மின் நூல்

Friday, January 12, 2018

இது ஒரு தொடர்கதை

                                               அத்தியாயம்--6



பெண்டுலம் இணைத்த சுவர்க் கடியாரம் நான்கு  முறை  ஒலித்தது.

மரபீரோவைக் குடைந்ததில் நின்ற சீர் நெடுமாறனார் பற்றி உருப்படியான செய்திகள் எதுவும் தேறவில்லை.  பி.லிட்., பாடப்புத்தக பாடத்திட்டத்தில் நாயன்மார்களின் ஆக்கிரமிப்பு மேலோட்டமாகவே இருந்தது, இரண்டு மணி நேரத் தேடலுக்குப்  பிறகு தான் தெரிந்தது.  பொதுவாக  63 நாயன்மார்கள் பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருந்தார்கள்.  அவர்களில் 50-ம் எண்ணிட்டு நின்றசீர் நெடுமாற நாயனார் குறிப்பிடப்பட்டிருந்தார். மற்றபடி அப்பர், சுந்தரர், சம்பந்தர் பற்றி மட்டும் விவரமான கட்டுரைகள் இருந்தன.

நீண்ட கொட்டாவி விட்டபடியே, "அவ்வளவு தானா?" என்றான் பாண்டியன்.  சித்திரங்கள் கூட இந்த மூன்று பேருக்கு மட்டுமே என்று வஞ்சித்திருந்தது அவனுக்கு எரிச்சலூட்டியது.  அந்த எரிச்சலுக்கு ஒரு வடிகால் வேண்டி, "நாயன்மார்கள்  சரி. ஆழ்வார்கள் விஷயம் எப்படி?" என்று தலைசாய்த்து மங்கையைக் கேட்டான்.

அவள் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, "அங்கே மூணுன்னா இங்கே கொஞ்சம் கூட.  அஞ்சு தேறும்.  எதுக்காகக் கேக்கறீங்க?.."

மையமாகப் புன்னகைத்தான் பாண்டியன். "அங்கே அப்படின்னா, இங்கே எப்படின்னு தெரிஞ்சிக்கறத்துக்காகத் தான்."

"தெரிஞ்சிக்கிட்டு என்ன ஆகப்போகுது?"

"ஒண்ணுமில்லே. ஒரு க்யூரியாசிடி. ரெண்டுக்கும் ஒரு கம்பாரிஸன் ஸ்டடின்னு வைச்சிக் கோயேன்."

"நல்ல கம்பாரிஸன்!  'இங்கே-அங்கே'ன்னு ரெண்டு  இல்லே.  ரெண்டாத் தெரிஞ்சாலும் ரெண்டும் ஒண்ணு  தான். தெரிஞ்சிக்கங்க..."

"ஒண்ணுதான்ங்கறது ஒருத்தர் கட்சி;  இல்லே, ரெண்டுங்கறது இன்னொருத்தர் கட்சி.."

"ஒண்ணு தான்னா அத்வைதம்;  ரெண்டுன்னா துவைதம்  இல்லியா?"
என்று ஆசைஆசையாகத் தமிழில் தத்துவம் படித்தது நினைவில் நின்று கேட்டாள் மங்கை.

"ஓ.. நீ அங்கே போறியா?.." என்று மலர்ந்து சிரித்தான் பாண்டியன்.  "அப்படித் தான் வைச்சிக்கோயேன்/.."

"அப்படிப் பாத்தா ரெண்டையும் இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம்ன்னு சேர்த்திகிட்ட மூணாவதும் ஒண்ணு இருக்கில்லியா?.."

"கரெக்ட்! அதனால் தான் எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்தா அந்தக் கலவைக் கல்வி அற்புதமா இருக்கும்ன்னு தோண்றது.. வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்ந்தா மாதிரி."

"அதுசரி.. ஆனா அப்படிச் செஞ்சா இந்த மூணும் அது அதோட ஐடண்ட்டிடியை இழந்திடுமில்லியா?"

