Sunday, June 5, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி—13

“ஏரிக்கரையை ஒட்டி  இருக்கிற இடது புற வழியாகச் செல்வோம் என்று எண்ணினீர்கள் என்றால்—“ என்று கொஞ்சம் இடைவெளி விட்டு மாமுது  மறையோன் தொடர்ந்தார்.

கண்ணகி அவரையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இடது புற வழி எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தாள்.

“இடது புற வழியாகச் சென்றால் நீண்ட வயல்களும், சோலைகளும் தாண்டித் தென்படும் காட்டுப்பகுதிக்குள் நுழைந்து மீண்டால் திருமாலிருஞ்சோலை மலைப்பகுதியை அடைவீர்கள்.  அந்த இடத்தில் பிலத்து வழி ஒன்று உண்டு. அந்தப் பிலத்தினுள்ளே மூன்று பொய்கைகளைக் காண்பீர்கள். புண்ணிய  சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்று பெயர் கொண்டவை அந்தப் பொய்கைகள். ஐந்திரம் என்னும் இலக்கண நூல் இந்திரனால் இயற்றப்பட்டது. புண்ணிய சரவணத்தில் நீராடினால் அந்த இலக்கண நூலைக் கற்ற ஞானம் உங்கள் வசப்படும்.  பவகரணிப் பொய்கையில் முக்கி எழுந்தால் முப்பிறவியையும் அறிந்து கொண்டவராவீர். மனத்தில் நினைப்பதை எல்லாம் அடைவதற்கு இட்ட சித்தி பொய்கை நீராடல் கைகொடுக்கும்.”

கோவலன் உன்னிப்பாக அந்த மாமுது மறையோன் சொல்வதையேக் கேட்டுக் கொண்டிருந்தான். மறையோன்  தொடர்ந்து  சொல்லலானார் :”நீங்கள் அந்தப் பிலத்தினுள் நுழைய விரும்பினால்,  அம் மலையில் உறையும் திருமாலை வணங்கி, சிந்தையில் அவன் சேவடி வைத்து மும்முறை அந்த மலையை வலம் வந்தீர்களென்றால், நிலத்தைப் பிளந்து போனாற் போல பூமியை அறுத்துக் கொண்டு செல்லும் சிலம்பாற்றின் கரையிலே வேங்கை மரததடியில் கருங்கூந்தல் கொண்ட பெண்ணொருத்தியைப் பார்ப்பீர்கள். ‘என் பெயர் வரோத்தமை. நான் இந்த மலையில் வாழ்கிறேன். இப்பிறவிக்கு இன்பம் மற்றும் மறுபிறவிக்கு இன்பம் என்று இந்த இரண்டும் கருத்திலில்லாது செம்மையாய் வாழ்வது எப்படி?’ என்று அந்தப் பெண் உங்களிடம்  கேட்பாள்.  நீங்கள் ஏற்ற பதில் கூறுவீர்கள் என்றால் பிலத்தின் கதவுகளைத் திறந்து விடுவாள். அவள் சொல்லும் வழியில் நீங்கள் செல்லும்  பொழுது பல கதவுகள் தென்படும். இரட்டைக் கதவினை உடைய வாயிலில் அழகிய பெண்ணொருத்தி எதிர்ப்படுவாள். அவள் உங்களிடம் கேட்பாள்: ‘முடிவில்லா இன்பம் என்பது எதுவென்று எனக்குச் சொல்வீர்கள் என்றால் நீங்கள் விருப்பியவற்றை இங்குக் காணலாம்’ என்பாள். அவளே, ‘நீங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டாலும் உங்களுக்கு எந்தத் துன்பமும் தர மாட்டேன். இந்த நெடுவழிக்கு அப்பால் கொண்டு போய் விட்டு விடுவேன்.  பொருத்தமான பதில் சொல்பவர்க்கு மூன்று பொய்கைகளின் கரைகளையும் காட்டுவேன்’ என்பாள்.”

