மின் நூல்

Monday, March 19, 2018

பாரதியார் கதை -- 14

                                                     அத்தியாயம்-- 14

கிட்டத்தட்ட 16 பக்கங்கள்.  புதுமையாக சிவப்புத் தாளில்   அச்சிடப்பட்ட பத்திரிகையாக 'இந்தியா'  வார இதழாக புதுவையிலிருந்து புது எழுச்சி கொண்டு வெளிவரத் துவங்கியது.

இன்றைய புதுவை நேரு வீதியில்  வாடகைக்கு ஒரு கட்டிடத்தைப் பிடித்து மண்டயம் சீனிவாச்சாரியார் பத்திரிகை வெளிவருவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.  மக்களின் குறைகள், பொது விஷயங்கள், வெளியூர் செய்திகள்,  புத்தக மதிப்புரைகள், முதல் பக்கத்தில் கேலிச் சித்திரம் என்று அந்த 16 பக்கங்களில் ஒரு பத்திரிகைக்குண்டான சகல இலட்சணங்களையும் பொருத்தி தேசிய எழுச்சிக்கான உள்ளடக்கங்களை பத்திரிகையின் ஜீவனாக்கியிருந்தார்கள்.

தேச சுதந்திரத்திற்கான வழியை பாரதி தீர்க்கமாகத் தீர்மானித்திருந்தான்.  'மந்திரத்திலே மாங்காய் விழாது. பயந்து செய்யும் ஓரிரண்டு செய்கைகளால் நம் நாட்டிற்கு சுயாதீனம் கிடைக்காது. விடாமுயற்சியும் சித்த சுத்தியுமே துணையாகும்' என்று இந்தியாவில் எழுதுகிறான். மிதவாதிகளின் போக்கு பிடிக்காமல் துடிக்கிறான்.   இந்தியாவில்  பாரதி எ ழுதிய 'சுதேசிய ஒளிக்கு அஞ்சும் ஆந்தைகள்', 'சென்னையில் ஆட்டு மந்தை', 'பசுத்தோல் போர்த்திய புலிக்குட்டி' போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.  பாரதியின் எழுத்துச் சீற்றத்திற்கு அன்னி பெசண்ட் கூட தப்பவில்லை.  இந்தப் பக்கம் அந்தப் பக்கம் சாயாது அவனின் எழுத்து மேன்மை தராசுக் கோலாய் கொண்ட கொள்கையில் லவலேசமும் சமரசம் செய்து கொள்ளாது போராடியது.  'வந்தேமாதரம்', 'அமிர்தபஜார்' போன்ற வடபுலத்துப் பத்திரிகைகளின் அரசியல் கட்டுரைகளை 'இந்தியா'வில் மொழியாக்கம் செய்து வெளியிடவும் ஆரம்பித்தான்.  இத்தனைக்கும் இடையே இந்தியா பத்திரிகையில்  'மலைப்பாம்பும் குரங்குகளும்', 'ஓநாயும் நாயும்', 'பஞ்சகோண கோட்டையின் கதை' என்று சிறுவர்களுக்கும் பக்கங்களை ஒதுக்கி அவர்களின் மனவளத்திற்கு அடிகோலும் கதைகளை வெளியிட்டான்.

கல்கத்தாவில்  'இந்தியா'  நிருபர் அரவிந்தரைப் பேட்டி கண்ட கட்டுரை,  அரவிந்தரின் 'கடல்' கவிதையின்  மொழிபெயர்ப்பு போன்ற பத்திரிகைக்கு  பொலிவு  தந்த விஷயங்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

'வெள்ளைத் திரையாய்,  வெருவுதரு தோற்றத்தாய்
கொள்ளை ஒலிக்கடலே நல்லறம் நீ கூறுதிகாண்
விரிந்த பெரும்புறங்கள்மேலெறிந்து உன் பேயலைகள்
பொருந்தும்  இடையே புதைந்த பிளவுகள் தாம்
பாதலம் போல் ஆழ்ந்திருப்பப் பார்க்கரிதாய் அவற்றின்
மீது அலம்பி நிற்கும் ஒரு வெள்ளைச் சிறுதோணி..'

