Tuesday, October 8, 2013

இனி (பகுதி-14)

"இல்லை, பெண்ணே" என்று பக்கத்துத் தூண் இருட்டுப் பகுதியிலிருந்து குரல் வந்ததும் திடுக்கிட்ட மங்கையும் பாண்டியனும்  குரல் வந்த திசையில் பார்த்தனர்.

மசமசத்த இருட்டில் யாரோ அசைவது போலிருந்தது.  துணுக்குற்ற மங்கை நகர்ந்து பாண்டியனுக்கு ஒட்டியவாறு தன்னை நெருக்கிக்  கொண்டாள்.

"யாருங்க, அது?" என்று பாண்டியன் குரல் கொடுத்தான்.

"இருங்க, தம்பி.  நானே வெளிச்சத்துக்கு வர்றேன்.." என்று பதில் கொடுத்தபடி ஒரு பெரியவர் ஒருபக்கம் சாய்ந்து நடந்தவாறே மண்டபத்தின் வெளிச்சப் பகுதிக்கு வந்தார்.

"அட! நம்ம கோயில் பண்டாரம் ஐயா, மங்கை!" என்று சொல்லி புன்னகைத்தான் பாண்டியன். "அங்கண ஏன் நிக்குறீங்க.. இப்படி பக்கத்லே வந்து உட்காருங்க, ஐயா.." என்று அவர் உட்காருவதற்கு வசதி ஏற்படுத்துவது போல பாண்டியன் நகர்ந்து உட்கார்ந்து கொண்டான்.

மங்கை நிறைய  தடவை இந்த  பண்டாரத்தைக் கோயிலில் பார்த்திருக்கிறாள். கோயில்  நந்தவனத்திலிருந்து பூக்குடலில் மலர்கள் பறித்து வந்து பிராகார நிழலில் உட்கார்ந்து இறைவனுக்கு சூட்டுவதற்காக மாலையாகத் தொடுத்துக் கட்டிக் கொண்டிருப்பார்.  நல்ல  கணீர் குரல் இவருக்கு. ஒவ்வொரு வேளை பூஜையின்  போதும் இவர் தேவாரம் ஓதும் போது சிவசபையில் நின்றிருக்கும் சிலிர்ப்பு ஏற்படும்.

"தம்பி, உம்பேரு பாண்டியன்  தானே?" என்று  கேட்டார் பண்டாரம்.

பாண்டியனுக்கு வியப்பு. "ஐயா, எம்பேரு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கே!" என்றான்.

"காளியண்ணன் கடைலே அடிக்கடிப்  பார்த்திருக்கேன்.." என்றார் பண்டாரம். அவர்  சொன்னதும் தான் இவனும் இவரை காளியண்ணன்  கடையில் நிறைய தடவைகள் பார்த்திருக்கும் நினைவு வந்தது.

"அப்படீங்களா?" என்று அவர் சொல்வதை அங்கீகரிக்கற மாதிரி சொன்னான் பாண்டியன்.  "திடீர்ன்னு இருட்டுப் பக்கமிருந்து குரல் வந்ததும் திகைத்துப் போனோம். என் மனைவி இவ.  மங்கைன்னு பேரு. 'பிரமையா இருக்குமோன்னு இவ கேட்டதுக்குத் தானே, 'இல்லை, பெண்ணே'ன்னு சொன்னீங்க?.."

"ஆமா.."

"அப்படித் தீர்மானமா சொன்னதுக்குக் காரணம் ஏதானும் இருக்கணுமில்லியா? அதைத் தெரிஞ்சிக்கறதுக்காகக் கேக்கறேன்.. சொல்ல முடியுமா, ஐயா?"

"தம்பி! உனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கினு சொன்னியே! அது  பிரமை இல்லைன்னு ஒனக்குத்  தெரியலையா?" என்று அவனிடம் திருப்பிக் கேட்டார் பண்டாரம்.

"தெரியலையே, ஐயா!" என்றான்  பாண்டியன், ஆற்றாமையுடன்.

"பாண்டியன்! எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கு.." என்று மெதுவாக பண்டாரம் சொன்ன போது மங்கைக்கு ஆச்சரியமாக இருந்தது.  தன் கணவன் கண்டது பிரமையாக இருக்காது என்கிற நம்பிக்கை அப்பொழுதே அவளுக்கு ஏற்பட்ட மாதிரி இருந்தது.

