மின் நூல்

Wednesday, April 13, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி--7

சிறுகதை, நாவல், கட்டுரை கவிதை என்று எந்த படைப்பாக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  அதன் ஆரம்பம் முக்கியம்.

சிலப்பதிகாரத்தின் ஆரம்பம் அதி உன்னதமானது.  கோவலனுக்கும் கண்ணகிக்குமான திருமணவிழாவின் கோலாகலத்துடன் அந்த உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளின் தொடக்கம் நிகழ்கிறது.

காதலுக்கு நாயகன் சந்திரன்.  அவனைப் போற்றுவதாக 'திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்' என்று சிலப்பதிகார காப்பியத்தின் முதல் வரி அட்டகாசமாக ஆரம்பிக்கிறது.  அடுத்த வரி திங்களைப் போற்றுவதற்கான காரணத்தைச் சொல்கிறது.

எந்த நூலுக்கும் பாயிரம் (முன்னுரை) அவசியம் என்று தொல்காப்பியர் சொல்லியிருப்பதாகப் படித்தோம் அல்லவா?.. சிலப்பதிகாரத்தின் பதிகமோ அருமையிலும் அருமை.

பாயிரம்-- பதிகம் இரண்டும் ஒன்றே தான்.  நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம்.  நூலில் பதிந்துள்ள கருத்துக்களைத் திரட்டிக் கூறுவது பதிகம்.

சிலப்பதிகாரத்தின் பதிகம் ஏகப்பட்ட சிறப்புகளைத் தன்னுள் உள்ளடக்கியது.

'குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த.....' என்று ஆரம்பிக்கும் பதிகம், 'இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபு என்' என்று முடியும்.  பதிகத்தில் மொத்தம் 90 வரிகள்.  இந்தத் தொண்ணூறு வரிகளின் இடையில் எங்கேயும் முற்றுப்புள்ளியே கிடையாது.  தொண்ணூறு  மொத்த  வரிகளும் ஒரே வரியில் அடங்கிய மாதிரி --ஆரம்பம் கொண்ட பதிகம் அதன் கடைசி வரியில் தான் முற்றுப்புள்ளி கொண்டு முற்றுப் பெறுகிறது.  இந்த மாதிரியான புதுமையான ஒரு முயற்சியை உலகத்தில் எந்த இலக்கியமும் கொண்டிருக்கவில்லை.

சிலப்பதிகாரத்தில் மொத்தம் 30 காதைகள்.  இந்த முப்பது காதைகளின் பெயர்களும் வெகு அழகாக பதிகத்தில் அடக்கப்பட்டு மொத்தக் கதையின் சுருக்கமுமே  உரைநடை கலந்த செய்யுளாய் பதிகத்தில்  காணக் கிடைக்கிறது. முப்பது காதைகளும் மூன்று  காண்டங்களில் அடக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்த காதைகள் நிகழ்விடங்களைச் சார்ந்த நிலங்களின் அன்றைய வழக்கத்திலிருந்த பெயர்களை புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று வகைப்படுத்தி அப்படி வகைப்படுத்தியதை அந்தந்த காண்டங்களுக்கு பகுதித் தலைப்புகளாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சிலப்பதிகாரம் என்று இந்தக் காப்பியத்திற்கு பெயர் வைத்ததே புதுமையானது.  உலகத்தின் சிறந்த காவியங்கள் எல்லாம் பொதுவாக காவிய நாயகன் அல்லது நாயகியின் பெயரையோ அல்லது அந்தக் காவியம் உணர்த்தும் நீதியையோ அன்றி அந்தக் காவியத்தின் மையப்புள்ளியைச் சுட்டிக் காட்டுவதாகவோ அமைந்திருத்தல் காணலாம்.

