பகுதி--20
திருமணத்திற்கு முன்னர் ‘இதனை அடக்கியவரையே மாலையிட்டு மணப்போம்’ என்று கன்னியர் காளைகளை வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
திருமணத்திற்கு முன்னர் ‘இதனை அடக்கியவரையே மாலையிட்டு மணப்போம்’ என்று கன்னியர் காளைகளை வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
மொத்தம் ஏழு காளைகள். அதற்கேற்ப ஏழு கன்னியர். அவர்களுக்கான இயற்பெயர் இருப்பினும் இந்த
குரவைக் கூத்திற்காக மாதுரி அவர்களுக்கு
வேறு பெயர்கள் இட்டாள். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற பெயர்களை
அவர்களுக்கு சூட்டினாள். பின் ‘குரல்’ என்று பெயர் கொண்டவளை மாயவன் என்றும் ‘இனி’ என்று பெயர்
கொண்டவள் பலராமன் என்றும் ‘துத்த’ என்றவள் நப்பின்னையாகவும் கொண்டனர். மாயவன் என்று பெயரிட்டவளை அடுத்து நப்பின்னையும் தாரமும் நின்றனர். கைக்கிளையை நப்பின்னைக்கு இடப்பக்கத்தே
நிறுதினாள். தாரத்திற்கு வலப்புறத்தே விளரியை நிறுத்தினாள். விளரிக்கும், உழைக்கும் அடுத்து
பலராமன்.
அழகிய துளசி மாலையை எடுத்து
நப்பின்னை மாயவனின் கழுத்தில் சூட்டினாள்.
உடனே கூத்து நூலில் சொல்லியிருக்கிறபடி
குரவைக் கூத்து ஆரம்ப
அசைவுகளுடன் தொடங்கியது.
வட்டமாகக் கைகோர்த்து
ஆடுவதற்கு ஏற்ப அவர்கள் நின்றதும், மாயவனாக குறிக்கப்பட்டவள், 'இனி' இடத்து
நின்றவளைப் பார்த்து, “கொல்லைப்புனத்தில் குருத்து ஒசித்த மாயவனை முல்லையாகிய இனிய
பண்ணில் பாடுவோம், வாருங்கள்!’ என்று மற்றவர்களையும் அழைத்தாள். ‘குரல்’ தானத்தில் இருந்தவள் மந்த சுரத்திலும்,
‘இனி’ தானத்திலிருந்தவள் சம சுரத்திலும், ‘துத்த’ தானத்திலிருந்தவள் சம
சுரத்திலும் பாட, பின்னையைக் குறித்து நின்றவள் தொடர்ந்து பாடினாள்:
“கன்றையே
குருந்தடியாகக் கொண்டு மரக்கனியை
உதிர்த்தவன் கண்ணன். நமது கூத்து வழிப்பாட்டல் கவரப்பெற்று நமது
பசுக்கூட்டத்திற்குள் அவன் வருவானாயின் அவன் ஊதும் கொன்றைக் குழலின் குழலோசைக்
கேட்போம், தோழி!
“மேரு மலையை மத்தாக வாசுகிப்பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக்
கடைந்த கண்ணனை வழிபடும் நம் மனம் குளிர நம் பசுக்கூட்டத்திர்குள் வருவானாயின் அவன்
ஊதும் ஆம்பல் குழலின் இன்னிசையைக் கேட்போம் தோழி!
“குறுத்த மரத்தை ஒடித்த
கண்ணன், நம் வழிபாட்டால் இங்கே பசுக்கூட்டத்தினுள் வருவானாயின் அவன் வாயினால்
ஊதும் முல்லைக் குழலின்
இன்னிசையைக் கேட்போம்.
யமுனைத் துறைவன் கண்ணனின் அழகையும் அவனோடு கொண்டாட்டமாய் ஆடிய
நப்பின்னையின் மேனி அழகையும் போற்றிப் பாடுவோம் யாம்!” என்றெல்லாம் ஆயர்குலத் தெய்வம் மாயக் கண்ணனை
விதவிதமாகப் போற்றிப் பாடி தீய
நிமித்தங்களின் தீவினைகள் களைய அவர்கள் குரவைக் கூத்திட்டது வெகு நேரம்
நீடித்தது.
கூத்து முடிந்ததும் ஆயர்பாடி முதுமகள் மாதுரி மாலையும் சந்தனமும்
ஏந்தி வையைக் கரையில் வீற்றிருந்து அருள்
பாலிக்கும் திருமால் அடியினைப் போற்றித் துதித்து வழிப்பட்டு வர ஆற்றங்கரை
சென்றாள்.
வழியில் எதிர்ப்பட்ட
ஒருத்தி ஊரினுள் தான் கேள்விப்பட்ட ஒன்றைச் சொல்ல, ஐயையோ பதட்டத்துடன் ஆயர்பாடி
திரும்பி விரைந்தாள்.
ஆயர்பாடிக்குத்
திரும்பியவளுக்கும் நிம்மதி இல்லை. அங்கே கண்ணகியைப் பார்த்தவள் என்ன சொல்வது என்று தெரியாமல்
திகைத்து நின்றாள். பக்கத்தில் நின்ற
ஐயையை நோக்கி கண்ணகி சொல்லிக் கொண்டிருந்தாள்: “மதுரைக்குச் சென்ற என்னவர்
இன்னும் வரக்காணோமே! உலைகளத்து ஊதுலை என மூச்சு தகிக்கிறது. என்ன வென்று
தெரியவில்லையே! ஏதோ வஞ்சகம் நடந்து
விட்டதென்று மனம் மயங்குகிறது..”
அதற்கு மேலும் ஐயையால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“கண்ணகி! மனதைத் தேற்றிக் கொள். நான் வெளியே சென்ற பொழுது வழியிலே எதிர்ப்பட்ட ஒருவள் சொல்லித் தெரிந்தது. மன்னவன் தேவியின் சிலம்பைக்
கவர்ந்த கள்வன் எனத் தீர்மானித்து கோவலனை அரசக் காவலர்கள் கொன்று விட்டனர்..”
என்று தயங்கித் தயங்கி அவள் சொன்னதைக்
கேட்டு கண்ணகி வெகுண்டு எழுந்தாள் கரிய
முகிலோடு சேர்ந்து நிலா நிலத்தினிலெ வீழ்ந்தாற் போல அலமந்து நிற்க சக்தியற்று கால் தள்ளாடி தரையில் வீழ்ந்தாள். செக்கச்செவேலென்று கண்கள் சிவக்க
அழுதாள். ‘எங்கிருக்கின்றீர்? ..
எங்கிருக்கின்றீர்’ என்ற அவளது அவலக் கதறலுக்குப் பதில் கிடைக்காமல் சோர்ந்து
மயங்கினாள்.
“தங்களோடு சேர்ந்து
இன்புற்ற தம் கணவர் தீயினிலே மூழ்கவும் அவரோடு தாமும் சேர்ந்து தீயிலே மூழ்காது
கைம்மை நோன்பினை மேற்கொண்டு துன்புறும் பெண்கள் போல பார்ப்போரெல்லாம் பழி
தூற்றுமாறு பாண்டியன் செய்த மாபெறும் தவறுக்கு
நான் அவலம் கொண்டு அழுது அழிவேனோ?..
தம் கணவனைப் பறிகொடுத்ததால் ஏக்கமுற்று நீர்நிலைகள் பலவற்றில் நீராடி
துயருறும் மகளிர் போல மாபாதகம் செய்த கொடுங்கோலன் பாண்டியன் என் கணவனுக்குத்
தவறிழைக்க அறக்கடவுள் என்னும் மடவோய் யான்
அவலம் கொண்டு அழிந்து படவோ?.. நீதி தவறி
செங்கோல் தாழ்ந்து பழியேற்ற பாண்டியன் தவறு செய்ய, இம்மையிலும் பழியேற்று மனம்
நொந்து நான் அழுது அழிவேனோ?” என்று பலவாறு
அரற்றி அழுது தாங்கொண்ணா துயரத்தை தன் மென்தோளில் சுமந்து நிலைகலங்கிப் போன
கண்ணகி, திடீரென்று வெகுண்டு எழுந்து திசைதோறும்
தன் தீட்சண்ய பார்வையில் சுடரேற்றி சூளுரைத்தாள்: “காணுங்கள்.. எல்லோரும் காணுங்கள்.. தீமை நீங்கப் பரவிப் பாடி ஆட குரவைக்கூத்திற்கு
வந்து குவிந்த ஆயர் மகளீரே, அத்தனை பேரும்
கேளுங்கள்.. காய்கதிர்ச் செல்வனே!.. கடல் சூழ் இவ்வுலகில் கணந்தோறும் நடப்பனவற்றை
நீ அறிவாய்! ஆதலால், நீயே சொல்! என் கணவன்
கள்வனா?” என்று உரத்த குரலில் நெஞ்சத்து
ஓலத்தைக் கேள்வியாக்கினாள் கண்ணகி.
