Saturday, August 13, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

  பகுதி—19

விதி கடைத்தெருவில் கோவலனை அதிக தூரம்  கூட நடக்க வைக்கவில்லை.

கடைத்தெருவை அடைத்துக் கொண்டு கூட்டமாக பலர் வருவதை கோவலன்  கண்டான்.  சுமார்  ஐம்பது  பேர்கள் இருக்கும்.  நெருங்கிப் பார்த்த பொழுது பொற்கொல்லர்கள் என்று தெரிந்தது.  உருக்குத் தட்டார்களும், நுண்வினைக் கொல்லர்களுமாய் வீதியை அடைத்துக் கொண்டு நெருக்கமாக தங்களுக்குள் சளசளத்தபடி அவர்கள் வர  முன் வரிசையில் ஒருவன்  வித்தியாசமான தோற்றத்தில் வந்தான்.


கையில் கொறடுடன் விலங்கு நடை கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த மேலாடை வழக்கமாக மன்னர்கள் பரிசலாகப் பாராட்டி அளிப்பது  என்று வெளிப்படையாகத் தெரிந்தது.   அந்த அடையாளாம் ஒன்றே கோவலனுக்குப் போதுமானதாக இருந்தது.  இவன் பாண்டியனால் சிறப்புச் செய்யும் அளவுக்கு அரண்மனையில் செல்வாக்கு கொண்டவன் போலும் என்ற முடிவுக்கு வந்தான் கோவலன்.

உடனே கோவலன் விரைந்து அவனை நெருங்கி, “சிலம்பு ஒன்று என்னிடம் உள்ளது.  மன்னவன் தேவிக்கு பொருத்தமானது என்கிற அளவில் சிறப்பானது.  உன்னால் அதை விலை மதிப்பிடுவதற்கு முடியுமா?” என்று கேட்டான்.

“அடியேன்  அறிந்திலேன்.  இருப்பினும் வேந்தர்க்கு மணிமுடி போன்ற பொன் அணிகலன்களைச் செய்வதில் வல்லவனாவேன்” என்று அந்த கூற்றத் தூதன் கை தொழுது சொன்னான்.

கோவலன்  தன் மடிக்கட்டை அவிழ்த்து கண்ணகி தந்திருந்த காற்சிலம்பை வெளியே எடுத்து அவனிடம் கொடுத்தான்.  மாணிக்கமும் வைரமும் வரிசை கொண்டு இழைக்கப்பட மணிக்குழிழ்கள் கொண்டதாய் பசும்பொன்னில் அழகு கொண்டு மிளிர்ந்தது அந்த சித்திரச் சிலம்பு.  

லேசாக மேலோட்டமாகப் பார்க்கையிலேயே அந்தச் சிலம்பின் விலையில்லா மதிப்பு புரிந்து போயிற்று அந்தப் பாதகனுக்கு.  அதை விட சோகம்  என்னவென்றால் சமீபத்தில் இந்த கபட பொற்கொல்லன் அரண்மனையில் திருடி தனதாக்கிக் கொண்ட பாண்டிமா தேவியின் சிலம்புகளில் ஒன்றையே அச்சாக  இந்தச் சித்திர சிலம்பு ஒத்திருந்தது தான் இந்தச் சிலம்பின் மீதான அவனது ஈடுபாட்டை அதிகமாக்கியது.

“கோப்பெருந்தேவிக்கு அல்லாது வேறு எவரும் இந்தச் சிலம்பை விலை கொடுத்து வாங்கி உரிமையாக்கிக் கொள்ள தகுதி இல்லை..” என்றவன் “நான் இந்த சிலம்பின் சிறப்பை வேந்தருக்கு விளம்பி திரும்பி வரும் வரை பக்கத்தில் இருக்கும் என் சிறு குடிலில் தங்கி இருங்கள்..” என்றான். கோவலனும் அவன் காட்டிய குடிலுக்கு அருகிலிருந்த தேவகோட்டத்தின்  உள்மதில் பக்கம் சென்று காத்திருந்தான்.

அந்த சூதுமதியாளனின் திட்டமே வேறு.   பாண்டிமாதேவியின் பொற்சிலம்பைத் தான் திருடி வைத்துள்ள இரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமெனில்  அதற்கு வெளிநாட்டிலிருந்து வந்துள்ள இந்த இளைஞன் இரையாக வேண்டுமென்று திட்டம் தீட்டுகிறான் அவன். காணாமல் போன தேவியின் அரச குலச் சிலம்பை கோவலனிடமிருந்து கைப்பற்றினேன் என்று கதையை மாற்றி விட்டால் போச்சு என்று வெகு சுலபமாக கணக்கு போடுகிறான் அந்த மாபாதகன்.

