மின் நூல்

Tuesday, January 15, 2019

பாரதியார் கதை --25

                                                 அத்தியாயம்-- 25



ருபதாயிரம் என்பது சாதாரண எண்ணிக்கை இல்லை.  அதுவும் ஒரு அடக்குமுறை அன்னிய ஆட்சியை இந்த நாட்டை விட்டுத் துறத்த  சர்வ பரியந்த தியாகமும் செய்யத் தயாராக இருந்த இருபதாயிரம் பேரைத் திரட்டுவது என்பது சாதாரண காரியம் இல்லை.  அதற்கு தயாராக ஒரு மனிதர் தன்னை தயார்படுத்தி வைத்திருந்தார் என்பதே அந்த மனிதரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலை ஏற்படுத்தும்.

அவர் தான் நீலகண்ட பிரம்மச்சாரி.  சீர்காழிக்கு 
அருகாமையில் இருக்கும் எருக்கஞ்சேரி என்ற ஊரில் பிறந்தவராகையில் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி என்று
பிரித்தானிய குற்றப்பத்திரிகை ஏடுகளில் இவர் பெயர் குறிப்பிடப்படுகிறது.  சுதந்திரப் போராட்ட வீரனுக்கு திருமணமும் ஒரு தடையாகிப் போய்விடப் போகிறதே என்று திருமணமே செய்து கொள்ளாதிருந்த தியாகி அவர்.

சீர்காழி இந்து உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்த சிறுவன் நீலகண்டன் ஒருநாள் காணாமல் போகிறான்.  திருவனந்தபுரத்தில் சிலகாலம் இருந்து விட்டு சென்னை திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் டி.யூ.சி.எஸ். பண்டகசாலையில் சின்னதாக ஒரு வேலை கிடைத்து தனது சிறப்பான பணியால் அந்த பண்டகசாலைக்குத் தேவையான மளிகை சாமான்களை விநியோகிக்கும் அந்தஸ்த்துக்கு உயர்கிறான்  இளைஞன்
நீலகண்டன்.

கர்ஸான் பிரபு வங்காளத்தை இரண்டாகக் கூறு போட்ட கோணங்கித்தனம் தான் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகத்தை ஊட்டியது என்று சொல்லலாம்.  தேசம் பூராவும் சுதந்திரக் கனலை பற்ற வைக்க விபின் சந்திர பாலர்
சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  சென்னை கடற்கரையில் அவர் பேசிய கூட்டத்திற்கு இளைஞன் நீலகண்டன் போயிருந்தான்.  விபின் சந்திர பாலரின் உணர்வு கொப்பளிக்கும் உரையை நீலகண்டன் கேட்டத் திருநாள் தான் அவன் நெஞ்சில் விடுதலை வேள்விக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதி பூத்த நன்னாள்.  அடிமை விலக்கொடிக்க ஆர்வம்  நெஞ்சு பூராவும் வியாபித்தது.  இளைஞன் அல்லவா?..  அதனால் தான் எப்படி களப்பணி ஆற்ற வேண்டும் என்பது புரிபடாத குழப்பமாய் இருந்தது. அதற்கான சந்தர்ப்பத்திற்கு மனம் ஏங்கிய தருணத்தில்  திருவல்லிக்கேணியில் பாரதியுடான சந்திப்பு நீலகண்டனுக்கு நிகழ்ந்தது.  நீலகண்டனை பாரதிக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

அந்தத் தருணத்தில் தான் சென்னை வந்திருந்த வ.உ.சி.க்கு நீலகண்டனை அறிமுகப்படுத்தி வைக்கிறார் பாரதியார்.  வ.உ.சி.யின் தேசபக்தி, இளைஞன் நீலகண்டனுக்கு ஒரு வழிகாட்டலாக உற்சாகமூட்டுகிறது.  சுதேசி கப்பல்  கம்பெனியின் வளர்ச்சிக்கு  ஜீவ ஓட்டமான  அதன் பங்குகளை விற்றுத் தருதல் போன்ற  தன்னாலான உடலுழைப்பைச் செய்ய வேண்டும் என்று நினைப்பு மேலோங்குகிறது.  நீலகண்டனுக்கு பாரதி செய்து வைத்த அடுத்த அறிமுகம்,  வங்காளத்து புரட்சி வீரர் சந்திரகாந்த் சக்ரவர்த்தி.  நீலகண்டனை பார்த்த மாத்திரத்திலேயே அந்த இளைஞனின் வேகம் சக்ரவர்த்திக்குப் புரிந்து போயிற்று.  தனது புரட்சி இயக்கமான 'அபிநவ பாரத்'தில் நீலகண்டனை இணைத்துக் கொள்கிறார்.  திரு நெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் இரகசிய கூட்டங்களை நடத்தி நீலகண்டன் அந்த புரட்சி இயக்கத்திற்கான பணிகளை மேலெடுத்துச் செல்லும் தருணத்தில் தான் சங்கர கிருஷ்ணனைச் சந்திக்கும் தருணம் வாய்க்கிறது.

