மின் நூல்

Thursday, July 25, 2024

இது ஒரு தொடர்கதை -- 8

                                               
                                                                                8

ன்று கோயில் ஜனசந்தடியே அற்று 'ஹோ'வென்றிருந்தது.  காலை தாண்டிய முன் பகல் நேரம் என்பதினால் கூட்டமில்லையோ என்று நினைத்துக் கொண்டான் பாண்டியன்.

சுவாமி  சன்னதிக்குள் நுழைந்தவனைப் பார்த்து சன்னதி கீழ்ப்படியில் ஒருக்களித்தவாறு அமர்ந்திருந்த குருக்கள் எழுந்து வந்தார்.  அவன் கையில் ஒன்றும் இல்லை என்பதினால், அர்ச்சனைக்காரர் இல்லை என்று  நிச்சயித்துக் கொண்டவர் போலத் திரும்பினார்.  குறுகலான படிகள் ஏறி சுவாமி
கருவறைக்குள் சென்றவர் தட்டெடுத்து கற்பூரம் ஏற்றி சுவாமிக்குக் காட்டினார். இங்கிருந்தே கன்னத்தில் லேசாகத் தட்டிக்கொண்டு கைகுவித்து சுவாமி தரிசனம் செய்த பொழுது பாண்டியனுக்கு உடல் சிலிர்த்தது.

தீபாராதனையில் தெரிந்த உப்பிய  கன்னத்தில் குமிழாய் விளைந்த இறைவனின் குறுஞ்சிரிப்பு தனக்கு மட்டுமே அருள் பாலிப்பதான குறு நகைப்போல அவன் நினைப்பில் பதிந்தது. தன்னைத் தவிர வேறு யாரும் சன்னதியில் இல்லை என்கிற உணர்வு, தனக்காக மட்டுமேயான இறைவனின்  தரிசனம் இது என்கிற எண்ணமாய் அவனுள் உருக்கொண்டது.  அந்த எண்ணம் பாண்டியனின் மனசில் உருக்க்கொண்ட ஷணத்திலேயே குருக்கள் அங்கு இருப்பதையும் வலிய மறக்கடித்துக் கொண்டு இந்த இடத்தில் தானும் இறைவனும் தான் என்கிற நிலையாய் ஒரு நினைப்பு மனசில் வியாபித்தது. அந்த நினைப்பு அந்த நிலையே நெடுநேரம் நீடிக்கக் கூடாதா என்கிற ஆசையாய் தவித்து அலைபாய்கையில் குருக்களின் குரல் பாண்டியனின் எண்ண  அலையை அறுத்தது.  அவர் என்ன சொன்னார் என்று உணர்வில் படியவில்லை. தீபாராதனைத் தட்டுடன் நின்று கொண்டிருந்த அவர் உருவம் மட்டும் மங்கலாய் அவன் தோற்ற உணர்வில் படிந்தது.

கற்பூர ஜ்வாலை பக்கம்  கைவிரல் மடக்கி அந்த இளஞ்சூட்டை கண்களில் ஒற்றிக்கொண்டு,  அவர் தந்த வீபூதியை பாண்டியன் நெற்றியில் இட்டுக் கொண்டான்.  பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கிடைத்த சில்லரையை எடுத்து தட்டில் இட்டான்.  'இருங்கோ..' என்று சொல்லி விட்டு குருக்கள் படியேறி கருவறைக்குள் சென்றார்.  திரும்பியவர்  கையில் சின்ன பூச்சரமும் ஒரு வீபூதிப் பொட்டலமும் இருந்தது. அதை அவரிடம் பெற்றுக்கொண்டு கண்களில் ஒற்றி சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அவரைப் பார்த்து முறுவலித்தான்.

"ஈஸ்வரன் சக்தி வாய்ந்தவர்.  நன்னா வேண்டிக்கோங்கோ.." என்றவராய் குருக்கள் திரும்பினார்.

சட்டென்று என்ன வேண்டிக்கொள்வது என்று தெரியவில்லை.  வேண்டிக்கொள்வதற்கு மட்டுமே தான் இறைவனா என்றும் தெரியவில்லை.  இப்பொழுது பாண்டியன் அடைந்த அனுபவம் அதையெல்லாம் தாண்டிய ஒன்றாக அவனுக்கு இருந்தது.   இன்னொரு முறை இறைவனைப் பார்க்க வேண்டுமென்ற குறுகுறுப்பில் அவன் மனசு  அலைபாய்ந்தது.  அந்த குறுகுறுப்பை அடக்க  முடியாமல் தலை நிமிர்த்தி இறைஞ்சும்  பார்வையில்  விழிவிரித்து அவன் பார்த்த பொழுது கர்ப்பகிரக தீபஒளியின் பொட்டு  போன்ற வெளிச்சத்திலேயே இறையனாரின் கன்னக் குமிழ்ச்சிரிப்பு இங்கிருந்தே பளிச்சென்று அவனுக்குத் தெரிந்தது. இதே மாதிரி இதற்கு முன் இப்படிப் பார்த்த தருணத்தில் சிறைபிடித்து அவன் நினைவில் தேக்கிக்கொண்ட இறைவனின்  குறுஞ்சிரிப்புக் கீற்று பளீரிட்டு இப்போது அதோடு சேர்ந்து கொண்ட மாதிரி இருந்தது.  அப்படிச் சேர்ந்தது, இரண்டாய் சேர்வது  தெரியாமல்,  ஒன்றில் ஒன்றாய் ஒன்றி ஒன்றாகிப் போன மாதிரி அவன்  பார்வைக்குப் பட்டது...

