மின் நூல்

Saturday, January 30, 2016

'ஜன்னல்' பத்திரிகை

மிழில் நமக்கு வெகுவாகப் பழக்கமான பழைய பத்திரிகைகளின் எழுத்துப் பொலிவு மங்க, புதுசாக சந்தைக்கு வந்திருக்கும் தமிழ்ப் பத்திரிகைகள் புதுப்பொலிவு பெறும் காலம் இது.  அந்த வரிசையில் 'ஜன்னல்' ஒரு வரமாய் 'சமூகத்தின்  சாரளம்' என்று  தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வெளிவருகிறது.

விற்பனைக்காக பெரும் பத்திரிகைகளின் சாயலிலும், பெரும் பத்திரிகைகள் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கிற முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தும் பாங்கிலும் இந்தப் புதுப்பத்திரிகைகளின் வரவு இன்றைய தமிழ் பத்திரிகைகள் சூழலில் பாலைவனச் சோலையாய் மனசுக்கு  இதம் அளிக்கின்றன..

இதில் ஆக்கபூர்வமான விஷயம் என்னவென்றால் பழம் பெரும் பத்திரிகைகள் மறந்தே போய்விட்ட அல்லது ஒரு பக்கம்-அரைப்பக்கம் என்று அழித்தே விட்ட சிறுகதை பிரசுர முயற்சிகளில் இந்தப் புதுப்பத்திரிகைகள் மிகுந்த கவனம் கொள்கின்றன.  இது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய  ஒன்று. மிதமான சினிமா, அரசியல் செய்திகள்... பெரும் பத்திரிகைகளின் சலித்துப் போன உள்ளடக்கங்களுக்கு மாற்றாக இவை அமைவதால் இதன் வெற்றியான வாசகர் ஆதரவு பெரும் பத்திரிகைகளையும் கவர்ந்து  இந்தப் பக்கம் திரும்பச் செய்யும். ஆக தமிழ் பத்திரிகை உலகில் ஒரு சுழற்சி ஏற்பட்டு மீண்டும் பெரும் பத்திரிகைகள் உருப்படியான உள்ளடகங்களுக்கு மாறுவதற்கு சாத்தியக்கூறுகள் தெரிகின்றன.  இதுவே 'ஜன்னல்' போன்ற புதுப்  பத்திரிகைகளின் வெற்றியாகவும் தமிழ் பத்திரிகை உலகை பெருமைபடுத்தும் கைங்கரியமாகவும் எதிர்காலத்தில் கவனம் கொள்ளப்படும்,

நான்  பார்த்த ஜன்னல் இதழில் 'இயல்பான தவறு' என்ற எஸ்.ரா.வின் சிறுகதை காணக்கிடைத்தது.. தலைப்பிற்கேற்பவான வெகு இயல்பான கதை. அரசாங்க இயந்திரத்தின் உதிரி பாகம் போன்ற இலாகாவொன்றில் வேலை செய்யும் அப்பாவி ராமசுப்புவிற்கு '12-ம் தேதி காலை பத்து  மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வந்து ஆஜராக வேண்டும்' என்று சென்னை தலைமையகத்திலிருந்து கடிதம் ஒன்று வருகிறது.  கடிதத்தைப்  பிரித்துப் படித்த நிமிடத்திலிருந்து  ராமசுப்புவின்  நிம்மதி தொலைகிறது.  அவன்
மனைவியின் நிம்மதியும் கூடத் தொலைகிறது.  சென்னை செல்லவும் அங்கே எதிர்ப்பார்க்கிற பிற செலவுகளுக்காகவும் அவளின் கழுத்துச் செயின் அடமானம் வைக்கப்படுகிறது.  எல்லா துன்பங்களுக்கும் காரணமான காரணத்தை வெகு சாதாரணமாக இதெல்லாம் இயல்பு தான் என்று தலைமை அலுவலகத்தில் வியாக்கியானம் செய்யப்படும் பொழுது ராமசுப்புவுடன் சேர்ந்து  நாமும்  கொதித்துப்  போகிறோம்.  எஸ்.ரா.வின் இயல்பான  நடையில் கதையும் நம் கவனத்தைக் கவர்கிறது. 'இதெல்லாம் இயல்பு தான்  சார்!' என்று பல சமயங்களில் நாமும் பிறரால் சமாதானப் படுத்தப்பட்டிருப்போம். அப்படியான நிகழ்வுகள் எல்லாம் கதையை வாசித்து முடித்ததும்  நம் நினைவில் படிந்து ராமசுப்புவும் நாமும் மனசளவில் ஒன்றாய்க்  கலப்பது தான் எஸ்.ரா.வின்  எழுத்துக்குக் கிடைத்த  வெற்றி.  கார்த்திக் புகழேந்தியின் வெட்டும் பெருமாள் இன்னொரு குறிப்பிட வேண்டிய சிறுகதை.

