மின் நூல்

Wednesday, April 10, 2019

வசந்த கால நினைவலைகள்

                                                                         10


மீனாட்சி அம்மன் கோயிலை நினைத்தாலே நினைவுக்கு வருவது அந்த பொற்றாமரைக் குளம் தான். அந்த வயதில் ஒன்றும் தெரியாது. சந்நிதிக்கு போகும் முன் கால்களைச் சுத்தம் செய்து கொள்வதற்காக குளம் என்கிற எண்ணம் தான். என்றும். "பாத்துடா.. பாத்து...பாசி வழுக்கிடும்.." குரல் கேட்காது இருக்காது. பொற்றாமரை குளத்தில் ஏடுகள் எதிர்த்து வந்த கதைகளெல்லாம் பின்னால் தான் தெரியும்.

குளம் தாண்டி உள் நுழைந்தவுடன் பிர்மாண்டமாய் நிற்கும் வீரபத்திரர்(?) சிலையை நிமிர்ந்து பார்த்தாலே பிரமிப்பாய் இருக்கும். இப்பொழுது சாதாரணமாய்த் தெரியலாம். எல்லாம் சின்ன வயதில் மனத்தில் பதிந்த பிம்பங்கள். அங்கிருக்கும் தூணில் ஆஞ்சனேயரைப் பார்த்ததுமே, "அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத்தாவி.." என்று சதாசிவம் வாத்தியார் பள்ளியிலே சொல்லிக் கொடுத்தது, சிந்தையிலே வரிவரி்யாய் வார்த்தைகளாக ஓடி, ஒன்றிய  உணர்வாய் வெளிப்படும். அம்மன் சந்நிதி நுழைவுக்கு முன்னால், கம்பி வலைகளுக்குப் பின்னால், நீண்ட கம்பிகளில் தொத்திக்கொண்டு நிறைய கிளிகள் இருக்கும். அதனருகில் போய் "மீனாட்சியைக் கள்ளன் கொண்டு போய்விட்டான்" என்று உரத்துச்

சொன்னால், அவை "கீக்கீ..கீக்கீ" என்று கத்தும். இதெல்லாம் என் வயதுக்கும் கீழான சிறுவர்களுக்கு விளையாட்டு என்றால் சிலசமயம் பெரியவர்களும் தங்கள் குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு, "எங்கே சொல்லு, பார்க்கலாம்.. மீனாட்சியை.." என்று குழந்தைகளுக்கு வார்த்தை வார்த்தையாகச் சொல்லிக்கொடுத்து, அந்தக் கிளிப்பிள்ளைகளும் தொண்டைவரள, "கீக்கீ..கீக்கீ.." என்று ஓயாமல் பதில் குரல் கொடுத்து ஓய்ந்து போகையில் எனக்குப் பாவமாக இருக்கும்.


சந்நிதியில் அம்மனைத் தொலைவில் வைத்து, நம்மை பளபள பித்தளை தகடுத் தடுப்புகளால் தடுத்து வரிசைக் கட்டி நிற்கவைத்த உணர்வு ஏற்படும். தடுப்புகள் தடுத்து, முன்னிற்கும் மனிதத் தலைகளும் மறைத்து, எம்பி எம்பிப் பார்த்தும் சந்நிதி தெரியாமல் பரிதாபமாய் நிற்கையில், இத்தனை வேலிகளையும் தாண்டி, அம்மனின் வலத்தோளில் கமுக்கமாக உட்கார்ந்திருக்கும் பச்சைக்கிளியை, நின்ற கோலத்தில் புன்முறுவல் தவழ நெஞ்சில் பதிந்த அங்கையர்க்கண்ணியை, யாரோ என்னை தூக்கிக்காட்டிய பொழுது கண்ணிமைக்காமல் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்ட நினைவு அழியவில்லை.



