பகுதி-- 8
ஒரு நாவலுக்கான அத்தனை சிறப்புகளையும்
கொண்டது சிலப்பதிகாரம். அது மட்டுமில்லை,
அந்தக் காப்பியத்தைப் படைப்பதில் புதுமையான பல படைப்பிலக்கிய திறமைகளை அடிகளார்
வெளிப்படுத்தியிருப்பது அவரது ஆக்கத்திற்கு முன்னால் எல்லாம் இல்லாத புதுமாதிரியாய்
அமைந்திருப்பது வியப்பாக இருக்கின்றது. .
அது வரை தன்னுணர்ச்சி பாடல்களாய் இருந்த
இலக்கிய மரபை மடை மாற்றி ஒரு முழுமையான காப்பியப் போக்குச் சோதனைக்கு உட்படுத்தி
அதில் வெற்றி கண்ட முதல் தமிழ் மகன் இளங்கோ ஆவார். அதே மாதிரி தமிழ் இலக்கிய உலகு
வேறொரு புதுமையான மாறுதலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதும் அடிகளாரின்
இந்த வெற்றிக் காப்பியத்திற்கு பின்னால்
தான். அதுவரை அரசு மரபினரையேப் போற்றிப்
பாடிய வழக்கத்தை மாற்றி முதன் முதலாக ஒரு
சாதாரணக் குடிமகனை பாட்டுடைத் தலைவனாக வரித்து பாடிய முதல் பெரும் காப்பியம்
அடிகளாரின் சிலம்புக் காவியமே..
மங்கலமான மணநாள் விழாவில்
ஆரம்ப்பிக்கிறது இந்தக் காப்பியம். கோவலன்—கண்ணகி மணநாள் விழாவை படம் பிடித்தாற்
போல காட்சிப்படுத்தும் ஆரம்ப அத்தியாயமான மங்கல வாழ்த்துப் பாடலின் திருமணக்
காட்சியின் வர்ணனைகள் நம்மை மயக்குகின்றன.
மாலைகள் பொருத்திய மண்டபம், நீலப்பட்டிலான விதானத்தின் கீழே அழகிய முத்துப்
பந்தல்., வானில் நீந்தும் சந்திரன் ரோகிணியைச் சாரும் நல்லதோர் ஓரையில் அருந்ததி
அன்ன கற்புடை நங்கை கண்ணகியின் வலது கரம் பற்றி
மாமுது பார்ப்பான் மறை வழிகாட்டிட கோவலன் மங்கலத் தீ வலம் வருகிறான்.
நறுமணப் பொருட்களை ஏந்திய அழகிய
மகளிர், மாலைகளை தாங்கிப் பிடித்தபடி வாழ்த்துப்பா பாடிய நங்கையர், சுண்ணப்பொடி ஏந்திய
மங்கையர், அகிற்புகை சூழ்ந்த சூழலில் விளக்குகளை ஏந்திய மகளிர் புன்னகைச் சுடருடன் சூழ்ந்து வர நடுவில் முளைப் பாலிகை தாங்கியும், பூரண கும்பம் ஏந்தியும் மங்கையர்
வலம் வந்தனர் காட்சிப்படுத்தல்கள் நீளும் பொழுது அந்தக்கால திருமணவிழாக்கள்
எப்படியிருந்திருக்கும் என்று நமக்கு ஒரு அறிமுகம் கிடைக்கிறது. பாரம்பரிய பழக்க வழக்கங்களில் எந்த பெரிய
மாற்றமும் இல்லாமல் இன்றைய நம் இல்லத் திருமண விழாக்களும் கிட்ட்த்தட்ட அதே
மாதிரியாக் இன்றும் இருப்பதில் உள்ளூர ஒரு மகிழ்ச்சி வேறே.
பூரண கும்பம் ஏந்திய மகளிர் வலம் வரும்
அந்த சமயத்தில் கவிஞன் வாக்காக அந்த வரிகள் அவன் அறியாதது போலவே வருகின்றன: பொற்கொடி
போன்ற நீண்ட கூந்தல் கொண்ட மகளிர் “இந்த மங்கை நல்லாள் தன் காதலனை கண்ணிலும்
மண்ணிலும் பிரியாது என்றும் வாழ்வாளாக!
