மின் நூல்

Wednesday, January 3, 2018

பாரதியார் கதை ---4

                                                                          4


து  1899-ம் ஆண்டு.    சரஸ்வதி  பூஜை  நாள்.

காசி சிவ மடத்தில் சரஸ்வதி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சிவ மடத்து சரஸ்வதி பூஜையில் பலமொழி வித்தகர்கள் பலர் கலந்து கொண்டனர்.    பூஜைக்கு வந்தவர்கள் சீதாராம் சாஸ்திரி தலைமையில்
சிறிய  அளவில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடும் செய்திருந்தனர்.

கிருஷ்ணன் சிவனின் தாத்தாவுக்கு  மடத்து  சரஸ்வதி பூஜையில் கலந்து கொள்ளும்  அறிஞர்கள் மத்தியில் 17 வயது இளம் பாரதியை சிறப்பாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது.   அதனால் அவர் சரஸ்வதி பூஜைக்கு கூடிய கூட்டத்தில் மத்தியில் திடுதிப்பென்று, "பாரதி! கல்விக் கடவுள் சரஸ்வதி பற்றி ஏதாவது நாலு வார்த்தை பேசப்பா.  இங்கு பல மொழிக்காரர்கள் வந்திருக்கிறார்கள்.  உனக்குத் தெரிந்த ரெண்டு மூணு பாஷைலேயும் நீ பேசலாம்" என்று சொல்லி பாரதியை கூட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்துப்  பேச வைத்திருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில் பாரதி தமிழிலும் இந்தியிலும் பேசியிருக்கிறார்.
காலையில் சிவ மட கடவுளர் சன்னிதானத்து படிகளில் அமர்ந்து தான்
இயற்றிய  'வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள்; வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்..' கவிதையைப் பாடியிருக்கிறார். 

கூட்டம் அமைதியாக அவர் பாடலைக் கேட்டிருக்கிறது.  பாடி முடித்ததும்
இந்தி மொழியில் அந்தப்  பாடலுக்கு பாரதி விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
மொத்தக் கூட்டமும் அவர் உரையைக் கேட்டு அசந்து  போயிருக்கிறது.
குறிப்பாக,

"வந்த னம் இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரி டுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்..."    என்ற வரிகள்!

அந்த வயதில் அத்தனை அறிஞர்கள் மத்தியில் இப்படியான கருத்துக்களைப் பதிவதற்கு அந்த பாரதிக்குத் தான் எவ்வளவு நெஞ்சத் துணிவும்,

"வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி"

---- என்று எது உண்மையான சரஸ்வதி
தேவிக்கான பூசனைக்கான அர்த்தம்
என்று  சொன்ன தீர்க்க தரிசனமும்
அவருக்கு இருந்திருக்கும் என்று நினைத்து நினைத்து அந்த இளம் வயது  பாரதியின்
மேல் பெரும் மதிப்பு  கூடுகிறது.


பாரதி பேசப்பேச அங்கு கூடியிருந்த மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும் பாரதியின் புரட்சிகர எண்ணங்களை புரிந்து கொண்டதான வெளிப்பாடையும் தம் கரவொலியால் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கூட்டத்தினருக்கு ஒரு சின்னஞ்சிறு சந்தேகம்.

".... அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்           

நிதி மி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு  றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு  மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!----"

என்ற வார்த்தைகளில் தெளிவு வேண்டி, "எதற்காக இப்படிக் குறிப்பிடுகிறாய்?" என்று கேட்டார்களாம்.

உடனே எந்தக் காரணத்திற்காக அந்த வரிகள் இந்தப்  பாடலில் தம் மனசில் உதித்ததோ அந்தக் காரணத்தைக் கூட்டத்தினருக்குச் சொல்கிறார், பாரதி.

காசி இந்து பல்கலைக்கழகக் கனவிற்காக மதன் மோகன் மாளவியா என்னும் ஏழை மகான் செய்கின்ற அரும் பணிகளை விவரிக்கிறார்.  பாரதி எடுத்துச் சொல்லச் சொல்ல மாளவியாவின்  அரும் பணிகளுக்காக தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய அந்த கூட்டத்தினரும்  ஒருமித்த முடிவுகள் எடுக்கின்றனர்.

மாளவியாவை நேரில் சந்தித்த பொழுது இந்து பல்கலைக் கழக நிர்மாணத்திற்காக தம் சிந்தனையில்  பூத்தக்  கருத்துக்களை அவரிடம் எடுத்துரைக்கிறார் பாரதி.

