மின் நூல்

Tuesday, April 24, 2018

வாசிப்புக்கு வந்திருக்கும் எனது நூல்கள்

து  இ-புத்தகக் காலம்.

புத்தகங்கள் மட்டுமல்ல, பத்திரிகைகளே இ--மேகஸின்களாக வெளிவரும் காலம் இது.  அச்சடித்த புத்தகங்களின் காலத்திற்கு அடுத்த வளர்ச்சியாக இந்த இ-யுகத்தில்  புத்தகங்களுக்கான வளர்ச்சியின் இன்றைய கால கட்ட மேம்பாடு இது. 

இ-புத்தகங்களாக வெளிவந்திருக்கும் எனது நூல்கள் சிலவற்றை வாசகர்களின் வாசிப்புக்காக இங்கு அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்வு கொள்கிறேன்.

'unlimited' என்ற சொல் வெகு கவர்ச்சியாக  உலா வரும் காலமும் இது தான்.  புத்தக  உலகிலும் நிறைய 'unlimited' கள்  காணக் கிடைக்கின்றன.

புஸ்தகா டிஜிட்டல் மீடியா  (  www.pustaka.co.in  )   புத்தக வாசிப்புக்கான உருவெடுத்திடுத்திருக்கும் பிரத்தேயக புத்தகப் பிரபஞ்சம்.  பல்வேறு மொழிகளில் புத்தகங்களை வாசிக்கும் பெரும் பேறும் இந்தப்   புஸ்தகா பிரபஞ்சத்தில் சாத்தியமாகியிருக்கின்றன.

ரு.99/- செலுத்தினால் ஒரு மாத காலத்திற்கு unlimited- ஆக எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் நம் வசதிக்கேற்ப வாசித்துக் கொள்ளலாம் என்பது புத்தகப்  பிரியர்களுக்காகவே ஜனித்த ஏற்பாடாகத் தெரிகிறது.  இந்த எளிய ஏற்பாட்டில் எனது நூல்களையும் உள்ளடக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆவலிலேயே எனது  படைப்புகள் சிலவற்றை இந்த இ-நூலகத்திற்கு வழங்கியிருக்கிறேன்.

சமீபத்தில் இவர்கள் வெளியிட்டிருந்த எனது நூல்களுக்கான அறிமுக முன்னுரை கேட்டிருந்தார்கள்.  நான் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்த அந்த அறிமுக முன்னுரைகளையும்
புத்தகங்களைப் பற்றிய விவரங்களையும் நமது பதிவுலகின் பார்வைக்கும் நண்பர்களின் உபயோகத்திற்காகவும் இங்கு பிரசுரிப்பதில் மகிழ்வு கொள்கிறேன்.

இனி, புத்தகங்களின் தலைப்புகளும் அவற்றிற்கான அறிமுக முன்னுரைகளும்:


1)
                                                                                                                                       ஜீவியின்  கவிதைகள்    

  நூல் வகை:
விதைகள்


நாடாண்ட மன்னர்களையும் அவர்களது வீர பராக்கிரம செயல்களையும் மிகைப்பட புனைந்து கவிதைகள் இயற்றி புலவர்கள்
பரிசில்கள் பெற்ற காலம் ஒன்றிருந்தது.  சுதந்திரப் போராட்ட காலத்து பாரதியார் தமது கவிதைத் திறனை அடிமைத்தளை அறுக்க ஆயுதமாகக் கொண்டார்.  பிரபஞ்சத்தின் விடை தெரியாக் கேள்விகளுக்கு பதில் காணும் வேள்வியாகக் கவிதைகள் தம்மைப் புதுப்பித்துக் கொண்ட காலமும் உண்டு.  இப்படி ஒவ்வொரு காலத்தும் அந்தந்த காலத்து தேவைக்கேற்ப கவிதைகள் உள்ளடக்கம் கொண்டிருந்திருக்கின்றன.   மக்களின் ஜனநாயக யுகம் பூத்துப் பூச்செரிந்த பொழுது மக்களின் பிரச் னைகளும், அதற்கான தீர்வுகளும் புதுயுகக் கவிஞர்களால் கவிதைகளின் உட்பொருளாயிற்று.   ஆனால் எல்லாக் காலத்தும் இயற்கை அழகும்,  காதலும் தான் கவிஞர்களின் பாடு பொருளாக இருந்து பெருமை பெற்றன.