அவனும் இவளின் பிணைந்த கை நெகிழாமல் இருப்பானாக: பதுமணம் காணும் இந்த
தம்பதிகள் தீதின்றி நீடுழி வாழ்க!” என்று மலர் தூவி வாழ்த்துகின்றனர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது தெரியும். இருந்தும் பின்னால் நேரவிருக்கிற பயங்கரத்தை இந்த வாழ்த்து மழை ஒருகால் புரட்டிப் போடுமோ என்கிற லவலேச ஆசையாலோ என்னவோ அடிகளார் வார்த்தைப் பின்னல்களை வாழ்த்தின் இடையே செருகியிருக்கிறார்.
காதலின் நேர்த்தியை செயலில் வடித்துக்
காட்டும் இன்னொரு இடம். முதலிரவில் கண்ணகியில் தோளில் சாய்ந்து, கோவலன் ஐந்தாம்
வேதம் ஓதுகிறான்: “பெண்ணே! உன்னை மலையிடைப் பிறவாத மணி என்பேனா? கடலிடைப் பிறவாத
அமிழ்து என்பேனா? யாழிடைப் பிறவாத இசை என்பேனா? நீண்ட கருங்கூந்தலை உடைய உன்னை---“
என்று அந்த 'நின்னை’யில் காதல் நாயகனின் பாதி வர்ணிப்பிலேயே காதல் வசனத்தை வெட்டி இளங்கோ
புதுமை செய்கிறார். நின்னை?.. காதலியின் கடைக்கண் பார்வையில் அந்தப் பேரழகின் முன்னே தடுமாறிய
பேச்சு, செயலாய் நீளப் போகிறது என்று நமக்குத் தெரிகிறது. ..
சிலப்பதிகாரத்தை நயம் பாராட்டுதல் என்று ஆரம்பித்தால் அதற்கு எல்லையே
இல்லாமல் போகும். அந்தக் காப்பியத்தின் திருப்பிய பக்கமெல்லாம் தமிழ்
கொஞ்சுகிறது. அந்நாளைய தமிழர் பண்பாட்டின்
விழுமியங்களை ஒவ்வொன்றாக எடுத்து கடைப்பரப்பிய அழ்கு காணக்கிடைக்கிறது. .
இன்றைய நாவலான அன்றைய அந்தக்
காப்பியத்தின் கட்டுக்கோப்பான அமைப்புகள் நம்மைக் கவருகின்றன. மூன்று காண்டங்களில்
முப்பது காதைகளை நகரும் கதைப்போக்கிற்கு வெகுப்பொருத்தமாக அமைக்கிறார். மூன்று
காண்டங்களுக்கும் அவர் பெயர் கொடுத்த பெருமையே அந்நாளைய தமிழகத்தின்
மூவேந்தர்களின் தலைநகரங்களுக்கான பெருமையாகி எந்த வேற்றுமையும் இன்றி
மூவேந்தர்களுக்கிடையேயான ஒன்றுமைப் பதாகையை
உயரத் தூக்கிப் பிடிக்கிறது.
புகார் காண்டத்தில் காப்பியத் தலைவன்-- தலைவியின் கல்யாணக் கோலம், அவர்களின் குடும்ப வாழ்க்கையின் துவக்கம் என்றாகி, வணிக குலத்தின் வாழ்க்கைப்பாட்டிற்கு ஏற்ப கோவலன் மதுரை ஏகி அநியாயமாய் கொலைக்களப்பட்டு ஒன்றைச் சிலம்பை கையிலேந்தி நீதி கேட்ட கண்ணகி மதுரையை எரித்து வஞ்சிக்காண்டதில் கற்பின் தெய்வமாய் காட்சி தருகிறாள்.
புகார் காண்டத்தின் மூன்றாவது காதையான அரங்கேற்றுக் காதையிலேயே தேவமகளிருக்கு எந்தவிதத்திலும் குறைவு படாத மாதவியின் அறிமுகம் கிடைக்கிறது.