 பண்டாரம் உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்: "மத்த யாருக்கேனும் இந்த மாதிரியான ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்குமோ என்கிற சிந்தனை கூட இல்லாம இத்தனை நாள் இருந்திருக்கிறேன், பார்!  பாண்டியன்! ஒருவகையில் பார்த்தால், இது ஒரு மாதிரியான  இறுமாப்பு. இறைவன் எனக்கு மட்டும் நெருக்கமா இருக்கற மாதிரி  நினைக்கற ஒரு பொது  புத்தி இது.  அப்படி சின்னத்தனமா நான் நினைச்சதுக்குத் தான், மடையா, கேட்டுக்கோன்னு நீ இந்த மண்டபத்திலே உக்காந்து பேசினதையெல்லாம் என்னையும் கேக்க வைச்சிருக்கான்.. ஈஸ்வரா! என்னே உன்  கருணை!" என்று ஆகாயம் பார்த்து கும்பிட்டார் பண்டாரம்.  "பாண்டியன்! நீ சொன்னதைக் கேட்டதும், எனக்கு ஆச்சரியம் தாங்கலே. இதோ, நம்ம மாதிரி இன்னொரு ஆளும் இருக்காப்பலேன்னு இன்னிக்குத் தீர்மானம் ஆச்சு.."என்று பண்டாரம் சொன்ன போது பாண்டியன் மகிழ்ச்சியில் திளைத்தான்.  பண்டாரம் சொன்னதற்கு பதில் கூட சொல்ல நாவெழும்பாமல் அவரையே பார்த்துக்  கொண்டிருந்தான்.

"தம்பீ! மனசுக்குள்ளேயே இத்தனை நாள் இந்த சந்தோஷத்தைப் பொத்திப் பொத்தி வைச்சிருந்தேன்.  இது நாள் வரை இந்த சந்தோஷத்தை யாரு கிட்டேயும் பகிர்ந்திண்டதில்லை.  பகிர்ந்திக்கறத்துக்கும் மனசு ஒப்பாம இருந்தது.  இப்போத்தான் நீ சொன்னதையெல்லாம்  கேட்டதும் பூட்டி வைச்சிருந்த என் சந்தோஷத்துக்கு விடுதலை  கிடைச்ச மாதிரி இருக்கு" என்று சொல்லியபடியே அவர் அவனைப் பார்த்த பொழுது அவர் இமையோரங்கள்  நனைந்திருந்தன.. மிகவும் உணர்ச்சி வயப்பட்டவராய் அவர் தெரிந்தார். பாண்டியனுக்கு அவரைப் பார்க்க பாவமாய் இருந்தது.  அவர் வலது கையை உரிமையுடன் பற்றி இறுக்கிக் கொண்டான்.

"எனக்கு இப்போ எப்படி இருக்கு, தெரியுமா?" என்றார் பண்டாரம். "எப்படியோ தீவு ஒண்ணுலே தனியா மாட்டிகிட்ட ஒருத்தன், பல நாள் கழிச்சு அந்த தீவிலேயே இன்னொரு மனுஷனை, அதுவும் தான் பேசினா புரிஞ்சிக்கக் கூடிய தன் மொழி தெரிஞ்ச இன்னொருத்தனைப் பாத்த மாதிரி இருக்கு.." என்றவுடன் மங்கைக்கு அவர் சொன்ன உதாரணம் அவர் உள்ளத்தை விண்டு சொன்ன மாதிரி இருந்தது.

"அதனாலே தான் சொல்றேன், இது பிரமை இல்லேன்னு.." என்று எதையோ மனசில் நிறுத்தியவாறு சொன்னார் பண்டாரம்.  "இது நாள் வரை இது பிரமைன்னு நான் நினைச்சிருந்தாலும் அதுக்கு நியாயம் இருக்கு. என்னிக்கு என்னைப் போலவே இன்னொருத்தருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கோ, அப்ப என்ன?.. அப்ப இது தனி ஒரு மனுஷனுக்கு ஏற்பட்ட பிரமை இல்லே, தானே?..என்ன சொல்றே, பாண்டியன்?" என்றார்.

"எனக்கு எதுவும் சொல்லத் தெரிலே, பண்டாரம்,ஐயா.." என்று பணிவுடன் சொன்னான் பாண்டியன்.

'ஏன்?' என்று கேட்கிற மாதிரி அவனை உறுத்துப் பார்த்தார் பண்டாரம்.