யார் இந்த சங்கரகிருஷ்ணன்?..

சங்கரகிருஷ்ணன் பாரதியின் துணைவியார் செல்லம்மாவுக்கு உறவு .  சங்கர கிருஷ்ணனின் மருமான் வாஞ்சிநாதன் அப்பொழுது திருவிதாங்கூர் சமஸ்தானத்து  புனலூரில் காட்டிலாகாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்..   சங்கர கிருஷ்ணன் தொடர்பால் வாஞ்சிநாதன்,  வ.உ.சி.யின்  தொடர்பால் சுப்பிரமணிய சிவா என்று நீலகண்டனின் சுதந்திரப் போராட்டத்திற்கான நட்பு வட்டம் இறுகியது. அத்துடன் போலிசாரின் கண்காணிப்பும் தீவிரமானது.

இந்த சமயத்தில் நீலகண்டனின் பெயருடன் பிரம்மச்சாரி இணைந்தது.  லெளகீக வாழ்வில் நாட்டமில்லாத தேசப்பற்று தவிர வேறெந்த பற்றும் இல்லாத அவரது வாழ்க்கைக்கு  அவர் பெயருடனான பிரம்மச்சாரி இணைப்புப் பொருத்தமாக இருந்தது.  அத்துடன் தன் குடுமியைக் களைந்து கிராப்புக்கும் மாறி குறிப்பிட்ட தன் அடையாளத்தைத் தவிர்த்தார் நீலகண்ட பிரம்மச்சாரி.                                                   

பத்தொன்பதாம்  நூற்றாண்டின் ஆரம்ப கால  தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகளில் பலர் எவ்வகையிலோ மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் துரையின் கொலை வழக்கோடு சம்பந்தப்பட்டவராக பிரிட்டிஷ் அரசு கருதியிருக்கிறது.  அதுவும் நீலகண்ட பிரம்மச்சாரி அந்தக் கொலை வழக்கின் முதல்  குற்றவாளியாக குறிக்கப்பட்டவர்.   ஆனால் அந்தக் கொலை சம்பவம் நடந்த பொழுது பிரம்மச்சாரி காசியில் இருந்தார்.  ஆஷ் கொலையுண்ட தகவலை செய்தித்தாட்களில் படித்ததே அவருக்கு செய்தியாக இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த பிரித்தானிய போலிசார்,  ஆஷைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் தன்னையும் சுட்டுக் கொண்டு மாண்டு விட்டதால் வாஞ்சிநாதனுடன் தொடர்பு கொண்டிருந்தோருக்கு வலை விரிக்க ஆரம்பித்தனர்.  தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதனின் சட்டைப் பையில் இரண்டு காகிதங்கள் இருந்தன.  ஒன்று:  ஆங்கிலேயரின் காட்டாச்சியை விரட்டி விட்டு இந்தியரின் சுயாட்சியை  நிலைநிறுத்திட தமிழகத்தில் தங்களைத் தத்தம் செய்து கொண்ட 3000  வலிமை மிகுந்தவர் இருப்பதாகவும் அந்த இயக்கத்தின் கடைக்கோடித் தொண்டன் நான் எனவும் தெரிவிக்கும் கடிதம்.  இரண்டாவது:  தனக்கு ஜபம் செய்ய புலித் தோல் ஒன்று வேண்டும் என்று கேட்டு வாஞ்சிநாதனுக்கு நீலகண்ட பிரம்மச்சாரி எழுதிய கடிதம்.

'ஒரு குற்றம் நடந்த நேரத்து தான் அந்தக் குற்றம் நடந்த இடத்தில் இல்லை; அதனால் இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை'  என்று சொல்லி கல்கத்தா போலிஸ் கமிஷ்னர் முன் ஆஜராகிறார்.  உடனே பிரம்மச்சாரி நெல்லை மணியாச்சிக்குக்  கொண்டு வரப்படுகிறார்.