அவள் நாட்டிய அரங்கேற்றத்தை அரங்கேற்றும் சாக்கில் ஆடல், பாடல் இலக்கணங்களின் அத்தனை அம்சங்களையும் அலசுகிறார் அடிகளார். கூத்தாசிரியனின் சிறப்பு, நாட்டிய மேடையின்
அமைப்பு, நாடக அரங்கில் வைக்கப்படும் தலைக்கோல், அதனை வழிபடும் மரபு என்று நிறைய
விவரங்களை அறிகிறோம். குழலோசை, யாழிசை,
மத்தள முழவு, ஆமந்திரிகை, குயிலுவம் என்று
இசையில், இசைக்கருவிகளீன் வரிசை, வரிசை கட்டப்படுகிறது.
அந்தி மாலை சிறப்புச் செய் காதையில்
மாதவியின் தாய் சித்திராபதி பரிசிலாக விலை பேசிய ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் மாலையை வாங்கி
மாதவையை உரிமை கொள்கிறான் கோவலன்.
மாதவியுடன் சுகித்திருக்கிறான்.
இந்திர விழவு எடுத்த காதையில் புகார்
நகரின் மருவூர் பாக்கத்தின் காட்சிகள், பட்டினப்பாக்கத்தின் நகர்ச் சிறப்புகள்
எல்லாம் பண்டைய தமிழகத்தின் பிரமிக்க
வைக்கும் வாணிபச் சிறப்பைச் சொல்கின்றன.
இப்படி ஒவ்வொரு காதையிலும் சிலப்பதிகார
காப்பியத்தின் பக்கங்கள் புரட்ட புரட்ட
எத்தனை செய்திகள்! வரிசை கட்டி நிற்கும் வகைவகையான எவ்வளவு விவரக் குறிப்புகள்
என்று வாசிக்கையிலேயே மலைக்கிறோம்.
இத்தனைக்கும் இடையே நமக்கு தெரிய
வருவது என்னவென்றால் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னால் தான் நாவல் இலக்கியம் பற்றி
நாம் தெரிந்து கொண்டோம் என்று சொலவது எவ்வளவு வரலாற்றுப் பிழை என்று தெரிகிறது. செய்யுளும்
உரைந்டையும் விரவிக் கலந்தவாறு உரைந்டை இடையிட்ட செய்யுளாய் இருந்த காப்பிய வடிவு,
செய்யுள் நீங்கிய உரைநடையாய் நாவல் என்று வடிவு கொண்டிருக்கிறது. அவ்வளவு தான். காப்பியம் என்று அழைக்கப்பட்ட
பண்டைய இலக்கிய் வடிவின் அடுத்த மாற்றத்திற்குள்ளான வடிவு தான் இன்றைய நாவல்.
அவ்வளவு தான். இப்படியாக இன்றைய நாவல்
இலக்கியத்திற்கு அன்றே காப்பியம் என்ற வடிவில் கால்கோள் விழா நடந்திருக்கிறது. வடிவம் மட்டுமல்ல,அன்றைய காப்பியங்களில்
ஒரு நாவலுக்கான உள்ளடக்கமும் எவ்வாறு பொருந்தியிருநதன என்பதனை அடுத்துப் பார்ப்போம்.
(தொடரும்)
படங்கள் உதவியோருக்கு நன்றி
படங்கள் உதவியோருக்கு நன்றி
30 comments:
//முதன் முதலாக ஒரு சாதாரணக் குடிமகனை பாட்டுடைத் தலைவனை//
சில விஷயங்கள் எல்லாம் யாராவது சொன்ன பிறகுதான் "அட, ஆமாம்ல..!" என்று தோன்றுகிறது.
கோவலனின் காதல் வார்த்தைகளைக் கேட்க...படிக்கும்போது 'ஆழியிலே பிறவாத அலைமகளோ..' வரிகள் ஏனோ நினைவுக்கு வருகின்றன!
அந்தக் காலத்தில் திருமணங்கள் எப்படி நடந்தன, அரசாட்சி, நடைமுறைகள் எப்படி இருந்தன என்று அறிய முடிகிறது என்று படிக்கும்போது அதை மட்டும் எடுத்து ஒரு தகவலாக பதிவிடலாம் என்று தோன்றுகிறது!
