மின் நூல்

Saturday, February 4, 2017

அழகிய தமிழ் மொழி இது!..

இதற்கு முன் பகுதி:    
http://jeeveesblog.blogspot.in/2016/10/blog-post_11.html

பகுதி—25

மாமன்னன்  செங்குட்டுவனின் வடபுலப் பயணம் பற்றிப் பறையறிவித்ததும் அந்தச் செய்தி  எங்கணும் பற்றிக் கொண்டது.

ஆசான்,  அரச நிமித்திகன், அமைச்சர், படைத்தலைவர்கள் ஒன்று கூடியிருக்க  மன்னன்,  மன்னன் பரம்பரை பாத்யதையான சிங்க முகம் சுமந்த சிங்காதனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தான்.   

அவையில் வாழ்த்தொலி முழங்க, சந்னதம் கொண்ட குரலில் மாமன்னன் செங்குட்டுவன்  சொன்னான்:  


இமையமலையிலிருந்து இங்கு வந்திருந்த முனிவர்கள் சொன்னார்கள்.  கங்கை பேராற்றின் கரையைக் கடந்து  இமயமலையில் வில்,புலி, கயல் இலச்சினைகளை யான் பொறித்த பொழுது ‘எம்போலும் ஆற்றல் கொண்ட மன்னர் யாரும் இங்கு இல்லை போலும்’ என்று எக்காளமிட்ட  வடபுலத்து வேந்தர்களின் பழிச்சொல்லை முனிவர்கள் சொல்லக்   கேட்டேன்.  அது  சோழ, பாண்டிய அரசர்களும் எம்மை இகழ்வதற்கு இடம் கொடுத்த்தாகி விடும்.  இப்பொழுதே, இவ்விடத்தே சொல்கிறேன்.   “அவ்வடபுலத்து மன்னர் முடித்தலை மீது பெண்தெய்வத்திற்கு உரு வடித்தற்குரிய கல்லைச் சுமந்து வரச்செய்வேன்.    யான் அவ்வாறு செய்யேன் ஆயின் வீரப்போரில் வீரக்கழல் பூண்டு வாளேந்தி பகைவரை நடுங்கச் செய்யும் மன்னன் அல்லாது  பயன்மிகுந்த நாட்டில் எம் குடிமக்களை அஞ்சச் செய்யும் கொடுங்கோல் மன்ன்ன் என்று ஊர் பழி தூற்றும் இழிநிலையுடையேன் ஆவேன்..”  எனறு ஆவேசதுடன் சூளுரைத்தான்.

உடனே நிமித்திகன் எழுந்து, மன்னனை வாழ்த்தி, “உன் செந்தாமரையன்ன சிவந்தத் திருவடிகளைப் போற்றிப் பணியும் காலம்  இது, மன்னா!  காலம் கனிந்திருக்கிறது;   நேரமும் நல்ல நேரமாய் வாய்த்திருக்கிறது.  குறித்த திசை நோக்கிப் போருக்கு எழலாம்..” என்று ஜோதிட பலன் கூறினான்.
             
அது கேட்ட செங்குட்டுவன் படைத்தலைவனைப் பார்த்து “நம் வாளையும் குடையையும் வட்திசை நோக்கி புறப்படுமாறு செய்வாயாக..” என்று ஆணையிட்டான்..

மன்னனின்  ஆணைக்குத் தான் காத்திருந்த்து போல நிலமதிர போர்வீர்ர்கள் தங்களுக்கே உரித்த ஆரவாரத்துடன் வெற்றி முழக்கமிட்டனர்.  முரசுகள் முழங்க,  கொடிகள் காற்றில் அலைபாய்ந்தன.

அணிஅணியாக ஆரப்பரித்தப்  படைவீரர்களைத் தொடர்ந்து அமைச்சர் பெருமக்களும், கரணத்தியலவர் முதலான் எண்பேராயக்தினரும், காலத்தைக் கணிப்போரும்,  அறம் கூறுவோரும் சென்றனர்.  இடையிடையே,”எம் மன்னர் புகழ் நீடுழி வாழ்க!’  என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. பட்டத்து யானை வெற்றி வாளையும்,  வெண்கொற்றக் குடையினையும் சுமந்து  முன்னால் சென்றது.  அரண்மணை  அருமேயிருந்த கொற்றவை கோயில் அருகே அத்தனை பேரும் குழுமினர்.  வஞ்சிப்பூவும் பனம்பூவும் கலந்த  மாலையைச் சூடும் சேர மன்னனின் அரசவை மாந்தரும் அந்தக் கூட்டத்தினருடன் சேர்ந்து கொண்டனர்.

அரும்படைத் தானை வீரர்க்கும்,  பெரும்படைத் தலைவர்க்கும் மன்னன் பெரும் சோறு அளித்தான்.  அவர்களை வைத்துக் கொண்டு பூவா வஞ்சியில்  பூத்த வஞ்சியாய் மன்னன் வஞ்சிப்பூமாலையைத் தன்  முடியில் சூட்டிக்கொண்டான்.  மற்ற நாட்டு மன்னர்கள் தாம் ஏந்தி வந்திருக்கும் திரைப் பொருட்களைச் செலுத்தாலாம் என்பதற்கு அழைப்பு விடுப்பது போல காலை முரசம் கடைவாயிலில் முழங்கியது.  

நிலவுக்கதிர் நீந்தும் நீள்முடியும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளை வெற்றி பொருந்திய வஞ்சி மாலையுடன் செங்குட்டுவன் தன் தலையிலே அணிந்து  பெருமானின்  கோயிலை வலம் வந்து  வணங்கினான்.   அச்சமயத்தில் அந்தணர் ஏந்தி வந்த ஆகுதியின் நறும்புகை சூழ வஞ்சி மாலை நெஞ்சில் புரள  மன்னன்  பட்டத்து யானையின் பிடர்த்  தலை ஏறினான்.

“சேர மன்னன் செங்குங்குட்டுவன் கொற்றம் சிறக்க!..” என்ற வாழ்த்தொலிக்கிடையே  திருவனந்தபுரத்துக் கோயிலில் பாம்பணையின் மீது பள்ளி கொண்ட பெருமாளின்
சேடத்தைக் கொண்டு வந்து தந்து   சில ஆன்றோர் வாழ்த்தினர்.  ஏற்கனவே பிறாவா யாக்கைப் பெரியோனின் திருவடிகளைத் தன் தலை மீது வைத்திருந்தமையால்,  பெருமாளின் சேடத்தைப் பெற்று  சேரன் தன் திண்ணிய புஜத்தின் மீது தாங்கிக் கொண்டான்.

ஆடல் அரங்குகளில் நர்த்தனமிடும் நாடக மகளிர் கை கூப்பி வழி நெடுக நின்றிருந்தனர். “கொற்ற வேந்தே!  வாகை மாலையின் அழகில் தும்பை சேர அத்துடன் பனம்பூ மாலையும் சேர்ந்து நின் பட்டத்து யானையின் முகத்தே புரள்கின்றன.  வெண்கொற்றக் குடை நிழலில் நீ யானையின் முடித்தலை அமர்ந்து வருகையில் எம் கைவளைகளைக் கவர்வாய்!  எம் கண்கள் களிகொள்ளும் இவ்வழகிய தோற்றத்தை என்றும் நீ பெற்றிருப்பாயாக..” என்று வாழ்த்தினர்.

மாகதப் புலவரும், வைதாளிகரும், சூதரும் மன்னனின் வெற்றிக்காக வாழ்த்தினர்.  யானை வீரரும்,  குதிரை வீரரும்,  வாளேந்திய காலாட்படை மறவரும் வெற்றியைப் போற்றிப புகழதனர்.  அந்த சமயத்தில்  அசுரருடன் போரிட அமராவதியினின்றும் போர்ப்படையை நடத்திச் சென்ற இந்திரனே போன்று செங்குட்டுவன்  செம்மாந்து  தன் தலைநகரை விட்டு நீங்கினான்.  அலைகளின் ஆர்ப்பாட்டம் கொண்ட மேற்குக் கடற்கரையின் விளிம்பில் பிர்மாண்டமாக படைகள்  அணிவகுத்துச் சென்ற  பொழுது பின்புலக்காட்சியாய் மலைகளின் முதுகுகள் தெரிந்தன. கனைக்கும்  குதிரைகள் கொண்ட தேர்ப்படை நிலமதிர நகர  உலகநாயகன் நீலகிரி மலையின் சரிவில் அமைந்திருந்த பாடிவீட்டை நெருங்கினான்.   பாடிவீடு அடைந்ததும் யானை எருத்தத்து அமர்ந்திருந்த மன்னவன் கீழிறங்கி படை மறவர்கள் புடைசூழ பாடி வீட்டில் அமைதிருந்த அமளியில் அமர்ந்தான்.