பட்ட தருணத்தில் நினைவின் அடி ஆழத்திலிருந்து, ஒரு குரல் கேட்டது.  மங்கை தான் சொல்கிறாள்: 'இங்கே-அங்கே'ன்னு ரெண்டு  இல்லே; ரெண்டாத் தெரிஞ்சாலும் ரெண்டும் ஒண்ணுதான். தெரிஞ்சிக்கங்க..'

 'கொஞ்ச நேரம் முன்னாடி இறைவன்-நீ இருவர் மட்டுமே இங்கிருப்பதாக நினைச்சியே?  இப்போ சொல்லு. பரமனும் ஜீவனும் வெவ்வேறான இரண்டா?.. இல்லை, ரெண்டா உணர்ந்தாலும் ரெண்டும் ஒண்ணு தானா?' என்ற கேள்வி பாண்டியன் மனசில் அந்த ஷணமே புரண்டது.

ரொம்ப சிரமப்பட்டு எண்ணம் குவித்து "இதையெல்லாம் கேட்க மூணாவதாக நீ யார்?" என்று பாண்டியன் தனக்குள்ளேயே கேட்டுக்  கொண்டான். 'மூணாவதும் ரெண்டு ஒண்ணான அந்த ஒண்ணில் அடக்கம்" என்று அவனுக்குள்ளே கேட்ட கேள்வியே பதிலாய் கிளர்ந்த பொழுது அதை ஆமோதிப்பது போல   கோயில் மணி கணகணத்தது. உபதேசத்தை உள்வாங்கிய விதிர்விதிர்ப்பில் தானாகவே பாண்டியனின் கைகள் கூப்பிக் கொண்டன.

கால் துவளுகிற மாதிரி இருந்தது.  அப்படியே உட்கார்ந்து கொள்ளலாம்
போலிருந்தது. சன்னதியின் ஒரு மூலையில் யாருக்கும் இடைஞ்சலில்லாமல் உட்கார்ந்தான் பாண்டியன்.  உட்கார்ந்ததும் அலைஓசையாய்  மனசில்  ஆர்ப்பரித்த இரைச்சல் எங்கே போனது என்று தெரியவில்லை.

மங்கையுடன்  கோயில்களுக்கு செல்லும் பொழுதெல்லாம் ஏற்படாத உணர்வுகள், தனியாக வரும் பொழுது மட்டும் ஏற்படுகிறதே என்று திடுதிப்பென்று தோன்றியது.  கவனக்குறைவுகளும், கவன ஈர்ப்புகளும் அதற்குக் காரணமாக இருக்கலாமோ என்று நினைத்துக் கொண்டான்.  தனித்திருப்பதில் அவையெல்லாம் களையப்படுகிறதோ இல்லை காணப்படுகிறதோ என்று எண்ணிக் கொண்டான். தனித்திருப்பதில் எண்ணம் குவிந்து தீட்சண்யப்படுவதை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அப்படி கூர்மையடைந்தது தான் காரணமாக இருக்கலாம். இப்படித் தனியாக கோயிலுக்கு வந்திருக்கும் தருணத்திலேயே, நின்று நிதானித்து வெளிச்சத்தில் அத்தனை நாயன்மார்களையும்  தரிசித்து விடவேண்டுமென்று பாண்டியனுக்குத் தோன்றியது. எழுந்திருந்தான்.  ஈஸ்வரனின் சன்னதிக்கு இடப்பக்கம் திரும்பிய பிராகாரத்தில் வரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அறுபத்து மூவர் சிலைகளுக்கருகில் வந்தான்.

எல்லா சிலைகளும் வரட்சியின்றி எண்ணெய் முழுக்கில் பளபளத்தன. இடுப்பில் பூண்டிருந்த வஸ்திரங்கள் புதுசாக இருந்தன.  மூன்று பெண் நாயன்மார்களுக்கும் புடவை கட்டிய தோரணையில் அலங்காரம் செய்திருந்திருந்தனர். எல்லா நாயன்மார் பாதக்கமலங்களிலும் ஒற்றைப் புஷ்பம் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு  பெயராகப் படித்துக்  கொண்டு அந்தந்த நாயன்மார்களின் தோற்றம் இப்படித்தான் இருந்திருக்கும் போலும் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டே வந்த பாண்டியன், நின்ற சீர் நெடுமாற நாயனாருக்கு அருகில் வந்ததும் சட்டென்று நின்றான்.

