Saturday, September 30, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி--8

இதற்கு முன் பகுதி:  http://jeeveesblog.blogspot.in


"கமலி..." என்று அவள் பக்கம் பதில் வராது  இருக்கவே மறுபடியும் மொபைலில் அவன்  குரல் மிழற்றியது.

"உம்.. சொல்லுங்க.." என்றாள் கமலி ஸ்வாதீனமாக.

"நான் உன்னை  டிஸ்ட்ரப் பண்ணலேன்னு  நினைக்கிறேன்.  எழுந்திட்டே, இல்லை?"

மோகனா பேசறதுன்னு அவள் ஆச்சரியப்பட்டாள். இன்னொருத்தருடைய செளகரிய--அசெளகரியங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிற அக்கறையை முதல் தடவையாக அவனிடத்தில் பார்த்ததில்  ஆச்சரியம்.

"எப்பவோ எழுந்திட்டேன்.  ஆபீஸ் கிளம்பணும் இல்லியா?..  குளிக்கப் போகலாம்ன்னு இருந்தேன்.."

"அதுக்குத் தான் கூப்பிட்டேன்.. ஸாரி..  இன்னிக்கு ஆபிஸூக்கு  லீவு  போட முடியுமா?.."

அவளுக்கு எரிச்சலாக இருந்தது.  இருந்தாலும் அடக்கிக் கொண்டு "என்ன விஷயம்?" என்றாள்.

"முக்கியமான ஒரு விருந்தினரை நம்ம வீட்டுக்கு அழைச்சிண்டு வரேன்..  அவருக்கு மதியச் சாப்பாடு நம்ம வீட்லே தான்.   அதான்."

என்ன பதில்  சொல்லலாம் என்று கமலி ஒரு வினாடி யோசித்தாள்.  இவர் யாருக்கோ விருந்து கொடுக்கணும்ன்னா அதுக்கெல்லாம் ஆபிஸூக்கு லீவு போட முடியுமான்னு எரிச்சல் கூடியது.   வீட்டில் விருந்து கொடுக்கணும் என்பதினால் வீட்டுக்காரி தயவு வேண்டுகிறான் என்கிற போக்கில் எண்ணம் ஓடியது.

 'லீவு போடமுடியாத நிலைன்னு சொல்லிடலாமா?'  என்று  நினைத்தவள்,  அதற்கு மாறாக, "சரிங்க.." என்றாள்.  அவள் நினைப்புக்கு நேர் மாறாக மனதின் குரலாக அந்த 'சரிங்க' பதில் வந்த மாதிரி அவளுக்கு இருந்தது.

"குட்..  அப்ப லீவு போட்டுடறே, இல்லையா?" என்று நிச்சயம் பண்ணிக் கொள்கிற மாதிரி கேட்டவன், சட்டென்று, "தேங்க்ஸ்.. கமலி.." என்றான்.

"இதுக்கெல்லாம் எதுக்குங்க,  தேங்க்ஸ்?" என்று கமலி சொன்னாலும் அவன் தேங்க்ஸ்  சொன்னது தேனாக இனித்தது.

"அப்புறம் சொல்ல மறந்திட்டேனே.." என்றிழுத்தான் மோகன்.."சொல்ல மறந்திட்டேன்..  மத்தியான விருந்தில் பாயசம் இருக்கட்டும்.  நீ தக்காளி ரசம் வைத்தால் சூப்பரா இருக்கும்.  அதனாலே அது உண்டு.   அப்பளம், அப்புறம் குழம்பைத் தவிர மோர்க்குழம்பு  அடிஷனல்..  தொட்டுக்க காயோ  கூட்டோ எதுவோ ஒண்ணு. அதை உன் இஷ்டத்துக்கே விட்டுடறேன்.  கட்டித்தயிரே இருக்கட்டும். இருக்கவே இருக்கு சிப்ஸ்,  பிரிட்ஜில் வடு மாங்காய்.. இதெல்லாம்.. ம்.. போதும் தானே?"

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.  தனது எந்த பதிலும் அவனுடனான இணக்கத்திற்கு குறுக்கே வந்து விடக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தாள்.  சட்டென்று,  "சரிங்க..  நான்  எல்லாம் ஏற்பாடு பண்ணிடறேன்.." என்ற கமலி சொன்ன போது அவள் குரலில் சந்தோஷம் இருந்தது.  பல மாதங்கள் கழித்து புருஷனின் குரலில் இருந்த ஒரு நெருக்கத்தை அவள் உணர்ந்தாள்.  அந்த நெருக்கம் ஏதோ நல்லதுக்காகத் தான் இருப்பது போல மனப்புறா படபடத்தது.

"மறக்காம  இன்னிக்கு   லீவு  போட்டுடு.  ஆபிஸூக்கு   போனில்  கூப்பிட்டு சொல்லிடு.."

"சரிங்க..  எத்தனை மணிக்கு வந்திடுவீங்க?.."  என்று கேட்கும் பொழுதே அவன் சொன்னதற்கு 'சட்'டென்று தான் உடன்பட்டு விட்டது போன்ற ஒரு உணர்வு அவளில் படர்ந்தது.  கொஞ்சம் இழுத்தடித்து வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்கிற மாதிரி அவனுக்குப் போக்குக் காட்டி அந்த 'சரிங்க..'வைச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது..

"ஒண்ணு  ஒன்னரைக்கெல்லாம் வந்திடுவோம்.  சரியா?"

"சரிங்க.." என்று இப்பொழுது எந்தத் தயக்கமும் இல்லாமல் சொன்னவள்,     அவன் மொபைல் துண்டிப்பை நிச்சயப்படுத்திக் கொண்டு தன் மொபைலை ஆஃப் செய்து விட்டு மணியைப் பார்த்தாள்.   ஆறு.  ஆபிஸூக்கு போகவில்லை என்பதால் அவசரமில்லை.  பத்து மணிக்கு ஆரம்பித்தால்  கூட  சுடச்சுட எல்லாத்தையும் ரெடி பண்ணிடலாம்.

அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவன் கேட்பதற்கெல்லாம் உடன்படுகிற மாதிரி பதில் சொல்லி விடுகிறோமோ என்று பின்புத்தியாய் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.   இருந்தாலும் அவனே தனக்கு முக்கியத்துவம் கொடுத்துப்  பேசும் பொழுது தான் வேறொரு திசையில் முரண்டு பிடிக்காமல் இருப்பது தான் உபயோகப்படக் கூடிய புத்திசாலித்தனம் என்று தோன்றியது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்  கூட இதே மாதிரி தான் நடந்தது.  நெஞ்சில் சுட்ட அதன் வடு இன்னும் நினைவில் தேங்கியிருக்கிறது.  இருந்தும் மறுபடியும் அதே மாதிரியான  நடவடிக்கை ஒன்றுக்கு அவன் ஏற்பாடு பண்ண முனைகையில் ஏன்  தன்  எதிர்ப்பைக் காட்டாது ஒத்துக்  கொண்டோம் என்றும் தோன்றியது.

அதுவும் விடிகாலை நேரம் தான்.  அப்பவும் அவன் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து தான் கூப்பிட்டதும் நினைவிருக்கிறது.  இப்போ கூப்பிட்டானே. 'கமலி'ன்னு.. அதே மாதிரி தான்.  ஆனால் அந்தக் குரலில் உத்திரவு மாதிரி ஓர் ஆணவம் இருந்தது.  இப்போ கூப்பிட்ட மாதிரி ஒரு குழைதலும் நெகிழ்ச்சியும் இல்லை.

டிவியில்  திரைப்படம் பார்க்கிற மாதிரி அப்போ நடந்ததெல்லாம் நினைவில் ஓடியது.

இதே மாதிரி போனில் முன் அறிவிப்பு கொடுத்து விட்டுத் தான் அன்றைக்கும் மோகன் வந்திருந்தான்.   அவனோடு கூட வேனில் வந்திறங்கிய பட்டாளத்தைப் பார்த்த பொழுது தான் அவளுக்கு திகீர் என்றிருந்தது.

கிட்டதட்ட பத்து பன்னிரண்டு பெண்கள் தேறும்.  அந்த கூட்டத்தில் மோகன் ஒருவன் தான் ஆண்பிள்ளை.   அதுவும் பெண்களோடு பெண்களாக இடித்து நெருக்கிக் கொண்டு சட்டை கசங்கி  அவனும் அந்த வேனில் வந்ததை நினைத்துப்  பார்க்கவே அவளுக்கு கூச்சமாக இருந்தது.

ஹெவி மேக் அப்பில் அரைகுறை அலங்காரங்களுடன் சளசளத்துக் கொண்டு  அந்த பெண்கள் பட்டாளம் தன் வீட்டிற்குள் நுழைந்ததைப் பார்க்கவே அவளுக்கு 'ஒரு மாதிரி'  இருந்தது.

தெருவில் போவோர் வருவோர் அண்டை வீட்டுக்காரர் யாராவது பார்த்துத் தொலைத்து விடுவார்களோ என்று ஒருவித பதட்டமும் இருந்தது.  நல்லவேளை நடு மத்தியானம் ஆதலால்  தெருவே வெறிச்சோடிக் கிடந்தது.

சாவதானமாக  ஒருவருக்கொருவர்  சிரித்தும் சிணுங்கியும் அரட்டை அடித்த படி அவர்கள் வீட்டுக்குள் வந்தனர்.

அவர்கள் எல்லோரும் உள்ளே வந்ததும் வேன் டிரைவரிடம் என்னவோ சொல்லி விட்டு   மோகனும் உள்ளே வந்தான்.

இத்தனைப்  பெண்களைக் கூட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தவனுக்கு நடுக்கூடத்தில் வழிமறித்த மாதிரி நிற்கும் அவளைப் பார்த்தும் எந்தத் தயக்கமும் இல்லை;   அவளிடம் சொல்வதற்கும் எதுவும் இல்லாத மாதிரி அந்தப் பெண்கள் கூட்டத்தைப் பார்த்து,  "வாங்க..  மேலே போகலாம்..." என்று சொல்லியபடியே ஹாலில் உள்ளடங்கி இருந்த மாடிப்படிகளில் வேகமாக ஏறினான்.   "வாங்கடி, மேலே போகலாம்.." என்று அந்தப் பெண்களும் இவளைப் பார்த்தும் பார்க்காத மாதிரி படியேறத்  தொடங்கினர்.

இந்தப் பெண்ணிடம் எதுவும் பேசுவதற்கில்லை என்று அவர்களுக்கும் தோன்றியிருக்கும் என்ற நினைப்பு வந்தவுடன், தன்னை வீட்டு வேலைக்காரி என்று கூட வந்த அந்தப்  பெண்கள் நினைத்திருப்பார்கள் என்று தோன்றியது.

அவர்கள் மேலே போன கொஞ்ச நேரத்தில் வீடே சிரிப்பும் கும்மாளமுமாய் கலகலத்தது.   'ஜத்ஜத்'தென்று  குதி போடுகிற ஓசை வேறே இடையே. 

"இப்படியா, சார்?" என்று ஒரு பெண்ணின் குரல் ஸ்பஷ்டமாக கீழேயிருந்த அவளுக்குக் கேட்டது.

"இல்லே.. அப்படி.." என்று அவளைத் திருத்துகிற மாதிரி மோகனின் குரலும்.

"நான் செஞ்சு காட்டட்டுமா, சாரே.." குரலில் மலையாள மயக்கம்.

"அடுத்தாப்பலே நீ தான்.." என்று மோகன் சொன்னது கீழே நின்றிருந்த இவளுக்குக் கேட்டதும் ஆத்திரம் பற்றிக் கொண்டது.

'இது என்ன வீடா, இல்லை  கேளிக்கை விடுதியா?.. என்ன நினைத்திருக்கிறான் இவன்?' என்று திகுதிகுத்த எரிச்சலில்  விடுவிடுவென்று மாடிப்படிகளில் ஏறினாள் கமலி.
 

(தொடரும்)

Sunday, September 24, 2017

கமலி காத்திருக்கிறாள்....

பகுதி:  7

இதற்கு முன் பகுதி:   http://jeeveesblog.blogspot.in


விடிகாலையிலேயே கமலிக்கு விழிப்பு வந்து விட்டது.  படுக்கையின் தலைமாட்டில் ரேடியம் பளபளப்பில் மினுமினுத்த டைம்பீஸ் பார்த்து மணி நாலரை என்று தெரிந்து கொண்டாள்.

இப்பொழுது எழுந்தால் தான் சரியாக இருக்கும் என்ற நினைப்பை உதறித் தள்ளாமல் போர்வையை விலக்கிச் சட்டென்று எழுந்து விட்டாள்.

பாத்ரூம் போய் பல் விளக்கி வந்தாள்.  காஸ் அடுப்பைப் பற்ற வைத்து டிகாஷனுக்காக  நீரைக் கொதிக்க வைத்தாள்.   பில்ட்டரில் காபிப் பொடி போட்டு நீர் கொதித்ததும்  பில்ட்டரில் ஊற்றி மூடி வைத்தாள்.

மற்ற காலை வேலைகள் முடிவதற்கும் முதல் டிகாஷன் இறங்குவதற்கும் சரியாக  இருக்கும்.  இறங்கிய டிகாஷனை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி மறுபடியும் ஒரு அரைடம்பளர் நீரைக்  கொதித்து வந்ததும் அதையும் எடுத்து பில்டருக்கு மாற்றி விட்டாளானால்  அதுவும் இறங்கினதும் இரண்டையும் கலந்து கொஞ்சம் தாராளமாகவே காலைக்கு மாலைக்கு என்று இரண்டு வேளைகளுக்கும் டிகாஷன் சரியாக இருக்கும்.

வெளியே எங்கே போனாலும்  மோகன் மாலை ஐந்து மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுவான்.  அவன் வந்ததும் மீதமிருக்கும் டிகாஷனை உபயோகப்படுத்தி தானே தனக்கு காபி தயாரித்துக் கொள்வான்.

"கொடைக்கானலில் ஷூட்டிங்" என்று சொல்லி இரண்டு நாளுக்கு முன்னால் போனவன். அவ்வளவு தான் அவளுக்குத் தெரியும்..   பெயருக்குத் தான் அவள் கையிலும் ஒரு  மொபைல்.   ஒரு அவசரத்திற்கு அதுவும் கைவசம் இருக்கிறதே தவிர அவளும்  அடிக்கடி அதை உபயோகிப்பது இல்லை. அவன் அவளை மொபைலில் தொடர்ந்து கொண்டது ரொம்பவும் அபூர்வம்.  நிறையத் தடவைகள் பதினைந்து நாட்கள் இருபது நாட்கள் இப்படி ஷூட்டிங் என்று சொல்லி போயிருக்கிறான்.  எங்கேயிருக்கிறான், என்ன ஆனான் என்று தெரியாது.  ஒரு நாள் திடுதிப்பென்று வந்து தன் ரூமில் எதையாவது குடைந்து கொண்டிருப்பான்; இல்லை, யாருடனாவது தன் மொபைலில் பேசிக் கொண்டிருப்பான்.   அவன் வெளியூர் சென்று திரும்பி வராமல் நாலைந்து நாட்களுக்கு மேலாகி விட்டால் அவளுக்கு ஏற்பட்ட  கவலையில் ஆரம்பத்தில் அவனுடன் மொபைலில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறாள்.."எனக்கு இருக்கிற வேலை நெருக்கடியில் உன்னோட மொபைல் அழைப்பு ரொம்ப தொந்தரவா இருக்கு.   அதனாலே என்ன தலை போகிற அவசரம்ன்னாலும் நீ பேசாம இருக்கறதே எனக்குச் செய்யற பேருதவி" என்று முகத்தில் அடித்த மாதிரி அவன் ஒரு தடவை சொன்னதிலிருந்து அவளும் புரிந்து கொண்டு அவனைத் தொடர்பு கொள்வதை தவிர்த்து விட்டாள்.