படைகளின் இயக்கத்தால் எங்கணும் பேரொலி சூழ்ந்திருந்தது.  அந்த ஒலியின் வீச்சு அலைஅலையாய் விரிந்து வானத்திலும் ஒலித்தது.  விண்ணில் உலாவிய முனிவர்கள் அவ்வொலி கேட்டு, ‘இப்பெரிய நிலத்தை ஆளும் இந்திரனைப் போன்ற தீரனை நாமும் காண்போம்’ என்று கருதி மண்ணுலகம் இறங்கினர்.  மின்னலின் ஒளியையும் மயங்கச் செய்யும் பேரொளியொடு தன் முன் வந்திறங்கிய முனிவர் குழாத்தைக் கண்டு மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போன மன்னன் அமளியிலிருந்து எழுந்திருந்து பணிவன்புடன் அவர்களை நெருங்கி  வணங்கினான். “செஞ்சடைக் கடவுளின் அருளினால்  விளங்கிய  வஞ்சியில்  தோன்றிய மன்னனே கேட்பாயாக!  நாங்கள் பொதிகை செல்லும் வழியில் நின் பெரும் படையின்  ஒலியால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்தோம்.  நீ இமயம் செல்லும் கருத்து அறிவோம்.  அருமறை கற்ற அந்தணர் ஆங்கு வாழ்கின்றனர்.  பெருநில மன்னனே! அவர்களைப் பாதுகாத்தல் நின் கடமையாகும்”என்று கூறி செங்குட்டுவனை வாழ்த்திச் சென்றனர்.

முனிபுங்கவர்கள் அவ்விடம் நீங்கியதும், “வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க!” என்ற வாழ்த்தொலியோடு  கொங்கணக் கூத்தரும் கர்நாடகக் கூத்தரும் வந்தனர்.  கூத்தர் குலத்திற்கான ஒப்பனை அவர் பூண்டிருந்தது தூக்கலாகத் தெரிந்தது.   தழைத்த மாலையைத் தலையில் சுற்றியவராய்,  மணிவடங்கள்  சுமந்த இளம் நகில்களைக்  கொண்டவராய்,  கயல் நெடுங்கண்ணினராய் திகழ்ந்த ஆடல் மகளிரும் அவருடன் இருந்தனர்.   ‘கருங்குயில்கள் பாடின;  இன வண்டினம் யாழ் இசைத்தன;  அரும்புகள் அலரும் பருவமாய் இளவேனில் காலமும் வந்தது;  ஆனால் எம் காதலரோ  இன்னும் வரவில்லை..” என்னும்  பொருள் பொதிந்த மாதர்ப்பாணி வரிப்பாடலை இசைத்துக்  கொண்டே அவர்கள் வந்தது மயக்கம் தருவதாய் இருந்தது.

‘கலகலக்கும் வளையல் அணிந்த நங்கையே!  எழுவாய்; கோலம்கொள்வாய்! (ஒப்பனை பூணுவாய்!)  கடிதாக இடி இடித்த  உறுமலோடு கார்க்காலம் வந்த்து, காணாய்!   சென்ற காரியம்  முடித்துத் திரும்பும் காதலரைச் சுமந்த தேரும் வந்தது, பாராய்!’   என்று முன் இசைத்த வரிப்பாடலுக்கு வைப்பாடலே பதிலாய்  இசைத்தபடி    பின் வந்த ஆடல் மகளிருடன் குடகர்கள்  மாமன்னன் முன் வரிசையிட்டு நின்றனர்.,

அவர்களுக்குப் பின் ஓவர்கள் வந்தனர்.  அவர்கள் வருகையிலேயே “வாள்வினை முடித்து மறவாள் வேந்தன் ஊழி ஊழி வாழி” என்று வாழ்த்தொலிகளுடன் வந்தனர்.  ஆடலாசிரியன் வழிகாட்ட  அங்கு குழுமியிருந்த அத்தனை இசைக்கலைஞர்களுக்கும்   பொன்னும், முத்தும், பவழமுமாய் மன்னன் அணிகலன்களை வாரி வழங்கினான்.

அந்த  சமயத்தில் தான் வாயிற்காவலர் ஏதோ சேதி சொல்வது போல வந்து பணிந்து நின்றனர்.

(வளரும்)

படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.




44 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ந்து வாசிக்கிறேன். சேடம் என்றால் என்ன என்று கூறமுடியுமா? தற்போதுதான் இச்சொல்லைக் கேள்விப்படுகிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

’அழகிய தமிழ் மொழி இது!..’

என்ற தலைப்புக்கு ஏற்றவாறு ஏராளமான செய்திகளைத் தாராளமான வர்ணனைகளுடன் படிக்க ருசியாக உள்ளது.

//அந்த சமயத்தில் தான் வாயிற்காவலர் ஏதோ சேதி சொல்வது போல வந்து பணிந்து நின்றனர்.//

அது என்னவோ என்று தெரிந்துகொள்ளும் ஆவலுடன் ...... வளரட்டும்.

நெல்லைத் தமிழன் said...

@முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

"சேடத்தைக் கொண்டு வந்து தந்து" - திருமாலை என்ற வைணவப் பாடலில் 'சேடம்' என்ற பதம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. சேடம் என்பது, 'சேஷம்' என்பதின் தமிழ்ப்பதம் (ஷ என்பது சமஸ்கிருதம் என்பதால்). கடவுளுக்குப் படைக்கும் உணவை அவர் உண்ணுவதாக ஐதீகம். அதனையே நாம் பிரசாதம் என்று எண்ணிச் சாப்பிடுகிறோம். 'சேஷம்' என்பது மீதி என்று அர்த்தம். அனந்தபுரம் பத்மனாபரின் பிரசாதம் கொடுக்கப்பட்டது என்ற பொருள். திருமாலையில், 'போனகம் செய்த சேடம் தருவரேல்' - இதில், (பெரியோர்கள்) உண்ட மிச்சம் என்று அர்த்தம். இதனை சமஸ்கிருதம் 'உச்சிஷ்டம்' என்று குறிக்கும். இதனை ஒட்டியே, பெரிய கோவில்களில் (எனக்குத் தெரிந்து திருக்கோஷ்டியூரில் நடக்கிறது என்று நினைக்கிறேன்.. கர்'நாடகாவில் பல கோவில்களில் நடப்பது), பக்தர்கள் உணவு உண்டபின்பு, அவர்கள் சாப்பிட்ட இலையில் அங்கப் பிரதக்ஷணம் செய்வது வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ராமானுசர் வாழ்விலும் இந்த நிகழ்வு உண்டு.

சேணத்தையும், சேடம் என்றே தமிழ்ப்பாடல்களில் உபயோகப்படுத்தியுள்ளார்கள். ஆனால் இந்தப் பாடலில் சேடம் என்பது சேஷம் என்றுதான் அர்த்தம்.

வே.நடனசபாபதி said...

// திருவனந்தபுரத்துக் கோயிலில் பாம்பணையின் மீது பள்ளி கொண்ட பெருமாளின் சேடத்தைக் கொண்டு வந்து தந்து//
நம்மாழ்வார் பாடலிலிருந்து திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. என்கிறது விக்கிபீடியா.

ஆனால் சேரன் செங்குட்டுவன் காலமோ கி.பி இரண்டாம் நூற்றாண்டு என சொல்லப்படுகிறது. அப்படியென்றால் சேரன் செங்குட்டுவன் காலத்தில் திருவனந்தபுரம் இருந்ததா என்பதை விளக்கவும்.

