Thursday, July 6, 2017

என்றைக்கும் புதுசு தான்...


குக்கூ வென்றது கோழி அதன் எதிர்
துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.                                                        

                                                                                   (குறுந்தொகை- 157)

இரவில் கிடைத்ததாலோ என்னவோ
இன்னும் விடியவில்லை
                                                                 
                                                                        -யாரோ              குதிரை வேதம்

1.
குதிரைகள் கடவுள் ஜாதி
கும்பிடுதல் உலக நீதி
புணர்ந்தபின் குதிரைகள்
ஒரு நாளும் தூங்கியதில்லை
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்கா பணிந்து போகும்?

2.

குளம்படி ஓசை- கவிதை
குதிரையின் கனைப்பு - கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் விழியே சக்தி
குதிரையின் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு

3.
கூட்டமாய்ப் பறவை போல
குதிரைகள் பயணம் செய்யா..
இலக்குகள் குதிரைக்கில்லை...
முன் பின்னால் அலைவதைத் தவிர
இலக்கில்லா மனிதர் பெரியோர்.
உள்ளவர் அலைய மாட்டார்...
நிலம் பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப் பக்கம் அழுந்த
குதிரைகள் தூங்குவதில்லை..
ஏனைய உயிர்கள் போல....

5.

நீர் குடிக்கக் குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுது மிருகம் என்பார்
சீர்குணம் அறிய மாட்டார்
வேறொன்று குடிக்கும் போது
தான் கலக்கல்  கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில்  குழந்தை ஜாதி!

6.

விருப்புடன்  பிறந்த குதிரை
கொம்பில்லை;  விஷமுமில்லை..
தர்மத்தைச் சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவார்?..

7.
குரங்குகள் மனிதர் போல
வளர்ந்தது உண்மையாயின்
குதிரைகள் மாறும்  ஒருநாள்

8.
குரங்குகள் மடியும் அன்று..
கதறிட  மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தைக் குதிரை அறியும்

                                                                                  --  பாலகுமாரன்

தேடப் போய்
இருந்ததும்
தொலைந்தது.

                                                                                 --  மாமல்லன்


சமரச வேஷமிட்ட குரங்கினிடம்
அப்பத்தைப் பறிகொடுத்த
பூனைகள் நாம்                  

                                                                            -  அப்துல் ரகுமான்

கை ஓய இருளை விடியும் வரை
கடைந்த  இரவு
ஒரு துளி வெண்ணையாய் உயரத்தில்
அதை வைத்து விட்டு நகர்ந்தது

                                                                              --  தமிழன்பன்


'அகர முதலெழுத்தெல்லாம்' என்று ஆரம்பிக்கும் முதல் திருக்குறள் அனைவருக்கும் தெரியும்.

1330=வது கடைசிக் குறள்?..

'ஊடல், கூடல்' சம்பந்தப்பட்ட ஒப்பற்ற குறளும் என்றைக்கும் புதுசு தான்!..

14 comments:

நெல்லைத் தமிழன் said...

ரொம்ப வாரங்களுக்கு அப்புறம் உங்கள் தளத்தில் இடுகை. நலமாக இருக்கிறீர்களா? சங்க காலத்திலிருந்து இந்த காலம் வரையான கவிதைக்ளோட ஆரம்பிச்சிருக்கீங்க. வருக வருக வாழ்த்துக்கள்..

ஸ்ரீராம். said...


​குறுந்தொகையின் ஆரம்பரி படித்ததும் மனதில் பி சுசீலா "பார் என்றது பருவம்" இசைத்தார்!

இரவினில் பெட்ரா சுதந்திரக் கவிதை அலுத்து விட்டது.

குர்திரைக்கவிதைகளைப் படிக்க ஆரம்பிக்கும்போதே பாலகுமாரன் என்று தெரிந்து விட்டது.

கவிக்கோ கவிக்கோதான். மாமல்லனும் தமிழன்பனும் ரசிக்க வைத்தார்கள்.

அருமையான மீள் ஆரம்பம்.

கோமதி அரசு said...

குறுந்தொகையும், திருக்குறளும் அருமை.
குதிரை வேதம் பாடல் பாலகுமரனின்
இரும்புகுதிரை கதையில் வருகிறதா?
பகிரந்த அனைத்தையும் ரசித்தேன்.
தொடர வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

இத்தனை நாட்களுக்குப் பின் உங்கள் பதிவைப் பார்ப்பதில் மகிழ்ச்சி

வே.நடனசபாபதி said...