வீட்டுச் சாவி அவனிடம் ஒன்று, இவளிடம் ஒன்று என்று இரண்டு உண்டு.  இவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு ஆபிஸூக்குக் கிளம்பி திரும்பி வரும் பொழுது வீட்டு வாசல் கதவு பூட்டாமல் சாத்தி இருந்தால் அவன் வீட்டில் இருக்கிறான் என்று அர்த்தம்.  இவள் வீட்டில் இருந்தால் கூட அவன் சொல்லாமல் கொள்ளாமல் வெளியே கிளம்பி நடு ராத்திரியில் வந்ததுண்டு.

கல்யாணமான புதிதில் மோகன் கமலியை  சுத்தி சுத்தி வந்து கொண்டிருந்தவன் தான்.   எது ஒன்றையும் கமலியிடம் கேட்டுக் கொண்டு அவள் அனுமதித்தால் தான் செய்யும் வழக்கம் கொண்டவன்.  அந்த மோகன் வேறு இந்த  மோகன் வேறு என்று இப்பொழுதெல்லாம் நடந்து கொள்கிறான்.

பெட்டி போல அழகான குட்டி வீடு.   வெளி மரக்கதவை ஒட்டி உள்ளடங்கிய
திண்ணை.   திண்ணையைத் தாண்டி கிரில் கதவு.  அவர்கள் வீட்டு வாசல் பக்கத்தை ஒட்டியவாறே கார்ப்பொரேஷன் விளக்கு பளீர் என்று வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது.  வாசல் கிரில் கதவைத் திறந்து சின்ன பக்கெட் நீரை தெளித்து  விட்டு உள்பக்கம் வந்தாள் கமலி.  ரேழியில் சின்ன மரப்பெட்டியில் வைத்திருந்த கோலமாவை எடுத்து வந்து இன்னிக்கு எந்தக் கோலம் போடலாம் என்று ஒரு வினாடி யோசித்து மேல் கீழ் பக்கவாட்டில் என்று  புள்ளிகள் இட்டு வினாடி நேரத்தில் அவற்றை இணைத்து அழகான ஸ்டார் கோலமிட்டாள்.  விலகி நின்று போட்ட கோலத்தை ஒரு பார்வை பார்க்கவே மனசுக்குத் திருப்தியாக இருந்தது.

கிரில் கேட்டைச் சாத்தி வெளிக்கதவை தாழிட்டுக் கொண்டதும்  கோட்டையைப் பூட்டிக் கொண்ட மாதிரி இருந்தது.  இனி அவள் தன் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு ஆபிஸுக்குக் கிளம்பும் பொழுது தான் அநேகமாக  கதவை திறந்து பூட்ட  நேரிடும்.

பாலைக் கொதிக்க வைத்து கலந்து காப்பி சாப்பிட்டாகி விட்டது.  அந்த வேலை முடிந்தால் தான் வேறு எந்த வேலையும் தொடங்குவது என்பது கமலிக்குப் பழக்கமாகி விட்டது.  பழக்கத்தில் வரும் வழக்கங்களுக்கு அடிமை ஆவது எப்படியோ ஆரம்பித்துத் தொடர்வது என்பது வாடிக்கை ஆகிவிட்டது.   ஒவ்வொருத்தருக்கும் ஒன்று.  தனக்கு காப்பி என்றால் இன்னொருத்தருக்கு இன்னொன்று என்று கமலி நினைத்துக் கொண்டாள்.

'டக்'கென்று சமயம் பார்த்து மோகன் இது பற்றி அவளிடம் சொன்னது கமலிக்கு நினைவு வந்தது. "அடிமை ஆயிட்டோம் என்று மட்டும் என் எதிரில் சொல்லாதே!" என்று சீறினான்.  "எந்த பழக்கமும் நம் ரசனைக்காகத் தான்.  எதையும் ரசித்து அனுபவிப்பதற்குத்  தானே பிறப்பெடுத்திருக்கிறோம்?..  அந்த அனுபவிப்பில் ஒரு  சுகம் இருப்பதால் தானே  அதை வழக்கமாக்கிக் கொண்டு பழக்கப்படுத்திக்  கொள்கிறோம்? நம் சுகம் முக்கியம்.  அந்த சுகத்தைத் தேடி அலைவது தான் வாழ்க்கை.  சுகத்தில் தப்பு ரைட்டு பார்ப்பது நம்மையே  தண்டித்துக்  கொள்கிற மாதிரி. அதனால் இனிமே நமது ரசனைக்குரிய பழக்கங்களை தூஷணை பண்ணாதே..."  என்று ஏதோ ஆவேசம் வந்தவன் போல் உரத்த குரலில் முகம் சிவக்கச் சொன்னான்.

அப்போது கமலிக்கு இவன் ஏன் இதுக்கு இவ்வளவு ஆவேசப்படுகிறான் என்று
ஆச்சரியமாக இருந்தது.   மோகன் எப்போதும் இப்படித் தான்.   தான் தன் ரசனை எல்லாம் அவனுக்கு முக்கியம்.  தன் ரசனைகளுக்கு பங்கம் ஏற்படுவதை எந்த நேரத்தும் சகித்துக் கொள்ள முடியாதவன்.  தன் ரசனைகளோடு ஒத்தவர்களுடன் காந்தம் போல் ஒட்டிக் கொள்வதும் அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும்.  ஜாதி, மதம், இனம், மொழின்னு   இப்படியெல்லாம் மனிதர்கள் தங்களைத் தாங்களே பிரித்துக்  கொள்வதை விட்டு விட்டு தாங்கள் கொண்டுள்ள ரசனைகளின் அடிப்படையில் பிரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு நாள் ராத்திரி ரொம்ப நேரம் அவளுடன் வாதாடினான்.

"வாழ்க்கை பூராவும் ஒரே ரசனையா இருக்கும்?..  ரசனைகள் மாறிக் கொண்டே இருக்கும், இல்லையா?..  அப்படி மாறிக் கொண்டிருக்கும் ரசனைகளுக்கேற்ப நம்மை பிரித்துக் கொள்வதும் மாறிக் கொண்டே இருக்குமா?" -- என்று  அப்பாவி போல் குரலைத் தாழ்த்தித் தலை சாய்த்துக் கேட்டாள் கமலி.

"ஒய் நாட்?" என்று சீறுகிற மாதிரி கேட்டான் மோகன்.  அடுத்த நிமிஷமே தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு, "ரசனைகள் மாற மாற அதற்கேற்ப தங்களையும் பிரித்துக் கொள்வார்கள் என்பது உண்மை தான்..." என்று பவ்யமாக குரலைத்  தாழ்த்திக் கொண்டு சொன்னான்.  "நமது ரசனைகளுக்குன்னு ஒரு சூட்சுமம் இருக்கு. ஒரு ரசனை அது தொடர்பான இன்னொரு ரசனைக்கு நம்மை இழுத்துண்டு போகும்.  வாழ்க்கை பூராவும் இந்த இழுத்தல் தொடர்ந்திண்டே இருக்கும். சொல்லப் போனா.  இந்த இழுத்தலைத் தான் நம்மோட அனுபவம்ங்கறோம்.  ரசனை  அனுபவத்துக்கான தூண்டில்.  அப்பப்போ  வாய்க்கிற அந்த அனுபவம் தான் நம்மை முழு மனுஷனா உருவாக்கறதுன்னு கூட ஆதாரத்தோடச் சொல்லலாம்.."  என்று யோசனையுடன் சொன்னான் மோகன்.


ஒரு வினாடி தாமதித்து அவனே தொடர்ந்தான்.  " ஒருத்தரோட வயது-  ஐ மீன் அவங்க பருவம்-- வசதி, ஈடுபாடு, ஆர்வம், ஆசை,வாழ்க்கைலே எதிர் கொள்ற விஷயங்கள் இதுக்கெல்லாம் ஏத்த மாதிரி,  அதுக்கெல்லாம் அனுசரணையா அவங்க அவங்க ரசனையும் மாறிண்டே  இருக்கும்.  நீ சின்னவளா பாவாடை தாவணி பருவத்திலே இருந்தப்போ இருந்த ரசனை,  புடவைப் பருவத்துக்குப் போனப்போ மாறித்து இல்லையா?.. அதைத்  தான் சொல்றேன்.  ரசனைகள்
எல்லாரிடத்திலும் வாழ்க்கை பூராவும் ஒரே ரசனை என்று  இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பது தான் அதன் சூட்சுமம்.  இயற்கை விதி..." என்று வகுப்பறை பாடம் நடத்துவது போல அவளுக்குச் சொன்னான்.

"ஒரு  குடும்பம்ன்னு இருந்தா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனைனா உருப்படுமா, என்ன?' என்று எதிர்கேள்வி  போட்டாள் கமலி.

"என்ன சொல்றே, புரிலே?" என்று மோகன் புருவத்தைச் சுருக்கி அவளைப் பார்த்தான்.

"ஒருத்தருக்கு சாம்பார்ன்னா அறவே பிடிக்காது;  இன்னொருத்தருக்கு--" என்று அவள் ஆரம்பிக்கும் போதே, "சீச்சீ.. அசட்டுப்பிசட்டுன்னு  பேசாதே.  ரசனைங்கறது ரொம்ப உயர்வானது.  அதை இப்படி சாம்பார்--ரசம்ன்னு  கால்லே போட்டு மிதிக்காதே.." என்று ரசனைக்கு  இலக்கணம் வகுப்பது போல கறராகச் சொன்னான் மோகன்.  "கர்நாடக சங்கீதம்-- சினிமாப் பாட்டுன்னு இசையை ரசிக்கற ரசனைங்கறதே ரெண்டாப் பிரியலாம்.
கர்நாடக சங்கீத சங்கதிகளோட அமைஞ்ச சினிமாப்  பாட்டுன்னு  ரெண்டாப்  பிரிஞ்சதும்  கூட ஒண்ணாக் கூடலாம்.  இப்படி ஒரே வகையான ரசனைக்குள்ளும் கூட பிரியறதும் கூடறதும் சகஜம் தான்.." என்றான் மோகன்.

"புருஷன்-- பெண்டாட்டின்னு வைச்சுக்கோங்கோ.  அவங்க ரெண்டு பேருக்கும் வேறே வேறே ரசனைகள் இருக்குன்னு வைச்சுக்கோங்க.  நீங்க சொல்ற ரசனையின்  அடிப்படையில் அவங்களுக்குள்ளே பிரியறதும் சேர்றதும் எப்படி சாத்தியப்படும்? ம்?.. தெரியாமத்தான்  கேக்கறேன்.  நீங்க சொல்றதெல்லாம் எல்லாத்துக்கும் பொருந்தி வராது.  சில விதிவிலக்குகளும் உண்டு.." என்று தீர்மானமாகச் சொன்னாள் கமலி.

"இல்லே.. " என்றான் மோகன்.  "ரெண்டு பேரின் ரசனைகளும் கலந்த மூணாவதா ஒண்ணை அந்த ரெண்டு பேரும் தங்களுக்குள்ளே ஸ்தாபிச்சிக்கலாம்..  அப்போ அவங்களுக்குள்ளே ரசனையின் அடிப்படையில் பிரிதல் இல்லாததை  உணர்வாங்க..   இல்லேனா,  ஒருத்தர் ரசனைக்கே இன்னொருத்தரும் மாறிக்கறதைத் தவிர வேறே வழியே இல்லை..  எவரிதிங் ஈஸ்  பாஸிபிள் டு அவாய்ட் எ பிக் கேப் பெட்வின் தெம்.."  என்றான் மோகன்.

இதையெல்லாம் ஏதோ மனதில் ஓடும் சினிமாக் காட்சி போல இப்பொழுது நினைத்துப் பார்க்கவே கமலிக்கு ஆயாசமாக இருந்தது.   தீர்க்கதரிசி போல கிட்டத்தட்ட ஒரு  வருஷத்துக்கு முன்னாடியே பின்னாடி என்ன நடக்கலாம் என்பதைக்  கணிச்சுச் சொல்லியிருக்கிறானே'  என்ற நிதர்சனம் அடுத்த வேலையைச் செய்ய முடியாமல் ஆயாசப்படுத்தியது.

மெள்ள தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு குளியலறைப் பக்கம் நகர்ந்தாள்.  துண்டை எடுத்துக் கொள்ளவில்லை என்ற நினைப்பு அவள் அறைப்பக்கம் நகர்த்தியது.  அடுக்கி வைத்திருந்த துணிகளின் இன்னொரு பக்கம் துவைத்த டவல்கள் நாலைந்து இருந்தன.

இன்று தலைகுளிக்க வேண்டும்.  அதற்கு வாகாக ஈரிழைத் துண்டு ஒன்றையும் சேர்த்து எடுத்துக் கொண்டாள்.

வாசல் பக்கக் கதவை தாழ் போட்டு விட்டோம் என்ற நிச்சயத்தில் திரும்பும் பொழுது  அவள் மொபைல் கிணுகிணுத்தது.

மொபைல் திரையைப் பார்த்தால் அவள் புருஷன்.

திரையில் தெரிந்த ரிஸீவர் படத்தை லேசாகத் தடவின பொழுது, "கமலி!.." என்று ஆதுரக்குரலில் மோகன் அவளை அழைத்த பொழுது கமலியின் தலையிலிருந்து  கால்வரை மின்சாரக் கீற்றென அவள் இதுவரை அனுபவித்திராத மகிழ்ச்சி அலை ஒன்று  வெட்டி விட்டுப்  போனது.


(தொடரும்)


Tuesday, September 19, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி--6


இதற்கு முன் பகுதி:   http://jeeveesblog.blogspot.in


சாரங்கனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  தலை கவிழ்த்துத்
தொடர்ந்து கேவிக் கொண்டிருந்த கமலியைத் தொட்டுத்  தூக்கி அவளை சமாதானப்படுத்தவும் தயக்கம்.  அவளுக்கு நெருங்கி வந்து, "என்னன்னு சொல்லுங்களேன்.." என்று தவித்துப் போய் விட்டான்.

கொஞ்ச நேரக் கேவலுக்குப் பின் சமனப்பட்டது போல கமலி லேசாகத் தலை நிமிர்த்தினாள்.   கண்களின் கீழ்ப்பகுதியிலிருந்து தாரை தாரையாக வழிந்த கண்ணீர் அவள் கன்னக் கதுப்புப்  பிரதேசத்தில் நீர்க்கோடு போட்ட மாதிரி இறங்கியிருந்தது.  முந்தானையின் கீழ்ப்பகுதி எடுத்து அவளே கண்களைத் துடைத்துக் கொண்டு மலங்க மலங்க சாரங்கனைப் பார்த்தாள்.

ஏதாவது கேட்கப் போய் மறுபடியும் அழுகை தொடர்ந்து விடுமோ என்ற பயத்தில் எதுவும் கேட்டாமலும்,  'என்னாச்சு இவளுக்கு' என்று கேட்க விரும்பியும் சாரங்கன் தவித்துக் கொண்டிருந்தான்.

சாரங்கனின் தவிப்பு கமலிக்குப் புரிய ஆரம்பித்ததும்,  சட்டென்று  தன் நிலை உணர்ந்தாள்.  "ஸாரி.." என்று அவள் முனகியது தனக்குத்  தானே சொல்லிக் கொண்டது போலிருந்தது.