ஜெயமோகன் 'ஜன்னல்' பத்திரிகையில் 'தெய்வங்கள், தேவர்கள், பேய்கள்' என்று ஒரு தொடர் எழுதி வருகிறார்.   ஜன்னலின் பொங்கல் சிறப்பிதழில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆந்திரமுடையார் கோயில் பற்றியும் கிராமிய சிறு தெய்வமான  ஆந்திரமுடையாரின் வரலாறு பற்றியும் எழுதியிருப்பதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  பதினாறு பதினேழாம் நூற்றாண்டு தமிழகத்தின் அமைதியற்ற சூழலகளில் திக்கற்றவர்களுக்கு ஆதரவாக  செயல்பட்ட காவல் தெய்வங்களைப்  பற்றிய அவரது அலசல் எதிலும் தீர்க்கமாகப்  பார்க்கும் அவர் பார்வைக்கு சான்றாகத் திகழ்கிறது.

ராஜ்சிவாவின் 'அவர்கள்' தொடர் புதுசாக ஆரம்பித்த  ஒன்று. அறிவியல் பார்வையில் அட்டகாசமாக செல்கிறது இந்தத் தொடர்.  விண்வெளியில் நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்களில் ஒன்றான ஓஐஇ 8462852 பற்றி ராஜ்சிவா சொல்லும் தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன.  சுஜாதா 'கற்றதும் பெற்றதுமில்' செய்த  மாதிரி ஊறுகாயாய் அறிவியல் தகவல்களைத்
தொட்டுக்  கொள்ளாமல் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அர்ப்பணிப்பு உணர்வுடன் அதிலேயே ஆழ்ந்து விளக்குகிறார் ராஜ்சிவா.  இறந்த காலத்திற்கு பயணிப்பது பற்றிய சாத்திய கூறுகளை இவர் அலசும் விதமும், ஓஐஇ 8462852 கோளில் வசிக்கும் அதிபுத்திசாலியான ஏலியன்கள்  நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியை பிர்மாண்டமான கட்டமைப்பு ஒன்றின் மூலம் தடுத்து, மகத்தான சக்தியை உள்வாங்கிக்  கொள்ளும் அதிசயம் போன்ற வியத்தகு விஞ்ஞான தகவல்களை உள்ளடக்கி தன்  கட்டுரைக்கு சுவையூட்டுகிறார் ராஜ்சிவா.

காற்றையும் காசு கொடுத்து வாங்கும் காலம் வந்து விட்டதை நினைத்து மலைக்கிறோம்.  சீனாவின் பெய்ஜிங்கில் குடுவையில் அடைக்கப்பட்ட சுத்தமான காற்றை   வாங்கி சுவாசிக்கிறார்கள் என்று சில வாரங்களுக்கு முன் செய்திகள் பரபரத்தன.  .சென்னையிலேயே சுத்தமான காற்று பத்து லிட்டர் பாட்டிலிருந்து நமது வசதிக்கேற்ப கிடைக்கிறது என்று ஜன்னலின் கட்டுரை ஒன்றிலிருந்து தெரிய வந்தது.  செயற்கை  சுவாசம் தேவைப்படுவோர், கடுமையான உடல் நலக்குறைவால் அவதிப்படுவோர் மருத்துவர் அறிவுரையுடன் ஆக்ஸிஜன்  பாட்டில்களை பயன்படுத்தாலாமே தவிர மற்றவர்களுக்கு தேவையில்லை. இந்த மாதிரியான உபயோகம் நுரையீரலுக்குத்  தீங்கிழைக்கும்' என்று  மருத்துவதுறை சார்ந்த நிபுணரின் குறிப்பும் அறிவுரையாய் கட்டுரையில்  காணப்படுகிறது.