-- என்று அந்த  ' கடல்' கவிதை பாரதியின் மொழியாக்கத்தில் துள்ளலுடன் தனி வாசிப்பு சுகத்தைக்  கொடுக்கும்.  ஸ்ரீமான்
அரவிந்த கோஷ்  ஆங்கில பாஷையில் சில கண்ணிகள் புனைந்து 'மாடர்ன் ரெவ்யூ' என்ற கல்கத்தா பத்திரிகையில் எழுதியதை தாய் சோறு சமைப்பதைப் பார்த்து குழந்தையும் விளையாட்டு சமையல் செய்வது போல அந்த மஹானுடைய செய்யுளை அன்பினால் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்' என்று மிகுந்த அடக்கத்துடன் பாரதி அந்த மொழிபெயர்ப்புக் கவிதையை வெளியிட்டிருக்கிறான்.

அலிப்பூர் சிறை வாசத்திற்குப் பிறகு ஆன்மீகத் தேடலின் உந்துதலில் அரவிந்தர் புதுவை வந்து சேர்ந்தது, பாரதியாருக்காகத் தான் என்பது போல அரவிந்தரின் அருகாமை பாரதியாரின் வாழ்க்கையில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.   பாரதியாரின் ஊனிலே ஏற்கனவே கலந்து ஒன்றியிருந்த ஆன்மீக உணர்வுகள் அரவிந்தரின் நட்பிலே  வீர சுதந்திர வேட்கையினூடே இன்னொரு திசை வழிப் போக்காய் ஊதி விட்ட  கனலாயிற்று.

பிரன்ஞ் ஆதிக்கப் பகுதியில் வாழ்ந்து கொண்டு பிரிட்டிஷ் ஆதிக்கப் பகுதிக்கான சுதந்திரத்திற்காக ஏங்குவதும் அதற்காக இங்கு துடிப்பதும் பாரதியின் இயல்பான நேரடி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பாங்குக்கு தகிப்பாக இருந்திருக்கும்  தான்.  'வீர சுதந்திரம் வேண்டி  நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?' என்று அவரின் உள்ளம் வெதும்பியது அதனால் தான்.

ஆனால் நட்பு வட்டாரமும் சூழ்நிலைகளும் வாழ்க்கையின் போக்குக்கு வாய்க்காலாக அமையும்  என்பது உளவியல்  ரீதியான உண்மையாயிற்றே!  பாரதியின் ஆன்மிக சிந்தனை கவிதா விலாசத்தோடு கலந்துறவாடும் பொழுதுகளாக அரவிந்தரோடு அவர் இருக்கும் நேரங்கள் அமைந்தன.

'பாரதியார் - அரவிந்தர் சம்பாஷணையில் நவரசங்களும் ததும்பும்;  ஒழுகும்.  கவிதை, சரித்திரம், தத்துவம், அனுபவம், கற்பனை, ஹாஸ்யம்,  குறுக்கு வெட்டு, விஸ்தாரம், உண்மையை வெளிப்படுத்தும் ஆவல்,  அபரிமிதமான இலக்கியச் சுவை,  எல்லை இல்லாத உடல்  பூரிப்பு-- எல்லாம் சம்பாஷணைக்கிடையிடையே இடைவிடாது நர்த்தனம் செய்யும்.  அந்தக் காலத்திலே குறுக்கெழுத்து நான் பழகிக் கொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்.  சம்பாஷணையில் சிற்சில கட்டங்களும் குறிப்புகளும் தான் இப்பொழுது என் நினைவில் இருக்கின்றன.   தினசரி டயரி எழுதும் பழக்கம் என்னிடம் இல்லை.  அளவற்ற நஷ்டம்.. இப்போது என்ன செய்வது?'  என்று வருந்திக் கூறுவார் வ.ரா.