"பாவங்க உங்க அத்தை.   உங்க அத்தை  மட்டுமில்லை,  பெண் ஜென்மம் என்றாலே பாவம் தாங்க.   பல பேர் வெளிக்கு தாங்கள் உற்சாகமாக இருப்பது போலக் காட்டிக்  கொள்கிறார்களே தவிர,  ஒவ்வொருத்தர் உள் மனசிலேயும்  ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டதின் வடு இருந்து கொண்டே தாங்க இருக்கு.     என்னாலே உங்க அத்தை பட்ட துயரை துல்லியமாக உணர  முடிகிறது.    ஏன்னா...." என்று ஏதோ தொடர்ந்து  சொல்ல வந்த கமலி சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டு மெளனமாகிறாள்.

"சொல்லுங்க..  ஏன்னா.. ஏன் நிறுத்திட்டீங்க?.. சொல்லுங்க.." என்று சாரங்கன் அவள் சொல்லத் தொடங்கியதை சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தான்.

"வேண்டாம், சாரங்கன்..  உங்க அத்தை கதையைச் சொன்னீங்க.  என் கதையும் உங்க அத்தை கதைக்குக்  கொஞ்சமும் குறைந்ததில்லை...  உங்க அத்தை, நான்,  இன்னும் ஏகப்பட்ட பேர் இந்த வரிசைலே வருவாங்க.. சொல்லப்போனா தனக்கு நெருங்கினவங்களாலே பாதிக்கப்பட்ட பெண்ணோட வாழ்க்கைங்கறதே தான் பட்ட பாதிப்புக்கு ஏதோ ஒரு விதத்திலே சம்பந்தப்பட்டவர்கள்,  படாதவர்கள் என்று சகட்டுமேனிக்கு துவஜம் கட்டிக் கொண்டு எதிர் நிலை எடுக்கறதுன்னு ஆகிப்போச்சு.." என்று கைத்துப் போன உணர்வில்  கமலி சொன்ன போது,  இவள் எந்த அளவுக்கு மன அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று சாரங்கனுக்குப்  புரிந்து போயிற்று.

சாரங்கன் வெறித்து அவளைப்  பார்த்துக்  கொண்டிருக்க, அவளே தொடர்தாள்..   "எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு. எங்கப்பா ரொம்ப கண்டிப்பானவர்.  சின்னக்  குழந்தையா இருக்கறச்சே,  அவர் சொல்றதைக் கேக்கலைன்னா  பக்கத்திலே கூப்பிட்டு பளார்ன்னு கைபடற இடத்திலே அடிச்சிடுவார்.  'ஓ'ன்னு அழுதிண்டு அந்த அடி தாங்காம அம்மா பக்கத்திலே ஓடுவேன்.   "என்னடி, என்ன ஆச்சு? ஏன் இப்படி அழறே?"ன்னு அம்மா வாரி எடுத்து அணைச்சிக்க முயல்றச்சே,  நான் படார், படார்ன்னு அம்மா கை மேலே அடிப்பேன்..   அம்மா சிரிச்சிண்டே, "எம்மேலே என்னடி கோபம்?.. நான் என்ன செஞ்சேன்?"ன்னு திகைப்பாள்.

"இப்ப இதையே யோசித்துப்  பார்த்தால் அம்மா கிட்டே ஏன் கோபப்பட்டோம்ன்னு  தெரிலே..  அப்பாகிட்டே முடியாதது அம்மா கிட்டே முடிஞ்சிருக்கு.  அவ்வளவு தான்.   இப்ப ஒருத்தரைச் சாக்கிட்டு இன்னொருத்தர் கிட்டே என் ஆத்திரத்தை காட்டவும் வழியில்லே.  தாலி  கட்டின புருஷனைத் தவிர எனக்கு வேறே நாதி இல்லே;  'சுமைதாங்கி சாய்ந்தால் சுமை  என்ன ஆகும்' ன்னு கண்ணதாசன் கேட்டது தான்.  என்னோட பள்ளி பருவத்திலேயும் சரி, ஃப்ரண்ட்ஸ்ங்க யாரானும் செய்யறது பிடிக்கலேன்னா பேசாம அவங்ககிட்டேயிருந்து விலகிடறது என் குணம்.
இந்த குணம் என் பிறவிலேந்து  தொடர்ந்து வர்ற பிறவிக் குணம் போலிருக்கு. அதான் புருஷன் சரியில்லேன்னு தெரிஞ்சதும் புருஷன் கிட்டேயிருந்து விலகிடணும்ங்கற உணர்வு என் மனசு பூராவும் வியாபிச்சிருக்கு...

"விலகிடறதுன்னு முடிவுக்கு வந்திட்டேயில்லே?.. விலகிடறது தானே என்று சுலபமாக யாரானும் ஏன் நீங்களே கூடக்  கேக்கவும் செய்யலாம்.  நான் ஆபீஸ் போய் சம்பாதிக்கற பெண்ணா இருக்கற தாலே விலகிடறது ஈஸின்னு கூட சில பேர் அபிப்ராயப்படலாம்.  புருஷத்  தேவை இல்லேன்னாலும், வயிற்றுப்பாட்டிற்கு வழியிருக்கும் என்பது அவங்க கணிப்பு.  சம்பாதிக்காத வீட்டோடு முடங்கிக் கிடக்கிற பெண் என்றால் இன்னும் கொடூரம் தான்.
ஆனா,  சம்பாதிக்கிறாங்களோ, இல்லையோ  துணைன்னு ஒண்ணு இல்லாம தனித்து வாழ நேர்ந்த பெண்களைப் பத்தின பார்வை ஒண்ணாத் தான் இருக்கு...

"விலகிட்டு அல்லது புருஷனை சட்டபூர்வமாக விலக்கிட்டு ஒரு  பெண் தனித்த மனுஷியா கெளரவத்தோட வாழ முடியுமா, அல்லது வாழ்வதற்கு ஏற்ற சமுதாய சூழல் இன்னிக்கு இருக்காங்கறது அடுத்த கேள்வி.
அந்த அடிப்படை கேள்விக்கு  தகுந்த  பதில் கிடைக்கிற வரை என்னைப் போலவான நிர்கதியற்ற பெண்கள் தனக்குப் பாதுகாப்பானவரை தீர்மானித்துக்  கொண்டு அந்த விலகலுக்கான ஏற்பாட்டைச் செய்வது  தான் நியாயமாக எனக்குப் படுவதால் தான் எனக்கான பாதுகாப்பைத்  தேடிக் கொள்வதற்கான முயற்சியை நான் மேற்கொண்டேன்.  அப்படியான என் முயற்சியே எனக்கான பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கினாலும், உங்களைப் போன்ற சமூகம் பற்றிய ஆரோக்கியமான சிந்தனை உள்ளவரை எனக்குத் தெரியப்படுத்தியிருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்" என்றாள்.

பிரச்னைகளை அவற்றிலிருந்து விலகி வந்து அவற்றின்  தீர்வுக்காகத் தொடர்ந்து  விவாதிக்கத் தெரிந்திருக்கும் கமலியின் நட்பு  கிடைத்ததில் அவனுக்குப் பெருமிதமாக இருக்கிறது.  இருந்தும்  எந்த அளவில் அவள் இனி சொல்லப்போவதில் தன் பங்களிப்பு இருக்கும் என்பதனைத் தீர்மானிக்க இயலாத தடுமாற்றமும் அவனுக்கு இருந்தது.  தனக்கு வாய்த்த வாழ்க்கையை எல்லாம் விதி வசம் என்று அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதை மாற்றி எழுத போராடும் குணம் கொண்டவளின் அருகாமை கொடுத்த தெம்பில் சாரங்கன் அவளை  நிமிர்ந்து  பார்த்தான்.

அந்த அறையில் மாட்டியிருந்த இயற்கைக் காட்சி ஓவியம் ஒன்றை உற்றுப் பார்த்துக்  கொண்டிருந்த கமலி சட்டென்று சாரங்கன் பக்கம் திரும்பி, "நீங்கள் ஆயிரம் சொல்லுங்கள், சாரங்கன்..  உங்கள் விளம்பர வாசகத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.   கல்லூரிக் காலத்திலிருந்தே மனசில் உருவாக்கிக் கொண்ட ஒரு  இலட்சியத்தின் வெளிப்பாடு உங்கள் விளம்பர வாசகங்கள் என்பதினால் அது பற்றி மிகுந்த கவனத்துடன் என் மனசில் போட்டுப் புரட்டிப்  புரட்டி யோசித்தேன்.  என்னளவில் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  அப்படி நான் சொல்வதினால் உங்கள் இலட்சியத்தை நான் குறைத்து மதிப்பிட்டு விட்டதாக நீங்கள் கொள்ளக் கூடாது.  சரியா, சாரங்கன்.."  என்று கமலி வெகு ஜாக்கிரதையாக சாரங்கனின் மனம் நோகாதவாறு தன் கருத்தைத் தயங்கித் தயங்கி சொன்னாள்.

சாரங்கனோ அவளுக்குப்  பதிலேதும் சொல்லாமல் இன்னும் அவள் சொல்லப் போவதற்காகக் காத்திருந்தான்.

"காதலோ மணவாழ்க்கையோ ஒருவர் மேல் கொள்ளும் பரிதாபத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறேன், சாரங்கன். அப்படி இருந்து விட்டால் ஒருவர் இன்னொருவர் மேல் கொண்டிருக்கும் பரிவே முக்கியமாகிப் போய்  மற்ற அடிப்படை  உணர்வுகள் புறக்கணிக்கப் பட்டு நாளாவட்டத்தில் அதுவே இருவருக்கிடையான  உறவுகளின் விரிசல்களுக்கு அஸ்திவாரமிடலாம் என்பது  என் கருத்து.   இது என் திருமண வாழ்க்கையின் ஆரம்ப கால கட்ட நிகழ்வுகளின் அடிப்படையில்  நான்  தெரிந்து கொண்டதே தவிர உங்கள் தீர்மானங்களுக்கு எந்த விதத்திலும் குறுக்கே நிற்கக் கூடாது என்று  மனமார  விரும்புகிறேன், சாரங்கன்"  என்றாள்.

சாரங்கன் எதுவும் கூறாமல் அவளையே பார்த்துக்  கொண்டிருக்க கமலியே தொடர்ந்தாள்:  "என்  மண வாழ்க்கையைத்  திருத்தி எழுதிக் கொள்வதில் உங்களை மாதிரியே நானும் சில தீர்மானங்களைக் கொண்டிருப்பது தான் இதில் இன்னொரு வேடிக்கை!"  என்று சொன்ன கமலி," இன்னும் சொல்லப் போனால் தன் மனைவியால் வஞ்சிக்கப்பட்ட அல்லது திரஸ்கரிக்கப்பட்ட
ஒருவரை மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று  என்னளவில் தீர்மானித்திருக்கிறேன், சாரங்கன்.   ஏன் இந்த முடிவு என்றால் நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாகப் பாதிக்கப் பட்டிருப்போம்.  அதுவே எங்கள் இருவருக்குமான ஒற்றுமையாகவும் இருவரையும் பந்தப்படுத்துகிற உறவாகவும் திகழும்.  இந்த  முடிவு நாங்கள் இருவருமே ஒருவரை பரஸ்பரம் நன்கு புரிந்து  கொள்ளவும் இனி அப்படியான புறக்கணிப்புகள் இருவருக்குள்ளும் ஏற்படாமலும் இருக்க எங்கள்  கடந்த கால வாழ்க்கையே காபந்தாக இருக்கும் என்பதினால்  தீர்க்கமாக யோசித்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன், சாரங்கன்.." என்றாள்.


(தொடரும்)

Friday, September 15, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி:  5


இதற்கு முன் பகுதி:   http://jeeveesblog.blogspot.in


"அப்படித்தான் என்றில்லை.. அப்படியும் இருக்கலாம் என்பதற்காகச் சொல்ல வந்தேன்.." என்று கமலியைக் கூர்மையாகப் பார்த்தவாறு மகளுக்குத் தந்தை பரிவுடன் அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையில் விளக்குவதைப் போலச்  சொன்னான் சாரங்கன்.

கமலி ஆழ்ந்த யோசனையில் சாரங்கன் சொல்வதை தன் மனசில் முழுதும் உள்வாங்கிக் கொள்கிற தோரணையில் 'இவன்  இன்னும் சொல்லட்டும்' என்கிற எதிர்பார்ப்பில் பேசாதிருந்தாள்.

"எனக்கு இந்த நேரத்தில் அறிஞர் அண்ணாவின்  'தாய் மகளுக்குக் கட்டிய தாலி' என்ற திரைப்படம் நினைவுக்கு வருகிறது" என்றான்  சாரங்கன்.

கமலியின் முகம் திடீரென்று மலர்ந்து, "என்ன பேர் சொன்னீர்கள்?" என்றாள்.

"தாய் மகளுக்குக் கட்டிய தாலி.." என்று  அழுத்தம் திருத்தமாக மறுமடியும் சொன்னான் சாரங்கன்.

"தாய் கூட மகளுக்குத் தாலி கட்டுவாளா?.." என்று யோசனையுடன் சொன்ன கமலி,  "இதுவும் இன்னொரு தாலிக் கதை போலிருக்கு.." என்றாள்.  "புருஷன் துணையில்லாத நேரத்தும் தாலி துணையாய் இருக்கிறது, பாருங்கள். வேடிக்கை தான்.." என்று கைத்துப் போன சிரிப்பொன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது.

"அந்தத் தாலி புருஷனைப் பிரதிநிதித்துவப் படுத்துவதால் தான் அதற்கு அத்தனை மவுசு போலிருக்கு.." என்று சாரங்கனும் சிரித்துக் கொண்டே சொன்னான்.  "கல்யாணமானவள் என்றால் தவறான கண்ணோட்டத்துடன் நெருங்க மாட்டார்கள் என்று தாலி ஒரு காபந்தாக இருந்த காலம் அந்தத் திரைப்படம் வெளிவந்த காலம்.  அதனால்  காமுகர்களின் நெருக்கடியிலிருந்து மீட்க அனாதரவான அந்தத் தாய் திருமணமாகாத தன் மகளின் கழுத்தில் ஒரு தாலிச்சரடைக் கட்டி அவளுக்கான பாதுகாப்பைத் தருகிறாள்.."

"இன்ட்ரஸ்டிங்..." என்று முணுமுணுக்கிறாள் கமலி.   திடுத்திப்பென்று எதையோ நினைத்துக் கொண்டு கேட்பவள் போல, "சாரங்கன்,  உங்கள் விளம்பரத்தில் 'மறுமணம்  கொள்ள விரும்புவரும், விதவைகளும் விண்ணப்பிக்கலாம்' என்று குறிப்பிடுகிற அர்த்ததில்   இருந்த அந்த ஆங்கில வாசகங்கள் கொடுத்த தெம்பில் தான் உங்களைப் பற்றித் தெரிந்து  கொள்ள வேண்டும் என்ற துடிப்பு எனக்கு ஏற்பட்டது.    ஒரு ஆணின் நேர்மையையும் அவன் குண மேன்மையையும் வெளிப்படுத்துகிற எவ்வளவு அற்புதமான வாசகங்கள், அவை?..   அந்த  வாசகங்கள் தான் உங்கள் மென்மையான மனசின்  பிரதிநிதியாய் இருந்து உங்களுடன் என்னைப் பேச வைத்தது.." என்று நெகிழ்ச்சியுடன் சொன்னவள், "  நான் ஒன்றைக் கேட்டால் தவறாய் நினைக்க மாட்டீர்கள் தானே சாரங்கன்?" என்று தலை சாய்த்து அவனைப்  பார்த்தாள்.

"கேளுங்கள், கமலி.." என்று அவள் எதைக் கேட்டாலும் மறைக்காமல் மனத்தில் உள்ளதைச் சொல்ல தயாரான நினையில் சொன்னான் சாரங்கன்.