தொடர்ந்து அந்த மாமுது மறையோன் சொல்லலானார்: “நமசிவாய என்னும் பெருமைவாய்ந்த ஐந்தெழுத்து மந்திரத்தையும்,, எட்டு எழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்பதனையும் மனம் ஒன்றி ஓதி விரும்பிய பொய்கையில் நீராடுவீர்கள் என்றால் பிறவியில் பெரும் பயன் பெருவீராவீர்   திருமாலின் அழகிய தாமரைத் திருவடிகளே உங்கள் நினைப்பாகட்டும்.  அவ்வாறு உள்ளம் உணர்ந்து உங்கள் உணர்வுகள் ஒன்றிப் போனால், திருமாலின் கருடன் பறக்கும் கொடி மரம் உங்கள் கண்ணுக்குப் புலப்படும்  அவரது மலர் போன்ற திருவடிகளை நெஞ்சில் ஏற்க,, பிறவிப்  பெரும் துயரம் பறந்தே போகும். அந்த பேரின்ப நிலையில் நீங்களும் மாமதுரை செல்லலாம்.. இந்தப் பிலத்தின் பெருமை இதுவேயாகும்!” என்றார்.

கவுந்தி அடிகள் அந்த மாமுது மறையோனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, மறையோன் “வலப்பாதையும் வேண்டாம் இடப்பாதையும் வேண்டாம் என்றாலும் இன்னொரு வழிப்பாதையும் இருக்கிறது..”
என்றார்.  “இது இரண்டுமல்லாத இடைப்பட்ட பாதை.  வழி நெடுகிலும் மலர்ச் சோலைகள் இடையிட்ட  காடுகள். ஆனால் இந்த வழியில் காடுகளைத் தாண்டிச் செல்லும் பொழுது கானுறை தெய்வம் ஒன்று குறுக்கிடும். பயப்படும்படியாக அல்லாது இனிய தோற்றத்துடன் இருக்கும்.  துன்பமே செய்யாது.. தன்னைத் தாண்டிப் போவோரை மட்டும் அந்தத் தெய்வம் தடுக்கும். அதனிடமிருந்து தப்ப வேண்டும். அவ்வளவு தான்.  தப்பித்து விட்டால் சிறிது தூரத்தில் நான்  சொன்ன மூனறு வழிப்பாதைகளும்  இணையும் பெருவழிப்பாதை ஒன்று வரும்.  நீண்ட அந்த வழி மாமதுரைக்கு உங்களை இட்டுச் செல்லும்.  நீங்கள் இனிதே சென்று வருவீர்களாக. நான் நீள் நிலத்தை தன் திருவடிகளால் அளந்த நெடுமுடி அண்ணல் தாள் தொழும் தொண்டன். நான் என்  வழியில் செல்கிறேன்..” என்று மறியோன் சொல்கையில் கவுந்தி அடிகள் குறுக்கிட்டார்.

“நலம்புரி கொள்கை கொண்ட நான்மறையோரே! எங்களுக்குப் பிலம் புக வேண்டிய நிலை இல்லாது உளது.  புண்ணிய சரவணத்தில் மூழ்கி நீராடவும் வேண்டாம். இறந்த பிறப்பில் எய்தியதெல்லாம் பிறந்த பிறப்பில் தான் பார்க்கிறோமே! அதனாலும் பவகாரணியில் அமிழ்ந்து நீராடவும் வேண்டாம். வாய்மையில் வழுவாது மன்னுயிர் பேணுபவர்க்கு அடைய முடியாத எதுவும் இவ்வுலகில் உண்டோ?.. அதனால் இட்ட சித்தியிலும் நீராட வேண்டோம். நீங்கள் விரும்பும் திருமால் திருவடித் தொழச் செல்வீராக! நாங்களும் எங்கள் வழி மதுரை செல்கிறோம்..” என்று நளினமாக மறையோனிடம் விடை பெற்றார்.

இதையெல்லாம் மேலோட்டமாக வாசித்து வருபவருக்கு மனிதப் பிறப்புகளீன்  தொடர்ச்சிகள் பற்றி ஞானம் கொண்ட  இருவர் தம்தம் நம்பிக்கைகளை பரிமாறிக் கொள்வது போலத் தோன்றும். ஒரு  காப்பியத்தையோ நாவலையோ வாசித்துக் கொண்டு வரும்  பொழுது அதன் இடையிடையே கதையோட்டத்தை விட்டு விலகி பேசப்படும் செய்திகள்  கூட அந்தக் காப்பியத்தின் கதை அமைப்புக்குத் தொடர்பு கொண்ம்டதாய் இருக்க வேண்டுமென்பது மரபு.  அதாவது ஒரு நாவலின் ஓட்டத்தின் குறுக்கே கூட அந்த நாவலுக்குத் தொடர்பில்லாத விஷயங்களை சொல்லிச் செல்லலாகாது என்பதை சிறந்த நாவலாசிரியர்கள் அறிந்தே இருப்பார்கள். இளங்கோ அடிகளாரும் ஒரு நாவலுக்கான  இந்த விதியில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