"ஐடண்ட்டியா முக்கியம்?.."

"ஆமாம்.." என்று தீர்மானமாகச் சொன்னாள் மங்கை.

ந்தப் பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியை மூன்று உதவி  ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டார்கள்.  வைத்தீஸ்வரன், தேவதாஸ், கிருஷ்ணமூர்த்தி. கேள்வி-பதில் பகுதிக்கு அவர்கள்  பெயர்களின்  முதல் எழுத்தை மட்டும் எடுத்து ஒன்று சேர்த்து வைதேகி என்பவர் பதில் சொல்பவராகக்  குறிப்பிட்டிருந் தார்கள்.  வைதேகி என்கிற பெண் தான் இந்தப்  பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறாராக்கும் என்று  மோகன் கூட எண்ணியிருந் தான்.  இந்தப் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு  தான் 'வைதேகி' பெயரின் கூட்டுச் சேர்க்கை ரகசியம் இவனுக்கும் தெரிய வந்தது.

பொதுவாக பத்திரிகைகளில் கேள்வி-பதில் பகுதியைக் கவனித்துக் கொள்பவர்கள் சகல மட்டத்திலும் விஷய ஞானம் கொண்டவர்களாய் இருப்பார்கள்.  இல்லை, அவசியத்தின்  அடிப்படையில் எல்லாத்தையும் பற்றித் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.  அதுவும் இந்தப் பத்திரிகையில் அந்த 'எல்லாத்தை'யையும் ஆன்மிகம், அரசியல், சினிமா, இலக்கியம் என்று நான்காக  வகைப்படுத்தியிரு ந்தார்கள். இந்த நான்கு தலைப்புகளில் 'எல்லாத்தை'யும் அடக்கிவிடலாமென்ற கணிப்பு ஆசிரியருக்கு இருந்தது.

ஆன்மிகத்தை வைத்தீஸ்வரனும், இலக்கியத்தை கிருஷ்ணமூர்த்தியும் கவனித்துக் கொண்டார்கள்.  அரசியலும் சினிமாவும் ஒன்றுக்குள்  ஒன்று புதைந்ததாக ஆகிப்போனதினால் தனி ஒருவராக தேவதாஸே இரண்டையும் கவனித்துக் கொண்டார்.  சினிமா ஸ்டூடியோவிற்கெல்லாம் போய் செய்தி திரட்டி வருவதற்காக தீபக் என்ற சுறுசுறுப்பான இளைஞன் தேவதாஸுக்கு வலது கையாக இருந்தான்.

நின்ற சீர் நெடுமாறனைப் பற்றி ஒரு நெடும்பார்வையில் மேலதிகத் தகவல்கள் திரட்டாவிட்டால் கதை மேற்கொண்டு நகராது போலிருந்தது மோகனுக்கு.

ஆசிரியர், பத்திரிகையின் நூலகப்  பிரிவு பற்றி சொல்லியிருந்தது  நினைவுக்கு வந்தது.  அங்கும் அரைமணி நேரத்திற்கு மேலாக மேலோட்டமாக மேய்ந்ததில் சலிப்பே மிஞ்சியது.  ஆனால் சேக்கிழாரின்  பெரிய புராணம் கிடைத்தது, இதை விட்டால் வேறு வழியில்லை என்பது போலத் தோன்றியது.  செய்யுள் வடிவில் இருந்ததினால், குறிப்புகள் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று மோகன் நினைத்தான்..  அங்கிருந்த ஒரு ரிஜிஸ்தரில் நூல் பற்றிய விவரங்களைக்  குறிப்பிட்டு கையெழுத்திட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக பத்திரப்படுத்திக் கொண்டான்.

மோகன் தன் இருக்கைக்கு வந்த பொழுது பொறுப்பாசிரியர் ஜி ஏதோ சிந்தனையில் இருந்தார்.  இவனைப்  பார்த்ததும் நிகழ் உலகத்திற்கு வந்தவர் போல தலையசைத்து, "மோகன், உன்னோட  'இது ஒரு தொடர்கதை..' ரொம்ப நன்னாப் போறதுப்பா... ஆசிரியர் கூட போன அத்தியாயத்தின் சில இடங்களை எடுத்துச் சொல்லி பாராட்டினார்.." என்றார்.