'மதன்டூன்' என்று மதனின் கார்ட்டூன், ம.செ.,இளைய பாரதி, க.ரோ-- போன்ற ஓவியர்களின் உயிரோவியங்கள் பத்திரிகைக்கு தனிக் களையூட்டுகின்றன. ,

புதிய பகுதிகள், மக்கள் நலம் சார்ந்த செய்திகள் என்று  ஜன்னலின் உள்ளாக பார்வையில் படுவது--  அளவுக்கு மீறிய சினிமாச் செய்திகள், அரசியல் என்று ஆகிப்போன தமிழ்ப்பத்திரிகைகளின் போக்குக்கு மாற்றாக இருக்கிறது..

'ஜன்னல்' மேலும் மேலும் சிறப்புகளை தனதாக்கிக் கொள்கிற வேகத்திலேயே மற்ற பிரபல பத்திரிகைகளையும் தன் பாதையில் இழுத்து  வசப்படுத்துகிற சாகசமாய் தமிழ்ப் பத்திரிகையுலகம் புதுப்பாதையில் பயணிக்க ஆசை கொண்டு வாழ்த்துகிறோம்.



படங்களைத் தந்தவர்களுக்கு நன்றி.

18 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழில் நமக்கு வெகுவாகப் பழக்கமான பழைய பத்திரிகைகளின் எழுத்துப் பொலிவு மங்க, புதுசாக சந்தைக்கு வந்திருக்கும் 'ஜன்னல்' ஒரு வரமாய் 'சமூகத்தின் சாரளம்' என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வெளிவருகிறது.//

இது மிகவும் இனிப்பான செய்தியாய் உள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விற்பனைக்காக பெரும் பத்திரிகைகளின் சாயலிலும், பெரும் பத்திரிகைகள் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கிற முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தும் பாங்கிலும் இந்தப் புதுப்பத்திரிகைகளின் வரவு இன்றைய தமிழ் பத்திரிகைகள் சூழலில் பாலைவனச் சோலையாய் மனசுக்கு இதம் அளிக்கின்றன..//

தாங்கள் இதனைத் தங்கள் பாணியில் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

>>>>>

ஸ்ரீராம். said...

இந்தப் புதுப் பத்திரிக்கையை வாங்கிப் பார்க்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. துக்ளக்கின் எஸ் ஜே இதயாவுக்கு இந்தப் பத்திரிகைப் படைப்பில் பங்கு உண்டு என்று நினைக்கிறேன். ஃபேஸ்புக்கில் நிறைய விளம்பரம் செய்திருந்தார். ராஜ் சிவா தான் எழுதிய புத்தகங்களின் கட்டுரையை மாற்றிச் சமைக்கிறாரோ! ஜெமோ படைப்புப் படிக்க எழும் ஆவல் எஸ்ராவின் படைப்பைப் படிக்க வருவதில்லை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதில் ஆக்கபூர்வமான விஷயம் என்னவென்றால் பழம் பெரும் பத்திரிகைகள் மறந்தே போய்விட்ட அல்லது ஒரு பக்கம்-அரைப்பக்கம் என்று அழித்தே விட்ட சிறுகதை பிரசுர முயற்சிகளில் இந்தப் புதுப்பத்திரிகைகள் மிகுந்த கவனம் கொள்கின்றன.//

காலம் சுழன்று பழையபடி மாற்றம் நடந்தால் நல்லதே.

இன்று பெரும்பாலும் சினிமாச்செய்திகளையும், அரசியலையுமே ஏராளமான பத்திரிகைகள் கவனத்தில் கொள்கின்றன. அவற்றிற்கே முக்கியத்துவம் தருகின்றன.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

'இயல்பான தவறு' என்ற எஸ்.ரா.வின் சிறுகதையைப் பற்றி தாங்கள் இங்கு சிலாகித்துச் சொல்லியுள்ளதே மிகச்சிறப்பாக உள்ளது.

