மின் நூல்

Monday, June 13, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி--14

டைசியில் அந்த மாமுது மறையோன் சொன்னபடியே தான் நடந்தது.

மதுரையை நோக்கிய நடைபயணத்தின் நடுவே கவுந்தி அடிகளும் கண்ணகியும் வெகுவாகக் களைத்துப் போயினர்.  அவர்கள் நாவறட்சியை போக்க, பக்கத்தில் எங்காவது நீர்நிலை இருக்குமா என்று தேடிப் புறப்பட்டான் கோவலன்.  அவனது எதிர்ப்பார்ப்பின்படியே சற்று தூரத்தில் ஒரு நீர்நிலை தென்பட்டது.  அதன் அருகாமையில் கோவலன் நெருங்கும் பொழுது திடீரென்று ஒரு பெண் அவனை நோக்கி வருவதைப் பார்த்தான்.

அந்தப் பெண் அருகில் வரவரத் தான் கோவலனுக்கும் தெரிந்தது.. மாதவியின் தோழி வசந்தமாலையையே உரித்து வைத்திருந்தாள் அவள். கோவலனுக்கு மிக அருகாமையில் அவள் வந்ததும் தடாலென்று அவன் காலடிகளில் விழுதாள். அவள் கண்கள் கலங்கின. உதடுகள் படபடத்தன. “நீங்கள் திருப்பி அனுப்பிய மடல் கண்டு மாதவி மிகவும் கலக்கமுற்றாள். ‘தாழைமடலில் எழுதி நான் அனுப்பிய அந்த முடங்கலில் தவறேதும் செய்யவில்லையே!!  அந்த மடலை எடுத்துச் சென்ற நீ தான் அவரிடம் தவறாக ஏதும் கூறிவிட்டாய் போலும். அதனால் தான் குற்றமற்ற அவர் என்னிடம் வாராது போனார்!’ என்று மிகவும் வருந்தினாள்” என்று சொல்லும் பொழுதே அவள் கண்களில் நீர் வடிந்தது. 

“எப்படிப்பட்டோராயினும் கணிகையர் வாழ்வு என்றால் மிகவும் இழிந்ததாகத் தான் எண்ணுகின்றனர்’ என்று மாதவி மிகவும் துயருற்றாள். கழுத்து முத்து வடத்தை அறுத்து வீசினாள். எரிந்து விழுந்து என்னையும் துறத்தினாள்.  நீங்களும் மதுரை மூதூர் நோக்கிப் புறப்பட்ட செய்தியை எதிர்ப்பட்டோர் சொல்ல, உங்களைத்  தேடிவந்தேன்.  எனக்கான கட்டளை யாது?” என்று வசந்தமாலையை ஒத்திருந்த அந்தப் பெண் கோவலனிடம் கேட்டாள்.

இந்த சமயத்தில் ‘அறிவை மயக்கும் தெய்வம் ஒன்று இக்காட்டிடை உலாவி வருகிறது’ என்று மறையோன் சொன்னது கோவலனது நினைவில் உறைத்தது.  ‘வசந்தமாலையைப் போலவே இருக்கும் இவள் யார் என்ற சூது அறிய வேண்டும்’ என்ற எண்ணத்தில் கோவலன் மனத்திற்குள் கொற்றவை மந்திரத்தை உபாசித்தான்..  அவன் அந்த மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கிய ஷணத்தில், என்ன ஆச்சரியம், அந்தப் பெண்ணிடம் ஏதோ மாற்றம் ஏற்பட்டது போல உண்ர்ந்தான் கோவலன்..

“என்னை மன்னியும்..” என்று அந்தப் பேண் கோவலனிடம் தாழ்ந்து இறைஞ்சினாள். “நான் இவ்வனத்திலே திரியும் இசக்கி. உன்னை மயக்க எண்ணி வசந்தமாலை போன்ற உருக்கொண்டேன்.  அருட்பெருஞ்செல்வி கண்ணகிக்கும், தவநெறி சார்ந்த கவுந்தி அடிகளாருக்கும் எனது இந்த இழிந்த செயல் தெரியாதிருக்க வேண்டும்.”.’ என்று கோவலனிடம் வேண்டி மறைந்தது அந்த கானுரைத் தெய்வம்.  திகைத்த கோவலன் பின் தாமரை இலையிலே நீரேந்தி வந்து கண்ணகிக்கும் அடிகளாருக்கும் அளித்தான்.

