Saturday, February 18, 2017

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

பகுதி---5

நம் குணநலன்களை மூன்றாக வகுத்துள்ளார்கள் பெரியோர்கள்.

நிமிஷத்திற்கு நிமிஷம் சலனங்களில் ஆட்பட நேர்கிற நிர்பந்தம் கொண்டிருக்கிற இன்றைய வாழ்க்கை அமைப்பிலும் கூட  இன்றைய பெரியோர்களும் இந்த மூன்றையே இன்றும்  சொல்லிக் கொண்டிருப்பதினால்   இன்றைக்கும் பொருந்தி வருகின்ற மாதிரி அன்றே மூன்றில் அடக்கிய அன்றைய பெரியோர்களின் தீட்சண்யமிக்க செயல்பாடுகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

அப்படிப்பட்ட அந்த அதிசய மூன்று தான்  என்ன?..

சத்வ குணம்
ரஜோ குணம்
தமோ குணம்

-- என்ற மூன்றும்  அத்தனை பேரிலும் படிந்திருக்கிற    மூன்று அடிப்படை குணங்கள் என்கிறார்கள்.

மூன்றுமே வடமொழி வழிப்பட்ட விளக்கங்கள் தாம்.  எந்த மொழியாய் இருந்தால் தான் என்ன?  நமக்கு ஏதாவது உபயோகமாகிறதா என்று பார்ப்போம்.                                                      

 யாரையாவது பார்த்து  யாராவது,  'இவர் சாத்வீகமான ஆசாமிய்யா' என்றால் எதற்கும் கோபப்படாத சாந்தமான ஆசாமியைத் தான் சொல்கிறார் என்று       பொதுவாக அர்த்தம் கொள்ளலாம்.     எதற்கும் கோபப்படாத என்பதை வேண்டுமானால் அநாவசியத்திற்கெல்லாம்  கோபப்படாத என்று  இன்றைய காலத்துக்கும் பொருந்தி வருகிற மாதிரி கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் போலிருக்கு.

ஏனென்றால்  இன்றைய வாழ்க்கை அமைப்பில் கோபப்படாமலேயே இருக்க் முடியாது.  பாரதியார் சொன்ன மாதிரி 'அவர் முகத்தில் உமிழ்ந்து விடு, பாப்பா' என்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம்  செவ செவ என்று சிவந்து விடுகிற முகத்தைத்  திருப்பிக் கொள்ளவானும் செய்யலாம்.
நியாயமான கோபம் கூட இல்லையென்றால்  நம்மை சொரணை கெட்டவனாகவும் ஆக்கிவிட நமது  சொந்தங்களே காத்திருப்பார்கள்.  உடற்கூறுகளில் உற்பத்தியான  கோபத்தை அடக்கினாலும் உடல் நலத்திற்குக் கேடாம்.  அதனால் உள்டக்கிய கோபத்தை எப்படியானும் வெளித்தள்ளியே ஆக வேண்டும் என்று உடல் சாத்திரம் வேறு  இன்னொரு பக்கம் போதிக்கிறது.

 "மொத்தம் மூணு தான் சார்.  இந்த மூன்றுக்குள் இது வரை  இந்த உலகத்தில் பிறந்த,  இன்னும் பிறக்க இருக்கிற எல்லா ,மனுஷ ஜென்மங்களாயும்  அடக்கி விடலாம் என்று 'கெத்'தாய் சொல்கிறார்கள்.

முக்கோணம் போல  மூன்றே குணங்கள்!  யாருக்கும் தவிர்க்கவே முடியாமல் எல்லோரிலும் இந்த மூன்றும் பதுங்கியிருக்குமாம்.  ஆனால் அப்படிப் பதுங்கியிருந்தாலும் அதில் ஒரு விசேஷமும் இருக்குமாம்.   அதாவது இந்த மூன்றும் யாருக்கும் சம அளவில் இருக்காதாம்.  கூடக் குறைச்சலாய் இருக்குமாம்.    அவரவர் இயல்பில்  மூன்று வகைப்பட்ட குணங்களில் ஏதாவது ஒரு குணத்தின் தன்மை  மட்டும் சற்று   மேம்பட்டு இருக்குமாம்.

அப்படி மேம்பட்டு இருப்பதற்கும் ஒரு விதி வகுத்திருக்கிறார்கள்.  அது என்னவென்றால்  அவரவருக்கு வாய்த்த குணத்தின் அடிப்படைத் தன்மையில் மாற்றமிருக்காதாம்.  அதே சமயத்தில் அவரது அடிப்ப்டை குண இயல்பை ஒட்டி  ஏதாவது நிகழும் பொழுது அப்படி அந்த நிகழ்வு  நிகழ்கின்ற சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏறப இந்த குணங்கள் மாறி மாறி அமையுமாம்.

தமோ, ரஜோ, சத்வ  இந்த மூன்றில்  ஏதாவது ஒன்று ஒருவரின் அடிப்படை குணம் என்றால் அதைச் சார்ந்தே அவரது அடிப்படை  அல்லாத மற்ற இரண்டு குணங்களும் மாறி மாறி அவரை ஆட்கொள்ளும்.

ரொம்ப சரி.  இப்போ  கீர்த்தி வாய்ந்த அந்த   மூன்று குணங்களைப் பற்றிய விவரங்களைத்  தெரிந்து  கொள்ளலாம்.

சத்வ குணம் ரொம்ப பெருமை வாய்ந்தது.  சாத்வீகம் ஞானத்தை வளர்க்குமாம்.   நல்லன அல்லாத  எந்தக் காரியத்தையும் செய்ய இந்த குணக்காரர்களுக்கு விருப்பமே வராதாம்.

ரஜோ குணம் தான்  ஒன்றின்  மீதான ஆசையை அல்லது பற்றுதலை ஏற்படுத்துமாம்.   ஒன்றின் மீது விருப்பம் ஏற்பட்டால் என்னவாகும்?.. அதை அடைந்து விட மனம் ஏங்கும்.  அதை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும்.

மூன்றாவது தமோ குணம்.  எதிலும் தாமதப்  போக்கு  உள்ளவர்கள் இந்த குணத்தை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தவர்கள்.

சரி, இவ்வளவு தானே பெரிசாய் இதில் என்ன இருக்கிறது என்று விட்டு விட முடியாதபடிக்கு மூன்றும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாய் பின்னப்பட்டிருப்பது தான் படைப்பின் விசித்திரம்.

அது என்ன விசித்திரம் என்று கடைசியிலிருந்து பார்ப்போம்.

தமோ குணம் இயல்பு  அதிகமாய் இருந்தால் ஆள்  டல்லடித்து தூங்கி வழிபவனாய் இருப்பான்.  கோபு சார் பாஷையில்  சொல்வது என்றால் எழுச்சி இல்லாத ஆசாமியாய் சோம்பல் பேர்வழியாய் இருப்பான்.

அந்த சோம்பலைப் போக்க மருந்தாய் வந்த குணம் தான் ரஜோ குணம்.ஒன்றின் மேல் விருப்பம் ஏற்பட்டு  அது ஆசையாய் கொழுந்து விடத் தொடங்கி விட்டதென்றால் கொட்டாவி  விட்ட  சோம்பல் ஓடியேப்  போகும்.   மாமலையும் ஓர் கடுகாய் மாறுவதற்கு பெண்ணின் கடைக்கண் பார்வை ஒன்று போதும் என்பார் பாரதிக்கு தாசனார்.  அவர் சொல்லும்  அழகு மடந்தையின்    அந்தக்  கடைக்கண் பார்வை தான் என்றில்லை. ஒவ்வொருவருக்கும் ஒன்று.   ஒருவருக்கு 'ச்சீ' எனப்படுவது இன்னொருவருக்கு  'ஆஹா'.  வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் இப்படியான  தேர்வு முறை இருக்கிறது.  சரி, விஷயத்திற்கு வருவோம்..