பெரும் புலவன் காளிதாசனின் சாகுந்தலம் பெருங்கதையை நிகழ்த்துவதற்கு ஒரு கணையாழியே காரணமாகிப் போகிறது.  ஆனால் காளிதாசனோ தனக்கு நன்கு தெரிந்தே கணையாழி என்று அந்தக் காவியத்திற்கு பெயர் வைக்கவில்லை.. அவன் தன் காவியத்தை நாயகியின்  காவியமாகவேக்  கொண்டு  சாகுந்தலம் என்று பெயர் வைத்தான்.  உலக நாடகத் தந்தை ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகக் கதைக்கு ஒரு கைக்குட்டையே காரணமாகிப் போகிறது.   ஆனால் ஷேக்ஸ்பியரோ கைக்குட்டையை  அந்தக் கதையோட்டத்திற்குக் கருவியாக்கிக் கொண்டு அந்த நாடகத்திற்குப்  பெயராக நாயகனின் பெயரையே கொண்டார்.

ஆனால்  தமிழின் முதல் காப்பியத்தை யாத்த இளங்கோ அடிகளார் , காப்பியத்தின் தலைவன் பெயரையோ தலைவி பெயரையோ தன் காவியத்தின்  தலைப்புப்  பெயருக்கு  நாடாமல்,  இந்தக் காப்பியத்தின் சுழற்சிக்கு  அச்சாணியாகிப்  போன சிலம்பின் கதையே இதுவெனத் துணிந்து சிலப்பதிகாரம் என்று பெயரைச் சூட்டியிருக்கிறார்  காலாதிகாலமாக வழிவழி வந்த வகைக்கு மாற்றாக இளங்கோ செய்த புரட்சி இது.

சொல்லப்போனால் கண்ணகியின் அந்த காற்சிலம்பு கிட்டத்தட்ட காப்பியத்தின் மையப்  பகுதியான 16-வது காதையான  'கொலைக்களக் காதையில் தான் மையப்படுத்தப் படுகிறது.  கண்ணகியிடம் கால்சிலம்பைத் தருக என்று கேட்கும் பொழுது கூட, ''கற்பின் கொழுந்தே!  பொற்பின்  செல்வி! சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு  யான் போய் மாறி வருவன்' என்று வெகு
சாதாரணமாக வியாபார குலத்தில் வந்த ஒரு வியாபாரி தன்  மனைவியிடம் பொன்னால் செய்த ஒரு பொருளை வியாபார முதலீடாகக் கொள்ளக் கேட்பது போல்  கேட்கிறான். .பின்னால் அந்தச் சிலம்பினால் விளையப் போகும் பூகம்பம் தெரிந்திருந்தும் வெகு சாதாரணமாக போகிற போக்கில் சொல்லிப் போவது போல் இளங்கோவும் அதைக் குறிப்பிடுகிறார்.

இப்படியாக காப்பியத்தின் போக்கில் ஆசிரியன் பின்னால்  நடக்கப்போவதின் சிறு சலனத்தைக்  கூட வெளிக்காட்டாமல் ஆற்றின் அமைதி போல அடக்கி வாசிப்பது  கதாசிரியரின் திறமை.  பிற்கால நாவல் இலக்கியத்தில் கூட இந்த மாதிரியான எழுதுபவனின் திறமைகள் வாசிப்போராலும், விமரிசகர்களாலும் பலபடப்  பாராட்டப் படுவதற்கு நிறைய எடுத்துக்  காட்டுகளையும் சொல்லலாம்.  இப்படியான  திற்மைகள் வெகு நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியங்களில்  காணக்கிடைப்பது படைப்புலக அரங்கில் அந்த மொழிக்கான பெருமை.

சிந்தியல் வெண்பாவில் ஆரம்பிக்கும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் ஆரம்பத்தை,, கல்யாணக் காட்சியை விவரிப்பதற்கு வாகாக கொச்சகக் கலிப்பாவிற்கு மாற்றுகிறார் புலவர் பெருமான்.  அந்தத் திருமணக்  காட்சியின் தொடக்க விவரிப்பாக இன்னார் இன்னார் என்று மணமகளையும், மணமகனையும் வெகு அழகாக அறிமுகப்படுத்துகிறார்.  கவனத்தில்  கொள்ளுங்கள்:  மணமகள் அறிமுகத்தை அடுத்துத் தான் மணமகன் அறிமுகம்.