காட்டுப்பாதையாயினும்  வெம்மை சற்றும்  குறைந்தபாடில்லை. அதனால் இனியும் இந்த பாலை வழிச் செல்லலாகாது என்ற எண்ணம் கொண்ட நேரத்து அவர்கள் வழிப்பயணத்தில் மரங்களடர்ந்த்  சோலை ஒன்று  குறுக்கிட்டது..  சோலையினுள் கொற்றவையின் கோயில்  ஒன்றும் இருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன் தான் கொற்றவையைக் குறித்தான மந்திரத்தைக் கோவலன் உச்சாடனம் செய்தான், அதற்குள் கொற்றவையின் தரிசனமே நிகழப்போகிறதா என்று நமக்கோ ஆச்சரியமாய் இருக்கிறது.

அந்தக் கொற்றவையின் கோயிலை அவர்கள் நெருங்க நெருங்க அந்த அதிசயக் காட்சியைக் கண்டனர்.  அக்கோயில்  முன்னே  சாலினி  (ஷாலினி! இக்காலத்துப்  பெயர் போல் இல்லை?..) என்னும் பெண் தெய்வம் ஏறப்பெற்றாள். தெய்வம் ஏறப்பெற்றதால் அவள் உடல்  சிலிர்த்தது. அவள் கைகளை எடுத்து  உயர்த்தி உயர்த்தி முள்வேலி இடப்பட்ட எயினர் ஒன்றாக கூடிப் பகிர்ந்து உண்ணும் ஊர் மன்றத்தில் காண்போர் வியக்க  கால்பெயர்த்து ஆடினாள். 

கொற்றவைக்கு நீங்கள் உங்கள் செய்கடனைத் தராவிட்டால் அவள் உங்கள் செயல்களுக்கு வெற்றியைத் தரமாட்டாள். ஆதலின் கொற்றவைக்கு சேர வேண்டிய பலிக்கடனை அளிப்பீராக!’ என்று ஆட்டத்தினூடே குரல் எழுப்பி கூத்தாடினாள். தெய்வம் ஏறப்பெற்ற அவளது ஆட்டத்தின் நடுவே சடக்கென்று அவள் பார்வை கோயிலின் ஒரு மூலையில்  அமர்ந்திருந்த கண்ணகியின் மேல் படுகிறது. கண்ணகியைப் பார்த்தவுடனேயே அவளைப் பற்றி நன்கு அறிந்தாற்போல உற்சாகம் சாலினையைத் தொற்றிக்கொள்கிறது. தெய்வாட்டம் ஆடிக்  கொண்டே கண்ணகி பக்கம் கைகாட்டி மற்றவர்களுக்கு அவளைப்  பற்றிச் சொல்வது போல கூவுகிறாள்:

இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி
தென் தமிழ்ப்பாவை செய்தவக் கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
திருமா மணிஎனத் தெய்வமுற்று உரைப்ப....

“இவள் யார் தெரியுமா?.. இவள் தான் கொங்கு நாட்டின் செல்வி! குடமலை நாட்டை ஆளுபவளும் இவளே!  தென்தமிழ்ப்பாவை!  மேலோர் செய்த தவக்கொழுந்து! ஒப்பாற்ற மாமணியை ஒத்து உலகிற்கெல்லாம் ஒளியைத் தரும் தெய்வ மகள்..” என்று சாலினி ஓங்கிக் குரல் எழுப்புகிறாள்.

அவள் புகழுரை கேட்டு கண்ணகி நாணுகிறாள். அறிவுடைய இப்பெண் ஏதோ மயக்கத்தால் இவ்வாறு கூறினாள் போலும்’ என்று எண்ணியவாறே அரும்பெரும் தன் கணவன் கோவலனின் பக்கத்தில் ஒடுங்கி புன்னகை பூத்து நாணி முறுவலிக்கிறாள். வேட்டுவவரி முழுக்க முழுக்க கொற்றவையின் போற்றல் பாடல்கள்.  அந்த வேட்டுவ மக்கள். திருமகளைத் துதித்துப் பாடுகிற வரிவரியாய் நீளும் வீரத்திருமகளின் விழுமிய திருக்கோலம் போற்றும் பாடல்கள்!  

