மின் நூல்

Tuesday, October 11, 2016

அழகிய தமிழ் மொழி இது!....

பகுதி—24

மயத்தில் வில் கொடி பொறித்த குடி சேரர் குடி.  அந்தக்குடிப் பெருமகன் சேர அரசன் செங்குட்டுவன்.  அத்தகைய சிறப்பு கொண்ட மாமன்னன் செங்குட்டுவன் தன் நாட்டு மலைவளம் காண விரும்பி பேரியாற்றங்கரையில் தன் படைவீரர்கள், அரசு அதிகாரிகள், ஆயமகளிர் புடைசூழ தண்டு அமைத்து தங்கியிருக்கிறான்.   செங்குட்டுவனின்  இளவல் இளங்கோவும்,  அரசியார் வேண்மாளும் உடனருந்தனர். அப்பொழுது மன்னனைப் பார்ந்து தங்கள் நலன் தெரிவிக்க பெருங்கூட்டமாக  குறவக்குடி பெருமக்கள் பெர்ளுமளவு பரிசல்களைத் தங்கள் தலையில் சுமந்து வந்தனர்.

மன்னனை வாழ்த்தி அவன் ஆட்சியில் தாங்கள் எந்தக் குறையும் இன்றி வளமொடு வாழும் பாங்கினைச் சொல்லும் பொழுது தாங்கள் கண்ட அந்த அதிசய நிகழ்வை மன்னனுக்கு வியப்புடன் விவரித்தனர்.  “வாழ்க நின் கொற்றம், மன்னா!  அன்று நாங்கள் கண்ட அந்தக் காட்சியை எம் முன்னோர் கூட தம் வாழ்நாளில் கண்டதில்லை!  காட்டு வேங்கை மர நிழலில் துயரமே வடிவாய்க் கொண்ட பெண் ஒருத்தியைக் கண்டோம்.  வானிலிருந்து அந்த தேவதை மீது மலர் மாரிப் பொழிந்தது.  சற்று நேரத்தில் வானோர் புடைசூழ்ந்து போற்றி வாழ்த்த  அவள் வானகம் சென்றதை எம் கண்களால் பார்த்தோம்..  அந்தப் பெண் எந்நாட்டைச் சேர்ந்தவளோ?..  யார் பெற்ற மகளோ?..  நின் நாட்டில் நிகழ்ந்த இந்த நிகழ்வை  நாங்கள் இதற்கு முன் எம் நினைப்பிலும் அறியோம்!” என்று செங்குட்டுவனுக்கு தாம் கண்ட காட்சியை வியப்போடு விவரித்தனர்.

அப்பொழுது அரசனோடு இருந்த தண் தமிழ் ஆசான் சீத்தலை சாத்தனார்,”அரசே!  கண்ணகிக்கு நேர்ந்ததெல்லாம் யான் அறிவேன்.. அதுப் பற்றிச் சொல்வேன்.” என்று சொல்ல ஆரம்பித்தார்.  “முற்பிறப்பில் செய்த தீவினை,  கண்ணகியின் காற்  சிலம்பைக் கருவியாக்கிக் கொண்டு  அவள் கணவன் கோவலனின் உயிரைப் பறிப்பதற்குக் காரணமாயிற்று.  கண்ணகி தன்  எஞ்சிய காற்சிலம்பை பாண்டியன் நெடுஞ்செழியனின் அவையில் மன்னன் முன் வழக்காடி உடைத்து உண்மையை நிலைநாட்டினாள்.  கோவலன் கள்ளவனல்ல என்றும் தன் பிழையே அவன் உயிர் பறிக்கக் காரணமாயிற்று என்றும் உணர்ந்தக் கணமே  பாண்டியன்  அரசுக் கட்டிலிலிருந்து  நிலைகுலைந்து விழுந்து தன் வளைந்த செங்கோலை நிமிர்த்தினான்.  அரசன் இறந்தக் கணமே  தன் உயிர் கொண்டு மன்னன் உயிரைத் தேடித் தொடர்ந்தாற் போல அரசர் தேவி கோப்பெருந்தேவி மன்னன் மார் மீது விழுந்து உயிர் துறந்தாள். ஊழ்வினையின் 
கோரத்தாண்டவமாய்  மதுரை மூதுர்  தீ வசப்பட்ட்தும்,  தனித்தவளாய் கண்ணகி தன் நாடு செல்லாமல் நின் நாட்டிற்கு வந்தனள்..” என்றார்.