விதி தன் சிலந்தி வலையை வெகு அழகாகத் தான்   பின்னுகிறது.

அரண்மனையிலோ பாண்டிய மன்னன் ஆடல் பாடல் கேளிக்கையில் சொக்கிப் போகிறான்.  கூடல் மாநகரத்து நாடக மகளிரினரின்  ஆடல்  அசங்கல்களும், பாடல் நேர்த்தியும், பண்ணின் சுருதி ஏற்ற இறக்கங்களும், யாழிசையின் சொக்கலும் மன்னனை இந்திர லோகத்திற்கே இழுத்துச் சென்ற நேரம் அது.  மன்னன் தன்னையே மறந்து நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருக்க,  பாண்டிமாதேவியோ ஆடல் மகளிரிடம் மன்னனின் கவனம் பதிந்தது என்று தவறாக நினைத்து மாமன்னனிடம் ஊடல் கொண்டவள்  உண்மைக் காரணம் மறைத்து  தலைநோய் தன்னை வருத்துவதாக சொல்லி   பாதியில் எழுந்து அந்தப்புரம் விரைகிறாள்.  

உடனே அரசனும் தன் அமைச்சர் குழுவிடமிருந்து விடுபட்டு  செவ்வரி படர்ந்த ஏவல் கண்ணழகிகள் சிலருடன் கோப்பெருந்தேவியின் அந்தப்புறம் நோக்கி விரைகின்ற நேரத்து மிகச் சரியாக  வாயில் புறத்தில் அந்த கபட பொற்கொல்லன் மாமன்னனின் காலடிகளில் விழுகிறான்.  

வாய்பொத்தி பயம் வெளிக்காட்டி “அரசே!  கன்னக்கோல் இன்றியும், கவைக்கோல் இன்றியும் தன் மந்திரம் ஒன்றையே துணையாகக் கொண்டு காவலர்களை மயக்கி அரசியாரின் சிலம்பைக் கவர்ந்தவன், என் சின்னச் சிறுகுடிலின் புறத்தே இருக்கிறான்..” என்று பவ்யமாகச் சொன்னான்.

மன்னனின் தீவினை அவனது வாய்மொழியாகிறது.  அவனிருந்த அசந்தர்ப்ப சூழ்நிலையில் பொற்கொல்லனின் சொற்களை ஆராயாமல், “தாழ்பூங்கோதை அரச மாதேவியின் சிலம்பு இவன் குறிப்பிடும் கள்வன் வசம் இருக்குமாயின் கொன்ற சிலம்பு கொணர்க ஈங்கென..” என்று  வாய் தவறிய வார்த்தைகள் அரசனிடமிருந்து  வெளிப்படுகின்றன.  ‘அவனைக் கொன்று சிலம்பை இங்கு கொண்டு வாருங்கள்’  என்ற அரசனின் ஆணையைப் பெற்ற காவலர் பொற்கொல்லனுடன் விரைந்து அவன் காட்டிய கோவலனைச் சூழ்கின்றனர். 

பொற்கொல்லன் கோவலனைப் பார்த்து, “அரசனின் படைவீரார்கள் உன்னிடமுள்ள சிலம்பைப் பார்க்க விரும்புகிறார்கள்..” எனறு அவனிடம் கைச்சிலம்பைக் கேட்டு வாங்குகிறான்.  சிலம்புடன் வீரர்களை தனி இடத்திற்கு அழைத்துச் செனறு  அரசியாரின் சிலம்பும் இந்தச் சிலம்பும் எவ்வகைகளிலெலாம் ஒத்து இருக்கிறது என்பதை அவர்களுக்கு விளக்குகிறான்.

விதியின் கைகளே வலுவிழந்து லேசாக நெகிழ்வது போல காவல் வீரர்களில்  ஒருவன், "இவன் தோற்றமும் உடல் அடை யாளங்ளையும் பார்த்தால் இவன் கள்வனாகவும் தெரியவில்லை ;  கொலைபடு மகன் இவனுமல்லன்” என்கிறான்!  அவன் சொல்வதைக் கேட்டு சட்டென்று கபட பொற்கொல்லனின் முகம் மாறிப்போனாலும், அந்த வீரர்களுக்கு களவு நூலின் அத்தியாயங்களை விவரமாக எடுத்தோதுகிறான்.

“மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம் என்ற ஐந்தோடு இடம், காலம், கல்வி என்ற மூன்றும் சேர்கின்றது. ஆக, எட்டிலும் கொண்டுள்ள தங்கள் திறமையை ஆற்றல் மிக்க படைக்கலன்களாக இப்படிப்பட்ட கள்வர் கொண்டுள்ளனர்.  "இவனை மட்டும் தப்ப விட்டு விடுவீர்கள் ஆயின் அரசரின் கடுந்தண்டனையிலிருந்து நீங்கள் தப்ப மாட்டீர்கள்..” என்று காவலர்களை எச்சரிப்பது போலச் சொன்னான் பொற்கொல்லன். அதோடு மட்டுமில்லை, தான் சொல்வதை நியாயப்படுத்தும் விதத்தில்  கதை போலவான சில நிகழ்வுகளையும் சொன்னான்.

பொற்கொல்லனின் சாமர்த்தியமான பேச்சு காவலர்களை மயக்கியது. வேலேந்தி அங்கிருந்த காவலன் ஒருவன் தன் அனுபவம் ஒன்றைச் சொன்னான்: “முன்பு ஒரு நாள் ஒரு மழைக்காலத்து இரவில் நீல உடையுடன், கையில் உளியுடன் கள்வன் ஒருவனைப் பார்த்தவுடன் உடை வளினை உருவினேன்.   ஆனால் அவனோ அசரவில்லை. நொடியில் என் மீது பாய்ந்து  என் வாளை அவன் பறித்தது தான் தெரியும்.  அதற்குப் பிறகு இன்று வரை அவன் என் கண்ணில் படவே இல்லை!  இந்த மாதிரியான கள்வர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகள்.  இவனைத் தண்டிக்காமல் விட்டால் அரசர் நம்மைத் தான் தண்டிப்பான்.  ஆக அடுத்து என்ன செய்வது என்பதை உடனே சொல்லுங்கள்..” என்றான்.

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் தான் அது நடந்தது.  

கல்லா களிமகனை ஒத்த காவல்வீரன் ஒருவனின் கைவாள்  கோவலனின் தலை நோக்கி இறங்கியது.  என்ன நடக்கிறது என்று கோவலன் சுதாரிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்தது.   குருதி கொப்பளித்து நாலாபுறமும் சிதறியது.  மண்ணக மடந்தை வான்துயர் கொள்ள, பாண்டியனின் வளையா செங்கோல் வளைந்தது.  இதற்காகத் தான் காத்திருந்தது போல கோவலனின் பண்டை ஊழ்வினை வலிந்து செயல்பட கண்ணகியின் கணவன் மண்ணில் சாய்ந்தான்.

பொழுது புலர்ந்தது.  

பாண்டிய மன்னனின் அரண்மனையில் பள்ளியெழுச்சி முரசம் ‘திம்திம்’ என்று முழங்கியது. 

மாதுரி எழுந்து விட்டாள்.  எழுந்தவுடனேயே அவளுக்கு இன்று அரண்மனையில் நெய்ம் முறை என்பது நினைவுக்கு வந்தது.   அரண்மனைக்கு நெய் கொண்டு செல்ல வேண்டும் என்ற அந்த நினைவின் உந்ததில் தன் மகள் ஐயையைக் கூவி அழைத்து தயிர் கடையும் மத்தையும் கயிற்றையும் எடுத்து வரச்சொல்லி தயிர் தாழியிடத்தே வந்தாள்.

தயிர்த் தாழிகளைப் பார்த்த பொழுது நேற்று உறையிட்ட பால் தோயாதிருந்தது தெரிந்தது.  மாட்டுக்  கொட்டிலில் பார்த்தால் ஆணேற்றின் கண்களில் நீர் வழிகிறது.  

மாதுரிக்கு திடுக்கென்றிருந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக இனம்புரியாத அச்சம் அவளைப் பற்றிக் கொண்டது.  ஏதோ தீது நேருவதற்கு  இந்த தீய நிமித்தங்கள் அறிகுறியோ என்று உள்ளுணர்வு பயமுறுத்தியது.  நெஞ்சம் உலைக்களமாயிற்று.

உறியிலே முதல் நாள் வைத்த வெண்ணையை எடுத்து உருக்க முயற்சித்த பொழுது அது உருகவில்லை.  கிடையில் ஆட்டுக்குட்டிகளோ துள்ளி விளையாடமல்  சோர்வுற்றிருந்தன.  இந்த நிகழ்வுகள் அவளை இன்னும் பயப்படுத்தின.

திடீரென்று எழுந்த பசுக்களின் நீண்ட அ..ம்..மாவென்ற நடுக்கும் குரல் அவளை நடுக்கியது.  தொடர்ந்து அவற்றின் கழுத்து மணி அறுந்து தரையில் விழுந்தன.  ஏதோ தீமை நிகழப்போகிறது என்பது மாதுரிக்கு நிச்சயமாயிற்ரறு.