நானும் அந்த வாயில் காவலரின் சேதி பற்றி அறிய காத்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

படங்களும் அருமை, செய்திகளும் அருமை.
தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

“சேர மன்னன் செங்குங்குட்டுவன் கொற்றம் சிறக்க!..” என்ற வாழ்த்தொலிக்கிடையே திருவனந்தபுரத்துக் கோயிலில் பாம்பணையின் மீது பள்ளி கொண்ட பெருமாளின்

சேடத்தைக் கொண்டு வந்து தந்து சில ஆன்றோர் வாழ்த்தினர். ஏற்கனவே பிறாவா யாக்கைப் பெரியோனின் திருவடிகளைத் தன் தலை மீது வைத்திருந்தமையால், பெருமாளின் சேடத்தைப் பெற்று சேரன் தன் திண்ணிய புஜத்தின் மீது தாங்கிக் கொண்டான்.//

சேடம் என்றால் பாம்பு , மிச்சம் என்று சொல்உண்டுஇல்லையா? ஆனால் இங்கு என்ன பொருளில் வருகிறது.
திருப்புகழ் பாடலில் அதலசேடனார் ஆட என்று பாடல் வரும் அல்லவா?

நெல்லைத் தமிழன் said...

@கோமதி அரசு மேடம்
சேடம் = பாம்பு என்று சட்டென நினைவுக்கு வரவில்லை. (ஆதிசேஷன்). பிரசாத்த்தைக் கையில் வாங்குவது மரபல்ல. தோளில் அல்லது இடுப்பில் உள்ள துண்டோடு இரு கையும் சேர்த்து வாங்குவது மரபு. பாத்திரத்தில் வந்திருந்தால் இன்னும் சரி. ஜீவி சார் விரைவில் தெளிவிப்பார் என நினைக்கிறேன்

ஜீவி said...

@ Dr. Jambulingam

சேடம் என்ற வார்த்தை சேஷம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபே.

சேஷம் என்பதற்கு மீந்தது என்பது பொதுவான அர்த்தம் என்றாலும், மற்றது போல அல்லாமல் தன் உயர்வின் காரணமாக மற்ற சாதாரணங்களிலிருந்து பிரிந்து இருப்பவைகளுக்கும் சேஷம் என்று சொல்லலாம என்று சமீபத்தில் வாசித்த ஒரு குறிப்பு சொல்கிறது. சேஷம் தான் விசேஷம் ஆயிற்று என்று சொல்கிறார்கள்.

அந்த அர்த்தத்தில் நெல்லைத் தமிழர் சொல்கிற மாதிரி இறைவனுக்கு படைக்கும் ஆகாரத்தை அதன் உயர்வு காரணமாக பிரஸாதம் என்கிறோம். அதனால் பிரஸாதமும் சேஷம் என்றே வழங்கப்படுகிறது.

அதனால் பிரசாதம் என்பது சேஷம் என்பதற்குப் பொருளாகக் கொண்டாலும் இன்னொரு விதத்தில் இடிக்கிறது. பிரசாதத்தை புயத்தில் செங்குட்டுவன் தாங்கினான் என்று எப்படிக் கொள்வது?.. சொல்கிறேன்.

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி, ஐயா.

ஜீவி said...

@ வை.கோ.

ஆஹா! தாங்கள் விட்டு விடாமல் தொடர்ந்து வாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சேடம் (சேஷம்) என்ற வார்த்தை பற்றி சொல்லுங்களேன்.

//அந்த சமயத்தில் தான் வாயிற்காவலர் ஏதோ சேதி சொல்வது போல வந்து பணிந்து நின்றனர்.//

எழுத்தாளர் சாண்டில்யன் சரித்திர நாவல்களில் 'தொடரும்' என்று அந்த அத்தியாயத்தை முடிப்பதற்கு முன்னால் இப்படித்தான் எதிர்பார்க்கிற மாத்ரி ஒரு கொக்கி போட்டு முடித்திருப்பார். அந்த எஃபெக்ட் கொடுத்து முடித்திருக்கிறேன். அவ்வளவு தான்.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, கோபு சார்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

திருமாலையில் மட்டுமல்ல, திவ்ய பிரபந்தத்திலும் இந்த சேடம் நிறைய இடங்களில் வருகிறது.

வானுளா ரறிய லாகா வானவா என்ப ராகில்

தேனுலாந் துளப மாலைச் சென்னியாய் என்ப ராகில்

ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்

போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே.

(திவ்ய பிரபந்தம்-- 912)

போனகம் செய்த சேடம் = அமுது செய்து எஞ்சிய பிரசாதத்தை

உணவுப் பிரசாதம் என்றால் அதை உண்ண வேண்டும். மாறாக,

பெருமாளின் பிரசாதத்தை திண்ணிய தோளில் தாங்குவதெப்படி?..

பார்க்கப் போனால் இறைவன் சம்பந்தப்பட்ட எல்லாமே அவனின் பிரசாதம் தான். சைவர்கள் திருநீரை, வீபூதிப் பிரசாதம் என்பார்கள்.

பெருமாளுக்கான பிரசாதம் சந்தனமும், துளசியும்.

"குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கென
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ததோன்
சேடம் கொண்டு சிலர்நின் றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கன னாகித் தகைமையின் செல்வழி..."

-- என்பது சிலப்பதிகார வரிகள்

ஆக, இளங்கோவடிகளார், ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோனின் பிரசாதமான திருதுவளத்தையும், சந்தனத்தையும் தன் புஜத்தில் தாங்கினான் என்று கொள்வோமாக.

சரியா, நெல்லைத் தமிழரே!

ஜீவி said...

//ஆக, இளங்கோவடிகளார்//

ஆக, சேரன் செங்குட்டுவன்

G.M Balasubramaniam said...


அழகிய தமிழை ரசிக்கிறேன் மற்றபடி கருத்து சொல்லும் அளவு தேர்ச்சி இல்லை தொடர்கிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஜீவி said

//@ வை.கோ. ஆஹா! தாங்கள் விட்டு விடாமல் தொடர்ந்து வாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேடம் (சேஷம்) என்ற வார்த்தை பற்றி சொல்லுங்களேன்.//


ஒளவையாரின் 'நல்வழி"யை படித்தால் சில விஷயங்கள் நமக்குப் புரிய வரக்கூடும்.

அந்த காலத்தில் குற்றத்திற்கு தண்டனைகள் மிக கடுமையாக இருந்தன போலும். அரசன் விதிக்கும் கை வெட்டும், கால வெட்டும், கழு ஏற்றும் தண்டனைகள் போக, புத்தி சொல்லும் புலவர்கள் கூறும் தண்டனைகள் மிக கடுமையாக இருந்துள்ளன.

இந்த பாடலை பாருங்கள்.

"வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே ’சேடன்’ குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை."

எளிய பாடல்தான். விளக்கம் அநேகமாகப் புரிந்திருக்கும். புரியாதவர்களுக்கு நான் புரிந்து கொண்டுள்ள வகையில் சொல்லி விடுகிறேன்.

"வீட்டில் பேய் பிசாசு வந்து சேரும், அவலட்சணமான, துரதிஷ்டமான வேள்ளெருக்கம்பூ, சப்பாத்தி கள்ளி படர்ந்து வளரும், துர் தேவதையாக அறியப்படும் மூதேவி வந்து வாழ்வாள், பாம்புகள் வந்து குடி புகுந்து விடும்"

இத்தகைய கொடும் தண்டனைகள் யார் வீட்டில் நிகழும்????

நீதி மன்றத்தில் பொய் சொல்பவர்கள் வீட்டில்தான், இப்படி சகல தண்டனைகள் நிகழும் என்று நம் ஒளவை மூதாட்டி எச்சரிக்கிறார்.

நீதி மன்றத்தில் பொய் சொல்வதும், பொய் சாட்சி சொல்வதும் எத்தனை பெரிய பாவம் என்பதையும் நீதி மன்றத்தின் மாட்சியையும் இந்த பாடல் உணர்த்துகிறது.

