மின் நூல்

Monday, January 8, 2018

பாரதியார் கதை --5

                                                                           5


பிரிட்டிஷ்  ஆட்சியின் பிரதிநிதி கர்ஸான் பிரபு வைஸ்ராயாய் இருந்த கால கட்டம் அது.  ஆண்டு 1903.

நாடு பூராவும் ஆங்கில அதிகாரத்திற்கு ஆட்பட்டிருந்த சமஸ்தான  மன்னர்களை தில்லி மாநகருக்கு வரவழைத்து  கர்ஸான்  ஒரு கூட்டம் போட்டார். இந்த மாதிரியான கூட்டங்களை தர்பார் என்று அந்நாளில் அழைப்பார்கள்.
                                                                                                                           
எட்டையபுரம் மகாராஜாவும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக தலைநகர் வந்திருந்தவர் கூட்டம் முடிந்ததும்  காசிக்குப் புறப்பட்டு வந்தார்.  காசிக்கு அவர்   வந்த காரணம் பாரதியை  எப்படியாவது தன்னுடன் அழைத்துப் போக வேண்டும் என்பதே.   சமஸ்தானத்தில் பாரதிக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுத்து தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மன்னர் குறியாக இருந்தார்.   அது பற்றி பாரதியிடம் அவர் பேசிப் பார்த்த பொழுது எட்டையபுரம் வர பாரதி ஒப்புக் கொண்டு விட்டார்.  அதில் மன்னருக்கு மிகவும் மகிழ்ச்சி.    தன்னுடன் பாரதியையும் எட்டையபுரம் அழைத்து வந்து விட்டார்.                                                       

'பிரிட்டிஷ் வைஸ்ராயைச் சந்திக்க வந்த ஒரு சமஸ்தான மன்னர் 'சின்னப் பையன்' பாரதியை தன்  சமஸ்தானத்திற்கு  அழைத்துப்  போக வேண்டி காசி வருவதாவது?..    இதெல்லாம் என்ன கட்டுக்கதை'  இந்தப் பகுதியை வாசிக்கும் அன்பர்களுக்கு ஐயம் தோன்றலாம்.   ஆனால் நடந்தது அது தான்.

உண்மையில் சொல்லப் போனால் சமஸ்தானம், மன்னர் என்பதெல்லாம் பெத்தப் பெயர்கள் தாம்.   மன்னர் என்று அழைக்கப்பட்டவர் அந்நாளைய ஜமீன்தாரர்கள்.  அவர்கள் கையகப்பட்ட பகுதியில் ஆங்கில ஆட்சியின் ஆசிர்வாதத்தில் அவர்கள் கோலோச்சி வந்தார்கள்.  அவர்களை குதிரையின்  மேலமர்ந்த வீரர்களாய் தோன்றங்கொள்ளச் செய்து குதிரையின் லகானையோ பிரிட்டிஷ் பேரரசின் இந்தியத் தலைமை தன் கையில் பிடித்திருந்தது.  அவர்கள் சுண்டினால் தான் குதிரை அசையும் என்ற நிலையில் ஜமீன்தாரர்கள்  தங்கள் நிலப்பகுதியில் கோலோச்சி வந்தனர்.

பாரதியார் காலத்து சில எட்டையபுர ஜமீன்தார்களைப் பற்றிப் பார்ப்போம்.

பாரதி பிறந்த பொழுது எட்டையபுர சமஸ்தானத்து ஜமீன்தாரராய் இருந்தவர்
ஜகவீர  ராம குமார எட்டப்ப நாயக்கர்.  இவரின் நம்பிக்கைக்குரியவராய் சின்னசாமி ஐயர் சமஸ்தான பணிகளைச் செய்து வந்தார்.  சமஸ்த்தானப் பணி என்றால்  சின்னசாமி ஐயர் ஒரு பஞ்சாலையை நடத்தி வந்தார்.    அதில் பெருமளவு முதலீடு சமஸ்தானத்தினுடையதாய் இருந்தது.  இந்த ஜமீன்தார் காலமாகும் பொழுது பாரதிக்கு எட்டு வயது.  அதனால் பாரதிக்கு  இந்த ஜமீன்தார் அவ்வளவு அறிமுகம் ஆனவர் இல்லை.

ஜகவீர ராம குமார எட்டப்ப நாயக்கரின்  மகன் தான் ராஜ ஜெகவீர ராம வேங்கடேசுவர எட்டப்ப நாயக்கர்.  இவர் கிட்டத்தட்ட பாரதிக்கு நான்கு வயது மூத்தவர்.  ஓரளவு சமவயதுச் சிறுவர்கள் என்பதினால்  தந்தையின் செல்வாக்கில் சமஸ்தானக்கு அறிமுகமாகியிருந்த  பாரதிக்கு இவருடன் தான் நெருக்கம் அதிகம்.  காசியிலிருந்து பாரதியாரை எட்டையபுரத்திற்கு அழைத்து வந்தவரும் இவரே. 