ஒன்றின் மீதான விருப்பம் தீவிரமாகி  அதாவது ரஜோ குணம் மேலோங்குவது  அதை அடையும் வரை ஓயாது.  விருப்பதற்கு எல்லையே கிடையாது.   ஒன்றின் விருப்பத்தின் பலனான அனுபவிப்பின் முடிவு இன்னொரு விருப்பத்திற்கு  ஆரம்பமாக இருக்கும்.

 இப்படி  முடிவு-- ஆரம்பம்-- அதன் முடிவு இன்னொன்றின் ஆரம்பம்  என்று எவ்வளவு காலத்திற்குப் போய்க் கொண்டிருப்பது?   அப்படிப் போகாமல் இருப்பதற்கு தான் சத்வ குணம்.    சத்வ குணம்.  மேலோங்கும் போது  'உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றுமில்லை'  என்று கண்ணதாசனார் சொன்ன மாதிரி எதிலும் எதுவும் இல்லை என்ற ஞானத்திற்கு இட்டுச் செல்லும்.

எதிலும் எதுவும் இல்லை என்பது ஞானம் ஆயினும் அது ஒரு அசட்டு ஞானம்.
அந்த அரைகுறை ஞானம்,  எதிலும் எதுவும் இல்லை என்று தோற்றத்திற்குத் தட்டுப்பட்டாலும்  எல்லாவற்றிலும்  ஏதுவோ இருக்கிறது என்ற  ஞானத்தின் பரமானந்த நிலைக்கு  இட்டுச் செல்லும்.  அந்த எதுவோவும் இல்லை என்றால் -- டெட்  வுட்-- இயக்கமே இல்லை என்ற  தத்துவம் புரிதலாகும்.  எல்லாமே ப்யூர் சயின்ஸ் என்பது தான் இதிலிருக்கிற ஆச்சரியமே.

இந்த இடத்தில் இன்னொரு வேடிக்கை பற்றியும் சொல்ல வேண்டும்.  பரமானந்த நிலை பற்றிச் சொன்னோம், இல்லையா?.. . அந்த பரமானந்த நிலையில்  ஆழ்ந்து கிடப்பதற்கும் வழியில்லாத மாதிரி-- சத்வ குணத்திலேயே மயங்கிக் கிடக்காமல்--   நமக்கு வாய்த்த இந்த நிகழ்   வாழ்க்கை பார்த்துக் கொள்ளும்.  போட்டி,  பொறாமை,  விட்டுக்  கொடுக்காமை,  நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கை சதவ குணத்தை செல்லாக் காசாக்கி நிதர்சனத்தைப் புரிய வைக்கும்.

நமக்கென்று தனி வாழ்க்கை எதுவும் இல்லை.  நம்மை சுற்றியிருக்கிற ஜனக் கூட்டத்தை சார்ந்தது தான் நம் வாழ்க்கையும்.  அதைத் தவிர்த்த  தனி வாழ்க்கை என்றால் காட்டுக்குத் தான் போக வேண்டும் என்று அந்தக்கால வழக்கத்திலும் சொல்வதற்கில்லை.   காடெல்லாம் அழிக்கப்பட்டு காங்கிரீட் தளங்களாகி விட்டன.  

ஆக,  சத்வ, ரஜோ, தமோ என்ற மூன்று குணங்களும் ஒருவனின் வாழ்க்கையில்  இது விட்டால் அது, அது விட்டால் இது என்று அந்தந்த நேரத்து சொர்க்கமாய் அமைந்த வட்டப் பாதைகள்.

நிதர்சன வாழ்க்கை  என்பது மாறிக்  கொண்டே இருக்கும்  பெளதீக உண்மை.    அந்த நிதர்சனம் நம்மில் ஒழியும் பொழுது தான் உண்மையான ஞானத்திற்கும் கதவு திறக்கிறது.

அந்த ஞானக் கதவை திறக்க முடியாமலும் நிதர்சனம் பார்த்துக் கொள்கிறது.

அப்படி என்னய்யா  கண்டும் விண்டும் உணர வேண்டிய  ஞானம் அது என்றால் அதைத்  தானே தேடித் திரிந்து தெரிந்து கொள்ளத் துடிக்கிறேன் என்'ற பதிலும் கியைக்கும்.

தட்டினால் தான் கதவும் திறக்கும்.

ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நீங்காத ஆவலும் தொடர்ந்த முயற்சியும் இருந்தால் தான் எது பற்றியும் கிஞ்சித்தானும் தெரிந்து கொள்ள முடியும்.

தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது என்பவர்கள் சுகவாசிகள்.
சொல்லப் போனால் இப்போதைக்கு சுகவாசிகள்.  தெரிந்து  கொள்ள வேண்டிய அவசியம் வரும் பொழுது  தன்னாலே கை நீண்டு கதவைத் தட்டும்.

தட்டினால் தான் கதவும் திறக்கும்.   தட்டுவதற்கு அவசியம் இன்றி திறந்தே இருக்கிற கதவும் ஏதும் இல்லை.  திறந்தே இருக்கும் என்றால் கதவுக்கும் அவசியமில்லை.


(படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.)

33 comments:

'நெல்லைத் தமிழன் said...

படித்தேன். விளக்கம் வேறு சிந்தனைகளுக்கு இட்டுச்செல்கிறது.

இம்மூன்று குணங்களையும், முனிவர்கள், அரசர்கள், அசுர்ர்களுக்கு உள்ள பொதுவான குணம் என்று பிரிக்கமுடியுமா?

அப்படியென்றால் வசிட்டரும், விசுவாமித்திர்ரும் (ராஜாவிலிருந்து முனிவனானவர்), துர்வாசருமே வெவ்வேறு குணங்களின் கலவையல்லவா?

சோம்பேரித்தனம் என்பதைவிட அர்த்தமில்லாத ஆங்காரம், கோபம், பொறாமை போன்றவையும் தாமச குணத்தில் சேராதா?

சத்வகுணமுள்ள துறவறத்தில் ஒழுகுபவர், தன் கொள்கைகளைப் பரப்ப செல்வம் வேண்டும் என்று தேடுவதும், அதைச் சேகரிப்பதும் (தன்னுடைய சொந்த நலனுக்காக இல்லாதபோதும்... ஆனால் அடிப்படையாக அமைந்தது, ஆசை. நல்ல ஆசையோ அல்லது கெட்ட ஆசையோ அதற்குள் செல்லவேண்டாம்) ரஜோ குணத்தில் சேர்த்தியில்லையா?

புராணத்தை எடுத்துக்கொண்டால், பரதன் விபீடணன் விதுர்ர் தர்மம் சத்வ குணவான்களாகவும், கம்சன் துச்சாதன்ன் கும்பகர்ணன் அடிப்படை தமோ குணமுடையவர்களாகவும் மனதுக்குச் சட்டெனப் படுகின்றனர்.