'அய்யர் (வ.வே.சு அவர்கள்)  பாரதியார், சீனிவாச்சாரியார் முதலியோர் அரவிந்தர் வீட்டுக்குச் சென்று பேசத் தொடங்கினால் பொழுது போவதே தெரியாது. மாலை நான்கு
மணிக்கு பேச ஆரம்பித்தால் இரவு பத்து மணி வரைக்கும்  வேறு சிந்தனையே இருக்காது. சாப்பாட்டைப் பற்றிக் கவலை எதற்கு?'  என்று வ.ரா. சொல்லும் பொழுது நமக்கும் அந்த கூட்டத்தோடு இருந்த உணர்வு தோன்றும்.

பாண்டிச்சேரிகாரர்களுக்கு புஷ் வண்டியைப் பற்றித் தெரியும்.   இப்பொழுதெல்லாம் பரவலாகத் தென்படும் ஷேர் ஆட்டோ மாதிரி தான்.  புதுவை புஷ் வண்டிகள் சிலதுக்கு மூன்று சக்கரங்களும், சிலவற்றிற்கு நான்கும் இருக்கும்.  இந்த புஷ் வண்டிக்காரர்களுக்கு பாரதியாரைப்  பார்த்து விட்டால் பரமானந்தமாக இருக்கும்.  பாரதியாருக்கு முன்னே வண்டியை நிறுத்தி அவர் ஏறிக்கொள்ளாமல் விடமாட்டார்கள்.  போக வேண்டிய இடத்திற்கு போய்ச் சேர்ந்ததும்  பாரதியார் காசு கொடுத்தால் வாங்க மாட்டார்களாம்.

"என்னத்துக்குங்க எனக்குக் காசு?" என்பான்.

"ரூபாய் வேண்டுமோ?" என்று சொல்லி பாரதியார் சிரிப்பார்.

"எதுக்குங்க, ரூபாய்?"

புஷ் வண்டிக்காரனுக்குக்  கட்டிக் கொள்ள துணி வேண்டும்.   சிறிது நேரம் பாரதியாரும்  அவனுடன் சம்பாஷணை சல்லாபம் செய்வாராம்.   தான் மேலே போட்டுக் கொண்டிருப்பது  பட்டாயிருந்தாலும் சரி, கிழிந்த அங்கவஸ்திரமாக இருந்தாலும் சரி, சரிகை துப்பட்டாவாக இருந்தாலும் சரி, அது அன்றைக்கு புஷ் வண்டிக்காரனுக்கு போய்ச் சேரும்.  பாரதியாருக்கு அங்கவஸ்திரமில்லையே என்று பரிவு  கொண்ட நண்பர்  யாரேனும் அவருக்கு புதிய அங்கவஸ்திரம் கொடுக்க பாரதி வழியாக அது புஷ் வண்டிக்காரனுக்குப் போய்ச் சேருவது வாடிக்கையான ஒன்று.  அவர்களிடம் பாரதியாருக்கு அளவுகடந்த அன்பாம்.

இதெல்லாம் எப்படித் தெரிந்தது என்று கேட்காதீர்கள். எல்லாம் வ.ரா.  சொல்லித் தான்.

(வளரும்)

படங்கள் அளித்த நண்பர்களுக்கு நன்றி.

13 comments:

ஸ்ரீராம். said...

பாரதியார் அறச் சீற்றத்தோடு அன்னி பெசன்ட் பற்றி என்ன எழுதி இருந்தார் என்று சுருக்கமாகச் சொல்லி இருக்கலாம்.

ஸ்ரீராம். said...

K அம்ரிதா கொடுத்திருக்கும் விளம்பரத்தில் இருக்கும் நிகழ்வில் பாரதியார் என்ன பேசியிருப்பார்? சுவாரஸ்யமான கலைப்பாய் இருக்கிறதே...

ஸ்ரீராம். said...