“கருங்கயல்க் கண்
மாதரசி! நின் கணவன் கள்வன் அல்லன்; அவனைக் கள்வன் என்று கூறிய இவ்வூரைத் தீப்பற்றி உண்ணும்!” என்று விண்ணிலிருந்து புறப்பட்ட ஒரு குரல்
ஒலியைத் தெளிவாகக் கேட்ட அத்தனை பேரும் திகைத்தனர்.
‘நின் கணவன் கள்வன்
அல்லன்!’ என்று விண்ணிலிருந்து வெளிப்பட்ட
குரல் கேட்ட சடுதியில் அந்தக் குரலையே சத்தியத்திற்குக் கிடைத்த சக்தியாகக் கொண்டு ஆயர்பாடி நீங்கிய கண்ணகி தன்னிடமிருந்த ஒற்றைச் சிலம்பை கையிலேந்தி
ஊருக்குள் புயல் புறப்பட்டதே போல நுழைந்தாள்.
“முறையற்ற அரசன் வாழும்
ஊரில் வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டீர்காள்,
ஒன்று கேளுங்கள்!.. படாத துன்பம் பட்டேன்.
யாரும் உறாத துயரம் உற்றேன்! வினையால்
வநதுற்ற இத் துன்பம் கேளுங்கள்..” என்று மக்களிடம் முறையிடும் தோரணையில் கண்ணகி
தீம்பிழம்பாய் ஒளிர்ந்தாள்.
“கள்வன் அல்லன் என் கணவன்! என் காற்சிலம்புக்கு விலை கொடுக்காது அதைக்
கைக்கொள்ளும் பொருட்டு கள்வன் என்று பாவிகள் பழி சுமத்திக் கொன்றாரே! தம் கணவரால் நேசிக்கப்படும் மாதர் கண் முன்னே
என் நெஞ்சு பூராவும் நீக்கமற நிறைந்துள்ள என் கணவனைக் காண்பேன்!.. ஈதொரு புதுமை!
என் காதல் கணவனை எய்போதும் போல் இப்போதும் கண்டு அவர் சொல்லும் தீதற்ற
நல்லுரை கேட்பேன்!.. ஈதொரு சூளுரை! அவ்வறு அவர் கூறும் நல்லுரை கேளேன் எனில் இவள்
பிறர் வருந்தும் செயலைச் செய்தவள் என்றும்
இவள் ஒரு கள்வனின் மனைவி என்றும் என்னை இகழுங்கள்!” என்று சூளுரைத்துக்
கதறும் கண்ணகியைக் கண்டு பரிதாபித்து மதுரை மக்கள் நெகிழ்ந்தனர்.
“களைய முடியாத துன்பத்தை
இப்பெண்ணுக்கு அளித்ததினால், எக்காலத்தும் வளையாத மன்னனின் செங்கோல்
வளைந்ததே, இதற்கு யார் காரணம்? மன்னர் மன்னன் மதிக்குடை வாள் வேந்தன் தென்னவன்
கொற்றம் சிதைந்ததே இதற்கு யாது காரணம்?..
தென்னவனின் தண்குடை நிழலா வெம்மை விளைவித்தது?.. இதற்கு என்ன காரணம்? செம்பொன்னாலான ஒற்றைச் சிலம்பொன்றைக் கையில் ஏந்தி நம்
பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் ஒன்று
இங்கு வந்துள்ளதே!.. இது எதன் பொருட்டு?.. இனி இம்மாநகருக்கு என்ன நேருமோ?” என்று மக்கள் தம் அரசனை பழிகூறும்
நிலையாயிற்று..
அந்த சமயத்தில் சிலர்
கண்ணகியை அழைத்துச் சென்று கோவலனைக் காட்ட, விதிவசத்தால் தன்னைக் காண்பவளைத் தான் காண
முடியாமல் போனது. மங்கிய மாலை நேரம்
அது. கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குன்றிக்
கொண்டு வரும் அந்த நேரத்தில் பூக்கள் உதிர்ந்த கொடி போல கணவன் மேல் விழுந்தாள்
கண்ணகி. அழுது அரற்றினாள். “உம் பொன்
போன்ற மேனி புழுதியில் கிடக்கிறதே!
இக்கொலைக்குக் காரணம் முற்பிறவியில் நீ செய்த தீவினை தான் என்று
உரையீரோ?.. பார் தூற்ற பாண்டியன் பழியேற்க
இது தீவினையின் செயல் தான் என்று உரைக்க மாட்டீர்களா?..
“மகளிரும் உள்ளாரோ?..
இம்மாநகரில் மகளிரும் உள்ளாரோ?.. தன்
கணவனுக்கு நேரிட்டத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் மகளிரும் இங்கு உள்ளாரோ?.. சான்றோரும் உள்ளனரோ? சான்றோரும் உள்ளனரோ? மாற்றார் ஈன்ற குழந்தையை
எடுத்துத் தான் வளர்க்கும் சான்றோரும் உள்ளனரோ?..
தெய்வமும் இங்கு இருக்கிறதா?.. தெய்வமும் இந்த நகரில் இருக்கிறதா?..
கைவாளால் என் கணவன் வெட்டுப்பட அறம் தவறிய பாண்டியனின் மதுரை மாநகரில் தெய்வமும்
உள்ளதோ? தெய்வமும் உள்ளதோ?” என்று பலவாறாக துயரத்தில் தோய்ந்து மனம்
வெதும்பி மருகினாள் கண்ணகி.
திடீரென்று ஏதோ சக்தியின்
பிடியில் சிக்கிக் கொண்டதே போன்று தன் கணவனின் மார்போடு தன் மார்பு பொருந்த
தழுவிக் கொண்டாள் கண்ணகி. அவள் உடல்
பட்ட அந்த வினாடியில் உயிர்
பெற்றெழுந்தான் கோவலன். ‘நின் நிறைமதி வான்முகம் கன்றிப் போய்விட்டதே..”
என்று அவள் முகம் பக்கம் கை நீட்டி வழியும் கண்ணீரைத் துடைத்து விட்டான். கண்ணகியியோ
ஆவேசம் வந்தவள் போல நிலத்திலே விழுந்து தன் வளையல் பூண்ட கைகளால் அவன்
திருவடிகளை உன்னைப் பிரியேன் என்பது போலப் பற்றிக் கொண்டாள்.
அந்த சமயத்தில் தான் அது
நடந்தது. பழுது ஒழிந்த உடலை விட்டு நீங்கி
எழுந்தான் கோவலன். “எழில் பொங்கும் கண்களை உடையவளே! நீ இங்கு இருப்பாயாக!” என்று கண்ணகியிடம் அன்பு
பொங்கக் கூறிவிட்டு தேவர் கூட்டத்தில் கலந்த
அவனும் ஒரு தேவனாய் விண்ணுலகு ஏகி கண்ணகியைப் பிரிந்தான்.
“இது என்ன மாயமோ?.. மற்று யாதோ?..
என் உள்ளத்தை மயக்கியது ஒரு தெய்வமோ? இனி எங்கு சென்று என் கணவனைத்
தேடுவேன்?.. என் கணவனை யான் கூடுதல் எளிதாயினும் பொங்கும் என் சினம் தணிந்தாலன்றி அவரைக்
கூடேன்.. அந்த சினம் தணிதற்கே தீவேநதனைக்
கண்டு ‘இக் கொலைக்குரிய காரணம் யாது என்று அவனை யானே கேட்பேன்!..” என்று வெகுண்டெழுந்தாள். சற்று நின்றாள்..