சமகாலத்தில் காந்தி, ராஜீவ் வினோபா போன்றவர்கள் சத்வகுணம் கொண்டவர்கள் என்றும், இந்திரா போன்றவர்கள் ரஜோ குணமுடையவர்களாகவும் தோன்றுகிறது. (இது பலவித பின்னூட்டங்களுக்கு இட்டுச்செல்லும்)

மீண்டும் வருகிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எப்போதும்போல ’தமோ குணத்துடன்’ வழுவட்டையாக படுத்திருந்த நான், இன்று ஒருநாள் மட்டும் சற்றே ’ரஜோ குணத்துக்கு’த் தாவி, காலையிலிருந்து தொடர்ச்சியாகத் தொலைகாட்சி செய்திகள் பார்த்துவிட்டு, மிகவும் களைத்து நொந்துபோய், இதுதான் நம் தலையெழுத்து போலிருக்கு என்ற ’சத்வ குணம்’ திடீரென்று எனக்கு ஏற்பட்டு, மனதை சற்றுநேரம் சமாதானப் படுத்தியபடி கண்மூடித் திறந்து, மீண்டும் எனக்கு என் இயல்பான தமோ குணம் ஏற்படும் வேளையில் தங்களின் இந்தப்பதிவினைப் பார்க்க நேரிட்டது.

இன்று ஒரே நாளில் எனக்கு இவ்வாறு எல்லா (தமோ, ரஜோ, சத்வ) குணங்களும் ஏற்பட்ட அனுபவத்தைப் பெற்ற ஜோரில் இந்தப்பதிவினையும் படிக்க நேர்ந்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது.

மிகவும் அருமையாக சிந்தித்து எழுதியுள்ளீர்கள். இந்தப்பதிவின் பின்னூட்டப்பகுதியும் ஓர் மிகப்பெரிய விவாத மேடையாக அமையும் என நினைக்கிறேன். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

தங்களின் இந்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லோரிடமும் எல்லாவிதமான குணங்களும் நிச்சயமாக இருக்கத்தான் இருக்கும். அதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமே இல்லைதான்.

இதில் மஹான்களோ, முனிவர்களோ, அரசர்களோ, தேவர்களோ, அசுரர்களோ, சாதாரண குடிமக்களோ யாருக்குமே விதிவிலக்கு என்பது கிடையவே கிடையாது.

இருப்பினும் இவர் மிகவும் ஸாத்வீகமானவர்; இவர் மிகவும் ஆசைகளுக்கு அடிமையானவர்; இவர் மிகவும் சோம்பேறி +(நெல்லைத்தமிழன் சொல்லியுள்ள ஆங்காரம் + கோபம் + பொறாமை குணம் கொண்டவர் etc.,) என்பதெல்லாம் பிறரால், நம் செயல்களை வைத்து யூகிப்பது மட்டுமே என்பது என் அபிப்ராயம்.

அது மட்டுமல்லாமல், இந்த மேற்படி குணங்கள் எல்லாமே ஒருவர் மற்ற பிறரிடம், சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நடிப்பதில் தெரிவது மட்டுமே என்பதையும் நான் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கிறேன்.

உதாரணமாக என்னையே எடுத்துக்கொண்டால், இவரைப்போல ஸாத்வீகமானவர் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியுமோ என சிலருக்கு என் மீது ஓர் உயர்ந்த அபிப்ராயம் ஏற்படுவது போல நான் மிகவும் பெளவ்யமாகவே நடந்து கொண்டு பழகுவேன்.

இருப்பினும் எல்லோரிடமும் அதுபோல என்னால் பழகிட முடியவே முடியாது.

எதிலுமே ஆசையோ நாட்டமோ இல்லாத விவேகி போல சிலரிடம் நான் வைராக்யத்துடன் நடந்துகொள்வேன். பேசிடுவேன். புத்திமதிகளும் சொல்வேன். இதெல்லாமே பிறரிடம் நான் பற்றற்றவன் போலக் காட்டிக்கொள்ளும் ஒரு நடிப்பு மட்டும் தான்.

ஆனால் எனக்குள்ளும் ஆயிரம் ஆயிரம் விசித்திரமான ஆசைகள் உண்டு என்பது என் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். மிகவும் நியாயமான சிற்சில ஆசைகள் படுவதில் தப்பு ஒன்றும் இல்லை என்பது என் வாதமாகும்.

ஆசையில்லாவிட்டால் இந்த உலகத்தில் எதையுமே (இந்தப் பதிவு உள்பட) நம்மால் ரஸிக்கவும் முடியாது. யாரிடமும் நம்மால் அன்பு செலுத்தவும் முடியாது.

’ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்பதெல்லாம் சுத்த ஹம்பக்கான பேச்சுகளாகும். சொல்லப்போனால் ஆசை மட்டுமே இன்பத்திற்குக் காரணம் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

அதுபோல என் கோபதாபங்கள், என் சோம்பேறித்தனங்கள், என் ஆங்காரம், எனக்கு சிலரிடம் சிலசமயங்களில் ஏற்படும் பொறாமை முதலியன எனக்கு மட்டுமே தெரியக்கூடியவை அல்லது என்னால் மட்டுமே உணரக்கூடியவைகளாகும்.

இதுபோன்ற எல்லா குணங்களும் கலந்து உள்ள ஒருவனே, இன்றைய உலகினில், மனிதனாக இருக்க முடியும்.

இருப்பினும் இதையெல்லாம் உள்ளது உள்ளபடி உணர்ந்து பார்த்து, இவ்வாறு என்னைப்போல ஒத்துக்கொள்ள மட்டும், ஒருவித மனோ தைர்யம் வேண்டும். :)

Geetha Sambasivam said...

நல்ல பதிவு. நல்ல அலசல்! காந்தி "சத்வ" குணம் உள்ளவரா? ம்ம்ம்ம்ம்ம்? ராஜீவ் காந்தியுமா? விநோபா ஓகே!

Geetha Sambasivam said...

மற்றபடி மனிதர்கள் அனைவருமே இந்த மூன்று குணங்களின் கலவையாகத் தான் இருக்க முடியும்! நாம் சும்மா இருக்கையில் தமோ குணமும், ஏதேனும் சுறுசுறுப்பாகச் செய்கையில் ரஜோ குணமும், எல்லாம் முடிந்து மனம் அமைதியாக இருக்கையில் சத்வ குணமும் என ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூவரும் இருக்கத் தான் செய்கிறார்கள். எந்தச் சமயத்தில் எது அதிகம் தலை தூக்கும் என்பதைச் சொல்லவும் முடியாது!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உடற்கூறுகளில் உற்பத்தியான கோபத்தை அடக்கினாலும் உடல் நலத்திற்குக் கேடாம். அதனால் உள்ளடக்கிய கோபத்தை எப்படியானும் வெளித்தள்ளியே ஆக வேண்டும் என்று உடல் சாத்திரம் வேறு இன்னொரு பக்கம் போதிக்கிறது.//

கோபம் மட்டுமல்ல. இயற்கையாக வெளிப்பட நினைக்கும் எதையும் நாம் நமக்குள் அடக்க நினைக்காமல் அவ்வப்போது வெளியேற்றி விடவேண்டும்.

(உதாரணமாக: சிறுநீர், மலம், ஏப்பம், கொட்டாவி, தும்மல், இருமல், சிரிப்பு, அழுகை, உடலுறவு முதலிய எவ்வளவோ விஷயங்களைச் சொல்லலாம். இவற்றையெல்லாம், நமக்கு உந்துதல் ஏற்பட்டதும் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்து, நம் உடலிலிருந்து நாம் அவ்வப்போது வெளியேற்றி விட வேண்டும். அதுதான் நம் உடம்புக்கு ஆரோக்யமாகும்.)

இந்த ’டிஸ்சார்ஜ்’ என்ற வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்து சிரிப்பு வருவதுண்டு.