'ஆசிரியர் தன்னை கூப்பிட்டு அருகில் அமர்த்திக்  கொண்டு பாராட்டக்கூடாதா' என்று மோகனுக்குத் தோன்றியது.  'வேலைக்குச் சேர்ந்து இவ்வளவு சீக்கிரத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது' என்று அடுத்த நொடியே மனசில் நினைப்பு படர்ந்தது.  இருந்தாலும் சென்ற அத்தியாயத்தின் எந்த பகுதியை அவர் பாராட்டினார் என்று தெரிந்து  கொள்ளும் ஆவலில், "எந்த இடங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார், சார்?" என்று கேட்டு அவர் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தான்.

"ரெண்டு மூணு எடத்லே சப்-டெக்ஸ்ட்டா எழுதியிருப்பியே.. அதெல்லாம் எடுத்துச் சொல்லி பாராட்டினார்" என்றார்.

"குறிப்பா ஒரு இடத்தைச் சொல்லுங்களேன், சார்.." என்றான்.

"அதான்.. அந்த பிறவிப் பெருங்கடல் நீந்தல் சமாச்சாரம்.  ஒரு வரிதான். அந்த ஒருவரிக்குள்ளேயே இன்னொரு வரி ஓடுது பார்.  மங்கை சொன்னது--பாண்டியன் சொன்னது ரெண்டும் வேறு வேறு அர்த்தம் கொடுக்கற மாதிரி நன்னா சொல்லிருக்கேன்னு சொன்னார்" என்றார்.

இவன் மெளனமாக அவர் சொல்வதையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, "ஆசிரியர் இன்னொன்றும் சொன்னார்" என்றார் ஜி.

"என்ன சார்?" என்று ஆவலோடு கேட்டான் இவன்.

"ஆரம்பத்திலே நாலஞ்சு அத்தியாயம் வந்தால் போதும்ன்னு நெனைச்சேன்.  கதை நன்னாப் போறதினாலே, வாசகர்களோட ரெஸ்பான்சும் இருக்கறதாலே இன்னும் கொஞ்சம் நீட்டலாமோன்னு தோண்றது.. இதை மோகன் கிட்டே சொல்லி முடியுமான்னு ஆசிரியர் கேக்கச் சொன்னார்" என்றார் ஜி.

மோகன் முகம் பிரகாசமடைந்தது. "இப்பத்தான் கதைக்கு பேஸ் போட்டிருக்கேன்.  அதுக்குள்ளே எப்படி முடிக்கறதுன்னு எனக்கும் யோசனையாய் தான் இருந்தது.. ஆசிரியரும் தொடர்ந்து எழுத அபிப்ராயப் படறதாலே, தொடர்ந்து எழுதலாம் சார்..  இன்னும் கொஞ்சம் ஆழமா ஒரு சோதனை முயற்சி மாதிரி இந்தக் கதையை எழுதலாம்ன்னு  தோண்றது. கதையைத் தொடர்ந்து எழுதறதுக்கு சில இடங்களுக்குப் பயணபட்டு சில சரித்திர குறிப்புகளைச் சேகரிக்கணும்.  பொதுவா சில செய்திகள் பற்றிய விவரங்கள் எனக்குத் தேவையா  இருக்கு.  அதையெல்லாம் திரட்டணும்.."

"அப்படியா, மோகன்?.. ஆசிரியர் இதைக் கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவார்.  அதுக்கான எல்லா வசதிகளையும் செஞ்சு தருவார்.  என்னன்ன வேணும்ன்னு சொன்னேன்னா, அதுக்கான எல்லா ஏற்பாடையும்  செஞ்சுடலாம்" என்றார்.