நீங்கள் எழுதி வருவதை படிக்கையில் மறுபடி பாரதியார் சம்பந்தப்பட்ட புத்தகங்களை புரட்டவேண்டும் என்று ஆவல் வருகிறது.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

சொல்லியிருந்தால் நல்லது என்று நீங்கள் நினைத்தால் பதிவிலேயே குறிப்பிட்டு விடுகிறேன், ஸ்ரீராம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

ஆன்மீக பாரதியார் மற்ற எல்லா பாரதிகள் போலவே மிகத் தெளிவாக தன் சிந்தனையை செயல்லாக்கமாய்க் கொண்டிருந்தவர். அரவிந்தரின் நெருக்கத்தில் ஏற்கனவே அவர் உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆன்மிக விதை நீருற்றப் பெற்று செடியாகி கிளைப்பரப்பி விருட்சமாகியிருக்கிறது. 1919 வாக்கில் சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் 'நித்யத்தின் வழிபாடு' என்ற தலைப்பில் பாரதி ஆற்றிய ஆங்கில சொற்பொழிவிற்கான நோட்டீஸ் அது. பாரதியாரின் சொற்பொழிகள் என்று தனித் தலிப்பிட்டு நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. அப்பொழுது இந்த சொற்பொழிவு பற்றியும் குறிப்பிடுகிறேன்.

நமக்கெல்லாம் பெரும்பாலும் இளவயது பாரதியின் தோற்றம் தான் கிடைத்திருக்கிறது.
பிற்கால பாரதியின் தோற்றத்தைத் தெரியப்படுத்தும் அரிய புகைப்படம் இது என்றும் சொல்கிறார்கள்.

நுணுக்கமான தங்கள் வாசிப்புக்கு நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

புரட்டி இந்த யக்ஞத்திற்கு உதவுங்களேன்.

நெல்லை கவிமணி கண்ட பாரதியாரின் PDF தொகுப்பை அனுப்பி வைத்திருக்கிறார். அதைப் பார்த்து மகிழ்ச்சியான மகிழ்ச்சையாக இருந்தது.

நெல்லைத் தமிழன் said...

மண்டயம் சீனிவாச்சாரியார் - அவர் மாண்டியா ஐயங்காரோ? மாண்டியா சீனிவாச்சாரியார்தான் மண்டயம்னு மருவிடுத்தோ.

தொடர்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

கவிமணி கண்ட - இது தேசிய வி'நாயகம் பிள்ளையவர்களைக் குறிக்கும். நான் அனுப்பியது நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையவர்களது வரலாறு.

ஜீவி said...

@ நெ. த. (1)

ஆமாம், மாண்டியா தான் மண்டயம் ஆகியிருக்கிறது.

ஜீவி said...

@ நெ.த. (2)

தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் நினைவில் இருந்ததால் தவறு நிகழ்ந்து விட்டது.
ஸ்ரீராமிற்கு பதிலளிப்பதற்கு முன் கவிமணியவர்களின் கவிதைத் தொகுப்பு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த நினைப்பில் இந்தத் தவறு. கவிமணியோடு--

பாரதிதாசனின் 'கதர் இராட்டினப் பாட்டு' என்னும் தொகுப்பு நூலையும் வாசிக்கும் பேறு கிடைத்தது. பாரதியார் கதையில் பாரதிதாசன் பற்றிச் சொல்லும் பொழுது இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

ஓ பாரதிதாசன் கவிதையா? 'பாரதிதாசனை', ஏன் ஒரு பார்ப்பனக் கவியை ஆதரிக்கணும் என்றெல்லாம் பேசினபோது, பாரதியாரை அவர் எவ்வளவு உயர்வாகப் பேசினார் என்பதெல்லாம் உங்கள் தொடரில் வரும் என்று நம்புகிறேன்.

கோமதி அரசு said...

நட்பு வட்டாரமும் சூழ்நிலைகளும் வாழ்க்கையின் போக்குக்கு வாய்க்காலாக அமையும் என்பது உளவியல் ரீதியான உண்மையாயிற்றே! //

உண்மைதான் சார்.

படிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது.
படங்கள் மிக அருமையான தொகுப்பு.

பிலஹரி:) ) அதிரா said...

சுவாரஷ்யமான சம்பவங்கள்.

Related Posts with Thumbnails