இதிலிருந்து ’சேடன்’ என்ற தமிழ்ச்சொல்லுக்கு ’பாம்பு’ என்று அர்த்தம் புரிந்துகொள்ள முடிகிறது. இதையே தான் வடமொழியில் சேஷன் என்கிறார்கள்.

பாற்கடலில் பாம்பின் மேல் பள்ளிக்கொண்டுள்ள மஹா விஷ்ணுவின் படுக்கையான பாம்பு ’ஆதிசேஷன்’ என்றே அழைக்கப்படுகிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வடமொழிச் சொல்லான ’சேஷம்’ என்றால் ’மிச்சம்’ என்றே பொருள்.

பித்ருக்களின் (முன்னோர்களில்) நினைவுநாளில் செய்யும் சமையல் பதார்த்தங்களை ஸ்ராத்த சேஷம் (திவச மிச்சம்) எனச் சொல்லப்படுவது உண்டு.

பித்ருக்களாக நம்மால் வரிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு முடித்தபின், இதனை அன்றைய தினம் காக்கைகளுக்கு மட்டுமே அவசியமாகக் கொடுக்க வேண்டும்.

காக்கைகளுக்குக் கொடுத்தபின் இவற்றை ஸ்ராத்தம் செய்யும் கர்தாவும், அவரின் நெருங்கிய உறவினர்களும், தாயாதி பங்காளி ஆகியோர்களும் மட்டுமே சாப்பிட வேண்டும். வேறு யாருக்குமே இவற்றை சாப்பிடக் கொடுக்கக்கூடாது.

சாப்பிட்ட இலைகள் உள்பட, ஒருவேளை மிச்சம் மீதி உணவு வகைகள் இருந்தால் மறுநாள் பசு மாட்டுக்கு மட்டுமே கொடுக்கலாம், பசு மாடும் கிடைக்காவிட்டால் அவற்றை ஓடும் நதியிலோ, குளத்திலோ, வாய்க்காலிலோ, கடலிலோ போட்டு விடலாம் என்பது ஐதீகம்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

இளங்கோவடிகளார் திருவனந்தபுரம் என்று ஊர்ப் பெயரைக் குறிப்பிடவில்லை.

'ஆடக மாடத்து அறிதுயில் அமர்ததோன்
சேடம் கொண்டு' என்பது தான் சிலம்பு வரிகள். இருந்தாலும் சேர நாடு என்பதினால் நாமே வரவழைத்துக் கொண்ட பொருள் கொண்டு எழுதியது தான் திருவனநதபுரம் என்பது.

ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும்---

1. திருவனநதபுரம் = திரு அனந்த புரம். அனந்தனின் ஊர் என்று கொண்டு தான் திருவனந்தபுரம் என்றே அழைக்கப்படுகிறது.

2. ஸ்ரீ சடகோபரின் (நம்மாழ்வார்) காலம் கி.பி. 10-ம் நூற்றாண்டு என்று கொண்டாலும் அதற்கு முன்னாலேயே அனந்தனின் புரமாக அது இருந்திருக்கிறது. ஆழ்வார்களில் கடைசி ஆழ்வார் இவரே. அந்தமிழ் புகழ் அனந்தபுரம் என்பது நம்மாழ்வார் வாக்கு. அனந்தபுர நகர் ஆதி அம்மான் என்றும் அவர் குறிப்பிடுவார். அவர் குறிப்பிடும் 'ஆதி' என்ற பொருள் பொதிந்த உச்சரிப்பு இந்தக் கோயிலின் பழமையைச் சுட்டிக்காட்ட வந்தது.
இவருக்கு முன்னால் திருவனந்தபுரத்து பள்ளி கொண்ட பெருமாளைப் பற்றி யாராவது குறிப்பிட்டிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

3. பாண்டிய மன்னர்களுக்கான 'வழுதி'போல சேரர் மன்னர்களுக்கானது 'சேரமான்'.
சேரமான் பெருமான் நாயனார் (கழறிற்று அறிவார்) என்று பெரிய புராணத்தில் ஒரு நாயனார் கதை கூட உண்டு. பெருமான் (அ) பெருமாள் என்று அழைக்கப்படுவதிலும் மயக்கம் உண்டு. திருவனந்தபுரத்து அரங்கன் கோயிலுக்கு சேரமான் பெருமாள் (பாஸ்க்ர ரவிவர்மன்) என்ற அரசர் திருப்பணி செய்ததாக அறிகிறோம். திருப்பணி என்று தெரிவதால் அதற்கு முன்னாலேயே இருந்த பழுதுபட்ட திருக்கோயிலை செப்பனிட்டுப் புதுப்பித்ததாகவும் கொள்ளலாம்.

4. தொடர்ந்து வந்த பல சேர அரசர்கள் இக்கோயிலுக்கு திருப்பணி செய்திருக்கிறார்கள்.

இந்தக் கோயில் நீண்ட நெடிய வ்ரலாற்றைக் கொண்டதாகவும் அது பற்றி சுவடிகளாக (சுருணை) நிறைய குறிப்புகள உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இக்கோயில் பற்றி வரலாற்றுப் பிழையின்றி அறுதியிட்டுச் சொல்ல அதற்கான அர்ப்பணிப்பு உணர்வு கள ஆயுவார்களாலேயே முடியும். இங்கொன்றும் அங்கொன்றுமாக நாம் வாசித்து அறிந்தவைகளைத் தாண்டிய வரலாற்று உண்மைகள் இருக்கலாம் என்றே தெரிகிறது.

ஒரு ஆய்வுக்கான கருத்துக்களை துவக்கி வைத்தமைக்கு மிக்க நன்றி, ஐயா!

ஸ்ரீராம். said...

தமிழை ரசித்தேன்.

நெல்லைத் தமிழன் அனைத்து தளங்களிலும் கலக்குகிறார்.

ஸ்ரீராம். said...

ஆதிசேஷனையும் நாம் ஆதிசேடன் என்று சொல்வது உண்டு.

சேடன் என்கிற சொல்லுக்கு அகராதியில் தம்பி என்கிற பொருள் கூட உண்டு.நண்பன், அடிமை என்கிற பொருள் எல்லாம்தகூடத் தருகிறது அகராதி. நண்பன் என்றால் எந்தவகை நண்பன்? தலைவனின் காதலுக்கு உதவுபவன்!

பாடி னருவிப் பயங்கெழு மாமலை
மாட நகரத்து வாயிலுங் கோயிலு
மாடம் பலமு மரங்கமுஞ் சாலையுஞ்
சேடனைக் காணிய சென்றுதொக் கதுவே

என்கிறது சீவக சிந்தாமணி.சேடன் என்று குறிப்பிடப்படுவது சீவகனை.

நெல்லைத் தமிழன் said...

ஒரு அரசன், அண்டை நாடுகளை நோக்கி படை செலுத்துகிறான் என்பது புரிந்துகொள்ளக்கூடியது. வட நாடு நோக்கி வாளைச் செலுத்துகிறான் என்பது மிகுந்த ஆச்சர்யம் தரக்கூடிய விஷயம். தாய் நாட்டைக் காப்பதற்கான அடிப்படை வசதிகளையும் படைகளையும் விட்டுவிட்டு, தன்னுடனேயே ஒரு படையைக் கொண்டு சென்று (அதற்கான அடிப்படை வசதிகளையும் வழி எங்கிலும் தேடிக்கொள்ளவேண்டும். வழியில் எந்த நட்பு நாடுகளும் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு-மற்ற அரசர்களுக்கு இந்தப் படைகளுக்கான உணவைக் கொடுப்பதைத் தவிர வேறு வேலை இல்லையா? அல்லது ஒருவேளை, படையெடுப்பதன் உத்தம காரணத்தை அறிந்து அவர்கள் வசதி செய்துதருகிறார்களா... யாத்ரீகர்களுக்கு உதவுகிற மாதிரி) அசாத்தியமான காரியத்தைச் செய்ய இத்தகைய அரசர்களைத் தூண்டுவது எது? சோழ அரசர்கள், கடாரம் போன்ற அயல் நாடுகளுக்கு மரக்கலங்களை நகர்த்திச் சென்று போர் புரிந்து, வென்று.... அப்பப்பா அவர்களுக்கு இருந்த மனோ தைரியமும், தொலை நோக்கும்தான் எப்படிப்பட்டது...