யார் இந்த மணமகள்?..

நாகநீள் நகரொடு நாக்நாடு அதனொடு
போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னான் ஈரா றாண்டகவையாள்;
அவளுந்தான்,

போதிலார் திருவினாள் புகழுடை வடிவு என்றும்
தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுதுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகியென் பாள் ம்ன்னோ.

வயது, திறமை, யார் மகள் என்று எல்லாம் சொல்லி காதலாள் பெயர் கண்ணகி என்று வகையாக அறிமுகம் செய்கிறார்.

அடுத்து, யார் அந்த மணமகன்?..

பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதிப்பிறர்க் கார்த்து மாசாத்து வானென்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண்ட கவையான்
அவனுந்தான்

மண்தேய்ந்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்துஞ் செவ்வேளென்று  இசைபோக்கிக் காதலாற்
கொண்டேத்தும் கிழமையான்  கோவலனென்பான் மன்னோ 

மணமகனுக்கும் வயது, புகழ், அழகு,யார் மகன் என்றெல்லாம் சொல்லி இவன் பெயர் இது என்று பெயரையும் சொல்லி அறிமுகம் செய்கிறார்.

சிலப்பதிகாரம் பற்றி முழுத்தகவலும் இங்கு சொல்லப்போவதில்லை. சிலப்பதிகாரத்தை மேலோட்டமாகப் புரட்டிப் பார்க்கும் பொழுதே ஒரு நாவலைப் படிக்கும் சுவாரஸ்யம் நம்மிடம் தொற்றிக்கொள்கிறது. கச்சிதமான வடிவம் கண்ணில் நிறைகிறது.  அடுத்து என்ன நிகழப்போகிறதோ என்கிற எதிர்பார்ப்பு, ஏமாற்றம், திகைப்பு, வீரம், தியாகம், கற்பின் பெருமை, களிப்பு, நெஞ்சத் துடிப்பு என்று பார்த்துப் பார்த்து வடிவமைத்த காவியம் இது.,

தமிழில் படிப்படியாக நிகழ்ந்திருக்கும் சரித்திர வளர்ச்சி இது.  ஆரம்பகால செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் காப்பியங்களாக மாற்றம் கொண்டு உரைநடை நிலையை எய்தி இன்றைய சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகங்கள், நாவல்கள் என்றாகியிருக்கின்றன.

பிரிட்ஷார் வருகைக்குப் பின்னர் அவர்கள் வருகையினால் ஏற்பட்ட அன்னிய மொழியை கற்ற பாதிப்பில் நம் எழுது தமிழில்,, இலக்கியங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.  ஆனால் மாற்றங்கள் நம் மொழிக்கான ஆதிச் சிறப்புகளை விழுங்கி விடக்கூடாது.  நம் மொழிக்கென நீண்ட நெடிய வரலாறு உண்டு.  எந்திலையிலும் அந்தப் பாட்டையிலேயே, மாறித் தடம் பதிக்காது நாம் பயணிப்பது நமக்கான ,மொழியின் சிறப்பை இன்னும் இன்னும் மேலான தளங்களுக்கு  இட்டுச் செல்லும். அதை வலியுறுத்தவே இந்தத்  தொடர் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது

இன்றைய நாவலுக்கான படிமங்கள் சிலப்பதிகாரத்தில் அன்றே எப்படி வடிவமைக்கப் பெற்றிருக்கின்ற என்கிற நம் ஆவலைக் கிளறுகிற பகுதிகளை மேற்கொண்டு பர்ர்ககலாம்.

