மின் நூல்

Wednesday, December 13, 2017

பாரதியார் கதை

                                                                   
                                      1 








தென்பாண்டித் தமிழகத்தில் தேரோடும் வீதிகள் கொண்ட ஊர்  திருநெல்வேலி.

திருநெல்வேலி என்று அந்த ஊர் பெயர் பெறுவதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம்.   இருப்பினும் அந்த ஊரின் பெயரிலிருந்து  பெறப்படுகின்ற காரணம் எளிமையானது.   நெல் வயல்களே அந்த ஊரை வேலியாகச் சூழ்ந்து  இருந்ததால்  அவ்வூர் திருநெல்வேலி என்று பெயர் கொண்டது எனலாம்.

இப்பொழுது மாவட்டம் என்று அழைக்கப்படும்    பெரிய நகரங்கள் எல்லாம்  இதற்கு முன்னால் ஜில்லா என்று அழைக்கப்பட்டன..  திருநெல்வேலியும் ஒரு  ஜில்லா தான்.

திருநெல்வேலி  ஜில்லாவில்  எட்டையபுரம்  சின்ன ஊர்.   இப்பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியாக  இருக்கிறது.   எட்டையபுரம் இளசை என்றும் அழைக்கப்படுகிறது.   பாண்டிய மன்னரின் ஆளுகைப்  பகுதியாக இருந்த இடம்.   பின்னர் பாளையக்காரர்கள் வசம் வந்தது.  ஆங்கிலேயர்கள் காலத்தில் சமஸ்தான மன்னர்கள்.

அது  1882-ம்  ஆண்டு.  எட்டையபுரத்தில் வாழ்ந்த சின்னசாமி ஐயருக்கும்,  இலஷ்மி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.  குழந்தையை சீராட்டி வளர்த்தனர்.  சுப்பிரமணியனை செல்லமாக சுப்பையா என்று அழைத்தனர்.   சின்னசாமி அய்யர் சமஸ்தானத்தில் கணக்கு வழக்குகளை மேற்பார்வை செய்யும் பணியில்  இருந்தார்.  வசதியான குடும்பம் தான்.  குழந்தையின் ஐந்து வயது பிராயத்தில் தாயார் இலஷ்மி அம்மாள் இயற்கை எய்தினார்.

*தாய்வழி பாட்டனாரின் வளர்ப்பில் குழந்தை சுப்பையா வளர்ந்தான்.  ஆங்கிலம், தமிழ்,  கணிதப்  புலமையில்  தேர்ச்சி பெற்றிருந்த சின்னசாமி ஐயர் தன் அருமை மகனும் இப்படியான கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  ஆனால் சுப்பிரமணியனுக்கோ கணிதம் என்றால் அது வேப்பங்காயாகக் கசந்தது.  அவனுக்கோ கவி புனையும் ஆற்றலில் பெரும் ஈடுபாடு இருந்தது.  கண்டிப்பு கொண்ட தந்தை தெருப் பிள்ளைகளுடன் கூடி ஆடி விளையாட தன்னை அனுமதிக்காமல் இருந்த நேரத்து தன் மனதில் குவிந்த ஏக்கத்தை பிற்காலத்தில் தன் கவிதை வழியே வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார்.#

பாரதிக்கு ஏழு வயதாகும் பொழுது சின்னசாமி அய்யர், வள்ளியம்மாள்என்னும் மங்கையை மறுமணம் புரிகிறார்.  வழக்கமான சீற்றம் கொண்ட சிற்றன்னையாக இல்லாமல் வள்ளியம்மாள் தாயில்லா சிறுவன்  சுப்பிரமணியனுக்கு பெற்ற தாயாகத் திகழ்ந்தாள்.  சிறுவனுக்கு உபநயனம் செய்து வைக்கின்றனர்.