சிலப்பதிகாரம் பற்றிய மிகவும் அருமையான அலசல்கள். ரஸித்தேன். பாராட்டுகள்.
"அழகிய தமிழ் மொழிதான் இது!..." மேலும் தொடரட்டும்.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னால் தான் நாவல் இலக்கியம் பற்றி நாம் தெரிந்து கொண்டோம் என்று சொல்வது எவ்வளவு வரலாற்றுப் பிழை என்று தெரிகிறது என்பதைத் தாங்கள் கூறியுள்ள விதம் அருமை. ஒவ்வொன்றுக்கும் நாம் இவ்வாறு உதாரணம் கூறி நம் பழம்பெருமையினை மறந்துவிடுகிறோம்.
அழகிய தமிழ் மொழியிது தொடரின் இப்பகுதியினை மட்டுமே இப்போது வாசித்தேன். சிலப்பதிகாரத்தின் செம்மையை இவ்வளவு எளிய தமிழில் அழகாக எடுத்தியம்பிய வரிகள் ரசனையின் உச்சம்.. காப்பிய நாயகன் நாயகியாக சாதாரணக் குடிமக்களை வைத்துப் பாடுவது என்பது அந்நாளில் எவ்வளவு துணிகரமான செயல்! திருமணச் சடங்குகள் குறித்த பத்தி ஒரு திருமணப்பந்தலுக்கே அழைத்துச்சென்றுவிட்டது. முந்தையப் பதிவுகளையும் வாசித்துக் கருத்திடுவேன். அற்புதமானதொரு தொடர் வழியே தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கும் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள் ஜீவி சார்.
@ ஸ்ரீராம்
//கோவலனின் காதல் வார்த்தைகளைக் கேட்க...படிக்கும்போது 'ஆழியிலே பிறவாத அலைமகளோ..' வரிகள் ஏனோ நினைவுக்கு வருகின்றன!//
அட! இது கூட நீங்கள் சொன்ன பிறகுதான் "அட, ஆமாம்ல..!" என்று தோன்றுகிறது.
எழுதியது அந்நாளைய வாலி என்பதினால் அந்த சிலப்பதிகார வர்ணனை வரிகளின் பாதிப்பில் தான் இதை எழுதியும் இருக்கலாம்.
பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியின் அழகை கோவலன் வர்ணிக்கும் இந்தக் காட்சியில் அடிகளாரின் வரிகளை மாற்ற மனசில்லாமல் ஏறத்தாழ அப்படியே கையாண்டிருப்பார் கலைஞர் என்று நினைவு.
@ ஸ்ரீராம்
//.....ஒரு தகவலாக பதிவிடலாம் என்று தோன்றுகிறது!//
நல்ல முயற்சி தான். இந்த கோவலன்--கண்ணகி திருமணக் காட்சியில் கூட தமிழர் திருமணங்கள் அந்த சிலப்பதிக்கார காலத்தில் எப்படி நடந்தன என்று தெரிந்து கொள்வதற்கு சான்று கிடைத்திருக்கிறதல்லவா?..
பண்டைய தமிழர் வாழ்வினைத் தெரிந்து கொள்ள சிலப்பதிகாரம் ஒரு தகவல் களஞ்சியம்.
ஏகப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்ட பெட்டகம். உறைநூல் தேவை என்ற தேவை இல்லாமல் எளிமையாகப் புரியும் வரிகள். நடுநடுவே உரைநடை.. அட்டகாசம் ஸ்ரீராம்.
வர்த்தமானன் பதிப்பகத்தின் 'சிலப்பதிகாரம்-- மூலமும் தெளிவுரையும்' அற்புதமான பதிப்பு. விலையும் நூலும் கையடக்கமானது. வரும் ஜூன் புத்தகத் திருவிழாவில் வாங்க இப்பொழுதே குறித்துக் கொண்டு விடுங்கள்..
@ வை.கோ.
சிலப்பதிகாரம் மட்டுமில்லை. தமிழின் ஐந்து பெரும் காப்பியங்களின் கதையம்ச அழகுகளை எடுத்து எழுதப் போகிறேன். படிக்கப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
டாக்டர் ஜம்புலிங்கம் பின்னால் சொல்லியிருக்கிறார் பாருங்கள், அதான் அடிப்படை விஷயம். அந்த வரலாற்றுப் பிழையை நிருவ வேண்டும். அதற்கேற்ப எழுத வேண்டும்.
