Monday, September 30, 2013

இனி (பகுதி-13)

ஸ்ரீராம் சொன்னபடி, தான் எழுதியதை அதைப் படித்த இன்னொருவர் சொல்ல வருவது ஒரு சந்தோஷ நிகழ்வு.  வித்யா மூலம் அது மோகனுக்கு வாய்த்ததும் கதையின் போக்குக்கு ஏற்ப சடக் சடக்கென்று மாறும் அவள் முகபாவத்தை பார்த்து வியந்திருந்தான்.

முழுசாக கதையை அவள் சொல்லி முடிக்கற வரை பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் புரந்தரதாசர். 'இனி' கதையின் சமீபத்திய  பகுதி வரை வித்யா சொல்லி முடித்ததும், மோகனைப் பார்த்து, "கதையை நன்றாகக் கொண்டு போயிருக்கே.." என்றார்.  ஒரு வினாடி நேர மெளனத்திற்குப்  பிறகு, "இந்த கதையில் வரும் கோயில் நிகழ்வு நீயும் உணர்ந்த ஒரு  உணர்வாய்  இருப்பதினால் அதை விவரித்து தத்ரூபமாக உன்னால் சொல்ல முடிந்திருக்கிறது" என்றார்.

"என் உணர்வுங்கறது சரி சார்.  எப்படி அந்த சந்தோஷ உணர்வு சுவாமி தரிசனம் போதெல்லாம் என்னை ஆட்கொள்கிறதுன்னு தெரியலே.  உங்களுக்குத் தெரிந்த வரையில் அதற்கு ஏதாவது காரணம் இருக்குனு நீங்க நினைக்கிறீங்களா?" என்று புரந்தரதாசரைப் பார்த்துக் கேட்டான்.  தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அவன் முகத்தில் சுடர்விட்டது.

புரந்ததாசர் புன்னகைத்தார். "மோகன், விஷயம் என்னன்னா, எந்த நிகழ்வும் ஒரு காரணத்தின் அடிப்படையில் தான் நிகழறது.  அதாவது, காரணம்ன்னு ஒண்ணு இல்லேனா அதுக்கான நிகழ்வே இல்லேன்னு சொல்லலாம்.  இப்போ சொன்னையே, சுவாமி தரிசனம் போதெல்லாம் அந்த சந்தோஷ உணர்வுக்கு ஆட்படறேன்னு, அதுக்குக் கூட காரணம் இருக்கும்.  ஐ மீன் அதுக்கான காரணம் இல்லேனா, அந்த உணர்வு உனக்கு  ஏற்பட்டிருக்காதுன்னு சொல்ல வரேன்.." என்றார்.

"அந்தக் காரணத்தைத் தான் தெரிஞ்சிக்கணும்ன்னு எனக்கு ஆசை.."

"அதைத் தெரிஞ்சிண்டு என்ன ஆகப்போறது?"

"என்னப்பா, இப்படிக் கேக்கறே?.. அதுக்கான ரூட் காஸ் தெரிஞ்சா எதுனாலே அந்த  உணர்வு ஏற்படறதுன்னு  தெரிஞ்சிக்கலாமிலே?"

"வித்யா! அதை இன்னொருத்தர் கண்டுபிடிச்சுச் சொல்றதுக்காக சிரமப்படறதை விட சம்பந்தப்பட்டவரே ஈஸியாக் கண்டுபிடிச்சிடலாம்."

"சம்பந்தபட்டவர் அதைக் கண்டுபிடிக்கத் தெரியாமத்தானே, உங்கிட்டே கேக்கறார்.  ரொம்ப பிகு பண்ணிக்கறையே?.."

"சேச்சே.. அப்படிலாம் இல்லே." என்று வித்யா சொன்னதை அவசரமாக மறுத்தார் புரந்தரதாசர்.

"பின்னே, என்ன?.. நீ அதுக்காக சிரமப்படணும்ங்கறியா?"

"அப்படிலாம் இல்லே. அப்படியே கொஞ்சம் சிரமமா இருந்தாக்கூட இதுக்குன்னு வந்திருக்கற மோகனுக்காக சிரமப்பட மாட்டேங்கறியா?"

"பின்னே என்ன?"

தந்தைக்கும் மகளுக்கும் தன் சம்பந்தப்பட்டு நடக்கும் உரையாடல் கேட்டு மோகனுக்குப் பெருமிதமாக இருந்தது.  இந்தப் பெருமிதம் இந்தக் குடும்பத்தோடு இன்னும் தனக்கு நெருக்கத்தை அதிகரிக்கும் என்கிற நினைப்பு ஏற்பட்டு அந்த நினைப்பே அளப்பரிய சந்தோஷத்தை அவனுக்கு அளித்தது.

"பின்னே என்னன்னா?  என்னத்தைச் சொல்றது?..  இந்த மாதிரி சமாச்சாரத்துக்கெல்லாம் விடை கண்டுபிடிக்கணும்ன்னா சம்பந்தப்பட்ட அந்த நபர் பற்றிய பெர்சனல் சமாச்சாரம்ல்லாம் அலசி ஆராயணும்.  சம்பந்தப்பட்டவரும் எந்த ஒளிவு மறைவுமில்லாம தன்னைப்பத்திச் சொல்லணும்."

"ஓ.. ஸாரி.. அதுக்குச் சொல்றையா?" என்று வித்யா கேட்ட போது, "நீங்க கேளுங்க, சார்.. என்ன கேள்வினாலும் பதில் சொல்லலாம்ன்னு நெனைக்கிறேன்.." என்றான் மோகன்.

"என்ன, நெனைக்கிறீங்களா?.." என்று சடக்கென்று அவன் பக்கம்  திரும்பிப்  பார்த்த வித்யா, மறுவினாடி பார்வையைத் திருப்பி தன் தந்தையைப் பார்த்தாள். "ஏம்ப்பா.. இப்படி செஞ்சா என்ன?"

"எப்படிம்மா?.."

"இதுக்கான காரணத்தை மோகன் தெரிஞ்சிக்கணும். அவ்வளவு  தானே?  ஒண்ணு செய்.  எதுனாலே அந்த உணர்வு மோகனுக்கு ஏற்பட்டிருக்கலாம் ன்னு நீ நெனைக்கறையோ அதுக்கான காரணங்களை வரிசையா சொல்லு.  அந்தக் காரணங்கள்லேந்து மோகனே  தனக்குப் பொருந்தற ஒரு காரணத்தையோ இல்லே பல காரணங்களையோ தேர்ந்தெடுத்துக்கட்டும்.  என்ன சொல்றே?"