என் அலுவலகத்தில் ஒருவர் இருந்தார். அவர் ஒரு மாதிரியான ஆள். தவறுதலாக நடக்கக்கூடிய பெண்களில் சிலரை, அவ்வப்போது தன் வீட்டுக்கே அழைத்துவந்து, கொண்டமடித்து விட்டு அனுப்பி வைக்கும் பழக்கம் உள்ளவர்.

இது விஷயம் ஓரளவு நன்கு தெரிந்த அவரின் மற்றொரு நண்பர் (அண்டை வீட்டுக்காரர் என நினைக்கிறேன்) ஒரு நாள் அவரிடம், கேண்டீனில் சாப்பிடும்போது இதுபற்றி விலாவரியாகக் கேட்டு மகிழ்கிறார்.

அவர்களின் அந்த அன்றைய தின உரையாடல் என் காதிலும் விழுந்து தொலைத்தது.

இவர்:-

”நேற்று இரவு ஒருத்தி உன் வீட்டுக்கு வந்திருந்தாளே, அவள் என்ன உனக்கு பெர்மணெண்ட் வப்பாட்டியா?”

அவர்:-

”நோ......நோ....... எனக்கு யாரும் நிரந்தரமே கிடையாது. ’டிஸ்சார்ஜ்’ செய்ததும் ’பஸ் சார்ஜ்’ கொடுத்து முதல் வேலையாக கழட்டிவிட்டு அனுப்பி விடுவேன்”

'நெல்லைத் தமிழன் said...

@கோபு சார் - "இவரைப்போல ஸாத்வீகமானவர் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியுமோ என சிலருக்கு என் மீது ஓர் உயர்ந்த அபிப்ராயம் ஏற்படுவது போல நான் மிகவும் பெளவ்யமாகவே நடந்து கொண்டு பழகுவேன்"

நீங்கள் சொல்லியபடி, எல்லோருக்கும் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் கலந்து இருக்கும் என்றாலும், அடிப்படை குணம் என்று ஒன்று உண்டு. அதுதான் அவன், எந்த குணத்தைக் கொண்டவன் அல்லது எந்த வர்ணத்தைச் (Category among three) சேர்ந்தவன் என்பதைச் சொல்லும். இதைப் பொதுவாக, அவனை ஓரளவு அறிந்தவர்கள் (மனைவி, பெற்றோர்) கண்டுபிடித்துவிட முடியும்.

அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எப்போதும் முகமூடி அணிந்துகொண்டிருக்க வேண்டியுள்ளது. தன் வேலைக்கோ அல்லது தனக்குப் பிரச்சனை உண்டாக்கும் நிலையில் (position) இருப்பவர்களிடம் சத்வ குணத்தையும், தன்னுடன் இருக்கும் Team உடன், ரஜோ குணத்தையும், தனக்குக் கீழான, அப்படி behave செய்வதால் தான் பாதிக்கப்பட மாட்டோம் என்று உறுதியாகத் தெரிபவர்களிடம் தாமச குணத்தையும் காண்பிப்பது இயல்பு.

ஒருவனின் உண்மையான சௌரூபம், அவனின் மனைவிக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும் (விதிவிலக்குகள் இருக்கலாம்)

பெரும்பாலும், காலையில் சத்வ குணம் மேலோங்கியிருக்கும். இரவிலும் சத்வ குணத்துடன் உறங்க நேரிட்டால், ஆரோக்கியத்துக்கு அது மிக நல்லது. சத்வ குணம், நல்லாருடன் இருக்கும்போது, நற் செயல்களின்போது, நல்லனவற்றைக் கேட்கும்போது தூண்டப்படுகிறது.

"நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே....." ஞாபகம் வருகிறதா?

Dr B Jambulingam said...

சைவ சித்தாந்தம் படிக்கும்போது இவ்வகையான குணங்களைப் பற்றி படித்துள்ளேன். பகிர்வுக்கு நன்றி.

வே.நடனசபாபதி said...

நீங்கள் சொன்னதுபோல் ஒவ்வொரு மனிதருள்ளும் சத்வ,ரஜோ,தமோ ஆகிய மூன்று குணங்களும் இருக்கின்றன என்று படித்திருக்கிறேன். ஒவ்வொரு நேரத்திற்கு ஒரு குணம் தலை தூக்குமாம். எடுத்துக்காட்டாக காலையில் எழுந்தவுடன் சத்வ குணமும், பகலில் ரஜோ குணமும் இரவில் தமோ குணமும் இருக்குமாம்.

மேலும் அவைகள் காலத்திற்கு தகுந்தகவாறு மாறும் என்றும் சாப்பிடும் உணவைப் பொறுத்து மாறும் என்றும் சொல்லப்படுகிறது.

அதுபற்றி தங்களின் கருத்தை அறிய ஆவல்.

'நெல்லைத் தமிழன் said...

@வே.நடனசபாபதி அவர்கள் - "சாப்பிடும் உணவைப் பொறுத்து மாறும் என்றும் சொல்லப்படுகிறது" - உணவுக்கு சத்வ, ரஜோ, தாமச குணங்கள் உண்டு. உதாரணமாக, கோவில் பிரசாதம் சத்வ உணவுக்கும், கொஞ்சம் தரமிக்க உணவகங்களின் உணவு ரஜோ உணவுக்கும், தரமற்ற உணவகங்களில் கிடைக்கும் உணவுக்கு தாமச குணங்கள் இருக்கும் என்று கொள்ளலாம். பூண்டு, வெங்காயம் சேர்ப்பது சத்வ குணமுள்ள உணவினில் கிடையாது. காரம், புளி, கிழங்கு வகைகள் போன்றவை அதிகம் சேர்க்கும் உணவுக்கு ரஜோ குணமுண்டு. எப்போதும் சத்வ குணமுள்ள உணவு என்று குறிப்பிடப்படுவது, உப்பு சேர்க்காத சாதம், தயிர், பால், வெண்ணெய் போன்றவை. பழைய, அதாவது பல மணி நேரங்கள் ஆன உணவும் தமோ குணத்தை வளர்க்கும். இதையொட்டி பல கருத்து வேறுபாடுகள் வரும். ஜெயின் சமூகத்தவர் உண்ணும் உணவு சத்வ குணமுள்ள உணவு (பொதுவா).

அதற்கும் மேலாக, செய்பவர்களைப் பொருத்தும் (தயார் செய்பவர்கள்) உணவுக்கு குணங்கள் கடத்தப்படுகிறது என்று ஆன்மீக நூல்களில் படித்திருக்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Kind Attn: Mr. நெல்லைத்தமிழன்

//அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எப்போதும் முகமூடி அணிந்துகொண்டிருக்க வேண்டியுள்ளது. தன் வேலைக்கோ அல்லது தனக்குப் பிரச்சனை உண்டாக்கும் நிலையில் (position) இருப்பவர்களிடம் சத்வ குணத்தையும், தன்னுடன் இருக்கும் Team உடன், ரஜோ குணத்தையும், தனக்குக் கீழான, அப்படி behave செய்வதால் தான் பாதிக்கப்பட மாட்டோம் என்று உறுதியாகத் தெரிபவர்களிடம் தாமச குணத்தையும் காண்பிப்பது இயல்பு.//

தங்களின் இந்த மேற்படி கருத்து ஓரளவு என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

இருப்பினும் கீழ்க்கண்டதோர் பதிவினையும், அந்தப் பதிவினில் நான் கொடுத்துள்ளதோர் பின்னூட்டத்தையும் தயவுசெய்து நேரம் கிடைக்கும்போது பொறுமையாகப் படித்துப்பார்க்கவும்.

http://sujathadesikan.blogspot.in/2017/02/blog-post.html

'நெல்லைத் தமிழன் said...