'சிலப்பதிகாரம்' என்பது தமிழுக்குக் கிடைத்த அற்புத காவியம்.  சிலம்பை  நினைக்கும் பொழுதெல்லாம் தமிழ்த் தாத்தா உ.வே,சாமிநாத ஐயர்
நினைவும் கூடவே வருகிறது.   பண்டையத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றின் ஓலைச்சுவடிகளைத் தேடித்  தேடிச் சேகரித்தது மட்டுமின்றி பெரும் ஆராய்ச்சி செயலாய் அவற்றைப் பகுத்து, பாட பேதம் கண்டு, தொகுத்து, பதிப்பித்து... இன்று கையடக்கப் புத்தகங்களாய் தமிழ் இலக்கியங்கள் நம் கையில் தவழ்வதற்கு ஆரம்ப முயற்சிகளை எடுத்துக் கொண்ட அந்தப் பெரியவரை மறக்கவே முடியாது.  தமிழோடு  கூடவே வாழும் பெருந்தகை அவர்

நாளைய தமிழ்ப்புத்தாண்டு தின மகிழ்ச்சியில் தமிழ்த்தாத்தாவுக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும், நம் சகோதர பதிவர்களுக்கு  வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.

அன்பான தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்பர்களே!


(தொடரும்)

படங்கள் உதவியோருக்கு நன்றி.
  

22 comments:

ஸ்ரீராம். said...

அந்தக் கடைசி வரி...பின்னூட்டத்துக்கான வாய்ப்பு!

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இதை மற்றவர்களும் தொடரக் கூடும். பின்னூட்டங்கள் பற்றிய உங்கள் பதிவு நினைவுக்கு வருகிறது.சில சமயங்களில் இப்படித்தான் ஆகி விடுகிறது! ஆமாம், பதிவு பற்றி என்ன சொல்லப் போகிறேன்? இவ்வளவு தமிழ் என் உடம்புக்காவதில்லை!

Ajai Sunilkar Joseph said...

அழகிய தமிழ் மொழி இது!...


தொடர் பதிவு அருமை நண்பரே....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//'குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த.....' என்று ஆரம்பிக்கும் பதிகம், ’இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபு என்' என்று முடியும். பதிகத்தில் மொத்தம் 90 வரிகள். இந்தத் தொண்ணூறு வரிகளின் இடையில் எங்கேயும் முற்றுப்புள்ளியே கிடையாது. தொண்ணூறு மொத்த வரிகளும் ஒரே வரியில் அடங்கிய மாதிரி --ஆரம்பம் கொண்ட பதிகம் அதன் கடைசி வரியில் தான் முற்றுப்புள்ளி கொண்டு முற்றுப் பெறுகிறது. இந்த மாதிரியான புதுமையான ஒரு முயற்சியை உலகத்தில் எந்த இலக்கியமும் கொண்டிருக்கவில்லை.//

மிகவும் ஆச்சர்யமாக உள்ளது !!!!!!

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிந்தியல் வெண்பாவில் ஆரம்பிக்கும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் ஆரம்பத்தை, கல்யாணக் காட்சியை விவரிப்பதற்கு வாகாக கொச்சகக் கலிப்பாவிற்கு மாற்றுகிறார் புலவர் பெருமான். அந்தத் திருமணக் காட்சியின் தொடக்க விவரிப்பாக இன்னார் இன்னார் என்று மணமகளையும், மணமகனையும் வெகு அழகாக அறிமுகப்படுத்துகிறார். கவனத்தில் கொள்ளுங்கள்: மணமகள் அறிமுகத்தை அடுத்துத் தான் மணமகன் அறிமுகம்.//

மங்களகரமான கல்யாணச் செய்திகளை மிக இனிமையாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். படிக்கப் பரமானந்தமாக உள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//'சிலப்பதிகாரம்' என்பது தமிழுக்குக் கிடைத்த அற்புத காவியம். சிலம்பை நினைக்கும் பொழுதெல்லாம் தமிழ்த் தாத்தா உ.வே,சாமிநாத ஐயர் நினைவும் கூடவே வருகிறது. பண்டையத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றின் ஓலைச்சுவடிகளைத் தேடித் தேடிச் சேகரித்தது மட்டுமின்றி பெரும் ஆராய்ச்சி செயலாய் அவற்றைப் பகுத்து, பாட பேதம் கண்டு, தொகுத்து, பதிப்பித்து... இன்று கையடக்கப் புத்தகங்களாய் தமிழ் இலக்கியங்கள் நம் கையில் தவழ்வதற்கு ஆரம்ப முயற்சிகளை எடுத்துக் கொண்ட அந்தப் பெரியவரை மறக்கவே முடியாது. தமிழோடு கூடவே வாழும் பெருந்தகை அவர்//

தமிழ் வருஷப்பிறப்பன்று தமிழ்த்தாத்தா அவர்களை நினைவு கூர்ந்து சொல்லியிருப்பது மிகப்பொருத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

இனிய பகிர்வுக்கு நன்றிகள், சார்.

