மின் நூல்

Wednesday, January 9, 2019

பாரதியார் கதை --24

                                                    அத்தியாயம்--24



பாரதியாரின் திருவல்லிக்கேணி வாழ்க்கை அவருக்கு நிறைய உற்சாகம் கொடுத்த வாழ்க்கை.  அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிமுகமான நண்பர்கள் ஒவ்வொருவராக ஒன்று சேர்ந்த வாழ்க்கை.
வரகனேரி திருச்சிக்கு அருகிலுள்ள ஊர்.  இந்த ஊரில் ஜனித்த வேங்கடேச சுப்ரமணிய அய்யர்--- வ.வே.சு. அய்யர்--
புதுவையிலேயே பாரதிக்குப் பழக்கமானவர்.  பாரதி புதுவை கனகலிங்கத்திற்கு பிரம்மோபதேசம் செய்வித்த பொழுது அந்த புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டது மட்டுமல்லாது நிகழ்விற்கு தலைமை தாங்கியவரும் வ.வே.சு. அய்யர் தான் யாரோ சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.

வ.வே.சு. அய்யரின் வாழ்க்கை வீர சாகசங்கள் நிரம்பியது. பாரிஸ்டர் படிப்பு படிக்க இலண்டன் சென்றார் அய்யர் .  லண்டனில் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா என்ற தேசபக்தர்

இந்திய இளைஞர்கள் தங்குவதற்காக இந்தியா ஹவுஸ் என்ற விடுதியை நடத்தி வந்தார்.  வ.வே.சு. அந்த விடுதியில் தங்கிப் படிக்கையில் தீவிர தேசியவாதியான வீர சவார்க்கரைச் சந்திக்கிறார். பிபின் சந்திரபால், லாலா ஹரி தயாள், மேடம் காமா என்று இந்தியா ஹவுஸில்  அவருக்கு நிறைய  புரட்சிகர நண்பர்கள்.   இலண்டனில் இருந்த பொழுதே பாரதியின் இந்தியா பத்திரிகைக்கு 'லண்டன் கடிதம்' என்ற
தலைப்பில் அய்யர் தொடர்ந்து எழுதினார்.  பாரதப்பிரியன் என்ற புனைப்பெயர் கொண்டிருந்த அய்யர், ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கிய கரிபால்டியின் சரிதத்தை இந்தியா பத்திரிகையில் தொடராக எழுதினார்.  பிரான்ஸின் சிந்தனையாளர் ரூசோவின் சிந்தனைகளை 'இந்தியா' பத்திரிகையில் 'ஜனசமூக ஒப்பந்தம்' என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்தார்.  கிரேக்கம், இலத்தின், பிரஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர் வ.வே.சு. அய்யர்.  தமிழின் முதல் சிறுகதையான 'குளத்தங்கரை அரச மரம்' கதைக்குச் சொந்தமானவர்.  அது மட்டுமில்லை, இவரது 'மங்கையர்கரசி காதல்' என்ற சிறுகதைத் தொகுப்பு தான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பு நூலாகும்.

இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெறுவோர் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பிரிட்டிஷார் கொள்கையாகவே கொண்டிருந்தனர். 
அப்படியொரு பிரமாணம் எடுத்துக் கொள்வதே அய்யருக்கு வெறுப்பாக இருந்தது. அதனால் பாரிஸ்டர் பட்டமே தேவையில்லை என்று புறக்கணிக்கிறார்.  அய்யரின் இந்த நடவடிக்கையை பெருத்த அவமானமாகக் கருதி  இதைச் சாக்காகக் கொண்டு அய்யரை வேட்டையாட ஆங்கில அரசு திட்டம் தீட்டியது.  வீர சாவர்கரின் ஆலோசனையின் பேரில் அய்யர் சீக்கியர் போல மாறு வேடம் பூண்டு பிரான்சுக்கு தப்பி விடுகிறார்.   பெர்லின், லண்டன், பிரான்ஸ் நாடுகளில் இயங்கிய இந்திய தேசிய புரட்சி வீரர்களின் குழுக்களுடன் அய்யர் தொடர்பில் இருந்தார்.

