மின் நூல்

Friday, September 30, 2016

அழகிய தமிழ் மொழி இது!...


                           
                           
      வஞ்சிக் காண்டத்திற்கு  நுழைவாயில்   



கோவலன் இரண்டு பெண்டாட்டிக்காரன்.  கண்ணகியின் கணவன்.  தாலி கட்டி மனைவீயாக உரிமையாக்கிக் கொள்ளாத மாதவியை மனைவி ஸ்தானத்திலேயே வைத்துக் கொண்டு அவளுடன் வாழ்கிறான்.

கோவலனின் மேல்,  அவன் கொண்டிருந்த இசை ஞானத்தின்  மேல்  அவனின் எதிர்கால நலங்களின்
மேல் அக்கறையும் அன்பும் கொண்டவள் மாதவி. இவளோடையே அதிக காலம் கோவலன் வாழ்க்கை நடத்தியதும் அல்லாமல் ஒரு பெண் குழந்தையையும் தந்திருக்கிறான்

சொல்லப்போனால் கோவலனுக்கு ஒன்று என்றால் அதைக் கேள்விப்பட்ட ஷணத்திலேயே தாங்கிக்கொள்ள முடியாமல் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி மாதிரி உடனே உயிர் போகக் கூடிய நிலையில் இருப்பவள் மாதவி தான். அதற்காக மாதவி உயிர் விட வேண்டும் என்று   நான் சொல்லவில்லை. எல்லோரும் இப்படியே உயிர் விட்டால் எப்படி?.. அவர்கள் நெருக்கமாக வாழ்ந்த தீவிரத்தின் அடிப்படையில் சொன்னேன்

கோவலன் தன்னை விட்டுப் பிரிந்து  ண்ணகியுடன் சேர்ந்து விட்டான் என்றவுடனேயே மனத்தளவில் அதை வரவேற்று இவ்வளவு  தான்  தன்  பிராப்தம் என்று ஏற்றுக் கொண்டு விட்டவள்  மாதவி.

அந்த மனநிலை ஏன் ஏற்பட்டது என்றால் என்ன இருந்தாலும் இன்னொருத்தியை திருமணம் செய்து கொண்டவனுடன் வாழ்க்கை நடத்தியவள் அவள். கோவலனிடம் கண்ணகிக்கான உரிமையை மதித்து ஏற்றுக் கொண்டு அவனுக்கு அந்த மடல் அனுப்பியவுடனேயே அவனது எதிர்கால மகிழ்ச்சியான  வாழ்க்கைக்காக தன்னைக் கத்தரித்துக் கொண்டவள்.   அந்தளவுக்கு கோவலனிடம் அவள் நேசிப்பு இருந்திருக்கிறது.  

இப்பொழுது கண்ணகியைப் பார்ப்போம். அழகான கணவனை அக்னி வலம் வந்து கைப்பிடித்த போதும் இன்னொரு பெண்ணிடம் அவனைப் பறிகொடுத்தவள் அவள்

கணவன் தன்னைக் கைவிட்டுப் போனபின்பு கூட  ஒரு நாள் திரும்பி  வருவான் என்னும் நம்பிக்கையில், அவன் நினைவில் மாசு படாமல் காலம் தள்ளியவள் அவள். அவளை மறந்தே போன கணவன் பல காலம் கழித்து சொத்தெல்லாம் மாதவியுடனான் நெருக்கத்தில் இழந்து விட்டு அவளைத் தேடி வந்த பொழுது கொஞ்சமும் முகம் சுளிக்காமல் 'எல்லாத்தையும்' மறக்கடித்துக் கொண்டு அவனது வியாபார விருத்திக்காக, 'சிலம்புள; கொள்க' என்று தந்தவள்

தந்தது மட்டுமல்ல, அவன் அருகாமையையே பெரும் பேறாகக் கொண்டு அவனுடன் காடு, மலை, பருக்கைக் கற்களின் புண் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அவனுடன் மதுரை சென்றவள். பாவி அவளுக்கு மாதவியிடம் கோவலன் போன பிறகு ஒருநாள் கூட சந்தோஷமாக அவனுடன் வாழக் கொடுத்து வைக்க வில்லை.

இன்று நேற்றல்ல, ஆதி காலத்திலிருந்தே இது ஆண் ஆதிக்க சமுதாயம்.


மனம்  நொறுங்கிப் போகும்  சோதனைத் துன்பங்களைத் தூக்கிச் சுமந்தக் காரணத்தை   ஒட்டியே நளாயினியின் கற்பைப்  போற்றிப்  பட்டயம் கொடுத்த நாடு இது.