இந்த சிலப்பதிகார காப்பியத் தேரின் அச்சு தான் என்ன?.. ஒரு  மனிதன் தன் பிறப்பில் செய்யும் கர்மாக்களும் அந்தக் கர்மாக்களுக்கான வினைகளும் எப்படித் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதை விளக்குவது தான் இந்த சிலப்பதிக்காரத் தேரை உருட்டும் அச்சுப் பகுதி... நமக்குச் சுலபமாக அர்த்தம்  கொள்ள வேண்டிச் சொல்ல வேண்டுமெனில்  பிறவி எடுத்த மனிதனின் அன்றாடச் செயல்பாடுகளும் அவற்றிற்கான வினைகளும். அவன் அறிந்தோ அறியாமலோ அவனைத் தொடர்கின்றன. செய்யும் செயல்களுக்கான பிரதிபலன் தான் அவனுக்கு வாய்க்கக்கூடிய நல்லதுக்கும் கெட்டதற்கும் காரணமாக இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதற்கு எழுதப் பட்ட காப்பியமே சிலப்பதிகாரம்.  ஒவ்வொரு பிறவியிலும் மனிதப் பிறவி செய்யும் காரியங்களின் நன்மைகள், அல்லது தீமைகள் பிறவி தோறும் தொடர்ந்து வருகிறது.  இதைத் தான் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று பிரகடனப்படுத்துகிறார் இளங்கோ அடிகளார்..

அந்த மாமுது மறையோன் மூன்று பொய்கைகளில் நீராடுவதைப் பற்றிச் சொல்லும் பொழுது பவகரணி பொய்கையில் முங்கி எழுந்தால் முப்பிறவி பற்றியும் அறிந்து கொண்டவராவீர் என்று சொல்கிறார். முப்பிறவி பற்றி அறிந்து கொண்டால் என்னவாகும்?.. ஒருவருக்கு அவரது நிம்மதியே தொலைந்து போகலாம்.. பொதுவாக எல்லோருக்குமே கடந்த காலம், பற்றி அறிவது வீயப்பாக இருக்கலாம். நிகழ்காலம் பற்றி அறிவது இனி  நிகழப்போவதற்கு நம்மை சீர் படுத்திக் கொள்ள உதவலாம்.  எதிர்காலத்தைப் பற்றி அறிவதோ நிகழ்காலத்தின் செயல்பாட்டை அறிந்த வகையில் அதைத் திருத்திக் கொண்டு நேர்படுத்திக் கொள்ள உதவலாம்.  இப்படி முக்காலத்தையும் அறிவதன் அடிப்படையில் குறைந்தபட்சம் எதிர்காலத்து நிம்மதி அவரவர் கைவசப்படுவதாக அர்த்தப்படுத்திக்  கொள்ளலாம்.

இதற்குத் தான் கவுந்தி அடிகளார் ஒரே தீர்வாகச் சொல்லி விடுகிறார்.  வாய்மையில் வழுவாது மன்னுயிர் பேணுவோருக்கு அடைய முடியாதது எதுவும் இல்லை என்று ஒரே  தீர்ப்பாகச் சொல்லி விடுகிறார். நிகழ்காலத்தை நன்கு அமைத்துக் கொண்டால் எதிரிகாலத்தில் எந்த்த் துன்பமும் அண்டாது என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக வெளிப்படுகிறது.  ஒருவிதத்தில் பார்க்கப் போனால் ‘இப்பிறவி இன்பத்தையும் மறுபிறவிக்கான இன்பத்தையும் கருத்தில் கொள்ளாது செம்மையாய் வாழ்வது எப்படி?’ என்று அந்தப் பெண் வரோத்துமை கேட்ட கேள்விக்கான பதில் இது என்று சொல்லலாம்.  இந்தப் பதிலை வரோத்துமையிடம் சொல்லியிருந்தால் பிலத்தின் கதவுகளும் திறந்திருக்கலாம்.