சமஸ்தான பணிகளுக்குச் செல்லும் பொழுது சிறுவன் சுப்பிரமணியனையும் கூடவே அழைத்துச் செல்லும் பழக்கமும்  சின்னசாமி அய்யருக்கு இருந்தது.  அதுவே சுப்பிரமணியனுக்கான சமஸ்தான அறிமுகத்தையும் ஏற்படுத்தியது.

எட்டையபுர மன்னருக்கு தமிழ்க்காதல் உண்டு.  சமஸ்தானத்து மன்னர் அவையில் தமிழ் மொழியில் ஆற்றல் மிகுந்தவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.  சமஸ்தானப் புலவர்கள் தரும் ஈற்றடிக் கொண்டே முழுக்கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தான் சிறுவன் சுப்பிரமணியன்.

இந்த ஆற்றல் சுப்பிரமணியனின் பதினோரு வயதில் கவிதைப் பிழம்பாய் ஜொலித்து நாம் இன்றும் முண்டாசுக் கவிஞனை நினைவு கொள்கிற 'பாரதி' என்ற பட்டப்பெயர்  எட்டையபுர அவைக் களத்தில் அவன் கொள்ள ஏதுவாயிற்று.

சிவஞான யோகியார் அக்காலத்தில் சிறப்புப் பெற்ற புலவர்.  அவர் தலைமையில் எட்டையபுர தமிழ்ச் சான்றோர் கூடியிருந்த அரசவையில் பதினோரு வயது சுப்பிரமணியனின் கவிதை புனையும்  ஆற்றலைக் கண்டு மகிழ்ந்து  எட்டையபுர மன்னர்  'பாரதி' என்ற பட்டத்தை அவனுக்கு அளிக்கிறார்.   சிறுவன் சுப்பிரமணியன், சுப்பிரமணிய பாரதி ஆகிறான்.

பாரதியின் தந்தைக்கோ தன் மகன் ஆங்கிலப் புலமையும், கணித மேன்மையும் கொண்டு தன்னை போல அரசவையில் அதிகாரி தோரணையில் உலா வர வேண்டும் என்ற கனவு.   அந்தக்  கனவை நனவாக்க  பாரதியை  திருநெல்வேலி திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியின் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்திருந்தார்.   அந்த வயதிலேயே ஆங்கிலக் கல்வி கற்பதில் பாரதிக்கு உள்ளூர ஒரு வெறுப்பு படிந்திருந்தது.@

காதற் வயப்பட்டோருக்கு விநோதமான அனுபவங்கள் உண்டு.  காதலில்  முதற் காதல் என்பதும் உண்டு என்போர் அனுபவப்பட்டோர்.  மராத்திய எழுத்தாளர் காண்டேகர் 'முதல் காதல் என்பது வெட்டி விட்டுப் போகும் மின்னல்' என்று சொல்லுவார்.  'ஏதோ பருவக் கோளாறு; அது காதலே அல்ல' என்பது அவர் கட்சி..  ஒருவிதத்தில் அவர் சொல்வது நியாயம் தான்.  முதல் காதலுக்கு வாழ்க்கை பூராவும் அதை நினைத்து உருகுகிற, தேகம் பூராவும் உருக்குகிற சக்தி கிடையாது..  காண்டேகர் அகராதியில் முதல் காதல் உப்புக்கு சப்பாணி காதல்.   நிஜக்காதல் என்பது அதுக்குப் பின்னால் வருவது.  இது  தான் காதல் என்று காதலுக்கான அர்த்தம் என்னவென்று தெரிந்து கொண்ட பின்னாடி அர்த்தபூர்வமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் விளைவது.

'காதல், காதல், காதல் போயிற்-- சாதல், சாதல், சாதல்' என்று காதல் பொய்த்துப் போயின் சாதல் தான் என்று பரிந்துரைத்த பாரதிக்கும் முதல் காதல் அனுபவம் அவனது பத்து வயசில் வாய்த்ததாம்.  பத்து வயசில் வாய்ப்பதெல்லாம் காதலா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் பாரதி தனது அந்தப் பிள்ளைக் காதல் உணர்வைப் பற்றித் தெளிவாகச் சொல்கிறான்..