பிரிட்டிஷார் நாட்டை ஆண்ட காலகட்டத்தில் தேசத்தின் கால் வாசி நிலப்பரப்பு  இப்படியான சமஸ்தானங்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.  சமஸ்தானம் என்பது பிரிட்டிஷாரின் ஆட்சி நலனைக் காப்பாற்றும் ஓர் அமைப்பு.  அவ்வளவு தான்.   இயல்பாகவே நிலவுடமை சமுதாயத்தின் எச்சங்களைப் பண்புகளாய்க் கொண்டிருக்கும் ஜமீந்தார் வர்க்கத்தை நவீன ஆங்கிலோ- இந்திய சிந்தனைகளைக் கொண்ட  பிரிட்டிஷ் ஆட்சிக்கு ராஜ விசுவாசமாக இருப்பவர்களாக மாற்ற வேண்டும் என்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்  பட்டன.   யாராவது சமஸ்தான ஜமீன்தார் இறக்கும் பொழுது அவர் வாரிசு வயசுக்கு வராத மைனராக இருப்பின், அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே கல்வி போதிக்கும் பொறுப்பையும் மிக கவனமாக பிரிட்டிஷ் அரசாங்கம்
ஏற்றுக்  கொண்டது.
                                                                                                                                         
உதாரணத்திற்கு நம் பாரதியாருக்கு சிறார் பருவத்திலிருந்தே பழக்கமான எட்டையபுர சின்ன ஜமீந்தார் வேங்கடேசுவர எட்டப்ப நாயக்கருக்கு பன்னிரண்டு வயதாகும் பொழுது அவர் தந்தை ராம குமார எட்டப்ப நாயக்கர் காலமாகி விட்டார்.  அதனால் இளம் ஜமீந்தார் எட்டையபுரத்திலும் சென்னை நியூவிங்டன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.   கலாசாலையில் கற்கும் கல்வி பாதி, வெளியிடங்களுக்கு சுற்றுப் பயணம் போல அழைத்துச் சென்று பயிற்றுவிக்கும் கல்வி பாதி என்பது போல இளம் ஜமீன்தார் வேங்கடேசுவரனை வங்காள மகாணங்களுக்கும் கொழும்புவிற்கும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.   ஆள வேண்டிய ஜமீன்தார்கள் கல்வி கற்கும் சூழ்நிலைகளில்  திவான் என்ற பொறுப்பிலிருந்த அதிகாரிகள் சமஸ்தான நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர்.

சின்னசாமி ஐயர் வாழ்க்கையில் நொடித்துப் போய் விக்கித்து நின்ற பொழுது  இதே வெங்கடேசுவரன் ஜமீந்தாருக்கு தமது கல்வித் தொடர்ச்சிக்காக பொருள் வேண்டி பாரதியார் சீட்டுக் கவிதை எழுதியது தான் காலத்தின் கோலம்.

சீட்டுக்கவிதையை 'தென்னிளசை நன்னகரிற் சிங்கம் வெங்கடேசு ரெட்ட கன்னன சுமூக சமூகம்'  என்று விளித்து ஆரம்பித்து,  கவிதைக்குக்  கீழே 'இளசை சுப்பிரமணியன்' என்று அட்டகாசமாகக் கையெழுத்திட்டு சமஸ்தானத்திற்கு அனுப்புகிறார் பாரதியார்.

இதோ அந்த சீட்டுக் கவிதை:

கைப்பொருள்  அற்றான் கற்பது எவ்வகை?

பொருளால் அன்றிக் கல்வியும் வரவில;

கல்வியால் அன்றிப் பொருளும் வரவில;

முதற்கண் கல்வியே பயிறல் முறைமையாம்

அதற்கு பொருள்இலை ஆதலின் அடியேன்

வருந்தியே நின்பால் வந்து அடைந்தனன்

மாந்தர்ப் புரத்தல் வேந்தர்தம் திருஅருட்கு

இலக்கியம்  ஆதலின் எளியேற்கு இந்நாள்

அரும்பொருள்  உதவிநீ அனைத்தும் அருள்வையால்...



'வேங்கடேசு ரெட்ட கன்னன சுமூக சமூகத்தின்' பார்வைக்கு சீட்டுக் கவிதை போய்ச் சேர்ந்ததோ என்னவோ தெரியவில்லை.   சமஸ்தானத்திலிருந்து பாரதிக்கு  அவரது கல்விக்கான எந்தப் பொருளுதவியும்  கிடைக்கவில்லை.