பல நாட்களாக வலையுலகத்திற்கு தாங்கள் வரவில்லையே என நினைத்துக்கொண்டு இருந்தபோது கவிதைகள் பல தந்து பல்சுவை படைத்துவிட்டீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்.

நம் சந்திப்புக் களமாக பதிவுகள் அமைந்திருப்பது நிதர்சன உண்மை. நம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் களம் அல்லவா, பதிவுகள்?..

நான் நலமே. தங்கள் விசாரிப்புக்கு நன்றி. ஆரம்பித்தாயிற்று. இனித் தொடர்ந்து தொய்வில்லாமல் தொடரலாம்.

அடிக்கடி சந்திக்கலாம். மிக்க நன்றி, நெல்லைத் தமிழரே!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

உங்களுக்கு பி.சுசீலா என்றால் எனக்கு நம் காலத்து சாகா வரம் பெற்ற கவிஞன் கண்ணதாசன்.

அலுத்து விட்டாலும் இரவினில் பெற்ற ' சுதந்திர' கவிதையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எழுதுகிறார்கள். கவனித்தீர்களா? விடியல் கிடைக்க ஏங்குவோரும், விடியாமல் இருக்க செயல்படுவோருமாய் சுதந்திரமும் சின்னாப் பின்னமாகிக் கொண்டிருக்கிறது.
யாரின் கவிதை அந்தக் கவிதை என்று யாராவது சொல்வார்கள் என்று தான் 'யாரோ' என்று குறிப்பிட்டிருந்தேன்.

பாலா குதிரையின் செயல்பாடுகளை எவ்வளவு கூர்ந்து கவனித்திருக்கிறார் என்று அசந்து போனேன்.

உங்கள் ரசனைக்கும் மீள் ஆரம்ப வாழ்த்துக்கும் நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ கோமதி அரசு

ஆமாம், கோமதிம்மா. இரும்புக்குதிரை நாவலிலிருந்து எடுத்தது தான்.

பாலாவின் படைப்புகளின் ஆரம்ப காலம், இடைக்காலம், கடைக்காலம் என்று ஓர் ஆராய்ச்சியே மேற்கொள்ளலாம். ஜெயகாந்தனும், பாலாவும் தம் எண்ணங்களின் வடிவாக தம் எழுத்தை அமைத்துக் கொண்டவர்கள். எண்ணுவதற்குப் புறம்பாக எழுதத் தெரியாதவர்கள். காலத்திற்கு காலம் இவர்களின் எண்ண் மாறுபாடுகளை இவர்களின் எழுத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். தம்மை ஆட்கொண்ட அந்தந்த காலத்து எண்ணங்கள் எப்படியோ அப்படியே எழுத்துக்கள் அமையும் என்பதற்கு நல்ல உதாரண புருஷர்கள் இவர்கள்.

தங்கள் வருகைக்கு நன்றி.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

எனக்கும் தங்களை பின்னூட்டத்தில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி, ஐயா. தொடர்வோம்.

Thulasidharan V Thillaiakathu said...

ஜீவி சார் வணக்கம்.

குறுந்தொகைப் பாடல், திருக்குறள்,

கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிக்கோ- கவி அரசன்!!

மாமல்லன் மற்றும் தமிழன்பன் வரிகள் அனைத்தும் ரசித்தோம். மாமல்லனின் வரிகள் ரொம்பவே யதார்த்தமோ! அதுவும் வாழ்க்கைப் பாடத்தையே சொல்லுகிறது போல் உள்ளது!!

கீதா

கீத மஞ்சரி said...

எனக்கு எல்லாமே புதியவை.. மிகவும் ரசித்தேன். நன்றி ஜீவி சார்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி, சார். நீண்ட நாட்கள் இடைவெளியைப் பொறுக்க முடியாமல் இருக்கிற வேலைகள் இருக்கட்டும் என்று வந்து விட்டேன்.

அலை ஓய்ந்த பிறகு தான் கடலில் குளிப்போம் என்கிற பைத்தியக்காரத்தனம் புரிந்தது.

ஜீவி said...

@ கீத மஞ்சரி

அடேடே! கீத மஞ்சரியா?.. வாங்க, வாங்க.. தொடர்ந்து வரவும் செய்யுங்கள். நானும் வருகிறேன்.

தங்கள் ரசிப்பிற்கு நன்றிங்க.

Geetha Sambasivam said...

தமிழன்பன் மனதைக் கவர்ந்தார். இந்தப் பதிவு எனக்கு அப்டேட் ஆகலை! :)

Related Posts with Thumbnails