ஜீவி சாரின் விளக்கம் சரியாகத் தோன்றியது. சேர தேசங்களில் பிரசாதமாக உணவு வழங்கப்படுவதில்லை. துளசியும் சந்தனமும்தான் வழங்கப்பெறும். அவர்கள் இப்போது வழங்குவதும் தொன்றுதொட்டு வரும் வழக்கம். நம்மைப்போல் அவர்கள் வழக்கத்தை மாற்றுவதில்லை. கோவில் அருகில் அரசன் இருந்திருக்க வாய்ப்பில்லை. அளித்த சந்தனப் பிரசாதத்தைப் புயங்களில் அணிந்துகொண்டான் என்பது சரியாகத் தெரிகிறது.

"பனம்பூ மாலையும் " - பனை பொதுவாக குமரி, நாஞ்சில் நாடுகளுக்கு உரியது. திருவட்டாறு ('நாஞ்சில் நாடு) வைணவ திவ்யதேசம். இங்கு இருக்கும் அனந்தன் மேல் பள்ளி கொண்ட நிலையில் இருக்கும் விஷ்ணு, திருவனந்தபுரத்திற்கும் அண்ணன் (அதாவது முற்காலத்தையது) எனப்படுபவர். பெரிய வைணவக் கோவில்.

எனக்கு பள்ளி நாட்களில் படித்த 'மணமகனே பிணமகனா மணவறையே பிணவறையாய்......... காலத்தின் வரும் பயனை ... ஒன்றுமிலர்' என்ற முழுப் பாடலே நினைவுக்கு வருகிறது. அதில் உள்ள ஓசை நயத்தினால் பாடல் மனதில் பதிந்துவிட்டது. (அப்போதெல்லாம், தமிழாசிரியர், ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண் என்றால், பாடலையும் சேர்த்து எழுதினால் முழு 2 மதிப்பெண்களோ அல்லது 1 அதிகமாகவோ வழங்குவார்கள். அதன் காரணம், தமிழ்ப்பாடலையும் மனனம் செய்யவேண்டும் என்ற நல்லெண்ணம்தான்) அது எதில் வருகிறது என்பதும் அறிய ஆசை (சம்பந்தமேயில்லாமல் இருக்கிறதோ?)

ஜீவி said...

@ கோமதி அரசு
@ வை.கோ.

ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் கொண்ட சிறப்பான மொழி தமிழ் மொழி. அதனால் ஒரு சொல்லுக்கான பல பொருட்களில் நாம் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு எந்தப் பொருள் பொருந்தி வருகிறது என்று பார்க்க வேண்டும்.

செங்குட்டுவன் புஜத்தில் பெருமாளின் சேடத்தைட் தாங்கினான் என்று வருவதால் இங்கு துளசியையும் சந்தனத்தையும் (பிரசாதம்) தாங்கினான என்று பொருள் கொள்வதே சரியாகத் தோன்றுகிறது.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ வை.கோ (3)

பித்ரு சேஷம் என்பதும் நினைவுக்கு வந்தது தான். பித்ருக்கள் சாப்பிட்டதின் மிச்சம்.

பித்ரு சேஷத்தை மாடுகளுக்கோ மற்றும் நீங்கள் சொல்லிய முறைப்படி டிஸ்போஸ் செய்ய முடியவில்லை என்றால் வீட்டில் தோட்டம் மாதிரி ஒரு காலி இடம் இருந்தால் அங்கு சின்னதாக ஒரு குழி இதற்காகவே இருக்கும். அதில் போட்டு மூடி விடுவார்கள். வருஷத்திற்கு நான்கு ஐந்து திவசங்கள் பண்ணுபவர்கள் முறை இது.

சென்னை போன்ற இடங்களில் அப்பார்ட்னெட்டுகளில் பண்ண வசதி இல்லாதவர்கள் இதற்காகவெ அமைந்திருக்கும் வெளியிடங்களில் சிரார்தம் செய்கிறார்கள் தனி மடி சமையல், தனி அறை, கேஸ் கனெக்ஷன், கால அலம்ப குழாய், தனி டாய்லெட், பிண்டங்களை காக்காய்க்கு வைக்க மொட்டை மாடி கைப்பிடிச் சுவரில் பொருத்தப்பட்ட மரத்தட்டுகள் என்று எல்லா வசதிகளும் அவ்விடங்களில் இருந்தும், பித்ரு ஷேஷத்தை டிஸ்போஸ் பண்ண வழியில்லை ஒரு மூட்டையாகக் கட்டி குப்பைத் தொட்டியில் தான் போடுகிறார்கள். பஷ்ஷணங்களைப் பொறுத்த மட்டில் எல்லாவற்றையும் பிளாஸ்டிக் பையில் தனித்தனியாக வைத்து கர்த்தா மற்றும் அவர் குடும்பத்தினரின் இரவு பலகாரத்திற்காக கொடுத்து விடுவார்கள். எள்ளுருண்டை பேரன் சாப்பிட்டால் விசேஷமாயிற்றே!

ஜீவி said...

@ GMB

தமிழை ரசிப்பதே ஆழ்ந்த கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ரசிப்பது தானே, ஜிஎம்பீ ஐயா! கோயில் பிர்சாதங்களில் கேரள வழக்கமும், திருவனாந்தபுரம் கோயில் வர்லாறு பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பகிர்ந்து கொள்ளத் தானே ஐயா, பதிவுகள்?..

இங்கு சேடம் என்பது பிரசாதம் என்றால் செங்குட்டுவன் தன் தோளில் தாங்கியது பற்றி உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள்லாமே? வருகைக்கு நன்றி, ஐயா!

ஜீவி said...

@ GMB

நெல்லைத்தமிழன் அவர்கள் திருவட்டாறு வைணவக் கோயில் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். அங்கும் பள்ளி கொண்ட பெருமாள் தான். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலை விட பழைமையானது என்கிறார். ஒரு கால அந்தக் கோயிலிலிருந்து மன்னன் குட்டுவனுக்குப் பிரசாதம் வந்திருக்குமோ?.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?..

உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன, ஜிஎம்பீ ஐயா!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நெல்லைத் தமிழன் ஒரு பதிவர் நட்பாகக் கிடைக்க என்ன தவம் செய்தனமோ?.. என்னைப் போலவே விரிவாக அவர் பின்னூட்டம் போடுவது எனக்குப் பிடித்திருக்கிறது. எதையும் வாசித்து விட்டுப் போவதில் பிரயோசன் இல்லை. நீண்ட கருத்துப் பரிமாற்றங்களினால் தான் நிறையத் தெரிந்து கொள்கிறோம்.

நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு திருவனந்தபுரம் பெருமாள் கோயில் எழுப்பப்பட காலம் குறித்து சந்தேகம். அந்த சந்தேகம் என் சந்தேகமும் ஆகி அந்தக் கோயில் வரலாற்றைப் பற்றி படிக்க வைத்தது.

அடுத்து சேஷம் பற்றி மிஞ்சின பிரசாதம் என்கிற பொருளில் நெல்லைத் தமிழன் பின்னூட்டம் போட, உண்ணும் பிரசாக்தத்தைத் தோளில் தாங்குவது எப்படி என்ற சந்தேகம் எழுந்து சிந்தையில் சந்தனமும், துளசியும் (நாம் வீபூதிப் பிரசாதம் என்று சொல்வதால்) விடையாகக் கிடைத்தது.

அடித்து நெல்லைத் தமிழன் சொல்லிய திருவட்டாறு கோயில் பற்றி இப்பொழுது விவரங்கள் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

தொடர்ந்த பகிர்தல்களால் எவ்வளவு விஷயத் தெளிவுகள் கிடைக்கிறது, பாருங்கள்.

சேட்டன் என்றால் தமிழில் மூத்தவனாம். (மலையாளத்தில்?..)

சின்ன சின்ன சொல் ஆராய்ச்சிகளுக்கு நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

மணமகனே பிணமகனாய் மணப்பறையே பிணப்பறையாய்
அணியிழையார் வாழ்த்தொலி*போ யழுகையொலி யாய்க்கழியக்
கணமதனிற் பிறந்திறுமிக் காயத்தின் வரும்பயனை
உணர்வுடையார் பெறுவருணர் வொன்றுமிலார்க் கொன்றுமிலை.