"சொல்றேன், சார்.. இப்போதைக்கு நின்ற சீர் நெடுமாறனைப் பத்தி டீடெயில்டா சில தகவல்கள் வேணும்."

"நம்ம பத்திரிகை ஆபீஸ்லேயே பெரிய லைப்ரரி இருக்கே.. அங்கே பாத்தியா?.."

"ஓ.எஸ். பாத்திட்டேன். போதாது.  இன்னும் கொஞ்சம் விவரமா கிடைச்சா தேவலை." என்று சொன்னவன் லேசா சிரித்தான். "எனக்கு இது விஷயமா ஒண்ணு  தோணித்து, சார்...  சொன்னா சிரிக்க மாட்டீங்களே?"

"என்னப்பா இப்படி கண்டிஷன்  போட்டா எப்படி?.. வாழ்க்கைலே சிரிக்கறத்துக்கே இப்பலாம் சந்தர்ப்பம் கிடைக்க மாட்டேங்குது.  கிடைக்கற சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கூடாதுன்னா எப்படிப்பா?" என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு ஜி கேட்டார்.

"சரி.. கண்டிஷனைத் தளர்த்திட்டேன்.. ஆனா, ஒண்ணு.  சிரிப்பு வந்தாத்தான்  சிரிக்கணும்.  நான் சொன்னேங்கறத்துக்காக சும்மாவானும் சிரிக்கக்கூடாது."

"சரி.. சொல்லு.."

"நான் என்ன நெனைச்சேன்னா, நம்ம பத்திரிகை கேள்வி-பதில் பகுதிக்கே நின்ற சீர்  நெடுமாறனைப் பத்தி கேட்டு எழுதிடலாம்ன்னு நெனைச்சேன், சார்.."

"ஹஹ்ஹஹ்ஹா.." என்று இயல்பாய் சிரித்தார் ஜி.  "குட் ஐடியா.. எழுதிக் கேப்பானேன்?.. நேர்லேயே கேட்டுட்டாப் போச்சு..  வைதேகிலே   நிச்சயம் 'தே' இல்லே. 'கி' கூட இப்போதைக்கு வேணாம். 'வை' கிட்டே கேட்டாப் போச்சு. வைத்தீஸ்வரன் விஷயகனம் உள்ள பெர்ஸன்.  எனக்கும் நி.சீ.நெ. பத்தி தெரிஞ்சிக்கணும்ன்னு  ஆசையா இருக்கு.  வர்றையா, கேட்டுடலாம்" என்று ஜி தன் இருக்கையை விட்டு எழுந்திருந்தார்.

வைத்தீஸ்வரனிடம் மோகன் தான் கேட்டான். ஜி வெறும் பார்வையாளராக இருந்தார்.

தனது பட்டை கண்ணாடியை ஒரு தடவை வேஷ்டி நுனியில் துடைத்து போட்டுக் கொண்டு வைத்தீஸ்வரன் மோகனைப் பார்த்த பொழுது விஷய ஞானம் உள்ளவர் என்று அவர் கண்களே பளபளத்ததுச் சொன்னது..

"உங்களுக்கு ஒண்ணு ரெண்டு விவரம் சொன்னா பத்தாதில்லையா?..." என்று அவரே யோசனையுடன் இழுத்தார்.

"ஆமாம், வைத்தி சார்.."

"எது பத்தியும் முழுத் தகவல் வேணும்னா, நான் இங்கே தான் கேக்கறது.." என்று எழுந்திருந்தார். "சித்தே என்னோட வர்றேளா?" என்று லைப்ரரி இருக்குமிடம் திரும்பினார்.

"லைப்ரரிலே தானே?.. முழுசா அலசலே.  இருந்தாலும் ஓரளவு தேடிப் பாத்துட்டேன்.." என்று அவருடன் நகர்ந்தான் மோகன்.  லேசான புன்முறுவலுடன் அவர்களைத் தொடர்ந்தார் ஜி.