"நான்  சொல்றதுக்கு என்ன இருக்கு?.. மோகன் தான் சொல்லணும்.."

"எதுனாலும் எனக்கு சரி சார்.  நா ஒரு திறந்த புஸ்தகம். அந்த புஸ்தகத்தோட எந்தப் பக்கத்தை வேணா யார் வேணாலும் புரட்டிப் படிக்க எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.." என்றான்.

மோகன் சொன்னதைக் கேட்டு  சிரித்தே விட்டாள் வித்யா. "ஸீ.. மோகன்! இது சினிமா படப்படிப்பு இல்லே.  ஒரு உண்மையைத் தெரிஞ்சிக்க முயற்சிக்கறோம்.  'றோம்' கூட இல்லை,  நீங்க முயற்சிக்கிறீங்க.. அந்த உங்களோட முயற்சி பலிதமானா உங்களுக்கு பலவிதங்கள்லே அதுனாலே நன்மை.  முக்கியமா இதையே ஒரு நிகழ்வா வைச்சு நீங்க எழுதற கதைக்கு கற்பனையான வெத்து பூச்சு இல்லாம நீங்களே உணர்ந்த யதார்த்த உணர்வுகளோட கதையை அடுத்த கட்டத்துக்கு  நகர்த்தலாம்.  அதுக்கு அப்பா உங்களுக்குத் துணையா இருக்கார்.  நான்?...  நான் எதுக்குன்னா அப்பா வாயிலேந்து விஷயங்களை வரவழைக்க உங்களுக்குத் துணை.  ஓக்கேவா?"

அவள் பேசும் ஜாலத்தில் மெய்மறந்து தன்னையே பறிகொடுத்தவனாய் வித்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் மோகன்.  தனக்காகத்தான் எல்லாம் என்கிற நேரடிப்  பார்வை இல்லாமல், ஒரு மூன்று பேர் சேர்ந்து ஒரு  நிகழ்வுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிற உணர்வே பிரதானமாய் மோகன் மனசில் படிந்திருந்தது.

"இந்த ஐடியா நன்னாத் தான் இருக்கு.  இதுக்குத்  தாம்மா எதுக்குனாலும் நீ பக்கத்லே இருக்கறது பல விஷயங்கள்லே செளகரியமா இருக்குங்கறேன்" என்று புரந்தரதாசர் மகளின் அருகாமையின் அருமையைச் சொன்னார். அவர் சொன்னதும் நியாயமாகத் தான் பட்டது மோகனுக்கு.

"இப்போ சொல்லுப்பா.. அவசரம் இல்லே.  யோசிச்சே சொல்லு." என்றாள் வித்யா.

"சொல்றேன்.." என்றார் புரந்தரதாசர். "ஒவ்வொண்ணா சொல்றேன். மோகன், அதிலே உனக்கு எந்தக் காரணம் பொருத்தமாப்படறதோ அதைத் தேர்ந்தெடுத்துக்கலாம்.  அதை எங்களுக்குச் சொல்லணும்ன்னு  கூட இல்லே. உன்னோட கதைக்கு பொருத்தமா வந்ததுனா, அதை உபயோகப் படுத்திக்கோ. இதிலே செளகரியம் என்னன்னா, இதிலே பல ஆப்ஷன் இருக்கு. அதிலே எந்தக் காரணத்தை வேணா உன் கதைக்கு நீ உபயோகப்படுத்திக்கலாம்.  கூடவே உனக்குச் சரியாப் படற உன் உணர்வுக்கான பிரத்யேகக் காரணத்தையும் நீ தெரிஞ்சிக்கலாம்.. சரி தானே?.. நீ வேணா நா சொல்றதை பேப்பர்லே குறிச்சிக்கறையா?"

"நான் எதுக்கு இருக்கேன்?" என்று பக்கத்து மேஜையிலிருந்த பேப்பர் பேடையும்  பேனாவையும் எடுத்துக் கொண்டாள் வித்யா.. "நீ ஒவ்வொண்ணா சொல்லுப்பா.  நா நம்பர் போட்டு எழுதிக்கறேன்.   மோகன்! உடனே விடை காணணும்ன்னு நீங்க அவசரப்பட வேண்டாம்.  நா குறிச்சு வைச்சிருக்கறதிலேந்து உங்களுக்குப் பொருத்தமா படற ஒண்ணை மெதுவா பின்னாடித் தேர்ந்தெடுக்கலாம்.  அதுக்கு  நிறைய அவகாசம் இருக்கு. சரியா?.. இப்போ நீ சொல்லுப்பா.." என்றாள்.

"நம்பர்  ஒண்ணு.  குறிச்சிக்கோ.  சின்ன வயசிலே எதுனாலேயோ கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்திருக்கலாம்.  வளர வளர கூட்டங்கூட்டமா தெய்வத்தின் மேலே நம்பிக்கை வைச்சிருக்கறவங்களைப்  பாத்து, 'எதுக்காக இப்படி அலைமோதுறாங்க'ன்னு தெரிஞ்சிக்கணும்ன்னு  ஆர்வம் வந்திருக்கலாம்.  அதைத் தெரிஞ்சிக்கற ஆர்வத்லே, அந்த குறுகுறுப்பிலே கடவுள் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களைப் படிக்க ஆரம்பிச்சிருக்கலாம்.  அப்படிப் படிச்சுத் தெரிஞ்சிண்ட அறிவும் சதாசர்வ காலமும் அது பற்றிய நினைப்பும் மனசுக்கு வெகு  நெருக்கமாகி இறைவன் மீதான  ஆகர்ஷ்ணமா மாறியிருக்கலாம்.  அந்த ஈர்ப்பு தான்  வினை புரிந்து இறைவன் குறுநகையாய் சிந்தையில் விளைந்திருக்கலாம்.