@கோபு சார் - "ஆசையே துன்பத்திற்குக் காரணம்" - இதையொட்டி எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன். எதையுமே இந்த மூன்று குணங்களுக்குள் கொண்டுவந்துவிடலாம். ஆசையும் அப்படித்தான். அதுவும் சத்வ, ரஜோ, தமோ வகைகளில் கொள்ளமுடியும். கிருஷ்ணர் போரில் பாண்டவர்கள் வெற்றி பெறவேண்டும் (தர்மம் ஜெயிக்கவேண்டும். அதனால் நேரடியாக கிருஷ்ணன் பயன் பெறப்போவதில்லை) என்று கொண்ட ஆசையும், பக்தர்கள் இறைவன் மீதான நினைப்பு கொள்ளவேண்டும், த்வைதம் பரவவேண்டும் என்று பரமாச்சார்யார் கொண்ட ஆசையும் (இதைப் போல் பல உதாரணங்கள் கொடுக்கலாம். உங்களுக்குத் தெரியாததா) சத்வ குணத்தில் சேரும். சோழ தேசத்தின் மாட்சியை தமிழகமெங்கும் பரவச் செய்யவேண்டும் என்ற அரசர்களின் ஆசை ரஜோ குணத்தையும், ஹிரண்யன் தானே இறைவன் மற்றவர்களைத் துதிப்பவர்களைக் கொன்றுவிடவேண்டும் என்று கொண்ட ஆசை தாமச குணத்தையும் சேரும்.

பெண்ணின் மீது ஆசை வைப்பதிலேயே... நல்ல ஆசை, ஓகே ஏற்றுக்கொள்ளலாம், அநியாய ஆசை என்று சத்வ, ரஜோ, தாமச குணத்தில் வயப்படுத்தலாம்தானே. ராவணனின் பிறன் மனைமீது கொண்ட ஆசை தாமச குணமாகவும், இராமன் சீதையின் மேல் கொண்டிருந்த ஆசையை சத்வ மாகவும் கொள்ளமுடியுமில்லையா?

ஆசை துன்பத்திற்குக் காரணம்தான். இதில் மாற்றுக்கருத்து இருத்தல் இயலாது. (அதைப் பற்றி சமயம் வரும்போது எழுதுகிறேன்)

வை.கோபாலகிருஷ்ணன் said...


//'நெல்லைத் தமிழன் said...
@கோபு சார் - "ஆசையே துன்பத்திற்குக் காரணம்" - இதையொட்டி எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன். ...........................................................................
..........................................................................................
ஆசை துன்பத்திற்குக் காரணம்தான். இதில் மாற்றுக்கருத்து இருத்தல் இயலாது. (அதைப் பற்றி சமயம் வரும்போது எழுதுகிறேன்) //

எழுதுங்கோ..... எழுதுங்கோ. படிக்க எனக்கும் ஒரே ஆ-சை-யா-க த்தான் உள்ளது.

ஆ-சை-யு-ட-ன் நான் படித்தபின்புதான் அந்த ஆசை ’துன்பமா அல்லது இன்பமா’ என்ற ஒரு இறுதி முடிவுக்கு நானும் வர இயலும். :)

’மூன்றாம் சுழி’ வலைத்தளப்பதிவர் திரு. அப்பாதுரை என்று ஒருவர் உண்டு. அவரை ஏனோ இப்போதெல்லாம் காணவே காணும். நம் ஜீவி ஸார் அவர்களுக்கும் நெருங்கிய நண்பர் ஆவார்.

அவர் நம் ஜீவி ஸாருக்காகவே, ஆசையுடன் இதுபோல ஏதேனும் ஒரு மாற்றுக் கருத்தை ஊசிப்பட்டாஸ் போலக் கொஞ்சமாகக் கொளுத்திப்போட்டு விட்டுப் போய் விடுவார்.

நம் ஜீவி ஸார், அந்த அப்பாதுரை ஸார் அவர்களுக்கு பதில் சொல்லும் ஆசையில் ஒரு பத்தாயிரம் வாலா பட்டாஸ் கட்டு அளவுக்கு பதில் எழுதிக்கொண்டே போவார்.

அவைகள் ஒரே தாமாஷாக இருக்கும்.

அவற்றைக்காண இதோ இந்தப்பதிவுக்குப் பக்கம் கொஞ்சம் போய்ப்பாருங்கோ:

http://gopu1949.blogspot.in/2016/04/20.html

கோமதி அரசு said...

//ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நீங்காத ஆவலும் தொடர்ந்த முயற்சியும் இருந்தால் தான் எது பற்றியும் கிஞ்சித்தானும் தெரிந்து கொள்ள முடியும்.//

நேற்று பழனி ஓட்டலில் மூச்சு இருக்கும் வரை முயற்சி இருக்க வேண்டும், முயற்சிசெய்து கொண்டு இருப்பவனே மனிதன் என்ற வாசகம் எழுதிய பதிவு இருந்தது.

பழனி பஸ் நிலையத்தில் அன்னபூரணா ஓட்டலில்.
இன்று உங்கள் தளத்தில் நீங்களும் சொல்கிறீர்கள்.

அருமையான பதிவு.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (1)

புராண உதாரணங்களை எடுத்துக் கொண்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

மூன்று வகைப்பட்ட குணங்களும் எல்லோருக்கும் சொந்தமானவை. அந்தந்த நேரத்து அவர்களில் அது அது அவர்களில் வெளிப்படுவதாகக் கொண்டால் சிக்கல் இருக்காது.

முனிவர் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும், அரசர் என்றால் இப்படி, அசுரர் என்றால் இப்படி என்று நாமே வரித்துக் கொண்டு நம் எதிர்பார்ப்புக்கு மாறாக இருக்கும் பொழுது ஏன் இப்படி என்று திகைக்கிறோம்.

முனிவரோ, அரசரோ, அசுரரோ அவரவர் வளர்ந்த வளார்ச்சியே அவரவர் குணநலன் களாக அவர்களில் படிகிறது என்று நினைக்கிறேன்.

குழந்தையாய் இருக்கும் பொழுது க்ளீன் சிலேட்டு. அவரவர் வாழ்க்கையில் அனுபவங்கள் வளர வளர அதில் பதியப்படுகின்றன. அதற்கேற்பவாக அந்தந்த தருணங்களில் அவர்கள் வெளிப்படுகிறார்கள். அவ்வளவு தான். இந்தப் பொதுவான நியதி எல்லோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Kind Attn: நெல்லைத்தமிழன்

//த்வைதம் பரவவேண்டும் என்று பரமாச்சார்யார் கொண்ட ஆசையும்//

”அத்வைதம்” பரவவேண்டும் என்றே ஆதிசங்கரர் முதல் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜகத்குரு பரமாச்சார்யார் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா வரை போதித்து வந்தார்கள்.

இதோ இந்தப்பதிவினில் அதுபற்றிய மிகவும் ரஸமான செய்திகளை என் பாணியில் மிக எளிமையான உதாரணங்களுடன் கொடுத்துள்ளேன்.

http://gopu1949.blogspot.in/2012/04/17.html

அதனைப் படித்து இன்புற்றவர்கள் மட்டுமே பாக்கியசாலிகளாகும்.

-=-=-=-=-

அத்வைதம் என்பது வேறு ...... த்வைதம் என்பது வேறு என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்காது என நான் நினைக்கிறேன்.