G.M Balasubramaniam said...

//'குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த.....' என்று ஆரம்பிக்கும் பதிகம், 'இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபு என்' என்று முடியும். பதிகத்தில் மொத்தம் 90 வரிகள். இந்தத் தொண்ணூறு வரிகளின் இடையில் எங்கேயும் முற்றுப்புள்ளியே கிடையாது. தொண்ணூறு மொத்த வரிகளும் ஒரே வரியில் அடங்கிய மாதிரி --ஆரம்பம் கொண்ட பதிகம் அதன் கடைசி வரியில் தான் முற்றுப்புள்ளி கொண்டு முற்றுப் பெறுகிறது./ இதே வரிகளை என்னுடைய ஒரே வாக்கிய சாதாரணன் ராமாயணம் பதிவுக்குப் பின்னூட்டமாக எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இப்பொழுதான் தங்களது தளத்தினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல பதிவுகளைக் கண்டேன். இப்பதிவு மூலமாக பாயிரமும் பதிகமும் ஒன்றுதான் என்பதை தற்போதுதான் நான் அறிந்தேன். நன்றி.

ஜீவி said...

//இதை மற்றவர்களும் தொடரக் கூடும்.//

என் பதிவுக்கு வந்து பின்னூட்டமும் இடுகிறவர்கள் ஏழெட்டு பேரே. அவர்களும் இந்த மாதிரி ஆடு தாண்டுகிற காரியங்களைத் தவிர்த்து நேரடியாக மெயின் மேட்டருக்கு வந்து விடுகிறார்கள். அதனால் தொடராததிலும் ஆச்சரியமில்லை.

//இவ்வளவு தமிழ் என் உடம்புக்காவதில்லை!//

"படைப்பாளி யாருடைய பார்வையிலிருந்து கதையைப் படைக்கிறார் என்பதைப் பொறுத்துதான் பெரும்பாலான வாசகர்கள் பார்வை அமைகிறது. பல வாசகர்கள் அதைத் தாண்டி வேறு விதமாக்கவும் யோசிக்கிறார்கள். அந்தச் செயலையும் சிலவேளை எழுத்தாளரே மறைமுகமாகத் தூண்டுகிறார். பெரும்பாலான சமயங்களில் படிக்கப்படும் அந்தப் படைப்பு வாசகனின் வாழ்வனுபவத்தோடு ஏதோ ஒரு வகையில் எங்கோ ஓரிடத்தில் ஒன்றுகிறது. எதையோ நினைவு படுத்துகிறது. அதை ஒட்டியும் வாசகனுக்கான பாதிப்பு நேர்கிறது."
-- ஸ்ரீராம்

வாசிப்பில் இவ்வளவு ஆழ்ந்த பார்வை உள்ளவர், ரொம்ப நாளைக்கு லைட் ரீடிங்கிலேயே தேங்கியிருக்க முடியாது. இருக்க முடியாது என்பதை விட இருக்கக் கூடாது என்பதும் காலத்தின் கட்டாயம். பழந்தமிழ் இலக்கிய கோட்பாடுகளின் இருபதாவது நூற்றாண்டு வளர்ச்சியாய் தமிழ் எழுத்துலகம் இருந்தது. ஆனால் இன்று தமிழில் எழுதும் பெயர் தெரிந்திருக்கும் பிரபல எழுத்தாளர்கள் பிறமொழிக் கோட்பாடுகளில் தற்கால தமிழ் இலக்கியத்தை அடக்கி அழகு பார்க்கிறார்கள். மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது தான். இருப்பினும் எந்த மொழியின் வளர்ச்சியும் அதன் ஆதிச்சிறப்புகளை விழுங்கி விடக்கூடாது
வெகுதிரள் மக்களின் வாசிப்பு அனுபவங்களிலிருந்து விலகியும் விட முடியாது.