இப்படியான  கோட்பாடுகளின் அடிப்படையில் இக்காலத்தின் தேவைகளைக்களுக்கேற்ப  பல்வேறு சிந்தனைகளைப் பூக்களைக் கோர்த்து தொடுக்கப்பட்ட ஜரிகை மாலை தான் இந்தக் கவிதைத் தொகுப்பு.  மொத்தம் 34 கவிதைப் பூக்கள்.   ரசித்து அனுபவிக்க வேண்டி கவிதைப் பிரியர்களின் பார்வைக்குப் படைக்கப்பட்டிருக்கிறது.   வாசித்துப் பாருங்கள், தோழர்களே!

2)                            
                                   இலக்கிய  இன்பம்


புத்தக வகை:  இலக்கியம்
                                                            
ங்க காலம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் ஒன்று கூடி சங்கமித்த காலம்.  அந்த ஒப்பற்ற காலத்தின் விழுமிய சிறப்புகளை இன்றைக்கு நமக்கு எடுத்தோதுவதே சங்க கால இலக்கியங்கள். 

ஒருகாலத்துப்  பெருமைகளும், பண்பாட்டுச்  செயல்பாடுகளும் தொன்று தொட்டுத் தொடரும் செல்வங்களாய் பிற்காலத்திலும் நம் செயல்பாடுகளில் அழியாமல் பிரதிபலிக்குமா என்பது மிலியன் டாலர் கேள்வி. இந்தத் தொகுப்பு அந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்வது.

சங்ககால நிகழ்வுகளை,  இக்காலத்து நிகழ்ச்சிகளோடு ஒரு கதை போலவான வடிவத்தில் ஒன்றிப் பார்ப்பதற்கான அரிய முயற்சி நூல் வடிவாகியிருக்கிறது.   அந்தந்த இடங்களில் சங்க காலப் பாடல்களையும்  கொண்டிருப்பது தனிச் சிறப்பு.

வாசித்துத் தான் பாருங்களேன்.    உங்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது உறுதி.

3)                                                       
                         பார்த்தவை படித்தவை


புத்தக வகை:   பகிர்தல்
                                                                  
ச்சிட்ட எல்லாவற்றையும்  படித்துப் பார்க்க நாம் தவறுவதில்லை.  ‘அப்படிப் படிப்பதினால் ஆய பயன் என்ன?’ என்பது கூட அறிவார்ந்த கேள்வி தான்.

இந்தக் கேள்விக்கான பதில் நம்மிடையே விளைவிக்கும் சிந்தனைகள் எக்கச்சக்கம்.  ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!’ என்ற பிரமிப்பே கேள்வியாகிப் போய் சிலிர்க்கிறார் பாரதியார்.  அந்த அத்தனை கோடி இன்பங்களில் வாசிப்பு இன்பமும் தன்னிகரில்லாதது.
வாசித்தவற்றை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வதே வாசிப்பிலான பயனாகத் தோன்றுகிறது.

நான் வாசித்து நேசித்தவைகளை உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  நீங்களும் அவற்றை உங்கள் நேசத்திற்க்குரியவரிடம் பகிர்ந்து கொண்டால் அதுவே இந்த நூலாக்கத்தின் பெரும் பயன்.

இதையும் பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் இன்பம் வேறு எதில் இருக்கிறது?..  நீங்களே சொல்லுங்கள்.


4)
                            
                     காதலினால் கதையுண்டாம்


புத்தக வகை:  சிறுகதைகள்

                                                                           
‘சின்னச் சின்ன ஆசை; சிறகடிக்க ஆசை’  என்பது திரைப்படக் கவிதையாக நம்மைக் கிரங்கடிக்கிற வரிகள்.  இந்தத் தொகுப்பில் இருப்பதும் சின்னச் சின்ன ஆசைகள் போல் சின்னச் சின்ன கதைகள் தாம்.  ‘காதலினால் கவிதையுண்டாம்’ என்பது யுகக்கவிஞனின் வாக்கு;  கவிதை மட்டுமல்ல, காதலினால் கதையுமுண்டாம் என்று இத்தொகுப்பில் உள்ள ஒரு  கதை நம் காதுகளில் கிசுசிசுக்கிறது.