இந்த வழக்கு மணியாச்சி மாஜிஸ்ட்ரேட்டால் உயர்  நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட்டது.   1911 செப்டம்பர் முதல் 1912 வரை இந்த வழக்கு நடந்தது.  1912  பிப்ரவரி மாதம் வெளியான தீர்ப்பு 400 பக்கங்களைக் கொண்டதாக இருந்ததாம்.   நீலகண்டருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் என்று தீர்ப்பு சொல்லிற்று.   சங்கர கிருஷ்ணனுக்கும் மடத்துக் கடை சிதம்பரத்திற்கும் 4 ஆண்டுகள்.  ஆறுமுகம், ஹரிஹர அய்யர், சோமசுந்திரம் பிள்ளை மற்றும் இருவருக்கு ஓராண்டு கடுங்காவல்.  இந்த வழக்கில் ஒரு வித்தியாசமான அதிசயமும் உண்டு.   மாடசாமி பிள்ளையை (வ.உ.சி.க்கு அணுக்க நண்பர்) கடைசி வரை கைது பண்ண முடியாமலேயே இருந்தது.  அவர் இல்லாமலேயே அவர் மீது வழக்கு மட்டும் நடந்தது.  பிள்ளையவர்கள் காணாமல் போனவர் போனவர் தான்.

நீலகண்டருக்கு தமிழ்  நாட்டில்  எந்த சிறையையும் ஒதுக்காது  பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.  இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் நிறைவுற்ற நிலையில் ஒரு நாள்  சிறைச்சாலையிலிருந்து தப்பி விட்டார்.  தர்மாவரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்டு,  அரை ஆண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டது.  மொத்தம் ஏழரை ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விடுதலையானார்.    இந்த ஏழரை ஆண்டுகளில்   விசாகப்பட்டினம், ராஜமகேந்திர புரம், கண்ணனூர், சென்னை, கோயம்புத்தூர், பாளையங்கோட்டை என்று பல்வேறு சிறைகளுக்குப் பந்தாடப்பட்டார்.

தண்டனை காலம் முடிந்து இவர் சிறையிலிருந்து வெளி வந்து தான் பிறந்த ஊருக்குச் செல்ல சீர்காழிக்கு டிக்கெட் வாங்கியிருந்தார்..  சென்னை செண்டரலில் அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.  நீலகண்டரின் தந்தையே அருமை மகனை எதிர்கொண்டழைக்கக் காத்திருதார்.

ஆஷ் கொலை வழக்கில்  நீலகண்டரின் தந்தை பதிமூன்றாவது சாட்சியாக விசாரிக்கப்பட்டது நமக்கான ஆச்சரியம்.


(வளரும்)


10 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

//ஒரு குற்றம் நடந்த நேரத்து தான் அந்தக் குற்றம் நடந்த இடத்தில் இல்லை; அதனால் இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்ப்//

பதிவு முற்றுப்பெறாமலேயே பாதியில் நிற்கிறதே!

வாஞ்சிநாதன் முதலானவர்கள் தாங்கள் ஆரம்பித்து வைத்ததை ஜனங்கள் பின்தொடர்ந்து நடத்துவார்கள் என்று கொண்டிருந்த அதீத நம்பிக்கை, எவ்வளவு தவறாகிப்போனது என்பதை அறியாமலேயே தியாகிகள் ஆனார்கள்! வ உ சிதம்பரனாருமே கூட அப்படி ஒரு நம்பிக்கையில் தானிருந்தார் என்பதை கவியோகி சுத்தானந்த பாரதியார் தன்னுடைய சுயசரிதையான சோதனையும் சாதனையும் நூலில் சொல்கிறார்.

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி. எஸ்.

Draft-ல் இருக்கும் போதே தவறிப் போய் பிரசுரமாகி விட்டது. இப்பொழுது இந்தப் பகுதிக்கான முழுசையும் பிரசுரித்து விட்டேன்.

நெல்லைத்தமிழன் said...

இன்றைக்கு அவர்கள் எல்லோரும் உயிர்பெற்று எழுந்து வந்தால், பெருமைப்படும்படி நாம் நமது நாட்டை வைத்திருக்கிறோமா?

