மின் நூல்

Sunday, March 25, 2018

பாரதியார் கதை...--15

                                         அத்தியாயம்-- 15

புதுவையில் ஈஸ்வரன்  தர்மராஜா கோயில் தெருவில் தான் பாரதியார் தங்கியிருந்த  வீடு இருந்தது.  விளக்கெண்ணை செட்டியார் வீடு.

அந்த வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளி பொன்னு முருகேசன் பிள்ளையின் வீடு.  பிள்ளையவர்கள் பாரதியாரின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.  இவ்வளவுக்கும் அவர் கடவுள் மறுப்பாளர்.   பாரதியாரோடு கட்சி வாதம் செய்வதில் பிள்ளையவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு.   இருந்த போதிலும் இருவருக்குமிடையே பிணக்கு  ஏற்பட்டதே இல்லை.  வாதங்கள் ஒருவொருக்கொருவர் தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகத் தானே தவிர தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை என்ற தெளிவு அவர்கள் இருவருக்கும் இருந்தது.  அதனால் அவர்களுக்கிடையான அன்பு நாளுக்கு நாள் இறுகிக் கொண்டே வந்தது.

பிள்ளையவர்கள் பிரன்ஞ்சு மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்.  சொல்லப் போனால் இவரோடு பேசிப்பேசித் தான் பாரதியார் பிரன்ஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றார் என்று சொல்ல வேண்டும்.   விளக்கெண்ணைய் செட்டியார் வீட்டில் பாரதியார் இல்லையென்றால் நிச்சயம் பிள்ளையவர்கள் வீட்டில் தான் இருப்பார் என்று நம்பலாம்.  அந்தளவுக்கு பாரதியாருக்கும் முருகேசன் பிள்ளைக்கும் நெருக்கம்.  இதில் இன்னொரு வேடிக்கையும் உண்டு. முருகேசன்  பிள்ளையின் மூத்த மகன் ராஜா பகதூர் பாரதியாரின் அணுக்கத் தொண்டன்.  இளையவன் கனகராஜா விளையாட்டுப் பிள்ளை.

முருகேசன் பிள்ளையின் வீட்டினருக்கோ பாரதியாரும் அந்த வீட்டு உறுப்பினர்களில் ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. சமயங்களில்  பாரதியார் வெறும் வயிற்றோடு  இருப்பது எப்படித் தான் பிள்ளையவர்களின் துணைவியாருக்குத் தெரியுமோ தெரியவில்லை, வற்புறுத்தி அவருக்கு அன்னம் அளிப்பதை பரிவான தன்  கடமையாகவேக்  கொண்டிருந்தார் அவர். அந்த அம்மாவைப் பொறுத்த மட்டில் பாரதியாரைத் தன் தம்பி போல போஷித்து வந்தார்.

பிள்ளையவர்களின் வீடு மாடி வீடு.  அந்த மாடியில் பாரதியாருக்கென்றே ஒரு பிரத்யேக அறையும் உண்டு. அந்த வீட்டில் கோவிந்தன் என்றொரு அற்புதமான  பையன் வேலை செய்து கொண்டிருந்தான்.  கோவிந்தனுக்கு இரண்டு  சகோதரர்களும் உண்டு.  கோவிந்தனின் தாய் தான் அம்மாக் கண்ணு.  அம்மாக்கண்ணு அந்த வீட்டில் சுற்று  வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.

முதலில் அம்மாக்கண்ணுவை அறிமுகப்படுத்தி விட்டுத் தான் அவளுடைய பையன்களைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும்.  அம்மாக்கண்ணுக்கு அவ்வளவு பாசம் பாரதியார் மீது.   அம்மாக்கண்ணோ கல்வியறிவு அற்றவர்; கிழப் பருவம்.  நோஞ்சலான உடம்பு; காது கேட்காது;   ஜாடை மாடையில்  தான் பேச வேண்டும்.  கூலி வேலை செய்து பிழைப்பவர். அப்படிப்பட்டவர் பாரதியார் மீது பேரன்பு கொண்டிருந்தார்.  பாரதியாருக்கு தொண்டு  செய்வதை பெரும் பேறாக மனசுக்குள் கொண்டிருந்திருக்கிறார்.