“ஐயை....” என்று பெருங்குரலெடுத்து  மகளை  அழைத்தாள்.  வந்தவளுக்கு நிகழந்த தீய நிமித்தங்களைச் சொன்னாள்.  “இருந்தாலும் பயப்படாதே...”என்றாள். “ஆயர்குலத்து ரட்சகன் கண்ணபிரான் இருக்கிறான், கலங்காதே..” என்று மகளுக்கு நம்பிக்கை ஊட்டினாள். “நற்குலத்து நங்கை கண்ணகியும் நல்லவேளை நம்முடனேயே இருக்கிறாள்.  ஒன்று செய்வோம்.  நம் பெருமான் கண்ணபிரான் தன் தமையன் பலராமனோடு  ஆயர்பாடி எருமன்றத்தில் விளையாடிய  பாலசரித நாடகங்களைப் பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறேன்.   வேல் நெடுங்கண் நப்பின்னையோடு குழல் அழகன் ஆடிய குரவைக்கூத்தினை நாம் ஆடுவோம்.  கரவைப் பசுக்களின், கன்றுகளின் துயர் நீங்குக என்றே குரவையாடி வேண்டுவோம். ..” என்று மாதுரி உணர்வு மல்க மகளிடம் சொன்னாள்.

(தொடரும்)

படங்கள் உதவிய  நண்பர்களுக்கு நன்றி.

20 comments:

Ramani S said...

மனம் நடுங்கியபடித்தான்
படிக்கவேண்டி இருந்தது
படிக்கப்படிக்கக் காட்சியாய் சூழல்
மனக் கண் முன் விரிய...
என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை
வாழ்த்துக்களுடன்...

‘தளிர்’ சுரேஷ் said...

சிலம்பு கதையை சிலிர்க்கும் வண்ணம் உரைக்கும் உமக்கு எனது நன்றிகள்! அருமை! தொடர்கிறேன்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மன்னனின் தீவினை அவனது வாய்மொழியாகிறது. அவனிருந்த அசந்தர்ப்ப சூழ்நிலையில் பொற்கொல்லனின் சொற்களை ஆராயாமல், “தாழ்பூங்கோதை அரச மாதேவியின் சிலம்பு இவன் குறிப்பிடும் கள்வன் வசம் இருக்குமாயின் கொன்ற சிலம்பு கொணர்க ஈங்கென..” என்று வாய் தவறிய வார்த்தைகள் அரசனிடமிருந்து வெளிப்படுகின்றன. ‘அவனைக் கொன்று சிலம்பை இங்கு கொண்டு வாருங்கள்’ என்ற அரசனின் ஆணையைப் பெற்ற காவலர் பொற்கொல்லனுடன் விரைந்து அவன் காட்டிய கோவலனைச் சூழ்கின்றனர். //

இந்த வரிகளைப் படிக்கும் போதே மனம் பதறுகிறது. நடக்கக்கூடாத ஒன்று கடைசியில் நடந்தே விட்டது. விதியின் கொடுமை.

தொடரட்டும்.

KABEER ANBAN said...

ஊழ் வலியது தான். அதைப் பின்னால் காவியமாகப் படைக்கும் போது கதை சொல்லுபவர் திறன் பல வழிகளில் வலியுறுத்தும் போது மனம் ஆடி போய் விடுகிறது. மன்னன் அமைதி இழப்பதாகட்டும், காவலனுக்கு கபடப் பொற்கொல்லன் எடுத்துக் காட்டும் வாதங்களாகட்டும் பன்முகங்கள் மனிதனை சுற்றி ஊழ் எப்படி வேலை செய்கிறது என்பது விரிவாக சொல்லப்படுகிறது.
சிலம்புச் செல்வர் ம்.பொ.சி பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். இடையிடையே அவரது பார்வையையும் தங்களால் சொல்ல முடிந்தால் அவருடைய பார்வையில் சிலப்பதிகாரத்தையும் கொஞ்சம் வாசகர்கள் தெரிந்து கொண்டதாகும் எனத் தோன்றுகிறது.
அழகிய தமிழ் இது !!
நன்றி

Dr B Jambulingam said...

விதியை நினைத்துக்கொண்டே படித்துக்கொண்டே வந்தேன். எழுத்து நடை எங்களை அக்காலகட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது. சில இடங்களில் கல்கியின் நடையைக் கண்டேன்.நன்றி.

ஜீவி said...


@ S. Ramani

கோவலனின் கதி இப்படியாவது யாருக்குமே சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. இந்த நிகழ்வு நோக்கி கதை நகர்ந்து கொண்டே வரும் பொழுதே வாசிக்கும் எவருக்கும் ஒரு பக்கம் இந்த நிகழ்வு வருவதை விருப்பமில்லாமல் எதிர்பார்த்தும், இந்த நிகழ்வு வந்து விட போகிறதே என்று பதற்றத்துடன் தான் படித்து வந்தார்கள்.