சாலினி கொற்றவை கோலம் நீங்கப் பெற்ற பிறகு சாதாரண சாலினி ஆகிறாள். தெய்வாட்டம் நிகழ்ந்த அந்த இடமே திடீரென்று அமைதியில் ஆழ்கிறது.  இது தான் சரியான சமயம் என்று தேர்ந்து கோவலன் கவுந்தி அடிகளாரை நோக்கிக் கூறலானான்:  “பெரியீர்! பகல் பொழுது வெம்மையில் கண்ணகி பருக்கைக் க்ற்கள் நிறைந்த இந்தப் பாதையிலே நடக்க மிகவும் சிரம்பபடுகிறாள்.. அதனால் கொடுமையான வெயிலின் துன்பம் நீங்கிய  இரவின் நிலா ஒளியிலேயே மேற்கொண்டான பயணத்தை மேற்கொள்வோம்’ என்கிறான்.

அடிகளாருக்கும் அவன் சொன்னது ஏற்புடையதாக இருந்தது. அன்று மூவரும் விடிய விடிய நடந்தனர். பொலபொலவென்று பொழுது விடியும் நேரத்து வழியில் இடைப்பட்ட ஊர் ஒன்றின் புறத்தே கண்ணகியையும் கவுந்தி அடிகளாரையும் தங்க வைத்து விட்டு, கோவலன் அருகிலிருக்கும் நீர்நிலையைத் தேடிச் சென்றான்.

செல்லும் வழியில் அவனுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. கோவலனை அறிந்த கோசிகன் என்னும் பிரமச்சாரி அங்கு எதிர்ப்படுகிறான். கோசிகனுக்கோ இவன் கோவலன்  தானோ என்று ஐயம் வேறு இருந்தது. அதனால், அருகிலிருந்த குறுகத்திச் செடி சுற்றியிருந்த ஒரு மலர்ப்பந்தலைப் பார்த்து கோவலுக்குக் கேட்கிற மாதிரி அவன் பேசலுற்றான்:: “மாதவியே! கோவலன் பிரிய கொடுந்துயர் எய்திய மாதவி போல நீயும் இந்த முது வேனில் காலத்தில் வெயிலுக்கு ஆற்றாது வாடி துன்புற்றாயோ?” என்கிறான். பந்தலில் படர்ந்திருந்த அந்த மலர்க்கொடிக்கும் பெயர் மாதவி என்பது இங்கு கோசிகனின் கூற்றுக்குப் பொருத்தமாக அமைகிறது.

கோசிகன் சொன்னதைக் கேட்டு கோவலன் திகைக்கிறான். தன்னைத் தெரிந்திருந்த இவன் யார் என்று ஆச்சரியம் மேலிட, “ஐயனே! யாது நீ கூறினாய்?. விளக்கமாகச் சொல்வாயாக..” என்று அவனைப் பார்த்துக் கேட்டான்.  கோவலன் கேட்ட கேள்வியால் இவன் கோவலன் தான் என்று கோசிகனுக்கும் நிச்சயமாயிற்று. அதனால் நேரடியாகவே பேசும் தைரியம் கொண்டு,”கோவலனே! நீ புகார் விட்டு நீங்கினதும் என்னவெல்லாம் நடந்து விட்டன என்று உனக்குத் தெரியுமா?.. தன்னிடம் இருந்த மாணிக்கத்தை இழந்த நாகம் போல உன் பெற்றோர் ஒடுங்கிப் போயினர்.. உன் உறவினரும் மிகுந்த துன்பம் உற்றனர். உன் தந்தை மாசாத்துவான் உன்னைத் தேடி அழைத்து வர ஏவலர்களை எல்லா திசைகளுக்கும் அனுப்பினார். இராமபிரான்  கானகம் சென்ற பொழுது அயோத்தி அடைந்த துன்பம் போல இங்கும் நிகழ்ந்தது. அதுமட்டுமில்லை..” என்று பெருமூச்செறிந்து தொடர்ந்தான்:

“கோவலனே! இன்னொரு செய்தியும் உனக்குத் தெரியத்தான் வேண்டும்.. நீ திருப்பி அனுப்பிய ஓலையை வசந்தமாலை மாதவியிடம் தந்ததும் அவள் ஆறாத துயருற்றாள். நெடுநிலை மாடத்து நடுநிலையில் அமைந்த கட்டிலில் விழுந்து தன்னைத் தனக்கேத் தெரியாது உருக்குலைந்து போனாள். அவளுக்கு ஆறுதல் கூறுவதற்காக மாதவியின் மாளிகைக்குச் சென்றிருந்தேன். ‘உன்னுடைய இணை அடி தொழுகின்றேன்.. எனக்குற்ற துன்பத்தைப் போக்குவாயாக..” என்று மாதவி என் தாள் பணிந்து தன் மென்மையான கரத்தால் உனக்கு ஒரு முடங்கலை எழுதி ‘என் கண்மணி போன்றவருக்கு இதைக் காட்டுவாயாக’ என்று என்னிடம் தந்தாள். பல இடங்களிலும் அலைந்து இன்று உன்னை இங்கு கண்டேன். இந்தா..” என்று மாதவியின் தாழம்பூ மடல் முடங்கலை கோவலனிடம் தந்தான்..

கோசிகனிடமிருந்த முடங்கல் கோவலனின் கை சேர்ந்ததும் மாதவியின் கரம் பற்றிய உணர்வே அவன் அடைந்தான். அவன் அவளுடன் கூடி இருந்த காலத்தில் அவளில் உறைந்திருந்த நெய் வாசம் அவனில் பற்றிக் கொண்டது. அந்த உணர்வை அனுபவித்த நிலையில் சிறிது  பொழுது அந்த முடங்கலைக் கையில் வைத்திருந்தவனாய் தடுமாறினான் கோவலன். பின் தன் நிலை உணர்ந்தவனாய் மடலைப் பிரித்ததும் அவன் மனதோடு பேசும் மொழியில் மாதவி எழுதியிருந்ததில் அவன் விழிகள் மேய்ந்து பரபரத்தன. டிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்..’ .என்று ஆரம்பித்திருந்தது அந்த முடங்கல்.  

ஊழ்வினை என்றால் அதில் நல்லதும் தீயனவும் கலந்து தான் இருக்கும். தீவினைக்கானப் பலனை அனுவிக்க விதி உந்திச் செலுத்தும் பொழுது செய்த நல்ல காரியங்களுக்கான நல்வினையும் அந்த தீவினை வேகத்தை மட்டுப்படுத்த எதிர்த்துப் போராடும்.  இந்தப் போராட்டத்தில் எந்த வினைக்கான தாக்கம் அதிகம் இருக்கிறதோ அதுவே வெற்றி பெறும்.

கோவலன் மதுரை நோக்கிச் செல்வதைத் தடுக்க இதற்கு முன்னரே நடந்த முயற்சிகள் நமக்குத் தெரியும். முதலில் வசந்தமாலை கொண்டு வந்த மாதவியின் முடங்கல், அடுத்து பவகாரணிப் பொய்கையில் நீராட மாமுது மறையோனின் அறிவுறுத்தல், அதற்கடுத்து வசந்தமாலையின் உருக்கொண்ட இசக்கியின் முயற்சி, இப்பொழுதோ கோசிகன் மூலமாக மாதவியின் முடங்கல். எல்லாமே மதுரை நோக்கிய கோவலனின் நீண்ட பயணத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளே.கோவலன் செய்திருந்த நல்வினைகளின் தாக்கச் செயல்பாடுகள் அவைஇருந்தும் தீவினைகளின் அழுத்தம் அதனினும் விஞ்சி இருந்தமையால் கோவலன் மாமதுரை செல்லும் முயற்சிகளை எந்த நல்வினையாலும் தடுக்க முடியாது  
போயிற்று