"நம்பர் டூ.  இது ஒரு வினோதமான விஷயம். சில பேருக்கு இருக்குங்கறதை இல்லைன்னு நிரூபிக்கறதிலேயும், இல்லைங்கறதை இருக்குன்னு நிருவுவதிலும் அதீத ஆசை உண்டு.  அந்த ஆசை வயப்பட்டவங்க...." என்று புரந்தரதாசர் சொல்லிக் கொண்டு வருகையில், "இருப்பா.. பேனா எழுதலே.. வேறே எடுத்துக்கறேன்.." என்று வித்யா மேஜை இழுப்பறை திறந்து வேறொரு பேனாவை எடுத்துக் கொண்டாள். "ப்ளீஸ்..கண்ட்டினியூ, அப்பா.." என்றாள்.


(இனி....  இன்னும் வரும்)      

Wednesday, September 25, 2013

இனி (பகுதி-12)

புரந்தரதாசரை நேரில் பார்த்த மரியாதையில் சட்டென்று எழுந்து நின்று கைகுவித்தான்  மோகன்.

பைஜாமாவும் அதன் மேல் முட்டி வரை ஜிப்பாவும் சந்தனக் கலரில். லேசாக நரைத்த குறுந்தாடி, சிகை  கலைந்த தலை, கூர்மையான மூக்கைச் சுமந்த ஓவல் முகம், ரிம்லெஸ் கண்ணாடி, குறுகுறு பார்வை என்று வயசானாலும் களையாக இருந்தார் புரந்தரதாசர்.

"வாங்கோ.. நான் தான்  புரந்தரதாசன்" என்று அவன் கைபற்றி அவர் குலுக்கிய போது அவரது தன்மையான அறிமுகமே மோகனுக்கு  மிகப்பெரிய விஷயமாக  இருந்தது.. 'எவ்வளவு பெரிய  ஜீனியஸ்?.. இப்படிச் சாதாரணமாய்..' என்று அவன்  மலைத்த பொழுது, அவர் ஜீனியஸாய் இருப்பதால் தான் அலட்டல் இல்லாத வெகு சாதாரணமாக தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்கிற உண்மை புத்திக்குப் பட்டது.

"உங்களைத் தான் பார்த்துப் போகலாமென்று வந்தேன்.." என்றவன் தன்னை அவருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"அப்படியா?" என்று கூர்ந்து அவனைப் பார்த்தவர், "பத்திரிகை பேர் என்ன சொன்னீங்க?" என்று கேட்டார்.

"'மனவாசம்'ங்கறது  பத்திரிகை பேர். அதிலே, இப்போ 'இனி'ன்னு ஒரு தொடர்கதை எழுதிண்டு வர்றேன். அது சம்பந்தமாத்தான்.."

"தொடர்கதை சம்பந்தமாவா.. என்னையா?" என்று நம்பமுடியாதவர் போல் மோகனைப் பார்த்தார் அவர். "இந்தப் பத்திரிகை-- தொடர்கதைன்னாலே என் பெண்ணைத் தான் கேக்கணும்.. யூ நோ.. அவள் பயங்கர புத்தக ரசிகை.. ஒரு புத்தகமோ பத்திரிகையோ கையிலே இருந்திட்டா சோறு, தண்ணி வேண்டாம்" என்றவர், அந்த நொடியே, "வித்யா.." என்று அந்த வீடு முழுக்க கேட்கிற மாதிரி கூப்பிட்டார்.

"என்னப்பா.." என்று வீட்டினுள் எந்த இடத்திலிருந்தோ வீணை மீட்டல் மாதிரி குரல் குழைந்தது..

"இங்கே, வாம்மா.. சார் வந்திருக்கார், பாரு!" என்ற புரந்தரதாசர், மோகனைப் பார்த்து "என் பொண்ணைத் தான் பாக்க வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். அவ தான் இந்த  பத்திரிகை, தொடர்கதை இதோடெல்லாம் தொடர்பு உள்ளவள்.." என்றார்.

வித்யாவை எதிரில் உட்காருகிற நெருக்கத்தில் இன்னொரு தடவை பார்க்கப் போவது சந்தோஷமாய்  இருந்தாலும், அவள் இங்கு வருவதற்குள் விஷயத்தைச் சொல்லி விட வேண்டுமென்கிற அவசரத்தில், "உங்களைத் தான் சார் பார்க்கணும்ன்னு வந்திருக்கேன்.. அனந்தசயனம் சார் தான் உங்களைப்  பத்திச் சொல்லி முகவரி கொடுத்தார்.. அதான்.." என்று இழுத்தான்.

"எந்த  அனந்தசயனம்?....."

"அவரும் எங்க பத்திரிகைலே தான் எழுதறார்.  'ஹலோ,தோழி'ன்னு எங்க பத்திரிகைலே ஒரு பகுதி.. அந்தப் பகுதியை குத்தகைக்கு எடுத்திருக்கறவர்."

"ஹலோ, தோழியா?.. நீங்க என்ன சொல்ல வர்றீங்க, யாரைச் சொல்றீங்கன்னு தெரியலே.. என் பொண்ணு  வந்திடட்டும்.. எல்லாம் புரிஞ்சிடும்.." என்று தன் பெண்ணின் மீது அபார நம்பிக்கை வைத்தவராய் வீட்டின் உள்பக்கம் பார்த்தார். "வித்யா..." என்று மறுபடியும் ஒரு குரல்.. அந்தக் குரலில் அசாத்திய  ஆண்மை படிந்திருப்பதை இப்பொழுது தான் மோகன் கவனித்தான்.

"என்னப்பா?.." என்று அழகுக் குவியலாய் ஆரஞ்சு ஜூஸ் குவளைகளை ட்ரேயில் தாங்கியபடி வந்தாள் அவர் செல்ல மகள்.

பார்த்தும் பார்க்காத மாதிரி அவளை ஒரு பார்வை பார்த்து வைத்தான் மோகன். கருவிழியைச் சுழற்றி கொள்ளை கொண்டதற்கே ஆஸ்தி பூரா எழுதி வைத்து விடலாம் போலிருந்தது.

"வித்யா! சார் ஒரு எழுத்தாளர். பேர் மோகன்..." என்று சுறுசுறுப்பாக அறிமுகத்தை ஆரம்பித்தவர், சட்டென்று தயங்கி, மோகன் பக்கம் பார்த்து, "ஸாரி.. பத்திரிகை பேர் என்ன சொன்னீங்க?.." என்று கேட்டார்.