"முதன் முதலாக உங்களுடன் போனில் பேசிய பொழுதே கேட்டிருக்க வேண்டியது.  அல்லது இன்று நேரில் சந்தித்த தருணத்திலேயே கேட்டிருக்க வேண்டும்.  இருந்தாலும் அப்படியொரு கேள்வியைக் கேட்டுத் தெரிந்து  கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையே துடைத்தெறிந்து விட்டது உங்கள் விளம்பர வாசகங்கள்.   இருந்தும் இப்பொழுதாவது கேட்டுக்கொள் என்று மனசு கிடந்து சிட்டுக்குருவியாய் படபடக்கிறது..." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, " எதற்கு இவ்வளவு பீடிகை, கமலி!  என்னிடம் கேட்கக் கூடத் தயங்குகிற கேள்வி, அப்படி என்ன இருக்கிறது?" என்று பேசுவதை சகஜப்படுத்துகிற தோரணையில் சாரங்கன் கேட்டான்.

"நேரிடையாகவே கேட்டு விடுகிறேன்.. உங்கள் மண வாழ்க்கையில்  என்ன நேர்ந்தது, சாரங்கன்?..  சொல்ல முடியும்னா சொல்லுங்க.. ஆனா வற்புறுத்த மாட்டேன் .."

"நேரிடையாகவே எளிமையா சொல்லிடறேன்.  எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை,  கமலி!"

"என்னது?" என்று தன்னை மீறித் திகைத்த கமலியின் விழிகள் விரிந்தன.  "என்னது?" என்று மீண்டும்   முணுமுணுத்தவள் அவன் சொன்னதை சிரமப்பட்டு உள்வாங்கிக் கொண்ட பொழுது மிகவும் சோர்ந்து போனாள்.

"என்ன, கமலி?  என்ன ஆயிற்று, உங்களுக்கு?..  நான் உண்மையைத் தான் சொன்னேன்.   கல்யாண பாக்யம் எனக்கு இன்னும் கிட்டவில்லை, கமலி!"

"அப்போ நீங்க அந்த ஆங்கில நாளேட்டில் கொடுத்த அந்த விளம்பரம்?"

"ஆமாம். எனது  கல்யாணத்திற்காக ஒரு பெண் தேடித் தான் அந்த விளம்பரம் கொடுத்தேன்.."

"விளம்பரத்தைப் பற்றி அல்ல.  அந்த விளம்பரத்திற்கான வாசகங்கள், பற்றி."

சாரங்கனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரியவில்லை.  தனக்குப் புரியாததும் ஆச்சரியமாக இருந்தது.  அந்த விளம்பர வாசகங்களில்  தவறாக பிறர் புரிந்து கொள்வதற்கு ஏதானும் இருக்கிறதா என்று யோசித்து  அந்த விளம்பர வரிகளை நினைவில் ஒரு தடவை ஓட்டிப் பார்த்தான்.  எந்த தவறும் தான் செய்து விட்டதாகத் தெரியவில்லை.   அந்த உணர்வில், "ஸாரி,  கமலி!  அந்த விளம்பரத்தை வாசிப்பவர் தவறாக புரிந்து கொள்கிற மாதிரி நான் ஏதாவது செய்து விட்டேனா?" என்று குரல் தழுதழுக்கக் கேட்டான்.

"ஓ!.." என்று முனகிளாள் கமலி.  அவள் விழிக்கடையில் நீர் மொட்டு ஒன்று உருண்டோடியது.  "சாரங்கன், உங்களுக்கு என்ன வந்தது?" என்று தாங்கொண்ணா பரிதாபம் மூட்டிய ஆத்திரத்தில் சீறினாள்.

"என்ன கமலி?..  எனக்கு ஒன்றுமே புரியவில்லை.." என்று திகைத்தான் சாரங்கன்.

"கல்யாணமாகாத ஆண்பிள்ளை நீங்கள்.  விதவைகள், மறு திருமணம் விரும்புவோர்  என்ற வரிகளையும் சேர்த்து விளம்பரம் கொடுக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது, சாரங்கன்?..."  என்று கமலி படபடத்த போது சாரங்கன் மெளனமானான்.

"சொல்லுங்கள், சாரங்கன்.." அவனிடமிருந்து அந்த நேரத்திலேயே ஒரு பதிலை எதிர்பார்க்கிற அவசரத்தில் கமலி அவன் முகத்தை நேரடியாக பார்த்துக் கேட்டாள்.

அவள் பார்வையில் தகித்த சூட்டை எதிர்கொள்ளத் தயங்கியபடியே "என்ன நேர்ந்தது என்று கேட்டால் எனக்குப் புரியவில்லை.   கொஞ்சமே விளக்கிச் சொன்னாலும் எனக்குப் புரிந்து விடும்" என்று இயல்பாக சாரங்கன் புன்னகைத்தான்.

"இப்பொழுதாவது புரிகிறதா, பாருங்கள்.." என்றாள் கமலி."திருமணமான ஆண்களே மறுமணம் என்றால் கன்னி கிடைப்பாளா என்று பார்க்கிற காலம் இது.    இந்த லட்சணத்தில்  கல்யாணமே ஆகாத நீங்கள்....."

"..............................."

"சொல்லுங்கள்,  சாரங்கன்.."

"சொல்கிறேன்.." என்றான் சாரங்கன்.   "அபலைகள், அனாதரவான பெண்கள், கைம்பெண்கள்,  தோல்வியில் முடிந்த மண வாழ்க்கையிலிருந்து விடுதலை கோரும் பெண்கள் என்று பல பெண்களின் வெளியில் சொல்ல முடியாத துன்பங்களை நான் அறிவேன், கமலி.  அதெல்லாம் பற்றி நிறைய கேள்விப்பட்டும் வாசித்தும் இருக்கிறேன்.   நான் கல்லூரி படிக்கிற காலத்திலேயே  இப்படியான ஒரு தீர்மானத்தை மனசில் உருவாக்கி வைத்திருந்தேன்..  இலட்சியமும், முற்போக்கு சிந்தனைகளும் கைகோர்த்துக் கொண்டு  இளைஞர்களை உருவாக்கிய நாட்கள் அவை.    திருமணம் என்ற பெயரில் தன் வாழ்க்கையை பலி கொடுத்த ஒரு  பெண்ணுக்காவது
ஆறுதலான   வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் தான் அப்படியான வாசகங்கள் கொண்ட விளம்பரத்தை  நான் கொடுக்கக் காரணம், கமலி.."

"என்ன சொன்னீர்கள்.. உந்துதலா?..  அந்த உந்துதலுக்குக் காரணம்?"

"எந்தக் காரணமும் இல்லை.   அவர்களின் பால் ஒரு அனுதாபம்.  அந்த அனுதாபம் ஏற்கனவே அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதைப் பொருட்படுத்த வில்லை.  அல்லது  விபத்து போல அவர்களே பூட்டிக் கொண்ட சங்கிலித் தளையிலிருந்து அவர்களை மீட்டு விடுதலை அளிக்க வேண்டும் என்ற பேரவா என் மனசில் எப்போதும் கனன்று கொண்டிருப்பது காரணமாக இருக்கலாம்."

".................................."

"என் அத்தை ஒருத்தர் பட்ட பாட்டை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.  மொத்த வீட்டையும் விரோதித்து கொண்டு காதல் திருமணம் தான் செய்து கொண்டார்.   ஆறே மாசத்தில் தன் காதல் கணவனின் இலட்சணம் அவருக்குத் தெரிய வந்தது.  இவரைத் திருமணம் செய்து கொள்வதற்கு பல வருடங்களுக்கு முன்பே அவன் மது அரக்கிக்கு தாலி கட்டியிருப்பது தெரிய வந்தது.   அலுவலகம் முடித்து ஆறு ஆறரைக்கு வீட்டுக்கு வருகிறவன் சந்தன சோப் மணக்க குளித்து,  வேட்டி--ஜிப்பா என்று சுலப ஆடை உடுத்தி, அதில் செண்ட் தெளித்துக் கொண்டு  ஏழரைக்கெல்லாம்  தீர்த்தவாரிக்குத் தயாராகிவிடுவான்.   வறுத்த முந்திரிப்பருப்பு  என்றால் அவனுக்கு உயிராம்.  மிதமாக மிளகாய்ப் பொடி தூவி  அதை வைத்திருக்க வேண்டும்.  பல நேரங்களில் குறிப்பிட்ட நண்பர்கள் வருவதுண்டாம்.

"ஆரம்பத்தில் இந்த கண்ராவியெல்லாம்  பார்க்க வேண்டாம் என்று அத்தை  மாடிக்குப் போய் கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.  கொஞ்ச நாட்களில் அதற்கும் தாலி கட்டின புருஷனிடமிருந்து தடை.   "நீ மாடிக்கு போயிட்டா,  என் ஃப்ரண்ட்ஸ்லாம் வருவாங்களே!  அவங்களுக்கு வேண்டியதைக் கொடுத்து கவனிச்சிக்கறது யாரு?" என்று சீறி  மாடிக்கு போகவிடாமல் தடுத்திருக்கிறான்.  அவனைப் புறந்தள்ளி மாடிக்குப் போன அத்தைக்கு  உள் மாடிப்பகுதிக்குப் போக முடியாமல் பூட்டிய கதவுகளைப் பார்த்த பொழுது அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.  கீழே பார்த்தால்  புருஷன் தன் கையில் சாவிக்கொத்தை வைத்துக் கொண்டு கொக்கரித்துக் கொண்டிருக்கிறான்...."

மனசைக் கல்லாக்கிக் கொண்டு வருவது வரட்டும் பார்த்து விடலாம் என்று ஒரு அசட்டு தைரியத்தில் அத்தையும்  படியிறங்கி ஹாலுக்கு வந்து சமையல் அறையில் பதுங்கிக் கொண்டார்களாம்.    கொஞ்ச நேரத்தில் தாலி கட்டினவனின் நண்பர்களும் வந்து விட  நடு ராத்திரி வரை ஏகக் கொண்டாட்டமாம்.  நடுநடுவே  அத்தையைக் கூப்பிட்டு 'பிரிட்ஜிலிருந்து கோலாவை எடுத்து வை..  உடைச்சு ஊத்து..'  என்று வேலை வாங்குவானாம். அந்த மாதிரி சமயங்களில்  இவன் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் அத்தையை குறுகுறுவென்று உற்றுப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிப்பது பார்த்து அத்தைக்கு தேகம் பூராவும் திகுதிகுவென்று எரிகிறது போலிருக்குமாம்.

இதே மாதிரி இன்னொரு நாளில் முன்னிரவில் 'சிகரெட்  தீர்ந்து விட்டது. போய் வாங்கி வா..'  என்று சந்து முனை பெட்டிக்கடைக்கு அனுப்பினானாம். முடியாது என்று  அத்தை மறுத்திருக்கிறாள்.  'நளாயினியே புருஷன் கேட்டதையெல்லாம் அவன் முகம் கோணாமல் செய்திருக்கிறாள்..  உனக்கென்னடி வந்தது'  என்று ஊதிக்கொண்டிருந்த சிகரெட்டின் அனல் முனையால் வெளியார் பார்த்து விடுவார்களே என்று மறைவிடங்களில் சுட்டிருக்கிறான்.  துடிதுடித்துப் போன அத்தை மனசைக் கல்லாக்கிக் கொண்டு விடியட்டும் என்று காத்திருந்தாளாம்.

பொழுது பொலபொலவென விடிந்ததும்  அவன் வெளியே போயிருக்கிற சமயம் பார்த்து வீட்டுக்கதைவைச் சாத்திக் கொண்டு பஸ் பிடித்து பக்கத்தில் இருந்த அண்ணன் வீட்டிற்கு வந்தவர் தான்..." என்று அத்தை பட்ட அவலங்களை சாரங்கன் சொல்லிக் கொண்டே வரும் பொழுது கமலியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

கமலியிடமிருந்து லேசான விசும்பல்.  திடுக்கிட்ட சாரங்கன், "என்னங்க.." என்று ஆதுரத்துடன் அவளைப் பார்த்துக் கேட்டதும் கமலியால் இனிமே அடக்க முடியாது என்ற நிலையில் அந்த விசும்பல் பெரிதாகிக் கேவலாக வெளிப்பட்டது.

(தொடரும்..)

Saturday, September 9, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி:   4


இதற்கு முன் பகுதி:  http://jeeveesblog.blogspot.in

"எனக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷமாயிடுத்து, சாரங்கன்! காதல் கல்யாணம் தான். அவர் பேர் மோகன சுந்தரம்; ரொம்ப அழகாய் இருப்பார், சாரங்கன்.." என்று கனவில் எதையோ ரசிக்கும் பாணியில் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறாள் கமலி..   "லைஃப்லே கல்யாணம்ங்கறது ஒரு பெரிய கேம்பிள்.. என்ன தான் விசாரிச்சு, குலம் கோத்திரம் எல்லாம் பாத்து செஞ்சிகிட்டாக் கூட பிற்காலத்லே சந்தோஷமா இருப்பாங்கங்கறதை நிச்சயமா சொல்ல முடியறதில்லே..  இந்த லட்சணத்திலே என்னோடது காதல் கல்யாணம்.." என்று கைத்துப் போன சிரிப்பொன்றை வெளிப்படுத்துகிறாள் கமலி.

எதனாலோ அடிபட்டு துடிக்கக் கூட சிரமப்படும் அவள் சங்கடத்தைச் சமனப் படுத்தும் எண்ணத்துடன், ஒரு சகஜ நிலைக்கு அவளைக் கொண்டு வர வேண்டி, "என்ன, கமலி.. காதல் கல்யாணம்ங்கறது அவ்வளவு..." என்று அவன் சொல்ல வந்ததை சொல்லி முடிக்குமுன்னே, 

"ஸாரி.. காதலிப்பதை, காதல் வயப்படறதை நான் சொல்லலே. என்னோட வருத்தத்திலே நா சொன்னது அப்படி அர்த்தமாயிடுத்தோ, என்னவோ.. மன்னிக்கணும்.. காதல் ரொம்பவும் மரியாதைக்குரிய ஒண்ணு. நாம அதுக்குக் குடுக்கற மரியாதையிலே தான் அதோட ஜீவனும் துடிச்சிண்டிருக்கு... காதல் ஒரு பூச்சரம்ன்னு கவிதை எழுதறாங்க;  அதைக் காதலி தலைலே சூட்டி விட்டா அழகு; தரைலே தூக்கி எறிஞ்சு பூட்ஸ் கால்லே நசுக்கினா..."

சொல்லி முடிக்கட்டும் என்று சாரங்கன் காத்திருக்கிறான்.

இப்பொழுது குரல் தழுதழுத்துப் போகாமல் கொஞ்சம் தெளிவாகப் பேச ஆரம்பிக்கிறாள் கமலி. "எல்லாம் கதை மாதிரி இருக்கு; அப்படிக் கதை மாதிரி இருந்தாலும், நான் உயிர் வாழ்ந்திண்டு இருக்கறதாலே என்னோட இந்தக் கதையும் உயிர் வாழ்ந்திண்டு இருக்கு. நா எங்க அம்மாவுக்கு மூணாவது பெண்.  முதல் அக்கா ஓர் ஆண் துணையை நிச்சயித்துக் கொண்டு அவருடன் போய் விட்டாள்.  மிஸ்டர் மோகன சுந்தரத்தை நா சந்தித்த காலத்திலே, என்னோட ஊதிய சேமிப்பை வைச்சு ரெண்டாவது அக்காவுக்கு அவளோட திருமணத்தை முடிச்சு வைச்சேன்.. இந்த அக்காவுக்குக் கல்யாணம் ஆகி விட்டால், அடுத்து இருப்பது நான் தானே என்கிற உந்துதலும் ஒரு காரணம்.