அம்மன் சன்னதியில் இருக்கும் கூட்டம் சுவாமி சன்னதியில் கொஞ்சம் குறைச்சலாய் இருப்பதாய் தோன்றி, நின்று நிதானித்து இறைவனை வழிபட வழிவகுக்கும். கூட்டக் குறைச்சல், மக்கள் அம்மனை வழிப்பட்டு விட்டு, இந்த சந்நிதி வராமல் அப்படியே போய்விடுவார்களோ என்று கூட நினைக்கத் தோன்றும். அப்படி நினைக்கையில், நான் மட்டுமே அவன் இடத்தில் இருக்கிற மாதிரி அப்பனிடம் ஒரு நெருக்கம் கூடும். குருக்கள் தரும் விபூதியை ஒன்றுக்கு இரண்டு தடவையாய் கேட்டு வாங்கிப்பூசிக்கொண்டு, ஆவுடையார் மேல் அமர்ந்திருக்கும் லிங்க சொரூபனின் மேனியில், வெள்ளை வெள்ளைப் பட்டைகளாய்த் தெரியும் வீபூதிப்பட்டைகளையே உற்றுப்பார்ப்பேன். ரொம்ப நேரத்திற்குப் பெருமானை விட்டுப் பிரிந்து போக மனசு வராது. உமாபதியைப் பற்றி பெரியம்மா சொல்லி சொல்லி மனசில் படிந்த கதைகளெல்லாம் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்து, இவனே உமையொரு பாகத்தானாய் இருக்கையில், எல்லாப் பெருமையும் இவனுக்கும் சேர்த்துத் தானே என்று மனதைச் சரிசெய்து கொண்டு சந்நிதியை விட்டுச் செல்ல மனமில்லாமல், பிரியாமல் பிரிவேன் போலும்.

இப்பொழுது நினைத்துப்பார்க்கையில் சைவத்தில் சக்தி வழிபாடு கொஞ்சம் தூக்கலாய்த் தான்  தெரிகிறது. இருந்தாலும்,   அம்மையும் அப்பனும் ஆகி..   இரண்டு பேரும்  சேர்ந்து வந்து தான் அருள் பாலிப்பார்கள். இரண்டு பேருக்கும் கணமேனும் பிரியாத அப்படியொரு நெருக்கம். போதாக்குறைக்குக் கூட்டுக்குடும்பத்தை வலியுறுத்த இரண்டு மகன்களையும் எங்கெங்கோ விட்டு விடாமல் தன்னிடத்திலேயே இருத்தி வைத்துக் கொள்வார்கள். சும்மாச் சொல்லக்கூடாது; மகன்களும் அப்படியே. தாங்கள் தனி சந்நிதிகளாய் இருக்குமிடங்களிலும், தாயையும், தந்தையையும் தங்கள் இடத்திலேயே தவறாமல் இருத்தி வைத்துக் கொண்டிருப்பார்கள். இதில் சின்னவனுக்கு, தாய் தந்தையர் பக்கத்தில் இல்லையென்றால், சரிப்படாது. பெரும்பாலும் தான் இருக்கும் இடங்கள் மலைகளும், குன்றுகளும் ஆச்சே என்று கூடப்பார்க்க மாட்டான். "வாருங்கள், என்னோடையே.." என்று கைபிடித்து, குன்றுகள் மேலும் ஏற்றி தன்னோடு கூட்டிக் கொண்டு போய்விடுவான். பெற்றோர்களிடம் கோபித்துக் கொண்டு ஒருதடவை போய்விட்டோமே
என்கிற குற்ற உணர்வு போலும். பெரியவனும்
ஞானமார்க்கமாய் உண்மையிலேயே    'பெரியவனாய்' யாராலும் விட்டு விட முடியாதபடி வளர்ந்து விட்டதும் சின்னவனுக்கு செளகரியமாய்ப் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அழகனாய், ஆறுமுகனாய் அண்ணன் பக்கத்திலும் இருப்பான்; அப்பன்-தாய் அருகாமையிலும் இருப்பான். திருப்பரங்குன்றம் மட்டுமில்லை, பிற்காலத்தில் எந்த முருகன் கோயிலுக்குப் போனாலும் இந்த நினைப்பு தான் முந்தி வரும்.

சித்தரை திருவிழாபோது,  வீட்டு உயர்ந்த மொட்டை மாடியில் ஏறிக்கொண்டு, கீழே தெருவில் அம்மையப்பனின் தேர் உலா பார்த்தபொழுது, மேல்மாடிகளில் ஏறிக்கொண்டவர்கள், அந்த வெயிலில் வடம் பிடித்து தேர் இழுப்போர் பசி போக்க, கூடை கூடையாக திண்டுக்கல் மலை வாழைப்பழத்தை சீப்பு சீப்பாக வீசிப் போடுவர். எங்கே பார்த்தாலும் நீர்மோர் பந்தல்.