"நான் ரொம்ப சின்னவன்ங்க.. என்னைப் போய் 'ங்க..'லாம் போட்டு  அழைக்க வேண்டாம்.." என்று மோகன் நெளிந்தான்.

"சரி.. இனி 'ங்க' கிடையாது.. சொல்லு, பத்திரிகை பேர் என்ன சொன்னே?" என்று சடாரென்று அவர் ஒருமையில் மாறியது இயல்பாக இருந்தது.

"தொடர்கதை பேரும், 'இனி' தாங்க.." என்று அவன்  சொன்னதைக் கேட்டு கலகலவென்று சிரித்தாள் வித்யா.. "பத்திரிகை பேர் 'மனவாசம்'ப்பா.. அதிலே தான் 'இனி'ன்னு  ஒரு தொடர்கதை ஆரம்பிச்சிருக்கு.. அட! அந்தக் கதையை எழுதற மோகன் நீங்களா?  ஓ வாட் எ சர்ப்ரைஸ்.." என்று அவனை விழுங்கி விடுபவள் போல பார்த்தாள் வித்யா.   இது தனக்காக அல்ல, தன் எழுத்துக்கான பிரமிப்பு  என்று  அவன் மனம் சொல்லியது. உள் மனசோ, 'எதுக்கா இருந்தா என்ன, பிரமிப்பு பிரமிப்பு தானே, இப்போ எழுத்துக்காகன்னு ஆரம்பிக்கறதை, அந்த எழுத்தை எழுதற ஆசாமிக்காகன்னு  மாத்தறது ரொம்ப சிரமமோ' என்று இடித்துச் சொல்கிற மாதிரி முனகியது.

"அப்படியாம்மா.." என்று  இழுத்தார் புரந்தரதாசர். "இதுக்குத் தான் நீ வேணும்ங்கறது.. இப்போ சொல்லு.. ஏதோ 'ஹலோ, தோழி'ன்னு சொன்னாரே.. அதைப் பத்தித் தெரியுமாம்மா?"

"அனந்தசயனம் சார்ன்னா, அதை எழுதறார்.. அப்பாக்கு அவரைத் தெரியுமே?" என்று அவள் சொன்ன போது அவள் விழிகள் அளவாக விரிந்தன.

"எந்த அனந்தசயனம்,வித்யா?.. போர்ட் டிரெஸ்ட் அனந்தசயனமா?"

"சரியாப் போச்சு.. அனந்தசயனம்ன்னா அவர் ஒருத்தர் தானாப்பா? நம்ம அனந்து மாமாப்பா!  ஆனாலும் இப்போ உனக்கு மறதி ரொம்ப அதிகமாயிடு த்து.. ஆனா, அப்படின்னு முழுசா சொல்லவும் முடிலே.. அது எப்படிப்பா உன்னோட ஆராய்ச்சி சமாச்சாரம்ன்னா அது  மட்டும் டக்டக்ன்னு ஞாபகத்துக்கு வர்றது?.." என்று வித்யா வியந்தாள்.

மேற்கொண்டு தொடர ஒரு பிடி கிடைத்த மாதிரி இருந்தது மோகனுக்கு.. "நானும் அதுக்காகத்தான் சார் வந்தேன்..  உங்க ஆராய்ச்சி சம்பந்தமாத்தான்.. அனந்தசயனம் சார் சொல்லித் தான் தெரியும்.. இந்த பிரபஞ்சம், காந்தசக்தி.." என்று  மோகன் சொன்னதும் புரந்தரதாசரின் முகம் மலர்ந்தது.

'சொல்லு, மகனே!' என்று கேட்கிற பரிவுடன் பார்வையில் வாத்சல்யம் குடிகொண்டது. "அனந்து என்ன சொன்னான்?" என்று ரொம்ப  அக்கரையாகக் கேட்டார்.

அவர்கள் பேச்சில் தானும் சமயம் வாய்த்தால் கலந்து கொள்கிற தோரணையில் வித்யாவும் அவள் அப்பாவுக்கு பக்கத்தில்-- மோகனுக்கு நேர் எதிரில்-- உட்கார்ந்து கொண்டான்.  அவள் அங்கிருப்பது மேற்கொண்டு கேட்க வேண்டிய விஷயங்களைக் கேட்பதற்கு தடங்கலாக இருக்குமோ என்று திடீரென்று  முளைத்த எண்ணத்தை மோகன் மறக்க முயற்சித்தான்.

"நிறையச் சொன்னார்,சார்." என்றவனுக்கு அனந்தசயனம் சொல்லி நினைவில் படிந்திருந்த அந்த OBE பற்றி இந்த சமயத்தில் நினைவுக்கு வந்தது. "அனந்தசயனம் சார்,  OBE-யை பத்தி உங்க கிட்டே கேட்டு ரொம்பவும் ஆச்சரியப்பட்டதாகச் சொன்னார். அப்புறம் பெயிண்ட் கம்பெனி.." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்து நாக்கைக் கடித்துக் கொண்டது போல பாதியில் நிறுதினான்.

அவன் கடைசியாகச் சொன்னதை அவர் கவனிக்கவில்லை என்று தெரிந்தது. "அப்படியா?.." என்று புருவங்களை உயர்தினார். "அனந்து கிட்டே எங்க வாலிப காலத்லே OBE-யைக் கத்துக்கோடான்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவன் மசியவே இல்லை.  இதெல்லாம் எனக்கெதுக்குன்னு ஒதுங்கிட்டான். அதெல்லாம் இன்னும் ஞாபகம் வைச்சிண்டிருக்கான், பாரு!" என்று பழைய நினைவுகளில் ஆழ்கிற மாதிரி லேசாக பாதி விழிகளை மூடியவரின் முகத்தில் விகசிப்பு படர்ந்தது.

"அவர் மசியாட்டாப் போகட்டும். நான் மசியறேன்.  எனக்கு கத்துக்குடுக்கிறீங் களா, சார்?" என்று அவன் கேட்டதும் கலகலவென்று சிரித்து விட்டாள், வித்யா.