பாரதியாரின் கல்யாண குணங்களோ தனி.  தன்  காரியங்களைத் தானே பார்த்துக்  கொள்ளத் தெரியாது. சட்டை துணிமணிகளைக் கூட யாராவது தோய்த்துத் தந்தால் சரி.  வேளைக்கு சாப்பிட வேண்டும் என்ற நினைவு  கூட அவருக்கு இருக்காது.   யோசனையில் இருக்கிறார் என்றால் அவரை நெருங்கவே யோசிக்க வேண்டியிருக்கும்.   ரோஷமும், ஆத்திரமும் ஜாஸ்தி.  ஆனால் அம்மாக்கண்ணு  எது சொன்னாலும் பாரதியார் அதைக் கேட்டுக் கொள்வார்.

பாரதியாரின் இத்தனை குண விசேஷங்களையும் தாண்டி   முருகேசன் பிள்ளை வீட்டினர்  பாரதியாரிடம்  அன்பு  கொண்டிருந்தனர் என்றால் அது ஜென்மாதி  ஜென்மத் தொடர்பு ஏதாவது இல்லையெனில்  சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.  இந்த சமயத்தில்----


** திருநெல்வேலி கலெக்டராக இருந்த  ஆஷ் துரை  1911-ம் வருடம் ஜூன் 17-ம் தேதியன்று மணியாச்சி ரயில்வே ஜங்ஷனில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அந்தக் கொலை தொடர்பாக 13 பேர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கின் விசாரணையில் கொலைக்கான திட்டம் புதுவையில் தீட்டப்பட்டது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.  புதுவையிலிருந்த தீவிரவாதிகளுடன் நீலகண்டன் (பிரம்மச்சாரி), கொலையாளி  வாஞ்சி ஆகியோர் நெருங்கிய தொடர்பில் இருந்தனர்.  இவர்கள் புதுவைக் கடற்கரையில் ஒன்றாகக் கூடி ஆலோசனைகள் நடத்தினர் என்பதற்கு ஆதாரங்களை போலீசார் உருவாக்கி வைத்திருந்தனர்.

'புதுவையிலிருந்த  வி.வி.எஸ். அய்யர், சுப்பிரமணிய பாரதி, மண்டயம் ஸ்ரீநிவாச்சாரி, நாகசாமி ஆகியவர்கள் பிரிட்டிஷ் கவர்மெண்ட்டுக்கு விரோதமான அபிப்ராயங்கள் கொண்டிருந்தனர்.  இவர்களுக்கு வரும் கடிதங்கள் தபால் ஆபீசில் ரகசியமாக பிரிக்கப்பட்டு வாசித்த பின்பே சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கவும் உத்திரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது' என்று ஆஷ் துரையின்  கொலை வழக்கு விசாரணைக் குறிப்புகள்  நீளுகின்றன.  'நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை ஊட்டினாய் -- கனல் மூட்டினாய்' என்ற பாரதியின் கவிதை வரிகள் கூட விசாரணை அறிக்கையில் குறிக்கப்பட்டது.. 

@ 1911-ம் வருடம் செப்டம்பர் 11-ம் தேதியன்று கலெக்டர் ஆஷ் கொலை  வழக்கின் விசாரணை ஆரம்பமானது.

ஆஷ் துரையின் கொலையும் சேர்ந்து கொள்ளவே,  பாரதியார் மீதிருந்த கண்காணிப்புகெடுபிடிக்கள்  அதிகமாகவே இருந்தது.  புதுச்சேரி தேசபக்தர்களை கூண்டோடு கைது செய்து பிரித்தானிய இந்தியப் பகுதிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் நாளுக்கு நாள் நெருக்கடிகள் கூடிக் கொண்டே வந்தன.