ஒருதடவை கள்ளர் வைகை ஆற்றில் இறங்கும் பொழுது, ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது. கூட்டம் மொத்தமும் அடித்துப்பிடித்துக் கொண்டு மேடு ஏறத் தவித்துத் தத்தளித்தது. "குழந்தையை கெட்டியா பிடிச்சிக்கோ" என்று என் பெரியம்மா, எட்டு வயசுப் பையன் என்னையும்-அம்மாவையும் அசுர பலத்தோடு இழுத்துக்கொண்டு, சின்ன கல்பாலம் ஏறிக்கடந்து ரோடுக்கு வந்தது இன்னும் மறக்கவில்லை.


பத்து வயசில், நாயக்கர் மஹால் தூண்கள் பிர்மாண்டமாய் எனக்கு எப்படிக்காட்சி அளித்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். கும்பலாய் நான்கு பேருக்குக் குறையாமல், ஒருவர் கை ஒருவர் பற்றி தூணை அணைக்கமுடியமல் தோற்றுப் போவோம். தரையில் படுத்து மேல் முகட்டுச் சித்திரங்களை அண்ணாந்துப் பார்ப்பது, ஒவ்வொரு தூணிற்கும் இடையில் எத்தனை கோலங்கள் என்று எண்ணுவது, தட்டாமாலை சுற்றி சித்திரம் பார்த்துத் தடுமாறி விழுவது என்று இது அது என்றில்லாமல் மனசுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை உடனுக்குடன் அமுல் படுத்தும் அத்தனை விளையாட்டுகள்.

இப்படித்தான், ஒரு சித்திரா பெளர்ணமி அன்று குடும்பத்தில் அத்தனை பேரும் அழகர்கோயில் போயிருந்த பொழுது, நான் என் வயசொத்தக் வால்களுடன் ஓடிப்பிடித்து விளையாடுகிறேன் பேர்வழியென்று ஓடி ஓடி சுற்றம் விட்டுத் தனியே தொலைந்து போனது ஒரு தனிக்கதை!

(வளரும்)

14 comments:

கோமதி அரசு said...

உங்கள் நினைவலைகள் மிகவும் அருமை.
மீனாட்சி, கோவில் கிளிகள் 73 ம் வருடம் கூட இருந்தது அப்புறம் எப்போது கிளிகள் இல்லாமல் போச்சு என்று நினைவில்லை.

அப்போது பார்த்தது போல மீனாட்சி, சொக்கனை பார்க்க முடியாது நிதானமாக திருப்பதி போல் வாங்க வாங்க நகருங்கள் என்று நகர்த்தி விடுவார்கள்.

கோமதி அரசு said...

//ஒருதடவை கள்ளர் வைகை ஆற்றில் இறங்கும் பொழுது, ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது. கூட்டம் மொத்தமும் அடித்துப்பிடித்துக் கொண்டு மேடு ஏறத் தவித்துத் தத்தளித்தது. "குழந்தையை கெட்டியா பிடிச்சிக்கோ" என்று என் பெரியம்மா, எட்டு வயசுப் பையன் என்னையும்-அம்மாவையும் அசுர பலத்தோடு இழுத்துக்கொண்டு, சின்ன கல்பாலம் ஏறிக்கடந்து ரோடுக்கு வந்தது இன்னும் மறக்கவில்லை.//


பெரியம்மாவின் தைரியம் மறக்க கூடிய நிகழ்ச்சியா!

திருமலை நாயக்கர் மஹால் பற்றி நான் எழுதிய பதிவுக்கு வந்து உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது நினைவு இருக்கிறது.

நீங்களும் காணாமல் போணீர்களா?
நானும் சிறு வயதில் அம்மாவை விட்டு பிரிந்து பின் சேர்ந்தேன் சுசீந்திரத்தில்.

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு நினைவும் மறக்க முடியாதவையாக.....

உங்கள் வார்த்தைகளில் அந்தக் காலத்திற்கே சென்று விட்ட உணர்வு.

தொடர்கிறேன்.