சுதந்திரப் போராட்டத்தில் சாதி என்ற ஒன்று, அவர்கள் பெயரிலே மட்டும் இருந்தது என்பதையும் நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

சமீபத்தில் வைணவ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் அவதாரஸ்தலத்துக்குச் சென்றிருந்தேன். அவருடைய 9வது தலைமுறைதான் கிருஷ்ணப் ப்ரேமி அவர்கள். ஆச்சார்யர்களிலும் பல்வேறு சாதியினர் இருந்தனர், அவர்களின் அறிவு/ஞானம்தான் முன்னிலைப்படுத்தப்பட்டது என்பதும் நமக்கான செய்தி.

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி

கிருஷ்ணமூர்த்தி சார்! தியாகங்கள் செய்தவர்கள் தியாகிகள் ஆனார்கள். அத்தனை தியாகங்களும் ஒன்று, spontaneous-ஆக நடந்தவை, இல்லை, அடக்குமுறையில் இன்னொருவர் பட்ட துயரம் தாங்களும் அந்த போராட்டத்தீயில் குதித்தவர்கள் தாம்.
வ.உ.சி.யும், சுரமணிய சிவாவும் மாற்றி மாற்றி ஆஷ் துரையின் பழிவாங்கலுக்கு ஆளான கொடுமை தானே வாஞ்சிநாதனை வீறு கொண்டு எழச் செய்தது?..

தங்களைத் தொடர்ந்து தொடர் ஓட்டமாக தியாகச்சுடரைத் தூக்கிச் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பெல்லாம் அவர்களுக்கு இருந்திருக்காது என்பதே என் எண்ணம்.
பாரதியார் கேட்ட, 'கருகத் திருவுளமோ?' என்ற ஆதங்கம் வேண்டுமானால் இருந்திருக்கலாம். காந்தியடிகள் காலத்திற்கு முற்பட்ட சு.போ. தியாகிகள் வித்தியாசமானவர்கள். பலருக்கு மனச்சோர்வும், விரக்தியும் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியத் தத்துவங்களில் ஆழ்ந்த ஈடுபாடும், புரிதலும் பலர் கொண்டிருந்தனர். அந்த ஞானம் தான் அவர்களுக்கு இறுதி வரை துணையாக இருந்திருக்கிறது.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//சுதந்திரப் போராட்டத்தில் சாதி என்ற ஒன்று, அவர்கள் பெயரிலே மட்டும் இருந்தது என்பதையும் நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.//

'வேண்டுகிற நேரத்தில் ஜாதி வேண்டும்; வேண்டாத நேரங்களில் அது வேண்டாம்' என்று
வேண்டுகிற நேரத்தில் அணைத்து, வேண்டாத நேரங்களில் ஒதுக்கி, ஜாதிக்கும் நேரம்-காலம் பார்த்து செயல்படும் கொள்கை கோட்பாடுகள் நம்மிடம் உண்டு.

ஜீவி said...

'வேண்டுகிற நேரத்தில் ஜாதி வேண்டும்; வேண்டாத நேரங்களில் அது வேண்டாம்' என்று
வேண்டுகிற நேரத்தில் அணைத்து, வேண்டாத நேரங்களில் ஒதுக்கி, ஜாதிக்கும் நேரம்-காலம் பார்த்து செயல்படும் கொள்கை கோட்பாடுகள் நம்மிடம் உண்டு.

--- இது இன்றைய நிலை..

என்ற வரி விட்டுப் போயிற்று. தேர்தல் வரட்டும். யார் யார் என்னன்ன ஜாதி, எந்த ஜாதிக்கு எந்தந்த இடத்தில் வாக்கு வங்கி அதிகம் என்ற கணக்கெல்லாம் அலசப்படும்.

ஸ்ரீராம். said...

கொலை நடந்த நேரத்தில் தான் அங்கு இல்லவே இல்லை என்று நிரூபித்தும் 7 ஆண்டு கடுங்காவல் என்பது கொடுமை.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நீலகண்ட பிரம்மச்சாரியின் சரிதையை ஒரு அத்தியாயத்தோடு முடித்துக் கொள்ள முடியவில்லை. அடுத்த அத்தியாயத்தில் சிறைப்பறவையாய் அவரை எங்கெல்லாம் பந்தாடினார்கள் என்று வாசிப்பீர்கள்.

கோவிந் கொங்கன் said...

மிகவும் பயனுள்ள அருமையான வரலாற்றுத் தகவல்கள்... ஆசிரியர் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🏼

Related Posts with Thumbnails