“ஆராயாது செயல்பட்டதால் பாண்டியர்க்கு பழி வந்து சேர்ந்த்து. ஆனால் அப்பழிச்சொல் எம்மை போன்ற வேந்தர்க்குத் தெரியும் முன்னே, தான் உயிர் நீத்த செய்தி எல்லோரையும் வந்தடையுமாறு வல்வினை வளைத்த கோலை பாண்டியனின் செல் உயிர் நிமிர்ந்திச் செங்கோலாக்கியது..” என்ற செங்குட்டுவன் மிகுந்த யோசனை வயப்பட்டான். ”மழை பெய்யாது பொய்க்குமாயின்  அரசர்க்கு அதுவே மிகப்பெரிய அச்சமாகிப் போகிறது.. யாதொரு காரணத்தினாலும் பிறவியெடுத்த உயிர்கள் வருந்துமாயின் அதுவே அரசர்க்கும் பேரச்சம்..  குடிமக்கள்  அறம் சார்ந்து வாழுதலுக்கும், கொடுங்கோன்மை அறவே இல்லாது ஆட்சி நடத்துவதற்கும் பொறுப்பேற்கும் மன்னர் குடியில் பிறத்தல் துன்பமே அல்லாது  தொழுதற்கு ஏதுமில்லை..” என்று உணர்ந்து சொன்னான் சேர மன்னன்.  

தான் சொல்வதையெல்லாம் ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் தன் தேவியை நோக்கி,   “கணவன் உயிர் செல்வழி தன் உயிரையும் செலுத்திய மாண்பு பொருந்திய கோப்பெருந்தேவி -யும்  சினத்துடன் நம் நாடடைந்த சேயிழை கண்ணகியும் நம் போற்றுதலுக்குரியவர் ஆயினும் இவ்விருவருள் நீ வியக்கத்தக்கவர் யாரெனச் சொல்வாயாக..” என்றான்.

ஒரு கணமே யோசித்த சேரமாதேவி, “பாண்டிமாதேவி கோப்பெருந்தேவி தன் கணவனுடன் உடன்  உயிர் துறந்து வானுலகம் ஏகினாள் ஆதலின் அங்கு அவள் பெரும் சிறப்பை நிச்சயம் பெறுவாள்.  நாம் நம் நாட்டை அடைந்த பத்தினிக் கடவளை பரசல் வேண்டும்..(போற்றித் துதிக்க வேண்டும்)” என்று சொல்ல செங்குட்டுவன் முகம் மலர்ந்தான்.  ‘இது குறித்துச் செய்ய வேண்டுவன யாது?’  என்று குறிப்பால் உணர்த்துவது போன்று  நூலறி புலவரை மன்னன் நோக்கினான்.    

அவரோ, “ஒல்கா முறைமை பொருந்திய பொதிய மலையிலாயினும், வில் தலை கொண்ட வியன்  பேர் இமயத்தாயினும் கல்லினை எடுத்து வந்தால் அது கடவுள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும்.  பொதிய மலையிலிருந்து எடுத்து வருவோம் ஆயின் காவிரிப் புனலினும்,  இமயத்திலிருந்து எனில் கங்கைபேர் ஆற்றிலும்  எடுத்து வரும் கல்லை நீராட்டி தூய்மை செய்வித்தல் நலமுடையதாகும்..” என்றனர்.