400-500 ஆண்டுகளுக்கு முன்பு திக்கற்றவர்களுக்குத் துணையாக இருந்த காவல் தெய்வங்கள் பற்றிய ஜெயமோகன் அவர்களின் அலசல் நிச்சயமாக படிக்க த்ரில்லிங்காகத்தான் இருக்கக்கூடும் எனத் தங்களின் எழுத்துக்களிலேயே தெளிவாகத் தெரிகிறது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

ராஜ்சிவா அவர்களின் புதிய அறிவியல் தொடர் பற்றியும் சொல்லி, அவரின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய எழுத்துக்களையும் குறிப்பிட்டுச்சொல்லியுள்ளீர்கள்.

மதன்டூன் - கார்ட்டூன் மற்றும் உயிரோவியங்கள் பற்றியும் புகழ்ந்துள்ளீர்கள்.

மொத்தத்தில் ஜன்னலின் தூசிகளைத்தட்டி, அதிலுள்ள ஒவ்வொரு கம்பிகளையும் அலசி ஆராய்ந்து, அதன் தரத்தினை தங்கமாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள். தங்களின் இந்தப்பதிவே ஜன்னல் பத்திரிகையை வாங்கிப்படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வாசிப்பு தாகமுள்ள அனைவருக்கும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள், சார். அன்புடன் கோபு

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

'ஜன்னல்' பத்திரிகையை ஊரில் இருந்தபோது, சென்ற ஆண்டு வாங்கிப் படித்திருக்கிறேன். சற்று வித்தியாசமாக இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

சினிமா, அரசியல் செய்திகளை குறைத்து, சிறுகதைகள் அதிகமாய் வெளியிடுவதற்கு, நமது பாராட்டுகள்.

'ஜன்னல்' இதழின் அட்டைப்படத்தையும் தங்கள் பதிவினில் சேர்த்திருக்கலாமே சார்?

ஸ்ரீராம். said...

எஸ் ஜே இதயா பங்கு கொள்ளும் அந்தப் பத்திரிகையின் பெயர் ஜனனம் என்று இன்று தெரிந்து கொண்டேன்.

:))

ஜன்னல் இதழ் யாரால் நடத்தப் படுகிறது?நண்பர் நிஜாமுதீன் சொல்லி இருப்பது போல அட்டைப்படத்தைச் சேர்த்திருக்கலாமே..

மதன் கார்ட்டூன் வருகிறதா? அட!

UmayalGayathri said...

ஜன்னல் பத்திரிக்கையை வாங்கி படிக்கும் ஆவல் வருகிறது சகோ. நன்றி.

G.M Balasubramaniam said...

வெகுஜனப் பத்திரிக்கைகள் வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாகக் கூறுவார்கள் இந்தப்பத்திரிக்கை இன்னும் பார்க்கவில்லை. இன்னின்னார் எழுதுகிறார் என்பதாலேயே பத்திரிக்கைக்கு மவுசா. ?

ஜீவி said...

@ வை.கோ.

'ஜன்னல்' பத்திரிகையின் பொங்கல் சிறப்பிதழ் என்னைக் கவரந்த ஒன்று. அதை ஆழ்ந்து படித்த பொழுது இந்தப் பத்திரிகை பற்றி நம் இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அந்த ஆர்வத்திலேயே 'ஜன்னல்' பற்றி எழுதினேன்.

நீங்களும் எனது அலைவரிசையிலேயே சிந்தித்து தொடர்ச்சியாகப் பின்னூட்டம் கொடுத்திருப்பதற்கு நன்றி. திருச்சியில் ஜன்னல் கிடைத்தால் வாங்கி வாசித்துப் பாருங்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நிச்சயம் வாங்கி வாசித்துப் பாருங்கள், ஸ்ரீராம்.