இந்த கோணாத்திலான சில பகிர்தல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்தத் தொடர் எழுத நேர்ந்தது. அதனால் தான் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து ஆரம்பமாகவும் செய்தது.

தமிழ் படித்த முனைவர்களே கண்டு கொள்ளாத, சிந்தித்தும் பார்க்காத விஷயம் இது.
ஜெயகாந்தன் காலத்திலேயே அவர்கள் தற்கால தமிழ் இலக்கியம் பற்றி சிந்திக்க தவறி விட்டார்கள். சங்க நூலகளைத் தாண்டி இன்றைய தமிழின் நிலை பற்றி அவர்களுக்கும் எந்த கருத்தும் இல்லாதது மாதிரி ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் அலசத் தான் இந்தத் தொடர். தொடர்ந்து வாருங்கள். படிக்க படிக்க மனதுக்குப் பிடிக்கும். மனதுக்குப் பிடித்தால் தன்னாலே உடம்புக்கும் ஆகும். :))

கருத்து பகிர்தலுக்கு நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ Ajay

தங்கள் பின்னூட்டமும் அருமை நண்பரே!

ஜீவி said...

@ வை.கோ. (1)

இந்த மாதிரி அனுபவித்த ஆச்சரியங்கள் தமிழ் இலக்கியங்களில் பல. தமிழை ஆராய்ச்சிப் படிப்புக்காக எடுத்துப் படிததுப் பட்டம் பெற்றவர்கள், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாராவது புது முயற்சி எதிலாவது ஈடுபட்டாலும் கூட அதில் கலந்து கொண்டு தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. எல்லாம் ஒரு கை ஓசையாகவே போய் விடுவது குறைகளைத் தெரிந்து கொள்வதற்கும் வழியில்லாது போய் விடுகிறது. நமக்கோ ஏகலைவன் கல்வி. நம்மால் முடிந்த வரை முயன்று பார்ப்போம் என்ற எண்ணத்தில் தான் எழுதி வருகிறேன்.

ஜீவி said...

@ வை.கோ. (2)

அந்த மங்கலம் தொடர்கிறது, கோபு சார்.

ஆர்வத்துடன் வாசித்து வருவதற்கு நன்றி.

ஜீவி said...

@ வை.கோ. (3)

தமிழ்த் தாத்தாவின் பணி எதிர்பார்ப்பு இல்லாதது. இயல்பான ஆர்வமும் ஈடுபாடும் அதனால் அவர் செயல்களில் கூடியிருந்தன. செல்லரித்துப் போயிருக்க வேண்டிய இலக்கியச் செல்வங்கள் அவரது அயராத முயற்சிகளால் நம் பார்வைக்காவது இன்று கிடைத்திருக்கின்றன. தாத்தா ஒரு பீனிக்ஸ் பறவை. எந்த சாம்பலிலும் உயிர்த்தெழுவார்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செய்தி பற்றி எழுதும் போது கூட உங்களுக்கு நான் எழுதியதும் என் நினைவில் நின்றது. உங்களைப் பற்றிய எதையுமே நீங்கள் மறப்பதில்லை என்பதும் உங்கள் நினைவாற்றலுக்கு எடுத்துக் காட்டு. சரியான இடத்தில் சரியானதை நினைவு கூர்ந்தது அதைச் சொல்ல என்றுமே நீங்கள் தவறியதுமில்லை. இதெல்லாம் உங்கள் சிறப்புகள் என்று அறிவேன், ஜிஎம்பீ ஐயா.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam

என் தளத்திற்கு தங்கள் முதல் வருகைக்கு நன்றி, ஐயா. தொடர்ந்து வருகை தந்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். 'இடிப்பாரை இல்லா ஏமறா மன்னன்..' கதையாகிவிடக் கூடாது.