அது கேட்ட செங்குட்டுவனின் முகத்தில் பெருமிதம் பொங்கியது. “பக்கத்திலிருக்கும்  பொதியக் குன்றத்து   கல்லெடுத்து வந்து முதுநீர் காவிரியில் நீராட்டுதல்,  வீரமும் வாளும் வேலும் கொண்ட சேரர் குடியோருக்கு சிறப்பாக அமையாது.  ஆதலின் இமையத்துக் கல் எடுத்து வருதலே சாலச்சிறக்கும்.  பெருமலையரசன், மாட்சிமை கொண்ட பத்தினிக் கடவுளுக்கு கல தாரான் எனில்  குடைநாள் கொள்ளும் வஞ்சியையும், அரசர்க்கு வெற்றிமாலையாகிப் போகும் கொற்ற வஞ்சியையும், வீரச்சிறப்பை அடையும் நெடுமாராய வஞ்சியையும், பகைவர் நாட்டை தீயிட்டுக்
கொளுத்தும் வியன்பெரு வஞ்சியையும்,  சிறப்புமிக்க பெருஞ்சோற்று வஞ்சியையும்,  குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும், பகைவர் அஞ்ச பணதோட்டுடன் படைகளை அணியச் செய்து  பூவா வஞ்சியாம் நம் வஞ்சி நகரின்  புறத்தே பகைவருடன் பொருந்தக் காத்திருக்கும் எம் வாளுக்கு வஞ்சி மாலை சூடுவோம்..” என்றான்.

“பல்லாண்டு வாழ்க நின் கொற்றம்..” என்று வாழ்த்தி அமைச்சன் வில்லவன் கோதை சொல்லலூற்றான்.  “கொங்கர்தம் செங்களத்தில் சோழ—பாண்டியர் தோற்று  புலிக்கொடியையும் கயற்கொடியையும் இழந்து ஓடியமை எல்லாத் திக்கிலும் பரவிற்று.  கொங்கரும், கலிங்கரும், கருநாடகரும், வங்காளரும், கங்கரும்  வடவாரியருடன் சேர்ந்து உன்னை எதிர்கொண்ட பொழுது அவர்களின் யானைப்படையை தனி ஒருவனாக நீ துவம்சம் செய்த காட்சி  இன்னும் என் மனக்கண்ணில் பதிந்துள்ளது. கங்கை பேரியாற்று நீர் நிலையில் உனது தாயாரை நீராடச் செய்த அந்த நாள் மறக்கமுடியாத ஒன்று.   ஆரிய மன்னர் ஆயிரிருவரை நீ ஒருவனே எதிர்கொண்டு புறமுதுகிட்டு ஓடச்செய்த வெற்றியை யாராலும் மறக்கவே முடியாது.  இமிழ் கடல் சூழ் நிலப்பரப்பு பூராவையும் நீ தமிழ்நாடாக்க விரும்பினாலும் உன்னை எதிர்ப்போர் இந்தாளில் யாருமே இல்லை.  கடவுள் சிலையமைக்க ஒரு கல்லுக்காக இமையம் நீ செல்வாயாயின்,  வடதிசை வேந்தர்க்கெல்லாம்  தண்டமிழ் நாட்டின் இலச்சினைகளாகிய  வில்,கயல், புலி பொறித்த முடங்கல்களை வரைந்து அனுப்புவாயாக..” என்றான்.

அடுத்து அழும்பில் வேள் என்னும் அமைச்சன் எழுந்து தன் கருத்தைக் கூறலானான்:  “அரசர்க்கரசே!  நான் சுருக்கமாகவே சொல்கிறேன். இந் நாவலந் தீவில் பகைநாட்டு ஒன்றர் படை காவல் மிக்க நம் வஞ்சிக்கோட்டைப் புறத்தே அல்லும் பகலும் காத்து கிடப்பர்.  ஆதலான் உன் வடநாட்டு வழிப்பயணத்தைப் பற்றி பறையறிவித்து நம் நாட்டில் தெரிவித்தால் போதும்,  காத்துக் கிடக்கும் ஒற்றர் இதையே பெரும் சேதியாக தம் நாட்டில் கொண்டு சேர்ப்பர்.  ஆக  நம் பங்கில் அந்தக் காரியம் ஒன்றே போதும்!”  என்றான்.

அழும்பில் வேள் சொன்னதை அக்கணமே ஏற்றான் சேரன் செங்குட்டுவன்.  தன் வடநாட்டுப் பயணத்தை பறையறிவித்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க அறிவித்து தானும் வஞ்சி நகர் மீண்டான்.