ஆசையை நீக்க வேண்டும் என்பதை நினைத்துக்கொண்டே ஒருவேளை எழுத்துப்பிழையாக ’அத்வைதம்’ என்பதில் உள்ள ‘அ’ என்ற முதல் எழுத்தை மட்டும் நீங்கள் நீக்கி விட்டீர்களோ என்னவோ? :)

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (2)

இந்திரா இந்தியாவின் ஜோன் ஆப் ஆர்க். இரும்புப் பெண்மணி என்றால் இவரை விட்டால் இந்திய சரித்திரத்தில் வேறு யாரும் இல்லை. இவரின் சாகசங்கள் எனக்கு நிரம்பப் பிடிக்கும்.

வரலாறு சமூக நிர்பந்தங்களுக்கு ஏற்பவும் பழுதுபட்ட பார்வைகளின் அடிப்படைகளிலும் பலவாறு எழுதப்படுகிறது. கோணல்மாணல் கொண்டிருந்த சோவியத் யூனியனின் நிர்மாணப்பணிகளுக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டவர் ஜோசப் ஸ்டாலின். வரலாற்றின் பார்வையில் அவர் ஒரு சர்வாதிகாரியாகச் சித்தரிக்கப்படலாம்.

இந்திரா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு மறு பரிசீலனை வேண்டும்.
அதற்கேற்ப எதிர்கால இந்திய வரலாறு அழித்து எழுதப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஜீவி said...

@ வை.கோ.

// எப்பொழுதும் போல வழுவட்டையாகப் படுத்திருந்த நான்.............//

ஆரம்பமே அட்டகாசம். உங்களில் புதைந்திருக்கும் நகைச்சுவை வாழ்க! ஒரே நாளில் நீங்கள் பெற்ற அனுப்வங்களைக் கோர்வையாக இந்த முக்குணங்களுடன் நீங்கள் ஒப்பிட்டு கலகலக்க வைத்தது அற்புதம்.

ஜீவி said...

@ வை.கோ. (3)
//இதுபோன்ற எல்லா குணங்களும் கலந்து உள்ள ஒருவனே, இன்றைய உலகினில், மனிதனாக இருக்க முடியும். //

உண்மை.

இருப்பினும் இன்றைய கால கட்டத்திலும் அந்த முக்குணங்கள் அது அதற்கேற்ப குணாதிசியங்களுக்கு ஏற்பவே அடையாளப்படுத்தப்படுவதும் வேடிக்கை.

அதாவது, எந்தக் காலத்திலோ இலக்கணம் வகுக்கப்பட்ட இந்த முக்குணங்களும் இன்றும் அப்படியே பொருள் கொள்ளப்படுகின்றன. இந்தக் குணங்கள், கால மாற்றங்களில் வேறு பொருள் கொள்ளப்படாமை தான் இவற்றின் சிறப்பு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஜீவி said... @ வை.கோ. **எப்பொழுதும் போல வழுவட்டையாகப் படுத்திருந்த நான்.............**

ஆரம்பமே அட்டகாசம். உங்களில் புதைந்திருக்கும் நகைச்சுவை வாழ்க! ஒரே நாளில் நீங்கள் பெற்ற அனுப்வங்களைக் கோர்வையாக இந்த முக்குணங்களுடன் நீங்கள் ஒப்பிட்டு கலகலக்க வைத்தது அற்புதம்.//


அன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் .........

இன்றைய முதல்வர் + அவரின் ஆதரவாளர்கள்
முன்னாள் முதல்வர் + அவரின் ஆதரவாளர்கள்
எதிர்கட்சித்தலைவர் + அவரின் ஆதரவாளர்கள்
மற்ற இரு உதிரிக் கட்சியினர் + அவர்களின் ஆதரவாளர்கள்
சட்டசபையின் சபாநாயகர்
பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டு வந்திருந்த காவலர்கள்

போன்றவர்களில்

யார் யார் ஸத்வகுணம் கொண்டவர்கள்
யார் யார் ரஜோ குணம் கொண்டவர்கள்
யார் யார் தமோ குணம் கொண்டவர்கள்

என்பதை மோஸ்ட் வழுவட்டையான
என்னால் அன்று கடைசிவரை உணரவே முடியவில்லை. :(

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம் (1)

மனிதன் பாதி; மிருகம் பாதி என்று சொல்வது போல என்றைக்கு இந்த முக்குணங்களும் ஒரு மனிதனில் சமயா சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப குடிகொள்ளும் என்ற முடிவுக்கு வந்து விட்டோம் அப்பொழுதே இந்த மூன்றில் எது ஒன்றையும் யாருக்கும் நிரந்தர பிரதிநிதி ஆக்க முடியாது என்று தெரிகிறது.

வை.கோ. சார் சொன்னபடி அவர்களைப் பற்றி, அந்தந்த காலத்து அவரவர் செயல்பாடுகள் பற்றி நம் பார்வை தான் அது. நமக்குத் தெரிந்த பார்வையில், நமக்கு தெரியாத உண்மைகள் பல உண்டு.

அரசியல் வரலாறுகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். தேர்ந்து வடிகட்டப்பட்டு போற்றுதலும் தூற்றுதலும் நமக்குத் தெரியப்படுத்தப் படுகின்றன. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று பல விஷயங்களில் நாமாகவே நமக்குத் தெரியப் படுத்தப்பட்ட செய்திகளின் யூக அடிப்படையில் முடிவுக்கு வருகிறோம். பல சமயங்களின் நிஜம் என்பது வேறாகவும் இருக்கலாம்.
ஜீவி said...

@ கீதா சாம்பசிவம் (2)

//எந்தச் சமயத்தில் எது அதிகம் தலை தூக்கும் என்பதைச் சொல்லவும் முடியாது!//

இந்த முக்குணங்களில் ஒன்று சற்று தூக்கலாக ஒவ்வொருவரிலும் அடிப்படை குணம் என்று இருக்கிறது. அதன் அடிப்படையில் அந்தந்த நேரத்தில் வெளிப்படும் குணமும் தீர்மானைகப்படும்.

உதாரணத்திற்கு,

ஒருவர்: பாதகம் செய்பவன் எவனாயிருந்தாலும் மோதி மிதித்து விட வேண்டும்.

மற்றொருவர்: அதெல்லாம் சரி. நமக்கெதற்கு வம்பு?

இதான் அடிப்படைக் குணத்திற்கேற்பவான செயல்பாடு.

இந்த அடிப்படை குணமும் ஒருவரின் வாழ்க்கை பூராவும் ஒன்றாகவே ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றில்லை. அடிப்படை குணமும் அவரவர் அடையும் அனுபவங்களுக்கு ஏற்ப மாறுதல்கள் கொள்ளும் என்பது என் அனுபவக் கருத்து.

ஜீவி said...

@ வை.கோ. (3)

ஒரு வார்த்தை பல பொருள்கள் கொள்ளும் சிறப்பு பல மொழிகளில் இருப்பதாகத் தெரிய வருகிறது.

'டிஸ்சார்ஜ்' என்பதை வெளியேற்றம் என்று பொருள் கொள்கிறோம்.

He discharged his duties என்பது அந்த மொழியின் அர்த்தப்படுத்திக் கொள்வதற்கேற்ப அதுவும் சரியாகத் தான் இருக்கிறது.
வை.கோபாலகிருஷ்ணன் said...