-- நிலையாமையை பற்றிச் சொல்லும் இந்தப் பாடலா, நெல்லைத்தமிழன்?

திருவிளையாடற் புராணமோ?

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//சேர தேசங்களில் பிரசாதமாக உணவு வழங்கப்படுவதில்லை. துளசியும் சந்தனமும்தான்..//

மடப்பள்ளி உண்டு தானே?..

வை.கோபாலகிருஷ்ணன் said...

வீட்டில் நாம் சமைப்பதோ, கோயில் மடப்பள்ளிகளில் சமைப்பதோ முதலில் ’சாதம்’ என்ற பெயரைப் பெறுகிறது.

அதனை பகவானுக்கு நைவேத்யம் செய்து விட்டால் (அதாவது படையல் நடத்தி விட்டால்) அதன் பெயர் உடனடியாகப் ’பிரஸாதம்’ என்று ஆகிப் போய் விடுகிறது.

பிரஸாதம் என்றாகிப்போனதும் அதனை யாரும் தனக்கே என்று உரிமை கொண்டாட முடியாது. பகவானுக்குப் படைக்கப்பட்ட அது COMMON PROPERTY ஆகிவிடுகிறது.

அதனை வாங்கிக்கொண்ட ஒருவரே, உடனடியாக வழித்து விழுங்கிடக்கூடாது. பக்கத்தில் பிரஸாதம் கிடைக்காமல் நிற்கும் ஒவ்வொருவருக்கும் (அட்லீஸ்ட் ஒரு நான்கு பேர்களுக்காவது), அதில் ஒரு துளியாவது பகிர்ந்தளித்துச் சாப்பிட வேண்டும்.

இது பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், சுண்டல், அபிஷேகப்பால், பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம், சந்தனம், தாயார் கோயில்களில் தரப்படும் அரைத்த மஞ்சள் போன்ற அனைத்துக்குமே பொருந்துவதாகும்.

அந்தப் பிரஸாதத்தைப் பெற்றுவரும் நபரான யாரிடமும், யாரும் கையேந்தி கொஞ்சம் வாங்கிக்கொள்ளவும், எல்லாவிதமான உரிமைகளும் உண்டு.

நெல்லைத் தமிழன் said...

ஜீவி சார்... உங்கள் இடுகையும், அதன் பின்னூட்டங்களும் உள்வாங்குவதற்கும், அதனைப்பற்றிச் சிந்திப்பதற்கும், படித்த விஷயங்களை மீண்டும் refer பண்ணுவதற்கும் ஏதுவாக அமைகின்றன. ஒன்றைத் தொட்டால் அது மற்றொன்றிர்க்கு என்று தொடர் சங்கிலியாக ஒவ்வொன்றும் இழுத்துச் செல்கின்றன. Time well spent.

"சேட்டன் என்றால் தமிழில் மூத்தவனாம்" = தமிழ் நிறைய வார்த்தைகளைப் பயன்பாடில்லாததால் இழந்துவிட்டது. தமிழிலிருந்து கிளைத்த மலையாளம் அந்த வார்த்தைகளை உள்வாங்கி உபயோகப்படுத்துகிறது. (மலையாளம், தமிழ் மற்றும் வடமொழியின் கலவை என்பதை அறிவீர்கள். இதைத் தவிர பலமொழி வார்த்தைகளும் கலந்திருக்கலாம், பாயசத்தில் முந்திரி போன்று. பெரும்பான்மை வடமொழி+தமிழ்). தமிழில் சேட்டன் என்பது உபயோகப்படுத்தப்படுவதில்லை. 'ஜேஷ்டன்' என்பது வடமொழி. திருமண மற்றும் விசேடப் பத்திரிகைகளில், 'ஜேஷ்ட குமாரத்தி', 'கனிஷ்ட குமாரன்' என்ற சொல்லாடல்களைப் பார்த்திருக்கலாம். மூத்தவன், இளையவன் என்பதைக் குறிக்கிறது. அதனை, (ஜேஷ்டனை) சேட்டன் என்று தமிழ்ப்படுத்தி நான் பார்த்ததில்லை. ஆனால், மலையாளத்தில் 'சேட்டன்' என்பது அண்ணனைக் குறிக்கப் பயன்படுகிறது. அவர்கள் விளிப்பதே, 'சேட்டா... பற' ('அண்ணா... சொல்லு'). அப்படின்னா, முற்காலத்தில் நாம் 'சேட்டன்' என்று உபயோகப்படுத்திக்கொண்டிருந்தோம் என்று தோன்றுகிறது.

மலையாளத்தில், 'புலரி' என்ற வார்த்தை பழக்கத்தில் உண்டு. தமிழில் உபயோகப்படுத்திய வார்த்தை. இப்போதும் 'புலர்ந்தது' என்று அபூர்வமாக உபயோகப்படுத்துகிறோம் (திவ்யப்ப்ரபந்த வரிகள்... போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி. அதாவது இரவு மறைந்தது. பொழுது விடிந்தது). அதேபோல் நாம் உபயோகப்படுத்தும், 'பொழுது சாயும் காலம்' (அதாவது சாயங்காலம்), மலையாளத்தில் 'வைகுன் நேரம்'.

திருமாலை (திவ்யப்ப்ரபந்தம்)யில், 'பாயும் நீர் அரங்கம் தன்னில் பாம்பணைப் பள்ளி கொண்ட........... தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும் ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே" என்று வரும். அதில் 'ஆயசீர் முடியும் தேசும்' என்பதில், தேசு என்பது 'தேஜஸ்' என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.

ஆரம்பிச்ச இடத்துக்கு வரேன். இதைத் தவிர, 'சேடன்' என்று வார்த்தை நான் படித்ததில்லை. ஆனால், 'சேடி' என்பது தோழியைக் குறிக்கும். அதனால், 'சேடன்' என்பது தோழனைக் குறிக்கும் என்று கொள்ளலாம்.

திருவனந்தபுரம் மூலவர் சன்னிதியும் ஒரு காலத்தில் முழுவதுமாக எரிந்து திரும்பக் கட்டப்பெற்றது என்று படித்துள்ளேன். பூலோக வைகுந்தம் திருவரங்கக் கோவிலும், இதற்கு முன்பு காவிரி வெள்ளப்பெருக்கில் அழிந்துபட்டு திரும்ப சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தற்போதைய இடத்தில் கட்டப்பெற்றது என்றும் படித்திருக்கிறேன். ஆனால் ராமானுசர் காலத்திற்கு (1000-1500 ஆண்டுகளுக்கு மேலாக) முன்பிருந்தே தற்போதைய இடத்திலேயே இருந்திருக்கவேண்டும்.

"பிரசாதம்" என்று சொல்லும்போது ஒன்று நினைவுக்கு வருகிறது. 'பால் பாயசம்' என்பதுதான் பல வைணவக் கோவில்களில் (சேர நாட்டில்) வழங்கப்படுகிறது. இதற்கு, வைணவக் கோவில்களில் மூலவர், கிருஷ்ணன் என்பதனாலும் இருக்கலாம். இதைத் தவிர, பிரசாதமாக சந்தனத்தையும் துளசியையும் மட்டும்தான் தருவார்கள் என்று நினைக்கிறேன். அதையும், நம்பூதிரிகள், கிட்டத்தட்ட எறிவதுபோல் (மற்றவர்கள் மீது படாமல் இருக்க) தருவார்கள். (தவறாகச் சொல்லவில்லை. அது அவர்கள் பழக்கம்). நம்ம ஊர் கோவிலைப்போல், அங்கு பக்தர்களைப் பணத்தைக்கொண்டு பிரிப்பதில்லை. (ஸ்பெஷல் வரிசை என்றெல்லாம் கிடையாது). நம்ம ஊரில் கோவிலுக்குத் தகுந்தவாறு வகை வகையான பிரசாதம் அங்கு இல்லை என்றே நினைக்கிறேன்.