//அவசரமாய் மதுரைக்குள் நுழைந்து விடுவீரோ என பதற்றமும் மெல்ல எழுகிறதே! பார்த்துச் செய்யுங்கள் ராஜாவே! //

- என்று நம் அருமை நண்பர் மோகன்ஜி கோவலன் மதுரை புகுவதையே பதற்றமாகக் கொண்டிருந்தார்.. நானும் இந்த அத்தியாயத்தை எழுத ஏலாமல் நீட்டிக் கொண்டே வந்தேன். எழுத வேண்டிய நேரம் வந்ததும், 'அந்தக் காட்சி'யை விவரித்து எழுதாமல் மறைத்து எழுதி வேகமாகக் கடந்து வந்து விட்டேன்.

சிலப்பதிகாரம் நாயகியின் நாவல். பாதிக் கதையிலேயே நாயகனுக்கு முடிவு வந்து விட்டாலும், நாயகியின் வீறு கொண்ட எழுச்சியில் நாயகனும் சேர்ந்து பெருமை பெறுவான். இனி எல்லாம் ஏறு முகம் தான். தொடரலாம்.

தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்திய பின்னூட்டத்தை நானும் அதே உணர்வில் உணர்ந்தேன். தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, ரமணி சார்

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

தொடர்ந்து வருவதற்கு நன்றி, நண்பரே! தாங்கள் அனுப்வம் கொண்ட உணர்வுக்கும்
வாசிப்பு ரசனைக்கும் நன்றி.

G.M Balasubramaniam said...

இருக்கும் திறனை எல்லாம் காட்டி எழுதி வரும்போது எழுத்து நடை அவரது போல் இருக்கிறது இவரது போல் இருக்கிறது என்று கூறப்படுவது தவிர்த்தல் நலம் என்று தோன்றுகிறது சிலப்பதிகாரத்தில் உங்களுக்குப் பிடித்த என்று எண்ணும் நான் நினைத்த வரிகளை மிண்டும் கண்டேன்

ஜீவி said...

@ வை.கோ

கோவலனின் பாத்திரப்படைப்பை வெகு ஜாக்கிரதையாகப் படைத்து அவன் மேல் நமது அனுதாபத்தை சம்பாதித்துக் கொடுத்து விடுகிறார், அடிகளார்!

இல்லையென்றால் 'தாலி கட்டிய மனைவியை தவிக்க விட்டு விட்டு இன்னொருவளுடன் சுற்றினாயே, நன்றாக வேண்டும் உனக்கு' என்று நாமும் ஒரு நியாயம் வழங்கியிருப்போம்.

மாடலனோ, 'இந்தப் பிறவியில் நீ செய்தது எல்லாம் புண்ணிய காரியங்கள் தான்' என்று நற்சான்றிதழ் வழங்குகிறான். இந்தக் கொடுமைக்கு இந்தப் பிறவி காரணம் இல்லை என்றால் அப்போ போன பிறவி, இல்லை அதற்கு முந்திய பிறவி என்று நம் சிந்தனை போகிறதே தவிர, கோவலன் என்ன தான் செய்தான் என்று அடிகளார் ஒரு கோடியாவது காட்டியிருக்கலாம். அதைச் சொல்லா விட்டாலும், 'ஏதோ காரணம் இருக்கிறது' என்ற அளவில் நம்மை நம்ப வைத்திருப்பதும் அவரின் வெற்றி தான்!

தொடர்து வாசித்து கருத்திடுவதற்கு நன்றி, அன்பு வை.கோ. சார்!

ஜீவி said...

@ கபீர்ன்பன்

உங்களைப் பார்த்ததில் சந்தோஷம், கபீரன்ப!

ஊழ்வினையின் செல்வாக்கை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன்.

ஊழ்வினையை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் போலிருக்கு! அதைப் புண்ணிய காரியகளினால் NULLIFY பண்ண முடியாது போலிருக்கு. இதில் அறியாது செய்யும் தீவினைகளினால் விளையும் தீங்குகள் வேறு. அப்படி அறியாது தீவினை செய்வதற்கும் ஊழ்வினை தான் காரணமாக இருக்கும் போலிருக்கு. ஆக, ஊழ்வினை என்பது ஒரு மாயச் சுழல். அனுபவித்தே விடுபட முடியும் என்று தெரிகிறது.

குறைந்த பட்சம், அறியாது செய்த தீவினைகளுக்கு அறிந்து செய்யும் புண்ணியங்களாவது தீர்வாக இருந்தால், புண்ணியங்கள் செய்வதின் ஆர்வம் கூடும். என்ன சொல்கிறீர்கள்?..