இந்த சமயத்தில் உலக அரங்கிலும் பிரான்ஸ் சில நெருக்கடிகளில் சிக்கியிருந்தது.   ஜெர்மானியத் தலைவர்  கெய்ஸரின் அதிரடி நடவடிக்கைகளினால் பிரான்ஸ் அரண்டு போயிருந்தது..  இந்த சிக்கல்களில் பிரிட்டாஷாரின் உதவியும் உறவும் அவர்களுக்கு மிகவும் அவசியமாக இருந்தது.  இந்த நிதர்சனப் புரிதலில் பிரஞ்சு -- ஆங்கில பகைமைகள் பூசி மெழுகப்பட்டு அல்லது  மறக்கப்பட்டு உறவு புதுப்பித்தலுக்கான கைகுலுக்கல்கள் அரங்கேறின.

இந்த புது உறவின் உடனடிப் பயன்பாட்டாய் பிரித்தானிய அரசு பிரன்ஞ் இந்தியாவில் தன் தலையீட்டை அதிகரித்தது. புதுவையில் ஒரு பங்களாவை  வாடகைக்கு எடுத்துக் கொண்டு தனியொரு பிரிட்டிஷ் இந்தியாவின்  போலீஸ் படையே இயங்கிக் கொண்டிருந்தது. இதில் குருவப்ப நாயுடு, ரங்கசாமி ஐயங்கார் என்ற இரு போலீஸ் அதிகாரிகள் குறிப்பிடத் தக்கவர்கள்.  அதுவும் ரங்கசாமி ஐயங்கார் ரொம்ப சகஜமாக அடிக்கடி பாரதியார் வீட்டிற்கு வந்து ஆஷ் கொலை வழக்கில் ஏதாவது துப்பு கிடைக்காதா என்று மோப்பம் பிடிக்க ஆரம்பித்தார்.

அன்னியர்  சட்டம் என்ற ஒரு  சட்டத்தை பாண்டிச்சேரியில் அமுல் படுத்த பிரித்தானிய அரசு பிரெஞ்சு அரசைத் தூண்டியது.   இந்திய பிரஜா உரிமை பெற்றவர்கள் சுதேசிகளாய் பிரெஞ்ச் இந்தியாவில் அடைக்கலமாகியிருந்த படியால் இந்த சட்டத்தின் மூலம் அவர்களுக்கு நெருக்கடிகள் கொடுக்க்லாம் என்று எண்ணியது.

சில தேசங்களுக்கென்று சில அடிப்படை கொள்கைகள்  உண்டு.  அதை எந்த நெருக்கடியிலும் விட்டுக்  கொடுக்க மாட்டார்கள்.  பிரென்ஞ் தேசத்திற்கென்று அப்படியாக வாய்த்த கொள்கைகளில் ஒன்று, சுதந்திர  தாகம்.  தன்  நாட்டின் சுதந்திர தாப வேட்கையில் பாதுகாப்பிற்காக தங்கியிருந்த சுதேசிகளை உடனடியாக வெளியேற்ற பிரெஞ்ச் அரசாங்கம் மிகவும் யோசித்தது.

அன்னியர் சட்டத்தின் பிரகாரம்  பிரன்ஞ் அரசாங்கத்திடம் அடைக்கலமாகியிருந்த அன்னிய தேசத்தவர் உடனடியாக தங்கள் நாடு திரும்ப வேண்டும் என்பது சட்ட வரை வடிவு.
அந்த சட்ட வரை வடிவில் பிரஞ்சிந்தியா அரசினர் ஒரு திருத்த ஷரத்தைச் சேர்த்தனர்.  இந்த சட்டம் அமுலுக்கு வந்த நாளுக்கு ஒரு வருடம் முன்பு பிரென்ஞ் இந்தியாவில் வசிப்பவர்கள், தங்களின் ஒரு வருடத்திற்கு மேலான தங்கலுக்கு சாட்சியாக ஐந்து மாஜிஸ்ட்ரேட்டுகளிடம் கையெழுத்து  பெற்று பிரெஞ்ச் அரசிடம் தங்களைப்  பதிவு செய்து கொண்டு பிரெஞ்சிந்தியா பிரதேசத்திலேயே தங்கலாம் என்ற ஒரு ஷரத்தை அந்த அன்னியர் சட்டத்தில் சேர்த்தனர்.