பின்னால் வரும் கதைப் போக்கை அறிந்தவர்களுக்கு, அல்லது பின்னால் வரும் கதையின் நிகழ்வுகளை அறியும் நேரத்து இந்தப் பதிலைச் சொல்லி கோவலனாவது பவகாரணிப் பொய்கையில்  நீராடியிருக்கலாமோ என்று நப்பாசை ஏற்படுகிறது. நீராடியிருந்தால் பின்னால் நடந்து விட்டவைகளை தவிர்த்திருக்கலாமோ என்று கூடத் தோன்றுகிறது. 'கடைசியில் அவன் ஊழ்வினையே வெற்றி கொண்டது; அவனை பவகரணிப் பொய்கையில் நீராட விடாமலும் தடுத்த்து' என்று வாழ்க்கை பூராவும் தொடர்ந்து வரும் இந்த ஊழ்வினைத் திருவிளையாடல்களைப் பற்றி அறிந்தோர்களும் சொல்ல்லாம்.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்பதும் இதுவே தான்!..


18 comments:

sury Siva said...

பவகரணிப் பொய்கையில் முக்கி எழுந்தால் முப்பிறவியையும் அறிந்து கொண்டவராவீர். //

படித்துக்கொண்டே பின்னூட்டம் இடுகிறேன்.

இந்த பவகரணிப் பொய்கை இப்போது இருக்கிறதா ?

இருந்தால் இன்று இரவு பஸ்ஸை அல்லது டிரையினை புடிச்சு சென்று
குளித்த் பார்க்கவேண்டும்.

வாங்கற கல் அடி எல்லாம் பார்த்தால் ரொம்பவே மிச்சம் இருந்து இருக்கும் போல இருக்குது போன ஜன்மத்திலே.

அது சரி.

நடுவிலே ஸ்டாப் பண்ணாம தொடர்ந்து படிக்கிறேன்.

மறுபடியும் வருவேன்.

சுப்பு தாத்தா.

sury Siva said...

முழுவதும் படித்து விட்டேன்.

எளிய நடை. வழக்கிலே உள்ள புரியும் சொற்கள் மட்டும் கையாளப்பட்டு இருப்பது மிகச் சிறப்பு.

விறுவிறுப்பு....அதை விடச் சிறப்பு.

எதிர்ப்பார்ப்பு: மதுரை எப்போது வரும் ?

காவியம் என்று ஒன்று இருந்தால்,
அதில் கூறப்படும் முதல் கதையைத் தவித்துப் பிற உப கதைகளும்
இருக்கும் என நீங்கள் சொல்வது தமிழுக்கு மட்டுமல்ல, மற்ற மொழிக்
காவியங்களுக்கும் பொருந்தும்.

ஆங்கில காப்பியங்களில் உப கதைகள் இல்லாதது எதுவும் இல்லை எனக் கூட சொல்லிடலாம்.

ராமாயணத்திலும் பாரதத்திலும் உப கதைகள் ஏராளம்
.

நிற்க.

அந்த பவகரணி பொய்கை க்கு நான் போகப்போவதில்லை.

வீட்டுக் குழாயிலே இருக்கும் வரை ஸ்நானம் செய்வது என்று முடிவு

யார் வந்து என்ன சொன்னாலும்
கேட்கிற காது தான் கேட்கும்.
ஏன் காது இருந்தும் கேட்கவில்லை என்று
காதைக் கேட்டேன். அது சொல்கிறது.
என்ன நடக்குமோ நடந்து தான் தீரும்.


சுப்பு தாத்தா.

வே.நடனசபாபதி said...
கவுந்தி அடிகள் சமண மதத்தவர் என்பதால் இடதுபுறம் சென்று மாமுது மறையோன் சொன்னதுபோல் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தையும்,, எட்டு எழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்பதனையும் மனம் ஒன்றி ஓதி விரும்பிய பொய்கையில் நீராட விரும்பவில்லை போலும்.

ஒருவேளை அவர் இந்து மதத்தவராக இருந்திருந்தால் இடதுபுறப் பாதையை தேர்ந்தெடுத்து கோவலன் கண்ணகியை வழி நடத்தி சென்றிருப்பாரோ? இருப்பினும் ‘வாய்மையில் வழுவாது மன்னுயிர் பேணுவோருக்கு அடைய முடியாதது எதுவும் இல்லை’ என்று அவர் சொன்னதாக இளங்கோ அடிகள் சொல்லும் விளக்கம் ஒத்துக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.