G.M Balasubramaniam said...

சுய தரிசனங்கள் சுவையாக உள்ளன

வே.நடனசபாபதி said...

சிறுவனாக இருந்த போது நினைத்ததை, பார்த்ததை அப்படியே நேரில் கொண்டு வந்துவிட்டீர்கள். பாராட்டுகள்! சுவாமி சன்னிதியில் கூட்டம் குறைவாய் இருப்பதைப் பார்த்து, மீனாட்சி அம்மனை வழிபடுவோரில் பலர் சுவாமி சந்நிதிக்கு வராமல் சென்றுவிடுவார்களோ என உங்களைப்போலவே நானும் நினைத்ததுண்டு.

‘வடம் பிடித்து தேர் இழுப்போர் பசி போக்க, கூடை கூடையாக திண்டுக்கல் மலை வாழைப்பழத்தை சீப்பு சீப்பாக வீசிப் போடுவர்.’ என்ற வரிகளைப் படித்ததும் அந்த நாளும் வந்திடாதோ என்ற எண்ணம் தான் வந்தது. ஏனெனில் இப்போது மலை வாழைப்பழமும் முன்பு போல் கிடப்பதில்லை. மக்களுக்கும் அப்போதைய சேவை மனப்பான்மையும் இப்போது இல்லை என்பதால்.

தாங்கள் சிறுவனாக இருந்த போது தொலைந்துபோய் பின் குடும்பத்தாரோடு சேர்ந்தது எப்படி என படிக்க தொடர்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல நினைவுகள். அதுவும் மீனாட்சி கோயில் விவரணம் மற்றும் அம்மை அப்பன் அவர்கள் குடும்பம் பற்றிய ரசனையான வரிகளை மிகவும் ரசித்தோம்.

துளசிதரன், கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதனைப்படிக்கும்போது கும்பகோணத்தில் கோயில்களைச் சுற்றிய எங்களுடைய இளமைக்கால நினைவுகள் என்னை ஆட்கொண்டன. இளம் வயது முதல் சென்றுவரும் பாதிப்போ என்னவோ, பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயிலுக்குச் செல்லும்போது துர்க்கையை ஓர் இறையுரு என்பதைவிட மிகவும் அணுக்கமான நட்பாக, உறவாக எண்ணுகிறேன். துர்க்கையைப் பார்க்கும்போது எண்ணங்களால் ஒன்றிவிடுவேன். அதில் கிடைக்கின்ற இன்பத்தை சொற்களால் வெளிப்படுத்த முடியாது.

ஜீவி said...

@ கோமதி அரசு

மதுரை மக்களையும் மினாட்சி அம்மனையும் பிரிக்க முடியாது. அந்தளவுக்கு பந்தம் கொண்டவர்கள். மதுரையைப் பிரதிநித்துவபடுத்துவது மீனாட்சி அம்மன் கோயில் தான்.

73-வரை கிளிகள் இருந்தனவா? நல்லது. இந்த மாதிரி எந்தக் கோயிலிலும் இல்லாத தனித்தன்மை கொண்டிருந்தது. மீனாட்சி அம்மனின் தோளில் அமரும் பாக்கியம் பெற்ற பறவை.

வக்கீல் புதுத்தெருவின் கோடியில் அமைந்துள்ள சொக்கநாதர் கோயிலில் படியேறி
சுந்தரேஸ்வரரை நின்று நிதானித்து மனமுருகி தரிசிக்கலாம்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோஸ்டவுன் மீனாட்சி அம்மன் அமெரிக்காவில் அமைந்த முதல் இந்துக் கோயில் என்ற பெருமை கொண்டது என்று சொல்கிறார்கள்.. நீங்கள் தரிசித்திருக்கிறீர்களா?

அமெரிக்காவில் தான் எத்தனை இந்துக் கோயில்கள்?. எந்த நாட்டில் வாழ்ந்தால் என்ன? நம் மக்களின் பக்தி ஆர்வம் பிரமிக்க வைக்கிறது.

ஜீவி said...