இந்தக் காப்பியத்தை வாசித்துக் கொண்டே வரும் பொழுது இன்னொரு விஷயமும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.  இந்த மாதிரி ஏதாவது நல்வினை குறிக்கிட்டு கோவலனை புகார் நகருக்குத்  திரும்பத் தூண்டும் பொழுதெல்லாம் கோவலன் தனி ஆளாகத் தான் முடிவெடுக்கும்படியாக நேரிடுகிறது.  அந்த சமயங்களிலெல்லாம் கண்ணகியோ அன்றி கவுந்தி அடிகளோ அவனுடன் இல்லாதது மாதிரியான சூழ்நிலைகளே அமைக்கின்றன. . தண்ணீர் கொண்டு வர நீர்நிலை நோக்கி செல்வது மாதிரியான ஏதாவது காரணம் வைத்து மற்ற இருவர்களிடமிருந்து கோவலன் தனியே பிரிந்து விடுகிறான்.. இதனால் புகார் நகருக்குத் திரும்புதல் சம்பந்தமாக மற்றவர்களுடன் அவன் கலந்து முடிவெடுக்க முடியாத சூழ்நிலைகளே தொடர்ந்து ஏற்படுகினறன..  இதற்குக் காரணம் கோவலனின் நல்வினையும், தீவினையும் அவனுக்குள்ளேயே போராடும் பொழுது மற்றவர்களின் நல்வினையோ அல்லது தீவினையோ கோவலனின் வினைகளுடன் கலக்காமல் இருக்கத்தான். ஊழ்வினை தொடர்ந்து வந்து தன் தீவிரத்தை அதிகப்படுத்துகையில் பல சமயங்களில் இந்த மாதிரி தனிமனிதப்  போராட்டமாகவும் மற்றவர்களின் வினைகள் இதனுடன் கலந்து விடாமல் மிகக் கவனமாக தடுக்கப்பட்டு விடுகிற மாதிரியே சூழ்நிலைகள் அமைக்கப்படுகின்றன என்று தான்  எடுத்துக் கொள்ள வேண்டும்..

இப்பொழுதும் அவனை புகார் நகர் திருப்ப முயற்சிக்கும் நல்வினைகளின் 
செயல்பாடாக மாதவியின் இந்த முடங்கல் செயல்படுகிறது. கோவலன், அவனுக்கான நல்வினையின் இந்தத் தூண்டுதலை எப்படி எதிர்கொள்கிறான் என்று பார்ப்போம்.

(தொடரும்)



படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.

21 comments:

ஸ்ரீராம். said...

//துறத்தினாள்//

//எதிரிப்பட்டோர்//

ஸ்ரீராம். said...

நல்வினை சமிஞ்ஞைகள் காட்டுவதை நாம் இந்தக் காலத்திலும் பார்க்கலாம். எத்தனை பேர் அதை ஏற்றுணர்ந்து தடம் மாறுவோம்?

கோமதி அரசு said...



//கோசிகனுக்கோ இவன் கோவலன் தானோ என்று ஐயம் வேறு இருந்தது. அதனால், அருகிலிருந்த குறுகத்திச் செடி சுற்றியிருந்த ஒரு மலர்ப்பந்தலைப் பார்த்து கோவலுக்குக் கேட்கிற மாதிரி அவன் பேசலுற்றான்:: “மாதவியே! கோவலன் பிரிய கொடுந்துயர் எய்திய மாதவி போல நீயும் இந்த முது வேனில் காலத்தில் வெயிலுக்கு ஆற்றாது வாடி துன்புற்றாயோ?” என்கிறான். //

இந்த பகுதி 11வது படிக்கும் போது பாடமாக வந்தது எனக்கு.


//கோவலன் செய்திருந்த நல்வினைகளின் தாக்கச் செயல்பாடுகள் அவை. இருந்தும் தீவினைகளின் அழுத்தம் அதனினும் விஞ்சி இருந்தமையால் கோவலன் மாமதுரை செல்லும் முயற்சிகளை எந்த நல்வினையாலும் தடுக்க முடியாது
போயிற்று.///

பயணத்தை நல்வினையாலும் தடுக்க முடியாது போனது , தீவினைகளின் அழுத்தம் அதிகம் ஊழ்வினையை ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்த்தும் இடங்கள்.

//பல சமயங்களில் இந்த மாதிரி தனிமனிதப் போராட்டமாகவும் மற்றவர்களின் வினைகள் இதனுடன் கலந்து விடாமல் மிகக் கவனமாக தடுக்கப்பட்டு விடுகிற மாதிரியே சூழ்நிலைகள் அமைக்கப்படுகின்றன என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்..//

அருமையாக சொன்னீர்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான நடை. ரசிக்கும்படியான நிகழ்வுகள். கடந்த காலத்திற்கே எங்களை அழைத்துச் சென்றுவிடுகின்றீர்கள். நன்றி. முதல் பத்தியில் நாவரட்சியைப் போக்க... என்றுள்ளது. நாவறட்சி தானே?