அதனால் அந்த மாதிரி இடங்களை கூர்ந்து கவனித்து வாருங்கள். இப்பொழுது நாவல் என்று நாம் சொல்வதின் படைப்பிலக்கிய சாமர்த்தியம் அன்றே தமிழர்களுக்கு அத்துப்படியான விஷயம் என்பது தெரியும்.
//ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னால் தான் நாவல் இலக்கியம் பற்றி நாம் தெரிந்து கொண்டோம் என்று சொல்வது எவ்வளவு வரலாற்றுப் பிழை என்று தெரிகிறது//
இந்த மெக்காலே கல்வித் திட்டம் நம்முடைய அறிவையே சிதைத்து விட்டது! இப்போ சும்மா மனப்பாடம் பண்ணிக் கக்கும் அளவில் வந்தாச்சு! :( ஒரு காலத்தில் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை அறிய நம் தமிழ்த்தாத்தா அவர்களின் சுயசரிதையைப் படித்தாலே போதும். சிலப்பதிகாரம் குறித்த அருமையான அலசலுக்கு நன்றி.
கம்பன் இளங்கோவுக்கு முன்னவனா பின்னவனா?
நாவல் என்கிற ஆங்கிலச் சொல்லே 1700 காலத்தில் வந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில் ஆங்கிலேயர் சொல்லித்தான் நமக்கு நாவல் என்பதே தெரிந்தது என்று எந்த ..ம் சொல்லமாட்டான்.. சொன்னால் சொன்னவர்கள் சொல்லப்போகும் கருத்தின் போலியை மறைக்கப் பூசப்படும் மேய்முலாம்.. சில நேரம் நாம் ஒன்று சொல்ல நினைப்போம்.. அதை இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று இல்லாதவர் மேலோ பொதுவானவர் மேலோ போலி அங்கீகாரத்துடன் போற்றிவிட்டால் அதை மெய்யான அங்கீகாரத்துடன் என்னவோ தான் தோண்டி எடுத்த தங்கம் போல் ஜெஜெ என்று பீற்றிக்கொள்ளலாம் இல்லையா?
அப்படியே இருந்தால் தான் என்ன? ஆங்கிலேயர் சொன்னதினால் நமக்கு திடீரென்று புது ஞானம் வந்ததா? இல்லை இருந்த ஞானம் குறைந்ததா? இருப்பது தான் இருந்தது. இருந்தது தான் இருப்பது. இல்லையா?
நீங்கள் கோடிட்டுக் காட்டியிருக்கும் விதம் சிலப்பதிகாரம் எடுத்துப் படிக்கத் தோன்றுகிறது.
அருமையான பகிர்வு நண்பரே
சிலம்பின் பல சிறப்புகளையும் கோடிட்டு காட்டியிருக்கிறீர்கள்.
தீந்தமிழின் காவியமரபில் இளங்கோவடிகள் போட்டுவைத்த ராஜபாட்டையிலே தான் பிற காப்பியங்கள் பயணப்பட்டிருக்கின்றன.
நடையிலும், பொருளடக்கத்திலும் சிலம்பின் தோளில் நின்றபடி தான் உயரமும் கண்டிருக்கின்றன.
இன்னமும் மெருகூட்டிக் கொண்டு தமிழை வளப் படுத்துகின்றன.
உதாரணமாக, சீவக சிந்தாமணியும், கம்பன் காவியமும் பாயிரத்தோடு அவையடக்க பாடல்களும் சேர்த்து எழுதப்பட்டிருக்கின்றன.
கம்பனில் மட்டும் ஆறு பாடல்கள்.
சிலப்பதிகாரம் பற்றி இன்னமும் சற்று விரிவாகவே நீங்கள் எழுத வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.
பெரிய பொறுப்புதான். நீங்களே செய்ய ஏலும் அன்பரே!
@ Dr. Jambulingam
எதற்காக இந்தத் தொடரை எழுதத் தொடங்கினேனோ, அதற்கான காரணத்தை அந்த வரலாற்றுப் பிழையை நீங்கள் கண்டுகொண்டதில் மகிழ்ச்சி.