'பல்கலை கட்டிட நிர்மாண்த்தில் இந்து சிற்பக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து சர்வகலாசாலையை வடிவமைக்க வேண்டும்'  என்று பாரதியார் மாளவியாவைக் கேட்டுக் கொள்கிறார்.   'கற்கும் கல்வியில் காலத்திற்கேற்பவான நவீனத்துவம் இருக்கட்டும்;  ஆனால்  கலாசாலைக்கான கட்டிடக் கலை சுதேசித்தன்மை மிகுந்து இருக்க வேண்டும்'  என்று  சொல்லி மாளவியாவின் மனத்தில் படியும் படியாக அதற்கான காரணங்களை விளக்குகிறார்.  'பகுதி பகுதியாகக் கட்டப்படும் கட்டிடத்தின் உச்சியில் கோபுர வடிவம் அதன் மேல் சிகரங்கள் என்பதான இந்திய கலையழகைக்  கொண்டிருக்க வேண்டும்.

கலாசாலைக் கட்டிட அமைப்பைப் பார்த்தாலே நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு  இவையெல்லாம் என்ன என்பதனை அந்த கட்டிட வடிவமைப்புகளே சொல்வதாக இருக்க வேண்டும்.    தமிழ் நாட்டு சிற்பக்கலை வல்லுனர்கள் இப்படியான கட்டிடங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்கள்.    ரவீந்தர நாத் தாகூரின் சகோதரர் அபநீந்தரநாத் தாகூர் கூட சமீபத்தில் தமிழ்நாட்டு ஸ்தபதிகளைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.
அவர்களிடம் இந்தக் கலாசாலைக் கட்டிட அமைப்பு வேலைகளைக் கொடுத்தால் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.." என்று தமிழ்நாட்டு சிற்பக்கலைஞர்களை பரிந்துரைத்துமிருக்கிறார்.




மாளவியாரும் பாரதியார் சொன்னதற்கு முக்கியத்துவம் கொடுத்து மிகுந்த
கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  அதற்கு சாட்சி இன்றும் காசி இந்து சர்வகாலாசலையை பார்க்கும் எவரும் நம் தேசத்துப் பண்பாடும், நாகரீகமும்,  சிற்பகலையின் மேன்மையும் எவ்வளவு அழகாக செங்கல், சிமிண்ட் கலவை கொண்டு வடித்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதனை உணரலாம்.


பாரதி இளமையில் காசியில் வாழ்ந்த காலம் ஆறே ஆண்டுக் காலம்.   அவன் சிந்தையில் விடுதலை இயக்கமும்,  சுதேச எண்ணங்களும் தடம் பதித்தது இந்தக் காலத்தில் தான்.

நடை பாவனைகளில், உடையில், உள்ள வளர்ச்சியில்,
சமூகம் குறித்த  ஞானத்தில்,  வாசிப்பில்,  பிற மொழிப் புலமையில்  பாரதி தேர்ந்து சிறந்ததற்கு அச்சாரம் போட்ட காலமும் இது தான்.


வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வாய்க்கிறது.  இதற்காகத்தானோ இது என்று எதையும் எதோடும் முடிச்சுப் போடவும் முடியாவிட்டாலும் நடந்தவை நடந்த பிறகு நினைத்து இதற்காகத் தானோ இது என்று ஓரளவு அனுமானிக்க முடிகிறது.  அப்படி அனுமானிப்பதும் நடந்தவைகளின் அடிப்படையிலான நமது  புரிதல் என்று புரிந்து கொள்வது தான் இவற்றில் இருக்கிற விசேஷம்.


மஹாகவி பாரதியாரையே எடுத்துக் கொள்ளுங்களேன்.

அவரது ஐந்து வயதில் தாய் மரணம்.   அவருக்கு ஏழு வயதாகும் பொழுது தந்தை மறுமணம்.   14  வயதில் 7 வயது சிறுமியுடன் திருமணம்.  திருமணமான அடுத்த ஆண்டே தந்தை மரணம்.  15 வயதில் தந்தையின் இறப்பு காரியங்களுக்கு வந்த அத்தை அழைத்து காசிப்  பயணம்.
காசியில் பல்மொழிகளைக் கற்கின்ற வாய்ப்பு.  அந்த மொழிப்புலமையில் விளைந்த ஞானம்;  அன்னிபெசண்ட்,  மாளவியா போன்றோருடனான அறிமுகங்கள்,  மொழி அறிஞர்கள் மத்தியில் தமிழ் மொழிக்கான ஏற்றத்தைப் புலப்படுத்தியது என்று நிறையச் சொல்லலாம்.  மொத்தத்தில் காசியில் பாரதியாருக்கு அவரது இளமைப்பருவத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், தொடர்புகள் எல்லாம்  பிற்காலத்து பாரதியாரை உருவாக்குவதற்கு பெரும் பங்களிப்பைத் தந்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.



(தொடரும்)


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.


16 comments:

Thulasidharan V Thillaiakathu said...


துளசி: முந்தைய பதிவுகளையும் பார்த்தேன் ஸார்.

பாரதியைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது. காசியில் அவரது உரை, பாடல்..அவருக்கு ஹிந்தி மற்றும் சமஸ்க்ருதம் கூடத் தெரியுமல்லவா..?!!

தொடர்கிறோம்.

துளசிதரன், கீதா

ஸ்ரீராம். said...

"வெள்ளைத்தாமரைப் பூவிலிருப்பாள்" பாடல் அங்கு இயற்றியதுதானா? பீம்பிளாஸ் ராகத்தில் மதுரை மணியின் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். என்ன, அவர் பாடும் வரிகள்தான் புரியாது! ஆனால் இனிமை அதை புறம் தள்ளிவிடும்.

17 வயது பாரதியை அந்தக் கற்றறிந்தோர் கூட்டத்தில் சமத்காரமாக அறிமுகம் செய்த தாத்தா வாழ்க.

ஸ்ரீராம். said...

கடைசி பாரா : பாரதியாருக்கு அவசர அவசரமாக சிறப்புகள் எல்லாமே அடுத்தடுத்து நடந்த காரணமே அவர் இளவயதிலேயே மறைந்து விடுவார் என்பதால்தானோ என்னவோ!

G.M Balasubramaniam said...

பாரதியின் பாடல்களில் புரட்சிக்கருத்துகள் பல இருக்கிறது அதையே இப்போது பாரதி சொல்வாரேயானால் ஏற்றுக் கொள்ளத் தயக்கம்பலருக்குமிருக்கும் இல்லாதவனின் கருத்துகளை பெரும்பாலானவர்கள் விமரிசிப்பதில்லை நான் சில இடங்களில் அவர் கருத்தை எடுத்துக் கையாண்டிருக்கிறேன் பெரும்பாலும் கடந்து போகப் படுகின்றன

நெல்லைத் தமிழன் said...

காசியில் இருந்த அனுபவம்தான் அவருக்கு உலக இலக்கியங்களைப் பற்றிப் பேசும் சாளரங்களைத் திறந்துவிட்டதோ? இயற்கை அவருக்கு வெளி உலகத்தைப் பார்க்கும் வாய்ப்பை நல்கியிருக்கிறது. ஒரு வேளை, தமிழகத்தில் மட்டும் அவர் வாழ்ந்திருக்க நேர்ந்தால் எப்படிப்பட்ட ஆளுமையாக அவர் ஆகியிருப்பார்?

ஜீவி said...

@ துளசிதரன், கீதா

முந்தைய பதிவுகளையும் வாசித்து விட்டீர்களல்லவா?.. இனி தொடர்ந்து வாசித்து வர செளகரியமாக இருக்கும்.

பாரதியாருக்கு காசியில் இருக்கும் பொழுதே சமஸ்கிருதம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். 'யாமறிந்த மொழிகளிலே' நினைவுக்கு வருகிறது.

ஒரு சின்ன குறையைத் தவிர அவர் வாழ்க்கையில் அவர் காசிக்குப் போனது அவர் பிரமாதமாக உருவாவதற்கான உரமாய் அமைந்திருக்கிறது என்பதே என் எண்ணம்.
அதுவும் இளமையில் கற்கின்ற காலத்தில் காசி வாசம் அற்புதம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நானும் நித்யஸ்ரீயின் குரலில் அந்தப் பாட்டை பதிவு செய்ய முயன்றேன். முடியவில்லை.
விடியோவை பதிவு செய்வது பற்றி இன்னும் நன்றாகக் கற்றுக் கொண்டு முயற்சிக்கிறேன்.

நீங்கள் தாத்தாவைப் பற்றிச் சொன்னது மெத்த சரியே.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.

இதற்கு மேலான வாழ்க்கையிலும் அவர் தொட்டது உச்சம் தான். இந்தத் தொடர் நிறைவடையும் பொழுது 'இதற்கு மேலாக என்ன இருக்கிறது?' என்று ஒரு நிறைவு ஏற்பட்ட மாதிரியே முடிப்பதாக இருக்கிறேன்.

ஜீவி said...

@ GMB

மனிதர்கள் இருக்கிறார்கள் இல்லாதிருக்கிறார்கள் என்பது பிரச்னையே இல்லை.

வாழ்ந்த காலங்களும் முக்கியமில்லை.

எவரின் வாழ்க்கையிலிருந்தும் நாம் அறிந்து கொள்ள எதுவிருந்தாலும் சரியே.

அவற்றை நாம் சுவீகரித்துக் கொள்ள வேண்டுவதே முக்கியமாக எனக்குப் படுகிறது.

எல்லா 'நான்'களும் உருவாவது அப்படித்தான்.

உங்களை எந்த நேரத்தும் நீங்கள் தனித்துப் பார்ப்பது அபத்தம்.