அன்றொரு நாள் தன்னூரில் தான் கண்ட தீய கனவு பற்றி
நினைத்தாள். அவள் கண்களிலிருந்து நீர் உடைந்த அணை வெள்ளமாயிற்று.. ஒரு வினாடி வெறித்த பார்வையில் நின்றவள், விடுவிடுவென்று பாண்டியனின் அரண்மனை நோக்கிச் சென்றாள். அரண்மனை வாயில் முன் புயலே புறப்பட்டு வந்த்து போன்ற உருக்கொண்டு நின்றாள்.
(தொடரும்)
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
42 comments:
பெண்டிரும் உண்டு கொல்! பெண்டிரும் உண்டு கொல்! என்றெல்லாம் பாடி நடித்தது எல்லாம் நினைவில் வருது. மீனாக்ஷி என்னும் பெயருடைய பெண் தான் கண்ணகியாக நடித்தாள். நீண்ட தலைமயிருடன் அவள் வந்து, வாயிலோயே, வாயிலோயே என்று கத்தும் குரல் இப்போதும் காதில் கேட்கிறது. என்றாலும் யாரோ செய்த தவறுக்காக மதுரையை அழித்ததை என்னால் ஏற்க முடியலை! :)
மனத்தைக் கலங்கடிக்கும் கண்ணகியின் புலம்பல்கள். அவள் அதிருஷ்டத்தைத்தான் என்னென்று சொல்ல! முதலில் மாதவி. பின்னர் காலன்.
இந்தக் குரவைக் கூத்து எங்காவது இப்போது நடைபெறுகிறதா?பதிவில் ஆண்பால் பெயர்கள் போல் தெரிவது பெண்டிரா.? இன்னும் சற்றே எளிமையாக விரிவாக இருந்திருக்கலாமோ.?
( என்போன்றவர்களுக்காக )
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்றான பிறகு, என்னவென்று சொல்வது.
தங்களின் தனிப்பாணியில் சிலப்பதிகாரக்கதை சீறிக்கொண்டு போய் வருகிறது.
பாண்டியனின் அரண்மனை நோக்கி புயல் போன்ற வேகத்தில் கண்ணகி புறப்பட்டுப் போய் இருக்கிறாள். மேலும் என்னென்ன நடக்க உள்ளதோ.
கோவலன் கண்ணகியுடன் புறப்பட்டு மதுரைப்பக்கமே வராமல், பேசாமல் மாதவியுடனேயே சந்தோஷமாக இருந்திருக்கலாமோ எனவும் நினைக்கத் தோன்றுகிறது.
@ Geetha Sambasivam
//யாரோ செய்த தவறுக்காக மதுரையை அழித்ததை என்னால் ஏற்க முடியலை! :) //
நீதி, நேர்மை அவறிற்றிலிருந்து நழுவும் போது அவற்றிற்கான தண்டனைகள் என்று இருந்த காலத்து செய்திகளை இக்கால மனநிலையில் பார்க்கக்கூடாது.
சிலப்பதிகாரத்தின் அடிநாதமே செய்யும் செயல்களுக்கு ஏற்பவான விளைவுகள் அந்த விளைவுகளுக்கு ஏற்பவான பலன்கள் என்கிற விஞ்ஞான பூர்வ உண்மை. நாட்டை ஆளும் மன்னனே நடக்கும் நன்மை, தீமை எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்றுக் கொண்ட காலம் அது. நாட்டில் மும்மாரி மழை பெய்வது கூட மன்னனின் செயல்பாடுகளைப் பொறுத்து இருக்கும் என்று நம்பப்பட்ட காலம்.
இன்னொன்று. 'நின் கணவன் கள்வன் அல்லன்; அவனைக் கள்வன் என்று கூறிய இவ்வூரை தீப்பற்றி உண்ணும்!'என்பது காய்க்கதிர்ச் செல்வனை கண்ணகி கேட்ட கேள்விக்கு விண்ணிலிருந்து வெளிப்பட குரல் பதிலாக இருந்தது.
ஆக மதுரை தீப்பற்றும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகவும், அதனைச் செயல்படுத்தும் கருவியாக கண்ணகி அமைந்தாள் என்று கொள்வதே சிலப்பதிகார நியாயமாக நாம் கொள்ள வேண்டும்.
இந்த எண்ணம் உங்கள் மனசில் ஆழப்பதிந்திருக்கிறது. அதனால் அவ்வப்போது வெளிப்படுகிறது. மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லுங்கள். முழுமையாக நீங்கள் ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.
No matru karuthu! :D
" நீ தப்பு செய்தால் தண்டனை உண்டு என்றாவது நம்புகிறாயா "
- தப்போ சரியோ இரண்டையுமே செய்யும் '" சுதந்திரம் " எனக்கு கிடையாது ..நான் செய்வதெல்லாம் இறைவன் சங்கல்பப்படியே ..அவன் சங்கல்பப்படி அவனே
( என் மூலம் ) நடத்திக் கொள்வதிற்கு அவன்
எப்படி தண்டனையோ ,வெகுமதியோ கொடுப்பது ?
இதைக் கொஞ்சம் " சிந்தியுங்களேன் "
மாலி
@ ஸ்ரீராம்
//அவள் அதிருஷ்டத்தைத்தான் என்னென்று சொல்ல! முதலில் மாதவி. பின்னர் காலன்.//
நான் இருபது அத்தியாயங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதியதை இரண்டே வரிகளில் சொல்லி விட்டீர்கள், ஸ்ரீராம்!
'முதலில் மாதவி: பின்னர் காலன்' என்ற 'நறுக்'கை மிகவும் ரசித்தேன்.
மாதவி ரூபத்திலும் காலன் கோவலனித் தீண்டிப் பார்த்திருக்கிறான். அந்த 'கானல்வரி' கூத்தெல்லாம் அவன் ஏற்பாடு தானோ?..
கொஞ்சம் இருங்கள்; பின்னால் வைகோ சார் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்.
@ ஜிஎம்பீ
குரவைக்கூத்து இன்றும் கிராமப்புற கலையாட்டங்களில் உயிர் வாழலாம்.தெரியவில்லை. மக்கள் திரள் வருணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த காலங்களில் ஒவ்வொரு வருணத்திற்கும் இன்ன சிறப்புகள்,கடமைகள் அதற்கான உரிமைகள் என்று தெளிவாக வரையறுத்திருந்தார்கள்.
அந்த விதத்தில் ஆய்ச்சியர்க்கு குரவைக்கூத்து ஒருவிதத்தில் குலதெய்வ வழிபாடாகவே இருந்திருக்கிறது. அவர்களின் குலதெய்வம் மாயக்கண்ணன். சிலப்பதிகாரத்தில் வரும் குரவைக்கூத்தின் இலக்கணங்களும், இசைப்பாடல்களையும் பற்றி தனியாக ஒரு புத்தகமே போடலாம். அடிகளார் ஒரு குரவைக்கூத்திற்கென்று ஒரு அத்தியாயத்தையே ஒதுக்கி வெகு விவரமாக எழுதியிருக்கிறார்.
கொலைக்களக் காதைக்கு அடுத்து ஆய்ச்சியர் குரவை. கோவலனின் கொலை, கண்ணகியின் துயரம் என்று நீள வேண்டிய நாவல் அமைப்பில் இடையில் குரவைக் கூத்தைப் பற்றி விரிவாக எழுதினால் தொடர்ந்து வாசித்தலில் ஒரு தொய்வு ஏற்பட்டு விடும். அதற்காகவே வெகு வெகு சுருக்கமாக அதுப் பற்றிச் சொல்லி நகர்ந்து விட்டேன்.
வாய்ப்பு ஏற்பட்டால் சிலப்பதிகாரத்திலேயே படித்துப் பாருங்கள். குரவைக்கூத்தையும் அதன் அம்சங்களையும், இசைக்கூறுபாடுகளையும் மிகப் பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
தங்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுடனான வாசிப்புக்கு நன்றி, ஜிஎம்பீ ஐயா.
@ தி. தமிழ் இளங்கோ
எதுவும் சொல்வதற்கில்லை தான்.
ஆனால் ஒன்று தெரிகிறது. இக்காலத் தீர்வுகள் மாதிரியான பரிகாரங்கள் அதற்கான பலன்களைத் தராது என்று தெரிகிறது. சிலப்பதிகார தீர்ப்புப்படி ஊழ்வினைக்கான பலாபலன்களை அனுபவித்துத் தீர்ப்பதே அதைக் கடப்பதற்கான ஒரே வழி என்று தெரிகிறது.
தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, நண்பரே!
@ வை.கோ.
வாருங்கள், கோபு சார்! உங்களைப் பார்த்ததில் சந்தோஷம்.
//கோவலன் கண்ணகியுடன் புறப்பட்டு மதுரைப்பக்கமே வராமல், பேசாமல் மாதவியுடனேயே சந்தோஷமாக இருந்திருக்கலாமோ எனவும் நினைக்கத் தோன்றுகிறது.//
இன்பம் போலவான துன்பமும், துன்பம் போலவான இன்பமும் உண்டு என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இன்பம் போலத் தெரியுமாம். ஆனால் அது கடைசியில் துன்பத்தைக் கொடுக்குமாம். அந்த மாதிரி சமாச்சாரம், மனைவியை விட்டு மாற்றாருடன் தொடர்பு கொள்ளல். அது மாதவி போன்ற மாணிக்கங்களாக இருந்தாலும் சரியே. ஆனால் மதுரைப் பக்கமே வராமல் இருந்திருந்தால்..
அப்படி நினைக்கிற அளவுக்கு நாம் கதையோடு ஒன்றிப் போகிறோம் என்பது உண்மை.
வணிகர்களின் இயல்பு விட்டதைப் பிடிக்க வேண்டும் என்பது. நஷ்டத்தை லாபமாக்க வேண்டும்; அது வரை கண்ணுறக்கம் இல்லை என்பது வணிகர்களின் வாழ்க்கை வேதம்.
தன் தந்தை வாழ்ந்த வாழ்வுக்கு, அத்தனை செல்வத்தையும் இழந்து விட்டு (கோவலன் தன் செல்வத்தை இழந்ததற்கும் மாதவிக்கும் முடிச்சுப் போட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் தான் ஸ்ரீராம் மிகச் சரியாக சொன்னார்: முதலில் மாதவி, பின்னர் காலன் என்று) உள்ளூரிலேயே குப்பை கொட்டினால் அது குலத்திற்கே அபகீர்த்தி என்று கோவலன் நினைக்கிறான். அவனின் இப்படியான துயரத்தை அடிகளாரும் கோடி காட்டியிருக்கிறார். புகாரில் இல்லாத பொன் வியாபாரமா?.. இருந்தும் வாழ்ந்து கெட்ட ஊரை விட்டுப் போய் வெளியூரில் சம்பாதித்து பழைய கீர்த்தியுடன் மீண்டும் பிறந்த ஊருக்கே சீரும் சிறப்புமாக வரவேண்டும் என்பது கோவலனின் கனவு.
அந்தப் பொற்கனவு குதறிப்போட்ட மாதிரி சிதறிப் போனது தான் ஊழ்வினையின் பேயாட்டம்!
ஊழ்வினையின் விஷக்கடிக்கு மாற்று மருந்தே இல்லையா?.. வினைக்கான பலனை அனுபவித்துத் தீர்ப்பது ஒன்று தானா?.. யோசிக்க வைக்கிற கேள்வி இது.
@ Mawley
//" நீ தப்பு செய்தால் தண்டனை உண்டு என்றாவது நம்புகிறாயா "
- தப்போ சரியோ இரண்டையுமே செய்யும் '" சுதந்திரம் " எனக்கு கிடையாது ..நான் செய்வதெல்லாம் இறைவன் சங்கல்பப்படியே ..அவன் சங்கல்பப்படி அவனே
( என் மூலம் ) நடத்திக் கொள்வதிற்கு அவன்
எப்படி தண்டனையோ ,வெகுமதியோ கொடுப்பது ? //
உங்கள் கருத்துப்படி நானும் இறைவனும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டு நிற்கிறது. உங்கள் கருத்தில் நானும் இருக்கிறது; இறைவனும் இருக்கிறான். நான் வேறு இறைவன் வேறு என்று என்று நினைக்கிற இரட்டை நிலை இது.
இறைவன் ஆட்டுவிப்புக்குப்படி ஆடும் 'நான்'கள் இந்த 'நானை' மறந்து தன்னையே இறைவன் என்று நினைக்கும். என்னில் விளைந்தது இரைவனின் செயல்பாடு என் செயல்பாடு அல்ல என்று பிரித்துப் பார்க்காது. அது இரைவனின் செயல்பாடு என்பதால் ஒவ்வொரு செயல்பாட்டையும் புனிதமாக நினைத்து அதற்கான பொருப்பேற்கும். நான் செய்யவில்லை இதை; வேறொருவர் செய்தது என்ற் நினைக்காது. அதனால் இந்த விஷயத்தில் முன் சொன்ன இரட்டை நிலை இல்லை.
உடலே கோயிலென்றும் உள்லமே இறைவன் வீற்றிருக்கும் சந்திதானம் என்றும் நினைக்கும். செயல்பாடுகள் அனைத்தையுமே இறைவனின் செயல்பாடுகளாக நினைக்கும். இந்த போஈக்கில் 'நான்' என்ற பேச்சுக்கே இடமில்லை.
இது மிக மிக உயர்த நிலை. தன்னில் தானும் நானும் அழிந்த நிலை. இந்த மாதிரி பரம நிலை அடைவது மிக மிக உன்னதம் மற்றும் அரிது.
எல்லாவற்றையும் தான் செய்வதாக எண்ணும் நான்கள் தான் 99% ஆன நாமெல்லோரும். இன்றைய வாழ்க்கைச் சூழலிலும் நான் நானாகத் தான் இருக்க வேண்டும் என்று சட்டம், சம்பிரதாயம், வாழ்க்கை முறை எல்லாம் அமைந்திருக்கின்றன. ஒரு காரியத்தை செய்துவிட்டு அதை நான் செய்யவில்லை என்று சொல்ல முடியாது. எந்த சட்டமும் ஒத்துக் கொள்ளவும் செய்யாது. ' நான்' நானாக இருப்பது தான் நடைமுறை சாத்தியமான நிலை.
தங்கள் வருகைக்கும் மனதைக் குடைந்த பின்னூட்டத்திற்கும் நன்ரி. 'சிலப்பதிகாம்'-- இந்தத் தொடர் படித்து வருகிறீர்கள் அல்லவா?.. நீங்கள் கேட்ட கேள்வி இந்தத் தொடருக்கும் சம்பந்தம் உடையது தான். இந்தப் பகுதியிலேயே, மதுரை எரிந்ததற்கு கண்ணகி ஒரு க்ருவி தான் என்று சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.
நான் செய்கிறவன் என்ற எண்ணம் இல்லாமல் -என் செய்கைகளில்
நான் ஆட்டுவிக்கப்படுகிறேன் என்ற அனுபூதி நிலையில் செயல் படும்
நிலையில் மட்டுமே --
"The ball no question makes , but Right or Left as strikes the Player it goes , And He who tossed thee into the Field ,He knows about it all,He ,He knows,
The mooving finger writes and having writ mooves on,nor all thy wit or piety
shall lure it to cancell half a line, nor all thy tears shall wash out a word of it.."
என்பது போல் ..
ஜீவி சார்!
அவர் தாமதமாகி விட்டது.
குரவைக்கூத்து பற்றிய விவரணைகள் அற்புதம். பின்னூட்டங்களுக்கான உங்கள் பதிலும் பல செய்திகளை எளிமையாகத் தொட்டுச் செல்கிறது. சுற்றிவந்து 'ஊழ்வினை' என்பதிலே தான் கவனமெல்லாம் படிகிறது.
நமது பெருங்காப்பியங்களிலும் புராணங்களிலும் பெரும்நிகழ்வுகளின் காரணங்களைப் பகுத்துக் கொண்டே போனால், விடையில்லா பெருஞ்சுவற்றில் மோதிநிற்கும். அந்த விடையிலியின் சுவர்தாண்டி விதியெனும் கோட்டை. கோட்டை சுற்றி ஊழ்வினை எனும் அகழி.
ப்ராரப்தம் என்று அதை சொல்லுவோம்.
தியாகய்யரின் கீர்த்தனம் ஒன்று ஸ்வராவளி ராகத்தில் உண்டு.