இன்னொன்று. தொல்காப்பியத்தில் காணப்படும் இலக்கண வரையறைகளையும் கருத்தில் கொண்டு அந்த வரையறைகளை மீறாமலும் இந்தக் காப்பியத்தை இளங்கோ உருவாக்கி இருக்கிறார்.
இன்றைய தமிழின் நாவல் உலகமோ, ஆங்கில நாவல்களின் காலம் தப்பிய இலக்கண வரையறைகளை வழிகாட்டியாகக் கொண்டு அலட்டுகின்றன. இது தான் நவீன் இலக்கியம் என்று ஒருசாரார் ஆர்பரிக்கின்றனர். தொல்காப்பியம் சுட்டும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வழிவழி வந்த தமிழ் நாவல்களையும் நாவல் துறையில் சாதனை படைத்த எழுத்தாளர்களையும் புறக்கணித்து விட்டு இன்று தாங்கள் எழுதுவதே புத்திலக்கியம் என்று பறைசாற்றுகின்றனர். இதெல்லாம் ஒரு சாராரின் உதார்களாக இருக்கிறதே தவிர மனசார தமிழ் நாவல்களை வாசித்து வந்த வாசகர் கூட்டம் இந்த நவீன நாவல்களில் அதிரடி மாற்றங்களை எதிர் கொள்ளும் திராணியற்றும் மனசுக்கு ஒன்றாமலும் கதை வாசிக்கும் பழக்கத்தையே துறந்து விட்டனர். சிலரின் பார்வை தொலைக்காட்சி பக்கம் போய்விட்டது.
இப்படியாக தமிழ்ப் புதினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அருகி வரும் இந்த நிலையில் சரியான திசையில் பழைய போக்குக்கு தமிழ் நாவல் உலகைத் திருப்ப இந்தத் தொடர் முயற்சிக்கிறது.
தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ஐயா.
சிலப்பதிகாரமெல்லாம் பள்ளியில் படித்ததோடு சரி. நல்ல தமிழ் ஆசிரியர்கள் இருந்தார்கள் அதனால் அப்போது படித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போதே அழகான,எளிய தமிழ் வசீகரித்தது. உங்களின் அருமையான அலசலுக்கு நடுவே, சிலப்பதிகார பாடல்களையும் படிக்க கொடுங்களேன்.
தமிழ் நாவல் உலகைப் பற்றி பேசுவோமே? ஆங்கில நாவல் உலகை எதற்கு தாழ்த்தி எழுதவேண்டும்?
// தமிழின் ஐந்து பெரும் காப்பியங்களின் கதையம்ச அழகுகளை எடுத்து எழுதப் போகிறேன்
வாழ்த்துக்கள். எதிர்பார்ப்புகளுடன் :-)
ஐம்பெருங்காப்பியங்கள் என்பதே உடான்சாக இருக்கிறது. எதற்காக இன்னும் இதைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறோம் தெரியவில்லை. தமிழில் எழுதப்பட்டது என்றாலும் சீவக சிந்தாமணியில் தமிழ்ப் பண்பாடு (ஹா!) சுத்தமாகக் கிடையாது. (அதனால்தான் படிக்க சுவாரசியமாக இருக்கிறதோ?) வளையாபதி கேசி இரண்டின் பாடல்களைக் கூட அறியமுடியவில்லை. எப்படி இவற்றை தமிழ்க்காப்பியம் என்பது?
தமிழ்த் தாத்தாவின் முயற்சி வெற்றியடையக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் வளையாபதி நூலை ஒளித்து வைத்து அது மறைந்து விட்டதாக ஒரு conspiracy theory கேள்விப்பட்டிருக்கிறேன்.