களையான முகம்.  கம்பீரமான தோற்றம்.  விசாலமான நெற்றி. நாயனார்க்குள்ளும் ஒளிந்திருந்த ராஜ  மிடுக்கு உணர்வாய் அவனுள் படிந்து அவனுக்கும் தொற்றிக் கொண்ட மாதிரி இருந்தது..

'ஐயே! மனசிலே ராஜாங்கற நெனைப்பு தான்'-- என்று மங்கையின் குரல் பாண்டியனின் மனசின் அடி ஆழத்தில் கேட்டது.


(தொடரும்)



குறிப்பு:  படங்கள் உதவியோருக்கு நன்றி.

7 comments:

G.M Balasubramaniam said...

ஒன்றிலே இன்னொன்றைக் காண்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அவர்கள் எண்ணப் போக்கிலெயே காட்சிகள் தெரியலாம் தெரியப்படுத்தலாம்

Thulasidharan V Thillaiakathu said...

துளசி : நன்றாக நகர்கிறது. அந்த ராஜாவையும் பாண்டியனையும் ஏதேனும் ஒரு வகையில் இணைக்கும் விதமாகக் கதை நகருமோ!!!

கீதா: இறைவனின் சன்னதியில் அருகில் இருக்கும் போது வேண்டுதல்கள் எதுவுமே தோன்றாது. வேண்டியதும் இல்லை. இறைவனை இறைவனுக்காகத் தரிசிப்பதுதான்...பாண்டியனின் எண்ணங்களூம் அதே போன்று ஓடுகிறதே! அதே போன்று தனியாகச் செல்லும் போது ஏற்படும் உணர்வுகள் தனிதான். கூட்டத்தோடு போகும் போதோ அல்லது நம்முடன் யாரேனும் இருந்தாலோ ஏதோ ஒரு வித டைவெர்ஷன்...ஆனால் தனியாகச் செல்லும் போது நம் உணர்வுகள் வேறு விதமாக இறைவனுடன் கலப்பது போலத் தோன்றும்...அதுவும் கூட்டமே இல்லாத கோயில் என்றால் அது தனிதான்...

நெடுமாற நாயனார்க்கும் பாண்டியனுக்கும் ஏதோ இருக்குமோ என்ற ஒன்றும்மனதில் தோன்றுகிறது...தொடர்கிறோம் அண்ணா

தனிமரம் said...

இறைவன் தருசனம் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு வடிவங்களில் தோன்றும் மன இயல்பை அழகாய் விபரிக்கும் காட்சி அருமை. தொடர்கின்றேன்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

// 'கொஞ்ச நேரம் முன்னாடி இறைவன்-நீ இருவர் மட்டுமே இங்கிருப்பதாக நினைச்சியே? இப்போ சொல்லு. பரமனும் ஜீவனும் வெவ்வேறான இரண்டா?.. இல்லை, ரெண்டா உணர்ந்தாலும் ரெண்டும் ஒண்ணு தானா?' என்ற கேள்வி பாண்டியன் மனசில் அந்த ஷணமே புரண்டது.//

அத்வைதம், விசிஷ்டாத்வைதம் தத்துவங்களைக் கோடி காட்ட இந்த ஒன்றும் (பரமனும் ஜீவனும் ஒன்றே) இரண்டும் (பரமனும் ஜீவனும் வேறே வேறே) வந்தது, ஐயா.


ஜீவி said...

@ துளசிதரன்

இந்தப் பாண்டியன் தனது முந்தைய பிறவிகளில் ஒன்றில் 'அந்த'ப் பாண்டியனாய் இருந்தான் என்பதாகக் கற்பனை. எழுத்தாளன் மோகனின் 'இது தொடர்கதை' தொடர்கதைக் கற்பனை.

ஜீவி said...

@ தனிமரம்

'தனிமரம்' இல்லை நீங்கள். என்றைக்கு பிலாக் உலகிற்கு வந்து விட்டீர்களோ, அன்றே தோப்பு.

தனிமரம் என்ற வார்த்தை சோகத்தை உணர்த்துவதாகக் கொண்டதால் சொன்னேன்.

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

தொடர்ந்து வாசித்து வாருங்கள், நண்பரே!

வே.நடனசபாபதி said...


இரண்டும் வெவ்வேறா அல்லது இரண்டும் ஒன்றா என்ற கேள்விக்கு ‘மூணாவதும் ரெண்டு ஒண்ணான அந்த ஒண்ணில் அடக்கம்’ என்ற பதிலை பாண்டியன் மூலமாக சொல்லி புரியவைத்துவிட்டீர்கள்.

Related Posts with Thumbnails