வை.கோபாலகிருஷ்ணன் said...

// இந்த மாதிரி ஏதாவது நல்வினை குறிக்கிட்டு கோவலனை புகார் நகருக்குத் திரும்பத் தூண்டும் பொழுதெல்லாம் கோவலன் தனி ஆளாகத் தான் முடிவெடுக்கும்படியாக நேரிடுகிறது. அந்த சமயங்களிலெல்லாம் கண்ணகியோ அன்றி கவுந்தி அடிகளோ அவனுடன் இல்லாதது மாதிரியான சூழ்நிலைகளே அமைக்கின்றன. . தண்ணீர் கொண்டு வர நீர்நிலை நோக்கி செல்வது மாதிரியான ஏதாவது காரணம் வைத்து மற்ற இருவர்களிடமிருந்து கோவலன் தனியே பிரிந்து விடுகிறான்.. இதனால் புகார் நகருக்குத் திரும்புதல் சம்பந்தமாக மற்றவர்களுடன் அவன் கலந்து முடிவெடுக்க முடியாத சூழ்நிலைகளே தொடர்ந்து ஏற்படுகினறன.. இதற்குக் காரணம் கோவலனின் நல்வினையும், தீவினையும் அவனுக்குள்ளேயே போராடும் பொழுது மற்றவர்களின் நல்வினையோ அல்லது தீவினையோ கோவலனின் வினைகளுடன் கலக்காமல் இருக்கத்தான். ஊழ்வினை தொடர்ந்து வந்து தன் தீவிரத்தை அதிகப்படுத்துகையில் பல சமயங்களில் இந்த மாதிரி தனிமனிதப் போராட்டமாகவும் மற்றவர்களின் வினைகள் இதனுடன் கலந்து விடாமல் மிகக் கவனமாக தடுக்கப்பட்டு விடுகிற மாதிரியே சூழ்நிலைகள் அமைக்கப்படுகின்றன//

யோசிக்க வைக்கும் மிக அருமையான செய்திகள். இந்தத் தொடர் மிகவும் சுவாரஸ்யமாகச் செல்கிறது. பகிர்வுக்கு நன்றிகள். மேலும் தொடரட்டும்.

Ajai Sunilkar Joseph said...

இதன் முந்தைய பகுதியை
வேலைப்பளு காரணமாக
படிக்காமல் விட்டு விட்டேன்.
பின்னர் படிக்கிறேன்...

G.M Balasubramaniam said...

அழகிய தமிழ் மொழியை சிலம்பாலேயே சொல்லிப்போகும் உங்களை சிலம்புப் பதிவர் எனலாமா

மோகன்ஜி said...

ஜீவி சார்,
நீங்கள் சொல்ல எடுத்துக்கொண்ட களத்தை நோக்கி உங்கள் எழுத்து காவிரிப்புனலாய் பாய்கிறது. சிலம்பை மேலாண்மை,உளவியல், காவியநோக்கு, வரலாற்று நுண்மை, அறக்கோட்பாடு என எத்தனையோ கோணங்களில் விவரிக்கப் புகுந்தாலும், முழுமையான தரிசனம் காண இயலும். மிகவும் எளிமையாக சொல்லப்பட வேண்டும் என நீங்கள் மெனக்கெடுவதைப் புரிந்து கொள்கிறேன். அதில் தெரிகிறது உங்கள் மேதமை. இதை நான் எழுதியிருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசிக்கிறேன். பொன் இழைத்த தேராய் செறிவு காட்டியிருப்பேனோ? நீங்களானால் மலர்ப்பாதை போட்டிருக்கிறீர்கள். சுகந்தம் கொள்ளை கொள்கிறது. என் அன்பும் வாழ்த்துக்களும் சார்!

மோகன்ஜி said...

எனக்கு திஜானகிராமனின் நடந்தாய் வாழி காவேரி நினைவிலாடுகிறது. கண்ணகியும் கோவலனும் மதுரைக்குப் போன பாதையை, தன்னுடைய பயணத்துக்கும் உரித்தாக்கி மேற்கொண்ட அவர் பயணம் அது.

வே.நடனசபாபதி said...