"நா சிறுகச் சிறுக சேமிச்சு வைச்ச பணம் கொஞ்சம் இருந்தது. அதோட ஆபீஸ்லேயும் கொஞ்சம் லோன் வாங்கியிருந்தேன்.     அதை வைச்சு எங்களைப் பெத்தவங்க முன்னாடி, அவங்களோட ஆசிர்வாதத்தோடையே என்னோட கல்யாணத்தை சிம்பிளா முடிச்சிக்கலானு ஒரு நாளைக்கு நா காதலிச்ச மோகன சுந்தரத்தை எங்க வீட்டுக்கு வரச்சொன்னேன்.. பாவம், அவருகிட்டே என்னைப் பெத்தவங்க எப்படி நடந்துகிட்டாங்க, தெரியுமா சாரங்கன்?.. ஒரு மங்கலமான விஷயத்தைப் பத்திப் பேசவந்த அவருக்கு உட்கார ஒரு நாற்காலி கூட இவங்க கொடுக்கலே.. என்னை அவருக்குத் தர தயாராயில்லேன்னு மூஞ்சிலே அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிச்சாங்க.. ஏமா, இப்படி செஞ்சிட்டீங்கன்னு அன்னிக்கு ராத்திரி, எங்கம்மாவை நா கேட்டதுக்கு அவங்க என்ன சொன்னாங்க, தெரியுமா சாரங்கன்?.. உனக்குக் கல்யாணம் முடிஞ்சிட்டா, நாங்கள்லாம் எப்படிடீ உயிர் வாழறது?  நீ சம்பாதிக்கற பணம் உன்னோட குடும்பத்துக்குத் தான் அப்புறம் சரியாயிருக்கும்ன்னாங்க.. 'உன்னோட குடும்பம்'ன்னு என்னை எங்கேயோ கொண்டு போய்ச் சேர்த்து அவங்க சொன்னதே எனக்கு ரொம்ப அசிங்கமாப் பட்டது!..

"என்னோட கல்யாணத்திற்கு அப்புறம் கூட என்னோட சம்பளத்லே பாதிப் பணத்தை ஒவ்வொரு மாசமும் தர்றதா அம்மா கிட்டே சொன்னேன்.. அந்த சமயத்லே நா மாசாமாசம் சம்பளம் கட்டிப் படிக்க வைச்ச என்னோட தம்பி வேறே காலேஜ் முடிச்சிட்டு ஜி.டி.லே ஒரு பெயிண்ட் கடைலே அக்கவுண்ட்ஸ் பாத்துக்கிட்டிருந்தான். அவன் கொடுக்கறதும் குடும்பச் செலவுகளுக்கு கொஞ்சம் உதவியா இருந்தது; இருந்தும் என்னைப் பெத்தவங்க, பூட்டியிருந்த சங்கிலியைக் கழட்டி விட்டு குடும்ப பாரச் சுமைதூக்கலிருந்து என்னை விடுவிக்கத் தயாரில்லே.. காலதிகாலத்துக்கும் என்னோட சம்பாத்தியத்திலேயே அவங்க பொங்கிச் சாப்பிட்டுண்டு இருக்கணுமாம்.. எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது.  பேசாம, மிஸ்டர் மோகனசுந்தரத்தைக் கூட்டிண்டு ஆடம்பரமில்லாம திருநீர்மலைலே என்னோட திருமணத்தை முடிச்சிண்டேன்.  கல்யாணத்திற்குப் பிறந்த வீட்லேந்து யாருமே வரலே.. ஆனா, இன்னும் அவங்களுக்கு மாசாமாசம் ஒரு தொகையைக் கொடுத்திண்டு தான் இருக்கேன்.  ஏன்னு கேட்டீங்கன்னா எனக்குப் பதில் சொல்லத் தெரியாது.  கொடுக்கணும்ன்னு மனசு சொல்றது; அந்த ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்திண்டிருக்கேன்.  அதுவே வேணாம்ன்னு என்னிக்கானும் சொன்னா அப்போ பாத்துக்கலாம்.  அப்போ குடுக்கறதை நிறுத்திண்டாப் போச்சு.  என்னோட தம்பிகளில் மூத்தவனுக்குக் கல்யாணம் ஆகி இன்னிக்கு அவனோட பெண்டாட்டி இவங்க எல்லோரையும் வேலை வாங்கிண்டு இருக்க, என்னோட அப்பாவும் இப்போ ஏதோ ஒரு வட்டிக் கடைலே ஒரு சேட்கிட்டே கணக்கு எழுதிண்டிருக்கறதா கேள்வி" என்று சொல்லி விட்டு நீண்ட ஒரு பெருமூச்சு விடுகிறாள் கமலி.

இவளது அந்தரங்கமான வாழ்க்கையில் எந்த அளவுக்குத் தான் பங்கு பெறுவது என்பது புரியாததாலும் இவளது உணர்வு கொட்டும் பேச்சில் எப்படிக் குறுக்கிடுவது என்பதை அறியாமலும் மெளனமாக இருக்கிறான் சாரங்கன்.

மலியைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது சாரங்கனுக்கு.  கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், மனம் இவளுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று எண்ணுவதிலேயே குறியாக இருக்கிறது. தன்னை விட இரண்டு வயது குறைவு என்று சொன்னாள்.  அப்போ இருப்பத்தாறு.  இருப்பத்து நான்கில் கல்யாணம்.  அதுவும் காதலித்தவனையே கைப்பிடித்த பேறு. இரண்டே வருஷத்தில் இப்படியான நிலை இவளுக்கு வந்திருக்கக் கூடாது. அப்படி வந்தது சோகம்.  என்ன நேர்ந்தது இவளுக்கு என்று அவன் மனம் சிலந்தி வலை பின்னுகிறது.

கமலியின் மனசில் ஆரம்பத்தில் இருந்த சாரங்கன் இப்பொழுது இல்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்னால் இதே ஸ்பென்ஸர்ஸின் கீழ் நடைபாதையில் அன்னிய ஆடவனாய் முதல் முதலாக அவனைப் பார்த்த போது இருந்த மூன்றாம் மனிதர் உணர்வு இப்பொழுது முற்றிலும் மாறிப் போயிருக்கிறது.  நெருக்கமான தன் தாய்வழிச் சொந்தக்காரனிடம் பேசிக்கொண்டிருக்கும் உணர்வில் கமலி நெகிழ்ந்து போயிருக்கிறாள். பத்திரிகையில் அவன் கொடுத்திருந்த விளம்பரம் பார்த்து வந்த எண்ணமே மறந்து போய் பாதிக்கப்பட்ட ஒருத்திக்கு நேர்ந்த சோகத்தை அனுதாபத்துடன் கேட்கும் ஓர் உத்தம இளைஞனிடம் தன் பரிதாபத்தைச் சொல்லும் உணர்வு அவள் நெஞ்சில் மேலோங்கியிருக்கிறது.

அவளாகச் சொல்லட்டும் என்று காத்திருக்கிறான் சாரங்கன்.  அடிபட்டிருக்கும் அவள் நெஞ்சை இன்னும் கீறிப் பார்க்கக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வில் அவன் இருந்தாலும் முதலில் இவளை சகஜ நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணத்தில் அதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.
நீண்ட மெளனத்திற்குப் பிறகு தலையைக் கவிழ்த்தபடி, "விவரமா சொல்றத்துக்கு எனக்கு சக்தி இருக்குமான்னு தெரிலே; எல்லாத்தையும் சொல்றதுக்கும் யோசனையா இருக்கு" என்கிறாள் கமலி.

"என்ன யோசனை?" என்று கேட்கையில் சாரங்கனின் புருவங்கள் உயர்ந்தது அவன் முக அழகிற்கு அழகு சேர்க்கிறது.

"ஜெண்டர்.  நீங்கள் ஆண்.  நான் பெண்."

"அதனாலென்ன?.."

"ஒரு ஆண், பெண் பட்டத் துயரைப் புரிஞ்சிக்க முடியுமான்னு."

"இன்னொருத்தர் பட்ட கஷ்டத்தைப் புரிஞ்சிக்கறதிலே இந்த ஆண்-பெண் எங்கே வந்தது? துயரம் பொது இல்லையா?.."

எல்லாவற்றையும் பகுத்துப் பகுத்து பொதுவில் வைத்துப் பேசும் அவன் குண விசேஷம் அவளுக்குப் புதுசாக இருக்கிறது.  எவ்வளவு அழகாகச் சொல்கிறான்?..  'துயரம் பொது இல்லையா?'-- ஆமாம், துயரம் பொது தான். ஆண்-பெண் பேதமில்லை அதற்கு. ஆண் துயரம்- பெண் துயரம் என்று பேதப்படுத்திப் பார்ப்பதற்கு எதுவுமில்லை.  எல்லாவற்றையும் இப்படி ஆண்-பெண் என்று பேதப்படுத்திக் குடுவைக்குள் அடைப்பது தான் அத்தனை அனர்த்தங்களுக்கும் தோற்றுவாயோ என்று அவளுக்குத் தோன்றுகிறது. இந்த சிந்தனை மனசில் உறைத்ததும், ஆயிரம் வாசற்கதவுகள் விரியத் திறந்து வெளிச்சம் பளீரிட்ட உணர்வு ஏற்படுகிறது.

லேசாக ஒரு புன்முறுவல் அவள் இதழ்க்கடையில் பூத்து மறைகிறது.  அவனுடன் வெறுமனே பேசிக் கொண்டிருந்தால் போதும் என்று தோன்றுகிறது. இந்த பேச்சே மனசுக்கு மருந்திட்டு தன் குழப்பங்களுக்கு பதில் சொல்லும் போலிருக்கிறது.   அந்த மருந்து இந்த நேரத்தில் அவசியமாகத் தெரிகிறது. இதுவரை தனக்குள்ளேயே போட்டு எல்லாவற்றையும் உழப்பி தானும் அந்த சகதியில் உழன்று கொண்டிருப்பதாக அவளுக்குப் படுகிறது.  புது ரத்தம் பாய்ச்சின மாதிரி புது சிந்தனைகள் மனசில் பூத்துக் குலுங்கி மணம் பரப்பினால் எவ்வளவோ தேவலை.  அதற்கு இவன் பேச்சு வழிகோலும் எங்கிற நம்பிக்கை நெஞ்சில் விதை ஊன்றுகிறது.

 "துயரம் பொதுவாயிருந்தாலும்.." சாரங்கன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் கமலியின் மனசில் இப்போது ஸ்பஷ்டமாகப் பதிகிறது. " அது போகட்டும். இப்படிப் பாருங்கள்.  உங்களுக்கு ஏற்பட்ட துயரம் ஆணினால் என்கிறீர்கள். அப்படிப்பாத்தாக்கூட இன்னொரு ஆணுக்கு அதைப் புரிஞ்சிக்கறது ஈஸி இல்லையா?"

பிரச்னையைப் பிரச்னையாய்ப் பார்த்து அவன் பேசுகிற விதம் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.  இப்படி ஒரு ஆத்மாவைத் தானே இத்தனை நாளும் அவள் தேடிக் கொண்டிருந்தாள்?..;

"ஆணினால் மட்டுமில்லை. பெண்ணுக்குத் துயரம் பெண்ணாலேயும் இருக்கு.  அது தனி." என்கிறாள் அவள்.

"எஸ். ஐ அக்ரி.  பெண்ணால் ஆணுக்கு ஏற்படும் துயரம் என்று ஒரு தனி கேட்டகெரி வேறே.  ஆக, துயரம் பொது.  அந்தப் பொதுவான துயரத்தை ஆணும் பெண்ணும் எடுத்து ஒருத்தர் மேல் ஒருத்தர் பிரயோகிச்சிக்கறாங் கன்னு எடுத்துக்கலாமா?..  இல்லை, ஆணும் பெண்ணும் கலந்த உறவில் துயரம் என்பது யாருக்கு ஏற்பட்டாலும் சரி, அது இரண்டு பேரையுமே பாதிக்கிறது என்கிற யதார்த்த உண்மையை உணராமல் இருக்கிறோமா?.. இதோ பாருங்க, கமலி!  ஒண்ணு சொல்லட்டுமா?.. பிராக்டிகலாப் பார்த்தா யார் வலியையும் யாரும் தாங்கறதில்லே.. துயரம் மட்டும் மனசிலே தேங்கிப் போயிடக்கூடாது.  தேங்கினா உடல் ஆரோக்கியத்துக்கு கேடு. அது வெளியேற ஒரு வடிகால் வேணும். யாருக்கிட்டையாவது பகிர்ந்துக்கறது தான் அதுக்கான வடிகால். அப்படிப் பகிர்ந்து கொள்ள அதை அனுதாபத்தோடக் கேக்கக் கூடிய மனுஷ மனம் தேவையாயிருக்கு. அது கிடைச்சா பாரத்தை இறக்கி வைச்ச மாதிரி ஒரு ரிலீஃப் கிடைக்கும்.  அந்த ரிலீஃபே மருந்து தான். கூடவே ஒரு வழிகாட்டலும் கிடைச்சா பரம சந்தோஷமாய் போய் விடும்."

"அப்படீங்கறீங்க..  ஐ மீன் அப்படி சந்தோஷம் கிடைக்கும்ங்கறீங்க?.." என்று அவள் விழி விரித்து கேட்ட பொழுது, தான் சொல்வது அட்சரம் பிசகாமல் இவள் உணர்வில் படிகிறது என்கிற நிம்மதி சாரங்கனுக்குக் கிடைக்கிறது.

"அது ஆளாளைப் பொருத்த விஷயம்..   சந்தோஷத்தை உணரக் கூட ஒரு பக்குவம் தேவை.  இருந்தாலும் சில விஷயங்கள் முடியும், முடியாதுன்னு இல்லே;  முடியணும்.  முடியறதுக்காக முயற்சி செய்யணும். அவ்வளவு தான்."

இப்படியான அனுதாபம் இல்லாத ஒருத்தனைச் சந்திக்கப்போய் போனதடவை பொறியில் சிக்கிய நினைவு படச்சுருளாய் அவள் நினைவில் ஓடுகிறது.   விபத்துக்கள் சொல்லிக் கொண்டு வருவதில்லை. நேரப்போகிறது என்று எல்லா வினாடியும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்து அப்படி எதிர்பார்க்கிற மாதிரியே நேர்ந்தால் அது விபத்தும் இல்லை.   அவள் அப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படி நடந்தும் இப்பொழுது இன்னொரு ஆடவனை சந்திக்க வந்திருக்கும் துணிவைக் கொடுத்தது அந்த விளம்பர வாசகங்கள்.  அந்த விளம்பர வாசகங்களுக்குச் சொந்தக்காரனான இந்த ஆண்மகனிடம் அந்த விபத்தைப் பற்றியும் சொல்ல வேண்டுமென்று அவள் மனம் துடிக்கிறது.

"கிஷோர்ன்னு ஒருத்தன், சாரங்கன்.. அவனிடம் வசமாக நான் மாட்டிக் கொண்டு தெய்வாதீனமாக தப்பி மீண்ட கதையை உங்களுக்குச் சொல்ல வேண்டுமே.." என்று ஆரம்பித்த பொழுதே அவள் குழந்தைமை அவனில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. "நீங்க எதுவுமே சொல்ல வேண்டாம்.  சொல்லாமலே என்ன நடந்திருக்கும் என்று எல்லாமே புரிகிறது" என்கிறான் சாரங்கன்.

"அது எப்படி?.. சொன்னாத்தானே தெரியும். சொல்லாமலே புரியறதுங்கறீங்க?"

"தெய்வாதீனமாகத் தப்பினேன்னு சொன்னீங்களே! அந்த ஒரு வரிலேயே அத்தனையும் அடங்கிப் போச்சு. தனியாச் சொல்லணும்ன்னு இல்லே."