பத்திரிகையின் தோற்றம் ஓவியச் சிறப்பு எல்லாம் எழுத்தாளர் சாவி ஆசிரியராய் இருந்த அந்தக் கால தினமணிக் கதிரை எனக்கு நினைவு படுத்தியது. தினமணிக் கதிரில் கோபுலு என்றால் ஜன்னலில் ம.செ., கரோ போன்றவர்கள். உள்ளடகத்திலும் நல்ல சிறுகதைகள் காணப்பட்டது வாசிப்பு ரசனைமிக்க சிறுகதைகளையே பகிஷ்கரித்திருக்கும் இன்றைய பெரும் பத்திரிகைகளுக்கு மாற்றாக இருந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்தப் பத்திரிகை, சிறுபத்திரிகைகள் உள்ளடக்கங்கள் கொண்டு பெரும் பத்திரிகை தோற்றத்தில் வெளிவருகிறது. இது சிறுபத்திரிகைகள் போன்று தனிச்சுற்றில் சுண்ங்கிவிடாமல் பெரும் பத்திரிகை நோக்கிய முன்னேற்றத்தை நிச்சயப்படுத்தும்.. படைப்பார்வம் கொண்ட நம் இணைய வாசகர்களுக்குப் பிடிக்கும் இதுவரை படாதவர்கள் பார்வையில் இந்தப் பத்திரிகை பட வேண்டும் என்கிற ஆர்வத்தில் எழுதினேன்.

ராஜ் சிவாவின் கட்டுரையை இப்பொழுது தான் வாசிக்கிறேன். ஜெமோ சரி. கதைசொல்லி பார்வைக்கு வந்தால் எஸ்.ரா. மனதில் பதிவார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜீவி said...

@ அ. முகமது நிஜாமுத்தீன்

நீங்கள் சொன்ன வித்தியாசம் தான் என்னையும் கவர்ந்தது.

எதைப் பதிப்பித்தாலும் அதை மக்களின் கையில் கொண்டு போய்ச் சேர்ப்பது என்பது கடுமையான வேலை. அந்தக் கடுமையான வேலையின் பெரும் பங்கை அட்டைப்படம் ஆற்றுகிறது. அட்டைப்படத்தைப் பார்க்கப் போகிறோம்; உள்ளடகத்தை வாசிக்கப் போகிறோம் இல்லையா?.. அதற்காகவே ஓர் இதழின் உள்ளடக்கத்தை மட்டும் அலசினேன்.

தங்கள் ஆர்வத்திற்கு நன்றி. பகிர்வுக்கு நன்றி, நண்பரே!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

'ஜன்னல்' இதழ் 'உங்கள்' மதுரையில் பதிப்பிக்கப்படுவதாகவும் சென்னையில் அச்சிடப்படுவதாகவும் விவரக் குறிப்புகளீலிருந்து அறிந்தேன்.

ஆமாம்! 'அட!' என்று ரசனையுடன் தாங்கள் சொன்ன மதன் கார்ட்டூன் வருகிறது. ஆனால் அட்டைப்படத்தைப் பார்த்தால் மதன் கார்ட்டூன் உள்ளே இருப்பது தெரியாது! ஒரு பத்திரிகையின் உள்ளடக்கம் தான் முக்கியம், அது தான் நாம் அந்தப் பத்திரிகையைத் தொடர்ந்து வாங்கி வாசிப்பதை நிச்சயப்படுத்துகிறது என்ற அர்த்தத்தில் அட்டைப்படத்தைப் பிரசுரிக்கத் தவறினேன். நன்றி, ஸ்ரீராம். தொடர்ந்து வந்து ஆழ்ந்து கருத்துப் பதிந்தமைக்கு நன்றி.

ஜீவி said...

@ R. Umayal Gayathri

நானும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஆவலில் தான் வாங்கிப் படித்துப் பகிர்ந்து கொண்டேன். நீங்களும் வாங்கி வாசித்து நம் இணைய வாசகர்களிடம் வாசித்ததில் விளைந்த ரசனையைப் பகிர்ந்து கொள்ளுங்களேன். பத்திரிகை உங்களுக்கும் பிடிக்கும்.

தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன், சகோதரி!

ஜீவி said...

@ G.M.B.

//இன்னின்னார் எழுதுகிறார் என்பதாலேயே பத்திரிக்கைக்கு மவுசா. ? //

பத்திரிக்கைக்கு மவுசோ இல்லையோ அந்த இன்னின்னார் எழுதுவதை வாசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கிறதில்லையா?.. அதான் விசேஷம்!