"நம்ம லைப்ரரிலே தான்.  ஆனா அதிலேயே ஒரு மகா லைப்ரரி இருக்கு பாருங்கோ.." என்று நூலகத்தின் பிரதான வாசல் தாண்டி வலதுப்பக்கம் இருந்த அறைக்குள் கூட்டிச் சென்றார்.  அங்கிருந்த மெஹா சைஸ் கணினி முன் அமர்ந்து ஸ்விட்சை அழுத்தி உயிர்ப்பித்தார்.

"ஏன் நிக்கறேள்? உக்காருங்கோ.." என்று கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு வாகாக தனக்கு இரண்டு பக்கமும் இருவரையும் அமரச் செய்தார்.

"இங்கே கூகுளாண்டவரிடம் கேட்டால், தகவலா கொட்டிடுவார்.." என்று தமிழ் உரு எழுத்துக்கு மாறி நின்ற சீர் நெடுமாறன் பற்றி கேட்டார்.

தேடிக் கண்டுபிடித்து குறித்துக் கொண்ட தகவல்கள் இன்னும் தேடச் சொன்னது.  ஒரே தகவலை பலபேர்  பங்கு போட்டுக்  கொண்ட ப்ளாட்டிங் பேப்பர் வேலையும் சலிப்பூட்டியது. "இது போதாதுன்னா 'அறுபத்து மூவர்'ன்னு தேடிப்பாக்கலாமா?" என்று தனக்குத் தானே முணுமுணுப்பாய்ச் சொல்லிக் கொண்ட வைத்தீஸ்வரன்,  'அறுபத்து மூவர்' என்று தட்டச்சி அந்த வரிசையில் தேடிய பொழுது தான் புதையல் போல வேறு சில விவரங்கள் கிடைத்தன.

யதேச்சையாய் மழலைகள்.காம் என்கிற வலைத்தளத்தில் அவர் கிடைத்தார்.  புகைப்படம் போட்டு கீதா சாம்பசிவம் என்று பெயர் போட்டிருந்தது.  அறுபத்து மூவர் என்னும் தலைப்பில் நாயன்மார்களைப் பற்றி குழந்தைகளுக்கு  கதை சொல்கிற மாதிரி அழகாக கோர்வையாக எழுதியிருந்தார்.  அங்கங்கே படங்கள் வேறே. ஆனால் அவர் எழுதியிருந்த கட்டுரைகளில் நின்ற சீர் நெடுமாறனைக் கண்டு பிடிப்பதற்குள் தான் உன்பாடு என்பாடு என்றாகிவிட்டது.

தேடிக் கண்டுபிடித்து படித்துப் பார்த்த பொழுது மோகனுக்கு நிறைவாக இருந்தாலும் "எல்லாரும் திருப்பி திருப்பி   நாலைஞ்சு பாயிண்டுகளையே சொல்றாங்க, இல்லை?" என்று பொதுவில் கேட்டான்.

"அந்த நாயனாரைப் பத்தி லோகத்திற்கு தெரிஞ்சிருக்கற தகவல்கள் அவ்வளவு தான் போலிருக்கு.." என்றார் ஜி.

"அப்படித்தான் இருக்கணும்... இருந்தாலும் வேறே எங்கையானும் இன்னும் இவர் பற்றித் தெரிஞ்சிக்க முடியுமான்னு பாக்கணும்.." என்றான் மோகன்.

"எங்கிட்டே சொல்லிட்டீங்கல்லே.. கொண்டு வந்து சேக்கறேன், பாருங்க.." என்று புது உற்சாகத்துடன் கணினியை கைவிட்டு எழுந்திருந்தார் வைத்தி.

அவர் சொன்ன தோரணை, நிச்சயம் செய்வார் போலிருந்தது மோகனுக்கு.





9 comments:

G.M Balasubramaniam said...

முன்பே கோமதி அரசு சில விஷயங்களைப் பகிர்ந்திருந்த நினைவு

ஸ்ரீராம். said...

அடடே... நம்ம கீதா அக்கா!