"பெண்ங்கற ஜீவனே தன் உபயோகத்துக்கான ஒரு பொருள் மாதிரி பல ஆண்களுக்கு மாறிப் போனது எப்படி நேர்ந்ததுன்னு தெரிலே, சாரங்கன்..   ஆனா, ஒண்ணு நிச்சயம்.  திடீர்ன்னு நிகழ்ந்த புரட்டிப் போட்ட மாற்றம் இல்லை, இது! கொஞ்சம் கொஞ்சமாக 'பெண்ங்கறவ இதுக்குத் தான்'ங்கற மாதிரி ஆயிடுச்சு.  தன்னைப் போலவே அன்பு, ஆசை, கோபம், பொறாமை, பொறுமை அத்தனையும் கொண்ட ஒரு உயிர்ன்னு ஏன் இவங்களுக்குத் தெரியாமப் போச்சுன்னு அடிக்கடி நினைச்சிப்பேன்".

"நீங்க சொல்றது புரியறது.." என்கிறான் சாரங்கன்.

"ஒரு துணையில்லாம பெண்ணாலே வாழவே முடியாதுங்கற நிலைமை இருக்கறது ரொம்ப கொடூரம்.  ஒரு வயசுக்கு வந்த பெண் அப்பனோ, ஆத்தாளோ, கணவனோ இல்லாமல் தனியாக வாழ்ந்தாளானால் அவளை சுத்தி எத்தனை கதைகள்?..  தாய் மட்டும் கூட இருந்தால் சரி. மத்தபடி ஆணைச் சார்ந்தே அவள் இருக்க வேண்டும் என்பது நியதியாப் போய், அப்படி இல்லாது போனால் எல்லாவித இழிவுகளுக்கும் அவள் இரையாகிப் போவாள் என்பதே நடைமுறைத் தந்திரமாக மாறிப் போயிருக்கு. இல்லையா, சாரங்கன்?"

"பெண்ணின் பாதுகாப்பு குறித்து இந்த சமூகம் கொண்டிருந்த அதீத அக்கறை கூட அப்படி உருமாறிப் போயிருக்கலாமில்லையா?.." என்று சாரங்கன் சொன்ன போது நிமிர்ந்து அவனை நேருக்கு நேர் சுட்டு விடுவது போலப் பார்க்கிறாள் கமலி.  அடுத்த வினாடியே தலை தாழ்த்தி "நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள், சாரங்கன்?" முணுமுணுப்பாய்க் கேட்கிறாள்.


(தொடரும்)
                                                     

Wednesday, September 6, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி: 3


  முன்பகுதி:    http://jeeveesblog.blogspot.in

சாரங்கன் சொன்ன பதில் கமலிக்குத் திருப்தியாக இருக்கிறது.

"வெரிகுட்.." என்று அனிச்சையாக அவள் உதடுகள் முணுமுணுக்கின்றன.

 "அப்போ, சாரங்கன்.. ரொம்ப சரி.. என்னோட கணக்குத் தப்பில்லை.  வித்தியாசமான உங்க பதில்களிலேயே உங்க தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் உணர்கிறேன்.  போகப்போக இன்னும் நா சொல்லப்போற விஷயங்களைக் கேட்டு நீங்க என்ன முடிவுக்கு வரப்போறீங்களோ, எனக்குத் தெரியாது.. ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம், சாரங்கன்..    சில பிரச்னைகளைப் பத்தி விவாதிக்க, அது பத்தி ஒரு சுதந்திரமான முடிவை நாம எடுக்கத் தான் நம்ம ரெண்டு பேருக்கிடையே இப்படியான ஒரு சந்திப்பு அவசியம்ன்னு நா நெனைச்சேன்.  உங்க பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்ததும் எனக்கேற்பட்ட சந்தோஷத்தை இப்போ உங்களோட பகிர்ந்துக்க ஆசைப்படறேன். எவ்வளவு துணிச்சலான முற்போக்கான விளம்பரம் அது!.. உங்க விளம்பர வாசகங்கள் தான் என்னை இழுத்துக் கொண்டு வந்து இப்போ உங்க முன்னாடி உக்காத்தி வைச்சிருக்கு.. அந்த வாசகங்களின் கீர்த்தியின் அடிப்படியில் தான் என்னோட தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கைலே பங்கு பெற, அது பத்திப் பேச உரிமையோட உங்களுக்கு அனுமதி அளிச்சிருக்கேன்.  காரணம் இதுலே உங்களோட பங்கு மகத்தானதாக இருப்பதால் தான்.  இதுலே சுதந்திரமான ஒரு முடிவுக்கு வர்றத்துக்கு உங்களுக்குப் பூரண உரிமையுண்டு.  அதுக்கு முன்னாடி, நீங்க தவறா நெனைக்கலேனா, உங்களை நா சில கேள்விகள் கேட்க அனுமதிப்பீங்களா?" என்று பவ்யமாகக் கேட்கிறாள் கமலி.

"ஓ..எஸ்.. நீங்க கேக்கலாம்.." என்று அவள் பேசும் பாணியில் தன்னையே மறந்திருக்கும் சாரங்கன் சம்மதம் தெரிவிக்கிறான்.

"உங்களோட ரெண்டு மூணு தடவைகள்  தான்     ஃபோன்லே  பேசிருக்கேன்.    இன்னிக்குக் காலம்பற கூட போனை எடுத்ததுமே நான்னு தெரிஞ்சதும், உங்களோட போனுக்காகத் தான் காத்திண்டிருக்கேன்னு நீங்க சொன்னதும் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது, தெரியுமா சாரங்கன்.. ஓ.. இட் ஈஸ் கிரேட்!  பாலைவனத்திலே சோன்னு மழை பெஞ்ச மாதிரி அது..  என்னோட சந்தோஷத்தை விட்டுத் தள்ளுங்கள். என் போன் காலுக்காக காத்திண்டிருக்கேன்னு சொன்னீங்களே, அப்படி மனப்பூர்வமா உங்களை காக்க வைச்ச சக்தி, அதுக்கான காரணத்தை நான் தெரிஞ்சிக்கலாமா, சாரங்கன்?"

இந்தத் தடவை சாரங்கன் பலமாகச் சிரிக்கிறான். அவன் விரல் நுனிகள் டேபிளில் கொஞ்சமே சிதறியிருக்கும் தேநீர் துளிகளைக் கோடுகளாக இழுக்கின்றன. "ஓ! என்ன வெளிப்படையா ஒரு கேள்வியைக் கேக்கிறீங்க, கமலி.. இதுக்குக் கூட நா பதில் சொல்லியே தீரணுமா?" என்கிறான்.

"கட்டாயமா, என்னோட எந்தக் கேள்விலேந்தும் நீங்க தப்பிச்சிண்டு நழுவிட முடியாது" என்று லேசாகச் சிரித்துக் கொண்டு ஆள்காட்டி விரலை அவனை நோக்கி விளையாட்டாக பத்திரம் காட்டுகிறாள் கமலி.

"இந்தக் கேள்விக்குக் கூட.."

"நிச்சயமா.."

"சரி. சொல்றேன்--" என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் சாரங்கன். "சொல்லப்போனா மூணே  தடவைகள் தான் நாம போன்லே பேசி இருக்கோம்.  உங்களைப்  பத்தித் தெரிஞ்சிக்க அதுவே போதும்ன்னு எனக்குத் தோண்றது.  ஏன்னா, முதல் தடவை தயங்கித் தயங்கி என்னோட நீங்க பேசினப்பவே,  உங்க குரல் எனக்கு ரொம்பவும் பிடிச்சுப் போயிடுத்து. அந்தக் குரலில் இனிமை மட்டுமில்லை, அதுலே ஒரு போதை இருந்ததுன்னு கூடச் சொல்லலாம். ரொம்ப நாள் பேசிப் பழகினதுக்கு அப்புறம் தான் ஒருத்தரைப் பத்தித் தெரிஞ்சிக்க முடியும்ன்னு இல்லே. பேச்சிலே, எழுத்திலேலாம் ஒருத்தரோட மனசு தெரிஞ்சிடும். அப்படி ஒருத்தர் மனசைப் படிக்கத் தெரிஞ்சிருந்தா, அப்படித் தெரிஞ்சிக்கறதுக்கு ஓரிரு சந்தர்ப்பங்கள் கிடைச்சாப் போதும். உங்களுக்கு ஞாபகம் இருக்கா.. பேப்பர்லே என்னோட விளம்பரத்தைப் பார்த்திட்டு நம்ம ரெண்டு பேருக்கு இடையேயான பேச்சை நீங்க தான் ஆரம்பிச்சு வைச்சீங்க.. அன்னிக்கு நீங்க எங்கிட்டே பேசினது ரெண்டு நிமிஷத்துக்கு மேலே இருக்காது. இருந்தாலும் அந்த  ரெண்டு    நிமிஷமே எனக்குப் போதுமானதா இருந்தது, நாம் ரெண்டு பேருமே ஒரே அலைவரிசை சிந்தனை உள்ளவங்கன்னு தெரிச்சிக்கறத்துக்கு..

ஒரு  சங்கீதக் கச்சேரியைக் கேட்பது போல அரைக்கண் மூடிய மோன நிலையில் தான் சொல்வதை முழுமையான ஆழத்துடன் கேட்டுக் கொண்டிருக்கும் கமலியை உன்னிப்பாகப்  பார்த்துக் கொண்டே சாரங்கன் தொடர்கிறான்:  "அடுத்த நாள் பேசினப்போ தான் எங்கிட்டே, ராகுல சாங்கிருத்தியானின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' புஸ்தகத்தைப் பத்திச் சொன்னீங்களா.. நீங்க சொன்னதினாலேயே அந்தப் புஸ்தகத்து மேலே ஒரே கிரேஸாயிடுத்து. அந்தப் புஸ்தகத்தைப் பத்திக் கேள்விப் பட்டிருக்கேனே தவிர படிச்சதில்லே.. உங்ககிட்டே அன்னிக்குப் பேசி போனை வைச்சதுமே ஹிக்கின்பாதம்ஸ் போய் அந்தப் புஸ்தகத்தை வாங்கிண்டு வந்தேன். அன்னிக்கே அதைப் படிச்சு முடிக்கறத்தே, ராத்திரி மணி மூணு!  அந்தப் பின் இரவிலும் இப்படிப் பட்ட அருமையான ஒரு புஸ்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய உங்கள் ஞானம் என் மனசிலே பிரமிப்பாத் தேங்கிப் போயிடுத்து..  அதுக்கப்புறம், நீங்க கூப்பிட்டுப் பேச மாட்டீங்களான்னு ஒரு ஏக்கமே என்னுள் ஏற்பட ஆரம்பிச்சது..  உங்களை நேர்லே பாக்கற ஆசை. அதனாலத் தான் அன்னிக்கு உங்க ஆபீசுக்கு வந்தது.."

மாணவர் குழாத்திற்கு கஷ்டமான கணக்கை விளக்கும் ஓர் ஆசிரியன் போல் தொடர்ந்து சாரங்கன் தன் உணர்வுகளைக் கமலிக்குக் கூறுகிறான்: "பத்திரிகைலே நான் கொடுத்திருந்த விளம்பரத்தைப் பத்திச் சொன்னீங்க. அப்படியான ஒரு விளம்பரம் என்னை பிரதிநிதித்துவப் படுத்துவதாக நீங்கள் நினைப்பதிலும் எந்தப் பிழையும் இல்லை.  வாழ்க்கை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதத்தில் வார்த்தெடுக்கிறது.  அவங்க அவங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தான் அந்த வார்ப்புக்கும் காரணமாகிப் போகிறது. என்னோட வார்ப்பு, நான் அடைஞ்ச அனுபவங்களுக்கும், அந்த அனுபவங்களினால் என்னுள் உருவான என் உணர்வுகளுக்கும் சொந்தமானது.. என் மாதிரியான அனுபவம் ஏற்படாத ஒருத்தருக்கு என் அனுபவம் புதுசாகவோ இல்லை பாமரத்தனமாகவோ இருக்கலாம். இதையே இன்னொரு கோணத்திலே கூடப் பார்க்கலாம்.. நா எப்படிப்பட்ட உணர்வுகளை அனுபவிச்சேனோ, எப்படிப்பட்ட உணர்வு என்னை ஆட்டுவிச்சதோ, அதே உணர்வுகளை நீங்களும் அனுபவிச்சதினாலே தான், அதே உணர்வு உங்களையும் ஆட்டுவிச்சதினாலே தான் என்னோட பேசினதற்கும், இப்போ இங்கே என்னை வரவழைச்சதற்கும் காரணம்ன்னு நா முடிவுக்கு வர்றதிலேயும் தப்பில்லை தானே?"

கமலி கலகலவென்று சிரிக்கிறாள். "மிஸ்டர் சாரங்கன்.. நீங்க உங்க மனசிலே இருக்கறதை வெளிப்படையாச் சொன்னதுக்கு நன்றி.  என்னை நேரிலே பாத்ததுக்குப் பின்னாடியும் அப்படியே பேசறதினாலே நம் நட்பு மீதான உங்கள் விருப்பத்தில் மாற்றம் ஏதும் இல்லைன்னு தெரியறது.. ஆம் ஐ கரெக்ட்?.."

"அப்கோர்ஸ்.." என்று புன்னகை பூக்கிறான் சாரங்கன்.

"அந்த உங்களோட விருப்பம், வெறும் விருப்பம்ங்கற நிலைலேயே இருக்கா இல்லை அதைத் தாண்டி வேறே ரூபம் அடைஞ்சிருக்கான்னு தெரியணும் சாரங்கன்.  வேறே ரூபம் பெற்றிருந்தா என்னைப் பத்தி நிறைய உங்களுக்குச் சொல்லணும்.  என்னை விட ரெண்டு வயசு கூட உங்களுக்குன்னு உங்களோட விளம்பரம் பாத்துத் தெரிஞ்சிண்டேன். அதைத் தாண்டியும் உங்களைப் பத்தித் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்" என்று சொல்லியபடியே தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை கொஞ்சம் முன்னுக்கு நகர்த்தி சாரங்கனின் முகம் பார்த்துப் பேசுவதற்கு வாகாக உட்கார்ந்து கொண்டாள் கமலி.

இப்பொழுது தான் முதல் முறையாகப் பார்ப்பது போல சாரங்கன் நேருக்கு நேராக கமலியை நிமிர்ந்து பார்க்கிறான். அந்தப் பார்வையில் ஒருவித மென்மை இருந்ததே தவிர எந்த விகல்பமும் இல்லை.   கமலிக்கோ  அவனது மேடிட்ட நெற்றியும், தீட்சண்யமிக்க கண்களும் ஒரு நல்ல ஆண்மகனின் துணை கிடைத்த சந்தோஷமாய் நெஞ்சில் ஜீவநதிப் பிரவாகம் பொங்கிற்று. 'பெண்ணே, பட்ட கஷ்டம் போதும், எதிலும் அவசரப்படுகிறாய். யோசி, யோசி..' என்று அவள் மனக்கோடியின் ஒரு மூலையிலிருந்து ஆலோசனை கிடைத்தது.  'ச்சீய்.. சும்மா இரு' என்று எழும்பிப் பரபரத்த அதை அடக்குகிறாள்.  இந்த நிமிஷமே மனப்பூட்டை உடைத்து தான் பட்ட மனவேதனை அத்தனையையும் சாரங்கனிடம் கொட்டி விட வேண்டும் என்று ஒரு பரப்பரப்பு அவளிடம் தொற்றிக் கொள்கிறது.  அந்த சமயத்தில் அவர்கள் அமர்ந்திருந்த அந்த ரெஸ்டரண்ட் அறையில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லாததும் அவர்களது தனிமைக்குப் பங்கம் விளைவிக்காது பாதுகாப்பான சூழலாய் இருக்கிறது.