அய்யரை எப்படியாவது பிடித்து சிறையிலிட பிரிட்டிஷ் அரசு துடித்தது.  அய்யரோ,  துருக்கி, கொழுப்பு என்று நாடு நாடாக கப்பலில் மாறு வேடத்தில் பயணித்து பிரிட்டிஷ் வேவுப்  படையினரிடம் தப்பி ஒரு வழியாக புதுவை வந்து சேர்ந்து 1910 அக்டோபரில் பாரதியைச் சந்திக்கிறார்.  புதுவையில் அரவிந்தர், நீலகண்ட பிரம்மச்சாரி, பாரதி, வ.வே.சு, மண்டயம் ஸ்ரீனிவாச்சாரியார்,  வ.ரா.. என்று புரட்சியாளர்களின் ஜமா ஒன்று சேர்கிறது.

புதுவையில் அய்யர் கரடிக்குப்பம் என்ற இடத்தில் 'தர்மாலயம்' என்ற ஒரு இல்லம் அமைத்து அங்கு சுதந்திரப் போராட்டத்திற்கு வீரர்களை தயார்ப்படுத்தும் விதமாக அவர்களுக்கு  துப்பாக்கிச் சுடல், சிலம்பம், குத்துச் சண்டை போன்ற பயிற்சிகளை அளித்து வந்தார்.  இங்கு வாஞ்சிநாதன் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வந்தார்.  இதைச் சாக்கிட்டு ஆஷ் துரை  வழக்கிலாவது அய்யரை சம்பந்தப்படுத்தி  சிறையில் தள்ளி விட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் வலை விரிக்க ஆரம்பித்தனர்....  இருந்தும்  யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை, அய்யர் இந்தக் கைது நடவடிக்கையிலிருந்து தப்பி விட்டார்.

முதல் உலகப்போர் முடிவில்   ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வ.வே.சு. பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப் பட்டார்.  'தேசப்பக்தன்' என்ற இதழுக்கு ஆசிரியராக இருந்த தமிழ்த்தென்றல் திரு.வி.க. பணியிலிருந்து விடுபடவே அந்தஇதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.   பாரதி சுதேசமித்திரனிலும் அய்யர் தேசபக்தனிலும் பத்திரிகைப் பணி ஆற்றுகின்றனர்.   அடிக்கடி சந்தித்துக் கொள்வர். பெரும்பாலும் பாரதியின் திருவல்லிக்கேணி வீட்டில் தான்.

தேசபக்தனில் வெளிவந்த கனல் கக்கும் கட்டுரைகளை சகித்துக் கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசு  அய்யரைக் கைது செய்து பெல்லாரி சிறைக்கு அனுப்புகிறது. பாரதிக்கு உடல் நிலை சரியில்லை என்பதைக் கேள்விப்பட்டு சிறைக்கு இழுத்துச் செல்லப்படும் நிலையில் அரசிடம் கோரிக்கை வைத்து காவல் கைதியாக போலீஸ் காவலோடு பாரதியின் திருவல்லிக்கேணி வீட்டில் அவரைச் சந்திக்கிறார், அய்யர்.

பாரதியின் மெலிந்த உருவம் அய்யரை வாட்டியது.  கடுமையான வயிற்றுப்போக்கு என்று குடும்பத்தினர் சொல்லித் தெரிந்தது.   மருந்து கூட சாப்பிட மறுக்கும் பாரதியாரைப் பிரிந்து போக மனம் இல்லாமல் இருந்தது.  சுற்றிலும் காவலர்கள்.  என்னவோ ஏதோ என்று அக்கம்பக்கத்தினரின் லேசான சலசலப்பு.  ஒரு பக்கம் அருமை நண்பர் உடல் நலக்குறைவால்; இன்னொரு பக்கம் ரொம்ப நேரம் தான் அங்கு இருக்க முடியாது என்ற யதார்த்த அவசர கதி..

பரிதாபமாக  "பாரதி! நீ  மருந்து சாப்பிட மாட்டேன் என் கிறாயாமே?.. இப்படி அடம் பிடிக்கலாமா?,, மருந்து சாப்பிட்டால் தானே உடல் நலம் தேறும்?.." என்று  குழ்ந்தைக்குச் சொல்வது போல வேதனை வார்த்தைகளில் கொப்பளிக்க தழுதழுக்கிறார் வ.வே.சு.  அந்த சூழ்நிலை அதிக நேரம் பாரதியுடன் இருக்க முடியவில்லை.  தான் சிறையில் இருந்து வெளியே வருகின்ற பொழுது பாரதியின் உடல் நலம் தேறியிருக்கும் என்ற நினைப்பினூடே வீட்டை விட்டு வெ ளியே வந்தாராம் அய்யர்.