மோகன்ஜி said...

அன்பின் ஜீவி சார்!
பல அல்லாட்டங்களுக்கிடையே உங்கள் தளத்திற்கு வர தாமதம். சிலம்பைப் பற்றி எவ்வளவு பார்வைகளைப் படித்தாலும் அலுப்பதில்லை. கம்பராமாயணமும் சிலம்பும் பெரும் பொக்கிஷங்கள். தற்சமயம் கம்பனில் தோய்ந்துள்ளேன். மறுபடியும் முழுவாசிப்பு எனத் தொடங்கி எனக்குள்ளேயே அமிழ்ந்து கிடக்கிறேன். ஏதும் நான் எழுதினாலும், சாதாரணனாய் எனக்குமுன் நானே நிற்கும் தருணம்... கடல்முன் நிற்பதாயும் இருக்கிறது. சரியான பாடல்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஸ்ரீராமுக்கு நீங்கள் அளித்துள்ள பதில் அக்ஷரலக்ஷம் பெறும். இரண்டுமுறை படித்துவிட்டேன். அனுபவத்தின் அழகு மிளிர்கிறது. இதையே இன்னமும் கொஞ்சம் வளர்த்து ஒரு தனிப்பதிவாக வெளியிடுங்கள். தக்க கவனம் பெறும்.

ஜீவி said...

அன்புள்ள மோகன்ஜி,

நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான். அல்லாட்டங்களுக்கு இடையே தான் மனம் கொள்ளும் ப்ரீதிக்காக எழுத வேண்டியதாகி போய்விடுகிறது. ஒருவிதத்தில் சூழ்ந்திருக்கும் வாழ்க்கை அல்லாட்டங்களுக்கிடையே இது ஒன்றே ஆரோக்கியமாகவும் தென்படுகிறது. மனசுக்கு நெருக்கமான ஈடுபாடுகளில் விட்டமின் சக்திகள் புதைந்திருப்பதை உணர்கிறேன்.

எதை எழுதினாலும் அது உங்கள் மன ஓட்டமாய் இருப்பது உங்களுக்கான பாக்யம். மனதை மறைத்து எதுவுமில்லை என்கிற இடத்தில் மறைப்பதற்கு எதுவுமே இல்லாமல் போய் பூரணமாய் சத்தியம் அங்கு சின்னக் குழந்தை போல அங்கே தவழ்கிறது.

இந்தப் பகுதிக்குத் தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன். சம்பாஷணைகளில் கதையை நகர்த்தும் காலம் போய் இப்பொழுதெல்லாம் கதைசொல்லிகள் கதைசொல்லும் காலமாகி விட்டது. அந்த வித்தக வேலை இக்காலத்திற்கு சரிப்பட்டு வராததினால் (முடியாமையால்) இவர்களுகளுக்கான இந்த ஏற்பாடு. அதனால் எழுதுகிறவர்களின் மனநெகிழ்வுகளே படியாத உயிரற்ற சடலங்களாய் இன்றைய எழுத்தின் போக்கு போய்விட்டது.

உயிர்ப்புள்ள தமிழை கோட்ப்பாட்டு இலக்கணமாய் தொல்காப்பியர் வகுத்திருக்கிறார். அந்த விதத்தில் இது தமிழுக்கான வழிமுறையும் அல்ல. இதை நிறுவுவதற்காக இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறேன். வருகை தநது தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

இந்தப் பகுதியைப் பார்த்திருப்பீகள் என்று நினைக்கிறேன்.

http://gopu1949.blogspot.in/2016/04/20.html

அன்புடன்,
ஜீவி

மோகன்ஜி said...

ஜீவி சார்!

என் தாமதத்தை புரிந்து கொண்டதற்கும் அன்பு வார்த்தைகளுக்கும் நன்றி!
அவசியம் தொடர்ந்து படிப்பேன்.