ஒருகால் இளம் ஜமீன்தார்  பார்வைக்கு இந்த சீட்டுக்கவிதை போய்ச் சேரவே இல்லையோ, தெரியவில்லை.  இல்லை,  பின்னால்   இது பற்றித் தெரிய வந்து தான்  தில்லி தர்பாருக்குப் போனவர் திரும்பும் பொழுது காசிக்கு வந்து  பாரதிக்கு தன் சொந்த சமஸ்தானத்தில் ஏதாவது  செய்தே ஆக வேண்டும் என்ற உருத்தலில்  பாரதியை கையோடு எட்டையபுரத்திற்கு தன்னுடன் அழைத்து வந்தாரோ, தெரியவில்லை!..



=======================================================================

எட்டையபுர சமஸ்தானம்  கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் புகலிடமாகத் திகழ்ந்தது என்பது வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து ஓரளவு நமக்குத் தெரிய வருகிறது.   உமறுப்புலவர்,  கடிகை முத்துப் புலவர்,  முத்துசாமி தீஷிதர்,  சுப்பராம தீஷிதர் என்று கலைஞர்களுக்கு ஆதரவு நல்கிய சமஸ்தானம் அது.

=======================================================================


(வளரும்)


படங்கள் அளித்தவர்களுக்கு நன்றி.

12 comments:

நெல்லைத் தமிழன் said...

அறியாத செய்திகளை சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள். புத்தகமாக வரும்போது முழுமை உடையதாய் இருக்கும்.

ஸ்ரீராம். said...

எட்டையபுரம் ஜமீன்தார்கள் பற்றிய தகவல்கள் மற்ற இடங்களில் படித்ததைவிடக் கூடுதலான தகவல்கள். சீட்டுக்கவி எப்போதோ படித்தது மாதிரியும் இருக்கிறது, இல்லை மாதிரியும் இருக்கிறது!

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

நன்றி. தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

எட்டையபுர ஜமீந்தார்களைப் பற்றிய தகவல்கள் இன்னும் தொடர்கிறது.

சீட்டுக்கவி என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கும் பட்சத்தில், எப்பவோ நாம படிச்ச சீட்டுக் கவிதை இது தானா என்ற சந்தேகமே, படித்தது மாதிரியும், இல்லை மாதிரியுமாக இருப்பதற்குக் காரணம்.

தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி.

Bhanumathy Venkateswaran said...

எட்டயபுர மன்னர்களைப் பற்றிய செய்திகள் புதிதாகவும், சுவையாகவும் இருந்தன.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

பாரதியாரின் சின்ன சங்கரன் கதை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அடுத்த அத்தியாயத்திலும் எட்டையபுர ஜமீந்தார்களைப் பற்றிய செய்தி தொடர்கிறது.

பாரதியார் பற்றிய தொடர் அல்லவா?.. தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

நிறைய அறியாத தகவல்கள். பாரதியைப் பற்றி விரிவாக அறிய முடிகிறது உங்கள் பதிவுகளில். எட்டையபுர மன்னர்கள்/ஜமீன்தார்களை பற்றி அவ்வளவாக அறிந்ததில்லை. நிறைய அறிகிறோம் அதை நீங்கள் மிகவும் ஸ்வாரஸ்யமாகச் சொல்லியும் வருகிறீர்கள்.

தொடர்கிறோம்
துளசிதரன் : விடுபட்டதையும் வாசித்தேன்..
துளசிதரன், கீதா

சிவகுமாரன் said...

பாரதியின் சீட்டுக்கவிதை படித்த ஆர்வத்தில் நானும் ஒரு சீட்டுக்கவி எழுதினேன்

தி.தமிழ் இளங்கோ said...

தொடர்கின்றேன்.

ஜீவி said...

@ துளசிதரன்

விடுபட்டதையும் வாசித்தது தொடர்ந்து வாசிப்பதற்கு உதவும். நன்றி, நண்பரே.

நன்றி, கீதா. தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ சிவகுமாரன்

பாரதியே ஒரு உந்து சக்தி தான், சிவா.

இந்தத் தொடரை எழுதுங்கால், நம் மனம் பூராவும் வியாபித்து அவன் நம்முள் ஏற்படுத்தும் சக்தியை நானும் உணர்கிறேன்.

உங்களது சீட்டுக்கவியை நாங்களும் படிக்க வேண்டாமா? வெளியிட்டு விடுங்கள்.

ஜீவி said...

@ தமிழ் இளங்கோ

இளங்கோ சார், தொடர்வதற்கு நன்றி.

Related Posts with Thumbnails