"பையா! எடுத்தவுடனே OBE-க்கெல்லாம் போகப்படாது.  அதெல்லாம் யோகம் சித்திக்கறவங்களுக்கு தான் சித்திக்கும்.  அதெல்லாம் தெரிஞ்சிக்கறத்துக்கு நிறைய மனப்பக்குவம் அவசியம். அத்தனையும் படிப்படியாக் கத்துக்கற பயிற்சிகளின்  அடிப்படையில் பழக்கத்துக்குக் கொண்டுவருவது" என்று அவர் பரிவுடன் சொன்னார்.  "அதுசரி, இதெல்லாம் எதுக்குக் கத்துக்கணும்ங்கறே?" என்று திடுதிப்பென்று குறுக்குக் கேள்வி கேட்டார்.

மோகனுக்கு சட்டென்று அவர் கேட்டதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. "கதை எழுதறதுக்கு உபயோகப்படுமேன்னு  தான்.." என்று சொல்லி வைத்தான்.  அது தான் காரணம்  என்றாலும் அப்படிச் சொல்வது வித்யாக்கும்  பிடிக்கும் என்கிற எண்ணம் இருந்தது.  அதனால் ஓரக்கண்ணால் அவள் முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு அவர் முகம் சட்டென்று மாறியது. "ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ.." என்று குரல் மாற்றி கறாராகச் சொன்னார் புரந்தரதாசர். "இதெல்லாம் கத்துக்கறத்துங்கறது புஸ்தகத்தைப் படிச்சு மட்டும் தெரிஞ்சிக்கறதில்லே.  எல்லாத்துக்கும் தன்வயப்பட்ட பயிற்சி வேணும். தன்வயப்பட்ட பயிற்சினா, தன்னை ஒண்ணுலே ஈடுபடுத்திக்கற பயிற்சி. அந்த மன ஈடுபாடு இல்லாம எது ஒண்ணும் சாத்தியப்படாது. அதனாலே ஒவ்வொண்ணையும் தான் அனுபவப்பட்டு தானே உணரணும்.  ஒருத்தர் சொல்லி பலர் கேட்டுக்கறதுங்கற மாதிரியான சமாச்சாரம் இல்லை, இது. அத்தனையும் யோகிகளின் முதிர்ந்த சிந்தனை. நானும் இப்போ முந்தி மாதிரி பயிற்சி வகுப்பெல்லாம் எடுக்கறதில்லை" என்று அவனிடமிருந்து கத்தரித்துக் கொள்கிற மாதிரி சொன்னார்.

அடுத்த வினாடியே அவன் மேல் இரங்கங்கொண்டர் போல அவர் குரல் குழைந்தது. "உனக்கு  கதை எழுதறதுக்கு வேணா உபயோகப்படற மாதிரி சந்தேகம் எதுனாச்சும் இருந்தா கேளு. விவரமா உனக்குப் புரியமாதிரி சொல்றேன். குறிப்புகள்  கொடுக்கறேன். அதோட திருப்தி படணும்.  சரியா?" என்று சம்மதம் கேட்டார்.

"ரொம்ப  சந்தோஷம், சார்" என்றான் மோகன். "கோயிலுக்குப் போனா அதுவே எனக்குத் தனி அனுபவமா இருக்கு, சார்.  இறைவன்  சன்னிதானத்தில் மனசு மிகவும் லேசாகிப்  போறது.  இறைவன் திருவுருவ முகத்தைப் பார்க்கும் பொழுது சந்தோஷம் கொப்பளிக்கறது.  என்னை லட்சியம்  செய்யாது மனம் மட்டும் குதூகலமா இறைவனோடு தனியாப் பேசற மாதிரி இருக்கு.." என்று அவன் சொன்ன போது இடைமறித்து, "உன் மனம்ங்கறது  உன்னோடது  இல்லியா?.. உன்னை லட்சியம் பண்ணாம அது மட்டும் தனியா இறைவனோட பேசறதுன்னு எப்படிச் சொல்றே?" என்று அவனை ஆழம் பார்க்கிற மாதிரி வினவினார் பு.தாசர்.

அவருக்கு புரியற மாதிரி அதை எப்படிச் சொல்லணும் என்பதற்கு மனசில் ரிகர்சல் பார்த்துக் கொள்கிற தோரணையில் தான் அடைந்த உணர்வுகளை வார்த்தைகளாக்கும் முயற்சியில் யோசிக்கும் பொழுது, "இதைத் தான் உங்க 'இனி' கதைலேயும் பாண்டியனின் அனுபவமா சொல்லியிருக்கீங்களா?" என்று வித்யா ஆர்வத்துடன் கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டது மோகனுக்கு ஆறுதலாக இருந்தது. "பேஸிக்கா என் உணர்வு அது.  அதை ஒரு கதையைப் படிக்கற வாசகர்கள் என்ன விரும்புவாங்களோ அதுக்கு ஏத்த மாதிரி சொல்லியிருக்கேன்.." என்றான் மோகன்.  உடனே புரந்ததாசர் பக்கம் பார்த்து சொன்னான். "கதை எழுதறதினாலேயோ என்னவோ எதை யோசிச்சாலும் மனம் தான் முன்னாடி ஓடி வர்றது.  அது பாட்டுக்க நிறைய ஐடியாக்களைக் கொடுக்கும்.  நிறைய கற்பனைகள். இப்படி செஞ்சா என்ன அப்படிச் செஞ்சா என்னன்னு நிறைய. அதுக்காக இந்த அறிவும் சும்மா இருக்காது. அடுத்தாப்ல தான் இதோட வேலை ஆரம்பிக்கும். இது அந்த நிறையதுலே சிலதை ரிஜக்ட் பண்ணி அறிவுபூர்வமா பொருந்தற மாதிரி சிலதைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும். நான் மனம் சொன்னது, அறிவு திருத்தினதுன்னு  ரெண்டையும் வைச்சிப்பேன். கூலா அறிவுக்கும் மனசுக்கும் நடந்த யுத்தம் கதையாயிடும்.  அறிவும் மனசும் எல்லா கேரக்டர்லேயும் கலந்து புரண்டு கதைங்கற ரூபம் கிடைச்சிடும்" என்றான்.

அவன் சொல்வதை சுவாரஸ்யமாகக் கேட்டுக்  கொண்டு  வந்த புரந்தரதாசர், "ஒண்டர்புல்.. நினைக்கறதை அருமையா நேரேட் பண்றே, பையா!" என்றார்.