மொத்தம் 10 சிறுகதைகள்.  இந்தப் பத்தையும் வாசித்த உணர்வும் உங்களைக் கிரங்கடிக்கும் தான்.  வாசித்துவிட்டுத் தான்  சொல்லுங்களேன்!


5)
                                குமுதமும் விகடனும்


புத்தக வகை:  சிறுகதைகள்                                                

குமுதமும் விகடனும் தமிழ் நாட்டின்  பிரபல் பத்திரிகைகளின் பெயர்கள்.  அதுவே இந்தத் தொகுப்பிலுள்ள ஒரு கதைக்குத் தலைப்புமாகிற அதிசயம் நடந்திருக்கிறது.   தொகுப்பிலுள்ள பதினோறு சிறுகதைகளும் விதவிதமானவை.  வெவ்வேறு உணர்வுகளில் நம்மை ஆட்படுத்துகிற சக்தி படைத்தவை.  எழுது முறையில் முத்திரை படைத்தவை.  வாசிப்பவரின் உள்ளத்தில் சத்தப்படாமல் இடம் பிடிப்பவை.  நீங்களும் வாசித்துத் தான் பாருங்களேன்!..




6)                                         
                                         
                            இருட்டுக்கு   இடமில்லை


புத்தக வகை:  புதினம்

மூகத்தில்   பெண்களின் இருப்பை, அவர்கள் இயல்பை, வாழ்வில் அவர்களின் பங்களிப்பை அடிக்கோடிட்டுச் சொல்லும் நாவல் இது.  சொல்லப் போனால், இரு குறுநாவல்களை ஒன்றாக்கிப் படைக்கப்பட்ட பின்னல் இது.
                                                                                       
இந்தப் புதினத்தில் கதை மாந்தர்கள் எல்லோரும் நல்லவரே.  தமது செயல்களால் எல்லாவற்றையும் நல்ல விளைவுகளுக்கான அனுபவங்களாக்கிக் கொள்கிறார்கள்.  நல்ல சிந்தனை விளக்கேற்றி இருட்டுக் கவியாமல் பார்த்துக்  கொள்கிறார்கள்.
பத்திரிகை, பதிப்பகம், எழுத்து, ஷேர் மார்க்கெட் என்று பொருளாதார சுதந்திரத்தினூடான பெண்கள் சுதந்திரத்தை நிச்சயப்படுத்த நிறைய வாய்ப்புகளினூடே கதை பயணிக்கிறது.
தீவினை செயல்களோ, தீவினை கதாபாத்திரங்களோ இல்லாமல் தமிழில் முதன் முதலாக உருவான நாவல் இது.

பெண் வாசகர்களுக்கான புத்தம் புது பரிசு இது!
வாசித்துத் தான் பாருங்களேன்!



7)
                      கனவில் நனைந்த நினைவுகள்


புத்தக வகை:  குறு நாவல்    

யாருக்கும் தூக்கத்தில் கனவுகள் வருவது சகஜம் தான்.   ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்பவான கலர்க் கலர் கனவுகள்.

கனவுகள் தற்செயலானவை அல்ல.  கனவுகள் வருவதற்கும் காரணங்கள் உண்டு.  அத்துடன் அவற்றிற்கான குறிக்கோளும் பயன்பாடும், ஏன் தீர்வுகளும் கூட உண்டு.

வாழ்க்கையில் நமக்கு ஆசைகளும், அபிலாஷைகளும் அதிகம்.  சொல்லப் போனால், சில இலட்சியங்கள் நிறைவேற அது பற்றி ஆசை ஆசையாகக் கனவு காணச் சொல்லியிருக்கிறார்கள்.

கனவுகளே இந்தக் கதையல்ல.   ஆனால் கனவுகள் இந்தக்  கதையை நடத்திச் செல்ல பின்புலத்து ஆதர்ச சக்தியாய் செயல்படுகிறது.

இத்தனைக்கும் நடுவே கும்பகோண எழுத்தாளர் அமரர் எம்.வி. வெங்கட்ராமும்  நடுநடுவே நினைவு  கொள்ளப்படுகிறார்.  வாசித்துத் தான் பாருங்களேன்!
          