கோவலன் தனது செயலுக்கான பிரதிபலனை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் கவுந்தி அடிகளை சந்தித்தான் போலும். இங்கே தான் ஊழ்வினை தொடர்ந்து வந்ததோ?

மிக எளிமையான நடை மூலம் தொடரை கொண்டுபோகிறீர்கள். பாராட்டுகள்!

Geetha Sambasivam said...

எளிமையான நடை. கடைசிப் படம் அந்தக் காலத்துச் சித்ரலேகா வரைந்தது போல் இருக்கு. அறுபதுகளிலா? சரியாய்த் தெரியவில்லை. சிலம்புச் செல்வம் என்னும் பெயரில் ஆனந்த விகடனில் ஒரு பக்கக் கட்டுரைகளாகச் சிலப்பதிகாரம் வெளிவந்து கொண்டிருந்தது. எழுதியவர் ம.பொ.சி? தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்? அதுவும் நினைவில் இல்லை. அந்தத் தமிழ் நடைக்காக அதைப் படிப்பேன். இத்தனைக்கும் அப்போது மூன்றாம் வகுப்பு அல்லது நாலாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேனோ? தெரியலை. ஆனால் ஆரம்பப் பள்ளிப் படிப்பைத் தாண்டவில்லை. வீட்டில் விகடன் வாங்கிய காலம் அது! வியாழக்கிழமை மாலையே வரும் விகடனை எதிர்பார்த்துக் கொண்டு பள்ளியிலிருந்து ஓடி வந்த காலம்!

ஜீவி said...

@ Sury Siva

//இந்த பவகரணிப் பொய்கை இப்போது இருக்கிறதா ?//

ஸ்ரீராம், எஸ். ரமணி, கிருஷ்ணமூர்த்தி சார், ஆங்.. கீதாம்மா--- யாராவது மதுரைக்காரங்க.. வரலாமலேயே இருக்கப் போறாங்க.. எத்தனை தடவை அழகர் மலை போயிருப்பாங்க?.. சொல்றாங்களான்னு பாப்போம்.

இன்று நூபுர கங்கை என்று சொல்லப்படும் புனித தீர்த்தம் தான் அன்றைய சிலம்பாறு என்று தெரிகிறது. நூபுரம் என்றால் சிலம்பு என்று தங்களுக்கும் தெரியும்.

Geetha Sambasivam said...

கருத்துச் சொல்லி இருக்கேன். கிடைச்சதா என்னனு தெரியலை. பவகரணிப் பொய்கை பத்திக் கேட்டிருக்கீங்க! ஹூம்! நான் மதுரையிலேயே பிறந்து வளர்ந்தும் அழகர்கோயிலுக்கு முதல் முதல் போனது கல்யாணம் ஆகி என் கணவரோடு தான்! :( அப்போ நூபுரகங்கை என்னும் சிலம்பாறு உற்பத்தி ஸ்தானம் போயிருந்தோம். தண்ணீரின் ருசி சொல்லி முடியாது. இப்போ சமீபத்தில் 2011 அல்லது 2009 ஆம் ஆண்டில் பையர், மருமகள், நாங்க இரண்டு பேர் போனோம். ம்ஹூம். அந்த அழகே இப்போது இல்லை! "நரக(நகர)மயம்" ஆகி விட்டிருந்தது. சிலம்பாறு மூலஸ்தானத்தில் எல்லாம் சிமென்டால் தொட்டி கட்டி........ கண்ணீரே வந்தது.

Geetha Sambasivam said...

பழமுதிர்சோலை உண்மையாகவே பழங்கள் உதிரும் சோலையாக இருந்தது. இப்போ அந்த நாவல் மரத்தைச் சுற்றிச் சிமென்டால் மேடை போட்டு...... நான் கீழே இறங்கவே மறுத்துட்டேன்! :(

ஜீவி said...

@ Suri Siva

//வாங்கற கல்லடிகளை..//

சிலர் புஷ்பாஞ்சலிகளைக் கூட கல்லடிகளாக பாவிப்பது உண்டு.

ஜீவி said...

@ Sury Siva

நன்றி, சுதாஜி! 'பிலவு'க்கு நட்சத்திரக் குறியிட்டு அர்த்தம் எழுத வேண்டியிருக்குமோ என்ற நினைப்பு இருந்தது. யாராவது கேட்டால் சொல்லிக்கலாம்.

மதுரை?.. இதோ வந்திண்டே இருக்கு!..