"நாள் பூரா சிவபெருமானுக்கு சேவை செய்வதற்காகவே பிறப்பெடுத்த மாதிரி வாழறவர் நீங்க.. இந்த நந்தவனம் பூத்துக் குலுங்கறதுன்ன்னா அதைப் பெத்த குழந்தை மாதிரி நீங்கப் பாத்துக்கறதாலே. பூப்பறிக்கறது, அதை மாலை மாலையாத்  தொடுக்கறது, இறைவன் சந்நிதானத்லே மனம் உருகப் பாடறதுன்னு சதாசர்வ காலமும் இந்தக் கோயிலோடையே ஒன்றிப்  போனவங்க, நீங்க! நான் அப்படியில்லே. கோயிலுக்கு வந்தாத்தான் சாமி  நெனைப்பு.  மத்த நேரத்திலேயும் இந்த நெனைப்பு வந்திடாமே மறைச்சிக்கறத்துக்கு என்னன்னவோ வேறே வேறே நெனைப்புங்க!.. அதனாலே இதுனாலே இதுன்னு எதையும் தீர்மானமாச் சொல்ல முடிலே, ஐயா!" என்றான்.

"நீ சொல்றது கூடச் சரிதான்.." என்றார் பண்டாரம். "என்னை எடுத்துக்கோ. இந்தக் கோயில்லேயே நா கிடக்கறதினாலே, எந்நேரமும் கோயில் நினைப்பாவே போயிடுச்சி, எனக்கு. அடுத்தாப்பலே அடுத்தாப்பலேன்னு தினமும் மாத்தி மாத்தி கோயில் சம்பந்தப்பட்ட வேலைகளே என்னைச் சூழ்ந்து இருக்கறதாலே கோயில் தவிர வேறே எதுவும் தெரியாமயும் போயிடுச்சி.  கோயில் தொடர்பான வாழ்க்கையே நிகழ்கிற உண்மையாய் எனக்கு ஆகிப்போனதினாலே, பிரமைன்னு எதையும் நினைக்க முடியாமையும் போச்சு, இல்லியா?" என்று ஏதோ யோசிப்பில் பண்டாரம் தவித்தார்.

தவழ்ந்து வருகிற மாதிரி ஜில்லென்று காற்று இடுப்புக்கு மேல் தடவி விட்டுப் போயிற்று. பாண்டியன் மங்கை பக்கம் திரும்பிப் பார்த்தான்.  அவள் விரலால் கோலக்கோடுகள் இழுக்கிற மாதிரி தரையில் கோடியிழுப்பதான பாவனையில் பாண்டாரம் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே; மென்காற்றில் விளைசுகமே, சுகத்திலுறும் பயனே' என்று வள்ளலார் எவ்வளவு எளிமையா கடவுளைப் புரிஞ்சிகிட்டிருக்கார்?.. அவர் புரிஞ்சிகிட்டதைத் தெரிஞ்சிக்கறதுக்கு இந்த நாப்பது வருஷம் ஆச்சு... ம்.. பொழுது போய்க்கிட்டிருக்கு.. நீங்கள் கிளம்பலையா?" என்று கேட்டார்.

"பக்கத்லே தான் வீடு.  நீங்களும் வாங்களேன்.  சாப்பிட்டு விட்டு திண்ணையில் அமர்ந்து விட்டதிலிருந்து பேசிக் கொண்டிருக்கலாம்.." என்று அவருடன் பேசி தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டான் பாண்டியன்.

வீட்டிற்குப் போய்த் தான் சமைக்க வேண்டும் என்று சட்டென்று நினைவுக்கு வந்தாலும், 'எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அரைமணிப் பொழுதில் அற்புதமாக சுடச்சுட சமைத்து உணவிடலாம்' என்று பெண்களுக்கே உரித்தான சமையல் ஞானம் மங்கையின் மனசில் படிந்தது.

"நான் பகலில் ஒருவேளை தான் சாப்பிடுவது.  இரவுப் பொழுதானால் இப்படியே இருந்து விடுவேன்.." என்றார் பண்டாரம்.

"பழம், பாலாவது சாப்பிடலாம், வாங்க.." என்றான்  பாண்டியன்.

"இல்லை..  பழக்கமில்லை.. இருபது வருஷமாக இப்படியே இருந்து பழக்கமாகி விட்டது.." என்றவர், அந்த சமயத்தில் இதமாக அவர்களைத் தொட்டுச் சென்ற காற்றின் சுகத்தை சுகித்தவராய், "நீங்கள் கிளம்புங்கள்.  வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவேனோ?.." என்று மலர்ந்து  சிரித்தார்.

அவர் சொன்னது வேடிக்கையாக சொன்ன வார்த்தைகள் போலல்லாமல் மிகுந்த அர்த்தத்துடன் நிஜமாகவே உணர்ந்து அவர் சொல்கிற மாதிரி பாண்டியனுக்குத் தோன்றியது.