கர்நாடக சங்கீத கச்சேரிகளில் நித்யஸ்ரீ, சுதா ரகுநாதன், சஞ்சய் சுப்ரமணியம், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, விஜய் சிவா என்று எத்தனையோ பாடகர்கள்! அசுர சாதகம், அபார ஞானம், சங்கீதத்தின் மீது தீராத காதல், கலையின் மீதான ஈடுபாடு அத்தனையும் கைவரப் பெற்றவர்களாய் இருக்கின்றனர். இருந்தும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி அமைந்து விடுகிறது. அவர்களின் பெயரைச் சொன்னாலே அவர்களின் முத்திரைப் பாணி நம் மனத்தில் பதிந்து விடும்.

இதே மாதிரி தான் எழுத்திலும். இன்றைக்கு தமிழில் எழுதுபவர்களை வரிசைப்படுத்தினாலே தீவிர வாசகர்களுக்கு இவர் இப்படி என்று நன்கு தெரிந்து விடும்.
அதற்காகத் தான் வாசகர் பெறும் வாசிப்பு உணர்விற்காக சிலரின் பெயரைக் குறிப்பிட்டேன்.

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி, ஜிஎம்பீ ஐயா!

Shakthiprabha (Prabha Sridhar) said...

Great info...........esp this ::: //இது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. மிதமான சினிமா, அரசியல் செய்திகள்... பெரும் பத்திரிகைகளின் சலித்துப் போன உள்ளடக்கங்களுக்கு மாற்றாக இவை அமைவதால்///


Seriously the current trend is not promising in many journals, This is a welcome move and sounds refreshing.

ஜீவி said...

@ @ Sakthiprabha

பொதுவாக வார இதழ்களை விழுந்து விழுந்து படித்தவர்கள் அதில் வெளிவந்த சிறுகதை, தொடர்காதைக்களுக்காகத் தான் என்று இருந்தார்கள். அவர்களில் பலர் அந்தப் பத்திரிகைகளை வாங்குவதையே நிறுத்தி விட்டார்கள். அவர்களின் வயதும் 10 அல்லது 15 வருடங்கள் கூடிப்போக டி.வி. சீரியல்கள் பத்திரிகைக்கு மாற்றாக அமைந்து விட்டது.
படிப்பல்தை விட பார்ப்பது இளைஞர்களிலிருந்து சுலபமாகிப் போயிருக்கும் இந்தக் காலத்தில் நடுத்தர வயது கடந்தவர்களும் அந்த ஜோதியில் கலந்து போனார்கள்.

அவர்களை மீட்டெடுக்கும் ஈடுபாடும் பெரும் பத்திரிகைக்களுக்கு இல்லை. பரபரப்பு அரசியல், சினிமா என்று போய்க் கொண்டிருக்கிறது. பத்திரிகைகளின் விலையும் வெகுவாகக் கூடிப் போய் விட்டன. அந்த காசுக்கு பத்திரிகை வாங்கி சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. பத்திரிகைகளை விட டி.வி.யின் பிரமாண்ட ஸ்கிரீன் நேரடியாகப் பெறும் உணர்வில் சினிமாவிற்கே மாற்றாக மாறியிருக்கிறது.

ஒரு மொழியின் 'கதை சொல்லும் கலை' இப்படியாக குறுகிப் போய்க்கொண்டிருக்கிறது.

அந்த ஷீணித்த நிலையை எடுத்து நிறுத்தும் செயலாய் புதுப்பத்திரிகைகள் எழுந்து வரும் பொழுது நம் கவனமும் ஆதரவும் அவைகள் பால் திரும்புகின்றன. சிறுபத்திரிகைகள்+ சிறுபத்திரிகைகளின் உள்ளடக்கம் கொண்ட வியாபார ரீதியாகவும் வெற்றியடைய முயற்சிக்கும் பத்திரிகைகளை இனம் கண்டு சீராட்ட வேண்டியது நம் பொறுப்பாகிப் போகிறது.

நெடுநாட்கள் கழித்து உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. அடிக்கடி வாருங்கள், ஷக்தி!

Related Posts with Thumbnails