அவருக்கு குஷி வந்து விட்டால் பையா என்று கூப்பிடுவார் என்று வித்யாவுக்குத் தெரியும்..  சமயத்தில் அவளைக் கூட அப்படிக் கூப்பிடுவார். அதை மனசுக்குள் குறித்துக் கொண்டே, மோகனைப் பார்த்து, "அப்புறம்?" என்றாள் அவனை உற்சாகப்படுத்துகிற மாதிரி.

"இதிலே வேடிக்கை பாருங்க, எனக்கு இந்த அறிவு- மனசு இந்த ரெண்டுக்கும் இடையேயான யுத்தம் வேண்டியிருக்கறதாலே,  அந்த யுத்தம் தான் என் கதைங்கறதாலே, இந்த அறிவும் மனசும் ஒண்ணுக்கொண்ணு சமரசம் ஆயிடக்கூடாதுங்கறதிலே கண்ணும் கருத்துமா இருப்பேன்.  ரெண்டும் ரெண்டு சண்டை ஆடுகள் மாதிரி. ரெண்டையும் புஷ்டியா வளர்த்து வைச்சிருக்கேனாக்கும்!" என்றான் மோகன்.

"நிஜமாலுமா?.. அதை எப்படி வளர்க்கறது?" என்று வித்யா கேட்டதே ஒயிலாக இருந்தது.

"வளர்க்கறதுன்னா என்ன?.. படிக்கறது தான்.. நிறைய படிக்கறேன். அதான் தீனி, இந்த ரெண்டு ஆடுகளுக்குமே.  இந்த தீனிக்காக இந்த ரெண்டும் எப்பவும் காத்திருக்கும்.  இப்போ கூட பாருங்க, இந்த தீனிக்காகத் தான் உங்கப்பா என்ன சொல்லப் போறார்ன்னு காத்திருக்கு" என்றான்.

"அட்டகாசம்ப்பா.." என்று எழுந்து மோகன் முதுகு பக்கம் கைவைத்து தட்டிக் கொடுத்தார் புரந்தரதாசர்.  "வெல்.. நீ  சொல்றது புரியறது.  எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன்.  நீ இப்ப உன்  'இனி' கதையைச் சொல்லு.." என்றார்.

"நான் சொல்றேம்ப்பா.." என்று தன்னிச்சையாக வித்யா முன் வந்த போது, மோகனின் முகம் மலர்ந்தது.  அவன் மனம் சந்தோஷக் கொடியை அசைத்து அசைத்து அவனைக் குஷிப்படுத்தியது.


(இனி..   இன்னும் வரும்)    Saturday, September 21, 2013

இனி (பகுதி-11)

'ஹலோ, தோழி' அனந்தசயனம் மெளனமாக  இருப்பதைப் பார்த்து, "நான் என்ன சார் செய்யணும்?" என்று மறுபடியும் கேட்டான் மோகன்.

"அதைத்தான்-- நீ என்ன செய்யணும்ங்கறதைத் தான் யோசிச்சிண்டு இருக்கேன்.." என்று மோவாயைத் தடவிக் கொண்டிருந்தார் அனந்தசயனம்.  அடுத்த வினாடி டேபிளின்  மேல் கிடந்த ஒரு பென்சிலை எடுத்து லேசாக முன்னும் பின்னும் உருட்ட ஆரம்பித்தார்.

அவரே சொல்லட்டும் என்று அவர் விரல்களின் நர்த்தனத்தைப் பார்த்தவாறு  பேசாமல் இருந்தான் மோகன்.

நடுவில் ஒருதடவை இவன் பக்கம் திரும்பிப் பார்த்த பொறுப்பாசிரியர் ஜீ சடக்கென்று தன்  பார்வையை மாற்றி ஃபைலில் கவனம் கொள்கிற மாதிரி காட்டிக் கொண்டார்.  ஃபைலை அவர் பார்ப்பதாகக் காட்டிக்கொண்டாலும் அவர் மனசு இவர்கள் பேச்சில் தான் கவனம் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவனாய் இருந்தான் மோகன்.

லேசாக அனந்தசயனம் தொண்டையைக் கனைத்துக் கொண்ட பொழுது அவர் யோசித்து முடித்து விட்டு தன் யோசனையை இவனிடம் சொல்லத் தயாராகி விட்டதாக மோகனுக்குத் தோன்றியது.  அதன்படியே அவர், "நீ என்ன செய்யறேனா, மோகன்.." என்று தான் நினைத்ததை சொல்ல ஆரம்பித்தார்.  "தி.நகர் சிவா-விஷ்ணு கோயில் உனக்குத் தெரியுமில்லியா? அந்தக் கோயிலுக்கு பக்கத்திலே தனலெஷ்மி  தெருன்னு ஒண்ணு இருக்கு. அங்கே போ.   வலது சாரிலே நாலாவது வீடு.  வெளிகேட் சிமிண்ட் தூண்லேயே புரந்தரதாசர்ன்னு பேர் கல்லே செதுக்கி பதிச்சிருக்கும். சாயந்தரமா போறது நல்லது.  எங்கே சுத்தினாலும் மனுஷர் ஆறு ஆறரைக்கெல்லாம் வீட்லே ஆஜராகியிருப்பார்.  போய்ப் பாக்கறையா?" என்றார்.

மோகனுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. இருந்தாலும், "சரி, சார்.  போய்ப் பாக்கறேன்.. புரந்தரதாசர் யார், எதுக்கு நான் அவரைப்  பாக்கணும்ன்னு இன்னும் நீங்க சொல்லலையே?" என்றான்.

"ஹ..ஹ..ஹ..ஹ.." என்று அடக்கமாகச் சிரித்தார் அனந்தசயனம். "பாத்தையா? இப்படித் தான் அடிக்கடி ஆகிப்போறது.. என்ன யார்ன்னு சொல்லாமலேயே உங்கிட்டே சொன்னா உனக்கு என்ன தெரியும்?  இப்படித் தான்  அடிக்கடி ஆகிப்போறது.. என்  பார்யாள் கூட சொல்வாள்: 'ஏன்னா! பாதி யோசனைலேயே போய்டுது.  யோசிச்சதோட ரிசல்ட்டை மட்டும் ஒருத்தர் கிட்டே சொன்னா, நீங்க என்ன யோசிச்சீங்க, எதுக்குச் சொல்றீங்கன்னு யாருக்குத் தெரியும்?'ம்பாள். அது போகட்டும்.  இந்த புரந்தரதாசர்யார்ன்னா?.."