உபகதை? நாவலுக்கு ஜெமோ சொன்னதின் பிரதிபலிப்பு. :))

//வீட்டுக் குழாயிலே இருக்கும் வரை ஸ்நானம் செய்வது என்று முடிவு //

ஆகாச கங்கை?..

//ஏன் காது இருந்தும் கேட்கவில்லை என்று
காதைக் கேட்டேன். //

அற்புதமான வார்த்தைப் பின்னல் சுதாஜீ! எப்படி அட்டகாசமா வந்து விழுகிறது பாருங்கள்!

//என்ன நடக்குமோ நடந்து தான் தீரும். //

ஆக, பவகாரணியெல்லாம் உடான்சு என்கிறீர்கள்?..

நடக்குமென்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும்!

யாரு?.. கவியரசர் தானே?

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

இளங்கோவுக்கு எல்லா மதமும் சம்மதமே. ('பிறவா யாக்கைப் பெரியோன்' 'கரியவனைக் காணாத கண் என்ன க்ண்ணே' என்று நிறைய உதாரணங்கள்)

அந்தந்த மதங்களின் நம்பிக்கைகளை பதிக்கிற மாதிரி நாஸூக்காக நாவலின் சிறப்புக்காக எடுத்தாளுவதில் அடிகளார் வல்லுனர்.

அந்த அடிப்படையில் கவுந்தி அடிகளாருக்கான நம்பிக்கையாக மாமுது மறையோனுக்கான பதிலாக அது அமைகிறது. அதுவும் 'நலம்புரி கொள்கை நான்மறையாள!' என்று விளித்துச் சொல்கிறார்.

'கோவலனாவது பவகாரணிப் பொய்கையில் நீராடியிருக்கலாமோ?' என்பது நம் கற்பனை. ஒரு பேராசிரியர் உரை எழுதுவதற்கும் ஒரு நாவலாசிரியர் உரை எழுதுவதற்கும் இதான் வித்தியாசம். பேராசிரியர் எழுத்துக்கு எழுத்து உரை எழுதுவார். நாவலாசிரியருக்கோ கற்பனை வளம் அதிகம். அதனால் எழுதிய எழுத்தின் உள் நுழைஜ்து தோண்டித் துருவி 'இப்படி நடந்திருந்திருந்தால் அப்படி ஆகியிருக்குமோ?' என்று எழுதுவதற்கு சுவை கூட்டுர்வார்.


//கோவலன் தனது செயலுக்கான பிரதிபலனை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் கவுந்தி அடிகளை சந்தித்தான் போலும். //

எல்லாமே கதைப் பின்னல் தான். இந்த அளவுக்கு நம்மை நினைக்க வைத்தது தான் இளங்கோவின் சாமர்த்தியம்! பவகாரணியின் நீராடத் தேவையில்லை என்று கவுந்தி அடிகளாரின் மறுப்பு கோவலனுக்கும் ஆகிறது! வழித்துணையாக வந்த பெரியவரின் வழி அவனுக்கும் ஆகிறது! பெரியண்ணன் எடுத்த முடிவு, சின்ன அண்ணனுக்கும் ஆகிற மாதிரி!

'வாய்மையில் வழுவாது மன்னுயிர் பேணி' என்று நிகழ்காலத்தை நல்லபடி அமைத்துக் கொண்டால் வருங்காலந்தில் எந்தத் துன்பமும் நேராது என்றாலும் இறந்த காலம் என்று ஒன்று இருக்கிறதே' என்று எண்ணத் தோன்றுகிறது. கவுந்தி அடிகளாரைப் பொறுத்த மட்டில் நிகழ்காலம் மட்டும் தான் முக்கியம். பிறவித் தொடர்ச்சியில் நம்பிக்கை இல்லாது இருக்கலாம்.

அப்படியெனில் கோவல்ன நிகழ்கால வாழ்க்கையில் என்ன தவறு தான் செய்து விட்டாண்?..

மாதவியை நாடியது தான் பூதாகாரமாய் எழுந்து கண்ணகியிடமிருந்து அவனைப் பிரித்து விட்டதோ? ஆனால் கடைசி வரை கண்ணகி அவனைப் பிரியத் தயாராக இல்லாமல் இருக்கிறாள் என்பதே அவள் கற்பின் சிறப்பாக ஓதப்படுகிறது. கோவலன் இறந்து பட்டப் பிறகும் தன் உயிர் கொண்டு அவன் உயிரைத் தேடிய பத்தினிப் பெண் அவள்! அவளை மனைவியாகப் பெற்றது தான் எல்லாவித ஊழ்வினைகளையும் தாண்டிய கோவலனின் நல்வினை!