ஆனால் யாரும் செய்யாத ஒரு அரிய செயலை தாலி கட்டிய கணவனுக்குச்  செய்திருக்கிறாள்  கண்ணகி.   'கள்வன்' என்று ஊருக்குக் காட்டப்பட்டவனின் பக்க நியாயத்தை

உலகோருக்குத் தெரியப்படுத்தி, அவன் கள்வன் இல்லை என்று மன்னன் சபையில் நிரூப்பித்த ஒரு காரியம் இருக்கே, அது கோவலனின் செத்துப் போன ஆத்மா கூட சந்தோஷத்தில் துடிக்கிற காரியம். இதை மட்டும் அவள் செய்யவில்லை என்றால் கள்வனாகவே கருதப்பட்டு கோவலனக்கு அவன் குடும்பத்திற்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டிருக்கும். மதுரையை எரித்தது, அவள் அல்ல.  அவள் ஆத்திரத்தை உபயோகப்படுத்திக்  கொண்ட  ஊழ்வினையின் ஏற்பாடு அது.



 அவள் துயரை மதுராபதித் தெய்வமே காணச் சகிக்காமல் அவளை வழிநடத்துகிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறது. எதனால், யாரால் இந்த இழப்புகள் ஏற்பட்டன என்று தெரிந்ததும், கண்ணகி சொன்ன கடைசி வாக்கியம் என்ன தெரியுமா? 'யான் தீவினையுடையேன்!' என்று கணவனுக்கு வந்த தீவினை தன்னைப் படுத்தியப் பாட்டை தனக்காக என்று ஏற்றுக் கொள்கிறாள்.

அதனால் தான் அவள் பெண் தெய்வம்.

கணவனுடன் ஒழுங்காக வாழ கொடுத்து வைக்காமலேயே, கணவனின் ஊழ்வினையை தன் வினையாகச் சுமந்த தெய்வம். கோவலனின் ஊழ்வினையின் தீயபலன் கூடப் பாருங்கள், அவனைப் பெற்றவர்களின் மீதோ, அவனுடன் கொஞ்சிக் குலவி வாழ்ககை நடத்திய மாதவியின் மீதோ சாராமல், இவள் தலையில் வந்து விடிகிறது.

ஏனென்றால் கோவலனால் தாலி கட்டப்பட்ட, அவனுக்கான ஒரே மனைவி கண்ணகி ஒருத்ததியே!   மனைவி துன்பத்தை கணவன் சுமக்கிறானோ இல்லையோ, கணவன் துன்பத்தை மனைவி தான் சுமக்க வேண்டும் என்பது இந்த நாட்டில் வழிவழி வந்த பாடம், பண்பாடு, பகுத்தறிவு, சட்டம் 
 எல்லாம்!

மாதவி மீது லவலேசமும் குற்றம் சொல்லவில்லை. அவரவருக்கு வாய்த்தது என்னவோ அது நடந்திருக்கிறது. கீதோபதேசம் என்னவென்று நமக்குத் தெரியும்


இவருக்குத் தான் இது போய்ச் சேர வேண்டும் என்று நிர்ணயிக்க நாம் யார்?..  புகழாரம் எவர் கழுத்தில் விழுகிறதோ, அவர் கழுத்தில் விழுகிறது. நாம் பார்வையாளர்களாகவே இருந்து  காப்பிய ஆசிரியர் இளங்கோ அடிகளார் சொல்ல வந்ததை உள்வாங்கிக் கொள்வது மேம்பட்ட ரசனைகளை  ஊக்குவிக்கும்.


இனி  வஞ்சிக் காண்டத்திற்குள்  நுழைவோம்.

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுவரை நடந்துள்ள அனைத்தையும் ஒருங்கிணைத்து மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

ஊழ்வினையால் நடந்துள்ள கூத்துக்களையெல்லாம் பார்க்கும் போது நாம் யாரையும் குற்றம் சொல்ல இயலாதுதான்.

இருப்பினும் ’மாதவி’ மேல் ஏனோ எனக்கு கொஞ்சம் கூடுதல் அட்டாச்மெண்ட் ஏற்பட்டு, அவளிடமிருந்து கோவலன் பிரிந்திருக்கவே வேண்டாமோ என மட்டுமே அவ்வப்போது நினைக்கத் தோன்றுகிறது.

தங்களின் இந்த எழுத்துப்பணி மேலும் தொடரட்டும் ..... படிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

மதுரையை எரித்தது, அவள் அல்ல. அவள் ஆத்திரத்தை உபயோகப்படுத்திக் கொண்ட ஊழ்வினையின் ஏற்பாடு அது.//

ஊழ்வினைதான் இப்படி செய்கிறது. வேறு என்ன சொல்ல.
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

வே.நடனசபாபதி said...