"சரிங்க, ஐயா.. நாங்க  வர்றோம்.." என்று பாண்டியன் அவரைக் கும்பிட்டான்.

கோயில் கோபுரம் கடந்து வெளியே வருகிற பொழுது, "வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ" என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன. அந்த வரியில் நிறைய அர்த்தம் பொதிந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அடுத்த தடவை பண்டாரம்  ஐயாவைப் பார்க்கும் பொழுது   'காற்றே உணவாகுமா?' என்று அவரைக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

காளியண்ணன்  கடைக்கு அருகில் வந்த பொழுது,  "வாழைப்பழம் வாங்கிங்க.. ப்ரிட்ஜ்லே பால் இருக்கு.. அது போதுமில்லியா?" என்றாள் மங்கை.

பழம் வாங்கிக்கொண்டான் பாண்டியன். "என்ன கோயில்லே இம்மாம் நேரம்?" என்று விசாரிக்கிற மாதிரி கேட்டு, "காத்தாட உக்காங்திட்டு வந்தீங்களா?" என்று கேட்டான் காளியண்ணன்.    இவனும் காற்று பற்றியே பேசுவது பாண்டியனின் எண்ணத்தில் பதிந்தது.

செருப்புகளை மாட்டிக்கொள்வதற்காக கடையின் தட்டி மறைப்பு பக்கம் சென்றாள் மங்கை.

"ஆமாம், காளி!  இங்கே விட கோபுரம் தாண்டி அங்கே உள்ளார பிரமாதமான காற்று. சும்மா ஜிலுஜிலுன்னு.."

"பாண்டியன் அப்புறம் சொல்லலேன்னு சொல்லாதே... வர்ற ஞாயிற்றுக்  கிழமை கவியரங்கம்.  நேரம் இடம் எல்லாம் வழக்கம் போலத்தான். தவறாம வந்திடு.." என்றான் காளியண்ணன். "இந்த மாத கவியரங்கக் கவிதைத் தலைப்பு  என்ன தெரியுமா?.."

"என்ன தலைப்பு?.." என்று ஆவலுடன் கேட்டான் பாண்டியன்.

"'காற்று'.  அதான் தலைப்பு.  மொத்தம் பன்னிரண்டு பேர் கவிதை வாசிக்கறாங்க.. அரங்க.சாமிநாதன் ஐயா தான் கவியரங்கத் தலைமை. அதனாலே கூட்டத்துக்குக் கொறைச்சல் இருக்காது." என்றான்.

"'காற்று!' என்று தனக்குள் ஒருமுறை சொல்லிக் கொண்டான் பாண்டியன். "'வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ' என்று ஒரு வரி காளி! அழகா இருக்கு, இல்லே.. ஒருத்தர் சொல்லி மனசிலே பதிஞ்சு போயிடுச்சி, காளி!" என்றான்.

"என்ன, என்ன.. இன்னொரு தடவை அந்த வரியைச் சொல்லு.." என்று பரபரத்தான் காளியண்ணன்.

புன்சிரிப்புடன், "வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ?" என்று நின்று நிதானித்து மறுபடியும்  சொன்னான் பாண்டியன்.

"அருமை, பாண்டியன்.."என்று குதூகலித்துப் போனான் காளியண்ணன்."நானும் கவியரங்கத்லே கவிதை வாசிக்கறேன்.  தலைப்பை இப்பத் தான்  சொன்னாங்களா?  அதனாலே அதுபத்தியே யோசனையாயிருந்தது.'வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ?' செம வரிப்பா..இதையே  ஆரம்ப  வரியா வைச்சு இன்னிக்கு ராத்திரிக்குள்ளாற கவிதையை எழுதிடறேன்.. ரொம்ப தேங்க்ஸ்ப்பா.."

"எதுக்கு?.."

"கவிதைக்கு  ஆரம்ப வரி சொன்னதுக்கு.."

"இந்த வரிக்கு சொந்தக்காரர் வேறொருத்தர், காளி!.. நியாயப்படி நன்றின்னா அவருக்குத் தான் சொல்லணும்.  நானே இதுக்குள்ளாற நிறைய தடவை மனசுக்குள்ளேயே அவருக்கு நன்றி சொல்லிட்டேன்.." என்றான்.

"அப்படியா சமாச்சாரம்?.. யாருப்பா அவுரு?"

"நம்ம கோயில் பண்டாரம் ஐயா காளி!"