ப்ராரப்தம் இட்டு உண்டகனு ஒருலனு அன
பனி லேது நீவு உண்டக......
ஊழ்வினைப்பயன் இவ்வண்ணம் இருக்க, யாரையுமே நொந்துகொள்ள
என்ன இருக்கிறது? என்று சலிக்கிறார்.
(தனக்கு இன்னல் விளைவிப்பவராயும், குறைமட்டுமே காண்பவராயும்
பகைபாராட்டுவோராயும் தன்னை சுற்றியருப்பவர் நடப்பது முன்வினைப்பயனே.
ஓ ராமா! எனக்கு நீ இருக்கிறாய்) என்று தியாகைய்யர் சரணகதி காண்கிறார்.
இந்த ப்ராரப்தம் என்பது முன்வினைகளின் தொகுதியில் இருந்து, இப்போது எடுத்திருக்கும் பிறவியை தீர்மானிக்கும் ஒரு பகுதி.
இந்தப் பிறவியில் நடப்பவை யாவும் இதன் விளைவாகவே நிகழ்பவை. இதனை யாராயிருந்தாலும் அனுபவித்தே கடந்தாக வேண்டும்.
'ஊழிற் பெருவலி யாவுள' என்றல்லவா வள்ளுவனாரும் சொல்கிறார்?
ஊழின் வகைமை பல என்று சாத்திரம் சொல்கிறது.
கோவலன்,கண்ணகி, பாண்டியன், அந்த தருணத்தில் வாழ்ந்த மதுரைநகர மாந்தர் யாவரும் தத்தம் ஊழின் கர்மக்கழிவெற்கென ஒருங்கே சேர்ந்த நிகழ்வு அன்று அரங்கேறியதாய்த் தான் கொள்ள வேண்டும்.
அது ஒரு நம்பிக்கை என்பதைவிட, வசதி என்றாகுமோ ?
ஶ்ரீராமின் கருத்து பொருள் பொதிந்த அழகு.
@ மோகன்ஜி
'ப்ராரப்தம்' என்பதைத் தான் ப்ராப்தம் என்று வழக்கில் சொல்கிறோமா?..
இது முன்வினைகளின் தொகுதியிலிருந்து இப்பொழுது எடுத்திருக்கும் பிறவியைத் தீர்மானிக்கும் பகுதி என்பது நிறைய யோசிக்க வைக்கிறது.
தியாகய்யரின் கீர்த்தன வரி, மனச்சாந்திக்கு வழி காட்டுகிறது. 'எதையும் கடக்க வேண்டுமல்லவா?.. அப்படியான கடப்பதற்கு பாலம் போடும் வரிகள் அந்த மஹானது.
'ஊழ்வினையை மட்டும் அனுபவித்துத் தான் கடக்க வேண்டும்'-- வேறு வழியே இல்லை என்பது சமண மதக் கொள்கை கோட்பாடுகளின் வழிக் கருத்தா என்பது தெரியவில்லை.
பிறவி தோறும் தொடரும் தீய ஊழ்வினையின் தீட்சண்யத்தை அந்தந்த பிறவி தோறும் செய்யும் நல்ல செயல்களால் அவ்வப்போது குறைத்துக் கொள்ள முடியாதா?.. இது இந்த சிலப்பதிக்காரத் தொடர் எழுத ஆரம்பித்ததிலிருந்து என் மனசில் படிந்து போன கேள்வி.
தாங்கள் நினைப்பது என்ன, மோகன்ஜி?..
(தனக்கு இன்னல் விளைவிப்பவராயும், குறைமட்டுமே காண்பவராயும்
பகைபாராட்டுவோராயும் தன்னை சுற்றியருப்பவர் நடப்பது முன்வினைப்பயனே...)
ஆஹா! எப்படிப்பட்ட அமுத வாக்கியம்!
--- இந்த எண்ணம் மட்டும் நம்மில் படிந்து விட்டால், எல்லோரையும் நேசிப்பது எவ்வளவு எளிதாகிப் போகும்! முடிந்தவரை இந்த அமுத வாக்கியத்தில் மனத்தில் பதிக்கும் பயிற்சி பெற இந்த நிமிடத்திலிருந்து பயிற்சி பெறுகிறேன். சுடர் தூக்கி வழி காட்டினீர்கள். சுடர் தியாகய்யரினது ஆயினும், அந்தச் சுடரைத் தூக்கிக் காட்டியது நீங்கள் அல்லவா? நன்றி ஜி!
@ வி. மாலி
அனுபூதி நிலை ரொம்ப பெரிய விஷயம். அந்த அளவுக்குக் கூடப் போக வேண்டாம்.
தண்டனையோ, வெகுமதியோ-- 'எல்லாம் அவன் சித்தம்' என்று ஏற்றுக் கொள்பவர்களை பார்த்திருக்கிறீர்களா, மாலிஜி?..
இவர்கள் தாம் நாம் சுற்றிச் சுற்றி தேடி வரும் 'செய்வது, நடப்பது எல்லாம் இறைவன் சங்கல்பப்படியே' என்று மனதார நினைக்கும் பேறு பெற்றவர்களா?..
சொல்லுங்கள், ஜி!
குரவைக் கூத்து குறித்து பொன்னியின் செல்வனில் வாசித்து இருக்கிறேன்! அந்த கூத்து முடிந்ததும் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுவான் என்று நினைவு. இங்கும் குரவை கூத்து முடிவில் கண்ணகி மதுரையை தீக்கிரையாக்குகிறாள்! அருமையான வர்ணணை! பன்னிரண்டாம் வகுப்பில் சிலப்பதிகாரம் படிக்கையில் இந்த காண்டம்தான் பாடம்! அந்த நினைவு வந்தது! நன்றி!
"உடலே கோயிலென்றும் உள்லமே இறைவன் வீற்றிருக்கும் சந்திதானம் என்றும் நினைக்கும். செயல்பாடுகள் அனைத்தையுமே இறைவனின் செயல்பாடுகளாக நினைக்கும். இந்த போஈக்கில் 'நான்' என்ற பேச்சுக்கே இடமில்லை.
இது மிக மிக உயர்த நிலை. தன்னில் தானும் நானும் அழிந்த நிலை. இந்த மாதிரி பரம நிலை அடைவது மிக மிக உன்னதம் மற்றும் அரிது."
"காமோகாரிஷித் -மன்யுரகாரிஷித் " ஜபம் , இதைத் தான் சொல்கிறது ..
மாலி
ஜீவி சார்!
நம் சாத்திரங்கள் மூன்று பெரும் பிரிவுகளாக கர்மவினைகளை பிரிக்கின்றன.
(சமணம் எட்டாக பிரிக்கிறது). சுருக்கமாய் இந்த முப்பிரிவைப் பார்ப்போம்.
சஞ்சிதம் என்பது ஜென்மஜன்மங்களாக சேரும் கர்மவினைகள். இவை மிச்சமின்றி அனுபவித்து தீர்க்கப்படும் வரை பிறவிகள் எடுத்தபடியே இருக்கவேண்டியிருக்கும். மொத்தவினைகளில் அனுபவித்ததுபோக மீதமிருக்கும் வினையின் தொகை சஞ்சிதமாக காத்திருக்கும்.
பிராரப்தம் என்பது ஏற்கெனவே சொன்னபடி,சஞ்சிததின் மொத்த கர்மவினைகளிளிருந்து இந்தப் பிறவியில் அனுபவிக்கவேண்டி ஒதுக்கப்பட்ட வினைபயன்.
‘ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்’ என்று பெரியாழ்வாராய் எடுத்த ஒரு பிறவியில் அரங்கனின் சிந்தனை ஒன்றையே அவர் பற்றியது, பூர்வ ஜன்ம சுகிர்தம் தானே?
ஆகாமியம் என்பது தற்போதைய செயல்பாடுகளால் உருவாகும் கர்மவினை. ‘சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம் சொல்லினேன்’ என்று தன்னை குறிக் கொள்ள வேண்டி இறைஞ்சுவது இவ்வகை. பக்தி செய்தும், பாவங்கள் மனதாலும் செய்யாதொழிவதனால் இந்தப் பிறவியின் கணக்கு நேர் செய்யப் படுகிறது. சொச்சமாய் மிஞ்சும் நல்வினை அடுத்த பிறவிக்கு வரவு வைக்கப் படுகிறது. அவ்வாறு வரவு வைக்கப் படும் நல்வினையானது, சேர்ந்திருக்கும் பாபங்களுக்கு ஈடாக சரி செய்யப்பட்டு பாபத்தைக் குறைப்பதில்லை. புண்ணியம் பாபம் இரண்டுக்குமான அனுபவிப்பு தனித்தனியே நடந்தேறும்.