அரவிந்தர், அய்யர், பாரதியார், சீனிவாஸாச்சாரியார்-- நாலு பேருக்கும் திருத்தப் பட்ட இந்த ஷரத்தினால் பலன் உண்டு. இருந்தாலும் ஐந்து மாஜிஸ்ட்ரேட் கையெழுத்து சமாச்சாரம் இம்சையாக இருந்தது.  'சுதேசி'களுக்கு எந்த மாஜிஸ்ட்ரேட்டைத் தெரியும்? தெரிந்தாலும் யார் கையெழுதிடுவார்கள்'- என்ற  விஷயம் திகைப்பாயிருந்தது.   இது பற்றி என்ன செய்யலாம்  என்று யோசிக்க அரவிந்தர் வீட்டில் கூடியிருந்தவர்களால் இரவு 7 மணியாகியும் எந்த முடிவையும் எடுக்க முடியாத பொழுது 'நாளை காலை பார்க்கலாம்..' என்று சொல்லி பாரதியார் அந்த இடத்தை விட்டுக் கிளம்புகிறார்.  போகும் பொழுது, "ஓய்! வ.ரா! நாளைக்குக் காலமே எட்டு மணிக்கு என் வீட்டுக்கு வாரும்!" என்று சொல்லி விட்டுப் போகிறார்.

எப்பொழுதுடா விடியும் என்று காத்திருந்த வ.ரா. சரியாக எட்டு மணிக்கு ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெரு பாரதியார் வீட்டில் ஆஜர்.

வ.ரா.வைப் பார்த்ததும், "புறப்படுவோமா?"  என்று பாரதி   உடனே வெளியே வருகிறார்.  இவர்   எங்கு போகிறார், என்ன செய்யப் போகிறார்  என்று தெரியாமலேயே வ.ரா. பாரதியாரைப் பின் தொடர்கிறார்.

பாரதியார் நேரே போய்ச் சேர்ந்தது சங்கர செட்டியார் வீட்டிற்கு.  நடுக்கூட ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த சங்கர செட்டியார் உள்ளே நுழைந்த பாரதியாரைப் பார்த்ததுமே  பணிவுடன் எழுந்து, வணங்குகிறார்.

எப்பொழுதும் பாரதியார் பாணி அது தான்.  நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறார்."நீங்கள் எல்லோரும் இருந்தும், நாங்கள் புதுச்சேரியை விட்டுப் போக வேண்டுமா?.. புதுச் சட்டம் செய்திருப்பது தங்களுக்கு தெரியுமோலியோ?" என் கிறார்.

என்ன சட்டம் ஏது என்று செட்டியாருக்குத் தெரியாது. அவர் அந்த நேரத்தில் ஊரில் இல்லை.

பாரதியார் பிரஞ்சு அரசாங்கம் இயற்றியிருக்கிற புதுச் சட்டத்தின் ஷரத்துக்களை விளக்கிச் சொன்னதும், "அவ்வளவு தானே?" என்கிறார் செட்டியார்.

செட்டியார் கெளரவ மாஜிஸ்ட்ரேட். 'என் கையெழுத்து சரி.  இன்னும் ஐந்து பேர் கையெழுத்தும் வாங்கித் தருவதற்கு நானாச்சு.." என்றதுடன், "கையெழுத்து இட வேண்டிய காகிதங்களை மட்டும் என்னிடம் தாருங்கள்.  இன்னும் இரண்டே மணி நேரத்தில் உங்கள் வீட்டில் வந்து பார்க்கிறேன்.." என்று பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

பாரதியாரை அனுப்பி வைக்கும் முன்  செட்டியார்        திடீரென்று ஏதோ ஞாபகத்திற்கு வந்தது போல, "புதுப்பாட்டு ஏதாவது பாடுங்களேன்.." என்று ஆசையாகக் கேட்கிறார்.  பாரதியாரும் "ஜெயமுண்டு பயமில்லை மனமே.." என்ற பாட்டைப் பாடுகிறார்.  செட்டியார் சிலிர்த்துப் போய் நிற்கும் பொழுதே பாரதியார் கிளம்பி விடுகிறார்.