மொத்தத்தில், ஊழ்வினையை நம்பாதது மாதிரிக் காட்டி, அதை நம்ப வைக்க வேண்டும் என்பது தான் இளன்வோவின் திட்டம்!

தொடர்ந்து வாசித்துப் பின்னூட்டம் இடுவதற்கு நன்றி, நண்பரே!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம் (1)

கரெக்ட் கீதாம்மா! சித்ரலேகாவே தான்! எவ்வளவு நளினமாக தீர்க்கமாக வரையக் கூடிய ஓவியர்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்!

'சிலம்புச் செல்வம்' என்ற பெயரில் யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் ஒரு நூல் எழுதியிருப்பதாக நினைவிருக்கிறது. அதே தலைப்பில் சிலம்புச் செல்வரும் எழுதியிருக்கலாம்.

ஆனால் ஆனந்த விகடனில் வெளிவந்தது இதுவல்ல. ஆனந்த விகடனில் பி.ஸ்ரீ.
'சித்திர ராமாயணம்' என்ற தொடரை எழுதினார். இது 1950 வாக்கில். அந்தத் தொடருக்கு 'சித்திரலேகா' தான் படம் வரைந்தார்.

சித்திரலேகா பெண்ணல்ல: ஆண். அவர் இயற்பெயர் நாராயணசாமி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு மனிதன் தன் பிறப்பில் செய்யும் கர்மாக்களும் அந்தக் கர்மாக்களுக்கான வினைகளும் எப்படித் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதை விளக்குவது தான் இந்த சிலப்பதிக்காரத் தேரை உருட்டும் அச்சுப் பகுதி... நமக்குச் சுலபமாக அர்த்தம் கொள்ள வேண்டிச் சொல்ல வேண்டுமெனில் பிறவி எடுத்த மனிதனின் அன்றாடச் செயல்பாடுகளும் அவற்றிற்கான வினைகளும் அவன் அறிந்தோ அறியாமலோ அவனைத் தொடர்கின்றன. செய்யும் செயல்களுக்கான பிரதிபலன் தான் அவனுக்கு வாய்க்கக்கூடிய நல்லதுக்கும் கெட்டதற்கும் காரணமாக இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதற்கு எழுதப் பட்ட காப்பியமே சிலப்பதிகாரம். ஒவ்வொரு பிறவியிலும் மனிதப் பிறவி செய்யும் காரியங்களின் நன்மைகள், அல்லது தீமைகள் பிறவி தோறும் தொடர்ந்து வருகிறது. //

மிகவும் அருமையான விளக்கங்கள். படிக்கவும் சிந்திக்கவும் நியாயமாகவே உள்ளது.

தொடரட்டும் .... மேலும் வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம் (2)

//மூலஸ்தானத்தில் எல்லாம் சிமென்டால் தொட்டி கட்டி........ கண்ணீரே வந்தது.//

தலைக்காவேரியிலும் இந்தக் கதை தானே?

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

சென்னை முழுக்க பழமுதிர் சோலைகள்!..

கிலோ ரூ.50/-க்கு குறைந்து எந்தக் காய்கறியும் கிடையாது! போன வாரம் இந்த குறைந்த பட்சம் ரூ.70/- ஆக இருந்தது. அவரைக்காய், பீன்ஸ் எல்லாம் நெருங்கவே முடியாத விலை! கெட்ட கேட்டுக்கு (நான் அடிக்கடி வாங்குவதால்) OKRA ரூ.60/- ஆக இருந்தது.

பழங்களின் கதையோ?.. வேண்டாம் சாமி!

Geetha Sambasivam said...

என்னுடைய பின்னூட்டம் இன்னும் ஒன்றோ இரண்டோ காணவில்லையே! சித்ரலேகா பற்றி எழுதி இருந்தது. சிலம்புச் செல்வம் சுத்தானந்த பாரதி எழுதி வந்ததா என்னனு நினைவில்லைனு எழுதி இருந்தேன். தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், இலங்கை அரச வம்சத்து வரலாறு பத்தி எல்லாம் குறிப்பிட்டிருந்தேன். அதைக் காணோம்!