"எனக்கு ஒரு புரந்தரதாசர் தெரியும், தோழி சார்! கர்னாடக இசை மேதை புரந்தரதாசர்..."

"கரெக்ட்.  அவர் மேலே இவருக்கு  இருக்கற ஆசையாலே தான் அவர் பேரையே வைச்சிண்டிருக்கார். பேரண்ட்ஸ் வைச்ச பேர் ஸ்ரீநிவாசனோ, என்னவோ.. அற்புதமான இயற்கை நேசர் இவர்.  பிரபஞ்சம், எண்ணக் குவியல், காந்த சக்தின்னு நிறைய  சொல்வார்.  ஒவ்வொண்ணையும் அவர் சொல்றச்சே இதையெல்லாம் இவர் எங்கே தெரிஞ்சிண்டார்ன்னு கேக்கக் கேக்க ஆச்சரியமா இருக்கும். பெயிண்ட் கம்பனி ஒண்ணுலே அக்கவுண்ட்ஸ் செக்ஷன்லே இருந்து ரிடையர் ஆனவர்.  பெயிண்ட் கம்பெனிக்கும் பிரபஞ்ச ஞானத்துக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு  இவர்கிட்டே பேசிண்டிருக்கறச்சே எனக்குத்  தோணும். அற்புதமான மனுஷர். போய்ப் பார். பார்த்துட்டு அவரைப் பத்தி எனக்குச் சொல்லு.." என்றார்.

"எதுக்கு நா அவரைப்  பாக்கணும்ன்னு இன்னும் நீங்க சொல்லலையே?" என்று நினைவு படுத்தினான் மோகன்.

"பாத்தையா? எதை முக்கியமாச் சொல்லணமோ அதைச் சொல்லாம இருந்திருக்கேன், பார்! நல்ல வேளை, ஞாபகப்படுத்தினே!" என்றார் அனந்தசயனம். "நீ இந்த 'இனி' கதைலே எழுதியிருக்கேல்யோ? அந்த பாண்டியனுக்கு கோயில்லே ஏற்பட்ட அனுபவத்தைப்  பத்தி.. அந்த மாதிரி அனுபவங்களைப் பத்தி எங்கிட்டே இந்த புரந்தரதாசர் நிறையச் சொல்லியிருக்கார்.  இதெல்லாம் ரொம்ப சாதாரணம். அவர் OBE பத்திச் சொன்னப்போத்தான் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியமா இருந்தது.."

"OBE-ன்னா?"

"Out of Body experience.  உடம்பை விட்டு வெளியே சஞ்சாரம் செஞ்சிட்டு மறுபடியும் நம்ப உடம்புக்கே வந்து சேர்ந்துடறது.  இந்த மாதிரி நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கார். அதுக்கெல்லாம் என்னன்னவோ காரணம்லாம் சொல்வார்ப்பா! எனக்கு சரியாச் சொல்லத் தெரிலே.. நீயே அவரை நேர்லே பாத்துடேன்.  ஒரு தடவை அவரை பாத்துட்டையா, விடமாட்டே! அவரோட பேசறது, அவர் சொல்றதையெல்லாம் கேக்கறது உங்கதைக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.. அதுக்குத் தான் சொல்றேன்.." என்றார்.

"அப்படியா சார்?" என்று மலர்ந்தான் மோகன். "நிச்சயம் செய்யறேன்,சார்!"  என்று டைரி எடுத்து புரந்தரதாஸர் என்கிற பெயரை எழுதி முகவரியைக் குறித்துக் கொண்டான்.

"அப்ப நான் வரட்டுமா.." என்று விடை பெற்றுக் கொண்டார் அனந்தசயனம்.

அப்பொழுது தான் அவரைப்  பார்க்கிற மாதிரி, "என்ன ஓய்! எப்படி இருக்கீர்?" என்றார் ஜீ.

"மோகன் சார்கிட்டே வேலை முடிஞ்சாச்சு.. அடுதாப்லே உங்க கிட்டத் தான் வரலாம்ன்னு இருந்தேன்" என்று நாற்காலியிலிருந்து  எழுந்தவாறே சொன்னார் அனந்தசயனம்.

"அப்பவே உம்மைப்  பாத்திட்டேன்.  மோகன்கிட்டே பேசி முடியட்டும்ன்னு  இருந்தேன்" என்றார் ஜீ. "ஒண்ணுமில்லே.. டெஸ்பாட்சிலே லெட்டர்லாம் வாங்கிகிட்டீங்களான்னு கேக்கத்தான்.  'ஹலோ,தோழி'க்கு நெறைய லெட்டர்ல்லாம் வந்திருக்கு, பாருங்கோ.. இன்னும் இரண்டு மாசத்துக்கு உம்ம பாடு கொட்டாட்டம் தான்.. உம்ம பக்கத்துக்கு நிறைய வாசக ரசிகர்கள், ஓய்!" என்றார்.

"அதை அப்படியே ஆசிரியர் காதுலேயும் போட்டு வைக்கறது தானே..." என்றார் அனந்தசயனம், ஜீயின் பக்கத்தில் போய்.

"வேடிக்கை என்ன தெரியுமா? ஆசிரியர் தான் இதையே எங்கிட்டே சொன்னார்.  அதைத்தான் நான் உம்ம கிட்டே சொன்னேன்.." என்று சொல்லி புன்னகைத்தார் ஜீ.

"அதானே பார்த்தேன்" என்றார் அனந்தசயனம்.

"நம்ம பத்திரிகைலே எந்தந்த பகுதியை எத்தனை பேர் ரசிச்சுப் படிக்கறா, அதெல்லாம் பத்தி என்ன நினைக்கறான்னு-- அப்படி அவா நினைக்கறதுக்கு ஏத்த மாதிரி என்னன்ன புதுப்புதுப் பகுதிகளை புதுசா புகுத்தலாம்ன்னு அனலைஸ் பண்ணி  பெரிசு பெரிசா கிராஃப்பே போட்டு வைச்சிருக்கார், ஆசிரியர்.  கூப்பிட்டுக் காட்டினார்.  இந்த நாலஞ்சு மாசத்லே உம்ம பகுதி ஜிவ்வுனு எகிறியிருக்கு, ஓய்!"