தெய்வம் ஏறப்பெற்ற ஷாலினி சோழநாட்டைச் சேர்ந்த கண்ணகியை எப்படி இவள் தான் கொங்கு நாட்டின் செல்வி என்கிறாள்? இளங்கோ அடிகள் சேரநாட்டை சேர்ந்தவர் என்பதால் அப்படி சொன்னாரா? அல்லது உண்மையிலேயே கண்ணகி சேர நாட்டைச் சேர்ந்தவரா?

அவனை புகார் நகர் திருப்ப முயற்சிக்கும் நல்வினைகளின் செயல்பாடாக மாதவியின் முடங்கல் செயல்படும்போது, .கோவலன் அவனுக்கான நல்வினையின் இந்தத் தூண்டுதலை எப்படி எதிர்கொள்கிறான் என்று பார்க்க காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

திருத்திவிட்டேன்.

நல்வினை சமிக்ஞை என்று தெரிந்து கொள்வது எப்படி?.. அதான் குழப்பம். தெரிந்து கொள்வதற்கும் நல்வினை சேகரிப்பு தேவை.. அதான் பாடம்.

ஜீவி said...

@ கோமதி அரசு

உணர்ந்து வாசித்து வருவதஏகு நன்றி.

ஜீவி said...

@ வை.கோ.

நம் அனுபவங்கள் தான் இதையெல்லாம் எழுத துணை நின்று ஆமாம் போடவும் செய்கிறது. வாசித்து வருவதற்கு நன்றி, கோபு சார்.

ஜீவி said...

@ பிரியமில்லாதவன்

முந்தைய பகுதியைப் படித்து விட்டு மீண்டும் இந்தப் பகுதியைப் படியுங்கள்.
இனி வரவிருக்கிற அடுத்த பகுதையை அப்புறம் படிக்கலாம். அப்பொழுது வரிசைகிரமமாய் நிகழ்வுகள் புரிபடும். வாசித்து வருவதற்கு நன்றி.

ஜீவி said...

Dr. B,J.

தங்கள் ரசனைக்கும் தொடர்ந்து வாசித்து வருவதற்கும் மிக்க் நன்றி, ஐயா.

வல்லினம், இடையினம் இரண்டும் புழக்கத்தில் இருக்கின்றன. நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று மாற்றி விட்டேன்.

ஜீவி said...

@ மோகன்ஜி (1)

அம்மாடி!.. எவ்வளவு அழகாக எழுத வருகிறது, உங்களுக்கு?.. காவிய நடையில் கவிதை கொஞ்சிக் கொஞ்சி தளிர் நடை பயில்கிறது. ஐந்து தறைகள் சொல்லி இருக்கிறீர்கள். 1. மேலாண்மை 2. உளவியல் 3. காவிய நோக்கு 4. வரலாற்று நுண்மை 5. அறக்கோட்பாடு.

இதில் மேலாண்மையை இது வரை நினைத்தேப் பார்த்ததில்லை. அறிவூட்டலுக்கு நன்றி. இனி கவனம் கொள்கிறேன். அதே மாதிரி வரலாற்று நுண்மையும். அறக்கோட்பாடு தான் அடித்தளம் என்பதால் கவலையில்லை. அதுவாக வந்து ஒட்டிக் கொண்டு விடும். உளவியல் தான் நம் கைவசம் இருக்கும் ஒரே ஐவேஜூ. அந்த ஜபர்தஸ்த்தில் தான் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது, இப்போதைக்கு. பார்வையில் இன்னும் கூர்மை வேண்டும் என்று தெரிகிறது. மசமசப்பைத் தாண்டி செயல்பட வேண்டும். செய்கிறேன். சுகந்தம் மயக்குகிறது; மயங்காமல் மேலே செல்ல வேண்டும். கூடி பாதையைச் செப்பனிடுவதற்கு நன்றி, மோகன்ஜி. தொடர்ந்து வந்து சாத்தனாராகச் சுட்டிக் காட்ட வேணும்.

பின்னாடி பாருங்கள், அன்பர் வே.நடனசபாபதி சோழ நாட்டு கண்ணகியை எப்படி கொங்கு நாட்டுச் செல்வி என்று சொல்லப்போயிற்று என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார். நீயாக இஷடத்துக்குப் பொ[ருள் கொள்ளாதே; ஆழ்ந்து படித்து பதில் சொல் என்று மனப்புறா படபடக்கிறது. படிக்கிறேன்.
நன்றி, மோகன்ஜி.