இன்னும் 'சிராத்தம்' டாபிக்கைத் தொட்டால் நீண்டுவிடும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஜேஷ்ட குமாரன் என்றால், ஒருவர் பெற்றுப்போட்ட பல பிள்ளைகளில், முதன் முதலில் பிறந்துள்ள மூத்த பிள்ளை என்று அர்த்தம். அதேபோல ஜேஷ்ட குமாரத்தி என்றால், பெண் குழந்தைகளில் முதன் முதலாக மூத்தவளாகப் பிறந்துள்ள பெண் என்று அர்த்தம்.

அதன் பிறகு பிறந்துள்ள அனைவருமே, 'கனிஷ்ட குமாரன்' அல்லது 'கனிஷ்ட குமாரி' என்றே சொல்லப்படுவது வழக்கம்.

’ஜேஷ்டப் ப்ராதா பிதுர் ஸமஹா !’ எனவும் சொல்லுவார்கள். அதாவது மூத்த அண்ணன் அப்பாவுக்கு சமமானவன் என்று அர்த்தமாகும்.

ஓர் 60 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், ஒவ்வொருவருக்கும் டஜன் கணக்கில் குழந்தைகள் பிறந்து வந்தன. மூத்த பிள்ளைக்கும் கடைசி பிள்ளைக்கும் ஒரு 25 வருட இடைவெளிகூட இருப்பதுண்டு. அம்மாவும் மகளும் சேர்ந்தே பிரஸவ ஆஸ்பத்தரிகளில், பிரஸவித்து அடுத்தடுத்த கட்டில்களில் படுத்து இருப்பது சர்வ சாதாரண விஷயங்களாகும்.

07.02.2017 ஒருவருக்கும், இன்று 09.02.2017 ஒருவருக்கும் சஷ்டியப்தபூர்த்தி விழா இங்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள S.R.கல்யாண மண்டபத்தில் நடந்தன. இவை இருவரும் என் நண்பர்கள். அதனால் போய் வந்தேன். 7th நடந்தது மாமாவுக்கு, இன்று 9th நடந்துள்ளது அவரின் சொந்த அக்கா பிள்ளையான மறுமானுக்கு. தாய்க்கு பிரஸவம் ஆன ஓரிரு நாளில் மகளுக்கும் பிரஸவம் நடந்துள்ளது என்பதை இதன் மூலம் மிகச் சுலபமாக நாம் உணரலாம்.

இந்த ’ஜேஷ்டன்’ என்ற சொல் வேறு அந்த ’சேட்டன்’ என்ற சொல் வேறு. இதையும் அதையும் குழப்பிக்கொள்ளவே கூடாது.

தூய தமிழில் கொண்டு வருவதாக நினைத்து ’ஜேஷ்டன்’ -ஐ ’சேட்டன்’ ஆக்கிவிட்டால், அவன் சேட்டைகள் செய்யும் பையன் என்ற அர்த்தமாகிவிடும். அதாவது இப்படியெல்லாம் தமிழாக்கம் செய்வதால் ’ஜேஷ்டன்’ என்பவன் நல்லவனாகவே இருப்பினும் ’துஷ்டன்’ துஷ்டத்தனங்கள் செய்யக்கூடியவன் என்று அர்த்தம் .. அனர்த்தமாகவும் வாய்ப்பு உள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

’சேட்டைக்காரன்’ என்ற பெயரிலேயே ஒரு பிரபல நகைச்சுவைப் பதிவர் நம் தமிழ் பதிவுலகில் இருக்கிறார் என்பதும் இங்கு நான் கொடுக்க நினைக்கும் ஓர் கூடுதல் தகவலாகும்.

அவர் என் வீட்டுக்கே வந்து என்னை சந்தித்துச் சென்றுள்ளார்.

இதோ அந்த இனிய சந்திப்புக்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2013/10/60.html

நெல்லைத் தமிழன் said...

கோபு சார்... உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. சேட்டனை ஆராய்வது என்று முடிவு செய்துவிட்டேன்.

சேஷ்டை என்பது வடமொழி. அதன் தமிழ் சேட்டை. குறும்புத்தனம் பண்ணுவது என்பது.

துஷ்டன் - வடமொழி. தமிழில் துட்டன். துட்ட நிக்ரஹ சிட்ட பரிபாலன

ஜேஷ்டன் - முதல்வன். நீங்கள் கூறிய பொருள் சரிதான். ஜேஷ்டராஜன் என்பது விநாயகரின் திருநாமம். அனைத்துக்கும் முதல்வன். இதைத் தமிழ்ப்படுத்தினால் சேட்டன் என்று வராதோ?

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

'நெல்லைத் தமிழன் said...

//கோபு சார்... உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. சேட்டனை ஆராய்வது என்று முடிவு செய்துவிட்டேன்.//

நீங்கள் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்து கொள்ளுங்கள்.

இருப்பினும் ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்களை எங்கெங்கெல்லாம் பயன் படுத்த முடியுமோ அங்கெங்ல்லாம் பயன் படுத்தினால் மட்டுமே, அது ருசிப்படும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

இல்லாவிட்டால் ......

-=-=-

ஜீவி ஸார் ...... சீவி சார் ...... ஆகிவிடுவார்.

[ அதாவது ஹிந்தியில் ’சார்’ என்றால் நான்கு என்பதால் அவர் நான்கு முறை சீவப்பட்டது போல ஆகிவிடுவார். சீவப்பட்டது என்றால் சீப்பால் அல்ல ..... கத்தியால் :) ]

-=-=-

ஸ்வாமிக்கு ’புஷ்பத்தால்’ அர்ச்சனை என்று சொல்வது எவ்வளவு அழகாக உள்ளது ! அதை புட்டமாக்கி விடாதீர்கள். பிறகு அதன் மகத்துவமே புட்டுக்கொண்டு விடும்.

-=-=-

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!

என்றே சொல்லி வாருங்கள். போகும் வழிக்குப் புண்ணியம் கிடைக்கும்.

ஹரே என்பதை ’அரே’ என்றோ, ஹரி என்பதை ‘அரி’ என்றோ சொன்னால் பிறகு நாம் எங்கெங்கோ அரிப்பெடுத்து அலைய வேண்டியதாகி விடும்.

-=-=-

க் + ஷ = ’க்ஷ’. இதைப் பயன் படுத்தினால் எப்போதும் க்ஷேமமாக இருப்பீர்கள்.

அந்தக் காலத்தில் கடிதங்கள் எழுதும்போது தலையில் பிள்ளையார் சுழியும், இடதுபுற ஓரம் ’க்ஷேமம்’ என்றும் போட்ட பிறகே கடிதம் எழுதுவது வழக்கம். அதை என்று நாம் நிறுத்தினோமோ அன்று முதல் நமக்கு க்ஷேமமும் குறைந்து விட்டது.

-=-=-

அதுபோல ஸ்ரீராமஜயத்தில் வரும் இந்த ‘ஸ்ரீ’ என்பது எனக்கு மிகவும் பிடித்தமான மிக அழகான எழுத்தாகும்.

உங்களைத் திங்கட்கிழமைகள் தோறும் பிரபலப்படுத்தி வரும் பதிவரின் பெயர் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ என்பதாகும். அவரை சீராம் என்று ஆக்கிவிடாதீர்கள். அது சீச்சீ என்று சீ-ப்-பா-க ஆகிவிடும்.

’ஸ்ரீ’ என்றால் மஹாலக்ஷ்மி என்றும் விஷம் என்றும் பல அர்த்தங்கள் உண்டு.

விஷம் உண்ட கழுத்தினை உடைய பரமேஸ்வரனுக்கு ’ஸ்ரீகண்டன்’ என்றே ஓர் பெயர் உண்டு.

இதில் ’ஸ்ரீ’ என்றால் விஷம் + ’கண்டம்’ என்றால் கழுத்து என்ற பொருள் வரும்.

-=-=-

பதிவர்களாகிய நாம் அனைவரும் மிகவும் ’ஸ்ரேயஸ்’ ஆக இருக்க வேண்டும்.