"ஆங்கோர் கன்னியைப் பத்து பிராயத்தில்
ஆழ நெஞ்சிற் ஊன்றி வணங்கினன்;
ஈங்கோர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
 எந்தை வந்து மணம் புரிவித்தனன்..

அதெல்லாம் சரி;  அதற்கப்புறம் அவன்  சொல்வது தான் முக்கியமானது:

"மற்றோர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்
 மாதரா ளிடைக்  கொண்டதோர் காதல் தான்
 நிற்றல் வேண்டுமென உளத்தெண்ணிலேன்.."  என்கிறான்.

அந்தக் காதலை தன் தந்தையிடம் எடுத்துக் கூறும் திறனற்றுப் போயினேன் என்றும் சொல்கிறான்.   காண்டேகர் சொல்கிற மாதிரி முதல் காதல் காதலே இல்லை என்பதினால் அதைப் பற்றி அதிகமாகச் சொல்வதற்கும் ஏதுமில்லை.

'முதல் காதலாவது, இரண்டாவது காதலாவது?.. காதல் என்பது ஒன்று தான் ஐயா!'  என்பவர்களால் காண்டேகர் சொல்லும் இந்த முதல் காதலைப் புரிந்து கொள்ள முடியாது என்பது வாஸ்தவம் தான்.

பாரதிக்கு வாய்த்தது அவன் தந்தையார்,  சிற்றன்னை பார்த்து முடித்து வைத்த திருமணம்.

&நெல்லை இந்துக் கல்லூரி சார்ந்த உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுதே பாரதியாரின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார் சின்னசாமி அய்யர்.  அந்தக் கால இளம் பருவ விவாகம்.   கடையம் செல்லப்பா அய்யரின் புதல்வி செல்லம்மாள் பாரதியின் கரம் பற்றும் பாக்கியம் பெற்றாள்.   திருமணத்தின் போது பாரதிக்கு 14 வயது;  செல்லம்மாவுக்கோ  ஏழே வயது.   பிற்காலத்தில்  அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைப் பெருமையைப் பார்க்கும் பொழுது  போட்டி போட்டுக் கொண்டு இருவரும் ஒருவர் பெருமையில் இன்னொருவரின் பெருமையைக் கரைத்ததாகவே தெரிகிறது.

இந்தத் திருமணம் நடந்து முடிந்த ஓராண்டிலேயே இதற்காகவே காத்திருந்து நடத்தி வைத்த கடமையை முடித்தாற் போல  பாரதியின் தந்தையார் சின்னசாமி அய்யர் காலமானார்.    'தந்தை தாய்  இருந்தால்  உமக்கிந்த        தாழ்வெல்லாம் வருமோ, ஐயா?'--  என்று சிவபெருமானை நினைத்து பொன்னையா பிள்ளை இயற்றி,  என்.ஸி. வஸந்த கோகிலம் பாடிய பாடல் ஒன்று உண்டு.   அம்பலவாணனின் அப்படியான நிலைதான் பாரதிக்கும்.

ஐந்து வயதில் தாயை இழந்து, பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து  தன் துயரம் தன்னையே சுமக்க  வறுமை சூழ்ந்த நிலையில் அநாதை போல  வாழ்க்கையின் வாசல் படிகளில் பாரதி நின்றார்.

தனது சுயசரிதைக் கவிதையில் பாரதி இதை சொல்லும் பொழுது இறுக்கிப் பிழிந்த துணி மாதிரி நம் மனமும் துவண்டு போகும்.  +


தன் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும் வரை தன் பெற்றோர் வாழக் கொடுத்து வைத்தவர்களாலும்  இந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது.



(தொடரும்)


=======================================================================


*  என்னை ஈன்று எனக்கு ஐந்து வயது பிராயத்தில்
    ஏங்க விட்டு விண் எய்திய தாய்   

               (தனது சுயசரிதையில் பாரதியார்)




#   ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
            ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
     ஈண்டு பன்மரத்து ஏறி இறங்கியும்
             என்னொடு ஒத்த சிறியர் இருப்பரால்;
      வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சியான்
              வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்,
       தூண்டு நூற் கணத்தோடு தனியனாய்த்
               தோழமை பிரிதின்றி வருந்தினேன்.