//யான் தீவினையுடையேன்!' என்று கணவனுக்கு வந்த தீவினைதன்னைப் படுத்தியப் பாட்டை தனக்காக என்று ஏற்றுக் கொள்கிறாள்.//

//மனைவி துன்பத்தை கணவன்சுமக்கிறானோ இல்லையோ, கணவன் துன்பத்தை மனைவி தான் சுமக்கவேண்டும் என்பது இந்த நாட்டில் வழிவழி வந்த பாடம், பண்பாடு, பகுத்தறிவு, சட்டம் எல்லாம்! //

உண்மைதான். அன்று கண்ணகி, இழப்புகள் ஏற்பட்டதை தனக்காக என்று ஏற்றுக்கொண்டது தான் இதுவரை காலம் காலமாக நடந்துவருகிறது என நினைக்கிறேன். இன்றைக்குக்கூட கட்டிய கணவனுக்கு ஏதேனும் இடர்ப்பாடு வந்தால் மனைவி வந்த ராசி அப்படி என்று சொல்லி அந்த துன்பத்திற்கு காரணகர்த்தாவாக மனைவியை ஆக்கிவிடுவது நமது வழக்கம் தானே.
கோவலன் வாழ்க்கையில் கண்ணகி மாதவி ஆகிய இருவருமே சம பங்கு கொண்டவர்கள் என்பதை வெகு அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
அதை அசை போட்டுக்கொண்டே தங்களோடு வஞ்சிக்கண்டத்திற்குள் நுழைகிறேன் மேற்கொண்டு நடந்தவைகளை அறிய.

ஜீவி said...

1)

//கோவலன் மாதவியைப் பிரிந்திருக்கவே வேண்டாமோ என்று அவ்வவ்போது நிப்னைப்பதாகச் சொல்கிறார் வை.கோ. சார். //

அப்படியே இருந்தால் என்ன ஆகும் என்று அதற்கு மேல் கற்பனையிலாவது யோசித்துப் பாருங்களேன். உங்களுக்கு ஒரு புதுக்கதை கிடைக்கும்.

கோவலன்--கண்ணகி கதை தான் சப்ஜெக்ட். இந்தக் கதையை ஒற்றி, இதுவரை எத்தனை சமூகத் திரைப்படங்கள் வந்து விட்டன என்று வியப்பாக இருக்கிறது.

2)

ஊழ்வினையின் ஆற்றலைச் சொல்லி வேறு என்ன சொல்ல என்று திகைக்கிறார் கோமதி அரசு.

3)

'இன்றைக்குக்கூட கட்டிய கணவனுக்கு ஏதேனும் இடர்ப்பாடு வந்தால் மனைவி வந்த ராசி அப்படி என்று சொல்லி அந்த துன்பத்திற்கு காரணகர்த்தாவாக மனைவியை ஆக்கிவிடுவது நமது வழக்கம் தானே' என் கிறார் நண்பர் நடனசபாபதி அவர்கள்.

நீங்கள் இப்படிச் சொன்னது தான் அடுத்த கவிதையில் 'தெய்வமகள்' தொலைக்காட்சித் தொடராக என் நினைவில் படிந்தது, சார்! கற்பனையை நடத்திச் செல்ல எங்கெல்லாம் நினைவுகள் மேய்கின்றன என்று ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.





நெல்லைத் தமிழன் said...

ஆரம்பத்தை இப்போதுதான் படித்தேன்.. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இந்தக் கதையே பலவித பரிமாணங்களுக்கு நம்மை இட்டுச்செல்லும். கோவலனுக்குத் தன்னுடைய பணம் அனைத்தும் கரைந்தபின்புதானே கொண்ட கண்ணகியின் நினைவுக்கு வருகிறது. கோவலன் மாதவியுடனே இருந்திருந்தால் அவன் நிலைமை அவனுடைய ஊழ்வினையை அவள் வீட்டிலேயே அனுபவிக்குமாறு வந்திருக்காதோ?

ஜீவி said...

இருப்பினும் ’மாதவி’ மேல் ஏனோ எனக்கு கொஞ்சம் கூடுதல் அட்டாச்மெண்ட் ஏற்பட்டு, அவளிடமிருந்து கோவலன் பிரிந்திருக்கவே வேண்டாமோ என மட்டுமே அவ்வப்போது நினைக்கத் தோன்றுகிறது....