ஜீவி said...

@ மோகன்ஜி (2)

சிட்டியுடன் சேர்ந்து தி,ஜா. எழுதியது இல்லையா?..

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

ஷாலினி அல்ல. சாலினி என்றே அழைப்போம். நாமாக இந்திச் சொல்லைத் திணிப்பானேன்?.. :))

என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால் சாலினி தெய்வம் ஏறப்பெற்ற நிலையில் சொல்வது இது. அதாவது எதிர்கால நிகழ்வுகளையும் தெய்வ நிலையில், தெய்வ வாக்காய் சொல்கிறாள். சேர நாட்டில் தெய்வ வழிபாட்டுக்கு உரித்தாகும் கண்ணகியை கொங்கர்ச் செல்வி என்று அழைத்திருக்கலாம். அதனால் தான் பின்னால் நடக்கப் போவது தெரியாத கண்ணகி அவள் புகழுரை கேட்டு நாணுகிறாள். அறிவுடைய இப்பெண் ஏதஓ மயக்கத்தில் இதைக் கூறினாள் போலும்' என்று நினைக்கிறாள். கோவலனின் பக்கத்தில் ஒதுங்கி நாணி புன்னகை பூக்கிறாள்.

ஜீவி said...

@ வே நடனசபாபதி (தொடர்ச்சி)

//இளங்கோ அடிகள் சேரநாட்டை சேர்ந்தவர் என்பதால் அப்படி சொன்னாரா? அல்லது உண்மையிலேயே கண்ணகி சேர நாட்டைச் சேர்ந்தவரா? //

இளங்கோ அடிகள் அன்றைய தமிழகம் முழுவதற்கும் சொந்தமானவர். அவர் பிறந்த பூமி மறந்தே போகும் அளவுக்கு தமிழ்த்தாயின் திருமகனார் அவர். அடிகளார் மூன்று நிலப்பகுதிகளையும், மூவேந்தர்களின் சிறப்புகளையும் வித்தியாசப்படுத்தாமல் பாடியிருக்கிறார் என்பதே அவரின் சிறப்பு.

பிரிவினை, பிரித்துப் பார்ப்பது எல்லாமே சுயநலத்தின் அடிப்படையில் எழுவது. இதை நன்கு தெரிந்து வைத்திருந்தவர் அடிகளார் என்பதினால் தான் சிலப்பதிகாரத்திற்கான பதிகத்திலேயே, 'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக' என்ற பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது.

அதனால் தான் அடிகளாரும் கண்ணகியும் தமிழகத்துக்குச் சொந்தமானவர்கள் என்று சொல்வதிலேயே பெருமை கொள்கிறோம்.

சிலப்பதிகாரத்தின் செல்வாக்கு தான் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.க்கு தமிழரசு கழகத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது போலும்! தமிழரசுக் கட்சிக்கான கொடியும், வில்-புலி-மீன் என்று தமிழக மூவேந்தர்களின் இலட்சினைகளையே கொண்டிருந்தது.

தொடர்ந்து வாசித்து வருவதற்கும், கருத்திடுவதற்கும் மிக்க நன்றி, நண்பரே!

Geetha Sambasivam said...

மிகவும் ஆழமாக ஆராய்ந்து படித்து எழுதுகிறீர்கள்.

ஜீவி said...

@ Geetha Sambasivam

தாங்கள் சொல்லிக் கேட்க சந்தோஷம். ஏதாவது கருத்துப் பிழை இருந்தாலும் சொல்லுங்கள். திருத்திக் கொள்ளலாம்.

இங்கு ஆரம்பித்ததை புயல் வேகத்தில் படித்து இன்று வெளியிட்ட 20-வது அத்தியாயத்தில்
நிறைவு செய்திருக்கிறீர்கள். தொடர் வாசிப்பில் ஒரு பொதுவான அபிப்ராயம் ஏற்படும். என்ன அபிப்ராயம் ஏற்பட்டதென்று சொல்லுங்கள். அது மீதிப் பகுதிகளை எழுதும் போது உபயோகமாக இருக்கும்.

தொடர்ந்த பின்னூட்டங்களுக்கு நன்றி.

Related Posts with Thumbnails