@ கீதமஞ்சரி
நாவல் உலகிலும், நவீன எழுத்துப் படைப்புகளிலும் உங்களுக்கு அறிமுகம் உண்டு ஆதலால் திரு. ஜம்புலிங்கம் அவர்களுக்கு நான் அளித்திருக்கும் விரிவான பின்னூட்டத்தின் பின்னணியில் இந்தக் கட்டுரைத் தொடரை வாசிக்க வேண்டுகிறேன். நான் எழுதுவதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் மனத்திற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். தவறாது எடுத்துரைக்க வேண்டுகிறேன். இந்தத் தொடரில் வரும் கருத்துக்கள் விவாதத்திற்கு உட்பட வேண்டும் என்பது என் எண்ணம். அப்படியான முயற்சிகள் இந்தத் தொடருக்கான கருத்துக்களை செழுமை படுத்தும். ஆகவே அந்த கோணத்தில் பின்னூட்டங்களை அமைக்க வேண்டுகிறேன். தங்கள் கருத்துப் பதிவிற்கு நன்றி, கீதமஞ்சரி!
@ கீதா சாம்பசிவம்
மெக்காலே கல்வித் திட்டத்தைத் தொடர்ந்து, ஆங்கில ஆளுகைக்கு இங்கு கிடைத்த சிவப்புக் கம்பள வரவேற்பு, நவீன இலக்கியம் என்கிற பெயரில் ஆங்கில வழிமுறை சார்ந்த எழுத்துப் படைப்புகள், தமிழ்க் கல்வி பெற்றோரின் படைப்புலக பங்களில்ப்பின்மை என்று நிறைய காரணங்கள். தமிழின் ஆதிச்சிறப்புகளை புதுப்பிக்க வேண்டிய கட்டாயங்களில் இருக்கிறோம்.
இன்னொரு பக்கம் அகிலன், நா.பா., ஜெகசிற்பியன், ஜெயகாந்தன், சூடாமணி, ஆதவன் போன்றவ்ர்களுக்கு இணையான எழுத்து வாரிசுகள் உருவாவதற்கான தமிழ் பத்திரிகை உலகின் எழுத்து மாற்றத்திற்கும் பெருங்கனவுடன் காத்திருக்கிறோம்.
எல்லாம் கனிந்து வரும் பொழுது தமிழ் படைப்புலகின் அன்றைய பொற்காலத்தை மீண்டும் நாம் தரிசிக்கலாம்.
தொடர்ந்து வருகை தந்து இந்தத் தொடரின் சிறப்புக்காண ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
@ Ajay S.J.
நன்றி, நண்பரே. பாராட்டுகளை விட விமரிசன ரீதியான கருத்துக்கள் அதிக சக்தி வாய்ந்தவை. அப்படியான கருத்துக்கள் எழுத உந்து சக்தியாக இருக்கும்.. தொடர்ந்து தங்கள் கருத்துக்களாய்ப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
@ மோகன்ஜி
தங்கள் அன்பான வேண்டுகோளுக்கு நன்றி,மோகன்ஜி!
சிலம்பு பற்றி விரிவாக எழுதுவதை வேறொரு பகுதியில் வைத்துக் கொண்டால் போயிற்று.
இப்பொழுது சிலம்பின் உருவ, உள்ளடக்கச் சிறப்புகளைக் கோடி காட்டிவிட்டு, மற்றா ஐம்பெருங்காப்பியங்களின் கதை, கற்பனைச் செறிவு, உரைநடை+செய்யுள் இலக்கியங்களிலிருந்து பாரதி அதற்குப்பின்னான புதுக்கவிதை எழுச்சி, கல்கியிலிருந்து ஜெகே வரையிலான காலத்துப் படைப்பிலக்கியங்களின் செழுமை, இன்றைய படைப்பிலக்கியங்களின் வறுமை அதற்கான காரணங்கள் என்று அலசி, பழைய ராஜபாட்டைக்குத் திரும்புவதற்கு வழிவகைகள் கண்டு விட்டால் இந்தத் தொடர் எழுதுவதற்கான முயற்சி நிறைவடைந்து விடும்.
கீதாம்மா பின்னூட்டத்திற்கு நான் அளித்திருக்கும் பதிலையும் பாருங்கள். அந்தளவில் எழுதலாம் என்று ஆசை. என்ன நினைக்கிறீர்கள், ஜீ?..