ஒண்ணு எஃகு கத்தி ஒண்ணு தங்கக்கத்தி. இரண்டும் குத்தும் பிறவியை!
நீங்கள் சொன்னபடி வழக்கிலேதான் பிராப்தம், பிராரப்தம் எனும் வார்த்தைகளை உபயோகிப்பதில் சிறு வித்தியாசம். பிராரப்தம் ‘திருமணம்’ ஆனால் ப்ராப்தம் ‘வாய்த்த மனைவி’!
ரமணரை விட அத்தாரிட்டி இதில் உண்டா என்ன?
“அவரவர் ப்ராப்த பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்.
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது.
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது.
இதுவே திண்ணம்.
ஆதலின் மௌனமாயிருக்கை நன்று”
V. Mawley
உபாகர்மா பொழுது செய்யும் ஜபம் தானே காமோகாரீத் ஜபம்?..
@ தளிர் சுரேஷ்
பார்த்தீர்களா?.. எனக்கு சுத்தமாக இது நினைவில் இல்லை. நீங்கள் குறிப்பிட்டதும் பார்த்து விட வேண்டும் என்னும் ஆர்வத்தில் 'பொன்னியின் செல்வன்' வால்யூம்களைப் புரட்டினேன்.
ஐந்தாம் பாகத்தின் 39-வது அத்தியாயத்திற்கு கல்கி அவர்கள் 'காரிருள் சூழ்ந்தது' என்று தலைப்பிட்டிருக்கிறார். இந்த அத்தியாயத்தில் தான் ஆதித்த கரிகாலனின் மரணம் சம்பவிக்கிரது.
"யாழ் களஞ்சியத்தின் அருகில் தடால் என்ற சத்தத்தைக் கேட்டு நந்தினி திரும்பிப் பார்த்தாள். காளாமுக உருவம் கையில் கத்தியை உருவிக் கொண்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டாள். விழிகள் பிதுங்கும்படியான வியப்புடன் அந்த உருவத்தை நோக்கினாள். அவள் வயிற்றிலிருந்து குடல்கள் மேலே ஏறி மார்பையும் தொண்டையையும் அடைத்துக் கொண்டதாகத் தோன்றியது. கண்களைத் துடைத்துக் கொண்டு எதிரே பார்த்தாள். கரிகாலன் கீழே விழுந்து கிடக்கக் கண்டாள். அவன் உடலில் வீர பாண்டியனுடைய வாள் பாய்ந்திருந்ததையும் கண்டாள்"
கல்கியின் எழுத்துக்களை இந்தத் தொடரில் பதிய ஒரு வாய்ப்பு!
இந்த 39-வது அத்தியாயத்தின் முன் இரண்டு அத்தியாயங்களைப் படித்துப் பார்த்து விட்டேன். குரவைக் கூத்து பற்றிய செய்தி எதுவும் இல்லை.
'பொன்னியின் செல்வனி'ல் எந்த இடத்தில் குரவைக்கூத்து பற்றி வருகிறது என்பதை தீர்க்கமாகப் படித்து விட்டு உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
ஆர்வத்துடனான உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, சுரேஷ் சார். தாங்கள் தொடர்ந்து இந்தத் தொடரை வாசித்து வருவது குறித்து மகிழ்ச்சி, நண்பரே!
ஜீவி சார், சுரேஷ், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் தான் குரவைக்கூத்து பற்றி வரும். வந்தியத் தேவன் கடம்பூர் அரண்மனைக்கு வரும் நாளன்று. ஆடிப்பெருக்கு தினம். குரவைக்கூத்து முடிந்த பின்னர் தான் சதியாலோசனை நடைபெறும். :) இதை சுரேஷின் பின்னூட்டம் படித்த அன்றே குறிப்பிட நினைத்துப் பின்னர் வேண்டாம்னு விட்டுட்டேன். ஐந்தாம் பாகத்தில் குரவைக்கூத்து பற்றி எல்லாம் வராது.
இது தவிர குரவைக் கூத்து பற்றி அதே முதல் பாகத்தில் வந்தியத் தேவன் பழையாறைக்குள் நுழைந்த கிருஷ்ண ஜயந்தி அன்று குந்தவையின் தோழிகள் பயில்வதாக வரும். வந்தியத் தேவனும் குந்தவையும் கூட அதைக் குறித்துச் சிறிது பேசுவார்கள். கடம்பூரில் தான் பார்த்த குரவைக்கூத்துக்கும், இங்கே பாடல்கள் மூலம் தான் தெரிந்து கொண்டதற்கும் உள்ள வித்தியாசம் குறித்து வந்தியத்தேவன் கூறுவதாக வரும்.
@ மோகன்ஜி (2)
நேரம் எடுத்துக் கொண்டு எழுதிய நீண்ட விளக்கத்திற்கு நன்றி, மோகன்ஜி!
சஞ்சிதம்-- கர்மவினைகளில் பண்டில். ஜென்ம ஜென்மாய் சேர்ந்து வருவது. அனுபவித்த வினைகள் கழிவதும், புதுசாக சேர்வது சேர்வதும் இந்த பண்டில் கணக்கில் கழித்து, சேர்த்து வகைப்படுத்தப்படும்.
பிராரப்தம் -- ஒரு குறிப்பிட்ட ஜென்மத்தில் மட்டும் அனுபவித்துத் தீர ஒதுக்கப்பட்ட வினைப்பயன்.
ஆகாமியம்-- தற்போதைய (Present) ஜென்மத்தில் சேரும் வினைகள்.
சந்தேகங்கள்:
பிராரப்தம் கணக்கு முடிந்து விட்டால் அந்த குறிப்பிட்ட ஜென்மம் பூர்த்தியாகி விடுமா?..
அதாவது மரணம் சம்பவிக்கும் பொழுது அந்த ஜென்மத்திய பிராரப்தம் கணக்கு தீர்ந்து விட்டது என்று கொள்ளலாமா?.. இல்லை, பாக்கி இருந்தால் சஞ்சிதம் அக்கவுண்டுக்குப் போய்ச் சேர்ந்து கொள்ளுமா?
ஆகாமியம் கணக்கு சஞ்சிதம் கணக்கில் சேர்ந்து பிறகு தான் எப்பொழுது வர வேண்டுமோ அப்பொழுது தான் பிராரப்த கணக்குக்கு வருமா?
@ கீதா சாம்பசிவம் (2)
பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஐந்தாம் அத்தியாயம் -- குரவைக் கூத்து என்றே தலைப்பிட்ட அத்தியாயம். கடம்பூர் மாளிகையில் குரவைக் கூத்து நடக்கிறது. ஆனால் இது முருக பெருமானைத் துதித்து நடக்கும் குரவைக் கூத்து. ஒன்பது பெண்கள் ஆடுகிறார்கள். 'பசியும் பிணியும் பகையும் அழிக!.. மழையும் வளமும் தனமும் பெருக!' என்று குரவைக் கூத்து முடிகிறது.. பின்னர் தேவராளன், தேவராட்டி கூட அந்த மேடையில் வேலனாட்டம் ஆடுகின்றனர்.
இரண்டாவது பழையாறு மாளிகையின் பின்புறத்து உத்தியானவனம் பகுதியில். குந்தவையும் அவள் தோழிகளும் பெரும்பாலும் மாலை நேரங்களைக் கழிக்கும் இடம்.
கொடி வீடு ஒன்றிலிருந்து ஒரு பெண் கீதம் பாடுகிறாள். கண்ணன் பிறந்த நாள் அன்று.
கண்ணனிடம் காதல் கொண்ட ஒரு பெண் தன் காதல் வேதனையைத் தெரிவித்துப் பாடுவது போல. மரக்கிளையிலிருந்து ஒரு கிளி அவளுக்கு ஆறுதல் சொல்கிறது.