"ஓ! பண்டாரம் ஐயாவா?" என்று மரியாதை பொங்க சொன்னான்  காளி. "மதிய நேரம் ஐயா கடைக்கு வருவாரு.. எவ்வளவு விஷயம் சொல்றாருங்கறே! பலது புரியமாட்டேங்குது.. நிறையப் படிக்கணும், பாண்டியன்..  இருகறதை வைச்சிகிட்டு ஒப்பேத்தலாம்ன்னா ஒண்ணும் வேலைக்கு ஆகாது.. என்ன சொல்றே?"

"படிச்சு புது விஷயங்கள்லாம் தெரிஞ்சிக்கறதைக் கூட  வேணாம்ன்னு யாராவது  சொல்லுவாங்களா?..  சரி, நா வரட்டுமா.." என்று கடைக்கு வெளியே போட்டிருந்த ஸ்டூல் ஒன்றில் உட்கார்ந்திருந்த மங்கையைப் பார்த்து, "போலாம், மங்கை.." என்றான்.

இலக்கிய விஷயம் பேசினால் மங்கை சலித்துக் கொள்ள மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும்.  அதனால் நடந்து கொண்டே கவியரங்க சேதிகளை அவளிடம் சொன்னாள்.

"வர்ற ஞாயிற்றுக்கிழமை மாலை தானே?.. நானும் வர்றேன்.." என்று அவள் சொன்ன போது பாண்டியனும் அவசியம் அந்த கவியரங்கத்திற்கு போகவேண்டும் என்று தீர்மானம் கொண்டான்.

பாயை விரித்துப் படுக்கும் பொழுது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. வழக்கமாக படுத்ததும் அதற்குத்தான் காத்திருக்கிற மாதிரி உடனே தூக்கம் வந்து விடும் அவனுக்கு.  ஆனால் இன்று என்னன்னவோ நினைப்புகள் அவன்  மனசில் அலை மோதிக் கொண்டிருந்தது.. ஆனால் அத்தனைக்கும் நடுவே, 'வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ' என்கிற வரி மட்டும் படுதாவில் ஜிகினா எழுத்துக்களில் பளபளக்கிற மாதிரி அவன் நினைவுத் திரையில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது..

திடுக்கென்று 'பேசுகின்ற பொற்சிலையே' என்கிறதாய் அடுத்த வரி மனசில் உருவான பொழுது, ஒரு உத்வேகத்தில் பாண்டியன் படுக்கையிலிருந்து எழுந்து விட்டான்.  பக்கத்தில் பார்த்த பொழுது லேசான புன்முறுவலுடன் மங்கை நித்திரையில் இருந்தாள்.  மிக மெதுவாக எழுந்திருந்து தன் அறைக்குப் போய்  டேபிள் லைட்டை உயிர்ப்பித்து,  'பேசுகின்ற பொற்சிலையே' என்று பேப்பரில் எழுதி அடித்தான். அதற்கு மாற்றாக தோன்றிய வரியின் தொடர்ச்சியாக விடுவிடுவென்று நாலைந்து வரிகள் எழுதிவிட்டான். ஒரு கொட்டாவிக்குப் பின் தூக்கம் கண்ணை அழுத்துகிற மாதிரி இருந்தது. காலையில் பாக்கி கவிதையைப் பார்த்துக் கொள்ளலாம் என்று படுக்கைக்கு வந்தான்.

அவனை லேசில் விடமாட்டேன் என்று 'வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும்
வேண்டுவாரோ' என் கிற வரியும் அவன் நினைவோடையே கூட வந்து அவனுடன் சேர்ந்து படுத்துக் கொண்ட மாதிரி இருந்தது. வேறெதுவும் வேண்டாமென்றால், காற்றே தான் உணவா? அதுவே தான்  உயிரோ, இல்லை அதுவே தான் கடவுளோ என்று நிறைய கேள்விகள் ஒவ்வொன்றாக எழுந்து நின்று நினைவில் ஆர்ப்பரித்தன.

லேசான நனவுலக நினைவிழப்பில் காற்றே தான் உயிரா என்று பண்டாரம் ஐயாவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஆழ்ந்த தூக்கத்திலும் காற்று பற்றிய கலர்க் கலர் கனவுகள் பாண்டியனை விட வில்லை.  அவன் கனவினூடே காற்றின் வீச்சின் பிம்பமாக அருள் தவழும் ஆடலரசனின் நாட்டிய தரிசனம் கண்கொள்ளா காட்சியாய் விரிந்தது.

'பொதுவில் ஆடுகின்ற அரசே, என் அலங்கல் அணிந்தருளே' என்று யாரோ தனக்கு நெருக்கத்தில் வந்து சொல்கிற உணர்வில் பாண்டியன் சிலிர்த்தான்.


 
(இனி...  இன்னும் வரும்)
Related Posts with Thumbnails