“வாழ்க எம் மன்னவர் பெருந்தகை!.  ஊழிதோறும் ஊழி நம் மன்னனனே இவ்வுலகைக் காப்பானாக!  வில் தலை கொண்ட பேரிமையத்திலிருந்து பத்தினித் தெய்வத்திற்கு பெரும்சிலை அமைக்க கல் கொண்டு மீள்வான் நம் பேரரசன்!  ஆதலின் வடதிசை மன்னரெல்லாம் இடுதிறைச் செல்வத்தோடு வந்து எம்மன்னரை எதிர்நோக்கி அளிப்பீராக!..  அவ்வாறு செய்யாது போவீராயின்  கடல் நடுவே கடம்பினை வீழ்த்திய போரில் பெற்ற பெருமையையும், இமையத்தில் விற்கொடி பொறித்த வீரம் விளைந்த செயலையும் செவிமடுத்தாவது பணிந்து போவீராக!..  எம் மன்னரின் நாடு போற்றும் வீர பராக்கிரமங்களை கேட்டுப் பணிந்து போக விருப்பம் இல்லையாயின்,  நும் மனைவியரின் நெருக்கத்தைத் துறந்து மீதி வாழ்க்கைக்குத் துணையாகப் போகும் தவத்தினை மேற்கொண்டு பிழைத்துப்  போவீராக!   வீரக்கழல் தரித்த மாமன்னனின் திருமேனி வாழ்கவே!” 

--- பட்டத்து யானை பிடர்த்தலை முரசம் ஏற்றி இவ்வாறு அறையும் பறைஒலி வஞ்சி மாநகர் வீதியெங்கும் முழங்கி  மக்களை வெற்றிக் களிப்பில் எக்காளமிட வைத்தது...


(வளரும்..)
   
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி. 



15 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//”மழை பெய்யாது பொய்க்குமாயின் அரசர்க்கு அதுவே மிகப்பெரிய அச்சமாகிப் போகிறது.. யாதொரு காரணத்தினாலும் பிறவியெடுத்த உயிர்கள் வருந்துமாயின் அதுவே அரசர்க்கும் பேரச்சம்.. குடிமக்கள் அறம் சார்ந்து வாழுதலுக்கும், கொடுங்கோன்மை அறவே இல்லாது ஆட்சி நடத்துவதற்கும் பொறுப்பேற்கும் மன்னர் குடியில் பிறத்தல் துன்பமே அல்லாது தொழுதற்கு ஏதுமில்லை..” //

ஆஹா !

"அழகிய தமிழ் மொழி இது!...." கட்டுரை மேலும் அழகு நடை போட்டுச் செல்கிறது. தொடரட்டும்.

ஜீவி said...

@ வை.கோ.

நல்ல பகுதியைத் தேர்ந்தெடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். தமிழ்ப் பாடப் புத்தகத்தில் அந்தக் காலத்தில் மனப்பாடப்பகுதியில் இந்த வரிகள் எல்லாம் பாட வரிகளாக வரும்.

செங்குட்டுவன் சொல்வதாக வரும் இந்தப் பகுதியின் சிலம்பு வரிகளைச் சொல்லாமல் இருக்க மனசு கேட்கவில்லை. அது இதோ:

மழை வளம் கரப்பின் வான்பேர் அச்சம்
பிழையுயி ரெய்திற் பெரும்பேர் அச்சம்
குடிபுரவு உண்டும் கொடுங்கோ லஞ்சி
மன்பதைக் காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக் வில்லெனத்....

தொடர்ந்து வாசித்துப் பின்னூட்டம் இடுவது மேலும் எழுத உற்சாகம் அளிக்கிறது. நன்றி, கோபு சார்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களின் பதிவுகள் எங்களை நிகழ்விடத்திற்கே கொண்டுசென்றுவிடுகிறது. எழுத்தின் நடையும், நிகழ்வுகளின் நகர்வும் இயல்பாக எங்களை அவ்வாறு அழைத்துச்செல்கிறது. தொடர்ந்து படிக்கிறேன். நேரம் இருக்கும்போதுதான் மறுமொழி இடமுடிகிறது. பொறுத்துக்கொள்க.