கொடுத்த வாக்கை எந்தக் குறையுமில்லாமல் நிறைவேற்றுவதற்கு செட்டியார் பெயர் பெற்றவர். அதுவும் பாரதியார் தன் வீட்டிற்கே வந்து கேட்டாரே என்று நெகிழ்ந்து போகிறார்.

அன்று மாலை மூன்று மணிக்குள்  அரவிந்தர், அய்யர், பாரதியார், சீனிவாச்சாரியார், வ.ரா. உட்பட இன்னும் சிலர்  சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை   சமர்ப்பித்து  பிரெஞ்சுப் போலீசாரிடம் பதிவு செய்து கொள்கிறார்கள்.

வ.ரா. இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு எழுதும் பொழுது  'மனங்கலங்காதவர்கள் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் அந்தச் சந்தர்ப்பத்தில்  இலேசாக 'சப்பையாய்'ப் போய் விட்டார்கள்.  காரியம் செய்யத் தெரியாதவர் என்று பெயர் வாங்கி வந்த பாரதியார் தான் இந்த நெருக்கடியில் முதல் பரிசு பெறக்கூடிய மனோதிடத்தைக் காண்பித்தார்' என்று சொல்லியிருப்பதை வாசிக்கும் எவருக்கும் ஒரு 'க்ளுக்' சிரிப்பாவது வராமல் இருக்காது.

(வளரும்)


படங்கள் உதவியவர்களுக்கு நன்றி.

=======================================================
**  தினமணிக் கதிர் பத்திரிகையில் ரகமி (ரங்கசாமி அய்யங்கார்)  அவர்கள் தொடராக  ஆஷ் கொலை வழக்கு பற்றி எழுதிய குறிப்புகளிலிருந்து.

@  பிற்காலத்தில்  பாரதியாரின் மறைவு நாளும்  ஒரு  செப்டம்பர் 11 தான்.

17 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஜீவி அண்ணா நான் புதுச்சேரியில் இருந்தப்ப 7,8 வருடம்முன்பு பாரதியாரின் வீட்டிற்குச் சென்று பார்த்திருக்கிறேன். உணர்வை என்னவென்று சொல்ல....அது ம்யூசியமாக எல்லாம் இருந்தது. ஃபோட்டோக்கள், லெட்டர்கள் என்று...திங்கள் அன்று விடுமுறை. மற்ற நாட்களில் காலை 10 முதல் 1 மணி வரை அப்புறம் 2 மனியிலிருந்து 5 மணி வரை...நூலகம் இருக்கிறது அது ஞாயிறு அன்று காலை 10 லிருந்து மாலை 5 வரை திறந்திருக்கும்...எனக்கு அப்போது ஃபோட்டோ எடுக்க முடியய்லை வெளியில் கூட...கேமரா இல்லை...ஸ்மார்ட் ஃபோனும் இல்லை அப்போது...

நிறைய தகவல்களை அறிய முடிகிறது உங்கள் பதிவில்....

தொடர்கிறோம்

கீதா

ஸ்ரீராம். said...

முருகேசன் குடும்பம் பற்றிய விவரங்கள் ரொம்ப நுணுக்கம். கேள்விப்படாதவை. வாழும் காலத்தில் புலவர்களுக்கு அல்லது திறமைசாலிகளுக்கு புகழ் இருக்காது என்று நினைத்திருந்தேன். செட்டியார் பாரதியாரிடம் காட்டிய பணிவும், பக்தியும் சிலிர்க்க வைக்கின்றன. பாட்டுத்திறம், நேர்மை.

ஸ்ரீராம். said...

ஆத்திக நாத்திகம் சண்டை அப்போதாவது இல்லாமல் இருந்ததே... மனிதர்களை மதிக்கத்தெரிந்த காலம்.

கோமதி அரசு said...