பின்னூட்டப்பகுதியை பாப்-அப் விண்டோ வாக மாற்றுங்கோ என நான் கரடியாகக் கத்தியும்,

ஸ்ரீராம் ஏதோ மாற்றுக்கருத்து சொல்கிறார் என்பதாலோ என்னவோ,

இன்னும் நீங்கள் மாற்றாமல் இருப்பதால் .....

இந்த மிகவும் விறுவிறுப்பான விவாத மேடையாக மாறியுள்ள பின்னூட்டப்பகுதியில்

ஒரே கசா-முசா வென்று,

யாருக்கு யார் என்ன பதில் சொல்லியிருக்கிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடியாதபடி,

மிகவும் வழுவட்டையாக .....

சுருக்கமாகச் சொன்னால் அன்றைய 18.02.2017 சனிக்கிழமை சட்டசபை நிகழ்ச்சிகள் போல மட்டுமே காட்சியளிக்கின்றது என்பதை தயவுசெய்து உணரவும்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//நீங்கள் சொல்லியபடி, எல்லோருக்கும் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் கலந்து இருக்கும் என்றாலும், அடிப்படை குணம் என்று ஒன்று உண்டு.//

பார்க்க: கீதா சாம்பசிவம் (2)

இந்த அடிப்படை குணம் பற்றிய என் பின்னூட்டம் உங்களுக்கு உடன்பாடாக இருக்கிறதா?ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//ஒருவனின் உண்மையான சௌரூபம், //

சொரூபம் என்றில்லை. சாமர்த்தியம் என்று வேண்டுமானல் சொல்லலாம்.

சோரூபம் என்பது பல நேரங்களில் கொடூரமானது. சாமர்த்தியம் அப்படியில்லை.

சாமர்த்தியத்தில் இந்த காரணத்திற்காக இப்படியான செயல்பாடு என்று ஒரு அர்த்தம் இருக்கும்.

ஜீவி said...

//பின்னூட்டப்பகுதியை பாப்-அப் விண்டோ வாக மாற்றுங்கோ என நான் கரடியாகக் கத்தியும்,//

மன்னிக்கணும், கோபு சார்.

என் கணினியில் பல நேரங்களில் சில கோளாறுகள் ஏற்படுகின்றன. மடமடவென்று New Tab ஓப்பன் ஆகி, அந்தத் திரையே திகைக்க வைக்கிறது. திடீரென்று கர்ஸரின் அம்புக்குறி close பகுதி ஓடி நீள எழுதியதை ஒரு செகண்டில் இல்லாமல் செய்து விடுகிறது.

நிறைய இந்த மாதிரியான சோர்வுகளுக்கு இடையே முடிந்தவரை நிதானமாக தட்ட்சசு செய்து வருகிறேன். சில நேரங்களில் எந்தத் தொந்தரவும் இல்லாத பொழுது பல அவசர பணிகளுக்கு இடையே 'நல்ல சமயம் இது; இதை நழுவ விடக்கூடாது' என்று செயல்படுகிறேன்.

இத்தனை தொந்தரவுகளுக்கு இடையே அது வேறா என்ற நினைப்பில் அந்த ஆசையை ஊறப்போட்டிருக்கிறேன். விரைவில் என் மகனிடம் சொல்லி ஆவன செய்கிறேன்.

தங்களின் அக்கறையில் பிறந்த அன்பான பின்னூட்டத்திற்கு நிரம்ப நன்றி. கொஞ்ச காலம் கொள்ளுங்கள்.

ஜீவி said...

Dr. B. Jambulingam

ஆமாம் ஐயா. சைவசித்தாந்தத்தில்--

சாத்துவிகம்

இராசதம்

தாமதம்

--என்று முக்குணங்கள் வகைப்படுத்தலும்,

முக்குணங்களும் வெளிப்படாது சூட்சுமமாய் நிற்கும் நிலை 'மூலப் பிரகிருதி' என விளக்கப்படுதலும் தாங்கள் சொன்ன குறிப்பைப்படித்ததும் நினைவுக்கு வந்தது.

தங்கள் வருகைக்கும் பகிர்ந்து கொண்ட தகவலுக்கும் நன்றி, ஐயா.ஜீவி said...

@ வே. நடனசபாபதி

// ஒவ்வொரு நேரத்திற்கு ஒரு குணம் தலை தூக்குமாம். எடுத்துக்காட்டாக காலையில் எழுந்தவுடன் சத்வ குணமும், பகலில் ரஜோ குணமும் இரவில் தமோ குணமும் இருக்குமாம்.

மேலும் அவைகள் காலத்திற்கு தகுந்தகவாறு மாறும் என்றும் சாப்பிடும் உணவைப் பொறுத்து மாறும் என்றும் சொல்லப்படுகிறது. //

அப்படித்தான் சொல்கிறார்கள். காலையில் எழுந்தவுடன் எந்தப் பிரசனையும் இல்லாமல் மனம் நிர்மலமாக இருப்பதினால் சாந்த குணம் இருப்பதாகவும், பகல் நெருங்க நெருங்க
பிரச்னைகள் அழுத்த அழுத்த ரஜோ குணமும், பிரச்னைகளை சந்தித்த அலுப்பில் இரவில் தமோ குணமும் இருக்கலாம் என்று பொதுவாக நாமே இதற்கெல்லாம் அர்த்தத்தைக் கற்பித்துக் கொள்ளலாம்.

ஆனால கொஞ்சம் உள்ளார்ந்து பார்த்தால், அவரவர் சந்திக்கும் சூழ்நிலைகள், பொருளாதார பிரச்னைகள், வாழ்க்கை அமைப்பு, வறுமை அல்லது செல்வ வளப்பம் இவை எல்லாமே நம் குணங்களைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

நம்மை சுற்றியுள்ளவர்களும் நம்மைத் தீர்மானிக்கிறார்கள். மனைவி அல்லது கணவன், தாய், தந்தை, மகன், மகள் என்று எல்லோருமே தான். யாரும் தீவல்ல. அது தவிர அன்பு, நேசம், பாசம், வளரும் சூழ்நிலை எல்லாமே நம்மைத் தீர்மானிக்கின்றன என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

காலையில் எழுந்தவுடன் ஒரு டீக்குக் கூட வழியில்லாதவரிடம் எப்படி சத்வ குணத்தை எதிர்பார்க்க முடியும்?

பொதுவாக தமிழ்நாட்டில் காலைக் கடமை செய்தித்தாளை வாசித்து விட்டுத் தான் மற்ற வேலைகள் என்ற ஒரு பழக்கம் பலருக்கு இருக்கிறது. அவற்றைப் பிரித்துப் படித்தவுடனே ஆத்திரம், கோபம், இயலாமை, எரிச்சல் என்று எல்லா அமைதி இழப்புகளும் நம்மைப் பற்றிக் கொள்கின்றன. நாளின் தொடக்கமே அமைதியான வாழ்க்கைக்கு எது கூடாதோ அதில் தான் தொடங்குவதாக எனக்குத் தோன்றுகிறது.

சாப்பிடும் உணவு தான் நம்மை உருவாக்குவதாக நிரூபணம் செய்திருக்கிறார்கள். இந்த முக்குணங்களை சீண்டி விடுவதில், தீர்மானிப்பதில், அழிப்பதில் உண்ணும் உணவு பெரும் பங்கு வகிப்பதாக இயற்கை மருத்துவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிரூக்கிறேன்.

இயற்கை மருத்துவம் என்றதும் நினைவுக்கு வருகிறது. தினமும் காலை 8 மணிக்கு சன் டிவியில் சுப்ரமணியன் என்னும் பெயர் கொண்ட பெரியவர் 'நாட்டு மருத்துவம்' என்ற பெயரில் அற்புதமான பயன் உள்ள நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்காக ஒரு தகவலுக்காகச் சொல்லத் தோன்றியது.