Geetha Sambasivam said...

மழையே பெய்யாமல் தண்ணீரே இல்லாமல் காய்கறிகள் பயிர் செய்யும் வித்தை இன்னும் நம்மவர்களுக்குக் கைவரவில்லை ஐயா! மற்றபடி இங்கே இன்னமும் ஐந்து ரூபாய்க்குப் பூஷணி, பறங்கி, வாழைத்தண்டு, வாழைக்காய் போன்றவை கிடைக்கின்றன. பத்து ரூபாய்க்குப் பூஷணி வாங்கினால் எனக்கு இரண்டு நாட்கள் சமயத்தில் இன்னும் அதிகமாக வந்துடும். ஆகவே ஐந்து ரூபாய்க்குப் பூஷணி வாங்க வேண்டி இருக்கும்! வாழைப்பூவும் பெரிய பூ எனில் 7 ரூஅல்லது பத்து ரூ. நான் சின்னப் பூவாகப் பூவன்பூவாக இருந்தால் ஐந்து ரூபாய்க்குள்ளே வாங்குவேன். பழங்களும் பரவாயில்லை ரகம் தான்! அப்படி ஒன்றும் மோசமில்லை. பருப்புக்களும் விலை குறைந்திருக்கின்றன. முந்தாநாள் தான் மளிகை சாமான் வாங்கினேன். அதில் பருப்பு விலை குறைந்துள்ளது. என்றாலும் நான் மாத்தி மாத்திச் சமைப்பதால் ஒரு கிலோ துவரம்பருப்பிலேயே 40 நாள் ஓட்டிடலாம். :)

Bhanumathy Venkateswaran said...

சுகமான எளிய நடை.! நான் பூம்புகார் படம் பார்க்கவில்லை. இப்போது டி.வி.யில் போட்டாலும் பார்ப்பதில்லை. உங்களுடைய சிலப்பதிகார விளக்கத்தை படிக்கும் பொழுது மனதில் கோவலனுக்கும், கண்ணகிக்கும் ஒரு பிம்பம் உருவாகிறது. தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

நலம்புரி கொள்கை கொண்ட நான்மறையோரே! எங்களுக்குப் பிலம் புக வேண்டிய நிலை இல்லாது உளது. புண்ணிய சரவணத்தில் மூழ்கி நீராடவும் வேண்டாம். இறந்த பிறப்பில் எய்தியதெல்லாம் பிறந்த பிறப்பில் தான் பார்க்கிறோமே! அதனாலும் பவகாரணியில் அமிழ்ந்து நீராடவும் வேண்டாம். வாய்மையில் வழுவாது மன்னுயிர் பேணுபவர்க்கு அடைய முடியாத எதுவும் இவ்வுலகில் உண்டோ?.. அதனால் இட்ட சித்தியிலும் நீராட வேண்டோம். நீங்கள் விரும்பும் திருமால் திருவடித் தொழச் செல்வீராக! நாங்களும் எங்கள் வழி மதுரை செல்கிறோம்..” என்று நளினமாக மறையோனிடம் விடை பெற்றார்.//

இளங்கோவடிகள் கவுந்திஅடிகள் மூலம் சமணமத கொள்கையை சொல்கிறார்.


//பிறவி எடுத்த மனிதனின் அன்றாடச் செயல்பாடுகளும் அவற்றிற்கான வினைகளும். அவன் அறிந்தோ அறியாமலோ அவனைத் தொடர்கின்றன. செய்யும் செயல்களுக்கான பிரதிபலன் தான் அவனுக்கு வாய்க்கக்கூடிய நல்லதுக்கும் கெட்டதற்கும் காரணமாக இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதற்கு எழுதப் பட்ட காப்பியமே சிலப்பதிகாரம். ஒவ்வொரு பிறவியிலும் மனிதப் பிறவி செய்யும் காரியங்களின் நன்மைகள், அல்லது தீமைகள் பிறவி தோறும் தொடர்ந்து வருகிறது. இதைத் தான் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று பிரகடனப்படுத்துகிறார் இளங்கோ அடிகளார்..//

உண்மை.

கதை நடக்கும் சோழநாட்டிலிருந்து , பாண்டிய நாட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு வந்து இருக்க வேண்டும் கண்ணகியும், கோவலனும்?

தொடர்கிறேன்.


Related Posts with Thumbnails