சாம்பிளுக்கு ஒன்று:
கிளி:
கட்டழகி உந்தன் காதலினால் -- எங்கள்
கண்ணன் படுந்துயர் சொல்ல வந்தேன்
விட்டுப் பிரிந்த நாள் முதலாய்-- நல்ல
வெண்ணையும் வேம்பாய்க் கசந்ததென்பான்!
இந்த பாடல் முடிந்ததும் குந்தவையும், வாணதியும் பரிகாசமாய்ப் பேசிக் கொள்கிறார்கள்.
இந்த இரண்டாவது குரவைக்கூத்து இல்லை எனினும் பழையாறு மாளிகையில் கண்ணன் பிறந்த நாள் கோலாகலமாய் கல்கி பகிர்ந்து கொள்வதாய்க் கொள்ளலாம்.
கீதாம்மா! உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு ஜே! அசர அடிக்கிறீர்கள்!
பொன்னியின் செல்வனைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூடச் சொல்லலாமே! இந்தப் பாடல் முடிந்ததும் வானதியும், குந்தவையும் பேசிக்கிறாங்களோ இல்லையோ, படகில் வந்தியத் தேவனுடன் பயணம் செய்து கொண்டே குந்தவை பேசினப்போ "கஞ்சனார் வஞ்சம்" குறித்த பாடலைப் பற்றி வந்தியத் தேவன் சொல்லி அந்தக் கஞ்சனார் வேஷத்தில் தான் உள்ளே நுழைந்ததையும் கூறுவான். அப்போது தான் குந்தவை அவனிடம் குரவைக்கூத்து ஆரம்பித்துவிட்டால் தன்னைத் தேடுவார்கள் என்றும் தான் சீக்கிரம் போகவேண்டும் என்றும் சொல்வாள்.
ப்ராரப்தம் என்கிற வார்த்தை எனக்கு பத்ராசல ராமதாஸ் கீர்த்தனையையும் நினைவு படுத்துகிறது. "ஏமிரா ராமா.. நாவல்ல நேரா..ஏமிரா ராமா... ஏமி ராமா.. ஈ லாகு கஷ்டமுலு.. நீ மஹிமோ..? நா ப்ராராரப்தமோ..."
:))
ஒரு சிலரது வாழ்க்கைப்போக்கே.. திடீரென பெரிய மாற்றங்களை சந்திக்க நேருகின்ற நிகழ்வுகளை --இது போல் பிராரப்தம் -- ஒரு குறிப்பிட்ட ஜென்மத்தில் மட்டும் அனுபவித்துத் தீர ஒதுக்கப்பட்ட வினைப்பயன்...முடிந்து அடுத்த செட் ஆரம்பமாகிவிட்டது ( ! ) என்று
ஒரு விளக்கம் படித்த ஞாபகம் ..
மாலி
உங்கள் புரிதல் மிகச்சரி ஜீவி சார்!
ப்ராரப்த கர்மா இந்த பிறவிக்கான ஸ்டாக். அதில் மிச்சமின்றி நற்பலனும்,கஷ்டங்களும் அனுபவிக்கப் படும். மீதம் இருக்காத வண்ணம் ப்ரோக்ராம் ஆனது.
இந்தப்பிறவியில் மேற்கொள்ளும் நல்வினைகள்,தர்ம காரியங்கள், இறைபக்தி, குருவருள் முதலியன ஆகாமிய வினையின் கிரெடிட் சைடை அதிகமாக்கி புண்யக்கணக்கு ஏறும்.இதனால் ஆகாமியத்தின் தாக்கம், சஞ்சித்த்தில் சேரும்போது அதிகம் இராது.
மேலும், மேற்சொன்ன உத்தம செயல்களால்,ப்ராரப்தமாக அனுபவித்துவரும்
கடுமையை, எதிர்கொள்ளும் மனோபலமும் கிட்டும்( ப்ராரப்த வினை அனுபவித்தே தீர வேண்டும். நோ ரைட் ஆப்...)
சஞ்சிதவினை முற்றுமாக தீரும் வரை, கர்மாக்கள் கழியும் வரை இவ்விதம் செத்து செத்து விளையாட வேண்டியது தான்!
பரம ஞானிகள் சஞ்சிதம் தீர்ந்தவர்கள். நடப்பவற்றிற்கெல்லாம் ஒரு சாட்சிபூதமாய் இருப்பவர்கள். சரீர ப்ரக்ஞை அறவே அற்றவர்கள். அவர்களும் எஞ்சிய பிராரப்த வினையை அனுபவிப்பவர்களே.
மலையாள சித்தர் 'நாராயணத்து பைத்தியத்தை' ஒரு யானைக்கால் பக்தர் சந்தித்தார். அவருக்கு ஒருகால் நோயால் மிகவும் வீங்கி இருந்தது. "இதை மாற்றித் தரக்கூடாதா?" என்று கேட்டாராம். சித்தர் அந்த காலைத் தொட்டு, வீக்கத்தை மறுகாலுக்கு மாற்றித் தந்தாராம் !!
(இது ஜெயமோகன் ஒருமுறை சொன்னது) அனுபவிக்க வேண்டியதை அஅனுபவிக்க வேண்டியது தான்.
@ மோகன்ஜி (3)
ஆஹா, தெளிவான விளக்கம். இந்த விளக்கத்தினால் தீவினைகளை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் என்பது நிச்சயமாயிற்று.
அப்போ பரிகாரங்கள்?.. விழலுக்கு இறைத்த நீர்.
சமண எட்டை இன்னொரு பகுதியில் வைத்துக் கொள்ளலாம். நன்றி, மோகன்ஜி!
@ ஸ்ரீராம்
அட! பத்ராசல ராமதாஸ்?.. எல்லோருக்கும் எத்தனை விஷயங்கள் தெரிந்திருக்கிறது?.
ஒன்று பார்த்தீர்களா?.. ஒரு கலந்துரையாடலில் தான் எல்லாம் வெளிப்படுகின்றன. பொதுவாக பதிவுகளில் இப்போலாம் கலந்துரையாடலுக்கு நோ சான்ஸ்.. பிறர் பதிவுக்குப் போய் பின்னூட்டங்களில் எழுதுவதற்கு பதில் தன் பதிவில் அதையே ஒரு பதிவாகவே போட்டு, பதிவு எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளலாமே என்று தான் பெரும்பாலான பதிவர்கள் நினைக்கிராகள்..
அதனால் தான் பின்னூட்டங்கள் பொலிவிழந்து வெற்று பாராட்டுகளாகவும் வாழ்த்துக்களாகவுமே தங்கினத்தோம் போடுகிறது.. இதில் த.ம. ஷொட்டுகள் வேறே!
சிந்தனையை பதிவிலோ, பின்னூட்டத்திலேயோ எங்கே கிளறினால் என்ன?..
@ Geetha Sambasivam
அட!'ஆய்ச்சியர் குரவை' பாடல் கூட வருகிறதே! அப்புறம், 'பெரியவனை.. மாயவனை..' அது கூட! கல்கியும் சிலப்பதிகாரச் சுவையில் ஆழ்ந்து சொக்கிப் போயிருக்கிறார். இல்லையென்றால் இந்த அளவுக்கு எடுத்தாண்டிருப்பாரா?..
ஆமாம்! அத்தியாயம் 49-ல் (விந்தையிலும் விந்தை) "கஞ்சனார் மிக்க வஞ்சனாராய் இருக்கலாம். ஆனால் எனக்கு நேற்று பேருதவி செய்தார்" என்று கஞ்சனாராம (கம்ஸனாக)
தான் நாடகத்தில் நடித்த கதையை வந்தியதேவன் இளையபிராட்டியிடம் சொல்கிறான்.
உங்கள் நினைவாற்றலுக்கு வாழ்த்துக்கள்!..
@ V. Mawley
ப்ராரப்த கர்மா இந்த பிறவிக்கான ஸ்டாக். அதில் மிச்சமின்றி நற்பலனும்,கஷ்டங்களும் அனுபவிக்கப் படும். மீதம் இருக்காத வண்ணம் ப்ரோக்ராம் ஆனது.
-- மோகன்ஜி
பிராரபதத்திற்கு மோகன்ஜி இலக்கணமே வகுத்து விட்டாரே, பார்த்தீர்களா?
தொடர்ந்து வாருங்கள், மாலிஜி!