                                                                               (சுயசரிதை: 4)

@     பள்ளிப் படிப்பினிலே மதி
         பற்றிட வில்லை எனினும் தனிப்பட 
         வெள்ளை மலரணை மேல் அவள்
         வீணையும் கையும் விரிந்த முகமலர்
          விள்ளும் பொருள் அமுதும் கண்டேன்
          வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா

                                                                                 ('ஸரஸ்வதி காதல்'--1)



   
&   செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது;
                 தீது எனக்கு பல்லாயிரம் சேர்ந்தன;  
       நலம் ஓர் எள்துணையும் கண்டிலேன் அதை
                 நாற் பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்.

                                                                                  (சுயசரிதை: 29)



#  +     தந்தை போயினன்,   பாழ்மிடி  சூழ்ந்தது
                தரணி மீதினில்  அஞ்சல் என்பார் இலர்;
     சிந்தையில் தெளிவு  இல்லை;  உடலினில்
                திறனும் இல்லை; உரன் உளத்து இல்லையால்
       எந்த மார்க்கமும் தோற்றிலது  என் செய்கேன்?
                ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?..


                                                                                     (சுயசரிதை)சுயசரிதை)




14 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பாரதி போற்றுவோம்

நெல்லைத் தமிழன் said...


14 வயதுப் பையன், 7 வயதுப் பெண் - திருமணம் என்பதே விநோதமாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட, அறியாப் பருவத்திலேயே வீட்டிற்கு ஒரு வேலையாளைக் கொண்டுவந்ததுபோல்தான் அந்தக் காலத்தின் முறை இருந்திருக்கிறது.

பாரதியின் 15வது வயதில் வந்த துயரம், 'தாயொடு அறுசுவை போம், தந்தையொடு கல்வி போம்' என்பதை நினைவுபடுத்தியது.


//தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ, ஐயா?'-- என்று சிவபெருமானை நினைத்து பொன்னையா பிள்ளை இயற்றி, என்.ஸி. வஸந்த கோகிலம் பாடிய பாடல் ஒன்று உண்டு.// வரிகளைப் படிக்கும்போது வசந்தகோகிலத்தின் குரல் மனதில் ஒலிக்கிறது. எனக்குப் பிடித்த பாட்டு. 'இருந்தால் உலகத்தில் உமக்கிந்தத் தாழ்வெல்லாம்'.

//முதல் காதல் உப்புக்கு சப்பாணி காதல். நிஜக்காதல் என்பது அதுக்குப் பின்னால் வருவது// - அப்படியா? கொஞ்சம் விவாதத்திற்கு உரியதுதான்.

//திருநெல்வேலி திரவியம் தாயுமானவர் இந்துக் // - திருனெல்வேலியில் இருந்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி என்று வரவேண்டும். மதிதா இந்துக்கல்லூரி என்பதுதான் அதன் பெயர்.

//தன் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும் வரை தன் பெற்றோர் வாழக் கொடுத்து வைத்தவர்களாலும் இந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது.// இந்த வாக்கியம் சரியாக வரவில்லையோ? 'கொடுத்துவைத்தவர்களால் இந்த உணர்வை' என்றுதான் வந்திருக்கணுமோ?

தொடருங்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான தொடர். தொட்ர்கிறேன்.

ஸ்ரீராம். said...

// இறுக்கிப் பிழிந்த துணி மாதிரி நம் மனமும் துவண்டு ...//

நல்ல உவமை.

இருப்பவர்களால் இல்லாதவர்களின் வலியை அனுபவிக்க / உணர முடியாதுதான்.

G.M Balasubramaniam said...

ஆஜர் வாசிக்கிறேன்

Thulasidharan V Thillaiakathu said...

