாழ்க்கை..

வர வர, கதையின் நிகழ்வுகளை விட, கதையின் ஊடாடும் வாழ்க்கை பற்றிய கருத்துகளில் அதிகம் கவனம் செலுத்துகிறேனோ என்று தோன்றுகிறது...

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//காட்சிகள் மனக் கண்ணில்!//

கனவில் கண்டால் விசேஷம்.

-- யாரோ

உங்கள் ரசனையும் அருமை தான்!

ஜீவி said...

@ கோமதி அரசு


//வித்யாவும் வாழ்க்கை தத்துவ ஆராய்ச்சியில் இறங்கி விட்டார் என தெரிகிறது.//

இல்லை, அதற்கும் மேலே.

//அவர் சுகமான சுமையாக 'நடக்கும் என்றால் நடக்காது' என்ற புத்தகத்தை எடுத்து செல்வதைப் படிக்கும் போது சில சந்தேகங்கள் தோன்றுகிறது.//

அந்தப் புத்தகத்தின் தலைப்பு, 'நடக்கும் என்பார் நடக்கும்' இல்லையா? ஆக, அதற்கேற்ப என்ன நடக்கப் போகிறது என்று யூகித்துக் கொள்ளுங்கள், கோமதிம்மா.

ஜீவி said...

@ பாசமலர்

//வர வர, கதையின் நிகழ்வுகளை விட, கதையின் ஊடாடும் வாழ்க்கை பற்றிய கருத்துகளில் அதிகம் கவனம் செலுத்துகிறேனோ என்று தோன்றுகிறது...//

ரொம்ப சரி. அதற்காகத் தான் எது எதெல்லாமோ!

கோமதி அரசு said...

நடக்கும் என்பார் நடக்கும்' புத்தகம் சுகச்சுமையாக இருந்தது வித்யாவிற்கு//

நான் தலைப்பை தவறாக சொல்லி விட்டேன்.
இப்போது நடக்கும் என்பார் நடக்கும்’
என்பதால் புரிந்து விட்டது என்ன நடக்கும் என்று.
வித்யாவின் உள்ளுர்ணவு சரியாக கணிக்கிறது.
எல்லாம் நல்லபடியாக நடந்தால் நலம்.

அப்பாதுரை said...

வராஹமிஹிரர்-வித்யா உரையாடலை ரசித்துப் படித்து ரசித்தேன் - கண்மூடி அலர்ட் அவ்வப்போது அடித்தாலும் :)
நிகழ்ச்சியின் விளக்கம் சுவாரசியம். இதைத் தொடர்ந்து உரித்துக் கொண்டு போனால் முரண் புலப்படுமே?

ஜீவி said...

@ கோமதி அரசு

// எல்லாம் நல்லபடியாக நடந்தால் நலம்..//

அந்த 'ஆல்' விகுதி தான் சொல்றது. இன்னும் ஒரு சின்ன சந்தேகம் மனசின் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கிறதல்லவா?

ஜீவி said...

@ அப்பாதுரை

அந்த கண்மூடி அலர்ட் தான், ரசனையின் விளைவு.

'முரண்' அறிய ஆவல். அதற்கு ஏதாவது அரண் கிடைக்குமா, பார்க்கலாம்.

நீங்கள் சொன்ன 'உரித்தல்' தான் நடந்தது. தட்டச்சிவிட்டுப் படித்துப் பார்த்தால், செம கட்டுரை. அதனால் தான் கடைசியில் அந்த கட்.

அதற்குப் பிறகு மனக்கடல் உலா போனதில் 'இருத்தலியல்' தீப ஸ்தம்பத்தின் ஒளி வெளிச்சம்! கையடக்கமான ஆடியில் அந்த வெளிச்சம் பிடிபடுமா என்று நப்பாசை.

பகிர்தலில் கிறக்கம் கிடைத்தது.
ரசனைக்கு நன்றி, அப்பாஜி!

அப்பாதுரை said...

//இருத்தலியல்' தீப ஸ்தம்பத்தின் ஒளி வெளிச்சம்!

beautiful.

G.M Balasubramaniam said...


சின்னச் சின்ன நிகழ்வுகளின் வெளிப்பாடே ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பு
எனும்போது இந்த CHAOS தீயரியும் அடங்கும் எனலாமா.>

Geetha Sambasivam said...

nadakkattum, nadakkattum, ennathan nadakkum nadakkattume!

Related Posts with Thumbnails