 "இந்தக் காதல்ங்கற வார்த்தைக்குத் தான் காலத்துக்குக் காலம் மனம் போன போக்கில் எத்தனை மாறுப்பட்ட அர்த்தங்களைக் கொடுக்க துணிஞ்சிட்டாங்க, பாத்தீங்களா?.." என்று 'கபக்'கென்று தீப்பற்றிக் கொண்டாற் போல் கமலி திடும்மென சாரங்கனை நோக்கிக் கேட்கிறாள். "சத்தியமா பாரதி சொன்ன காதல் இப்போ இல்லேனாலும், பாரதியைப் படிச்சதாலே தான் என் மனசிலேயும் பூத்த காதலை உணர முடிஞ்சது, சாரங்கன்!" என்று சொல்லி விட்டு ஒரு வினாடி மெளனமாகிறாள் கமலி.    

அவள் படும் வேதனையை அவள் முகத்திலேயே படிக்க முடிந்ததினால், அவள் சொல்ல முடிந்தவாறு அதைச் சொல்லட்டும் என்று சாரங்கன் பொறுமையாய் காத்திருக்கிறான். கொஞ்ச நேரத்திற்கு முன்னால் குண்டு மல்லிகை போல் மலர்ந்திருந்த அவள் முகம்  இப்பொழுது சாம்பிச் சிறுக்க விழிக்கோடியில் லேசாய் முத்துப் போல் ஒரு நீர்த்துளி பொட்டாய்ப் பளபளக்கிறது.

அவனை நேராய்ப் பார்க்கத் துணிச்சலில்லாதது போல் கொஞ்சமே லேசாய்த் தலை நிமிர்த்தி, "மிஸ்டர் சாரங்கன்!.. ஸீ..." என்று கழுத்துக்குப் பின்பக்கம் கை வைத்து, இத்தனை நேரம் கூந்தலுக்கு அடியே கிடந்த தனது தாலியை வெளியே எடுத்துச் சாரங்கனுக்குக் காட்டுகிறாள் கமலி. "ஸீ.. ஐ ஆம் எ மேரிட்டு கேர்ல்" என்று அவள் உதடுகள் படபடக்க உச்சரித்த பொழுதும் அவள் சொன்ன வார்த்தைகளைச் செவிமடுத்ததில் தான் அடைந்த எந்த திடுக்கிடுதலையும் அவள் உணர்ந்து விடலாகாது என்று சாரங்கன் மெளனம் காக்கிறான்.


(தொடரும்)

Monday, September 4, 2017

கமலி காத்திருக்கிறாள்..

                                                2

முன் பகுதி:  http://jeeveesblog.blogspot.in/

வளை முதலில் அடையாளம் கண்டு கொண்டது அவன் தான்.

"ஹே.. கமலி.." என்று தனது காதுகளுக்கருகில் கரகரத்த அந்த ஆண்மை கலந்தக் குரலைக் கேட்டு ஒருவிதக் கூச்சத்தோடு கொஞ்சம் நகர்ந்து, அந்த அந்நிய ஆடவனை அரைகுறையாக நோட்டமிடுகிறாள் அவள்.

"நான் எதிர்பார்த்ததுக்கு மேலேயே, யூ ஆர் ஸோ ப்யூட்டிபுல்.." என்று தொடர்ந்த அவனது புகழுரைகள் தன்னைக் கிறக்கப் படுத்தாமல் ஸ்பென்ஸர்ஸின் உள்வட்ட நடைபாதை தாண்டி எக்ஸ்லேட்டர் வரை பார்வையால் அளந்து விட்டு "ஹலோ சாரங்கன்! நாம நடந்திண்டே பேசலாமே.." என்று மெல்லத் திரும்புகிறாள் கமலி.

"ஷூயூர்.." என்று அவனும் அவளைத் தொடர்கிறான்.  கூட நடக்கும் பொழுது அவனுக்கும் தனக்கும் ஒரு ஆள் நிற்கிற இடைவெளி விட்டுத் தொடர்கிறாள் கமலி.

கொஞ்ச நேரம் இருவரில் ஒருவரும் பேசவில்லை.  அவன் தன்னில் ஸ்பேரே செய்துகொண்டிருக்கும் விதேசி செண்ட்டின் லாவெண்டர் மணம் அவளைத் தாண்டி மணக்கிறது.  அவள் இதுவரை நுகர்ந்து அனுபவித்து அறியாதது;  அதனால் வேறுபட்டுப் பிடித்திருக்கிறது. எக்ஸ்லேட்டர் வந்ததும், "மேலே போகலாமா?" என்று அவளைப் பார்த்துப் புன்முறுவலுடன் கேட்கிறான் சாரங்கன்.

அவளிடமிருந்து அனுமதி கிடைத்ததும் அவளிடமிருந்து கொஞ்சம் விலகி அவளை முன்னால் போக விட்டு, பின் படியில் தொடர்கிறான் அவன்.

மேல் தளத்திற்கு வந்ததும் ரெண்டாவது சுற்றில் தென்பட்ட அந்த சின்ன ரெஸ்டரண்ட்டைக் காட்டி, "ஏதாவது சாப்பிடலாமா?" என்று முகத்தைத் தூக்கி, சாரங்கனைப் பார்த்தவாறு கேட்கிறாள் கமலி...

அந்த ஓட்டலுக்குள் போய் ஏதாவது சாப்பிடுவதும், இவளோடு தனித்த ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு பேசுவதற்குச் சாதகமான ஒன்றாகத் தான் இருக்கும் என்று எண்ணியவனாய், "ஓ, சாப்பிடலாமே" என்று தன் தோள் உயரத்திற்கே வரும் கமலியைப் பார்த்து சாரங்கன் தலை குனிந்து சொல்கிறான்.

சாயந்திர வேளையாதலால் கூட்டம் அதிகமாகத் தான் இருக்கிறது,. அவளுக்கு மிக நெருக்கமாக நடந்தபடி 'பேமலி ரூம்' என்று ஒதுக்கப்பட்ட, பிளைவுட் பலகையால் தடுக்கப்பட்ட அந்தச் சிறிய அறையின் கதவை ஒரு கையால் அவள் மேலே மோதிவிடாதபடி பிடித்துக் கொண்டு, "ப்ளீஸ்.. கம் இன்" என்று புன்முறுவலுடன் கூறுகிறான்.

கமலியும் அவனது அந்தப் புன்முறுவலை அங்கீகரித்ததாகக் காட்டிக் கொள்ள இதழ்களைப் பிரிக்கிறாள்... சுத்தமாக இருந்த அந்த அறையில் எதிரும் புதிருமாக இரண்டிரண்டு அடுக்குகளாகப் போடப்பட்டிருந்த டேபிள்களில் ஒதுக்குப் புறமாக ஒன்றைத் தேர்ந்து இருவரும் எதிர் எதிரே அமர்கின்றனர்.

ஒரு பெண் துணையுடன் தனித்து இருக்கையில் பேசாமல் இருப்பது நாகரிகமல்ல என்று உணர்ந்தாலும், பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று சாரங்கன் யோசித்துக் கொண்டிருக்கிறான்.

திடீரென்று அவனை நோக்கித் தலையைச் சாய்த்து, "ம்.. மிஸ்டர் சாரங்கன்! எப்படியோ நாம இரண்டு பேரும் போனிலே பேச ஆரம்பிச்சு இரண்டே நாள்லே நமக்குள்ளே ஒரு பழக்கமாகி, இப்போ நாம தனியா இந்த ஓட்டல்லே உட்கார்ந்திருக்கறது__ ஓ,  இதெல்லாம் வேடிக்கையாயில்லை" என்று கமலி சொல்லிச் சிரிக்கிறாள்.  அந்த நொடியே வரவழைத்துக் கொண்ட சிரிப்பாக அதை அவளே உணர்ந்து தனக்குள் குறுகிப் போகிறாள்.

"எஸ். எஸ். நானும் அதைத் தான் நெனைச்சிண்டு இருந்தேன்.  ஒண்ணை நா படிச்சிருக்கேன், கமலி!  சேர வேண்டிய ஒண்ணாக் கலக்க வேண்டிய இருவர் இந்த உலகத்திலே எந்த மூலைலே இருந்தாலும், எப்படிப் பிரிஞ்சு இருந்தாலும் கடைசிலே சேர்ந்தே தீருவாங்கன்னு..."

அவன் பேசி முடிகட்டும் என்ற கருத்தில் அவள் மெளனமாக இருக்கிறாள்.. அவளது அந்த மெளனமே அவனை மேலும் பேசத் தூண்டுகிறது..

"இதை-- இப்படி இணைய வேண்டிய இதயங்கள்லாம் தனித்தனியாகப் பிரிஞ்சு எங்கெங்கோ வாழ்ந்து பின்னாடி அவங்க வாழ்க்கைக் காலத்துக்குள்ளாறயே ஒண்ணா கலக்கறதைப் புஸ்தகங்கள்லே படிக்கறச்சே 'இதெல்லாம் சுத்த ஹம்பக், அசட்டுத்தனம்'ன்னு நா நெனைச்சதுண்டு... ஆனா, என்னோட சொந்த வாழ்க்கைலே இந்த மாதிரி ஒரு அனுபவம் ஏற்படறதைப் பாக்கறச்சே..."

ஒரு ட்ரேயில் பிஸ்கட்டும், தேநீரும் கொண்டு வந்து மேஜை மேல் வைத்து விட்டுச் செல்கிறான், 'என்ன வேண்டும்' என்று இடையில் கேட்டுக் கொண்டு போன வெயிட்டர்.

அதிலிருந்து பிஸ்கட் ஒன்றைக் கையிலெடுத்து அவனை ஓரக்கண்களால் அளந்த கமலி, ஒரு வினாடி பேசாமல் இருந்து விட்டு எதிர் சுவரில் மாட்டியிருக்கும் இயற்கைக் காட்சி படத்தைப் பார்க்கிறாள்..

வெயிட்டரின் நுழைவால் பேச்சைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்ட சாரங்கன், இவள் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை தன்னுள்ளேயே பரிசீலித்துக் கொண்டு மெளனமாக இருக்கிறான்.  ஆனால் அவனது யோசனைக்கோ, கற்பனைக்கோ அவசியமில்லாத முறையில் கமலியே மெல்லக் கனைத்துக் கொண்டு அவனை நேரடியாக நோக்கியபடி திடும்மென்று, "மிஸ்டர் சாரங்கன்.. நீங்க என்னைப் பற்றி என்ன நெனைக்கிறீங்க.. தயவுசெய்து மனசிலே படறதைப் பட்டவர்த்தனமாக நீங்க சொல்லணும்ன்னு விரும்பறேன்.." என்று லேசான புன்முறுவலுடன் அவனிடம் கேட்கிறாள்.

இவ்வளவு வெளிப்படையாக கேட்பாள் என்று அவன் நினைக்கவே இல்லை. அதுவே அவளது பலவீனமாகவும் அல்லது பலமாகவும் அவனுக்குத் தோன்றுகிறது.  தான் ஏதாவது சொல்லப் போக அது இவளுக்குப் பிடிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்ற தடுமாற்றமும் அவனுக்கு இருக்கிறது.  அவனது அந்தத் தயக்கத்தை உணர்ந்தவள் போல அவள் சொல்கிறாள்:

"நீங்க மனசிலே தோணினதைச் சொல்லலாம்.  யூ ஹேவ் காட் எவ்வரி லிபர்ட்டி டு ஸே.." என்று தன்னை ஒரு சுய விமரிசனத்திற்கு வலிய ஆட்படுத்திக்கொள்ளும் தோரணையில் அவள் தயாராக, அவன் "உங்களைப் பற்றி நெனைக்கறத்துகு என்ன இருக்கு?.. நீங்க படிச்சவங்க.  அலுவலகத்தில் வேலை பாக்கறவங்க. சோஷலாப் பழகறத்துக்குத் தெரிஞ்சவங்க, வாழ்க்கைய ரசிக்கணும்ன்னு ஆர்வமுள்ளவங்கன்னு தெரியறது.." என்று சொன்னால் அவளுக்கு பிடிக்காமல் போகாது என்று சொல்லி வைக்கிறான் சாரங்கன்..

அவள் மென்மையாகச் சிரிக்கிறாள்.  "ஓ, மிஸ்டர் சாரங்கன், நீங்க சரியான ஆள்தான்.." என்று கண்களைச் சுழற்றி அந்த அறையையே ஒரு பார்வை பார்த்து விட்டு, "ஆல்ரைட்.. நீங்க கடைசிலே சொன்னீங்களே, வாழ்க்கையை ரசிக்கணும்ன்னு ஆர்வம் உள்ளவங்கன்னு-- அதுக்கு, அந்த வாக்கியத்துக்கு அர்த்தம் என்ன?" என்று சிரித்துக் கொண்டே கேட்கிறாள்.

"அதுக்கு--" என்று இழுத்து விட்டு, இதற்கு என்ன பதில் சொல்வதென்று ஒரு வினாடி மடங்கிய யோசனையில் தடுமாறி விட்டு அதே சமயத்தில் தன் பதிலைக் கொண்டே தன்னை மடக்கும் இவளிடம் தான் மடங்கி விடக்கூடாதென்ற சுயபிரக்ஞையில் ஜாக்கிரதையாக வார்த்தைகளை வெளிப்படுத்துகிறான் சாரங்கன்.

"அதுக்கு என்ன அர்த்தம்? வாழ்க்கையை ரசிக்கறத்துக்கு நா எந்த அசாதரணமான அர்த்தத்தையும் மனசிலே வைச்சிண்டு சொல்லலே, கமலி.. அதுக்கு நா உணர்ற அர்த்தம் இது தான்:  நாம வாழற ஒவ்வொரு வினாடியும் நிஜம்னு நீங்க நெனைக்கிறீங்கன்னு நான் நெனைக்கிறேன். பொய் இல்லாத நிஜம் அது, இல்லையா.. அதுனாலே, அந்தந்த நிமிஷத்திலே சந்தோஷமா வாழ்வோம்'னு நீங்க நெனைக்கிறீங்க.. இந்த உடம்பிலே உயிரோட்டம் நின்ன பின்னாடி அது மண்ணோட மண்ணா மக்கிப் போகப்போறதே-- அதான், நிஜம்;  போன பிறப்பும் கிடையாது, அடுத்த பிறப்பும் கிடையாது.  எல்லாம் கதை; உடான்ஸ்.  இப்போ இந்த நிமிஷத்திலே நாம வாழறோமே அதான் உண்மை.  சொர்க்கம்ன்னு ஒண்ணு இருக்கணும்ன்னா, அது இந்த வாழ்க்கைலே தான் இருக்கணும்; அதை நாமே தான் உண்டாக்கிக்கணும்ன்னு நீங்க நெனைக்கிறீங்கன்னு நா நெனைக்கிறேன்.." என்று, தான் பேசும் விஷயம் குறித்து அவள் முகத்தில் ஏற்படும் மாறுதல்கள் மூலம் ஏதாவது தெரிந்து கொள்கிற முயற்சியில் அவள் முகத்தை உன்னிப்பாகக் கவனித்தபடி சொல்கிறான் சாரங்கன்.