எனவே ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ஆகிய எழுத்துக்களை ஊனமாக்கித் துன்புறுத்தாமல் பிழைத்துப் போகட்டும் என அப்படியே விட்டுவிடுவோம். அப்படியே பயன் படுத்துவோம். ஏனெனில் இந்த உச்சரிப்புக்கெல்லாம் தூய தமிழில் சமமான எழுத்துக்களை நம்மால் கொண்டுவர இயலாது. கொண்டு வந்தாலும் அவை ருசிப்படாது.

-=-=-

இவ்வாறே சிறுவயதிலிருந்து பழகிப்போன என்னைப் போன்ற ஸீனியர் ஸிடிஸன்ஸ்களை உங்களால் மாற்றுவதோ, எங்களை நாங்களே இன்று திடீரென்று மாற்றிக் கொள்வதோ தேவையில்லாத + முடியாத விஷயமாகும்.

நெல்லைத் தமிழன் said...

உங்கள் பார்வையைப் புரிந்துகொள்கிறேன் கோபு சார். உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. (எனக்கு சிறிது மாறுபட்ட கருத்து இருந்தபோதும்)

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்
@ வை.கோ.

வடமொழியும் தமிழும் அக்கா--தங்கை மாதிரி.

அக்கா--தங்கை பழக்கத்தில் எப்படி ஒரு வாஞ்சையும் துள்ளலும் இருக்குமோ அப்படி ஒரு நெருக்கம் இரண்டு மொழிக்குமே உண்டு. இந்த நெருக்கம் தொல்காப்பியர் காலத்துக்கு முந்தைய பழமை கொண்டது.

வடமொழி எழுத்துக்களுடான உரைநடையை மணிப்பிரவாள நடை என்பர் அறிஞர்.

பாரதியும் ஜெயகாந்தனும் இப்படியான மணிப்பிரவாள நடைக்குப் பெயர் பெற்றவர்கள்.

ஜீவி said...

(தொடர்ச்சி)

காலப்போக்கில் வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் தமிழை எழுத வேண்டும் என்ற ஓர் ஆர்வம் துளிர்த்தது.

இப்படியான வடமொழி எழுத்துக்கள் இப்படியெல்லாம் திரிபு கொண்டு தமிழில் வரும் என்று தொல்காப்பியரே குறித்திருத்த வழிகாட்டலாய்க் கொண்டு சில வடமொழி எழுத்துகளுக்கு மாற்ற்ல்களாக தமிழ் எழுத்துக்களை அந்தந்த இடங்களில் இட்டு நிரப்புவது வழக்கமானது.


ஜீவி said...

(தொடர்ச்சி)

சில எழுத்துக்கள் தாம் தமிழ் அர்வலர் என்று சொல்லிக் கொண்டவரின் கண்களை உறுத்தியதே தவிர பல வடமொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்கள் போலவே தமிழோடு ஒன்றரக் கலந்து மக்கள் மொழியாய் ஆகிப்போனதை தவிர்க்க முடியாது போயிற்று.

(உதாரணம்) சிநேகிதி போன்ற சொற்கள்.

ஜீவி said...

(தொடர்ச்சி)

சில எழுத்துக்கள் தாம் தமிழ் அர்வலர் என்று சொல்லிக் கொண்டவரின் கண்களை உறுத்தியதே தவிர பல வடமொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்கள் போலவே தமிழோடு ஒன்றரக் கலந்து மக்கள் மொழியாய் ஆகிப்போனதை தவிர்க்க முடியாது போயிற்று.

(உதாரணம்) சிநேகிதி போன்ற சொற்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

'எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களும், ’பூவனம்’ திரு. ஜீவி ஸார் அவர்களும் தங்களின் வலைத்தளத்தின் வடிவமைப்பினை உடனடியாக மாற்றி, POP-UP WINDOWS என சொல்லப்படும் விதமாக மாற்றிக்கொண்டு, அதன்பிறகே பதிவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறான விவாதங்கள் சூடு பிடிக்கும்போது, பின்னூட்டத்தில் யார் யார் என்னென்ன கருத்துக்கள் சொன்னார்கள்? யார் யாருக்கு, யார் யார் என்ன பதில் எழுதியுள்ளார் என்பதே தெரியாமலும் புரியாமலும் மிகவும் அவஸ்தையாக உள்ளது.

மொத்தத்தில் ஹனுமார் வால் போல பின்னூட்டப்பகுதி நீண்டுகொண்டே போனாலும், அதில் எந்த ஒரு சுவாரஸ்யமுமே இல்லாமல் வழுவட்டையாகப் போய் விடுகின்றன.

சற்றே தாமதமாக வந்து இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் படிப்பவர்களுக்கு, இவ்வாறு கசா-முசாவென்று இருந்தால் அவை அலுத்து சலித்துப் போய்விடக்கூடும்.

பிறகு என்றைக்காவது ஒரு நாளைக்கு, இந்தப் பதிவினை வெளியிட்டவரே தன் பதிவினைப் படித்தாலும்கூட, வெறுத்துப்போகும் என்பது நிச்சயம்.

எனவே போர்க்கால நடவடிக்கைகள் போல எடுத்து உடனடியாக இவற்றில் கவனம் செலுத்திவிட்டு, பிறகு மட்டுமே பதிவுகள் வெளியிடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஜீவி said...

என்ன காரணத்தினாலோ இந்தத் தவிர்த்தல் வடமொழி எழுத்துக்கள் தாம் என்று ஆயிற்றே தவிர தமிழில் மற்ற மொழி வார்த்தைகள் புகுதல் கண்டு கொள்ளாமலேயே போயிற்று.

இப்படி கண்டு கொள்ளாமல் போனதில் ஆங்கிலம் தலையாய பங்கு வகிக்கிறது.

நிறைய ஆங்கில வார்த்தைகள் ரொம்பவும் இயல்பாக மக்கள் மொழியாக தமிழில் புகுந்து விட்டன.

க்யூ, பேங்க், பஸ் ஸ்டாண்ட், ரயில், கேட் போன்று சட்டென்று நினைவுக்கு வருபவை.

ஜீவி said...

நான் சொல்ல வருவது என்னவென்றால், வடமொழி எழுத்தைத் தவிர்த்து எழுத ஆர்வம் இருந்தால், பாஷை என்பதை பாசை என்று என்று எழுதாமல் மொழி என்று எழுதலாமே என்பது தான்.

விஷயம் என்பதை விடயம் என்றோ விதயம் என்றோ எழுதாமல் செய்தி என்று எழுதலாம்.

கஷடம் என்பதனை கட்டம் என்று எழுதாமல் துன்பம் என்று எழுதலாம்.

விஷயம் என்பதை விடயம் என்று எழுதினால் என்ன தப்பு என்ரு கேட்பது விதண்டாவாதம்.

இனிய இளநீர் இருக்க கோக் எதற்கு என்பது மாதிரி அழகிய தமிழ் சொல் இருக்க, எதற்கு அக்கா-தங்கையைப் பிரித்து மொழிச் சிதைவு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் கேள்வி;.

ஸ்ரீராம். said...

வைகோ ஸார்...

எங்கள் ப்ளாக்கிலும் சரி, பூவனத்திலும் சரி.. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லப்படும்போது யாருக்கு அந்த பதில் சொல்லப்படுகிறது என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டே பதில் சொல்லப் படுகிறது.

பாப் அப் விண்டோவாக இருந்தாலுமே சில நண்பர்கள் (நீங்கள் அல்ல வைகோ ஸார்.. நீங்கள் பின்னூட்ட ஸ்பெஷலிஸ்ட்களில் ஒருவர்) பெயர் சொல்லாமல் பதில் தரும்போது அவரவர்கள் (அல்லது எனது) மெயில் பாக்ஸில் பதில்களை (நான்) படிக்கும்போது அந்த பதில் யாருக்கு என்று தெரியாமல் போகும்! அதைச் சில இடங்களில் குறிப்பிட்டும் இருக்கிறேன்.

Unknown said...

அடடா அருமையாக உள்ளது.. அதைவிட பின்னூட்டங்கள் அருமையோ அருமை..தங் தங்க பதிவை விட பின்னூட்டங்களில் அதிகம் கற்றுக்கொள்ளலாம் போல தொடரட்டும் உங்கள் சேவை..

Related Posts with Thumbnails