@ கோமதி அரசு

சுசீந்தரம்! ஆஹா! தாணுமாலயன் கோயில்!
சிவன், விஷ்ணு, பிரம்மா என்று மூவரையும் தரிசிக்க வாகாக இருக்கும் ஆலயம்!
நான் பலதடவைகள் கூட்ட நெரிசல்களில் சொந்தங்களை விட்டுப் பிரிந்திருக்கிறேன். அந்தத் தொடர்ச்சியை ஆரம்பித்து வைத்தது அழகர் கோயிலில் காணாமல் போனது..

லஷ்மண் ஜூலாவில் நாங்கள் பயணித்த டூரிஸ்ட் வண்டியையே தவற விட்டு அலைந்தது பெருங்கதை! அதை இந்தத் தொடரில் அதற்கான இடம் வரும் பொழுது சொல்கிறேன்.

இளம் வயதில் இந்தி எதிர்ப்பு ஜோதியில் ஐக்கியமாகி இந்தி கற்காத பெருங்குறை பல ஆண்டுகள் தாண்டி என்னைத் தண்டித்த ஆனுபவம் அது!

அந்த தண்டனை கூடப் பெரிதாகத் தெரியவில்லை; ஒரு மொழியின் பெயரால் அந்தத் தலைமுறையினர் எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதே பெரும் தலைக்குனிவாக இன்று இருக்கிறது!

இளமையில் கல் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்! அன்று கற்காது விட்டது முதுமையில் மனத்தில் படிய மறுக்கிறது.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

தொடர்ந்து வாசித்து தாங்கள் உணர்ந்த கருத்தையும் பதிவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் பகுதி இன்னும் சூடு பிடிக்கவில்லை. நான் வேலைக்குப் போன கால கட்டத்திலிருந்து பல்வேறு அனுபவங்கள்! வரிசையாகப் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

ஜீவி said...

@ GMB

சுயதரிசனம் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு தாங்கள் பாராட்டியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது, ஐயா!

ஜீவி said...

@ நடன சபாபதி

இப்போது எல்லாம் மாறியிருக்கிறது போலிருக்கு.

"அப்போது பார்த்தது போல மீனாட்சி, சொக்கனை பார்க்க முடியாது நிதானமாக திருப்பதி போல் வாங்க வாங்க நகருங்கள் என்று நகர்த்தி விடுவார்கள்".

--- என்று கோமதி அரசு அவர்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தீர்களா?..


வழக்கமாக தொலைந்து போகிற சிறுவர்கள் பேசி வைத்துக் கொண்ட மாதிர் ஒரே மாதிரி தான் தொலைந்து போவது தான் வேடிக்கை. நான் தொலைந்து போனதும் அந்த மாதிரியான ரகத்தில் ஒன்று தான். சொல்கிறேன்.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சார்.

ஜீவி said...

@ துளசிதரன், கீதா

உங்களுக்கு பிடித்த இடத்தை ரசித்திருக்கிறீர்கள். நன்றி.

தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

ஜீவி said...

@ Dr. Jaambulingam, Tamil University, A.R. (Retd)

பட்டீஸ்வரம் என்றாலே எழுத்தாளர் பாலகுமாரன் ஞாபகம் எனக்கு வந்து விடும். உங்களை மாதிரித் தான். பட்டீஸ்வரம் மேல் தனி ஈர்ப்பு கொண்டவர். தாங்கள் சொல்வதும் சரி தான்.

கும்பகோணத்தின் சமீபத்திய வளர்ச்சி என்னை பிரமிக்க வைக்கிறது. சுற்றி நவகிரக சந்நிதிகளும் கோயில்களும் சூழ்ந்திருப்பது முக்கிய காரணமாகத் தெரிகிறது.

ஜேஜே என்று கடைத்தெருக்கள், எந்நேரமும் சுற்றுலா கூட்டம் என்று ஒரு மாவட்டத் தலைநகர் ஆவதற்கான அத்தனை தகுதிகளும் கூடியிருக்கின்றன. சற்று ஒதுங்கியிருப்பது தான் குறையாக இருந்தாலும் நகரத்தின் விறுவிறு வளர்ச்சி எல்லாவற்றையும் ஈடு செய்து விடும்.

சமீபத்தில் தஞ்சாவூர், திருச்சி சென்றிருந்த பொழுது கும்பகோணத்திற்கு இருக்கிற இந்தக் கூடுதல் கவன ஈர்ப்புகள் அங்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

Related Posts with Thumbnails