பாரதியையுடன் தம்மைப் பிணைத்திருந்த பாசக்கயிறை அய்யர் வலிய  அறுத்துக் கொண்டு செல்வதே போலவான உணர்வு நமக்கு.  சிறைக்குச் செல்பவர் எப்போது திரும்பி வருவாரோ என்ற வருத்தமும் கூடச் சேர்ந்து கொள்கிறது.


(வளரும்)



9 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

வ வே சு அய்யர் கம்ப ராமாயணத்தைப் பற்றியும் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். 461 கொண்ட அந்தப் புத்தகம் https://archive.org/details/Kamba.Ramayanam-A.Study இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளக் கிடைக்கிறது இவரைப்போன்ற உண்மையான தியாகிகள் பலருக்கும் மிகவும் வருத்தமளிக்கிற இறுதிநாட்களாக அமைந்துபோனது என்ன விதியோ?

ஸ்ரீராம். said...

பாரதி சரித்திரத்தில் வ வே சு அய்யருக்கு முழு இடம். இவரைப்பற்றிய சில தகவல்கள் புதுசு.

/ 'தேசப்பக்தன்' என்ற இதழுக்கு//

தேசபக்தனா? தேசப்பக்தனா?

ஓ... அப்புறம் அடுத்த வரியில் சரியாய் வந்திருக்கிறது!

கோமதி அரசு said...

பாரதியைப் பற்றி சொல்லும் போது வ.வே.சு ஐயரும் அதில் இடம் பெறுகிறார்.
தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று அவர்களை துரத்திக் கொண்டே இருந்த பிரிட்டிஷ் அரசு. எத்தனை எத்தனை வேஷங்கள் போட்டு தன்னை காப்ப்பாற்றிக் கொண்டு நாட்டை காக்க பாடுபட்டு இருக்கிறார்கள்!
பதிவு அருமை.

வெங்கட் நாகராஜ் said...

பல தகவல்கள் தெரிந்து கொள்ள உதவியது இப் பகிர்வு.

எத்தனை கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்கள்....

Thulasidharan V Thillaiakathu said...

அறியாத பல தகவல்கள்.

வ வே சு ஐயர் பாரதியின் வாழ்வில் உண்டு என்பது தெரிந்திருந்தாலும் இப்போது கூடுதலான நுணுக்கமான தகவல்களை அறிய முடிகிறது. சென்ற பகுதியும் வாசித்தாயிற்று.

அருமை

கீதா

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ ஸ்ரீராம்

அடுத்து நீலகண்ட பிரம்மச்சாரியார்.

தேசபக்தனே சரி. தட்டச்சுப் பிழை. திருத்தி விடுகிறேன்.

தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி. எஸ்.

பாரதியார் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பதிவு என்பதினால் வ.வே.சு.வும் பாரதியாரும் என் கிற மாதிரி தகவல்களைக் கொண்டதாக இந்தப் பதிவு அமைந்து விட்டது.

வ.வே.சு. முழு வாழ்க்கைச் சரித்தையும் வாசக அன்பர்கள் தேடித் தெரிந்து கொண்டால் எப்படியெல்லாம் வீர சுதந்திரம் வேண்டி நின்றோரின் வாழ்க்கைச் சரிதங்கள் மறைக்கப் பட்டிருக்கின்றன என்றறிந்து வீராவேசமாவார்கள்.

ஜீவி said...

@ கோமதி அரசு

வ.வே.சு. அவர்கள் நமது பாரத நாட்டு போர்முறை வியூகங்களையும், நெப்போலியனின் போர் முறைகளையும் ஆராய்ந்து நூல் ஒன்றை எழுதியிருக்கிறாராம். திருவள்ளுவரின் குறட்பாக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் தமிழர் இவரேயாம்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இவர் பாடுப்பட்டதைப் பற்றி தனி அத்தியாயமே எழுதலாம்.

தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

Related Posts with Thumbnails