வே.நடனசபாபதி said...

//குடிமக்கள் அறம் சார்ந்து வாழுதலுக்கும், கொடுங்கோன்மை அறவே இல்லாது ஆட்சி நடத்துவதற்கும் பொறுப்பேற்கும் மன்னர் குடியில் பிறத்தல் துன்பமே அல்லாது தொழுதற்கு ஏதுமில்லை.//

இந்த வரிகள் தற்கால ஆட்சியாளர்களுக்கும் சொல்லப்பட்டது போலவே இருக்கிறது,

பறை அறிவிப்பு மூலம், அழகு தமிழில் சேரன் செங்குட்டுவனின் வட புல பயணம் பற்றி அறிவித்த பின், நடந்ததை அறிய காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam

முனைவர் ஐயா! தாங்களும் கூட வருவது எனக்கு பெரும் பலம். சிலம்பும் என் மனமும் வழிநடத்துகையில் எழுத்து போகும் போக்கில் எங்காவது கருத்துத் தவறு ஏற்பட்டுவிடின் அதைத் திருத்தி செம்மைபடுத்துவதற்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்ற அதீதத் துணிச்சலில் எழுதிக் கொண்டு வருகிறேன்.

இது புத்தகமாவதற்கு முன்னான வெள்ளோடத்திலேயே தவறுகள் களாய்யபடுமாயின் அது பிற்பாடு கவனித்துத் திருத்தும் சுமையை இப்போதே குறைக்கும் என்ற பெரும் நன்மையும் இதில் இருக்கிறது.

தங்கள் உணர்வு பூர்வமான வரிகளுக்கு நன்றி. அதனைத் தமிழுக்கான சொல்லழகின் பெருமையாகக் கொள்கிறேன். அவசரமேயில்லை. தாங்கள் நேரம் கிடைக்கும் பொழுது வாசித்து வழிநடத்த வேண்டுகிறேன். மிக்க நன்றி, ஐயா!

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

மன்னர் ஆட்சியில் மக்கள் ஆட்சி விழுமியங்களும் மக்கள் ஆட்சியில் மன்னர் ஆட்சி நினைப்புகளும் மேலோங்குவது எக்காலத்தும் ஆட்சியாளர்களைப் பொறுத்தே அமைகிறது என்றும் தெரிகிறது.

'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்பது மோசிக்கீரனாரின் முது மொழி. இப்படியான மன்னர்களை புறநானூற்றுக் காலம் படம் பிடித்துக் காட்டுகிறது.

பொழிய வேண்டிய காலத்தில் மழை பொய்ப்பினும் அதனால் நாட்டின் செழுமைக்குக் காரணமான விளைச்சல் குறைந்தாலும், அதன் காரணாமாக மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்தால் அதற்கான பழி மன்னனையேச் சாரும் என்று மன்னன் மனசார நம்பினான்.

மாமன்னன் செங்குட்டுவன் கண்ணகியின் சிலைப் படிமத்திற்கு கல் எடுத்து வர வட புலம் கிளம்பியதுமே என் நினைவுகள் பின் நோக்கி நகர்ந்தன.

சிலப்பதிகார வாழ்த்துக் காதையில் முற்றுபுள்ளி இல்லாத ஒன்றரைப்பக்க ஒரே வரியில் வரும் பகுதி ஒன்று உண்டு. 'குமரியொடு வடவிமயத்து.. (என்று ஆரம்பிக்கும் கவிதை வரி) செங்குட்டுவர்க்குத் திறம்முரைப்பர் மன். (என்று முடியும்)

அதில் 'உருள்கின்ற மணிவட்டை குணில் கொண்டு துரந்தது போல்' என்று ஒரு வரி.