ம.பொ.சி. என்றால் சிலப்பதிகாரம். சிலப்பதிகாரம் என்றால் ம.பொ.சி என்கிற அளவுக்கு சிலம்போடு ஒன்றியவர் அவர். அவரை சந்தித்தும் இருக்கிறேன். இருந்தும் அவர் கருத்துக்களை படித்தால் அந்த பாதிப்பில் என் கருத்துக்கள் அமைந்து விடுமோ என்ற எண்ணத்தில் அவரது சிலம்பு பற்றிய கட்டுரைகளைப் படிக்காது இருக்கிறேன்.
இணையத்தில் அவை கிடைக்கும். முடிந்தால் யாராவது அவர் கருத்துக்களைப் படித்து நான் எழுதுவதற்கு மாற்றாக அமைவதைக் குறிப்பிட்டுச் சொன்னால் பேருதவியாக இருக்கும். அந்த மாதிரியான மாறுபாடுகள் ஒரு விவாதத்திற்கும் அதன் அடிப்படையில் ஏற்படும் தெளிவுகளுக்கும் உதவியாக இருக்கும் என்பதால் சொன்னேன்.

தொடர்ந்து வாசித்து வருவததில் சந்தோஷம், கபீரன்ப!

ஸ்ரீராம். said...

ஊழ்வினைகள் காரணமாக துக்க நிகழ்வுகள் நேரும்போது நிமித்தங்கள் முன்கூட்டி எச்சரிப்பதை நாம் உணர முடிவதில்லை என்றும் சொல்லலாம். எப்போதுமே முன் நிமித்தங்கள் தெரிவதில்லை என்றும் சொல்லலாம் என்று தோன்றுவதற்கு எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த சோகச் சம்பவம் கூடாக காரணமாக இருக்கலாம்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam

எழுதும் மனசை சம்பவங்களோடு பொருத்தி அந்தக் காலத்திற்கே கொண்டு சென்று விட்டால் எழுதுகிற விஷயமும் வெகு சுலபமாக அந்தக் காலத்திற்கே சென்று விடும். கல்கி இந்த விஷயத்தில் துறைபோகியவர். அதுவும் தவிர எளிமையாக உரையாடல்களை அமைப்பவர். அவர் எழுத்துக்களைப் படித்தவர்களுக்கு சரித்திர சமாச்சாரங்கள் + உரையாடலில் எளிமை என்றாலே அவர் நினைப்பு வருவது தவிர்க்க முடியாதது. அந்த மாதிரியான உணர்வில் அவர் நினைவு வந்திருக்கலாம்.

தங்கள் தொடர்ந்த ஆழ்ந்த வாசிப்பிற்கும் அதுபற்றிய பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி, ஐயா!

ஜீவி said...

@ ஜிஎம்பீ

காலாதிகாலமாக எத்தனையோ தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தாயிற்று. படித்தும் அவர்கள் எப்படி இப்படி எழுதுகிறார்கள் என்று ஆராய்ச்சி போல எழுதும் போக்குகளை உள்வாங்கிக் கொண்டு படித்ததினால் கிஞ்சித்தேனும் மனம் கவர்ந்த எழுத்தாளர்களின் பாதிப்பு எழுத்துக்களில் ஒட்டிக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது.

குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. தான் சோதனை எழுத்துக்களால் இளம் வயதில் முதல் முதல் என் மனதைக் கவர்ந்தவர். அடுத்து வாலிப வயதில் ஜெயகாந்தன். உரையாடல்களில் சிக்கலான எந்த விஷயத்தையும் அலசி கதாபாத்திரங்களின் வாய்மொழியாகவே அதற்கான தீர்வுகளை debate செய்யலாம் என்று கற்றுக் கொடுத்தவர். அதற்கடுத்து பாலகுமாரன். ஆற்று வெள்ளம் போல் நொப்பும் நுரையுமாக எழுதும் விஷயம் உள்ளத்தில் பொங்கி வர அதை அடக்கி ஆண்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தும் எழுதும் வித்தையை போதித்தவர். காதாமாந்தர்களின் உரையாடல் நேர்த்தியும் அதற்கிடையில் தான் சொல்ல வந்த கதையை நுழைத்து இவர் கதையை நெய்யும் சாமர்த்தியமும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்த மூன்று பேரும் தான் எழுத்துத் துறையில் நான் பயின்ற மானசீக பள்ளி ஆசிரியர்கள். ஆசிரியர்களில் போதனை என்பது மனசில் படிந்திருந்து நம் போக்கில் நாம் எழுதுகையில் நம்மை அறியாமலேயே நம்மை ஆளலாம். துரோணர் கற்றுக் கொடுத்த கல்வியின் அடிப்படையைல் தானே அர்ச்சுனன் அம்பை எய்வான்?.. இருந்தும் அவனது ஞானம் என்ற சுயப்பிரகாசம் அதோடு சேரும் போது அது அவனது வழி என்று மேலூம் சிறக்கிறது.