உங்களைத் தனித்துக் காட்ட ஒரு பெயர் இருக்கலாம்; அவ்வளவே. ஏனென்றால் உங்கள் பெயரே நீங்களல்ல.

காலங்காலமாய் உருவான, உருவாகிக் கொண்டிருக்கும் பல கருத்துத் திரட்சிகளிலிருந்து உருவாகியிருப்பவர் தான் நீங்கள் என்பது யோசித்துப் பார்த்தால் புரியும்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//காசியில் இருந்த அனுபவம்தான் அவருக்கு உலக இலக்கியங்களைப் பற்றிப் பேசும் சாளரங்களைத் திறந்துவிட்டதோ? //

காசியில் அவர் கொண்ட இளமைக்கல்வி அதற்கான சாத்தியப்பாட்டை அவரில் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை.

என் இளமையில் 'திராவிட நாடு திராவிடர்க்கே' என்ற மாயக்கூச்சலில் நான் மாய்ந்து போனேன். இந்தி எதிர்ப்பில் மதமதர்த்து மொழி வெறுப்புக்கு இரையாகிப் போனேன்.
இப்பொழுதும் என் இளைமையை ஆக்கிரமித்த அரசியல் போக்குகளுக்கு வெட்கித் தலை குனிகிறேன். இதெல்லாம் என் 16 வயது மாணவப் பருவத்தில் வாய்த்த களங்கங்கள் தாம்.

20 வயதில் மத்ய அரசு பணிக்குப் போனதும் அரிதாய்க் கிடைத்த நட்பு வட்டாரங்களின் பழக்கத்தில் உலக அரசியலை உள் வாங்கிக் கொள்ளும் பக்குவம் பெற்றேன். குறுகிய எண்ணங்கள் சுட்டுச் சாம்பலாகி தேச நலன் முக்கியமாயிற்று. 20 வயதில் பெற்ற அந்தக் கல்வி இன்றும் வாழ்க்கைக்கான கல்வியாய் என்னுள் மலர்ந்திருக்கிறது.

வாழ நேரிட்ட வாழ்க்கை அனுபவங்களும், நாம் சார்ந்து இருக்கும் நட்புகளும்,
தேர்ந்தெடுக்கும் வாசிப்புகளும், பழக்க வழக்கங்களும் தான் நம்மை உருவாக்குகின்றன என்பது தெளிவாய்த் தெரிகிறது, நெல்லை.

G.M Balasubramaniam said...

/காலங்காலமாய் உருவான, உருவாகிக் கொண்டிருக்கும் பல கருத்துத் திரட்சிகளிலிருந்து உருவாகியிருப்பவர் தான் நீங்கள் என்பது யோசித்துப் பார்த்தால் புரியும்./ அது உண்மைதான் எனக்குள் உருவாகும் எண்ணங்கள் பாரதி காலத்திலும் இருந்திருக்கிறது என்ன நீதி என்று எழுதி இருந்தேன் அதற்கு ஜோசப் விஜு இந்தக் கருத்துகள் அனாதிகாலம்முதலே இருந்தது என்று பின்னூட்டமிட்டிருந்தார் ஜோசப் விஜு ஊமைக்கனவுகள் தளத்துக்காரர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் தேர்ந்தவர்

G.M Balasubramaniam said...

/இதெல்லாம் என் 16 வயது மாணவப் பருவத்தில் வாய்த்த களங்கங்கள் தாம். ./ இவைகள் களங்கங்கள் அல்ல படிப்பினைகள் எனலாம் நம் சந்திப்பின் போது கூட இயக்கங்கள் பற்றி நீங்கள் கூறி இருந்தது நினைவில்

சிவகுமாரன் said...

பாரதியைப் பற்றி படிக்கும் போதெல்லாம் உணர்ச்சி மேலிடுகிறது.
நன்றி ஜீவி சார்

தி.தமிழ் இளங்கோ said...

இப்போதுதான் இந்த பதிவினைப் படித்தேன். பாரதி எழுதிய சில பாடல்களுக்கான சூழ்நிலையை அறிந்து கொள்ள முடிந்தது. தொடர்கின்றேன்.

ஜீவி said...

@ சிவகுமாரன்

நீங்களும் பாரதி குடும்பம் தானே, சிவா. அதனால் ஏற்படும் பரவசம் அது.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

கவிதையையே பேசும் மொழியாகக் கொண்டோருக்கு அந்தந்த சூழ்நிலைக்கான உரையாடலே கவிதையாகிப் போகிறது. இல்லையா, நண்பரே!

வ.ரா.வின் பாரதி நூல் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். தொடர்ந்த வாசிப்பில் பாரதி பற்றிய பல புதுத்தகவல்கள் காணக்கிடைக்கும். வாசித்து வாருங்கள்.


Related Posts with Thumbnails