இயல்பாகவே உருளும் ஒரு வளைத்தை, ஒரு கோல் கொண்டு செலுத்தியது போல' என்று இதற்கு அர்த்தம். இந்த ஒன்றை வரியை வைத்துக் கொண்டு, எனது ஒன்பதாவது வகுப்பில் தமிழாசிரியர் கங்காதரன் அவர்கள் ஒரு வகுப்பு பூராவும் பலவித மேற்கோள்களைக் காட்டி பாடம் நடத்தினார். அவரது மேதமை மறக்க முடிதாத ஒன்று.
சேலம் பாரதிவித்தியாலயா பள்ளியில் அவர் பாடம் எடுத்தது-- இன்றைக்கும் அவர் குரல் நினைவுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

'உருள்கின்ற் மணி வட்டைக்
குணில் கொண்டு துரந்ததுபோல்,
‘இமய மால் வரைக் கல் கடவுள் ஆம்’
என்ற வார்த்தை இடம் துரப்ப;
ஆரிய நாட்டு அரசு ஓட்டி,
அவர் முடித்தலை அணங்கு ஆகிய
பேர் இமயக் கல் சுமத்தி... '

சிலப்பதிகாரம் எளிமையான வரிகளைக் கொண்டது. அதற்கு உரை கூடத் தேவையில்லை.

இன்றைய வழக்கத்தில் இருக்கும் புரியா புதிர் வரிக் கவிதைகளை விட மிக மிக எளிமையானது.

சமீபத்தில் ஆனந்த விக்டன் பத்திரிகையில் வாசித்த இன்றைய புரியாக் கவிதை ஒன்றை, 'உங்களுக்காவது புரிகிறதா?' என்று வாசிக்கிறவர்களைக் கேட்டு வேறொரு இடத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அவசியம் வாசித்துப் பாருங்கள்.

கோமதி அரசு said...

அருமையான தொடர்.
இந்த பகுதியை பாடத்தில் படித்து இருக்கிறேன். கதையாக படித்து இருந்தாலும்
உங்கள் தளத்தில் படிக்கும் போது மிகவும் நன்றாக இருக்கிறது. மன்னரின் வெற்றிக்கு , மன்னரின் நல்லாட்சிக்கு உடன் இருப்பவர்களும் உறுதுணையாக இருந்தால் தான் முடியும் என்பதை அழகாய் சொல்லி செல்கிறீர்கள்.
மன்னன் நல்லாட்சி செய்தால் மக்களும் நல்லவர்களாய் நலமாக இருப்பார்கள்.
தொடர்கிறேன்.

சிலநாட்களாய் இணையம் வர முடியவில்லை. உங்கள் பதிவுகளை எல்லாம் இனி தான் படிக்க வேண்டும்.

ஜீவி said...

@ கோமதி அரசு

விட்டு விடாமல் தாங்கள் தொடர்ந்து படித்து கருத்துக்களைக் கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி, கோமதிம்மா.

”தளிர் சுரேஷ்” said...

அருமையாக செல்கிறது! வரலாற்று தகவல்கள் சிறப்பு! நன்றி!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

தொடர்ந்து வாசித்து வருவதில் மகிழ்ச்சி, சுரேஷ்!

தி.தமிழ் இளங்கோ said...

வஞ்சிக் காண்டம் ஒரு வரலாற்றுக் காண்டம் என்பது சரிதான்.

ஜீவி said...

@ கோமதி அரசு

தொடர்ந்து வாசித்து வருவதோடு அல்லாமல் தங்கள் கருத்துகளையும் தவறாது அங்கங்கு பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

நன்றி, சுரேஷ் சார். வாசித்து வருவதற்கு.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

சரியாகச் சொன்னீர்கள். வஞ்சி காண்டமும் போகப்போக சூடு பிடித்து விடும். நடுவில் இடையில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டாலும் தொடர்ந்து பின் தொடர்ந்து வருவதற்கு நன்றி, நண்பரே!

நெல்லைத் தமிழன் said...

எவ்வளவு நெடிய வரலாறு கொண்டது தமிழ் மொழி. நீங்களும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுகிறது. அதிலும், ஒவ்வொரு பகுதிக்கும் தேடித் தேடிப் படங்களைத் தேர்ந்தெடுத்து இணைத்துள்ளது பாராட்டும்படி இருக்கிறது. பின்னூட்டங்களும் அதற்குப் பதிலிறுக்கும் பின்னூட்டங்களும் வாசிப்பு அனுபவத்தை மிகுதியாக்குகிறது.

Related Posts with Thumbnails