'இருக்கும் திறனை எல்லாம் காட்டி எழுதி வரும்போது' என்று நீங்கள் சொல்வது முக்காலும் உண்மை. அது சுய அல்லாடலின் வெளிப்பாடு. அந்த அல்லாடல்களை அனுபவித்தவர்களால் அதைச் சொல்லாமலும் இருக்க முடியாது. புரிகிறது.

சிலப்பதிகாரத்தில் எனக்குப் பிடித்த வரிகள் என்று யூகம் பண்ணி ஒரு பதிவில் கூட சொல்லியிருப்பது நினைவுக்கு வந்தது. பிடித்த வரிகளின் நீண்ட பட்டியலே உண்டு. இந்தப் பகுதியில் பாண்டியனின் செங்கோல் சரிந்தது பற்றி குறிப்பிடுகிறீர்கள் போலிருக்கு. அதெல்லாம் போகட்டும்.

திரு. கபீரன்பனுக்கான பின்னூட்டத்தில் ஊழ்வினையின் செயல்பாடுகள் பற்றி என் ஆதங்கத்தைச் சொல்லியிருக்கிறேன். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். ஊழ்வினையெல்லாம் கப்ஸா என்று ஒரே போடாகப் போட்டாலும் அதை நிறுவ முயற்சி செய்யலாம்.

தங்கள் வருகைக்கு நன்றி, ஐயா!

வே.நடனசபாபதி said...

// “தாழ்பூங்கோதை அரச மாதேவியின் சிலம்பு இவன் குறிப்பிடும் கள்வன் வசம் இருக்குமாயின் கொன்ற சிலம்பு கொணர்க ஈங்கென..” என்று வாய் தவறிய வார்த்தைகள் அரசனிடமிருந்து வெளிப்படுகின்றன.//

ஆனால் அரசன் சொல்ல நினைத்தது வேறு எனக் கேள்விபட்டிருக்கிறேன். அது என்ன என்று சொல்லுங்களேன்.

G.M Balasubramaniam said...


ஊழ்வினை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்கிறீர்கள் ஊழ்வினை எல்லாம் கப்ஸா என்று ஒரே போடாக நான் போடவில்லை. அதற்கு மாறாக ஒரு சிறு கதையைப் பகிர்கிறேன் ஒரு சிறுவன் ஒரு தும்பியைக் கயிறால் கட்டியும் உனக்கு அப்பா அம்மாவை காண்பிக்கிறேன் கல்லைத்தூக்கு என்று கூறியும் அதைத் துன் புறுத்திக் கொண்டிருந்தானாம் அப்போதுஒரு பெரியவர் இப்படி நீ அதைத் துன்புறுத்தினால் அடுத்த ஜன்மத்தில் நீ தும்பியாகப் பிறந்து அது உன்னைப் போல் வந்து துன்புறுத்தும் என்றாராம் அதற்கு அந்தப் பையன் போன ஜன்மத்தில் என்னை இந்தத் தும்பி துன் புறுத்தி இருக்கலாம் அதனால் இந்த ஜன்மத்தில் பலனை அனுபவிக்கிறது என்றானாம் இதன் மாரலை நான் சொல்ல வேண்டாம் என்றுய் தோன்றுகிறது

ஜீவி said...

@ G.M.B (2)

தங்கள் மீள் வருகைக்கு நன்றி, ஐயா. திரு.கபீரன்பனுக்கான பின்னூட்டத்தில் நான் சொல்லியிருந்த கீழ்க்கண்ட பகுதிக்காக தங்கள் கருத்தைக் கேட்டேன். நீங்கள் இது பற்றி யோசிப்பீர்கள் என்று தான்.

''ஊழ்வினையை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் போலிருக்கு! அதைப் புண்ணிய காரியகளினால் NULLIFY பண்ண முடியாது போலிருக்கு. இதில் அறியாது செய்யும் தீவினைகளினால் விளையும் தீங்குகள் வேறு. அப்படி அறியாது தீவினை செய்வதற்கும் ஊழ்வினை தான் காரணமாக இருக்கும் போலிருக்கு. ஆக, ஊழ்வினை என்பது ஒரு மாயச் சுழல். அனுபவித்தே விடுபட முடியும் என்று தெரிகிறது.

குறைந்த பட்சம், அறியாது செய்த தீவினைகளுக்கு அறிந்து செய்யும் புண்ணியங்களாவது தீர்வாக இருந்தால், புண்ணியங்கள் செய்வதின் ஆர்வம் கூடும். என்ன சொல்கிறீர்கள்?.."