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன்: கதைக்குள் கதையாக மிகவும் அழகாக நகர்கிறது கதை ஸார். தொடர்கிறோம்.

கீதா: ஜீவி அண்ணா அட கீதாக்காவையும் சொல்லியாச்சு!!! இயல்பாய், பத்திரைகை ஆஃபீஸும், அந்த இதழில் வரும் கதையுமாக இரண்டும் கலந்து வருவது அழகாக இருக்கிறது. பத்திரிகை ஆஃபீஸ் என்பது எபப்டி என்பதும் தெரியவருகிறது...தொடர்கிறோம்

ஜீவி said...

@ GMB

//முன்பே கோமதி அரசு சில விஷயங்களைப் பகிர்ந்திருந்த நினைவு..//

நீங்கள் பகிர்ந்து கொண்டது எதுவும் நினைவுக்கு வரவில்லையா, சார்?


ஜீவி said...

@ ஸ்ரீராம்

அடடே! ஸ்ரீராமுக்குத் தான் எத்தனை குஷி!..

ஜீவி said...

@ துளசிதரன்


// கதைக்குள் கதையாக மிகவும் அழகாக நகர்கிறது கதை ஸார். //

ஏதாவது புதுமை செய்ய வேண்டாமா?.. அதற்காகத் தான்.

// தொடர்கிறோம்..//

அத்தியாய எண் பார்த்துத் தொடர வேண்டுகிறேன். ஒரு அத்தியாயம் தவற விட்டாலும் கதை புரியாது.. தொடர்வதற்கு நன்றி.

ஜீவி said...

@ கீதா

நின்ற சீர் நெடுமாறன் என்று தேடினால் உங்கள் கீதாக்கா கிடைக்க மாட்டார்கள்.
கூன் பாண்டியன் என்றால் கிடைப்பார். எனக்கென்னவே அவனைக் கூன் பாண்டியன் என்று அழைப்பது பிடிக்கவில்லை.

பத்திரிகை, பத்திரிகை ஆஃபீஸ், எழுத்தாளர் இதெல்லாம் 'நம்ம' ஏரியா இல்லியா? அதனால் தான் அந்த இயல்பு.' உன்னிப்பாகப் படிப்பவர்களுக்கு எந்தப் பத்திரிகை என்பது கூடத் தெரியலாம்.

தொடர்ந்து வாருங்கள்.

வே.நடனசபாபதி said...

குமுதம் வார இதழில் ‘அரசு’ என்ற பெயரில் திருவாளர்கள் அண்ணாமலை, ரங்கராஜன் மற்றும் சுந்தரேசன் ஆகியோர் கேள்வி பதில் பகுதியில் கேட்கப்படும் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தது ‘வைதேகி’ பற்றி படித்ததும் நினைவுக்கு வந்தது.

கதைக்குள் கதை எழுதுவது கடினம். வாசகர்களை இரண்டு கதைகளிலும் வரும் கதை மாந்தர்களையும் நிகழ்வுகளையும் மனதில் கோர்வையாக இருத்திக்கொள்ளுமாறு செய்யும் கலை எல்லோருக்கும் வராது. இயல்பாகவே தங்களுக்கு அது இருக்கிறது .பாராட்டுகள்!

நின்ற சீர் நெடுமாறனைப் பற்றி அறிய நானும் நின்றுகொண்டு ( காத்துக்கொண்டு )) இருக்கிறேன்!

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

//பதில் அளித்து வந்தது ‘வைதேகி’ பற்றி படித்ததும் நினைவுக்கு வந்தது. ///

ஆமாம், சார். 'அரசு'வின் நினைப்பில் தான் 'வைதேகி'யும் வந்தாள்.

//கதைக்குள் கதை எழுதுவது கடினம்... பாராட்டுகள்.//

உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள். நன்றி சார்.

//நின்ற சீர் நெடுமாறனைப் பற்றி அறிய நானும் நின்றுகொண்டு ( காத்துக்கொண்டு )) இருக்கிறேன்! //

:))

Related Posts with Thumbnails