//பிள்ளையவர்களின் துணைவியாருக்குத் தெரியுமோ தெரியவில்லை, வற்புறுத்தி அவருக்கு அன்னம் அளிப்பதை பரிவான தன் கடமையாகவேக் கொண்டிருந்தார் அவர். அந்த அம்மாவைப் பொறுத்த மட்டில் பாரதியாரைத் தன் தம்பி போல போஷித்து வந்தார்.//

அம்மாகண்ணு அவர்களின் அன்பு அருமையானது.
இவரைப் பற்றி படித்த நினைவு இல்லை.



//வ.ரா. இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு எழுதும் பொழுது 'மனங்கலங்காதவர்கள் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் அந்தச் சந்தர்ப்பத்தில் இலேசாக 'சப்பையாய்'ப் போய் விட்டார்கள். காரியம் செய்யத் தெரியாதவர் என்று பெயர் வாங்கி வந்த பாரதியார் தான் இந்த நெருக்கடியில் முதல் பரிசு பெறக்கூடிய மனோதிடத்தைக் காண்பித்தார்'//

காட்ட வேண்டிய சமயத்தில் காட்டுவார் போலும் பாரதியார்.
படிக்க படிக்க மிகவும் சுவரஸ்யமாய் இருக்கிறது.

மீண்டும் நாளைப் படிக்கிறேன்.

ஸ்ரீராம். said...

இரண்டு கமெண்ட்ஸ் போட்டேன். ஒன்றுதான் வெளியாகியுள்ளது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//இரண்டு கமெண்ட்ஸ் போட்டேன். ஒன்றுதான் வெளியாகியுள்ளது.//

எங்கேயோ பதுங்கியிருந்தது, ஸ்ரீராம். தேடி எடுத்துப் போட்டு விட்டேன். அதானே?..

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//ஆத்திக நாத்திகம் சண்டை அப்போதாவது இல்லாமல் இருந்ததே... மனிதர்களை மதிக்கத்தெரிந்த காலம்.//

எல்லா விவாதங்களிலும், கலந்துரையாடல்களில் கூட விவாதிக்கிற நபர்கள் முக்கியமாகிப் போகிறார்கள். அவர்கள் விவாதப்பொருளை கையாளுகிற நேர்த்தி, விவாதப் பொருளில் அவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு, புரியாதவர்களுக்கு புரிய வைக்கிற ஞானம் இதெல்லாம் முக்கியமாகிப் போகும் போது தனிநபர் குதறல்களுக்கு இடமே இல்லாது போகிறது.

அந்நாளைய பொதுவுடமைக் கட்சித் தோழர்களுடன் உரையாடுவது அரிய அனுபவமாக இருக்கும். நம் அறியாமையில் இடையில் குறுக்கிட்டு அபத்தமாக எதையாவது உளறினால் கூட, "இந்த விஷயத்தில் அதை ஏன் பார்க்கத் தவறுகீறீர்கள், தோழர்?" என்று ஏதோ குறிப்பிட்ட அந்த விஷயம் நமக்கும் தெரிந்தாற்போல கோபம் சிறிதும் கொள்ளாமல் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு பெரியவர்--சின்னவர் பேதமில்லாமல் விவாதிப்பார்கள். எடுத்துக் கொண்ட பொருளின் சகல அம்சங்கங்களையும் அலசுவது தான் முக்கியமாகிப் போகுமே தவிர தனிநபர் சண்டைகளுக்கு அங்கு இடமே இருக்காது.
நம்முடன் விவாதிப்பவர்கள் நம் எதிரி அல்லர். அவரையும் கன்வின்ஸ் பண்ணி நம் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்ற அக்கறை இருப்போருக்கிடையான விவாதங்களில் சண்டைகளுக்கே இடமில்லை. இது எனது அனுபவத்தில் கண்ட உண்மை.

ஜீவி said...

@ தி. கீதா

இணையத்தில் பாரதியின் புதுவை நினைவில்லத்தின் படங்கள் எல்லாம் காணக்கிடைக்கின்றன. அந்தந்த காலத்து அற்புத மனிதர்கள் அந்தந்த காலத்தில் வாழ்வோருக்கு மதிக்க மட்டுமில்லை, பொருட்டாகவே தெரியவில்லை என்பது .....
எப்படி இந்த வரியை முடிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. புள்ளியிட்ட இடத்தை பூர்த்தி செய்ய நீங்களாவது முயற்சி செய்து பாருங்கள்.

தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

இன்னும் முருகேசன் அவர்கள் வர இருக்கிறார்கள்.

பாரதியின் 39 வருட வாழ்க்கையும் பயங்கர விறுவிறு. வேகமாக சீறிப் பாய்கிற நதியோட்டத்தில் மர இலைகள் விழுந்து கலந்து பிரிகிற மாதிரி எளிய மனிதர்கள் நிறையப் பேர் அவருடான தொடர்பில் பங்கெடுத்துக் கொள்ளவும் பிரியவும் பாக்யம் செய்திருக்கிறார்கள். எந்த ஸ்மரணையும் இல்லாமல் விசை இயக்க செயல்படுகிற மாதிரி கண்ணுக்குப் புலப்படாத ஏதோ அரிய சக்தியின் இயக்கத்தில் செயல்பட்ட மாதிரி தான் பாரதியின் அந்த 39 வருட வாழ்க்கையும் கழிந்திருப்பதாக அவர் வாழ்ந்த வரலாற்றை அறியும் பொழுது நமக்கான உணர்வாகிப் போகிறது.

பாரதி என்றோரு கவிஞன் வாழ்ந்தான் எனகிற அளவில் அவரை ஒரு சட்டத்திற்குள் அடைத்து வழிபடல் நியாயமாகாது என்பதை இன்றும் புரிந்து கொள்ளத் தவறி இருக்கிறோம் என்பது ஒரு கசப்பான உண்மை.

பொதுவாகவே மாமனிதர்களைப் பற்றிய வரலாற்று அறிதல்கள் நம்மவர்களிடம் வெகு குறைச்சல் தான். மற்ற நாடுகளிலெல்லாம் அப்படி இல்லை.

ஜீவி said...

@ கோமதி அரசு

அம்மாக்கண்ணு மட்டுமில்லை. இன்னும் பலர்.

'காட்ட வேண்டிய சமயத்தில் காட்டுவார் போலும்' என்றும் இல்லை. எல்லாம் அவர் நம்பிய பராசக்தியின் அருள். அரிதான இன்னொரு சக்தியின் இயக்கத்தில் அவர் செயல்பட்டதாக நம்புவதற்கு இடமிருக்கிறது.

தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாற்று நிகழ்வுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

G.M Balasubramaniam said...


/நம்முடன் விவாதிப்பவர்கள் நம் எதிரி அல்லர். அவரையும் கன்வின்ஸ் பண்ணி நம் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்ற அக்கறை இருப்போருக்கிடையான விவாதங்களில் சண்டைகளுக்கே இடமில்லை. இது எனது அனுபவத்தில் கண்ட உண்மை./ வழி மொழிகிறேன்

G.M Balasubramaniam said...

பாரதியைக் கூர்ந்து படித்தால் அவருக்கு பல நடைமுறை விஷயங்களோடு கருத்து வேறுபாடு இருந்தது தெரியும்

Thenammai Lakshmanan said...

பாரதியாரைப் பற்றிய தொடர்பதிவுகள் அருமை

ஜீவி said...

@ GMB

சில நடைமுறைகளின் போலித்தங்கங்களைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறான் என்று சொல்லலாம்.

ஜீவி said...

@ தேனம்மை லெஷ்மணன்

தாங்கள் வாசித்து வருவது குறித்து மகிழ்ச்சி. தினமலர் சிறுவர் மலரின் உங்கள் பகுதியை தவறாமல் வாசித்து விடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

பாரதியார் கதையை இவ்வளவு விறுவிறுப்பாக நான் எங்கும்
படித்ததில்லை. இத்தனை நாட்கள் படிக்கமல் விட்டேனே என்று கவலையாக இருக்கிறது.
இனி தொடர்வேன் அந்த மாமனிதனின் சரித்திரத்தை. நன்றி ஜீவீ ஜி.

Related Posts with Thumbnails