-- என்று கேட்டிருந்தேன்.

-- கொஞ்சம் ஆழ யோசிக்க வேண்டும், அவ்வளவு தான்.

இதுவே ஒரு பதிவுக்கான பொருளும் கூட. அப்புறம் உங்கள் பாடு.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

அரசன் சொல்ல நினைத்தது வேறு என்பது மிகப் பிரபலமான ஒன்று. மாற்றி மாற்றி கிளிப்பிள்ளை மாதிரி எல்லோரும் சொல்லியதால் பிரபலமானது அது.

அரசமாதேவியின் சிலம்பு இவன் கூறிய கள்வன் கையில் இருக்குமானால் (அவனைக் கொல்வதற்கு அச்சிலம்புடன் இங்கு கொண்டு வருக என்று சொல்ல நினைத்தவன்) அவவாறு கூறாமல் 'அவனைக் கொன்று அச்சிலம்பை இங்கு கொண்டு வாருங்கள்' என்று வாய்தவறிச் சொல்லி விட்டான் என்று நானும் பலர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஆனால் சிலப்பதிகார வரிகளோ---

தாழ் பூங்கோதை தன் கால் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்
காவலன் ஏவக் கருந்தொழில் கொல்லனும்
ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தென....

-- அவ்வளவு தான்இளங்கோவடிகளார் சொன்னதும்..

'மன்னன் சொல்ல நினைத்தது வேறு; சொல்லியது வேறு' என்று பலர் சொல்லிச் சொல்லி வழிவழி வந்த பழக்கத்தில் நாம் அப்படி நினைக்கிறோம் என்று அதை அழுத்திச் சொல்லாமல் விட்டு விட்டேன்..

நீங்கள் கேட்டிருப்பது மிக நுண்ணிய கேள்வி. நானும் நீங்கள் நினைத்த மாதிரியே நினைத்து திருப்பிப் திருப்பி படித்து அடிகளாரின் வரிகளைத் துழாவித் தெளிந்தேன்.

தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவது குறித்து மிகவும் மகிழ்ச்சி, நண்பரே!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நிமித்தங்களைக் குறித்து அறிந்தவர்களுக்கே அவற்றைப் பற்றிய அறிவு இருக்கும் என்ற கோணத்திலும் நீங்கள் சொல்லியிருப்பதைக் கொள்ளலாம். அது பற்றித் தெரிந்தால் தானே அந்த எச்சரிக்கை என்ன என்பது தெரிந்திருக்கும், இல்லையா?..

'நடு இரவில் நாய் விடாது குலைத்தால் இதனால்' என்றால் அது பற்றித் தெரியாதவர்க்கு
'நடு ராத்திரியில் இந்த சனியன் வேறே தூங்க விடாமல்'.. என்றே தோன்றும். அந்த நிமித்தம் பற்றி அறிந்தவர்க்கு இன்னது நடக்கலாம் என்று முன் கூட்டியே தெரியும்.

.. அந்த மாதிரி தான்.

'எறும்புகள் முட்டை கொண்டு திட்டை
ஏறின் மழை பெய்யும்..' என்பது பழைய தமிழ் மொழி.

மழை வரப்போவதை எறும்புகள் உணரும் சக்தி படைத்திருப்பதால் அவை முட்டைகளைச் சுமந்து மேடான பகுதிக்குப் போகின்றன. இந்த மாதிரி கூடவான அறிவார்ந்த
நிமித்தங்கள் இருக்கின்றன.

தேர்ந்த ஜோதிடர்களின், பஞ்சாங்கங்களின் நிமித்தங்களை அதுப் பற்றித் தெரியாததால் தான் பல சமயங்களில் மறுத்துப் பேசுகிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

Geetha Sambasivam said...

துர்நிமித்தங்கள் நடந்ததைச் சொல்லிவிட்டன. இன்னமும் கண்ணகிக்குத் தெரியவில்லை! :( கணவனுக்காகக் காத்திருக்கிறாள். மதுரா நகரின் தெய்வமும் கண்ணகியிடம் முன் வினைபற்றிக் கூறுவதாகவும் வரும். அதில் மதுரை தீயில் அழிந்துபடும் என்பது சொல்லப்பட்டிருப்பதாக வரும்னு நினைக்கிறேன். எப்போவோ படிச்சது!

தி.தமிழ் இளங்கோ said...

சிலப்பதிகாரம் மீள்வாசிப்பின் போதெல்லாம் ’கொலைக்களக் காதை’ எப்போதுமே நெஞ்சை உலுக்கும்.

Related Posts with Thumbnails