@ பானுமதி வெங்கடேஸ்வரன்
சிலப்பதிகாரத்தின் ஈடுஇணையற்ற சிறப்புகள், சிலம்பு வரிகள் என்று தனிக் கட்டுரை எழுதுவதே பொருத்தமாக இருக்கும். நம்முடைய இப்பொழுதிய வேலை-- கீதாம்மாவின் பின்னூட்டப் பதிலில் சொல்லியிருக்கிறேன். இன்னொன்று. சிலப்பதிகாரச் செய்யுள் பகுதிகளை உரைநடையில் சொல்லி, சிலப்பதிகார உரைநடைப் பகுதிகளை எடுத்தாண்டு சிலப்ப;திகார உருவ, உள்ளடக்க நேர்ந்திகளோடு முடித்து விட்டால் நாம் சிலம்பைக் கடந்து மற்ற பகுதிகளுக்கு வந்து விடலாம்.
சிலப்பதிகாரத்தில் ஆரம்பித்த இந்த ஆரம்பத்தை இன்றைய கதைப் படைப்புகளில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.இந்தத் தொடருக்கான நோக்கம் அதுவே.
உங்களின் ஆசை எனக்கும் உண்டு. அன்றைய தமிழ் ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லி இருப்பது முக்காலும் உண்மை. எல்லாம் அவர்கள் போட்ட பிச்சையில் முகிழ்த்து இன்னமும் தொடர்புக் கொடியாய் சுற்றிக் கொண்டிருப்பதால் தான் இதெல்லாம் சாத்தியப்படுகிறது. பள்ளிக் கல்வியில் எனக்கு வாய்த்த தமிழாசிரியர்கள் மறக்க முடியாதவர்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி சகோதரி!
ஜீவி சார்!
உங்கள் முயற்சியின் வரைப்படம் துல்லியமாகவே இருக்கிறது. அப்படியே செய்யுங்கள். நீங்கள் சிலம்பை விரிவாக அடுத்த ப்ராஜெக்ட் எனக் கொள்ளலாம்.
விசிலடிக்க அடியேன் தயார்.
வரைபடப் புரிதல் சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து கூட வருகை தந்து பயணக் களைப்பை தங்கள் உற்சாகமூட்டலால் களைய வேண்டுகிறேன்.
ஊருக்குப் போனதும் சிலப்பதிகாரத்தை மீண்டும் எடுத்து படிக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டியது தங்கள் எழுத்து.
என் தமிழ் என்ற பெருமை கொள்ள வைக்கிறது இந்தத் தொடர்.
நன்றி
சிலப்பதிகாரத்தை மேம்போக்காகப் படித்ததுதான் . உங்கள் பதிவு ஆழ்ந்து படிக்க வைக்கும் என்று நம்புகிறேன்
@ சிவகுமாரன்
'என் தமிழ் என்ற பெருமை கொள்ள வைக்கிறது' என்று நீங்கள் சொல்லியிருப்பது சாகித்ய அகாதமி பரிசு பெற்றதே போன்ற சந்தோஷத்தை பெற வைத்தது. தொடர்ந்து வாருங்கள், கவிஞரே!.. நன்றி.
@ ஜிஎம்பீ
இந்தப் பதிவுக்குத் தொடர்ந்து வாருங்கள். அதுவே சிலம்பை ஆழ்ந்து கற்ற அனுபவத்தை ஏற்படுத்தும். நன்றி.
//செய்யுளும் உரைநடையும் விரவிக் கலந்தவாறு உரைநடை இடையிட்ட செய்யுளாய் இருந்த காப்பிய வடிவு, செய்யுள் நீங்கிய உரைநடையாய் நாவல் என்று வடிவு கொண்டிருக்கிறது. //
மிக சுருக்கமாக இன்றைய நாவல் பிறந்த கதையை சொல்லியிருக்கிறீர்கள்.
சிலப்பதிகாரத்தை முழும் படிக்க ஆசைதான். ஆனாலும் சில இடங்களில் பொருள் புரியாதே என எண்ணியபோது என்னைப் போன்றோருக்கு உதவ தங்களின் படைப்பான 'சிலப்பதிகாரம்-- மூலமும் தெளிவுரையும்' ஜூன் திங்களில் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிடுகிறது என அறிந்து மகிழ்ச்சி. நிச்சயம் வாங்கிப் படிப்பேன்.
Post a Comment