"ரொம்ப சந்தோஷம், நல்ல சேதி சொன்னதுக்கு.. சொல்லப்போனா, இதான் எழுதறவனுக்கு உற்சாக டானிக், இல்லியா?.. இந்த ஜோர்லேயே போனதும் உக்காந்து எழுதணும்.. வரட்டுமா.." என்றார் அனந்தசயனம்.

"பேஷாய்.." என்று தானும் எழுந்திருந்து  கைகூப்பினார் ஜீ.


மாலை தி.நகர் வழக்கம் போலவான நெரிசலில்  இருந்தது.  தனலெஷ்மி தெரு சுலபத்தில் பார்வையில் சிக்கியது, முடிக்க வேண்டிய ஒரு வேலையின் தொடக்க சந்தோஷமாய் மோகனுக்கு இருந்தது.

தெருக்குள் நுழைந்ததும் ஒரு குடியிருப்பு பகுதிக்கு வந்த உணர்வு சற்று முன்னான நகர் சந்தடிக்கு வித்தியாசமாக இருந்தது.  தெருவின்  வலது பக்கம் மாறி பார்த்துக் கொண்டே வந்த பொழுது  புரந்ததாசரின் பெயர்ப் பலகை பதித்த வீடு கண்ணில் பட்டது.

வாசல் இரும்பு கேட் பட்டை இரும்புக் கொக்கி போட்டு மூடியிருந்தது. அதைத் தாண்டி உள்பக்கம் காய்ந்த புல்வெளி. புல்வெளியில் ஒரு வேப்பமரம் கிளைபரப்பி அந்தப் பிரதேசத்தையே உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது.  புல்வெளியின் நீளம் இருபதடி இருக்கும்.  அதைத் தாண்டியிருந்த வீட்டின் முன்புறம் சிமிண்ட் படிகட்டுகள். வீட்டின் முன்னால் தென்பட்ட திண்ணை போன்ற பகுதி மரச்சட்டங்களால் அடைக்கப் பட்டிருந்தது.

உள்ளே நாய் ஏதும் இருக்காது என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு, மோகன் வாசல் கேட் கொக்கியில் கை வைத்தான்.  கொக்கியை நீக்கிய பொழுது லேசாக கேட்ட சப்தம் உள்வீடு வரைக் கேட்டு விட்டது போலும்.

"யாரது?.." என்று ஒரு பெண்ணின் குரல் கேட்ட வினாடி நேரத்தில் அவளே வாசல் திண்ணையில் பிரசன்னமானாள்.  வாளிப்பான தேகம். மாநிறம் என்றாலும் அம்சமான முகம். தலையில் சீப்பு தொத்திக் கொண்டிருந்தது. தலைவாரிக் கொண்டிருந்தவள், வாசல் சப்தம் கேட்டு வந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான் மோகன்.

"உங்களுக்கு யாரைப்  பாக்கணும்?" என்று கேள்விக்குறியாய் முகம் மாறி அந்தப் பெண் கேட்டதும், மோகன் கேட் தூணில் பதித்திருந்த பெயர் பலகையைக் காட்டினான். "அவரைப் பார்க்க வேண்டும்.." என்று கொஞ்சம் உரக்கச் சொன்னான்.

"இருக்கார்.. உள்ளே வாங்க.." என்று சொல்லி விட்டு அந்தப் பெண் உள்பக்கம் போய் விட்டாள்.  "அப்பா! உன்னை யாரோ பாக்க வந்திருக்கா, பாரு!" என்று ஒலி அஞ்சல் செய்தது போல உள்ளிருந்து அந்தப்  பெண்ணின் குரல் வெளிக்கதவு தாண்டி வாசல் திண்ணை வரை வந்து விட்ட மோகனுக்குக் கேட்டது.

அவனே எதிர்பார்க்கவில்லை. மீண்டும் வெளிப்பக்கம் அந்தப்பெண் வந்த பொழுது 'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து' என்று தொடங்கும் பாரதிதாசனாரின் நிலவுப் பாட்டு மோகனின் நினைவுக்கு வந்தது.

"அப்பா இப்போ வந்திடுவா.. உள்பக்கம் வந்து இப்படி உட்கார்ந்திருங்கோ.." என்று அந்தத் திண்ணையோடு ஒட்டியிருந்த உள்பக்க ஹால் காட்டினாள்.

இரண்டு மூன்று பிரம்பு சோபாக்கள் அங்கிருந்தன.  பார்க்க வருகின்ற வெளி ஆட்களோடு உட்கார்ந்து பேசவான வரவேற்பு ஹால் போலிருந்தது.

அடக்கமாக உள்பக்கம் வந்து ஒரு சோபாவில் உட்கார்ந்தான் மோகன்.  அவன் உட்காருவதற்குத்தான் காத்திருந்த மாதிரி, அவன் உட்கார்ந்ததும் தலைக்கு மேலான மின்விசிறி சுழன்றது.  அந்தப் பெண் தான் ஸ்விட்சை இயக்கியிருப் பாள் என்கிற உள்ளுணர்வில் அவள் இங்கே தான் இருக்கிறாளோ என்கிற ஆவலில் பின்பக்கம் தலை திருப்பிப் பார்த்தான் மோகன்.

அவன் அப்படிப் பார்த்த நொடியில் விடுவிடுவென்று உள்பக்கம் செல்கிற அந்தப் பெண்ணின் பின்பக்கம் தான் அவனுக்குத் தெரிந்தது..

மாலையிலிருந்து நடக்கும் காரியங்களின் போக்கு மோகன் மனசுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இன்று தான்  ஆரம்பம்.  இந்த ஆரம்பம் இனிமேல் இந்த வீட்டிற்கு நிறைய தடவைகள் வந்து போவதான தொடர்ச்சிகளைக் கொண்டிருக்கும் போல ஒரு எண்ணம் அந்த ஷணம் அவன் நினைவில் படிந்தது.  மீண்டும் அதையே நினைத்துப் பார்க்க சுகமாகவும் இருந்தது.

அந்த சமயத்தில் ஹாலிருந்து  பார்த்தாலே தெரியும் படியாக அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு பின்பக்கமாயிருந்த மாடிப்படிகளில் யாரோ இறங்கி வருகிற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.


(இனி..  இன்னும் வரும்) 
Related Posts with Thumbnails