தங்கள் கருத்துக்களைச் சொன்னமைக்கு நன்றி, ஐயா.

Bhanumathy Venkateswaran said...

மனிதர்கள் எல்லோருமே இந்த மூன்று குணங்களின் கலவை. எந்த நேரத்தில் எது டாமினேட் செய்கிறதோஅந்த நேரத்தில் நாம் அந்த குணம் கொண்டவர்களாக கணிக்கப் படுகிறோம்.

செயல்படாத தாமச குணம், செயலில் ஒரு வேகம் கூடிய ரஜோ குணம், நிதானமான சத்வ குணம், இந்த மூன்றுமே களையப்பட வேண்டியவைதான். அதற்காகத்தான் ஆன்மீக பயிற்சிகள். கடவுள் இந்த முக்குணங்களை கடந்தவராக இருப்பதால்தான் அவரை குணாதீதன் என்கிறோம்.

பொதுவாக மூன்று குணங்கள் என்று கூறி விட்டாலும், அவற்றின் பெர்முடேஷன் காம்பினேஷனாகத்தான் எல்லோரும் இருக்கிறோம் அதாவது சாத்விகராஜஸ், சாத்விகதமஸ், ராஜஸ்விக்சத், ராஜஸ்விக்தமஸ், தாமஸிக் சத், தாமசிக்ரஜாஸ் இப்படி. இப்போது நாமெல்லாம் தாமசிகராஜஸ் குணம் கொண்டவர்களாக இருக்கிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் செயல்கள் தவறு என்று தெரிகிறது, கோபம் வருகிறது, ஆனால் அந்த கோபம் ஆக்கபூர்வமாக இல்லை. இப்போது நமக்கு தேவை சாத்விக ரஜஸ். மஹாத்மா காந்திக்கு இருந்தது அப்படிப்பட்ட சாத்விக ரஜஸ்தான்.

Bhanumathy Venkateswaran said...

@நெல்லை தமிழன்://இம்மூன்று குணங்களையும், முனிவர்கள், அரசர்கள், அசுர்ர்களுக்கு உள்ள பொதுவான குணம் என்று பிரிக்கமுடியுமா?//
முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள் இவர்களுக்கு உள்ள பொதுவான குணம் எனக்கூறலாம்.
அரசர்கள் என்பவர்கள் மனிதர்கள். ரஜோ குணம் மிகுந்திருக்கும் மனிதர்கள்.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

//செயல்படாத தாமச குணம், செயலில் ஒரு வேகம் கூடிய ரஜோ குணம், நிதானமான சத்வ குணம், இந்த மூன்றுமே களையப்பட வேண்டியவைதான்.//

ஆஹா.. ஒரே போடாகப் போட்டு விட்டீர்களே! அருமை.

சத்வ குணம் தான் எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு ஷாக்! அதுவும் களையப்பட வேண்டியது தான் ஐயா என்று உரத்த குரலில் ஓங்கிச் சொன்னதற்கு ஒரு சபாஷ்!

எதற்காக இந்த மூன்றையும் களைய வேண்டும்?..

இந்த மூன்றையும் களைந்து விட்டால் மனிதனும் குணாதீதன் ஆவதற்காகவா?..

களையப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தை விஞ்சி களைய வேண்டாத, களைய முடியாத காரணங்கள் ஒரு தேவையாய் நம்மை உருவாக்கிக் கொண்டிருப்பதாக என் எண்ணம்.

கலைஞர் சொல்லுவார். சுற்றிலும் பற்றி எரியும் தீப்பந்தங்கள் நடுவில் கொளுத்தப்படாத கற்பூரம் என்று. (சுற்றிலும் மது விலக்கு அமலில் இல்லாத மாநிலங்கள் மத்தியில் தமிழகத்தில் மட்டும் மது விலக்கு சாத்தியப்படுமா என்பதற்காக சொன்ன உதாரணம்) அது என்பதை மறந்து விட்டு உதாரணத்தின் நியாயத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

களைய வேண்டிய குணங்கள் விரும்பினாலும் களைய முடியாத அளவுக்குத் தேவையாக உருமாறியிருக்கிறது. விடவும் முடியாத, விரும்பவும் முடியாத அவலம் தான் இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று காம்பினேஷனாக தோற்றம் கொண்டிருப்பதாகக் கொள்ளலாம்.

சாத்வீக ராஜஸ்
சாத்வீக தமஸ்
ராஜஸ்விக்தச்
ராஜஸ்விக்தமஸ்
தாமஸிக் சத்
தாமஸிக் ராஜஸ்

தாமஸ, ரஜோ, சத்வ அவியல் காலத்தின் கட்டாயம்!
கல்வியா, தெய்வமா, வீரமா என்பது மாதிரி குழப்பிக் கொள்ளாமல் மூன்றையும் போட்டுப் பிசைந்த கலவைச் சாதம்!

எண்ணித் துணிக கர்மம் -- தாமசிக?
துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கு -- ராஜஸ்?

தாமஸும், ரஜோவும் பொருத்தம் பார்த்த மாதிரி சேருவது இயல்பாகப் படுகிறது.

ஆனால் சாத்விக ரஜஸ்? -- பொருத்தவர் பொங்கி எழுவர் போலவா?

இன்னொரு சந்தேகம். சாத்விக ரஜஸ் என்னும் பாடத்திட்டத்தில், 'தான் கொள்ளும் பிடிவாதமும்' ஒரு பாடமோ?

மஹாத்மா போல ஒரு மாமனிதர் இப்பூவலகில் பிறந்ததில்லை-- உண்மை தான்.
இருப்பினும் தான் நினைப்பதைச் சாதிக்க, 'சாப்பிடமாட்டேன், போ!' கையைக் காலை உதைத்த (சாத்விக எதிர்ப்பு கொண்ட) குழந்தையும் அவர் தான்!

G.M Balasubramaniam said...

என் பதிவுக்குப் பின்னூட்டம் இல்லையே என்று கேட்டால் இந்த சுட்டியைக் கொடுக்கிறீர்கள்....!பரவாயில்லை பகவத் கீதையின் 17-ம் அத்தியாயத்தில் இந்த மூன்று வகை குணங்கள் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது வாழ்வியல் பரிமாற்றங்கள் என்னும் ஒரு பதிவை நான் 2011 வாக்கில் எழுதி இருந்தேன் I AM OK. YOU ARE OK என்னும் புத்தகத்தின் சாரம் அது மனிதனின் குணங்கள் வெளிப்படும் முறைகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருக்கிறதுஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை. ஒரு பெரியவன் ஒரு பெற்றோரின் குணங்கள் வெளிப்படுகிறது இந்த குணங்கள் எல்லாம் குழந்தையின் மூன்றாம் வயதுக்குள்ளாகவே அதன் மூளையில் ஏற்றப்படுகிறதுchild . parent adult குணாதிசயங்கள் அப்போதே ஊட்டப்படுகிறது இவற்றில் அடல்ட் பிஹேவியரே சிறந்தது என்றும் அதன் வெளிப்பாடே I AM OK YOU ARE OK என்னும் குணாதிசயத்தின் வெளிப்பாடு என்று கூறப்பட்டிருக்கிறது பதிவின் சுட்டி இதோ நீங்கள் ஏற்கனவே படித்தது டு ரிஃப்ரெஷ் சுட்டி http://gmbat1649.blogspot.com/2011/03/blog-post_20.html

Related Posts with Thumbnails