அதே நேரத்தில் வாழ்க்கையின் பல விஷயங்களில் எதிராளியின் கருத்து என்னாவாக இருக்கக் கூடும் என்பதைத் தெரிந்து கொள்வதில் கமலி ரொம்பவும் கவனம் எடுத்துக் கொள்வதாக அவனுக்குப் படுகிறது.  ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான வாழ்க்கை ஒப்பந்தத்தைத் தீர்மானிக்கும் விஷயங்களாக இதெல்லாம் தான் இருக்கும் என்று இதெற்கெல்லாம் தான் அவள் முக்கியத்துவம் கொடுப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. தான் அதிகமாகப் பேசுவதற்கு ஏதுவாக அவள் அடக்கி வாசிக்கிறாள் என்கிற உணர்வு ஏற்பட்டதும், அவள் தன்னிடம் கேட்க விரும்பும் இந்த விஷயங்களிலெல்லாம் அவள் கருத்து என்னவாக இருக்கக்கூடும் என்று தெரிந்து கொள்வதில் அவன் ஆர்வம் அதிகரிக்கிறது.

"ஃபைன், சாரங்கன்!  இன்னொருத்தரோட உணர்வுகளைப் புரிஞ்சிக்கற சக்தி உங்களுக்கு ரொம்ப இருக்கு.." என்று அவன் சொன்னதை மிகவும் சிலாகித்துப் பாராட்டுகிறாள் கமலி. "சாரங்கன், நா ஒண்ணு கேக்கறேன்.  தப்பா நெனைச்சிக்க மாட்டீங்களே"

"நோ.. நீங்க எதைப் பத்தி வேணும்னாலும் கேக்கலாம்.." என்று மையமாகப் புன்னகை செய்கிறான் சாரங்கன்.

"இப்போ நாம ரெண்டு பேரும் நெருங்கிப் பேசிண்டு தான் நடந்து வந்தோம். இப்போ இந்த அறைலே உக்காந்திருக்கிற சில பேர் கூட நம்மை நெருக்கமா கவனிச்சிருக்கலாம்.  உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரானும் கூட நம்மைப் பாத்திருக்கலாம்.  இவங்கள்லாம், அதாவது இந்தச் சமூகத்தின் பிரதிநிதிகளான இவங்கள்லாம் ஒரு பெண்துணையோடு நெருக்கமா பழகற உங்களைப் பத்தி ஏதோ ஒரு விமரிசனக் கண்ணோட கூர்ந்து பாக்கறாங்கங்கறதையும், அதையே மையமா வைச்சு உங்க தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியும் ஒரு கதையைச் சிருஷ்டிக்க எந்த நிமிஷமும் அவங்க தயாரா இருக்காங்கறதையும் நீங்க நெனைச்சுப் பாத்தீங்களா? ஆர் யூ ஏபிள் டு ஃபாலோ மீ?" என்று யோசனையுடன் கேட்கிறாள் கமலி.

"எஸ்...எஸ்.. எனக்குப் புரியறது.." என்று அவசரமாக அவள் சொல்வதை அங்கீகரிக்கிறான் அவன். "அதனால் என்ன.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையே ஒரு நீடித்த பந்தத்தையும் உறவையும் ஏற்படுத்திக்கத் தானே இந்த சந்திப்பெல்லாம்.. அது தெரியாத யாரேனும் இது பற்றி என்ன நினைத்தால் தான் என்ன?.." என்று புன்னகையுடன் அப்படியான எதுவும் தன்னைப் பாதிக்கப் போவதில்லை என்கிற தீர்மானத்தில் சொல்கிறான் சாரங்கன்.


(தொடரும்)


Friday, September 1, 2017

கமலி காத்திருக்கிறாள்

சாப்பாட்டு நேரம்.

ஆபிஸே காலியாக வெறிச்சோடிக் கிடக்கிறது.  டிபன் பாக்ஸில் கொண்டு வந்திருந்த சாப்பாட்டைக் கமலி சாப்பிட்டு விட்டாள்.  நேற்று கூட இந்த நேரத்தில் தான் கமலி ஆபிஸ் டெலிபோனில் சாரங்கனுடன் பேசினாள்.  போன ஞாயிறு வழக்கமாக அவள் பார்க்கும் அந்த ஆங்கில செய்தித் தாளில் தான் 'மணமகள் தேவை' தலைப்பில் அந்த விளம்பரத்தைப் பார்த்தாள்.  அந்த விளம்பரத்தோடு தன் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தான் சாரங்கன்.  முந்தாநாள், நேற்று என்று இரண்டு தடவைகள் அவனோடு பேசியாயிற்று.  அவனது விளம்பர வாசகங்களும், தொலைபேசி உரையாடல் களில் அவன் தன்னைத் தனித்துக் காட்டிக் கொண்ட வித்தியாசமும் அவளை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இன்றைக்காவது நேரில் அவனைப் பார்த்தால் தேவலை என்று அவளுக்குத் தோன்றியது. அது தான் இன்றைக்கும் அவள் அவனுடன் பேச முனைந்தற்குக் காரணமும் ஆயிற்று.

கமலி டெலிபோன் ரிஸீவரை எடுத்து சாரங்கனின் எண்ணைச்சுழற்றுகிறாள்.  இந்த இரண்டு நாள் பேச்சில் அவன் தொலைபேசி எண்ணே அவளுக்கு மனப்பாடம் ஆகியிருந்தது.  போய்க்கொண்டிருந்த ரிங் சட்டென்று கட்டாகி மறுமுனையில் யாரோ டெலிபோனை எடுப்பது தெரிந்ததும், "ஹலோ, மிஸ்டர் சாரங்கன் இருக்கிறரா?" என்று மென்மையாகக் கேட்கிறாள் கமலி.

"கமலி,  நான் தான்.  உங்களோட டெலிபோனுக்காகத் தான் காத்திண்டு இருக்கேன்" என்று சொல்லி விட்டு இனிமையாகச் சிரிக்கிறான் அவன்.


அவன் அப்படிச் சொல்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.  முதல் இரண்டு நாட்களில் இல்லாத ஒரு சுதந்திரம் அவளிடம் இன்று அவனுக்குக் கிடைத்த மாதிரி இருந்தது. இப்படியெல்லாம் பேசுபவர்களைப் பற்றி அவளுக்கென்று ஒரு கணிப்பு இருந்தது.  அவனும் அப்படி இருந்து விடக் கூடாதே என்கிற ஆயாசத்தில் மனம் தொய்ந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், இயல்பாகப் பேச்சைத் தொடர்கிற தோரணையில் "ஓ.. அப்படியா?  சாப்பிட்டாச்சா?" என்று கேட்கிறாள்.  

"முடிச்சிட்டேன்.. நீங்க?.."

"நானும் ஆச்சு."

"கமலி, இன்னிக்கு காலைலே உங்க ஆபிஸ் பக்கம் வந்தேன்.  உள்ளே நுழைஞ்சு சர்ப்ரைஸா உங்களைப் பாத்திட்டுப் போகலாம்ன்னு தீர்மானம்.  ரிஸப்ஷன் வரை கூட வந்திட்டேன்.  அப்புறம் தான் அந்த ஞானோதயம் வந்தது.  பத்து பேருக்கு நடுவே, திடுதிப்புன்னு நான் அங்கே வந்து உங்களைப் பார்த்தா அதுனாலே உங்க கொலீக்ஸ் மத்திலே உங்களுக்கு சங்கடமாப் போயிடுமேன்னு திரும்பிட்டேன்.  ஆம் ஐ கரெக்ட்?.."

"அப்படீன்னு இல்லேனாலும், நீங்க செஞ்சது சரிதான்.  ஏன்னா, நாம இதுவரை ஒருத்தரை ஒருத்தர் நேர்லே பாத்திண்டது இல்லை தானே?.. அந்த மாதிரி நேரிடையான அறிமுகம் இல்லாம, அலுவலகம் மாதிரி இடங்கள்லே புதுசா அறிமுகப்படுத்திண்டு சந்திக்கறது நமக்கு ஓக்கேனாலும்,
பாக்கறவங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும், இல்லையா,  அதுக்காகச் சொன்னேன்" என்கிறாள் கமலி.

"குட்.   ஏறக்குறைய நீங்க நினைக்கற மாதிரி தான் நானும் நினைச்சேன்.  அதனாலே தான் திரும்பிட்டேன்"

அவன் அப்படிச் சொன்னது கமலிக்கு நிறைவாக இருக்கிறது.  நாகரிகம் தெரிந்தவர் என்று நினைத்துக் கொள்கிறாள்.

அவனைப் பற்றி அவசரப்பட்டு அப்படி நினைத்தது விட்டோமோ என்று அவள் நினைக்கற மாதிரி அடுத்து சாரங்கன் அவளிடம் கேட்கிறான்."கமலி, உங்க ஆபீஸூக்குப் பக்கம் தானே? ஈவினிங் உங்களுக்கு செளகரியப்படும்ன்னா 'அபிராமி'லே சந்திக்கலாமா?"

சட்டென்று அவன் அப்படிக் கேட்டதும் கமலி லேசாகத் துணுக்குறுகிறாள்.  இப்பொழுது மறுபடியும் அவனைப் பற்றி அவன் குணநலன்களை பற்றி மனசில் குழப்பம். முன்பின் பார்த்திராத பெண்களை முதன் முதல் ஒரு சினிமாவில் வைத்து சந்திக்கும் ஆணாக அவன் இருந்துவிடக் கூடாது என்பதை மிகவும் விரும்பியதைப் போல அவள் குரல் தழைகிறது.. "சினிமா வேண்டாம்.." என்று கத்தரித்தாற் போலச் சொல்லி விட்டு, அதற்கு மேல் எப்படித் தொடர்வது என்று ஒரு வினாடி யோசித்து.  அடுத்த வினாடியே, "ஒண்ணு செய்யலாமா?" என்கிறாள்.

"சொல்லுங்க.." எதிர்முனை குரலில் இருந்த லேசான பதட்டம் அவளுக்கு புரிபடுகிறது.

"நான் கூட உங்களைச் சந்திக்கறதிலே ஆர்வமா இருக்கேன். சில முக்கியமான விஷயங்களைப் பத்தி உங்ககிட்டே பேசணும். அதுக்காகத் தான் இந்த சந்திப்பு. அதற்கப்புறம் தான் மத்ததெல்லாம்.  இன்னிக்கு சாயந்தரம் ஸ்பென்ஸருக்கு வந்திடறீங்களா?.. காஃபி ஷாப் பக்கத்திலே. கரெக்டா அஞ்சரைக்கு.  மிஸ் பண்ணக் கூடாது.." என்று சொல்கையில் அவள் குரல் அவளுக்கே என்னவோ போல் இருப்பதை உணர்கிறாள்.

"நானா..  உங்களுக்கு முன்னாடியே அங்கே இருப்பேன்.  அது சரி, நாம தான் இதுக்கு முன்னாடி ஒருத்தரை ஒருத்தர் பார்த்ததே இல்லையே, நாம எப்படி அடையாளம் கண்டுக்கறது?.. ம்.. ஸப்போஸ் வேற யாராவது ஒரு மிஸ்ஸோட தோளைத் தட்டி 'கமலி'ன்னு ஆசையோட நா கூப்பிட்டுட்டு அவ செருப்பைக் கழட்டிட்டா.." என்று அவன் பிதற்றிச் சிரிக்கும் போது அவனுடைய அந்த மட்டரகமான ஹாஸ்யம் அவளுக்கு எரிச்சலை ஊட்டினாலும், நேரில் பார்த்துப் பேசித்தான் எல்லாத்தையும் தீர்மானிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மனசு தவிக்கிறது.

அவளது அந்த வினாடி மெளனத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல், "எப்படி உங்களை நான் அடையாளம் கண்டுக்கறது?" என்று மறுபடியும் சாரங்கன் கேட்கிறான்.

ஒரு சகஜ நிலைக்கு வந்து விட்ட தோரணையில் கமலி லேசாகச் சிரிக்கிறாள். "அடையாளம் தானே.. ரொம்ப ஈஸி.  நா இன்னிக்கு சிவப்பு ஸாரி கட்டியிருக்கேன்.  தோள்லே தோல் பை.  வலது கையிலே வாட்ச்.. ஓ.கே.. அடையாளம் போதுமா?"

"சிவப்பு ஸாரின்னு நீங்க சொன்னது ஒண்ணே போதும்.  மத்தவங்கள்லேந்து பிரிச்சுத் தனியாக் காட்டிடும்.  நா இன்னிக்கு சிமிண்ட் கலர் பாண்ட்;  ஒயிட் ஷர்ட்டை இன் பண்ணியிருப்பேன்.  கொஞ்சம் மாநிறமா, உயரமா, கர்லிங் ஹேர்ஸோட இருப்பேன்..  இதுலே என்ன கமலி பெரிய சிரமம் இருக்கு.. இன்னிக்கு சரியா அஞ்சரைக்கு ஸ்பென்ஸர்லே..."

"தயவு செஞ்சு தோளை மட்டும் தட்டிடாதீங்க.. நான் கொஞ்சம் என்ன, நிறையவே சென்ஸிடிவ்.."

"ஸாரி.. ஒரு பேச்சுக்கு நகைச்சுவையா அப்படிச் சொன்னேன்.. நீங்க நெஜம்ன்னு நெனைச்சிட்டீங்களா?" என்ற குரலில் ஏமாற்றம் வழியறது.

"பின்னே.. நெஜம் ஒண்ணையே பேசத் தெரிஞ்சவளுக்கு மத்தவங்க பேசற எல்லாத்தையும் அப்படித் தான் நெனைக்கத் தோணும்.  இல்லையா?"

"Again ஸாரி.. நேர்லே பாக்கும் பொழுது ஸ்பெஷலா மன்னிப்பு கேட்டுக்கறேன்..  ஓக்கேவா"

'உரிமை எடுத்துக் கொண்டு உள்மனசில் நுழைய முயற்சிக்கற பேச்சு.  அத்துமீறும் பொழுது சுட்டிக்காட்டினால், சட்டுனு பின்வாங்கற சாமர்த்தியம்.  எந்த அளவுக்கு எடுத்துக்கறதுன்னு தெரிலே; பாக்கலாம்' என்று கமலியின் சிந்தனை ஓடுகிறது.

"என்னங்க.. பேச்சு மூச்சே காணோம்.. கோபமா?"

"ம்..அதெல்லாம் ஒண்ணுமில்லே" என்கிறாள் கமலி.  அவனை ரொம்பவும் காய்ச்சி விட்டோமோ என்று தோன்றுகிறது.  ஆரம்பத்தில் இந்த மாதிரி ஒட்டாமல் இருப்பது நல்லதுக்குத் தான் என்று இன்னொரு மனம் ஜாக்கிரதை உணர்வைக் கூட்டுகிறது. "அப்போ பாக்கலாம், வந்திடுங்க.." என்று ஒருவரியில் முடித்துக் கொள்ள முயற்சிக்கிறாள்..

"சரிங்க, ஸீ யூ.." என்று அவனும் போனை வைக்கிறான்.

காண்டினுக்குப் போனவங்க, சின்ன குட்டி தலை சாய்த்தல் ஆசையில் Dormitory ரூம் போனவங்க என்று ஒவ்வொருவராக திரும்பி அவரவர் ஸீட்டை நிறைக்கத் தொடங்கி விட்டார்கள்.  கமலியும் டேபிளில் கிடந்த ஃபைல்களில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறாள்.

நாலரைக்கு கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று மூணு மணியை அலுவலக பெரிய சுவர்க் கடியாரம் காட்டிய பொழுது தோன்றுகிறது.

எதற்காக இந்த சந்திப்பு என்று நினைத்தவுடன் நெஞ்சம் கசந்தாலும், அடுத்த வினாடியே கமலியின் மனசில் அலாதியான ஒரு உறுதி வந்து உட்கார்ந்து கொள்கிறது.  அந்த உறுதி கொடுத்த தெம்பில் புத்துணர்ச்சி கிடைத்து முகம் பிரகாசமாகிறது.


(தொடரும்)


Related Posts with Thumbnails