மிக இளமைப் பருவத்திலேயே தீவிரமான படிப்பும், ரசனையும் உருவான காரணத்தால் தானோ என்னவோ, மேலோட்டமான எழுத்தை தவிர்த்துவிட வேண்டியிருக்கிறது. மீண்டும் மீண்டும் கொல்லையின் பழைய வைக்கோற்போரிலேயேதான் தலையைப் புதைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. என் ரசனைதெரிந்த நண்பர்கள் சுட்டும் புதிய எழுத்திருந்தால் வாசிக்கிறேன்.

சில நாட்களுக்குமுன் நாம் தொலைபேசியில் பேசிய நாளிலிருந்து, உங்கள் புத்தகத்தை வாசித்து என் விமரிசனமாக பதிவிட ஆவலாயிருக்கிறேன். ஏனெனில், நானும் இப்படி ஒரு எழுத்தாளர்வரிசை எழுத எண்ணியிருந்தேன். உங்கள் கைவண்ணத்தில் வரும்போது நானும் கூடவே எதற்கு என்று ஆசுவாசமாகவே தான் இருக்கிறது. வைகோ சார் உங்கள் புது நூல் பற்றி எழுதி வருவதை அறிவேன். இருந்தும், அதனால் நான் எழுதப்போகும் விமரிசனத்திற்கு முன்முடிவாய் கருத்து ஏதும் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டாம் என தான் அவர் பதிவை படிப்பதை தள்ளிப் போட்டிருக்கிறேன்.

மீண்டும் வருவேன் ஜி!

Geetha Sambasivam said...

இப்போத் தான் பார்க்கிறேன். எப்படியோ தவற விட்டிருக்கேன். மறுபடி வந்து படிச்சுட்டுக் கருத்துச் சொல்றேன். நன்றி சுட்டிக்கு! :) நான் பதிவிடுவது தாத்தாவின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் மட்டுமே. மாறாக நீங்க எப்போதும் நினைப்பது இன்னும் சிறப்பு. :)

Geetha Sambasivam said...

அருமையான ஆய்வு. சிலம்பின் சிறப்பை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கீங்க! ஆனால் பதிகம் என்றால் பத்துப் பாட்டுகள் கொண்டது என்று படித்த நினைவு. பாயிரம் என்பது அந்தக் காப்பியத்தின் முன்னுரையாக அமையும் என்று கேள்வி. இரண்டும் ஒன்றே என்பதை இன்று தான் அறிந்தேன். நன்றி.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

பதிகம் என்றால் பத்து என்று பாடமும் ஒன்று உண்டு. உதாரணமாக பதிற்றுப் பத்தும், ஐங்குறு நூலும் பத்து பத்து பாடல்களாகத் தொகுக்கப் பட்டவை. தேவாரப் பாடல்களும் இப்படி பத்தாகத் தொகுக்கப்பட்டவை.

வே.நடனசபாபதி said...


பாயிரமும் பதிகமும் ஒன்றுதான் என்று இன்றுதான் அறிந்தேன்.
சிலப்பதிகாரத்தின் சில பாடல்களை பள்ளி இறுதி வகுப்பிலும் புகுமுக வகுப்பிலும் படித்ததுண்டு. பின்னர் வேளாண் அறிவியல் படிக்கும்போது தமிழ் பாடம் இல்லாததால் தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து படிக்க இயலாமல் போய்விட்டது. தங்களின் தொடர் பதிவு திரும்பவும் என்னை தமிழ் மாணாக்கனாக ஆக்கி இருக்கிறது என்பது உண்மை. அதற்கு நன்றி!

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவின் வாயிலாகவே சிலப்பதிகாரத்தின் பெயரிலிருக்கும் சிறப்பு புரிகிறது. மணமகள் மணமகன் அறிமுகம் எவ்வளவு அழகாக உள்ளது. திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் என்று இயற்கையைப் போற்றும் வரிகள் நினைவுக்கு வருகின்றன. மேலும் சுவைக்க ஆவல் பெருகுகிறது. தொடர்கிறேன்.

Related Posts with Thumbnails