//அட! பத்ராசல ராமதாஸ்?.. எல்லோருக்கும் எத்தனை விஷயங்கள் தெரிந்திருக்கிறது?.//
கோபண்ணா என்னும் பெயரில் பரம்பரை கோடீஸ்வரராக வாழ்ந்து, தனது அனைத்துச் சொத்துக்களையும் ஸ்ரீ ராம பக்திக்காகவே செலவழித்து, மிகவும் பரம ஏழையாகி, அதன்பின் பத்ராசலத்தில் தாசீல்தாரராக நியமிக்கப்பட்டு, சர்க்காருக்குச் சேர வேண்டிய வரி வசூல் பணத்தையெல்லாம், தன்னை மறந்து ஸ்ரீ ராம பிரானுக்கு வெகு அழகாக கோயிலைக் கட்டி, அதனால் ஹைதராபாத் நிஜாம் ஆன தானிஷா என்ற முஸ்லீம் ராஜாவால் ராஜ தண்டனை கொடுக்கப்பட்டு, செகந்திராபாத் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு கஷ்டங்களையும் சித்ரவதைகளையும் அனுபவித்து, பிறகு ஸ்ரீராமர் கிருபையால் மட்டுமே விடுதலையான ராமதாஸர் கதையினை விரிவாகவும் நகைச்சுவையாகவும் என் பதிவினில், என் பாணியில் ஓர் தொடராக எழுத வேண்டும் என பலநாட்களாக எனக்குள் ஓர் ஆசையுள்ளது. ஸ்ரீராமர் கிருபையில் அது எப்போது ஆரம்பிக்குமோ எப்போது முடியுமோ .... பார்ப்போம்.
சிறையில் வாடும்போது பத்ராச்சலர் "இப்போ என்ன செய்து விட்டேன்? இப்படி எண்ணெய் சோதிக்கிறாயே ராமா?" என்று ராமரைத் திட்டிவிட்டு, அப்புறம் மனம் வருந்தி அவரே "உதை தாங்காமல் திட்டி விட்டேன் ஐயா..மன்னிச்சுக்கோ.." என்று பாடும் கீர்த்தனையான "தாரக மந்த்ரமு கோரின..." கீர்த்தனை பாலமுரளி குரலில் அடிக்கடி நான் ரசிப்பது!
கோவலன் கண்ணகியிடமிருந்து விலகிப் பயணிக்கிறோமோ?!!
நன்றி ஜீவி சார்! கீதாம்மாவின் பின்னூட்டம் படித்தேன்! பொன்னியின் செல்வனில் குரவைக் கூத்து பற்றி படித்தது நினைவு அதை நுட்பமாக விவரித்து இருப்பார் கல்கி! கடம்பூர் மாளிகையில் அது நடந்தது என்பதை நினைவில் வைக்க மறந்துவிட்டேன் போல! இரண்டு முறை பொன்னியின் செல்வன் வாசித்து உள்ளேன்! மீண்டும் வாசிக்கவேண்டும். சிலப்பதிகாரம் செய்யுளும் மீண்டும் வாசிக்க வேண்டும். வாசிக்கத் தூண்டிவிட்டது உங்கள் பதிவு!
வீட்டில் நடந்துகொண்டிருக்கிற சீரமைப்பு பணிகள் காரணமாக கடந்த 20 நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை.
நான் கேட்க நினைத்தவைகளை மற்ற பதிவர்கள் பின்னூட்டத்தில் கேட்டு தாங்களும் விரிவான பதிலைத் தந்துவிட்டதால், வேறு கேள்வி ஏதுமின்றி பாண்டியன் அரசவையில் என்ன நடக்கிறதென அறிய காத்திருக்கிறேன்.
காமோகாரிஷித் -மன்யுரகாரிஷித் ஜபம் :
தமிழ்சினிமாக்களில் கோர்ட்டில் கூண்டில் நின்றபடி
"நான் சொல்வதெல்லாம் உண்மை ,உண்மையைத்தவிற
வேறொன்றுமில்லை " என்று கூறுவது போல , இந்த மந்திரமும் அப்படிதான் அமைக்கப்பட்டிருக்கிறது ..
"காமக்கரோதி நாகம் கரோமி காமக்கர்த்தா நாகங்கர்தா ,காம காரயிதா நாஹங்காரயித்தா எக்ஷதே காமகாமாயஸ்வாஹா ..(இப்படியே) மயூ;கரோதி நாகம் கரோமி மன்யுக்கர்த்தா நாகங்கர்தா,மன்யு;க்காரயித்தா நாஹங்காரயித்தா ஏஷாதே மன்யோ மன்யவேஸ்வாஹா "
இவ்வாறு செய்பவனும் செய்விப்பவனும் நானில்லை ..காமமும் மனமும் என்னை ஆட்டுவிக்கின்றன ..
இப்படி தவிக்கும் stragglerதான் 'ஜீவாத்மா '..என்று தோன்றுகிறது
மாலி
காமம் என்பது வெறும் lust மட்டும் அல்ல ; எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்கிற வேட்கை -desire principle ..என்று புரிந்து கொள்க ...
மாலி
@ V. Mawley
ஸ்லோகங்களுக்கெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை நேரிடையாக அர்த்தம் பார்த்தால், வெறும் வார்த்தைகளாகவே தோன்றும். செயல்பாட்டின் ஜகஜ்ஜாலம் மனசில் படாமல் மறைந்து போகலாம்.
'செய்பவனும் செய்விப்பனும் நானில்லை' என்கிற புரிதல் எந்தக் காரியத்தைச் செய்யும் பொழுதும் தோன்றுவது இல்லை அல்லவா?.. நாமே செய்வதாக எந்தக் காரியத்தின் வெற்றிக்கும் முனைந்து பாடுபடுகிறோம். இந்த மயக்கம் தான் செய்பவனும் செய்விப்பவனும் ஆகிய அவனின் சாமர்த்தியம்.
தத்துவ விவாதங்களுக்காக ஒரு நிலைப்பாடு; நாம் ஒரு காரியத்தில் முனைந்து ஈடுபடும் பொழுது வேறொரு நிலைப்பாடு என்று இருப்பது முரண்பாடு இல்லையா?..
எல்லாம் அறிந்த ஞானிகளையும் மயக்கி விடும் சாமர்த்தியம் படைத்தது அவன் அருள். நான் செய்வதாயினும் நானே நீயாய் செயலபடும் நேரத்து நீதான் பொறுப்பேற்க வேண்டும் என்பது அவனின் எழுதப்படாத சட்டம். உணர்வில் எழுதப்பட்டிருப்பதால் அதற்கு எழுதுதல் தேவையில்லாது போய்விட்டது.
மாணிக்கவாசகர் சிவக்கடாட்சம் பெற்ற எப்பேற்பட்ட ஞானி?..
'யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருள்வது இனி நீயே!' என்ற அவரது திருவாசக வரிகளையே எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த நான் தன்னில் பிர்மாண்டமாய் நிற்கும் துவஜஸ்தம்பம். தான் என்ற கொடி (செடி) இந்த ஸ்தம்பத்தைப் பற்றிப் படர்ந்தே ஆக வேண்டும். நாடகமேடையை அமைத்து நடிக்க வைத்தவனே நடிப்பவனின் தத்ரூபமான நடிப்புக்குப் பொறுப்பேற்று அதையும் பார்த்துக் கொள்கிறான் என்று கொள்ள வேண்டும்.
அந்த ஆறுவாரத் தொடர் 'உங்களுக்காவது தெரியுமா?' பக்கம் வாருங்கள். இதே இழையை அறுந்து போகாமல் பிடித்துக் கொண்டு அங்கேயும் பேசலாம். வாருங்கள், மாலி சார்.
தங்கள் தொடர் வருகைக்கு ரொம்பவும் நன்றி, சார்.
"நான் செய்வதாயினும் நானே நீயாய் செயலபடும் நேரத்து நீதான் பொறுப்பேற்க வேண்டும் என்பது அவனின் எழுதப்படாத சட்டம். உணர்வில் எழுதப்பட்டிருப்பதால் அதற்கு எழுதுதல் தேவையில்லாது போய்விட்டது."
மிக அழகாக வரையிறுதீர்கள் ..நன்று ..மிக்க நன்று ..
மாலி
Post a Comment