                                                 
                                                   
மேற்கண்ட புத்தகங்கள்  AMAZON  KINDLE  பதிப்புலகிலும் வாசிக்கவும்  வாங்கவும் கிடைக்கின்றன.   KINDLE  தளத்திற்குப் போய்  KINDLE  உலகில்  jeevee  என்று குறிப்பிட்டுத் தேடினால் கிடைத்து விடும்.

நன்றி சொல்ல வேண்டும்  இ-புத்தக  ஆக்கங்களை சாத்தியப் படுத்திய அன்பர்களுக்கு.  வாசித்து மகிழப் போகிற நண்பர்களுக்கும்.

14 comments:

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள் ஸார். புஸ்தகாவில் என்றில்லாமல், பி டி எப் வகையறாவில் புத்தகம் படிப்பதே சிரமமாக உணருகிறேன். இப்படிச் சொல்வதற்கு மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்போதுதான் ஜி எம் பி ஸார் பின்னூட்டங்கள் பற்றி எழுதியிருந்த பதிவையும் படித்து விட்டு வருகிறேன். அந்தத் தாக்கத்தில் மனதில் பட்டதைச் சொல்லி விட்டேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நம் நூல்களை நாமே மதிப்பிட்டு, பதிவிடல் என்பது வித்தியாசமான அனுபவமாகும். அதனை நான் பெற்றுள்ளேன். அருமையான பகிர்வு.

தி.தமிழ் இளங்கோ said...

வாழ்த்துகள் அய்யா.

நெல்லைத் தமிழன் said...

பாராட்டுகள் ஜீவி சார்.

என்னிடம் பிடிஎஃப் புத்தகங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவைகளைப் படிப்பதில் சிரமத்தை உணர்கிறேன். (கணினி முன்னால உட்காரணும். இல்லைனா ஐபேட் கைல வச்சுக்கிட்டு படுத்துக்கிட்டே வாசிக்கணும். புத்தகம் மாதிரி இவ்வளவு பக்கம் படித்திருக்கிறோம் என்று மார்க் பண்ணுவது கொஞ்சம் கடினம். கண்ணுக்கு சோர்வு கொடுக்கும்). பயணத்தின்போதுதான் பிடிஎஃப்ல் படிப்பது சுலபம்.

உங்களுடைய புத்தகங்களையே நிறைவா பிரசெண்ட் பண்ணியிருக்கீங்க. வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

நம் எழுத்துகள் பற்றி நாம் என்னதான் எழுதினாலும் அவைப் அடிக்கப்படுவது குறைவே நானும் நான்கு நூல்களை மின்னூலாக்கி இருக்கிறேன்பலருக்கு பரிசாகவும் கொடுத்திருக்கிறேன் இருந்தும் படிப்பவர்கள் மிகவும் குறைவே மின்னூலை தரவிரக்கிப் படிக்க முடியவில்லை என்று எனக்கு எழுதிய சிலருக்கு நான் வேர்ட் ஃபார்மாட்டில் தனிப்பட்ட முறையில் அனுப்பியும் கொடுத்திருக்கிறேன் புதகங்கள் படிக்க முதலில் பெயர் பெற வேண்டும் போல் இருக்கிறது இதுவே இப்படி என்றால் காசு செலவு செய்துபுத்தகம் படிப்பதுஇன்னமும் அரிது

வல்லிசிம்ஹன் said...

படிக்கக் கையில் கிடைத்தால் இன்னும் அருமையாக இருக்கும் ஜீவி சார்.
நல்ல எழுத்துகள் படிப்பதே ஒரு பாக்கியம். நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சமீபத்தில் நீங்கள் படித்த வனவாசம் பிடிஎப்ஃ அனுபவம் எப்படி இருந்தது? எனக்கென்னவோ பிடிஎப்ஃ வாசிப்பு பழக்கப்பட்டுப் போய் விட்டது. மொபைலிலும் ஐபேடிலும் வாசிக்க புஸ்தகா புத்தகங்கள் பிரமாதமாக இருக்கின்றன. எதிர்காலம் இபுக்ஸ் வசம் தான். பழக்கப்படுத்திக் கொள்வதை விட வேறு வழி இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மேனாட்டு இபுக்ஸ் மேன்மைகள் (பிரசண்ட்டேஷன்) நமக்கும் நாளாவட்டத்தில் வந்து விடும் என்று நினைக்கிறேன்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam

தங்கள் உணர்வுகள் புரிகிறது. எழுதுவோருக்கே உரித்தான பெருமை அது. நன்றி, ஐயா.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

உங்களின் புத்தக மோகம் பிரமிக்கத் தக்கது. தங்களிடமிருந்து வந்த வாழ்த்து உளப்பூர்வமாக என்னை ஊக்குவிக்கும். நன்றி, தமிழ் ஐயா.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

சரியான பாயிண்ட்டைப் பிடித்தீர்கள். அந்த 'நிறைவா'வை யாராவது சொல்கிறார்களா என்று பார்த்திருந்தேன். உங்களிடமிருந்து அந்த பாராட்டு வந்ததில் திருப்தி.

Kindle தமிழ் வாசகர்களுக்காக முன்னுரை கேட்டிருந்தார்கள். அவையே இவை.

இபுக்ஸ், எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் வரப்பிரசாதம். சுஜாதாவே தன் காலத்தில் இணைய கல்வெட்டுகளாக தன் நூல்களைக் காண ஆசைப்பட்டவர். அவர் காலத்தில் கொஞ்சமும் பிற்காலத்தில் நிறையவும் அவர் ஆசைப்பட்டது நிறைவேறியது.

இபுக்ஸ் வெளியீடுகளுக்கான தேவையும் எதிர்கால அசகாய பிரமிப்புகளும், இதனால் ஏற்படப்போகும் செளகரியங்களையும் நினைத்தால் ஒன்றிரண்டு அசெளகரியங்களை இப்பொழுது சமாளித்து விட்டால் நாளைய யுகத்து வாசிப்பு அனுபவங்களை அனுபவிக்கலாம்.

நன்றி, நெல்லை.

ஜீவி said...

@ GMB

என் எழுத்துக்களுக்கு நிறைய வாசகர்கள் கிடைத்திருக்கிறார்கள், ஜிஎம்பீ சார். அதனால் இபுக்ஸ் பிரசுரங்களில் எனது ஆர்வம் கூடியிருக்கிறது.

பத்திரிகை எழுத்து வடிவத்தில் என் பதிவு எழுத்துக்களை அமைத்துக் கொண்டது ஆகப்பெரிய செளகரியம்.

அத்னால் வரக்கூடிய காலகட்டத்தில் என் புத்தகங்கள் நிறைய வெளிவர இருக்கின்றன. அதற்கான ஆயத்த வேலைகளில் முழு கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

தங்கள் வருகைக்கு நன்றி.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்.

வாசித்து வாசித்து பழக்கப்பட்ட உள்ளத்திலிருந்து வரும் கனிந்த வார்த்தைகள் மன நிறைவைக் கொடுத்தது. அது இன்னும் உற்சாகத்தைக் கூட்டியிருக்கிறது. உங்கள் மனம் கனிந்த பாராட்டுகளுக்கு நன்றி, வல்லிம்மா.

கோமதி அரசு said...

அட்டைப்படங்கள் அருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

//அத்னால் வரக்கூடிய காலகட்டத்தில் என் புத்தகங்கள் நிறைய வெளிவர இருக்கின்றன. அதற்கான ஆயத்த வேலைகளில் முழு கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.//

இனி வரபோகும் புத்தகங்களுக்கும் வாழ்த்துக்கள் சார்.

ஜீவி said...

@ கோமதி அரசு

கண்ணகியின் கதை, பாரதியார் கதை, இனி (நாவல்), மனம், உயிர், உடல் (மன் நல நூல்) இதெல்லாமே மின் நூலாக வேண்டி செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். மே மூன்றாம் வாரத்தில் அமெரிக்கப் பயணம். அங்கிருக்கிற ஆறு மாத காலத்திற்கான வேலைப் பட்டியல் இது. பதிவுலகிற்கு விட்டு விட்டுத் தான் வர வேண்டும் போலிருக்கு. பார்க்கலாம்.

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, கோமதிம்மா.

Related Posts with Thumbnails