----என்று ஆரம்பத்திலிருந்து சொல்லி வருபவர் கோபு சார்.

'கோவலன் மாதவியுடனே இருந்திருந்தால் அவன் நிலைமை அவனுடைய ஊழ்வினையை அவள் வீட்டிலேயே அனுபவிக்குமாறு வந்திருக்காதோ?' என்கிறார் நெல்லைத் தமிழன்.

தனிப்பட்ட ஒருவரின் ஊழ்வினை அந்தத் தனிப்பட்டவரின் அனுபவிப்பு ஆகிறது என்ற சுலபக்கணக்கைத் தாண்டி, இந்த ஊழ்வினையின் கணக்கு மிகவும் சிக்கலாக பின்னப்பட்டிருப்பதாகத் தான் கொள்ள வேண்டும். அந்த சிக்கலின் நல்லன, நல்லன அல்லாதன என பல பலன்கள், நிகழ்வுகளாக ஆவதற்கும் வழிகள் வகுக்கப்பட்டிருப்பது தான் அதிசயம்.

கோவலன் மாதவியுடனே இருந்திருந்தால், மதுரை எரிந்த நிகழ்வு வரை நடக்காது போயிருக்குமோ?..

அல்லது மதுரை எரிவதற்குத் தான் கோவலன் மாதவியைப் பிரிந்தானோ?..

கண்ணகி தன் கணவனை பிரிந்தும் அதே சமயத்தில் இழக்காதும் இருந்திருப்பாளோ>,,

மாதவியின் மகள் மணிமேகலை தவக்கோலம் பூண நேரிட்டிருக்காதோ?

பாண்டிய மாமன்னன் நெருஞ்செழியனும், அவன் மனைவி கோப்பெருந்தேவியும் அடுத்தடுத்து நடந்த நிகழ்வை சந்திக்காமலே இருந்திருப்பார்களோ?

கவுந்தி அடிகளார் மதுரை வரை கோவலனுக்கும் கண்ணகிக்கும் துணையாக வரவேண்டிய அவசியமே இல்லாது போயிருக்குமோ?.. கவுந்தி அடிகளாரே மதுரைக்கு வந்திருக்க மாட்டாரோ?

மதுரை எரிந்திருக்காதோ?..

இந்திரனைப் புடைசூழ தேவர்களில் ஒருவனாக கோவலன் வானவூர்தியில் வர, மலர் சொரிந்த வாழ்த்தொலிகளோடு கணவனோடு கைகோர்த்து கண்ணகி வானுலகம் சென்றிருக்க மாட்டாளோ?..

-- இதெல்லாம் நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் கோவலன் மாதவியைப் பிரிந்தானோ என்ற ஆதி கேள்விக்கே வரவேண்டியிருக்கிறது.

அல்லது அவரவர் ஊழ்வினை செயல்பாடுகள் மற்றவர் ஊழ்வினைச் செயல்பாடுகளோடு பின்னிப் பிணைந்து அவரவரவர்க்கான ஊழ்வினை பலன்களாகப் பிரித்துக் கொள்ளப் படுகின்றன என்ற முடிவுக்கு வரலாமா?..

எப்படிப் பார்த்தாலும் இந்த ஊழ்வினை வலைப்பின்னல் மிக மிக சிக்கலாக நம்மால் புரிந்து கொள்ள முடியாதபடிக்கும், முன்னரே அறிந்து கொள்ள முடியாதபடிக்கும் பின்னப்பட்டிருப்பது மட்டும் தெரிகிறது.

ஆழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி, அன்பர் நெல்லைத் தமிழரே!

தி.தமிழ் இளங்கோ said...

சிலப்பதிகாரத்தில், முதல் இரு காண்டங்களைப் படிக்கும் போது ஏற்பட்ட இலக்கிய நுகர்வு வஞ்சிக் காண்டத்தை படிக்கும்போது எனக்கு ஏற்பட்டதில்லை. உங்கள் தொடரிலும் இதனையேதான் உணர்கின்றேன். காரணம் தெரியவில்லை.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

வஞ்சிக் காண்டம் கொஞ்சம் சிக்கலான காண்டம் என்போர் அறிஞர்.

இருப்பினும் சுலபத் தமிழில் அதைச் சொல்ல முயற்சிக்கிறேன்.

இந்தப் பகுதி நுழைவாயில் தானே?.. உள்ளே நுழைந்த பின் இளங்கோ அடிகளாரின்
இலக்கியச் சுவையை ஒரு சொட்டு கூட விடாமல் சுவைக்கலாம்.

தங்கள் வருகைக்கு நன்றி.

Related Posts with Thumbnails