சிறு வயதுக் கல்யாணம் என்பது ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது. செல்லம்மா பாவம். அறியாப்பருவம்...7 வயது என்பது ஆகச் சின்ன வயது...

//முதல் காதல் உப்புக்கு சப்பாணி காதல். நிஜக்காதல் என்பது அதுக்குப் பின்னால் வருவது// ஆனால் பலரும் தங்களது முதல் காதல் பற்றித்தானே மிகவும் சிலாகித்து, உணர்ந்து மனதில் பலகாலமாய் இருப்பதாகத்தானெ எழுதுவதாகத் தோன்றுகிறது.....

தொடர்கிறோம்.

Bhanumathy Venkateswaran said...

இறுக்கி பிழிந்த துணி மாதிரி நம் மனமும் துவண்டு போகிறது.... அருமையான உவமை. தொடர்கிறேன்.

ஜீவி said...

@ கரந்தை ஜெயக்குமார்

தங்கள் வாசிப்பிற்கு நன்றி, நண்பரே! ஆமாம், பாரதி போற்றுவோம்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்


//14 வயதுப் பையன், 7 வயதுப் பெண் - திருமணம் என்பதே விநோதமாகத் தெரிகிறது//

பொம்மைக் கல்யாணம் என்று திரைப்படமே வந்தது. இதற்கெல்லாம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு காரணங்கள்.

//எனக்குப் பிடித்த பாட்டு. //

ஆமாம். எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு. சொந்த அனுபவமும் துயரத்தை இன்னும் கூட்டும். பிடித்தவற்றை எங்காவது இண்டு இடுக்கில் சேர்த்து விடுவது என் வழக்கம்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

/முதல் காதல் உப்புக்கு சப்பாணி காதல். நிஜக்காதல் என்பது அதுக்குப் பின்னால் வருவது - அப்படியா? கொஞ்சம் விவாதத்திற்கு உரியதுதான்.//

முதல் காதல் என்பதை முதல் முதல் நாம் காதலிக்கிற பெண் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. விடலைப் பருவத்தில், முகத்தில் பரு வரும் பருவத்தில், ஸ்கூல் படிக்கும் பருவத்தில் எதிர்த்த வீட்டுப் பெண், பக்கத்து வீட்டுப் பெண் என்று ஒரு ஈடுபாடு தோன்றும். அங்க லாவண்ய ரகசியங்களைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து கொள்ளும் அதை மறைவில் ரசித்துப் பார்க்கும் ஒரு கள்ளத்தனம் இது.

இதற்கு பருவக் கிளர்ச்சி என்பதே சரியான பதில். இதை காதல் லிஸ்ட்டில் சேர்க்க முடியுமா, சொல்லுங்கள். இதைத் தான் பிரபல மராட்டிய எழுத்தாளர் காண்டேகர் முதல் காதல் வெட்டி விட்டுப் போகும் மின்னல் போன்றது என்கிறார்.

எல்லாம் தெரிந்து வயதேறிய பருவத்தில் கூட சினிமா நடிகைகளின் அங்க லாவண்யங்களை ரசிப்பது கூட அந்த Adolescent பருவத்தின் விட்ட குறை தொட்ட குறை தான். அறிவு பூர்வமாக சம்பந்தமே இல்லாமல் ஆண் என்ற ஒரே ஹோதாவில் நடிகைகளின் கவர்ச்சி அம்சங்களை முக்கியமாக்கி ரசிப்பது,வெளிப்படையாக சொல்வது இதெல்லாம் மனரீதியான ஒரு குறைபாடு என்று மன இயல் விளக்கங்கள் சொல்கின்றன.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//திருனெல்வேலியில் இருந்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி என்று வரவேண்டும். மதிதா இந்துக்கல்லூரி என்பதுதான் அதன் பெயர்.//

நான் இதே பள்ளியில் 9-வது வகுப்பு படித்திருக்கிறேன். அதனால் மதிதா இந்துக் கல்லூரி பெயர் பற்றி நன்கு தெரியும்.

திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி என்று எழுதினால் முதல் இரண்டு ஊர்கள் சேர்ந்து வருவது வாசிப்பில் ஒரு தயக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த இடத்தில் திருநெல்வேலி என்று குறிப்பிடாமலும் இருக்க முடியாது. மதுரை என்று குறிப்பிடுவதை விட திருநெல்வேலி முக்கியமானது.

திருநெல்வேலி இந்துக் கல்லூரி என்று எழுதினால், எதை எடுத்தாலும் இந்துத்வா பின்னணியில் பார்க்கும் இந்தக் காலத்து போக்கு குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும்.

கட்டுரைகளில் தான் நீங்கள் குறிப்பிடும் பெயர்த் தெளிவு வேண்டும். கதைகளில் லேசாக கோடி காட்டுவதே அழகு. பாரதியார் வாழ்க்கைப் பற்றி கதை போலச் சொல்ல வந்ததால் தெரிந்தே தான் அப்படி எழுதினேன்.

திருநெல்வேலியில் 'இருந்த'வா?.. இருக்கின்ற கல்லூரி அல்லவா?.. கல்லூரி சேர்ந்த பள்ளியும் இருக்கிறதல்லவா?.. நான் படிக்கும் பொழுது உயர் நிலைப் பள்ளியாய் இருந்தது இப்பொழுது மேநிலைப் பள்ளியாக மாற்றம் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//தன் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும் வரை தன் பெற்றோர் வாழக் கொடுத்து வைத்தவர்களாலும் இந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது.// இந்த வாக்கியம் சரியாக வரவில்லையோ? 'கொடுத்துவைத்தவர்களால் இந்த உணர்வை' என்றுதான் வந்திருக்கணுமோ?//

இல்லை, நெல்லை. 'வைத்தவர்களாலும்' சரி தான். வைத்தவர்களாலும் என்ற வார்த்தையில் வரும் உம்மை, இளமைப் பருவத்தில் தந்தை--தாய் இழப்போரின் துயரத்தோடு சம்பந்தப்பட்டு வருகிறது.

தன் இளமைப் பருவத்தில் பெற்றோர்களை இழக்காதவர்களால் அந்தத் துயரத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்பது ஒன்று.

தன் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும் வரை தன் பெற்றோர்களும் வாழக் கொடுத்து வைத்தவர்களாலும் இந்தப் பெற்றோர் இழப்பு துயர உணர்வை மிகச்சரியாக உணர முடியாது என்பது இரண்டாவது.

ஆழ்ந்த வாசிப்புணர்வுக்கு நன்றி, நெல்லை. தொடர்ந்து வாருங்கள்.

வே.நடனசபாபதி said...

முதற் காதல் என்பது ஒரு கைம்மயக்கம் தான். அதாவது மோகம் தான் காதல் இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

மகிழ்ச்சியாக ஆரம்பித்த பாரதியின் வாழ்க்கை தந்தையின் மறைவு மிகுந்த துயரத்தைத் தந்திருக்கவேண்டும். அதனால் தான் ‘ஏன் பிறந்தனன் இந்த துயர் நாட்டிலே?’ என்று பாடுகிறார் போலும்.

தொடர்கிறேன்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

பாரதிக்கு தன் இளம் வயதில் தாயார் மறைந்தது மிகுந்த சோகத்தைத் தந்திருக்கிறது. அடிக்கடி தன் தாயை நினைத்து (தாயில்லாத தன் நிலையை நினைத்தும்) வருத்தம் கொள்வாராம். 'அம்மா, அம்மா' என்று உணர்வு மேலிட்ட நிலை கொள்ளுவார் என்று அவருடன் நெருங்கிப் பழகிய வ.ரா. சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவே அவரது கவிதைகளில் பராசக்தியாகத் தோற்றம் கொண்டார் என்றும் பாரதியாரை நன்கு
அறிந்த பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

Related Posts with Thumbnails